இலக்கியம்சிறுகதைகள்

நடக்காத கதை!

-தமிழ்த்தேனீ

ஏங்க  நீங்க எழுதற  எல்லாக் கதையையும் படிச்சுப் பாத்தேன்;  அதென்ன  நம்மைச் சுத்தி  நடக்கறதையே   கதையா எழுதறீங்க.  நமக்குத் தெரிஞ்சவங்க யாரு படிச்சாலும்  அது யாரோட  கதைன்னு  உடனே புரிஞ்சுக்குவாங்க  என்றாள் குற்றம் சாட்டும் பாவனையில் ஆனந்தவல்லி.

திடுக்கிட்டு  நிமிர்ந்த  எழுத்தாளர் தமிழ்த்தேனீ.  சுதாரித்துக் கொண்டு  சாரதா  நம்மைச் சுத்தி நடக்கறதைத்தான் கிரகிச்சுக் கதை எழுதணும்.  எழுத முடியும். இது வரைக்கும்   நடக்கறதை வெச்சிக் கதை எழுதறவங்கதான் அதிகம். ஏன் தெரியுமா? நடக்காததை கற்பனை செஞ்சு கதை  எழுதினா படிக்கறவங்களுக்கு  அது புரியாது.

அதுனாலே  படிக்கறவங்களுக்கு  புரிஞ்சாதான் அது ஒரு கதையோட வெற்றி.

அது மட்டுமில்லே நம்மைச் சுத்தி நடக்கறதை கூர்ந்து கவனிச்சு  அதிலே இருக்கற நுணுக்கத்தை மட்டும் மையமா வெச்சிண்டு  அதையே கருவாக்கி கதை எழுதினாத்தான்  அது கதை. நீ நெனைக்கறா மாதிரி  உனக்கு நான் எழுதற கதை புரியறா மாதிரி  மத்தவங்களுக்கு  புரியாது.  அதாவது  அவங்களுக்கு  நம்மைச் சுத்தி நடக்கறதுதெரியாது . அதுனாலே அவங்களுக்கு நான் எழுதற கதைகள் வேற மாதிரி புரியும்; அதுனாலே பிடிக்கும் என்றேன் நான்.

ஆனாலும் ஒரு  கதையைப் படிக்கற வாசகனுக்கு அந்த அனுபவம் எப்பிடி இருக்கணும் தெரியுமோ?

நல்ல  தலைவாழையிலையிலே மனசுக்கும் நாக்குக்கும் பிடிச்சா மாதிரி ரசிச்சு சாப்ட்டுட்டு  பத்தும்பத்தாக் குறைக்கு   திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழத்தை வெச்சுண்டு  மெல்லமா  அதன் தோலை உரிச்சு  கொஞ்சம் கொஞ்சமா நுனிப்பல்லாலே  கடிச்சு கடிச்சு சாப்பிடும்போது அதோட இனிப்பு  நாக்கு பூராவும்  அப்பிடியே மையாக் கரைஞ்சு  தொண்டையிலே இதமா இறங்கி  பாதாதி கேசம் வரைக்கும்  படர்ந்து  ருசிக்கறதே…அது மாதிரி சுகானுபவமா இருக்கணும்.

நல்ல பங்கனபள்ளி மாம்பழத்தை பல்லாலேயே தோலுரிச்சுக் கடிச்சு அதோட சாறு முழங்கை வரைக்கும்  போயிடப்போறதேன்னு பயந்து கீழே வழிய விடாமே புறங்கையிலேயே  நக்கி மறுபடியும்  பாளம் பாளமா அதோட  சதைப்பற்றை கடிச்சுக் கடிச்சு மொத்தப் பழத்தையும் சாப்பிட்ட பிறகும்   மாங்கொட்டையிலே ஒட்டிண்டு இருக்கற  இனிப்பான சதையை  பல்லாலே வரட் வரட்டுன்னு வழிச்சு பல்லுலே நார் மாட்டிண்டாலும் பரவாயில்லேன்னு வழிச்சு  சாப்படணும்கிறா மாதிரி  டேஸ்ட்டா இருக்கணும்.

இன்னும் ஒரு மாம்பழம் வேணுமான்னு  யாராவது கேட்டா  இல்லே  போதும்னு சொல்ல  மனசு வரலேன்னாக் கூடத்  தப்பா எடுத்தக் போறாங்களேன்னு… பறக்காவிட்டின்னு  நெனைச்சுப்பாங்களேன்னு பயந்து  ரொம்ப நல்லா இருந்துது போதும்  எல்லாம் ஒரு  லிமிட்டுதான்  அதான் சாப்ட்டேனே ன்னு அசடு வழியறா மாதிரி இருக்கணும்.

நல்ல  சாப்பாட்டு ராமன்… வேற உதாரணமே கிடைக்காதா  உங்களுக்கு  என்றாள்  ஆனந்தவல்லி சிரித்துக் கொண்டே.

என்ன செய்யறதும்மா? ருசின்னாலே  சாப்படுதானே. நல்ல  கத்திரி வெய்யில்லே  வெப்பம் தாங்காமா  வேர்த்து வடிஞ்சு   குழாயைத் தொறந்து விட்டுக்  காலைநீட்டினா  அதிலேயும் கொதிச்சுப்போன டேன்க்  தண்ணி சுளீர்ன்னு  பட்டா  எரிச்சலா இருக்கும் . ஆனால் தண்ணியோட  வேகத்திலே  மேலாக இருக்கற கொதிச்சுப்போன தண்ணி சர்ருன்னு கீழே போயிட்டு  திடீர்னு  சில்லுன்னு  தண்ணி  வந்து காலிலே படும் போது  ஏற்படுமே  ஒரு  உணர்ச்சி அப்பிடி இருந்தாக் கூட ரசிக்கலாம்.

ஏரோப்ளேன் டேக்ஆஃப்  ஆகும்போது  அடி வயித்திலேருந்து ஜிவ்வுன்னு கிளம்பி உச்சந்தல வரைக்கும் ஏறுதே  பாம்பு மாதிரி ஒரு பய உணர்ச்சி அதுமாதிரியும்  மூச்சு முட்டிக்  காதெல்லாம் அடைச்சுண்டு  செவிடாயிட்டா மாதிரி பூஜ்ஜியமா ஆயிடறோமே  அது மாதிரியும் இருக்கலாம். ஆன ஒண்ணு… வெளிநாடே பாக்காதவங்க  கிட்டப்  போயி   பர்கர், பிஸ்ஸாவைப் பத்தி வர்ணிச்சா  அதுக்கு தொட்டுக்க  ஒரு சாஸ் குடுப்பாங்க பாருங்கன்னு  சொன்னா அவங்களுக்கு புரியுமா?  அதுக்காகத்தான்  மதுர மல்லி மாதிரி  வெள்ளை வெளேர்ன்னு இட்லி,   ஜாதி மல்லியோட  வாசனை மாதிரி   நறுமணமா  குருமா   அப்பிடீன்னெல்லாம்  வர்ணிச்சா  புரியும்.

அதுனாலேதான்  நம்மைச் சுற்றி நடக்கிறதையெல்லாம் கதையா எழுதறேன்.

இங்கே  எல்லாரும் எதை  அனுபவிக்கறாங்களோ  அதை எழுதறேன்.

இப்பிடியெல்லாம்  சமாதானம் சொல்லிண்டாலும்  ஒரு  வேளை  சாரதா சொல்றது கூடச்  சரியா  இருக்கும் போல இருக்கே கொஞ்சம் விதயாசமா  எழுதவும் கத்துக்கணும்.

சரி ஒரு கதையை இதுவரை நடக்காத  சம்பவத்தை மையமாவெச்சு எழுத முடியுமா  வாசகர்களுக்கு  புரியறா மாதிரி  என்பது ஒரு  சவாலாகவே  மனசுக்குள்ளே  உறுத்திகிட்டே இருக்கு. அப்பிடி ஒரு கதையை  எழுதணும்ன்னு  ஒரு தீர்மானம் உருவாச்சு மனசுக்குள்ளே. சரி  ஆனந்தவல்லி  நீதான்  சொல்லேன்…  இது வரைக்கும்   நடக்காத ஒண்னை சொல்லேன். அதைக் கதையா  எழுதறேன்  என்றேன்.

அய்யய்யோ  எனக்கு  அதெல்லாம் தெரியாது அப்பிடி எழுதினா  நல்லா இருக்கும்னு சொன்னேன்.  எனக்கு உள்ளே வேலையிருக்குன்னு சொல்லிட்டு எழுந்துபோனாள் அவள்.

உண்மையிலேயே  இது கதாசிரியனுக்கு  ஒரு அருமையான  சவால்தான். நடக்காத  கதையை  எப்பிடி எழுதறது ,எதை எழுதினாலும் உலகத்தோட ஏதோ ஒரு  மூலையிலே  அது நடந்திருக்கு. கல்  நடந்தா   மரம் நடந்தா  குளம் நடந்தா  அதுதான்  சம்பவம். கிணறு  நடந்தா  அதுவும் சம்பவம்    இதெல்லாமே  நடக்காத  சம்பவம்  நடக்காத  கதைக்கு  ஒரு உதாரணம் வேணும்னா  நடந்த  தேர்தலில்  நேர்மையான அரசியல்வாதி ஒருவர்  வெற்றி பெற்றார்  இந்த ஒரு வரியே  நடக்காத  கதைக்கு  உதாரணம்  அப்பிடீன்னு  சொன்னா  அது நடக்காத  கதைன்னு ஒத்துக்குவாங்க.

நாம் யார்கிட்ட  பேசினாலும்  பேசும்போது இல்லாத ஒன்றைப் பற்றிக் கதைவிட்டால்தான் அதை ரசனையோடு கேக்கறாங்க  இல்லேன்னா  காதிலேயே  வாங்கமாட்டாங்க . ஆக, கதையோ, கவிதையோ அல்லது கற்பனையோ எந்த ஒரு எழுத்துக்கும் விறுவிறுப்பும், ஆரவாரமும் அவசியம் தேவை. நடந்த அல்லது   நடக்காத கற்பனையான ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அதைத் திரித்து, அவரவர் சிந்தனைக்கு ஏற்றபடி அதை லாவகமாகக் கதையாக்கினாத்தான்  படிப்பாங்க.

நாம் ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டு, அதை மற்றவரிடம் சொல்லும்போது அது நடந்தமாதிரிதான் நாம் சொல்லுகிறோம். அதை நம்மகிட்ட கேட்டவர், வேற ஒருத்தர்கிட்ட  சொல்லும்போது  அதையே வேறு மாதிரி சொல்கிறார். இப்பிடிப் பல காதுக்கு இந்த சம்பவம் போகும்போது  அந்த உண்மையான சம்பவமே  கற்பனை கலந்து  மொத்தமாவே  மாறிப் போயிடுது.

ஆக இது வரைக்கும், நடக்காத  ஒரு சம்பவத்தை அல்லது நிகழ்ச்சியை நாம் கற்பனை செய்ய முடியும் என்பது உண்மையானாலும், அது நம்மாலே  முடியுமா  என்று சந்தேகமே  வந்தது  அவருக்கு இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கை. சூரியனும் சந்திரனும் பகல் இரவாக மாறி மாறித் தோன்றுகின்றன. யுகம் தோன்றிய காலத்திலிருந்து, இது நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று. ஏன்னா!.. இந்த நிகழ்ச்சியையே இப்படி கற்பனை செய்தால் எப்படி இருக்கும்.  இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு தொடர்ந்து சூரியன் உதிக்கும், அதன்பிறகு ஒரு வாரத்துக்கு சந்திரன் ஆட்சி செய்யும். அதாவது ஒருவாரம் இருட்டில இருப்போம், நிச்சயமா கரெண்ட் இருக்காதுன்னு நினைச்சுக்குவோம், அப்புறமா வெளிச்சம் ஒரு வாரந்தான் இருக்கும். ஏன்னா, இது நடக்காத சம்பவமாச்சே!

அட  இது நல்லா இருக்கே! அவருக்கு  அவரோட  அம்மா  எழுத்தாளர் கமலம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.  நம்மோட  மூளையிலேருந்து  வெளிப்படற  கதிர்கள் இந்தப் ப்ரபஞ்சத்திலே  ஏற்கெனவே நிறைஞ்சு அழியாம சுத்திகிட்டே இருக்கற கதிர்களோட எப்பிடியோ ஒரு  தொடர்பு ஏற்படும் போதுதான்  நமக்கும்  கற்பனை  வரும். எதுவுமே இல்லாமே  நமக்கும் கற்பனை வராது;  ஏன்னா  பஞ்ச பூதங்களோட  தொடர்பு கொண்டதுதானே  நம்மோட  மனசும் புத்தியும்  அப்பிடீன்னு.

மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டு  ஏதேதோ பேசிக்கொண்டே இருந்த ஆனந்தவல்லி,  உங்க கதையெல்லாம்  நல்லாத்தா இருக்கு.  நான் நல்லா இல்லேன்னு சொல்லலலே… அதுனாலே  நீங்க ஏதும் வருத்தப்படாதீங்க  என்று சமாதானப்படுத்தினாள்.

இல்லேம்மா… நான் அதுக்கெல்லாம் வருத்தப்படலே.  ஜீரணிக்க  முடியாத  கேள்விதான்! ஆனாலும் உண்மையான  கேள்வி  நீ கேட்டது.  அதைத்தான்  யோசிச்சிண்டு இருக்கேன்;  நீ ஒண்ணும் தப்பாச் சொல்லலே.

உண்மையாச் சொல்லணும்னா  ஒரு கதாசிரியனோட  ஈகோவைத்  தொட்டு  அவனோட திறமைகளை வெளிக்கொண்டு வர கேள்வி இது.  சுய பச்சாதாபத்தினாலேயோ   வீண் கர்வத்தினாலேயோ  நாம்  எப்பேர்ப்பட்ட எழுத்தாளன்  நமக்கு போயி ஒருத்தர்  உபதேசம் செய்யறதா  என்றெல்லாம் எதிர்மறையா  சிந்திக்காம  நேர்மையாச் சிந்திச்சு  எழுதினா  கிடைக்கப் போற நல்ல பேரு  எனக்குதானே.   அதுக்காகத்தானே   நீ சொல்றே.  அதைப் புரிஞ்சுண்டுதான்  யோசிக்கறேன்  என்றார்.

உங்களுக்கு  ஒரு விஷயம் தெரியுமா?  நாம லாஸ்வேகஸ்லே பாத்தோமே  சரஸ்வதி… அவங்ககூட உங்க நாடகம் சினிமால்லாம் பாத்திருக்கேன்னு  சொன்னாங்களே. அவங்க  ஐம்பது வயசிலே கர்ப்பமா இருக்காங்களாம். இனிமே கருவைக் கலைச்சா அவங்க உயிருக்கே ஆபத்துன்னு  டாக்டருங்க சொல்லிட்டாங்களாம். அதனாலே என்ன?  ஏதோ  ஆனது ஆச்சுன்னு   அடுத்து என்ன செய்யணுமோ அதைச் செய்யறதை விட்டுட்டு அவங்க மருமகப் பொண்ணு  அவமானம் அவமானம்னு  பிடுங்கி எடுக்கறாளாம்  என்றாள்.

இது  நடந்த  கதை.  ஆனால் இதை மையமாக வைத்து இதையே நடக்காத  கதையாக மாற்றி அதாவது மாற்றுக் கோணத்தில் சிந்தித்து  எழுதினார்.  அது  “நெருப்பின் நிழல்“  என்னும்  கதை.  ஆனால், இது என் கற்பனையின் ப்ரகாரம்  நடக்காதுதான்,  நடக்காத  கதைதான். ஆமாம்  ஒரு தாயின்  மனம்படும்  வேதனை என்னும்  அடுப்பிலே எரிந்து கொண்டிருக்கும் அணையாத நெருப்பு  அதன் தாக்கம் அதனால் எழுந்த ஏக்கம்  அதன் விளைவாக  எழுந்த ஆக்கம்!

சரி  என் பொண்டாட்டி ஒப்புக்கறாளான்னு பாப்போம். இவளே ஒத்துக்கலேன்னா…  எப்பிடி  ரசிகர்கள் ஒத்துக்குவாங்க? தயக்கத்தோடு  நீட்டினார்  படிச்சுப் பாரு என்றார்.  ஆனந்தவல்லி  படிக்க  ஆரம்பித்தாள்… 

நெருப்பின்நிழல்

மனைவியை  ப்ரசவத்துக்கு  உள்ளே அனுமதித்துவிட்டு வாழ்க்கைத் துணையா  குழந்தையா என்னும் பதைப்புடன் வெளியே நின்று தவிப்பதை விட   எவ்வளவு கொடுமையான வலியாக இருந்தாலும் ப்ரசவமே மேல், உள்ளே  வலியின் கொடுமை தாங்காமல் கதறிக் கொண்டிருந்தாள்  கற்பகம். அந்தரத்து ஊஞ்சல்  எப்போது அறுந்து விழும் எங்கே தள்ளும் என்றே தெரியாத  அவஸ்தை  போன்ற நெருப்பு அவள் கதறல். தவித்துக்கொண்டிருந்தார் சதாசிவம்.

சற்றே தள்ளி  நின்று கொண்டு மருமகள்  ராகினி பேரன் பேத்தியைக் கொஞ்சவேண்டிய இந்த ஐம்பது வயசிலே இதெல்லாம் தேவையா?  ஊர்லே நாலு பேரு அசிங்கமாப் பேசறாங்க.  வெளியிலே தலைகாட்ட முடியலே  என்று சலித்துக் கொண்டாள். மகன் சங்கரும், பெண்ணும் மாப்பிள்ளையும்  மௌனமாக நின்றிருந்தனர்.

நமக்குத்தானே அவமானமா இருக்கு  என்ற  மருமகள் ராகினியின் சொற்கள் தணலின் தகிப்பாய்  மனதை சுட்டது சதாசிவத்துக்கு.

சார்… குழந்தை சரியா திரும்பாம மாட்டிகிட்டு இருக்கு. சிசேரியன்தான் வேற வழியில்லே. அவங்க வயசு எதிர்ப்புத் திறன் இதெல்லாம் ஒத்துவருமான்னு தெரியலே. இதுலே கையெழுத்து போடுங்க. எங்க முழு முயற்சியை நாங்க செய்யறோம் என்றாள் அவசரமாக டாக்டர் தாரிணி.

எப்பிடியாவது  என் பொண்டாட்டியையும்  குழந்தையையும் காப்பாத்திக்குடு  கர்ப்பரக்‌ஷகாம்பிகா  என்று மனமுருகி வேண்டிக்கொண்டு பதைப்புடன் காத்திருந்தார் சதாசிவம். சற்று நேரத்தில் உள்ளேயிருந்து வந்த டாக்டர்   தாரிணி தாயும் சேயும் நலம். நார்மல் டெலிவரி. அவங்க வயசுக்கும் இருந்த நிலமைக்கும்  இது ஏதோ தெய்வ சக்திதான்.  நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கு… வாழ்த்துக்கள் என்று கையைக் குலுக்கிவிட்டுப் புன்னகைத்தாள்.

சதாசிவத்துக்கு அந்தப் புன்னகை கர்பரக்‌ஷகாம்பிகையின் புன்னகையை நினைவூட்டிற்று. நீங்கள்ளாம்  வீட்டுக்கு போயிடுங்க. அவளுக்குத் துணையா நானே இருக்கேன் என்று  இருந்த சதாசிவம் கையால் குழந்தையை லாவகமாக  எடுத்து உச்சி மோந்து உடல் சிலிர்ப்புடன் கட்டிலில் படுத்திருந்த கற்பகத்தின் பக்கத்தில்  விட்டுவிட்டுச் சொல்ல முடியாத   உணர்வோடு ஆதரவாக கற்பகத்தின் கையைப் பிடித்துக் கொண்டார்.

என்னோட  எல்லாப் பிடிவாதத்துக்கும் இது வரைக்கும் நீங்க  ஏன்னு ஒரு வார்த்தை கூடக் கேக்கலை.  எல்லா உயிரும் பொறக்கறதும் போறதும்  சகஜம்தான் அதுக்கு நடுவிலே இருக்கற வாழ்க்கையில் மனசுதாங்க முக்கியம்.

நாம ரெண்டு பெத்தோம் வளர்த்தோம். ஆனா அவங்களுக்கு ஏதோ தானே பொறந்து தானே வளர்ந்தா மாதிரி ஒரு உணர்வு வந்திருச்சுங்க.  ஒரு வார்த்தை  அம்மான்னு கூப்படறதில்லே.  அதுனாலேதான்  அந்தத் தாய்மை உணர்வை, மறுபடியும் அனுபவிக்கணும்; அம்மாங்கற பாசமான மந்திரத்தை மறுபடியும் கேக்கணும்னு  ஒரு எண்ணம்.

இந்தக் குழந்தை பெரியவனா  ஆகற வரைக்குமாவது என்னை அம்மான்னு கூப்பிடுமே. மறுபடியும்  பாசமான  அம்மாங்கற குரல் காதிலே விழுமே அதான் இந்தப் பிடிவாதம் என்றாள் புன்னகைத்தபடி.

சதாசிவம்  எனக்கு புரியுதும்மா    நெருப்புக்கு நிழல் விழாதுன்னு சொல்வாங்க அதான் என்னோட பயம் என்றார்.

இது  நீறுபூத்த  நெருப்புங்க. நெருப்புக்கு  நிழல் விழாதுதான்  ஆனா இது நெருப்போட நிழல் இல்லே நெருப்போட நிஜம்  என்றாள் கற்பகம்.

                                                  சுபம் 

கதையைப் படித்துவிட்டு நிமிர்ந்தாள் ஆனந்தவல்லி. ஒரு மர்மக் கதையைப் படிக்கும்போது  முடிவை நோக்கி  நகரும்போது  இதயம் லப்டப் என்று துடிக்குமே  அந்த  நிலையில்  அவளைப் பார்த்தார்  கனக்கும்  இதயத்துடன்.

எனக்கு இப்பதாங்க புரியுது  நடக்காத  கதையை நம்மாலே எழுத முடியாது   அப்பிடீன்னு. ஆனா இந்தக் கதை அருமையா இருக்கு என்றாள். அட!  பொண்டாட்டி பாராட்றாளே… இதுவே  உலகத்திலே  நடக்காத  கதையாச்சேன்னு ஒரு திருப்தி  வந்தது அவருக்கு.

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க