செண்பக ஜெகதீசன்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு.    (திருக்குறள் -786: நட்பு) 

புதுக் கவிதையில்…

உள்ளத்தில் கள்ளம்வைத்து,
உதட்டில் புன்னகை மலரக்
கொள்வதல்ல
உண்மை நட்பு…
அன்புகொண்ட உளத்துடன்
அகம் மகிழக் கொள்வதுதான்
அசல் நட்பு…! 

குறும்பாவில்…

மலர்ந்த முகம்மட்டும் காட்டி
வருவதல்ல உண்மை நட்பு,
அன்பொடு அகமகிழ வருவதுதான் அது…! 

மரபுக் கவிதையில்…

உள்ளத் துள்ளதை மறைத்தேதான்
     –உதட்டில் காட்டிடும் புன்னகையால்
கொள்ளும் உறவு நட்பல்ல!
   –காட்டும் வேடம் சிறப்பல்ல,
பிள்ளை போலவே அன்புகொண்டு
  –பெரிதும் உள்ளம் உவகையுற
கள்ள மில்லா மனத்துடனே
–காட்டும் உண்மை நட்பதுவே…! 

லிமரைக்கூ…

நட்பல்ல நகைமுகத்தால் நடிப்பது,
உள்ளே பகையின்றிக் கொள்ளும் நட்புதான்
உண்மை இதயத் துடிப்பது…! 

கிராமிய பாணியில்…

நட்புயில்ல நட்புயில்ல
நெஞ்சத்தில வஞ்சகமா
நல்லாச்சிரிச்சி பழகுறது
நட்புயில்ல நல்ல நட்புயில்ல… 

கொஞ்சங்கூடக் கள்ளங்கபடமில்லாம
நெஞ்சிநெறஞ்ச அன்போட
நெறஞ்சமனசாப் பழகுற
நட்புதானே நல்லநட்பு… 

நட்பாயிரு நட்பாயிரு
நெறஞ்ச அன்போட நட்பாயிரு!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *