கணியன்பாலன்

இ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

மோகூர்த்தலைவன்:

 

    இறுதியில் மோகூர்த் தலைவனும் அதியன்மரபினரும், திதியனும் எல்லையோர அனைத்துப்பிற தமிழ் அரசுகளும் ஒன்றிணைந்து மோரியர்களைப் போரில் தோற்கடித்துத் தங்களது எல்லையைவிட்டு துரத்திவிடுகின்றனர். மோரியர்படை பின்வாங்கி துளுவநாட்டை அடைந்து பாழிநகரில் நிலைகொள்ளுகிறது. துளுவநாட்டு வெற்றிக்குப்பின் மௌரியரது எல்லைப் பகுதிப் படைத்தலைவர்களே வடுகர்களின் துணையோடு போரிட்டு வந்தனர். ஆனால் அவர்களால் தமிழக எல்லையில் உள்ள குறுநில மன்னர்களை, வேளிர்களை வெல்ல இயலவில்லை. தமிழகத்தின் எல்லையில் மௌரியப்படைகளின் தோல்வி மௌரியப்பேரரசைத் தட்டி எழுப்பியது. மௌரியப்பேரரசின் பெரும்படை திரட்டப்பட்டது. பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றன. துளுவ நட்டையும், எருமை நாட்டையும் கடந்துவரும் வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச் செப்பனிட்டு மௌரியப்பெரும்படை வருவதற்கான பாதைகள் உருவாக்கும் பணி நடைபெற்றது. இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் சில ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெரிகிறது. இப்பாறைகளை வெட்டி பாதைகள் அமைக்கும் பணி குறித்தும் வடுகர்கள் வழிகாட்டியாக இருந்து மௌரியர்களுக்கு உதவியது குறித்தும் மோகூர்த்தலைவன் மேல் பகைகொண்டு மௌரியர் படையெடுத்து வந்தது குறித்தும் மாமூலனாரும், பிற சங்கப்புலவர்களும் தங்கள் பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் முடிந்தவுடன் மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ நாட்டில் வந்து தங்கி தமிழகத்தின் மீது படையெடுக்கத்தயாராகியது.

சோழர்களின் முதன்மை:

     தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தை, அப்பொழுது சோழ வேந்தனாக இருந்த சோழன் இளஞ்சேட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையிலுள்ள படைத்தலைவர்களை, வேளிர்களை, சிற்றரசர்களை மட்டும் இப்பெரும்போருக்கு பொறுப்பாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர் ஐக்கிய கூட்டணி அரசுகளை ஒன்றுதிரட்டி தனது தலைமையில் பெரும்படையைத் திரட்டுகிறான். இப்போர் தமிழகப்போராக தமிழகக் கூட்டணி அரசுகளின் போராக நடைபெற்ற போதிலும், இப்போரின் வெற்றி, சோழர்களின் வெற்றியாகவே வடவரிடத்திலும், நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் பதிவாகி சேர பாண்டியவர்களை விட சோழர்கள் பெரும் புகழடைகின்றனர். அசோகன் கல்வெட்டுகளிலும் அதன் காரணமாகவே பாண்டியர்களைவிட சோழர்கள் முதன்மை பெறுகின்றனர். ஆகவே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கும் தமிழரசுகளின் வெற்றிக்கும் அசோகன் கல்வெட்டுகள் ஒருவிதத்தில் மறைமுக சான்றாதாரங்கள் ஆகின்றன எனலாம்.

வல்லம்போர்:

     தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப் பேரரசுக்குமிடையே பெரும் போர் துவங்கியது. சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள் தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப் புதுப் படைகளை போருக்கு அனுப்பினர். மௌரியப் பேரரசின் முழு ஆற்றலும் திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம் தாக்கப்பட்டது. தமிழகத்தின் வட பகுதி முழுவதும் மௌரியப் பெரும்படையால் தாக்கப்பட்டது. வட ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற இடத்தில் நடந்த பெரும் போரில், இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெரும் தோல்வி அடையச் செய்து துரத்தி அடித்தான். வல்லம் போர் குறித்து அகம் 336இல் பாடிய பாவைக் கொட்டிலார் என்கிற பெண்பாற் புலவர், மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார். மௌரியர் தங்களை ஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர்.  கி.மு.3ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட இப்பாடலில் குடும்ப மகளிர்கள் ‘கள்’ அருந்தி தங்கள் கணவன்மார்களின் பரத்திமை நடத்தை குறித்து வம்பளந்து கொண்டிருப்பது குறித்த குறிப்பு வருகிறது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

     வல்லம் போருக்குப் பின்னரும், மௌரியர்கள் சளைக்காமல் தொடர்ந்து பல தடவை, பெரும் படைகளை அனுப்பிக்கொண்டேயிருந்தனர். ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய, அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நிலையில் தான் பாண்டியர் படைகளுக்குத்தலைமை தாங்கிய, இளைஞனாக இருந்த நெடுஞ்செழியன் மௌரியர்களின்பெரும்படை ஒன்றைத் தோற்கடித்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என பெயர் பெற்றான். முதல் கரிகாலனுக்குச் சம காலத்தவனாகவும், சேரன் செங்குட்டுவனுக்கு முந்தையவனாகவும் அவன் இருந்தான். ‘தமிழகம் ஒன்றாக இருந்து பார்க்கும் வகையில் வட ஆரியப்படையை எதிர்த்து வெற்றி பெற்ற நெடுஞ்செழியன்’  என்கிறது சிலப்பதிகாரம்-(17). ஆகச் சோழன் தலைமையில் பாண்டியர்களும், சேரர்களும் மௌரியப்படையை பலமுறை தோற்கடித்தனர். இறுதியில் தொடர்ந்து பலமுறை நடந்த தோல்விகளால் தாக்குப் பிடிக்க இயலாமல் பெரும் இழப்போடு மௌரியப்படை பாழி நகருக்குப் பின் வாங்கியது.

செருப்பாழிப் பெரும்போர்:

    இளஞ்சேட் சென்னி போரைத் தொடர்ந்து நடத்தி, பாழி நகர் வரைப் படையெடுத்துச் சென்று, அதனைத் தாக்கி, இறுதியில் பெரும் வெற்றியை தமிழகத்திற்கு வாங்கித் தந்தான். இளஞ்சேட்சென்னியின் பாழி நகர் வெற்றி குறித்து இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் அகம் 375இல் பாடியுள்ளார். அதில் மௌரியர்களை அவர் வம்பவடுகர் என்கிறார். தமிழகத்தின் வடக்கே வாழ்பவர்களை வடுகர் என்பது பொது வழக்கு. வடக்கே வாழும் வடுகர்களை அவர் அறிவார். ஆனால் மௌரியர்களை அவர் அறியார். ஆனால் மௌரியர்களும் வடக்கிருந்தே வருகிற புதியவடுகர்கள என்பதால், அவர்களை வம்ப வடுகர் என்கிறார். பாழி நகரில் நடந்த இறுதிப் பெரும் போருக்குப் பின்னர் மௌரியர்கள் தமிழக அரசுகளைப் படை கொண்டு வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்துகொண்டு நிரந்தரமாகப் பின் வாங்கினர். தமிழகத்தைக்கைப்பற்றும் முயற்சி கைவிடப்பட்டு தமிழக அரசுகளோடு நட்பு கொண்டனர். கி.மு.297இல் பிந்துசாரரின் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்ட தக்காணப் படையெடுப்பும், தமிழகப் படையெடுப்பும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததாகக் கொண்டு, பாழி நகரில் நடந்த இவ்விறுதிப்பெரும்போர் கி.மு.288 வாக்கில் முடிந்ததாகக் கணிக்கப் பட்டது. இந்தப் பெரும் போரில் சோழர் பெற்ற பெரும் புகழின் காரணமாகவே, அசோகன் தனது இரு கல்வெட்டுகளிலும் பாண்டியர்களைவிட சோழர்களை முதன்மைப் படுத்தியுள்ளான்.

மாமூலனாரும் வேந்தர்களின் காலமும்:

     பழமொழி நானூற்றின் ஆசிரியர் மூன்றுரையரையனார், புலவரும் தனது மாமனுமாகிய இரும்பிடர்த் தலையாரிடம் கல்வி கற்று, முதல் கரிகாலன் சிறப்புப் பெற்றான்  எனக் குறிப்பிடுகிறார்(18). முதல் கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது அவனைவிட இரு தலைமுறைகள் மூத்த முதியவராக இருந்தவர் அவனது ஆசிரியர் இரும்பிடர்த் தலையார். அன்று அரச குடும்பச் சிறுவர்களுக்கு அறிவும் அனுபவமும் உடைய வயதானவர்களைத்தான் ஆசிரியராக நியமிப்பர். இரும்பிடர்த் தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியை புறம் 3இல் பாடியுள்ளார். இந்தப் பாண்டியன் பெரும்பெயர் வழுதியை, குடவாயிற் கீரத்தனார் அகம் 315ஆம் பாடலில் பாடியுள்ளார். ஆதலால் குடவாயிற் கீரத்தனாரும் இரும்பிடர்த் தலையாரும் சம காலத்தவர் ஆகின்றனர். இந்த குடவாயிற் கீரத்தனார் அகம் 44ஆம் பாடலில் பெரும்பூட்சென்னி என்கிற சோழ வேந்தனைப் பாடியுள்ளார். குடவாயிற்கீரத்தனாரும், இரும்பிடர்த் தலையாரும் சமகாலத்தவர் என்பதால் குடவாயிற்கீரத்தனாரால் பாடப்பெற்ற சோழன் பெரும்பூட்சென்னியும், பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் சமகாலத்தவர் என்பதோடு முதல்கரிகாலனை விட இருதலைமுறைகள் மூத்தவர்களும் ஆவர். அதாவது முதல்கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில், குடவாயிற்கீரத்தனார், இரும்பிடர்த் தலையார், சோழன் பெரும்பூட் சென்னி, பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆகிய நால்வரும் முதல்கரிகாலனை விட இரு தலைமுறைகள் மூத்த முதல் தலைமுறை எனலாம்(தலைமுறை என்பதை நமது இலக்கியக் கணிப்புப்படி காலகட்டம் எனவும் கருதலாம்).

            மாமூலனார், இரண்டாம் பத்துக்குரிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும், அவனது தந்தை உதியன் சேரலாதனையும் பாடியுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் போரில் வென்ற முதல் கரிகாலனையும் அவர் பாடியுள்ளார். மாமூலனாரை விட இளையவரான பரணர் முதல் கரிகாலனையும், இமயவரம்பன் மகன் சேரன் செங்குட்டுவனையும் பாடியுள்ளார். ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை அவர் பாடவில்லை. ஆகவே முதல் கரிகாலனுடன் போரிட்ட இமயவரம்பன், முதல் கரிகாலனைவிட மூத்தவன் எனவும், இமயவரம்பனின் மகன் சேரன் செங்குட்டுவன் முதல் கரிகாலனைவிட இளையவன் எனவும்  அறியலாம்.

                        பெரும்பூட்சென்னி முதல் தலைமுறை என்பதாலும், முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை என்பதாலும், பெரும்பூட் சென்னியின் மகனும், முதல் கரிகாலனின் தந்தையும் ஆன செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி  இரண்டாம் தலைமுறை ஆகிறான். செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி  இரண்டாம் தலைமுறை என்பதால் மாமூலனாரும், இமயவரம்பனும் அவர் காலத்தவர் ஆகின்றனர். மௌரியப் படையை கி. மு. 297முதல் கி.மு.288 வரை போராடி வென்ற இளஞ்சேட் சென்னியின் காலத்தவர் மாமூலனார் என்பதால், அவர் இந்தக் காலத்துக்குச் சிலகாலம் முன்பும் சிலகாலம் பின்பும் வாழ்ந்தவர் எனலாம். அதாவது கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு எனலாம்.  முதல் தலைமுறையைச் சேர்ந்த சோழன் பெரும்பூட் சென்னி, உதியன் சேரலாதன் போன்றவர்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டு ஆவர். அதே சமயம் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாமூலனார் போன்றவர்கள் கி.மு. 3ஆம்,  4ஆம் நூற்றாண்டு ஆவர். முதல் கரிகாலன் போன்ற மூன்றாம் தலைமுறையையும், அவனைவிட இளையவனான சேரன் செங்குட்டுவன் போன்ற நான்காம் தலைமுறையையும் சேர்ந்தவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம்.

மாமூலனாரின் இறுதிக் காலம்:

     செருப்பாழிப்போர் நடைபெற்ற இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின், இளஞ்சேட் சென்னியின் புகழ் பரவியதைப் பொறுக்க மாட்டாத சிலர் அவனைச் சூழ்ச்சி செய்து கி.மு. 285 வாக்கில் கொன்று விடுகின்றனர். அதன்பின் அவனது மகன் முதல் கரிகாலன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நடத்திய போர் தான் முதல் வெண்ணிப்பறந்தலைப் போர் ஆகும். இப்போர் செருப்பாழிப் போருக்குப்பின் ஒருசில வருடங்கள் கழித்து நடந்தது என்பதால் அதன் காலம் கி.மு. 283 எனக்கொள்ளலாம். அதன்பின் ஏழு அல்லது எட்டு வருடங்களுக்குப்பின் கி.மு.275 வாக்கில் முதல் கரிகாலனுக்கும், சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே நடந்த போர் தான் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போராகும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இப்போரில் தோல்வியடைந்து, முதுகில் விழுப்புண் பெற்று, நாணி, வடக்கிருந்து உயிர் துறந்து பெரும் புகழடைந்தான். சேரனாடு பெரும் இழப்பைச் சந்தித்தது. முதல் கரிகாலன் தமிழகத்தின் பேரரசனாக உயர்ந்தான். இப்போர் குறித்தும், சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தது குறித்தும் வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவரும், கழார்த் தலையாரும், மாமூலனாரும் பாடியுள்ளனர்-(19).

     கி.மு. 275 வாக்கில் நடைபெற்ற, மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போர் குறித்துப் பாடிய பாடலே மாமூலனாரின் இறுதிப்பாடலாகும். ஆகவே மாமூலனாரது இறுதிக்காலம் என்பதை முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போருக்குப்பின்  5 வருடங்கள் கழித்து கி.மு. 270 வாக்கில் எனக் கொள்ளலாம். மாமூலனாரின் தொடக்க காலம் கி.மு.360 என முன்பே கணிக்கப்பட்டுள்ளது. எனவே மாமூலனார் அவர்கள் வாழ்ந்த காலம் என்பது கிட்டத்தட்ட  கி.மு. 360 முதல் கி.மு. 270 வரையான சுமார் 90 வருடங்கள் எனலாம். கி.மு.4ஆம் நூற்றாண்டின் இடையில் பிறந்த மாமூலனார் தனது இளவயதில் நந்தர்களையும், முதல் தலைமுறையைச் சேர்ந்த  உதியஞ் சேரலாதனையும், கி.மு. 270க்கு முன் தனது இறுதிக் காலத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சோழன் முதல் கரிகாலனையும் இடையில் மௌரியர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார். ஆகவே பல்வேறு தரவுகளையும், ஏரணக்கண்ணோட்டம்-பொதுஅறிவு  அடிப்படையிலும் கணிக்கப்பட்ட காலமே மாமூலனாரின் காலமாகும்.

     புகளூர் கல்வெட்டு, அசோகன் கல்வெட்டுகள், சம்பைக் கல்வெட்டு முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், மாக்கோதை, குட்டுவன் கோதை  நாணயங்கள், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், மாமூலனாரும் பிற சங்கப் புலவர்களும் நந்தர்கள் குறித்தும், மௌரியர்கள் குறித்தும், பாடிய பாடல்கள், செருப்பாழிப் போர், வல்லம் போர் குறித்தச் சங்கப் புலவர்களின் பாடல்கள், மொழிபெயர் தேயம் எனப்படும் தக்காணப் பகுதி தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்கிற மாமூலனாரின் குறிப்பு போன்ற சங்க இலக்கியச் சான்றுகள் ஆகிய மேலே தரப்பட்டுள்ள பல்வேறு வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டதுதான் மாமூலனாரின் காலமும்(கி.மு. 360-270), செருப்பாழிப்போரின் காலமும்(கி.மு. 288), சேரன் செங்குட்டுவனின் காலமும்(கி.மு. 3ஆம் நூற்றாண்டு), ஆகும். இக்காலங்கள் பழந்தமிழக வரலாற்றுக்கான ஆண்டுகளையும், காலகட்டங்களையும் கணித்து, அவைகளை உறுதிப்படுத்துவதில் மிகமிக முக்கியப் பங்காற்றியுள்ளன எனலாம்.

பார்வை:

17.சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், 23-கட்டுரைக்காதை: கட்டுரை வரி; 14, 15.

18.ஔவை.சு.துரைசாமிபிள்ளை, புறநானூறு-1, ஜூலை-2009, பக்:31.

19.வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற் புலவரின் புறநானூற்றுப்பாடல்: 66; கழார்த்தலையார் அவர்களின் புறநானூற்றுப்பாடல்: 65; மாமூலனார் அவர்களின் அகநானூற்றுப்பாடல்: 55.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க