இசைக்கவி ரமணன்

முடிவுரை

kural-4-1-1

ப்படி, மனதால் நினைத்தல், வாயாற் புகழ்தல், உடம்பால் வணங்குதல் மூன்றையும் சேர்த்துக் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வைத்தார். இறைவன், இறை, தெய்வம் என்னும் சொற்களைப் பயன்படுத்தும் வள்ளுவரின் குறளில் கடவுள் என்னும் சொல் இல்லை. மன்னனும் இறை, இறைவன் போன்ற சொற்களால் குறிக்கப்படுகிறான். (உ-ம் இறைமாட்சி) `விஷ்ணுவின் அம்சம் உடையவனே மன்னன், ரிஷியின் அம்சம் உடையவனே கவிஞன்,` என்பது நமது பண்டைய கூற்று. அரசன் என்பவன், இறைவனின் பிரதிநிதியாகவே பிற நாடுகளிலும் கருதப்பட்டான். ஆனால், இங்கே, முதல் அதிகாரத்தில் அவர் மன்னனைக் குறிக்கவில்லை, கடவுளைத்தான் சொல்கிறார். எனவேதானோ, இது, கடவுள் வாழ்த்து என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் போன்ற நூல்களிலும் நூலுக்கு முகமனாகக் கடவுள் வாழ்த்து உண்டு. இங்கே. நூலின் ஓர் அங்கமாகக் கடவுள் வாழ்த்து அமைந்திருக்கிறது. இதைப் பனுவலாகக் கொள்ளலாம். ஏனெனில், நூல் முழுதும் அவர் அறிவுறுத்த விழைவது கடவுளைப் பணிவதே.

`கடவுள்` என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பதால் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், அல்லது, கடவுளைப் பற்றிச் சொல்லவில்லை எனலாகாது. `தமிழ்` என்ற சொல் குறளில் ஓரிடத்திலும் இல்லை. `தாய்` என்றார், `அம்மா` என்றார், `தந்தை` என்றவர் `அப்பா` என்று சொல்லவில்லை. இவற்றை வைத்து ஏதேனும் முடிவுக்கு வரவேண்டுமா என்ன?

மேலும், நூலின் வேறுபல இடங்களிலும் அவர் கடவுளைக் குறிப்பிடுகிறார்:

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும் (39:இறைமாட்சி:388) என்னும்போது இறை என்ற சொல்லால் கடவுளைக் குறிக்கிறார்.

தென்புலத்தார் தெய்வம்..(43) தெய்வம் தொழாஅள் (55) தெய்வத்தான் ஆகாதெனினும் (619) தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் (1023) என்ற குறள்களில் கடவுளை தெய்வம் என்கிறார். பல இடங்களில், தெய்வம் என்பது விதி என்னும் பொருளிலும் வருகிறது. தென்புலத்தார் (43) என்று தொடங்கும் குறள், தீயினாற் சுட்டபுண்.. குறளைப் போல மஹாபாரத வாசகத்தின் மொழிபெயர்ப்பு போலவே தெரிகிறது. யக்‌ஷ ப்ரச்னத்தில், யக்‌ஷன், `எவன் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும், உலகத்தால் துதிக்கப்பட்டாலும், வெறுமே சுவாசிக்கும் ஜீவனாகக் கருதப்படுகிறான்?` என்று கேட்கிறான். அதற்கு தருமர், `தேவ, அதிதி, ப்ருத்யானாம், பித்ருனாம், ஆத்மன: ச ய: ந நிர்வபதி,` என்கிறார். அதாவது, `எவன் தேவர்கள், விருந்தினர்கள், தன்னைச் சார்ந்தவர்கள், பித்ருக்கள், ஆன்மா இவற்றுக்குச் சேவை செய்யவில்லையோ, அவன் வெறுமே சுவாசிக்கும் ஜீவி,` என்று பதில் கூறுகிறார்.  மேலும்,

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்

என்று புறநானூற்றுப் பாடல் (9) பேசுகிறது.  தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுத்தல் என்பது தொன்மையான தமிழ் மரபே என்பது இதனாலும் உறுதியாகிறது.

எனவே, தென்புலத்தார் என்பது பித்ருக்களைக் குறிக்கவில்லை என்ற வாதம் சரியில்லை.

செம்பொருள் காண்ப தறிவு (358) மெய்ப்பொருள் காண்பதறிவு (356) தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் (249), கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டவர்தான் பிறவாத பெருநிலையை எய்துவர் என்று, பொருள், செம்பொருள், மெய்ப்பொருள் போன்ற சொற்களின் மூலமும் அவர் கடவுளையே சுட்டுகிறார்.

உள்ளது (357) என்றும் கடவுளையே என்றும் உள்ளவன் என்கிறார். உள்ளது நாற்பது என்று ரமண மகரிஷி அருளியதை நினைவில் கொள்க. வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு விளக்கம்போல் அமைந்திருக்கும் பற்றற்றான் (350) என்னும் சொல்லாலும் கடவுளையே சுட்டுகின்றார். சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் (359) என்னும் குறளில் எவ்வுயிர்க்கும் நிலையான சால்பு என்று கடவுளைத்தான் சொல்கிறார். வகுத்தான் (377) என்னுங்கால் இன்ப துன்பங்களை வகுத்த கடவுளைத்தான் பேசுகிறார். ஒருபடி மேலே சென்று, மற்றவர் வறுமையைத் தாங்க மாட்டாது பரந்து கெடுக உலகியற்றியான் (1062) என்றும் கடவுளைச் சாடுகிறார். பாரதியின், `தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,` என்னும் கர்ஜனை இந்தக் குறளின் எதிரொலியே.

மேலும், அப்படிப்பட்ட கடவுளைப் பணிவதால் நமக்கு என்ன கிடைக்கும் என்று பொருள்சார்ந்த பட்டியலிடாமல், நாம் என்ன ஆவோம் என்பதையே சொல்லத் தலைப்படுகிறார். இறைவனைப் பணிவது, பிறவித் துன்பத்திலிருந்து நீங்குவதற்காகவே என்பதை வலியுறுத்துகிறார்:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (10) மற்றீண்டு வாரா நெறி (356) பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357) பிறப்பென்னும் பேதைமை நீங்க (358) என்கிறார். பிறப்பு, அதனால் இறப்பு இவற்றுக்குக் காரணமான பற்று அறுபடுவது அவனைப் பற்றினால் மட்டுமே (350) என்பார்.

இவ்விதம், பல்வேறு இடங்களில் அவர், கடவுளையும், அவனைப் பணிய வேண்டிய அவசியத்தையும், அந்தப் பணிதலால் நேரும் அறுதி விளைவையும் எடுத்துச் சொல்கிறார் – தாயனைய கருணையுடன், தந்தையின் கண்டிப்புடன், தோழனின் வாஞ்சையுடன்.

இது மட்டுமல்லாமல் இந்திரன் போன்ற தேவர்களைக் குறிப்பிடுகிறார் : இந்திரனே சாலும் கரி (25) வேந்தனும் வேந்து கெடும் (899) என்பார். `வேந்தன் மேய தீம்புனல் உலகமும்..` என்னும் தொல்காப்பியம் (அகத்திணை, 5) வேந்தன் என்னும் சொல்லால் இந்திரனைக் குறிக்கும். (சாலும் கரி என்றால், போதுமான பிரத்யக்ஷமான சாட்சி)

பெண்ணின் மெல்லிய தோள்களில் தூங்கும் இனிமைக்கு, திருமால் வாழும் வைகுண்டமும் நிகரோ என்று தாமரைக் கண்ணான் உலகு (1103) என்கிறார்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந்து ஆங்கே திரு (179) வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு (519) இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (920) என்னும் இடங்களில் இலக்குமியைத்தான் சொல்கிறார். அவளையேதான், அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்தோம்புவான் இல் (84) அவ்வித்து அழுக்காறு உடையவனைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும் (169) என்னும் இடங்களில் பேசுகிறார். அவளையேதான் மடியிலான் தாளுளாள் தாமரையினாள் (617) என்பார். அவளுக்கு நேர்மாறான மூத்தவளான மூதேவியைத்தான் தவ்வையைக் காட்டிவிடும் (169) மடியுளாள் மாமுகடி (617) அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியால் மூடப்பட்டார் (936) என்று காட்டுகிறார். அதுபோல, நிலமென்னும் நல்லாள் (1040) என்று பூமி தேவியைச் சொல்கிறார்.

காமத்துப் பாலைப் பாடியவர் மன்மதனைச் சொல்லாமல் விடுவாரா? பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197) என்று அங்கே மன்மதனைச் சொல்கிறார்.

குறளின் குறிக்கோளே அறத்தை வலியுறுத்துதல்தான். அறம்தான் இந்த நூலின் கதாநாயகன். அறம் என்பது நல்வினை, புண்ணியம். மறம் என்பது, அறமல்லாதது, தீவினை, பாவம், பொருளல்லாதது. எனவே, எல்லோரையும் ஒரேவிதமாக நோக்கி, விருப்பு வெறுப்பின்றி, செயல்களுக்கான விளைவுகளை இம்மியும் பிசகாமல் வழங்கும் அறத்தைக் கடவுளாகக் காட்டுகிறார். வடமொழியில், இந்த அறம் என்னும் சக்தி, மூன்று விதமாகச் செயல்படுவதைக் குறிப்பார்கள்:

  1. ம்ருத்யு : உயிரை உடலிலிருந்து எடுத்துச் செல்லும் சக்தி. இதைக் கூற்றுவன் எனலாம். ஏனெனில், உடலிலிருந்து உயிரைக் கூறு செய்பவன் கூற்றுவன் என்பது விளக்கம். கூறு என்றால் பங்கு, பிரிவு, பாதி, அம்சம், வகை, கூறிட்ட பொருள் என்றெல்லாம் பொருள்படும்
  2. காலன் : உடம்பில் உயிர் நிலவும் காலத்தை, அதாவது ஆயுளை நிர்வகிக்கும் சக்தி
  3. எமன் : இவனே தர்மராஜன் எனப்படுகிறான். இவனே இருவினைப் பயனை, உயிர்களுக்கு, உரிய விதத்தில், உரிய காலத்தில் சேர்ப்பிப்பவன்

இந்த விளக்கத்தை மனத்தில் கொண்டு, திருவள்ளுவர் அறக்கடவுளைப் பற்றியும், கூற்றுவனைப் பற்றிச் சொல்வதையும் கூர்ந்து நோக்குவது சுவாரசியமானது.

ன்பிலதனை வெயில்போலக் காயுமே

அன்பிலதனை அறம் (77)

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (130)

மனத்தில் சினம் உண்டாகாமல் தடுத்துக் கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கம் உடையவனாக இருப்பவனிடம், அறக்கடவுள் சென்றடையும் சமயத்தை எதிர் பார்த்திருக்கும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (204)

இவற்றில், அறக்கடவுளின் கடுமையை, சமாதானமற்ற கூர்ந்த பார்வையை, பிழைசெய்வோரை தண்டிக்கும் கண்டிப்பைச் சொல்கிறார்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் (269) கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ்நாள் மீது செல்லாது உயிருண்ணுங் கூற்று (326) கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை (765) கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் (894) உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) என்கிறார். சுருங்கச் சொன்னால்,

  1. தவவலிமையால் கூற்றுவனை வெல்லக் கூடும்
  2. கொல்லாமை விரதம் பூண்டவன் அற்ப ஆயுளில் இறப்பதில்லை, துர்மரணம் அவனுக்கில்லை
  3. படைவீரம் என்பது கூற்றுவனே எதிர்நின்றாலும் தீரத்துடன் போரிடுவது
  4. ஆற்றலுள்ள நல்லோருக்குத் தீங்கிழைத்தல், கூற்றுவனைக் கைதட்டிக் கூப்பிடுவதற்கு நிகர்
  5. பொருளே இல்லாத போதும் மனதில் துறவு மனப்பான்மை வரவில்லையென்றால், அவன் அண்டை வீடுகளிலுள்ள பொருட்களுக்குக் கூற்றுவனாவான்

என்று பலவிதமாகக் கூற்றுவனைக் குறிப்பிடுகிறார்.

கூற்றுவனின் கொடுமையை அவர் காமத்துப் பாலிலும் காட்டுவது அற்புதமான உத்தி:

பண்டறியேன் கூற்றென்பதனை; இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)

கூற்றமோ? கண்ணோ? பிணையோ? மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து (1085)

என்று பெண்ணின் கண்ணுக்குக் கூற்றுவனை இணையாகப் பேசுகிறார். கூறு என்றால் பிரிவு, பங்கு, அம்சம், பாதி, வகை என்றெல்லாம் பொருள்படும்.

சரி. பிறப்பு, இருவினை, அறம், கூற்றுவன், இறப்பு என்றெல்லாம் பேசுபவர், இறந்து போன முன்னோர்களாகிய பித்ருக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரா என்றால், அவர்களைத் தென்புலத்தார் (43) என்கிறார். ஞானியர், யோகியர், பேரடியார் இவர்களெல்லாம் வடபுலம் ஏகியவர்கள். மற்றை மானிடர்கள், தென்புலத்தார். அவர்கள், பூமியில் வாழும் மனிதர்களின் சடங்குகளின் மீது ஆதாரப்பட்டிருக்கிறார்கள்.

மனிதர்களில் கயவர்கள், பதடிகளைப் பற்றிச் சொன்னவர், மனிதரல்லாத அமானுஷ்ய ஜீவிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்:

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? கனங்குழை

மாதர்கொல்? மாலும் என் நெஞ்சு (1081)

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து (1081)

அணங்கைப் பெண் எனலாம்; பேயெனலாம்; பெண் தெய்வம் எனலாம். தாக்கணங்கை மோகினி எனலாம்! இவை போதாதென்றோ,

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்ன துடைத்து (565)

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும் (850)

என்று, பேயைக் கொண்டு வருகிறார்.

உடனே, வள்ளுவருக்குப் பேய்களில் நம்பிக்கை உண்டா என்று வினாவெழுப்ப வேண்டா! `என்னடா பேயறைந்தாற்போல் இருக்கிறாய்?` என்றால் கேட்டவர் அதற்கு முன்பு தன்னையோ பிறரையோ பேயறைந்து பார்த்திருக்கிறார் என்று பொருளல்ல! அது ஒரு manner of expression.

ஆனால், அவர் தேவர்களைப் பற்றிச் சொல்வது, பேய்களைப் பற்றிச் சொன்னதுபோல் ஒரு பேச்சுக்காக இல்லை.

சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (18)

அகல்விசும்புளோர் கோமான் இந்திரன் (25)

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (50)

நல்விருந்து வானத்தவர்க்கு (86)

புத்தேளுலகத்தும் (213)

புலவரைப் போற்றாது புத்தேளுலகு (234)

கள்ளார்க்குத் தள்ளாது புத்தேளுலகு (290)

அவியுணவின் ஆன்றார் (413)

தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

தேவர் அனையர் (1073)

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ (1323)

இவைபோன்ற குறள்களைப் பார்க்கும்போது, தேவர்கள், வானுலகம் இவை, வள்ளுவரின் வெறும் நம்பிக்கையாக இல்லாமல் அவர் அறிந்த நிதர்சனமாக இருந்தனவோ என்று தோன்றுகிறது.

தேவர்களைக் குறிப்பிட்டால் அமிழ்தத்தைக் குறிப்பிடாமல் இருப்பாரோ?

தான் அமிழ்தம் (11)

சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று (82)

அமிழ்தினும் ஆற்ற இனிதே (64)

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720)

மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை (968)

அமிழ்தின் இயன்றன தோள் (1106)

தேவர்கள், அவர்கள் உறையும் சுவர்க்கம், அமிழ்தம் இவற்றைச் சொன்னவர், நரகத்தையும் குறிப்பிடத் தவறவில்லை:

அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் (121)

ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுத்தும் அளறு (835)

புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு (919) என்றெல்லாம் சொல்லி, அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்:சேர்ந்த இன்னா உலகம் புகல் (243) என்பார்.

இம்மையை மாயையென்று கொண்டவரில்லை வள்ளுவர். அங்ஙனம் கொண்டிருந்தால், வாழ்வின் எல்லாத் தளங்களுக்கும் பொருத்தமான அறங்களை ஏன் சொல்வார்? தேவர்கள், அவர்கள் வதியும் இடம் என்பவற்றைப் பற்றியும் பேசுவாராதலின், அவர் மறுமையை நம்பியவர் என்றே உறுதியாய்ச் சொல்லலாம். இங்கு வாழ்ந்து உயிர் நீத்தபின் எய்தும் நிலையும் அதன்பிறகு நேரும் பிறப்புமே மறுமை.

மனநலத்தின் ஆகும் மறுமை (459)

மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

என்ற குறள்களில் மறுமையைச் சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்தே இரண்டு இடங்களில் கையாள்கிறார்:

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பந் தரும் (98)

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இன்மையும் இன்றி வரும் (1042)

இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அவருக்கே உரிய முறையில் கச்சிதமாகச் சொல்கிறார்.

அதை,

வானென்னும் வைப்பு (24)

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)

புக்கில் (340)

வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)

வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

என்றெல்லாம் வீட்டை விவரித்து மற்றீண்டு வாரா நெறியே (356) மனிதன் கடைபிடிக்க வேண்டியது என்று அறிவுறுத்துவார்.

ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும், பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும், அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை) அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும், அதற்குக் காரணம் பற்று (347) என்றும், பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346) காமம், வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் பிறவி என்பது தொடரும் என்றும், ஒரு பிறவியில் செய்த வினையின் விளைவு ஏழு பிறவிகளில் தொடரும் என்றும், (107, 126, 398, 538) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (360) என்றும் சொல்லி, பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் (349) என்றும் படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

பற்று நீங்கினால், இந்த உலகத்தில் இந்த உடலில் இருக்கும்போதே விடுதலை எய்தி வீடு பேற்றை அடையலாம் என்பதை,

இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்

துன்பத்துள் துன்பம் கெடின் (369)

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நினைவே

பேரா இயற்கை தரும் (370)

என்னும் குறள்களில் உறுதிமொழி தருவதுபோல் விளக்குகிறார்.

திருவள்ளுவர் காட்டும் நெறியில் நின்றால், யாண்டும் இடும்பை இல என்பதே உறுதி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (13)

  1. தேவ, அதிதி, ப்ருத்யானாம், பித்ருனாம், ஆத்மன: ச ய: ந நிர்வபதி,`அதாவது, `எவன் தேவர்கள், விருந்தினர்கள், தன்னைச் சார்ந்தவர்கள், பித்ருக்கள், ஆன்மா இவற்றுக்குச் சேவை செய்யவில்லையோ, அவன் வெறுமே சுவாசிக்கும் ஜீவி,` என்று தருமர் யக்‌ஷனுக்கு யக்‌ஷ ப்ரச்னத்தில், பதில் தருகிறார். திருக்குறளையும் மகாபாரதத்தையும் தொடர்புபடுத்தி அழகாக விளக்கமளித்த இசைக்கவி திரு ரமணன் ஐயாவிற்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.