–செண்பக ஜெகதீசன்

 

காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

       –திருக்குறள் –1251(நிறையழிதல்)

 

புதுக் கவிதையில்…

 

நிறை என்னும்

கதவை அடைத்து,

நாணமாம் தாழ்ப்பாள் போட்டு

பாதுகாத்தாலும்,

காமமெனும் கோடரி

உடைத்துவிடும்…!

 

குறும்பாவில்…

 

கற்புக் கதவடைத்து நாணத்தாழ்ப்பாள்

போட்டாலும் நிற்காது,   

காமமாம் கோடரி உடைத்துவிடும்…!

 

மரபுக் கவிதையில்…

 

கற்பெனும் வலிய கதவடைத்து

     காட்டும் நாணமாம் தாழ்ப்பாளைப்

பொற்புடன் போட்டுப் பூட்டிடினும்

   போதா ததற்குப் பாதுகாப்பு,

அற்பமாய்த் தோன்றிடும் காமமெனும்

  ஆயுதம் கோடரி தாக்கிவிட்டால்,

சொற்பமும் மீதி இல்லாமலே

  சுக்கு நூறாய் உடைந்திடுமே…!

 

லிமரைக்கூ…

 

நாணத்தாழ்ப்பாள் கற்புக்கதவை அடைக்கும்,     

போதாது போதாது இதற்கிந்த பாதுகாப்பு,        

காமமெனும் கோடரியதை உடைக்கும்…!

 

கிராமிய பாணியில்…

 

பொல்லாதது பொல்லாதது

காமம் ரெம்பப் பொல்லாதது..

 

வெக்கத் தாப்பாளப் போட்டேதான்

கற்புக் கதவ

பூட்டிவச்சாலும் பாதுகாப்பில்ல

பெருசா பாதுகாப்பில்ல..

 

காமக் கோடாலிவச்சி

வெட்டுனாலே ஒடஞ்சிபோவும்

துண்டுதுண்டா ஒடஞ்சிபோவும்..

 

அதால,

பொல்லாதது பொல்லாதது

காமம் ரெம்பப் பொல்லாதது…!

 

செண்பக ஜெகதீசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *