பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

அனு பாலா எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (170)

 1. கடவுளை சற்றே சிந்திப்போம்!
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  இந்த
  உடலே திருக்கோயில்!
  உள்ளமே கருவறை! – அதில்
  உறைபவனே இறைவன்!
  உரைத்தாரன்றே திருமூலர்…

  இந்த
  உடலைப் பேணாமல்
  உள்ளத்தைக் காணாமல்
  உலகில் எங்கெங்கோ தேடினாலும்
  உட்பொருள் கிடைப்பானா?

  அந்த
  கோயிலின் புறத்தே
  கோவணத்திற்கும் வழியின்றி
  கோடி மக்கள் பசித்திருக்க
  கோயிலின் அகத்தே உண்டியலில்
  கோடி கோடியாய் கொட்டினாலும்
  கொலுவிருக்கும் குலசாமி அருளுமா?

  அந்த
  கடவுளை சற்றே சிந்திப்போம்!
  கடவுள் அதன் உட்பொருள்
  கட உள் என்பதாகும்!
  கண்களை மூடி மனதினுள்ளே
  கடந்து போவோம்!
  கடவுள் அங்கே இருப்பானே!

  அந்த
  உள்ளத்தின் உள் உறைபவன்தான்
  எங்கெங்கும் நீக்கமற நிறைந்துளான்!
  கண்ணைத் திறந்து காண்பவை எல்லாம்
  அவனின்றி வேறேது??

 2. சாலை விநாயகர்..!
  =================

  நெஞ்சம் மகிழவே
  ……….நிறைந்ததொரு பிள்ளையார்
  தஞ்சம் அடைந்திடவும்
  ……….தாயாக வந்திடுவார்
  எஞ்சிய சாலையும்
  ……….எங்கேயும் இல்லையே
  விஞ்சியே நிற்கும்
  ……….வரையில்லா எண்ணிக்கை
  மஞ்சளூம் குங்குமமும்
  ……….மக்களும் கொண்டுபோய்
  பஞ்சமிலாது பூசிடுவார்
  ……….பட்டிதொட்டி யெங்குமாய்
  அஞ்சுவிரல் ஐந்தும்
  ……….இரண்டாகச் சேர்த்துயர
  அஞ்சனக் கண்மூடி
  ……….அங்கே தொழுதிடுவார்

  ===================================

  எட்டடி நாற்சீர் ஒரு விகற்பக் கொச்சகம்

 3. தனிமையில்…

  குடும்ப மெல்லாம் சேர்ந்திருக்க
  கூட்டுச் சேர்ந்து கும்பிட்டார்,
  குடும்ப நலனைக் காக்குமென்றே
  குலத்தின் தெய்வம் என்றுரைத்தார்,
  அடுத்து வந்த காலத்திலே
  அவரவர் பணியில் சென்றுவிட்டார்,
  கொடுத்து வந்த குலதெய்வமும்
  கொடிய தனிமையில் வாடிடுதே…!

  செண்பக ஜெகதீசன்…

 4. கடவுளைக் காணலாம்:::: இருகரம் கூப்பி இறைவனை வணங்கும் மனிதா!
  பணிந்தே இறைவனை வேண்டும் வரம் யாதோ மனிதா!
  மாட மாளிகை வேண்டி நின்றாயோ மனிதா!
  பொன்னும், பொருளும் யாசித்தாயோ மனிதா!
  பட்டம் பதவி கேட்டு நின்றாயோ மனிதா!
  உன் குடும்பம் நலமுடன் வாழ வணங்கி நின்றாயோ மனிதா!
  ஏழை, எளியோர்க்கு உதவாமல், இறைவனை வேண்டிப் பலனில்லை!
  அன்னை, தந்தையை பேணாமல் ஆலயம் செல்வதில் பலனில்லை!
  பாவத்தினால் வந்த பணத்தினிலே
  இறைவனுக்கு பங்கு கொடுப்பதும் பலனில்லை!
  உழைப்பவரின் ஊதியம் குறைத்து!
  திருப்பணி செய்வதில் பலனில்லை!
  எளியவரை மகிழ வைத்து இறைவனைக் காணலாம்!
  கடுஞ்சொல் தவிர்த்தால் கடவுளைக் காணலாம்!
  ஆசை துறந்தால் ஆண்டவனை அடையலாம்!
  பிறர்கென வாழ்ந்தால் கடவுளாய் வாழலாம்!

Leave a Reply

Your email address will not be published.