Tag: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி (173)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 12

    -மேகலா இராமமூர்த்தி

    ஒருவரை வாழ்த்தும்போதும் சரி, ஏதேனும் நன்னிகழ்வுக்கு வரவேற்கும்போதும் சரி, ‘சுற்றமும் நட்பும் சூழ’ என்ற சொற்றொடரை நாம் பயன்படுத்துகின்றோம். சுற்றம் எத்துணை முக்கியமானதோ அதற்கிணையாக நட்பும் முக்கியமானது என்பதையே இது விளக்குகின்றது.

    களிப்பூட்டும் இன்பத்தை மிகுதியாக்குவதிலும், கருத்தழிக்கும் துயரத்தைக் குறைப்பதிலும் சுற்றத்தினும் நட்பின் பங்களிப்பே அதிகம் என்பது மாந்தர் பலரும் தம் வாழ்வில் கண்ட அனுபவ உண்மையாகும். ஆதலால், நண்பர்களைத் தேர்ந்தெடுக்குமுன் அவர்களின் ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து நட்புகொள்ளல் வேண்டும் என்கிறது நாலடியார்.

    எப்படிப்பட்டவரின் கேண்மை நன்று? எவருடையது தீது? என்பதற்கு நாலடி நவிலும் விளக்கத்தைக் காண்மின்!

    யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
    கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.
      (நாலடி – 213)

    யானையை ஒத்த இயல்புடையாரது நட்பை நீக்கி, நாயை ஒத்த இயல்புடையாரது கேண்மையைத் தழுவிக் கொள்ளுதல் வேண்டும்; ஏனெனில், யானை பலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையே குற்றங்கண்டு கொல்லும்; ஆனால் நாயோ தன்னை வளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல் தன் உடம்பில் உருவி நிற்கும்போதினும் அவன்பால் கொண்ட அன்பால் வால்குழைத்து நிற்கும்.

    பிழை பாராட்டாத இயல்புகொண்ட பண்பாளரையே அறிந்து நட்புச் செய்தல் வேண்டும் என்பதே இதனால் பெறப்படும் கருத்து.

    நண்பருள் முதல் தரத்தினர், இரண்டாம் தரத்தினர், மூன்றாம் தரத்தினர் யாவர் என்று வகை பிரித்துக் காட்டுகின்றது மற்றொரு நாலடியார்ப் பாடல்.

    நட்பில் கடைத்தரமானவர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்; இடைத்தரமானவர் தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்; ஏனை உயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு, மதிப்புமிகு பனை மரத்தின் இயல்புபோன்று நேயம் ஊன்றியபோது ஊன்றியதேயாம். அது மாறாது!

    கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
    இடையாயார் தெங்கி னனையர் – தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே
    தொன்மை யுடையார் தொடர்பு.
       (நாலடி – 216)

    தினமும் நீரூற்றிக் கவனித்தலால் பாக்குமரமும், இடையிடையே நீரூற்றிக் கவனித்தலால் தென்னை மரமும், முதலில் விதையிட்ட அளவோடு நீரூற்றாவிட்டாலுங்கூடப் பனைமரமும் வளர்ந்து பயன்தரும் இயல்புடையவையாதலால், அவ்வகையில் கவனித்தால் மட்டுமே நேயம் காட்டும் மக்கள் இயல்புக்கு அவை உவமைகள் ஆயின.

    ”நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
    உப்பாதல் சான்றோர் கடன்” என்று நாயனார் சொன்னதை ஈண்டு எண்ணுக.

    நண்பரைப் பல்லாற்றானும் ஆய்ந்து தெளிதல் வேண்டும். அப்போதுதான் அந்த நட்பு நம்பிக்கைக்குரியதாயிருக்கும்; இல்லையேல் பின்னாளில் வெம்பி வருந்தவேண்டி வரும்.

    தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்
    விளியா அருநோயின் நன்றால் – அளிய
    இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
    புகழ்லின் வைதலே நன்று.
       (நாலடி – 219)

    ”நம்பத் தகாதவரது நட்பினைக் காட்டிலும் அவரது பகை நலந்தருவதாகும்; தீராத கொடிய நோயோடு போராடி வாழ்வதினும் சாதல் நலம் பயப்பதாகும்; பிறரை நெஞ்சு புண்ணாகும்படி கடுஞ்சொற்களால் இகழ்தலினும் அவரைக் கொல்லுதல் நல்லது; ஒருவரிடம் இல்லாத குணங்களையெல்லாம் இருக்கின்றன என்று கூறிப் பொய்ப்புகழ்ச்சி செய்தலினும் அவரைப் பழித்துவிடுதலே நன்மையாம்” என்று வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளையெல்லாம் வரையறுத்துச் சொல்லிவிடுகின்றது நாலடி.

    ”புலவர்காள்! வலியும் வீரமுமில்லாதானை விறலில் வீமனே! வீரத்தில் விசயனே! என்று புகழ்ந்தாலும், கொடுக்கும் குணம் இல்லாதானைப் பாரியே என்று போலியாய்ப் புகழ்ந்தாலும் உமக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை” என்று புலவர்களின் வெற்றுரையை வெறுத்துரைக்கும்  தம்பிரான் தோழரின் தேவார அடிகள் இத்தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகின்றன!

    மிடுக்கி லாதானை வீம னேவிறல்
    விசய னேவில்லுக் கிவனென்று
    கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
    கூறி னுங்கொடுப் பாரிலை…
    (தேவாரம் – ஏழாம் திருமுறை)

    சில நேரங்களில் நாம் மிகவும் ஆராய்ந்து நட்புக்கொண்ட நல்லோரிடத்தும் விரும்பத்தகாத குணக்கேடுகள் தோன்றக்கூடும்.  அத்தகு சங்கடமான வேளைகளில் நாம் செய்யவேண்டுவது என்ன?

    நல்லவர் என்று நாம் பலகால் ஆராய்ந்து மிகவும் நேசித்துக் கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர் நல்லவரல்லாராய் பிழைபட்டாரெனினும் அதனைப் பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கமாய் வைத்துக்கொள்ளல் வேண்டும்; ஏனென்றால், பயன்பாடுடைய நெல்மணிக்கு அதிலிருந்து நீக்குதற்குரிய உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு.

    ஆக, குறையற்ற மனிதர்கள்தாம் நண்பராய் வேண்டும் என்று நாம் குவலயத்தில் தேடினால் ஒருவரும் தேறமாட்டார்; இருப்பவர்களில் நற்குணம் மிக்குள்ளோரை, அவரிடம் உள்ள குறைபாடுகளோடு, ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை என்கிறது நாலடியார்.

    நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
    அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
    நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
    புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
        (நாலடி – 221)

    அதுமட்டுமன்று!  நம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள் செய்தாலும் அவற்றைப் பொறுத்தொழுகுதல் தகுதியான ஒன்றே! நிறமான கோங்கமலரில் அழகிய வண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்த மலைநாட! ஒருவர் பொறுத்துப்போவதால் இருவரிடையே உள்ள நல்ல நட்பு நீடிக்கும் என்கிறது நாலடியார்.

    இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
    பொறுத்தல் தகுவதொன் றன்றோ – நிறக்கோங்கு
    உருவவண் டார்க்கு முயர்வரை நாட!
    ஒருவர் பொறையிருவர் நட்பு.
      (நாலடி – 223)

    ”விட்டுக்கொடுத்தார் கெட்டுப்போவதில்லை” என்று நம்மவர் நாட்டு வழக்கில் சொல்வதும் இதைத்தானே?

    இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
    துன்னாத் துறத்தல் தகுவதோ – துன்னருஞ்சீர்
    விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ
    கண்குத்திற் றென்றுதங் கை.
        (நாலடி – 226)

    ”அணுகுதற்கரிய சிறப்பினையுடைய, வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களையுடைய மலைநாடனே! தவறுதலாகத் தம் கண்ணைக் குத்திற்றென்று தமது கையை மக்கள் நீக்கி விடுவரோ? ஆகவே, அறியாமையால் தீமைகள் செய்தாலும் நீக்குதற்குக் கூடாத நல்ல நட்பினரை நெருங்காமற் கைவிட்டுவிடுதல் தகுந்ததாகுமா? ஆகாது!” என்று நமக்கு நல்லறிவு கொளுத்துகின்றது நாலடி.

    வாழ்வில் முடிவெடுக்க முடியாமல்  நாம்  தடுமாறும் தருணங்களில் நல்லறிஞர்களின் இதுபோன்ற நல்லுரைகள் நமக்குக் கைவிளக்கென வழிகாட்டுகின்றன எனில் மிகையில்லை.

     [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 171-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கண்ணைப்பறிக்கும் வண்ண வளையல்களின் அணிவகுப்பை நிழற்படக் கருவியில் எழிலாய்க் கொண்டுவந்திருப்பவர் திரு. மோகன்தாஸ்.  இதனை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றியறிதல் உரித்தாகின்றது.

    ”மங்கல அணியாம் வளையலைக் கண்டால்
    திங்களைக் கண்ட அல்லியாய்
    நங்கையர் முகமும் மலரும்!”

    வண்ண வளையல்கள் குறித்த நம் கவிஞர்களின் எண்ணவோட்டத்தையும் அவர்தம் கவிதைகள்வழி கண்டுவருவோம்!

    ”கல்லுடைக்கும் பெண்ணெனக்குக் கல்லுவளை சரிப்படுமா? இடுப்பொடிய நானுழைத்தால் அல்லவோ என் வீட்டினிலே அடுப்பெரியும்!” என்று வருந்தும் ஏழைக் கர்ப்பிணியின் வேதனையை மனந்தொடும் வகையில் பாவில் பதிவாக்கியிருக்கிறார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா.

    ஓர் ஏழையின் குமுறல்

    கைநிறையப் போடக்
    கலர்கலராக் குவிச்சிருக்கு
    பைநிறையப் பணமிருந்தாப்
    பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம்.
    ஏழைக நம்பளுக்கு
    எதுக்கிந்த வளையலெல்லாம்
    வாழ வழியில்லையாம்
    வளையலொரு கேடா
    புதுப் புள்ளத்தாச்சிக்குப்
    போடுவாங்க வளைகாப்பு
    எட்டு மாதப் புள்ளத்தாச்சி
    எம் பொழைப்பு கல்லுடைப்பு

    கல்லுடைக்கும் கைக்கு
    காப்பு சரிவருமா?

    நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான்
    ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குளிரும்
    சீக்காளி எம்புருசன் செதைஞ்சு கெடக்கையில
    காப்பு வந்து என்னோட கையிலதான் ஏறிடுமா
    வாணா எனக்கிந்த வளைகாப்பு ஆசையெல்லாம்
    வீணாச் செலவழிச்சு வீம்பு பண்ண ஏலாது.

    *****

    ”வளைந்து பருக்கும் வயிற்றின் இரகசியம் சொல்லுமிந்த வளை! கருவின் உயிரும் கேட்டு மகிழுமே வளையல் எழுப்பும் இன்னிசை!” என்று வளைகாப்பின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வளைகாப்பு:

    குலங்கள் தழைக்கக் குடும்பம் மகிழ
    பலவிதப் பண்டிகைப் பெரிதாய் உண்டு

    நலமுடன் வாழவும் நித்தமும் ஒன்றாய்
    விலகா வண்ணம் வருமாம் அழகாய்

    விளைந்த நல்திரு விழவில் அணியும்
    வளையல் தந்த வகைதான் வளைகாப்பு

    பிரிவினை அகற்றப் பாடம் சொன்னது
    பிரியாது சேர்ந்தே பெண்ணொடு பழகும்

    வட்ட வடிவம் வண்ணத் தோற்றம்
    எட்ட விரட்டும் எதிர்வினை ஒழிய

    வளைந்து பருக்கும் வயிற்றின் ரகசியம்
    வளையலின் மூலம் வருகின்ற உண்மை

    சங்கத் தமிழில் சதங்கையும் வளையலும்
    பொங்கு தமிழாலே புகழுற்ற வரலாறு

    கருவின் உயிரும் கேட்கும் இசையை
    ஒருவித வளையல் ஒலியும் சுகம்தான்

    மனைவி ஆனதும் மங்கை யர்க்கொரு
    வினைகள் வராது வளையல் காப்பது

    “வளைகாப்பு”

    திளைத்து மகிழத் தருமாம்
    வளையல் சத்தம்.! வருவதும் மங்கலமே.!

    *****

    நற்கவிதைகள் புனைந்த கவிஞர்கட்கு என் வாழ்த்தும் பாராட்டும்!

     இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    பேரழகு!

    தங்க வளையல் போட்டால்தான்
    தனியே வந்திடும் மதிப்பென்றே
    அங்கம் முழுதும் தங்கமாக்க
    ஆசைப் பட்டிடும் அணங்குகளே,
    தங்கம் தராத அழகினையே
    தந்திடும் சாதா வளையல்களே,
    தங்கிடும் எளிமையும் அடக்கமதுவும்
    தானே கொணரும் பேரழகே…!

    தங்கத்தின்மீது எப்போதும் அளவற்ற மோகம் நம் நங்கையர்க்கு. தம் செல்வச்செழிப்பைப் பறைசாற்ற, தங்க வளையல்களை முழங்கைவரை அடுக்கிக்கொண்டுவரும் அணங்குகள் ஏராளம்! ஏராளம்! எனினும், தங்கத்தினும் வனிதையர் அங்கத்துக்கு அதிக அழகைக் கூட்டுவது, அவர்களைப் பொலிவாய்க் காட்டுவது இங்கே குவிந்திருக்கும் சாதா வளையல்களே என்று தோதாய் உரைக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (172)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 11

    -மேகலா இராமமூர்த்தி

    எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெற்றிட விரும்புவது மனித மனம். அதற்கு அடிப்படைத் தேவை முயற்சியும் உழைப்பும்.

    ”உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?” என்பார் பட்டினத்தடிகள்.

    ”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்” எனும் வள்ளுவம், விடாது முயலும் மக்கள் தமக்குச் சாதகமாயில்லாத விதியையும் வென்று சாதனை படைப்பர் என்கிறது.

    அத்தகு ’தாளாண்மை’யின் தகைமையை நாலடியும் விதந்தோதவே செய்கின்றது.

    துவள்கின்ற இளங்கொம்பாகி வழியிடையே நின்ற சிறுமரங்கூட உள்வயிரங் கொண்டு முற்றிய காலத்தில் ஆண் யானைகளைக் கட்டுதற்குரிய கட்டுத்தறியாக உதவும். ஒருவன் தன்னுடைய முயற்சியால் தன்னை ஆற்றலிற் குறைவில்லாமற் செய்துகொண்டு வாழ்க்கையிற் பெருமை கொள்ளுதலும் அத்தகையதே.

    ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
    காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்
    வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
    தாழ்வின்றித் தன்னைச் செயின்.
           (நாலடி – 192)

    எளிய நிலையிலுள்ளோரும் தம் விடாமுயற்சியால் தம்மை ஆற்றலுடையவராகச் செய்துகொள்ளல் வேண்டும் என்பதே இதன்வாயிலாய் நாமறியும் உண்மை.

    பிறப்பின் அடிப்படையில் நல்ல குலம், தீய குலம் என்பதெல்லாம் வெறும்  சொல்லளவில் தானேயன்றி அதற்குப் பொருளில்லை என்கிறது நாலடியார். பின் நல்ல குலம் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது எனும் நம் ஐயத்திற்கும் அதுவே தக்கதொரு விடை பகர்கின்றது.

     நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
    சொல்லள வல்லாற் பொருளில்லை – தொல்சிறப்பின்
    ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
    என்றிவற்றான் ஆகும் குலம்.
         (நாலடி – 195)

    நல்ல குலம் என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையுடைய செல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி என இவை தம்மாலெல்லாம் உண்டாவதாகும். ஆகலின், தவம் கல்வி ஆள்வினை முதலியவற்றில் முயற்சியுடையாரே பிறரால் நேயங்கொள்ளுதற்குரிய உயர்குலத்தோராவர் என்பது நாலடியின் துணிபு.

    ஒரு செயலில் ஈடுபட்டு உழைப்போர் தம் முயற்சி திருவினையாகும்வரை, தம் அறிவுத்திறத்தை அவசரப்பட்டு வெளிப்படுத்த மாட்டார்கள்; அடக்கமாகவும் மனவெழுச்சியுடனும் அதனைச் செய்துமுடிப்பர். மேலும் தமது ஆற்றலைத் தம் கண் முதலிய உறுப்புக்களாற் பிறர் ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கேற்ற அறிவு விளக்கமுடையவராகவும் இருப்பர். அத்தகைய திறன்மிகு தாளாண்மையுடையோரின் குறிப்புவழிப் பட்டதே இவ்வுலகு.

    ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
    ஊக்கம் உரையார் உணர்வுடையார் – ஊக்கம்
    உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
    குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.
        (நாலடி – 196)

    சுருங்கக் கூறின், நல்லறிவுடையாரின் முயற்சிகள் உள்ளுணர்வோடும் அறிவு விளக்கத்தோடும் நடைபெறுதல் வேண்டும். அதுவே முயற்சிக்கு வெற்றி தரும்; முயல்வோர்க்கும் பெற்றி தரும்.

    முயற்சி என்பதை ஒருவன் தன் சொந்த நன்மைக்காகவும் செய்யலாம்; தன்னைச் சார்ந்தோரின் நன்மைக்காகவும் செய்யலாம். வயதான தாய் தந்தையரை வீழாது காப்பதற்குப் பிள்ளைகள் செய்கின்ற முயற்சி இரண்டாம் வகையில் அடங்கும்.

    இளமையில் தன் அயராவுழைப்பால் குடும்பத்தை இடும்பையின்றிக் காத்த தந்தைக்கு முதுமை வரும்போது அவரைக் கைவிடாது கருத்தோடு காப்பதுதானே நல்ல பிள்ளைகட்கு அழகு? 

    சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
    மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
    குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
    புதல்வன் மறைப்பக் கெடும்
    .     (நாலடி – 197)
     

    கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அதன் விழுது தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றி நிற்றல்போலத் தன் தந்தையிடத்தில், முதுமை காரணமாக, தளர்ச்சி தோன்றும்போது அவன் பெற்றெடுத்த புதல்வன் அவனைப் பாதுகாக்க அது நீங்கும். ஆதலால் தந்தையின் தளர்ச்சியைப் போக்கும் முயற்சியுடையவனாய் மைந்தன் இருத்தல் வேண்டும்.

    அந்நாளைய வழக்கங்கருதி தந்தை தாய் பேணல் புதல்வன் கடன் என்றது நாலடியார். அதனால், புதல்வியர்க்கு அப்பொறுப்பில்லை என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளும் இன்றைய சமூகத்தில் புதல்வியர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வது நனிசிறந்தது!

    மேற்கண்ட நாலடியார்ப் பாடலின் கருத்தை எடுத்தியம்பும் சீவக சிந்தாமணிப் பாடலிது… 

    தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
    ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
    தாங்கல்கட னாகும்….  (சீவக சிந்தாமணி) 

    நன்முயற்சியால் செல்வத்தைச் சேர்ப்பதும், செழுங்கிளை தாங்குவதும் மனிதர்க்குச் சிறப்பும் மதிப்பும் கூட்டுவதாகும். இதனைச் சுற்றந்தழால் எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பேராசான் அற்புதமாய் விளக்கியிருப்பார். 

    ”சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தால் பெற்ற பயன்”
    என்பது செந்நாப்போதாரின் சீரிய எண்ணமாகும்.
     

    சுற்றஞ்சூழ வாழ்வதன் சிறப்பை நாலடியாரும் நவிலத் தவறவில்லை. 

    கருவுற்றபோது தோன்றிய துன்பமும், இடையிற் கருசுமந்து வந்த வருத்தமும், கருவுயிர்த்த காலத்தில் உண்டான இன்னலும் ஆகியவற்றைத் தாய் தன் மகவின் முகங்கண்ட அளவில் மறந்துவிடுதல்போல, முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்த துன்பம், ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக் கண்ட அளவில் நீங்கிவிடும்.

    வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
    கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
    அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
    கேளிரைக் காணக் கெடும்
    .     (நாலடி – 201)

    வாழ்வில் நாம் தளர்ச்சியுறும் காலத்தில் தைரியம் சொல்லி ஊக்கமும் உற்சாகமும் தருவதற்கு நல்ல சுற்றம் உடனிருப்பது பெரும்பேறு. அத்தகு சுற்றம் வாய்க்க நாம் அவர்களைத் தழுவி ஒழுகுதல் அவசியம் என்பதே இப்பாடலால் நாம் அறியும் அருங்கருத்து.

    வெயிலின் அழல்மிகுந்த வேனிற்காலத்தில் தன்னை அடைந்தவர்களுக்கெல்லாம் நிழல்தரும் மரத்தைப்போல், வறுமையின் அழல்மிகுந்த காலத்தில் தன்னை நாடி வந்தவர்களையெல்லாம் ஒத்தவகையில் காத்து, பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள்தந்து உதவுதல்போல், பலரும் பயன்நுகரப் பொருள் உதவி, தான் மேன்மேலும் பொருளீட்டும் முயற்சியோடு உழைப்பாளனாய் வாழ்வதே நல்ல ஆண்மகனுக்குக் கடமையாகும் என்று குடிதாங்கும் ஆடவனின் கடனை வகுத்துரைக்கின்றது நாலடியார். 

    அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
    நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழுமரம்போல்
    பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
    நல்லாண் மகற்குக் கடன்.     
    (நாலடி – 202)
     

    அதுமட்டுமன்று! உறவினர்கள் இன்புறும் வேளையில் நாமும் இன்புறுவதும், அவர்கள் துன்புறும் வேளையில் நாமும் துன்புறுவதுமே நல்லோர் இயல்பாய் இருத்தல் வேண்டும். அதைவிடுத்துச் சுற்றத்தார் மறுபிறவி எடுத்த பின்னரா நாம் அவர்களுக்காகப் பரியப்போகிறோம்  என்று வினவுகின்றது நாலடி. நல்ல கேள்வி! 

    நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்
    மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ – இறுமளவும்
    இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
    துன்புறுவ துன்புறாக் கால்.    
    (நாலடி – 209)
     

    சுற்றஞ்சூழ வாழ்ந்து பெற்றேம் இன்பம் என்றலே நானிலத்தார்க்கு குற்றமறு நலம் பயப்பது!

     [தொடரும்]

     *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

     

     

     

     

    Share
  • காலனிடம் ஒரு கேள்வி!

    -மேகலா இராமமூர்த்தி

    காலா…!    
    பயனிலா மாக்களே பல்லாண்டு வாழ்வதும்
    பயனுடை மக்களோ சில்லாண்டில் வீழ்வதும்   (சில்லாண்டு – சில ஆண்டு)
    முறையா தகுமா என்றே வினவினேன்!  
    கூர்ந்தெனை நோக்கிய காலனும் கூறினான்
    ஓர்ந்துதான் செய்கிறேன் நானுமே என்பணி   (ஓர்ந்து – ஆய்ந்து)
    செப்புவேன் அதனைநான் செவிமடு சற்றுநீ

    என்றுரைத்த காலனும் சொல்லிய கருத்திது…

    ”அறிவுடைச் சான்றோர்கள் எவருக்கும் பயனுளார்
    அறிவற்ற வீணரோ எமனுக்கும் பயன்படார்!
    ஆதலின் நானுமே பயனுளாரைக் கொள்ளுவேன்
    கோதனைய வீணரைப் பற்றிடாது தள்ளுவேன்  (கோது – சக்கை)
    என்தொழில் சூட்சுமம் புரிந்ததா நங்கையே…
    என்றெனைக் கேட்டனன் நகைப்புடன் காலனும்
    என்சொல அவனிடம் திகைக்கிறேன் நானுமே!!??

    *****

    மேற்கண்ட கவிதை பின்வரும் நாலடியார்ப் பாடலின் எளிய வடிவம்:

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
    கல்லாதார் வாழ்வ தறிதிரேல் – கல்லாதார்
    சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
    கோதென்று கொள்ளாதாம் கூற்று.  (நாலடி – 106)

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 170-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. அனுபாலா எடுத்த இந்த நிழற்படத்தைத் திருமதி. சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார். இவ்விருவருக்கும் என் நன்றி!

    ”தொழுத கையராய் அழுத கண்ணராய் நிற்கும் அடியார்முன் ஆண்டவனும் நெகிழ்ந்திடுவான் உளம்!”

    இந்தப் படத்தினைக் காண்கையில் உம் உளத்தில் ஊறும் உணர்ச்சிகளைத் திரட்டிக் கவிதையாய்ப் படைத்திட கவிவலவர்களைக் கரங்கூப்பி அழைக்கின்றேன்.

    *****

    ”உள்ளத்தில் உறைந்திருக்கும் பரம்பொருளை வெளியில் தேடுவதில் பொருளில்லை. ஆகவே தேடுவோம் அவனை உள்முகமாய்” என்று உண்மை உரைக்கின்றார் ஆ. செந்தில் குமார்.

    கடவுளை சற்றே சிந்திப்போம்!

    இந்த
    உடலே திருக்கோயில்!
    உள்ளமே கருவறை! – அதில்
    உறைபவனே இறைவன்!
    உரைத்தாரன்றே திருமூலர்…

    இந்த
    உடலைப் பேணாமல்
    உள்ளத்தைக் காணாமல்
    உலகில் எங்கெங்கோ தேடினாலும்
    உட்பொருள் கிடைப்பானா?

    அந்த
    கோயிலின் புறத்தே
    கோவணத்திற்கும் வழியின்றி
    கோடி மக்கள் பசித்திருக்கக்
    கோயிலின் அகத்தே உண்டியலில்
    கோடி கோடியாய்க் கொட்டினாலும்
    கொலுவிருக்கும் குலசாமி அருளுமா?

    அந்த
    கடவுளைச் சற்றே சிந்திப்போம்!
    கடவுள் அதன் உட்பொருள்
    கட உள் என்பதாகும்!
    கண்களை மூடி மனதினுள்ளே
    கடந்து போவோம்!
    கடவுள் அங்கே இருப்பானே!

    அந்த
    உள்ளத்தின் உள் உறைபவன்தான்
    எங்கெங்கும் நீக்கமற நிறைந்துளான்!
    கண்ணைத் திறந்து காண்பவை எல்லாம்
    அவனின்றி வேறேது??

    *****

    ”நெஞ்சம் மகிழ நிறைந்திருக்கும் பிள்ளையார், நாம் தஞ்சம் அடைந்திடத் தாயாக வந்திடுவார்” என்று விநாயகரைத் தன் கவிதையின் நாயகராக்கிப் போற்றுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    சாலை விநாயகர்..!

    நெஞ்சம் மகிழவே
    ……….நிறைந்ததொரு பிள்ளையார்
    தஞ்சம் அடைந்திடவும்
    ……….தாயாக வந்திடுவார்
    எஞ்சிய சாலையும்
    ……….எங்கேயும் இல்லையே
    விஞ்சியே நிற்கும்
    ……….வரையில்லா எண்ணிக்கை
    மஞ்சளும் குங்குமமும்
    ……….மக்களும் கொண்டுபோய்ப்
    பஞ்சமிலாது பூசிடுவார்
    ……….பட்டிதொட்டி யெங்குமாய்
    அஞ்சுவிரல் ஐந்தும்
    ……….இரண்டாகச் சேர்த்துயர
    அஞ்சனக் கண்மூடி
    ……….அங்கே தொழுதிடுவார்

    *****

    ”கூட்டுக் குடும்பமெல்லாம் சீட்டுக்கட்டாய்ச் சிதறிவிட, கும்பிட ஆளின்றிக் குலதெய்வமும் தனிமையில் வாடுதே” என்று வருந்திப் பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தனிமையில்…

    குடும்ப மெல்லாம் சேர்ந்திருக்க
    கூட்டுச் சேர்ந்து கும்பிட்டார்,
    குடும்ப நலனைக் காக்குமென்றே
    குலத்தின் தெய்வம் என்றுரைத்தார்,
    அடுத்து வந்த காலத்திலே
    அவரவர் பணியில் சென்றுவிட்டார்,
    கொடுத்து வந்த குலதெய்வமும்
    கொடிய தனிமையில் வாடிடுதே…!

    *****

    நல்ல கவிதைகளை நயமுடன் படைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    கடவுளைக் காணலாம்!

    இருகரம் கூப்பி இறைவனை வணங்கும் மனிதா!
    பணிந்தே இறைவனை வேண்டும் வரம் யாதோ மனிதா!
    மாட மாளிகை வேண்டி நின்றாயோ மனிதா!
    பொன்னும், பொருளும் யாசித்தாயோ மனிதா!
    பட்டம் பதவி கேட்டு நின்றாயோ மனிதா!
    உன் குடும்பம் நலமுடன் வாழ வணங்கி நின்றாயோ மனிதா!
    ஏழை, எளியோர்க்கு உதவாமல், இறைவனை வேண்டிப் பலனில்லை!
    அன்னை, தந்தையைப் பேணாமல் ஆலயம் செல்வதில் பலனில்லை!
    பாவத்தினால் வந்த பணத்தினிலே
    இறைவனுக்குப் பங்கு கொடுப்பதும் பலனில்லை!
    உழைப்பவரின் ஊதியம் குறைத்துத்
    திருப்பணி செய்வதில் பலனில்லை!
    எளியவரை மகிழ வைத்து இறைவனைக் காணலாம்!
    கடுஞ்சொல் தவிர்த்தால் கடவுளைக் காணலாம்!
    ஆசை துறந்தால் ஆண்டவனை அடையலாம்!
    பிறர்கென வாழ்ந்தால் கடவுளாய் வாழலாம்!

    ”மனிதா! இருகரம் கூப்பி இறையிடம் வேண்டுவதென்ன? பொன்னும் பொருளுமா? பட்டமும் பதவியுமா? தன்னலமே என்றும் குறியா யில்லாமல் பிறர் நலமும் நாடு; துன்ப வித்தான ஆசையைத் துறந்து ஆண்டவனைத் தேடு” என்று நல்வாழ்வுக்கு வழிகாட்டும் வரிகளைத் தாங்கிநிற்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (171)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    மோகன்தாஸ் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 10

    -மேகலா இராமமூர்த்தி

    நல்ல நண்பர்களோடு நட்பு பாராட்ட வேண்டியதன் அவசியத்தையும், ஆன்றவிந்தடங்கிய சான்றோரிடத்து நடந்துகொள்ள வேண்டிய முறைகளையும் விளக்கமாய்ப் பேசுகின்ற நாலடியார், உயர்ந்த பண்புடைய நல்லினத்தாரொடு நாம் இணங்கியிருக்கவேண்டியதன் இன்றியமையாமையையும் எடுத்தியம்புகின்றது.

    மறலிவரும் வழியை மாந்தர்கள் யாரும் அடைக்கவியலாது. அவன் தான் திட்டமிட்ட காலத்தில் வந்தே தீருவான். எனினும் வாழுங்காலத்தில் நல்லவரோடு பழகுதலும், நன்னெறியில் ஒழுகுதலும், தீயோரையும் தூயோராய் மாற்றும் பெற்றியது எனும் உண்மையை நாலடி நவில்கின்றது.

    ஆழ்ந்து ஆராயுமிடத்து மனிதப் பிறவி துன்பம் நிறைந்ததே என்றாலும், பிறர்க்குதவும் நெஞ்சமுடையவர்களான பெரியார்களோடு எப்போதும் நேயஞ்செய்து அணுகியிருக்கப் பெற்றால், அப்பிறவியை யாரும் வெறுக்கமாட்டார்கள் என்பது பின்வரும் நாலடியார் புகலும் நற்கருத்து.

    இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
    பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்

    பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டேஞ்ஞான்றும்
    நண்பாற்றி நட்கப் பெறின்.   (நாலடி – 174)

    இறைதொழும் அடியார்க்குக்  கறைக்கண்டனின் குமிண்சிரிப்பும், எடுத்த பொற்பாதமும் மனித்தப் பிறவியைப் பொருளுடையதாக்குவதுபோல், பண்பாளர்களுக்கு நல்லினத்தின் துணை வாழ்வினைப் பயனுள்ளதாக்கும்.

    நற்குடிப் பிறத்தல் என்பது எல்லார்க்கும் வாய்க்கும் பேறன்று. ஒழுக்கமும் நற்பண்பும் இல்லாத கீழ்க்குடியில் ஒருவர் பிறந்துவிட்டாலும், நல்லினத்தாரின் கூட்டுறவும் நட்பும் கிட்டுமானால் அவரும் நல்லியல்பில் மலைபோல் நிலைத்து நிற்பர். இஃது, ஊரின் சாக்கடை நீர் கடலைச் சேர்ந்தால் அதுவும் கடல் நீர் எனும் பெருமையோடு தீர்த்தமாதலை ஒக்கும் எனும் அரிய உண்மையை நாலடியார்வழி அறிகின்றோம்.

    ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
    பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் – ஒருங்
    குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
    நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.  (நாலடி – 175)

    கல் ஒன்றுதான்! வாசலில் இருக்கும்போது படிக்கல்லாக மிதிபடுகின்றது; கோயில் கருவறையில் பிரதிட்டை செய்யப்படும்போது இறையாக மதிக்கப்படுகின்றது. எனவே பொருள் ஒன்றானபோதும் இடம் அதன் மதிப்பை மாற்றிவிடுகின்றது. 

    மேலோரின் கேண்மையால் கீழோரும் மேலோராய் மேன்மையுறுவர் என்பதுபோல், மேலோர் கீழோரோடு தொடர்பு கொள்வரேல் அவர்தம் மதிப்பை இழப்பர் என்பதையும் நமக்குச் சான்றுகாட்டி விளக்குகின்றது நாலடியார்.

    மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
    இனத்தால் இகழப்படுவர் – புனத்து

    வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
    எறிபுனந் தீப்பட்டக் கால்.  (நாலடி – 180)

    காட்டினுள்ள மணங் கமழ்கின்ற சந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்று வீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும். அஃதொப்ப, மனத்தால் மாசு மறுவிலாத சான்றோரேனும் தாம்சேர்ந்த தீய இனத்தினால் பெருமைகுன்றிப் பழிக்கப்படுவர். எனவே சிற்றினம் சேராதிருப்பது நல்லினத்தாரின் பெருமையை நானிலத்தில் உயர்த்தும்.

    அறிவிலா மாந்தர்கள், மனைவாழ்வின் சார்பினால் களிப்புற்றிருக்கின்றோம்; உலக வாழ்க்கைக்கு வேண்டிய பொன் முதலிய எல்லா நலங்களிலும் நிறைந்திருக்கின்றோம் என்று கருதி அவற்றின் நிலையிலாப் பொய்த்தன்மையை மறந்து ஒழுகும் இயல்புடையவர்; ஆனால், அச்சார்புகள் நிலைத்திருப்பனபோற் காணப்பட்டுப் பின் நிலையாமற்போம் என்று உணர்ந்த மேலோரோ எக்காலத்திலும் அவற்றை விரும்பாமல் பற்றற்று ஒழுகுவர் என்பது நாலடியார் காட்டும் நல்லோர் வாழ்வு.

    இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
    பொச்சாந் தொழுகுவர் பேதையார் – அச்சார்வு
    நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்

    என்றும் பரிவ திலர்.  (நாலடி – 184)

    ”நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை” என்று நாயனார் நவின்றதும் இஃதே!

    மேன்மக்கள் தம்மிடம் குற்றம் ஏற்படாவண்ணம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ஏன்?

    அவர்களிடத்து உண்டாகும் குற்றம் வெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல அனைவருக்கும் விளங்கித் தோன்றும். அதேசமயம் அந்த வெள்ளையெருதைச் சூடிடுதலே யன்றிக் கொன்றாற்போன்ற துன்பங்களைச் செய்தாலும் கீழ்மக்களிடத்தில் எந்தக் குற்றமும் விளங்கித் தோன்றாது. காரணம்…கீழோரை யாரும் ஒரு பொருட்டாக மதியார். மேலோரின் செயல்களோ அனைவராலும் உற்றுநோக்கப்படும். ஆதலால் அவர்கள் தங்கள் செயல்களில் மாசு நேராமல் காத்தல் அவசியமாகின்றது.

    பெருவரை நாட! பெரியோர்கட் டீமை  
    கருநரைமேற் சூடேபோற் றோன்றும்; – கருநரையைக்
    கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
    ஒன்றானும் தோன்றாக் கெடும்.  (நாலடி – 186)

    இதே கருத்தை,

    ”குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மதிக்கண் மறுப்போல் உயர்ந்து” என்று வள்ளுவப் பெருந்தகையும், 

    ”கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
    ஒன்றும் சிறியார்கண் என்றானும் – தோன்றாதாம்
    ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
    குன்றின்மேல் இட்ட விளக்கு” என்று பழமொழி நானூறும் பாங்குறப் பகர்கின்றன.

    கீழோன் ஒருவன் முகஞ்சுளித்துப் பிறரைப்பற்றிக் கொடிய கோளுரை கூறித் தம்மை மயக்கினாலும், அம்மக்கள்பால் மனவேறுபாடு சிறிதுமின்றி முற்கொண்ட கருத்துறுதியினின்று அசைதலில்லாதவரே விளக்கினில் எரியும் ஒள்ளிய தீப்பிழம்புபோன்று அழுக்கற்ற நெஞ்சுடையவராவர். ஆகலின் பிறரின் கோளுக்கும் குறளைக்கும் செவிமடுக்காது தாம் கொண்ட கொள்கையில் உறுதியுடையோராய்த் திகழ்தலே மேன்மக்கட்கு அழகாகும் என்றறிக.

    கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி 
    மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
    துளக்க மிலாதவர் தூய மனத்தார்
    விளக்கினுள் ஒண்சுடரே போன்று.  (நாலடி – 189)

    நல்லாரைக் காண்பதுவும், நல்லார் சொல் கேட்பதுவும், நல்லாரோடு இணங்கியிருப்பதுவும் எல்லார்க்கும் நன்மை பயக்கும்!

    *****

    துணை நூல்கள்:

    1. 1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
    3. பழமொழி நானூறு – ம. இராசமாணிக்கம் பிள்ளை

     

    [தொடரும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 169-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    முக்காடிட்டு முகம் மறைத்தபடி அக்கறையோடு அலைபேசியில் உலவிக்கொண்டிருக்கும் பாவையைத் புகைப்படமெடுத்து வந்திருப்பவர் திருமதி. கீதா மதிவாணன். ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி. புகைப்படக் கலைஞருக்கும் அதனைச் சுவைபடத் தேர்ந்தெடுத்த தெரிவாளருக்கும் எம் நன்றி!

    அலைபேசியின் பிடியில் அகிலமே சிக்குண்டிருக்கும் இத்தொழில்நுட்ப யுகத்தில், மெய்ந்நிகர் உலகே மெய்யான உலகாகிப் போனதால், கண்டம் தாண்டி வாழ்வோரே அண்டைவீட்டார் ஆனார்கள்; நாடுகடந்து வாழ்வோரே உளம்நாடு(ம்) நட்பும் ஆனார்கள். வீடுதேடிவந்த உண்மை உறவுகளெல்லாம் காணாமல் போனார்கள்!

    கவிஞர்களே! கண்ணுக்கு விருந்தளிக்கும் இவ் வண்ணப்படத்துக்கு உங்கள் எண்ணங்கள்வழி உயிரூட்டுங்கள்! ஒளி கூட்டுங்கள்!

    *****

    இணைய உலகில் இன்புற்றலைந்து, இச்சைப் பேச்சுக்களில் இதயம் பறிகொடுத்து, அகமும் முகமும் சேர்ந்தழியும் இளைய தலைமுறையினருக்காக இரங்குகின்றார் திருமிகு. கீதமஞ்சரி.

    இன்றைய வாழ்வின் இதம் மறந்து
    நாளைய வாழ்வின் தேடல் மறந்து
    உறக்கம் தவிர்த்து ஊண் மறந்து
    உறவு தவிர்த்து உலகம் மறந்து
    விழிவிலகாது கைக்கருவி பதித்து
    விரல்களால் திரைநகர்த்தி ரசித்து
    இரவும் பகலும் இடையறாது திரிந்து
    இணைய உலாக்களில் இன்புற்றலைந்து
    புனைந்த பெயர்களில் கதைகளில் மகிழ்ந்து
    பூச்சுகளில் மெய்வண்ணம் மறைத்து
    இங்கொரு முகம் அங்கொரு முகம் காட்டி
    இச்சைப்பேச்சுகளில் இதயம் பறிகொடுத்து
    நச்சுநாவின் தீண்டலுக்கு இரையாகி
    நலமழித்து குணமழித்து பொழுதழித்து
    முகமும் சேர்த்தழிக்கும் தலைமுறை முடக்கம்.

    *****

    ”பலனேதுமில்லாப் புலனம் உன்னைப் படுகுழியில் தள்ளும்; கலகங்கள் செய்யும்; உபயோகமில்லா இதனை ஒதுக்குதலே நன்று” என்று இப்பெண்ணுக்குப் பொன்னான கருத்துக்களைப்  புகல்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    புலனத்தால் பயனில்லை

    அலங்காரம் செய்து கொண்டு
    ……….ஆருக்கும் தெரியா வண்ணம்
    புலனத்துள் முகத்தைப் புதைத்துப்
    ……….பொழுதுகளை இழந்த பெண்ணே.!
    சலனமேதும் இல்லா மலேயே
    ……….சத்தமின்றிச் செய்வ தென்ன
    பலனேதும் இல்லாப் புலனம்
    ……….படுகுழியில் தள்ளும் உன்னை.!

    உலகத்தில் எல்லா இடமும்
    ……….ஓரிடத்தை விடாது சுற்றி
    கலகத்தைச் செய்து குழப்பம்
    ……….கண்டபடி உண்டு செய்யும்.!
    இலகுவாக இதிலே இருந்து
    ……….இட்டபடி விலக முடியா
    உலகறிவு பெறவும் இதிலே
    ……….ஒன்றுக்கும் உபயோ கமிலை.!

    இடித்துரைத்தும் கேட்கா வயது
    ……….இந்தநிலை தவிர்க்க வேண்டும்.!
    துடிக்கின்ற இளம் பருவம்
    ……….துள்ளாமல் இருக்க வேண்டும்.!
    படிக்கின்ற வயதில் திருட்டுப்
    ……….புத்திகூட வேணாம் பெண்ணே.!
    படிக்காத பொழுதில் காதல்
    ……….பக்கத்தில் நெருங்க விடாதே.!

    *****

    இந்த மிடுக்கலைப்பேசி, ஒற்றைச் சொடுக்கில் கற்றைத் தகவல்கள் கொட்டும்; கம்பி வடமின்றி மன்பதையைக் கட்டும். இணையத்தொடர்பின்றி அது முடக்கம் கண்டால் மாந்தக்கூட்டமும் வாட்டம் கொண்டிடுதே என்று வியக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    மிடுக்கலைப்பேசியின் மிடுக்கான வளர்ச்சியும்.. மெய்ம்மறக்கும் உலகமும்..

    ஒற்றைச்சொடுக்கில் கற்றைத் தகவல்கள் நம் கண்முன் கொணர்ந்திடுமே…
    சுற்றும் முற்றும் பார்க்காத பயனாளி இதனுள் ஐக்கியமே…

    திரட்டுகள் அனைத்தையும் புரட்டிப் பார்க்க உதவிடும் ஓர் கருவி…
    அறிவை வளர்க்கும் விருப்பத் தேர்வுகள் கொண்டது இக்கருவி…

    தம்படம் எடுத்து தம்பட்டம் அடிக்க வாய்ப்புகள் கொடுத்திடுமே…
    கம்பி வடமின்றி நம்மை இணைக்கும் மாபெரும் தொழில்நுட்பமே…

    தடங்காட்டி அமைப்பு நாட்காட்டி வசதி அனைத்தும் உள்ளடக்கம்…
    தொடுதிரை வடிவில் தொடர்புகள் அனைத்தும் இதனுள் அடக்கம்…

    வெள்ளோட்டம் மூலம் வசதிகள் அனைத்தையும் கற்றுத் தந்திடுமே…
    வேண்டிய செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாமே…

    இணையத்தின் வழியே உலகைப் பிணைக்கும் வல்லமை இதற்குண்டு…
    தனதெனக் கொண்ட தக்கதோருலகை அவரவர்க்குத் தந்திடும் ஆற்றலுண்டு…

    பல்லூடகச் செய்திகள் படசெய்திகள் அனைத்தையும் புலனத்தில் பகிரலாமே…
    எல்லை கடந்த வானத்தளவு தகவல்கள் அனைத்தும் சேமித்து வைக்கலாமே…

    இயங்கலை சற்றே முடங்கிப் போனால் உலகு நின்றது போலாகிடுமே…
    இளைஞரின் மனதெல்லாம் முடக்கலையாகி துன்பத்தில் ஆழ்ந்திடுமே…

    படித்தவர் பாமரர் இளையோர் முதியோர் அனைவரும் மயங்கிடுவர்…
    நடுத்தர ஏழை செல்வந்த ரனைவரும் இதை உயர்வாய்க் கருதிடுவர்…

    மூன்றாம் நான்காம் தலைமுறை கடந்து மிடுக்காய் வளர்ந்ததுவே..
    மிடுக்கலைப்பேசியில் கட்டுண்ட உலகம் அதில் மூழ்கிப் போனதுவே…!

    *****

    புகுந்தவீட்டைப் பிறந்தவீடாய் எண்ணி, அங்குள்ள மனிதர்களைத் தன் சுற்றமாய்ப் பேணி, சற்றே இளைப்பாற ஓய்ந்திருக்கும் இக்காரிகைக்கு, அவளுக்கான தருணங்களை அளிப்பதிந்தக் கைப்பேசிதான் என்கிறார் முனைவர் இராஜலட்சுமி இராகுல்.

    எனக்கான தருணங்கள்

    கரம் பிடித்த நிமிடம் முதல்
    உயிரே உன் துணைவி யாக;
    கரு வினிலே சுமக்கா விடினும்
    உன் அன்னையை என் தாயாக;
    கல்வி கேள்வி நல்கா விடினும்
    உன் தந்தையை என் தகப்பனாக;
    ஒரு வயிற்றில் பிறக்கா விடினும்
    உன் சகோதரியை என் தங்கையாக;
    மைத்துனன் கொழுந்தன் மாமன் மாமி
    தமையன் தமைக்கை மற்றும் மருகன்
    என் றுன்னுற வினரனை வரையும்
    யென்னுறவாய் நெஞ்சில் சுமந்து கொண்டு ;
    உன் இல்லத்தில் உன் இடத்தை
    நிரப் பிடும் நற்பணி யேற்றேன் !!!

    என்ன வனே யென்னை யீன்ற
    அன்னை தந்தை இரு வருடன்;
    தன் னலம் சிறிதும் இன்றி
    எம் நன்மை பேணும் தோழியுடன்;
    கன்னம் தொட்டு என்னைக் கொஞ்சும்
    அண்ணன் தம்பி அனைவருடன்;
    ஆசை யுடன் சில நொடிகள்
    உரை யாடக் கூடு மென்னில்….

    நீயாக நான்மாறி நானாற்றும் பணிஓய்ந்து
    அவரவர் தேவைகளை மருமகளாய்ப் பூர்த்திசெய்து
    உறவினர் குழுமியுள்ள உன்னகத்தின் புறம்வந்து
    நானாக நானிருக்கும் எனக்கான தருணங்கள் !!!

    *****

    கைப்பேசியின் மகத்துவத்தை, அதனால் சகத்துக்கு விளையும் ஆபத்துக்களை என்று அதன் இருவேறு பக்கங்களையும் சரியாய் அடையாளப்படுத்தியிருக்கும் கவிஞர்பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    ஏந்திழையே! எதனை ஏந்தியபடி அமர்ந்திருக்கிறாய்?
    ஆயிழையே! ஆராய்ச்சி செய்வது எதனை?
    முழுச் சுதந்திரம் கொண்டவளோ, முக்காடிட்டவளோ?
    அத்துணைப் பேர் கையிலும் ஆன்ட்ராய்ட்!
    ஆன்ட்ராய்டோ, ஆப்பிளோ, கையும்,கண்ணும்
    கணினியில், உள்ளங்கையில் உலகு அடக்கினையோ?
    ஓய்வுப்பொழுது ஆய்வுப் பொழுதாய் ஆனதோ??
    வண்ண உடைக்குள் வசீகரம் மறைத்த
    வனிதையே, வானளந்தனையோ, கடல் தாண்டிச்
    சென்ற கணவனுக்குக் கடிதம் எழுதினையோ?
    அன்புள்ள தேவதையே, அகிலம் எட்டிப் பார்!
    வண்ணத்தால் வசீகரித்தாய், எண்ணத்தாலும்
    ஏற்றம் பெற்றிடு, கணக்குச் செய்தனையோ?
    கணக்காய்ச் செய்தனையோ? அன்பு
    பொழிந்தனையோ?ஆன்ட்ராய்டில்
    மொழிந்தனையோ? மாடப்புறாவே,
    மயக்கும் பேரெழிலே, மஞ்சள் வண்ணத்
    தாரகையே, மண்ணுலகிற்கு இறங்கி வா
    பொன்னுலகில் பூத்துக் கிடந்தது போதும்
    என்னுலகு சேர், ஏற்றமாய் வாழ்வோம் வா!

    ”முக்காடிட்டு முகம் மறைத்த பெண்ணே! இந்தக் கைப்பேசி உன் ஓய்வுப் பொழுதை ஆய்வுப்பொழுதாய் மாற்றியதோ? வானை அளக்கலாம்; இதன்மூலம் வம்பும் அளக்கலாம். பொன்னுலகில் பூத்திருக்கும் புதுநிலவே! மண்ணுலகிற்கு இறங்கி வா! ஏற்றத்தோடு வாழ்வோம் வா!” என்று மெய்ந்நிகர் உலகில் சஞ்சரிக்கும் பெண்ணை மெய்யுலகுக்குக் கைநீட்டி அழைக்கும் இக்கவிதையை யாத்த திருமிகு. முருகேஸ்வரி ராஜவேலை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (170)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அனு பாலா எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 9

    -மேகலா இராமமூர்த்தி

    சவால்கள் நிறைந்த வாழ்வைச் சமூகம் சான்றோர்க்களித்தாலும் அதற்காக அவர்கள் சிந்தை கலங்குவதில்லை; நிலைதாழ்ந்து போவதில்லை. எத்தகு சூழலிலும் நற்குணம் கொண்ட பொற்புடைய மேன்மக்களாகவே வாழ்வர்.

    மேன்மக்களின் இயல்பை இருசுடர்களில் ஒன்றான நிலவோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் செப்பும் நயமிகு நாலடியார் பாடலொன்று!

    அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
    திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
    மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
    தேய்வர் ஒருமா சுறின். 
    (நாலடி – 151)

    அழகிய இடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப் பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மில் ஒத்த பெருமையுடையவர் ஆவர். ஆனால், திங்கள் களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள் தமது ஒழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அதனைப் பொறாது உளங்கலங்கி அழிவர்.

    திங்களைப்போல் சான்றோரும் புகழுடையவர் என்று முதலில் ஒத்த தன்மையைக் கூறி, பின்னர்த் திங்கள் களங்கத்தைத் தாங்கும் ஆனால் சான்றோர் அதனைப் பொறார் என்று அவரின் வேறுபட்ட தன்மையையும் விளம்பி நிற்பதால் இப்பாடலை வேற்றுமையணிக்குச் சான்றுகாட்டலாம்.

    மேன்மக்கள் பிறர்க்கு இன்னாசெய எண்ணாத இயல்புடையவர்கள் என்பது வையம் அறிந்ததே. அதனைத் தாண்டியும் செல்லும் அவர்களின் உயர்சிந்தனையின் உன்னதத்தைப் பின்வரும் நாலடியார் நமக்குச் சுட்டுகின்றது.

    புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
    கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
    நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்
    பல்லாருள் நாணல் பரிந்து.     
    (நாலடி – 155)
     

    பொருந்தாக் கல்வியையுடைய, மெய்யுணர்வில்லாத வீணோர் அவையில் கல்வியறிவு நிரம்பப்பெறாத ஒருவன் உரையாடவும், அதனைக் கண்ட மேன்மக்கள் அந்தப் பேதையின் உரையை அவையில் பலரும் கேலிசெய்யவும், அதனால் அவன் நாணவும் நேருமே எனும் வருத்தத்தோடும் இரக்கத்தோடும் அதனைத் தாம் கேட்டுக்கொண்டிருப்பராம்.

    பேதை ஒருவனின் பொருளற்ற பேச்சையும் பொருட்படுத்தி அருளோடும் அன்போடும் செவிமடுக்கும் மேன்மக்களின் மாட்சி வியப்பினும் வியப்பே!

    மேன்மக்களாய் வாழ்தற்கு என்னென்ன அடிப்படைப் பண்புகள் அவசியம் என்பதை நமக்கு அறியத்தருகின்றது நாலடி.

    பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
    தேதிலா ரிற்கட் குருடனாய்த்  தீய
    புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
    அறங்கூற வேண்டா அவற்கு. 
    (நாலடி – 158)

    பிறருடைய மறைந்த/அந்தரங்கக் கருத்துக்களைக் கேட்டலிற் செவிடுடையனாய், அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன் நோக்குதலிற் குருடனாய், தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில் ஊமையுடையனாய், வாழ்க்கையில் துன்பம் உண்டாகுங் கூறுகள் இவை என்றறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், அவனுக்குப் பிறர் வேறு யாதும் அறம் அறிவுறுக்கவேண்டா என்பது இச்செய்யுளின் பொருள். 

    தீயதைக் கேட்காதே; தீயதைப் பார்க்காதே; தீயதைப் பேசாதே என்பதைக் காட்ட காந்தியார் வைத்திருந்த மூன்று குரங்குபொம்மைகளை நாம் மேற்கண்ட நாலடியாரின் கருத்துக்களோடு வைத்தெண்ணலாம்.

    வள்ளுவரோ இதனை இரத்தினச் சுருக்கமாக,
    ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்றுவிட்டார். மனந்தானே நம்மை மடவராக்கி எல்லாத் தவறுகளுக்கும் உடந்தையாக்குகின்றது? ஆதலால் மனத்தூய்மையே எல்லா நற்செயல்களுக்கும் தாய் என்று கருதலாம்!

    மாந்தர்கள் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகளில் ஒன்று, தம்மைவிட அறிவிலும் அனுபவத்திலும் மூத்த பெரியாரை அவமதிக்காது அவர்மாட்டுப் பண்போடும் அன்போடும் நடந்துகொள்வது.

    சிலர், தம் வாழ்வில் நல்லறிவும் புலமையும் உடைய சான்றோரின் நற்றுணை வாய்க்கப்பெற்றும் அவர்களிடம் நல்லனவற்றைக் கற்றுத் தெளிவதில் கவனம் செலுத்தாது கொன்னே நாட்களைக் கழித்துக்கொண்டிருப்பர். அன்னாரின் பேதைமையை என்னென்பது?

    பேதையாரின் இன்னொரு வகையினர் தம்மைப்பற்றிப் பெருமைபேசித் திரிவதிலேயே பொழுதைக் கழிக்கும் வீணராயும் வெற்றராயும் இருப்பர். அவர்களின் புத்திக்கு உரைக்கும்படி நாலடியார் நவிலும் செய்தியைக் கேண்மின்!

    எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
    தம்மைத்தாம் கொள்வது கோளன்று – தம்மை
    அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
    பெரியராக் கொள்வது கோள். 
    (நாலடி  – 165)
     

    எம் தகுதியை நீவிர் அறிந்திருக்கவில்லை; எம்மைப் போன்ற திறனுடையோர் வையத்தில் யாங்கணுமே பிறக்கவில்லை என்று தம்மைத் தாமே பெருமைப்படுத்திக்கொள்வது சிறவாது; தம்மை அருமையுடையோராய்க் கருதி அறனறியுஞ் சான்றோர் பெரியராய் மதித்துப் போற்றுவதே பெருமையாகும் என்கிறது நாலடியார். 

    ”பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து”
    என்று பெருமைப் பண்பையின் பெற்றியையும் சிறுமைப் பண்பின் இயற்கையையும் மன்பதைக்குச் சொன்ன தெய்வப்புலவர், 
    ”வியவற்க எஞ்ஞான்றும் தன்னை” என்று எச்சரித்திருப்பதையும் நாம் சிந்தித்து ஒழுகுதல் சிறப்பு. 

    நம் வாழ்வின் பல தருணங்களில் நாம் சிந்தியாது பலரை நண்பர்களாக்கிக் கொள்கின்றோம். பழகப் பழகத்தான் அவர்களின் அருவருக்கத்தக்க உண்மைத் தோற்றம் வெளிப்படுகின்றது. அதன்பின், அவர்களைவிட்டு விலகிவிடவேண்டும் என எண்ணுகின்றோம். எனினும் பழக்கதோஷம் அவ்வளவு சுலபத்தில் அதனைச் செய்யவிடுவதில்லை. எனவே, ஆராய்ந்து நட்பு கொள்வது அவசியம் என்று அறிவுறுத்துகின்றது நாலடியார்!

    தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
    பிரியப் பெரும்படர்நோய் செய்யும் – பெரிய
    உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
    கலவாமை கோடி யுறும். 
    (நாலடி – 168)
     

    நூற்பொருள்களை விளங்கத் தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், (பழகியபின்) அவரைப் பிரிய நினைப்பது பெருந்துன்பம் உண்டாக்கும்; ஆகவே, கருநிறமான பெரிய கழிக்கரையை உடையோனே! பெரியோரிடத்தன்றிப் பிறர் யாரிடத்திலும் நேயங் கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.

    ”குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு” என்று நல்ல நட்புக்கு வள்ளுவமும் வழிகாட்டுகின்றது.

    நல்லியல்புடைய பெரியோர்கள் கற்றற்குரிய நூல்களைக் கல்லாமலும், தாமறியாத பொருள்களை அவற்றை அறிந்தோரிடத்துக் கேளாமலும், தம்மால் இயன்ற வகையில் பிறர்க்கு உதவாமலும் வாழும் வாழ்க்கையை ஒருபோதும் விரும்புவதில்லை.

    கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
    செல்லாது வைகிய வைகலும் – ஒல்வ
    கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
    படாஅவாம் பண்புடையார் கண்.  
    (நாலடி – 169)

    எனவே, நல்லனவற்றைக் கற்றலும், சான்றோரிடத்து நற்பொருளைக் கேட்டலும், புன்னெறி தவிர்த்து நன்னெறியில் ஒழுகலும் மனித வாழ்க்கைக்குப் பல்லாற்றானும் பொலிவூட்டும்! புகழ் கூட்டும்!

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 168-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கரத்தில் நீரெடுத்துச் சிரத்தையொடு வானரத்துக்கு ஊட்டும் மனித மாண்பைப் படமெடுத்து வந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி.  இவ்விரு பெண்மணிகளுக்கும் என் நன்றி!

    மன்னுயிர்கள் அனைத்தும் இன்பமாய் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டது இப்புவி! இதில் கவிக்குலங்களும் விலக்காமோ? ஆதலால், ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் விடுத்து, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்!

    இந்நிழற்படத்திற்குப் பொருத்தமாய்க் கவியெழுதக் கவிஞர்கள் எழுக! கவிமழை பொழிக! என வாழ்த்தி அமைகின்றேன்!

    *****

    கானம் அழிந்ததால் அங்கு  மகிழ்வோடு வாழ்ந்த வானரங்கள் உணவுதேடி ஊரைநாடி வருகின்றன; இதனைத் தவிர்க்க, பல்லுயிர் ஓம்பும் பண்புகொண்ட மானுடன், காடுகளை அழியாது காக்கவேண்டும். கானுயிர்களின் வாட்டத்தைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    பல்லுயிரும் இன்புறத்தக்க பூவுலகம் படைத்திடுவோம்…
    பண்டு ஓர் காலத்தில்… வண்டு உலாவும் சோலையில்…
    கண்டு மாந்தர் மகிழ்ந்திட்டார்… மனிதன் போன்ற குரங்கினை…
    இன்று உள்ள நிலையிலே… கானம் யாவும் அழிந்ததால்…
    உண்டு வயிற்றை நிரப்பவே… அது ஊரைநாடி வருகுதே…!

    வானரத்தைக் கண்டதும்… மனம் மகிழ்ந்திடும் மாந்தரும்…
    மன முவந்து உணவினை… அதற் களித்து களித்திட்டார்…
    அன்பு மிக்க இச்செயல்… அதன் இயல்புகளைக் குலைத்திடும்…
    என்பதை உணர்ந்து நாம்… இயற்கைச் சூழல் பேணுவோம்…!

    மனிதன் என்ற பிறவியே… பரிணாம வளர்ச்சியின் உச்சமாம்…
    ஆன போதும் இவ்வுலகமே… அனைத் துயிர்க்கும் சொந்தமாம்…
    வன உயிரினங்கள் வாழவோர்… உரிய சூழல் செய்குவோம்…
    காணம் போன்று கானத்தைப்… போற்ற நாமும் கற்றிடுவோம்…!

    *****

    ”குரங்கைக் குறைவாய் எண்ணாதே மனிதா! அதற்கு(ம்) உணவளித்து உயர்வாய் இராமனாய்!” என்று தன் கவிவழியாய்ப் புவிக்கு மொழிகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    குறைவில்லை…

    குரங்கி லிருந்து பிறந்ததாகக்
    கூறிக் கொள்ளும் மானிடனே,
    குரங்கைக் குறைவாய் எண்ணாதே
    குட்டியை வயிற்றில் கொள்வதைப்பார்,
    குரங்குச் சேட்டை பண்ணாமல்
    குரங்கைத் துணையாய்க் கொண்டிடவே
    குரங்குப் படைக்கும் உணவளித்துக்
    கொள்வாய் உயர்வு இராமனாகவே…!

    *****

    வானரத்தைப் போற்றித் தேனான பாக்கள் தந்த பாவலர்க்கு என் பாராட்டு!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    படைப்பின் அதிசயம்..!

    உலகம் முழுதும் உயிர்கள் படைத்தான்
    உலகில் முதலாம் ஒருவனே இறைவன்.!

    அண்டவுயிர்க் கெல்லாம் அறிவைக் கொடுத்து
    ஆண்டுகள் பலவும் ஆயுளாய்க் கொடுத்தான்.!

    இயற்கை நமக்களித்த இன்ப வாழ்க்கை
    செயற்கை கலந்திடாது செலவழிக்கப் பழகு.!

    எத்தனை உயிர்கள் எண்ணிலா உயிர்கள்
    அத்தனும் கொடுத்தான் ஆசை கொண்டே.!

    அன்புடன் நடக்க அனைத்து உயிரிடம்
    அன்பாய்ப் பழகும் அரிய பிறவியாம்.!

    அதுதான் மனிதப் பிறவி
    இதுவே நமக்கு ஈடிலா அருளே.!

    குரங்கு முதல் குதிரைபோலப் பலவாக
    இரக்கமிகு ஜீவியை இவ்வுலகில் காணலாம்.!

    அப்பன் உதவுவார் அம்மா காப்பாளென…
    எப்பவுமே இவ்வுயிர் என்றும் வாழ்வதில்லை.!

    சனனம் முதற்கொண்டு சாவு வரையில்
    தனக்குதவி தன்கையில் தானென அறியும்.!

    மனிதன் போலிதற்கு மனமாசு இல்லை
    தனித்தன்மை கொண்டு தானாக வாழ்ந்திடும்.!

    விலங்கின வாழ்வை வைத்து மனிதனும்
    உலகில் தெரிந்துலவ எத்துணையோ உளது.!

    பரந்தமனம் படைத்த பகவனுமே
    மரணத்தால் மனத்தை அறிய வைத்தானே.!

    இயற்கை நமக்களித்த இன்பவாழ்வில் செயற்கைக் கலப்பைத் தவிர்த்து, மன மாசில்லாது, தன் கையே தனக்குதவி என வாழ்வும் விலங்குகள்போல் மனிதனும் புனிதனாய் வாழ வேண்டும் எனச் சாற்றியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் போற்றுகின்றேன். இக்கவிதையே அல்லாது மந்தியையும் மனிதனின் புந்தியையும் (புத்தி) ஒப்பிட்டும், மந்தியினத்தையும் அதனைத் தோழனாய் ஏற்ற சுந்தர ராமனை ஏத்தியும் மற்றுமிரு வெண்பாக்களை இயற்றியுள்ள அவருடைய கவி ஆர்வத்தையும் பாராட்டுகின்றேன். 

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (169)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 8

    -மேகலா இராமமூர்த்தி

    நல்லவற்றைக் கைக்கொண்டும் அல்லவற்றைக் கடிந்தொழுகியும் வாழ்வதற்குக் கேடில் விழுச்செல்வமாம் கல்வி ஒருவர்க்கு அவசியம்.

    முகப்பூச்சும் நகப்பூச்சும் அழகு என்று மகளிரும், பணமும் பகட்டும் அழகென்று ஆடவரும் மருள்வது பொருளற்றது. உண்மையில் கல்வியினாற் கிட்டும் அக அழகே ஒருவர்க்கு உண்மையான அழகாகும்.

    இதனை விளக்கும் நாலடியார் பாடலொன்று…

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி அழகே அழகு. 
    (நாலடி – 131)

    மயிர்முடியின் அழகும், வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும், மஞ்சட் பூச்சின் அழகும், மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நாம் நல்லவராக ஒழுகுகின்றோம் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகும் உண்மை அழகுமாம் எனும் நாலடியார் வாக்கு பொருள்பொதிந்த ஒன்றேயல்லவா!

    ”இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
    நடைவனப்பு நாணின் வனப்பும் – புடைசால்
    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
    டெழுத்தின் வனப்பே வனப்பு” என்று ஏலாதியும். 

    நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவை யற்று
    என்று வள்ளுவமும் சொல்லுவதை ஈண்டுப் பொருத்திப் பார்க்கலாம்.

    கரைகாணவியலாக் கல்வியொடு ஒப்பிட்டால் மாந்தரின் வாணாள் அளவில் குறுகியதே; அதிலும் பிணிகள் பலவாயிருக்கின்றன. ஆதலால், நீரை நீக்கிப் பாலைப் பருகும் குருகுபோல் நல்லறிஞர்களும் தக்க நூல்களை ஆராய்ந்தறிந்து கற்பர் என்கிறது நாலடியார்.

    கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து. 
    (நாலடி – 135)
     

    ”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக என்று” குறளாசான் வலியுறுத்துவதும் இக்கருத்தையே.

    கல்விகற்று அறிஞராகும் வாய்ப்பு எல்லார்க்கும் வாழ்வில் கைகூடும் என்று சொல்லுதற்கில்லை. வறுமை காரணமாகவோ, வேறு காரணங்களாலோ ஒருவரால் கல்விச்சாலைக்குச் சென்று கற்கமுடியாமலும், நல்ல நூல்களைப் படித்தறிய முடியாமலும் போகக்கூடும். அத்தகையோர் நன்கு கற்றறிந்த அறிஞர்களோடு கேண்மைகொண்டு மேன்மையுற வேண்டும் என்று நமக்கு நல்வழி காட்டுகின்றது நாலடி.

    கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
    நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
    ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
    தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.  
    (நாலடி  – 139)

    இயற்கை மணமும் விளக்கமான நிறமும் அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதிய மட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்கு அந்த மணத்தைத் தான் தருவதுபோல, தாம் கல்லாதவரேயானாலும் கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்ட மெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்.

    ”கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
    ஒற்கத்தின் ஊற்றாந் துணை”  என்று குறளும் இதனையே ஓங்கி ஒலிக்கின்றது.

    நற்பண்புகளும் ஒழுக்கமும் ஒருவனுக்கு வாய்க்கவேண்டுமானால் அவன் நல்ல குடிப்பிறப்பைக் கொண்டவனாயிருக்க வேண்டும். நற்குடிப்பிறப்பு என்பது இங்கே வருணப் பாகுபாட்டின் அடிப்படையிலான மேலோர் கீழோரைக் குறிப்பதன்று. மாறாக, எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், எம் மதத்தைச் சார்ந்திருந்தாலும் நல்லொழுக்கமும் சால்பும் நிறையும் கொண்டோர் உயர்குடிப் பிறந்தோரே ஆவர் என்றறிக.

    பசித்துன்பம் வந்தபோதும் அரிமா புல்லைக் கறிக்காது; அதுபோல் தாம் உடுத்தியிருக்கும் உடை பொலிவிழந்தாலும், உடல் மெலிவடைந்தாலும் நற்குடிப்பிறந்தார் தமக்குரிய ஒழுகலாற்றில் குறைவுபடார் என்பது நாலடியார் நவிலும் உண்மை.

    உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
    குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
    இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
    கொடிப்புற் கறிக்குமோ மற்று. 
    (நாலடி – 141)

    ”பசி பெரிதாயினும் புல்மேயா தாகும் புலி” எனும் பழமொழி நானூற்றுப் பாடலை இங்கே நாம் நினைவுகூரலாம்.

    கொள்கை உறுதிகொண்ட நற்குடிப்பிறந்தோர் தமக்கு இன்மை வந்த காலத்தும் தம்மாலியன்ற நன்மைகளைப் பிறர்க்குச் செய்வதை ஒழியார்.

    வளமான பெரிய வீடு வளங்குறைந்த காலத்தில் கட்டுக்குலைந்து, கறையானால் கவ்வப்பட்டபோதினும், அதில் மழை ஒழுக்கில்லாத பகுதி என்று ஒன்றிருக்கும். அஃதொப்ப, வறுமையினால் மிக்க துன்பத்திற் சிக்கி அலைப்புண்ட காலத்தும், உயர்குடியிற் பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரிய நற்செயல்களை விடாது செய்துகொண்டேயிருப்பர் என்று நவில்கின்றது நாலடியார்.

    செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
    பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்
    எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
    செய்வர் செயற்பா லவை. 
    (நாலடி – 147)
     

    ”வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிப்
    பண்பில் தலைப்பிரிதல் இன்று” என்று வள்ளுவம் விதந்தோதுவதும் இதனையே அன்றோ?

    மனிதர்களின் பல்வேறு பண்புகளில் ஒன்று அச்சம். அஃது நல்லதா? கெட்டதா? என்று வினவுதிராயின், தீவினையச்சம் நல்லது; நல்லது செய்யவும் அஞ்சுவோமாயின் அஃது தீயது எனலாம்.

    நற்குடிப்பிறந்தார் எதற்கெல்லாம் அஞ்சுவர் என்று ஒரு பட்டியலைத் தருகின்றது நாலடி.

    கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்
    சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் – எல்லாம்
    இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தாரிம்
    மாணாக் குடிப்பிறந் தார்.
    (நாலடி – 145)

    கல்லாததை நினைத்து அச்சம், கயவர் தொழில் செய்ய அச்சம், சொல்லத் தகாதவற்றைச் சொல்லிவிடக் கூடாதே எனும் அச்சம், இரப்பவர்க்கு ஈய இயலாது போய்விடுமோ எனும் அச்சம் இவ்வாறு பல்வேறு அச்சங்களால் சூழப்பட்டிருத்தலால் உயர்குடிப் பிறந்தோர் நடுக்கடலிற் செல்லும் மரக்கலத்தை ஒப்பர் என்கிறது நாலடியார்.

    ஆம்! நல்லவராயும் உயர்ந்த கொள்கை உடையவராயும் வாழ்தல் என்பது அஞ்சத்தக்க அரிதான செயலே. அதில் சிறு தவறு நேர்ந்திடினும் அவர்க்குக் கிடைக்கும் பழியோ பெரிது. மொத்தத்தில் சாமானியரைவிடச் சான்றோரின் வாழ்வு சவால்கள் நிறைந்தது என்றே கூறவேண்டும்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

    3. ஏலாதி – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை

     

     

    Share