இலக்கியம்கவிதைகள்

மார்கழி மணாளன்

க. பாலசுப்பிரமணியன்

 

மார்கழி மணாளன் திருக்காப்பு

 

வாழிய வாழிய வலக்கை சக்கரம்

வாழிய வாழிய மலர்க்கை சங்கம்

வாழிய வாழிய துளசி மோகனன்

வாழிய வாழிய மார்கழி மணாளன் !

 

வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும்

கண்ணனின் நினைவில் காலங்கள் வெல்லும்

விண்ணவர் அனைவரும் வாழ்த்திடும் வகையில்

வைகறை நித்தம் மங்கலம் மலர்ந்திடும் !

 

திருவருள் பொங்கிடும்  திருவடி சரணம்

பொன்னிரு பாதம்  இன்னுயிர் காக்கும்

கண்ணிரு விழியில் கண்ணனை வைத்தால்

கருத்தில் காரிருள் நீங்கிக் கதிரொளி வீசும் !

 

பூவிரித்  தாமரை பொற்பதச் செல்வி

பூரணன் நெஞ்சினில் நித்தம் வேள்வி !

போதுமென்ற மனம் புகுந்திட வருவாள்

போதாதவர்க்குப் பொன்னும்  தருவாள் !

 

அரங்கனின்  அயர்வினை நீக்கிடும் காலை

ஆலயம் நெஞ்சினில் அமைந்திடும் வேளை !

மார்கழிக் காலையில் மாதவன் போற்றி

மங்கலம் தங்கிட வாழ்வினில் வெற்றி !

 

மார்கழி மணாளன்  (1)

திருவரங்கம்  -ஸ்ரீ ரங்கநாதர்

 

அரங்கத்தான் திருமேனி துயிலுறங்கத் தான்

அஞ்சுதலை ஆதிசேடன் குடைப் பிடித்தான் !

அன்னை இலக்குமியும் அடி போற்றத்தான்

அரங்கத்தான் தாள் அகிலமெல்லாம் காப்பு. !

 

ஆதவன் சுடரெல்லாம் கார்மேனி கவர்ந்திருக்க

அங்கமெல்லாம் புதுநிலவாய்ப்  பொலிந்திருக்க

அரக்கன்தம்பி ஆள்திசைக்கும்  அருள்கிடைக்க

அலையாழி துயில் செய்யும் அரங்கத்தான் காப்பு !

 

விண்ணவரும் மன்னவரும் கண்விழியில் காத்திருக்க

வேதமுடன் பாசுரங்கள் விண்வெளியில்  ஒலித்திருக்க

விழிகாண ஆவினங்கள் விருப்பமுடன் காத்திருக்க

விழிமூடி விளையாடும் வைகுந்தன்  அருள்காப்பு !

 

துயிலுறங்கும் தூயவன் நினைவெல்லாம்

துயர்துடைக்கச்  சென்றதுவோ அகிலமெல்லாம்?

தூங்காமல் தூங்குகின்ற தோற்றமுற்றான்

துளசி மாலையணி  துவாரகையான் திருக்காப்பு! !

 

ஆழ்வார்கள் சாசனங்கள் அவன் கேட்டும்

அமர்ந்திடவே  ஆசனங்கள் ஏற்கவில்லை !

காவிரிக் கருணையில் கழனிப்பாசனம் போல்

காதல் கொண்டோருக்குக் கண்ணன் காப்பு !

 

நீலக்கடலிலே நீண்ட சேஷத்திலே

நித்திரை காட்டும் முத்திரை மோனத்திலே

நீர்மேகக் கண்ணனவன்  பாதத்தையே

நினைத்தவருக்கெல்லாம் அருட்காப்பு !

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    வைகறை பொழுதில் எழுந்தால் வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும் கோடான கோடி நல்லெண்ணங்களும் நம் மனங்களில் உதயமாகி வெகு எளிதாக வெற்றியை அடையலாம். . மார்கழி மணாளனின் கவிதை மாலையாக திருவரங்கம் -ஸ்ரீ ரங்கநாதருக்கு நண்பர் திரு க. பாலசுப்ரமணியன் மாலையிட்ட விதம் அருமையிலும் அருமை. நண்பர் திரு க. பாலசுப்ரமணியன்அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள் நன்றி வணக்கம்

  2. Avatar

    நண்பர் திரு ராமலிங்கத்தின் அன்பார்ந்த பாராட்டுதல்களுக்கு மனமார்ந்த நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க