-மேகலா இராமமூர்த்தி

நல்ல நண்பர்களோடு நட்பு பாராட்ட வேண்டியதன் அவசியத்தையும், ஆன்றவிந்தடங்கிய சான்றோரிடத்து நடந்துகொள்ள வேண்டிய முறைகளையும் விளக்கமாய்ப் பேசுகின்ற நாலடியார், உயர்ந்த பண்புடைய நல்லினத்தாரொடு நாம் இணங்கியிருக்கவேண்டியதன் இன்றியமையாமையையும் எடுத்தியம்புகின்றது.

மறலிவரும் வழியை மாந்தர்கள் யாரும் அடைக்கவியலாது. அவன் தான் திட்டமிட்ட காலத்தில் வந்தே தீருவான். எனினும் வாழுங்காலத்தில் நல்லவரோடு பழகுதலும், நன்னெறியில் ஒழுகுதலும், தீயோரையும் தூயோராய் மாற்றும் பெற்றியது எனும் உண்மையை நாலடி நவில்கின்றது.

ஆழ்ந்து ஆராயுமிடத்து மனிதப் பிறவி துன்பம் நிறைந்ததே என்றாலும், பிறர்க்குதவும் நெஞ்சமுடையவர்களான பெரியார்களோடு எப்போதும் நேயஞ்செய்து அணுகியிருக்கப் பெற்றால், அப்பிறவியை யாரும் வெறுக்கமாட்டார்கள் என்பது பின்வரும் நாலடியார் புகலும் நற்கருத்து.

இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்

பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டேஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.   (நாலடி – 174)

இறைதொழும் அடியார்க்குக்  கறைக்கண்டனின் குமிண்சிரிப்பும், எடுத்த பொற்பாதமும் மனித்தப் பிறவியைப் பொருளுடையதாக்குவதுபோல், பண்பாளர்களுக்கு நல்லினத்தின் துணை வாழ்வினைப் பயனுள்ளதாக்கும்.

நற்குடிப் பிறத்தல் என்பது எல்லார்க்கும் வாய்க்கும் பேறன்று. ஒழுக்கமும் நற்பண்பும் இல்லாத கீழ்க்குடியில் ஒருவர் பிறந்துவிட்டாலும், நல்லினத்தாரின் கூட்டுறவும் நட்பும் கிட்டுமானால் அவரும் நல்லியல்பில் மலைபோல் நிலைத்து நிற்பர். இஃது, ஊரின் சாக்கடை நீர் கடலைச் சேர்ந்தால் அதுவும் கடல் நீர் எனும் பெருமையோடு தீர்த்தமாதலை ஒக்கும் எனும் அரிய உண்மையை நாலடியார்வழி அறிகின்றோம்.

ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் – ஒருங்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.  (நாலடி – 175)

கல் ஒன்றுதான்! வாசலில் இருக்கும்போது படிக்கல்லாக மிதிபடுகின்றது; கோயில் கருவறையில் பிரதிட்டை செய்யப்படும்போது இறையாக மதிக்கப்படுகின்றது. எனவே பொருள் ஒன்றானபோதும் இடம் அதன் மதிப்பை மாற்றிவிடுகின்றது. 

மேலோரின் கேண்மையால் கீழோரும் மேலோராய் மேன்மையுறுவர் என்பதுபோல், மேலோர் கீழோரோடு தொடர்பு கொள்வரேல் அவர்தம் மதிப்பை இழப்பர் என்பதையும் நமக்குச் சான்றுகாட்டி விளக்குகின்றது நாலடியார்.

மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர் – புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.  (நாலடி – 180)

காட்டினுள்ள மணங் கமழ்கின்ற சந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்று வீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும். அஃதொப்ப, மனத்தால் மாசு மறுவிலாத சான்றோரேனும் தாம்சேர்ந்த தீய இனத்தினால் பெருமைகுன்றிப் பழிக்கப்படுவர். எனவே சிற்றினம் சேராதிருப்பது நல்லினத்தாரின் பெருமையை நானிலத்தில் உயர்த்தும்.

அறிவிலா மாந்தர்கள், மனைவாழ்வின் சார்பினால் களிப்புற்றிருக்கின்றோம்; உலக வாழ்க்கைக்கு வேண்டிய பொன் முதலிய எல்லா நலங்களிலும் நிறைந்திருக்கின்றோம் என்று கருதி அவற்றின் நிலையிலாப் பொய்த்தன்மையை மறந்து ஒழுகும் இயல்புடையவர்; ஆனால், அச்சார்புகள் நிலைத்திருப்பனபோற் காணப்பட்டுப் பின் நிலையாமற்போம் என்று உணர்ந்த மேலோரோ எக்காலத்திலும் அவற்றை விரும்பாமல் பற்றற்று ஒழுகுவர் என்பது நாலடியார் காட்டும் நல்லோர் வாழ்வு.

இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார் – அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்

என்றும் பரிவ திலர்.  (நாலடி – 184)

”நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை” என்று நாயனார் நவின்றதும் இஃதே!

மேன்மக்கள் தம்மிடம் குற்றம் ஏற்படாவண்ணம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ஏன்?

அவர்களிடத்து உண்டாகும் குற்றம் வெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல அனைவருக்கும் விளங்கித் தோன்றும். அதேசமயம் அந்த வெள்ளையெருதைச் சூடிடுதலே யன்றிக் கொன்றாற்போன்ற துன்பங்களைச் செய்தாலும் கீழ்மக்களிடத்தில் எந்தக் குற்றமும் விளங்கித் தோன்றாது. காரணம்…கீழோரை யாரும் ஒரு பொருட்டாக மதியார். மேலோரின் செயல்களோ அனைவராலும் உற்றுநோக்கப்படும். ஆதலால் அவர்கள் தங்கள் செயல்களில் மாசு நேராமல் காத்தல் அவசியமாகின்றது.

பெருவரை நாட! பெரியோர்கட் டீமை  
கருநரைமேற் சூடேபோற் றோன்றும்; – கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.  (நாலடி – 186)

இதே கருத்தை,

”குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து” என்று வள்ளுவப் பெருந்தகையும், 

”கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் – தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு” என்று பழமொழி நானூறும் பாங்குறப் பகர்கின்றன.

கீழோன் ஒருவன் முகஞ்சுளித்துப் பிறரைப்பற்றிக் கொடிய கோளுரை கூறித் தம்மை மயக்கினாலும், அம்மக்கள்பால் மனவேறுபாடு சிறிதுமின்றி முற்கொண்ட கருத்துறுதியினின்று அசைதலில்லாதவரே விளக்கினில் எரியும் ஒள்ளிய தீப்பிழம்புபோன்று அழுக்கற்ற நெஞ்சுடையவராவர். ஆகலின் பிறரின் கோளுக்கும் குறளைக்கும் செவிமடுக்காது தாம் கொண்ட கொள்கையில் உறுதியுடையோராய்த் திகழ்தலே மேன்மக்கட்கு அழகாகும் என்றறிக.

கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி 
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தார்
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.  (நாலடி – 189)

நல்லாரைக் காண்பதுவும், நல்லார் சொல் கேட்பதுவும், நல்லாரோடு இணங்கியிருப்பதுவும் எல்லார்க்கும் நன்மை பயக்கும்!

*****

துணை நூல்கள்:

1. 1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
3. பழமொழி நானூறு – ம. இராசமாணிக்கம் பிள்ளை

 

[தொடரும்]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *