இச்சையின் பிடியிலிருந்து இளம் பிஞ்சுகளைக் காப்போம்…!

ஆ. செந்தில் குமார்.

அனைத்திலும் குழந்தைகள் முதன்மையாக இருப்பதற் கேங்கும் பெற்றோரால்…
அகவை ஐந்தை எட்டுவதற்குள் ஆற்ற வியலா மனவுளைச்சல்…
அளித்திடும் இந்த கல்விமுறை அடிப்படை மாபெரும் தவறல்லவா…?

பகட்டு வாழ்வே மகிழ்வளிக்கும் என்று எண்ணும் மாணவனை…
பணம்காய்க்கும் மரமாய் உருவாக்கத் தெரிந்த இந்த பள்ளிகட்கு…
பண்பில் உயர்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தெரியாதா…?

வழித்தடம் பிறழும் மனிதனுக்கு வாய்ப்புகள் இங்கே ஏராளம்…
வீதிக் கிரண்டு மதுக்கடைகள் விதிமுறை மீறித் திறந்திருக்கும்… இளைஞன்
வாசத்தை மட்டும் முகர்ந்துவிட்டு வந்த வழியே செல்வானா?

இதயம் கவரும் திரைத்துறையில் அரைகுறை ஆடைக் கலாச்சாரம்…
இருக்கும் ஊடகத்தில் பெரும்பாலும் இச்சையைத் தூண்டும் விளம்பரங்கள்…
இம்மி அளவேனும் இவற்றுக்கு சமுதாய அக்கறை வேண்டாமா…?

வன்முறை ஆபாசம் மலிந்திருக்கும் இணைய வசதிகள் மிகுந்திருக்கும்…
வயது வரம்பின்றி யாவருமே பார்த்திடும் அந்த நிலையிருக்கும்… காணும்
வயதில் முதிர்ந்த கிழவனுமே புத்தன் காந்தி ஆவானா…?

அலைபாயும் பருவத் தொடக்கத்தில் அன்பைச் செலுத்த மறந்துவிட்டு…
ஆப்பிள் ஆண்டிராய்டு அலைப்பேசி பகட்டுக்காக வாங்கித் தந்து…
அழிவுப் பாதையின் வாயிலுக்கு அழைத்துச் செல்வது முறைதானா…?

அழகுற அணிந்தும் பயனில்லை அப்பட்டமாய்த் தெரியும் அங்கங்கள்…
அதுபோன் றிருக்கும் ஆடைகளை அணிவதற் கனுமதி அளித்துவிட்டு…
அன்னை தந்தை இருவருமே குய்யோ முறையோ எனலாமா…?

அகவை ஐந்து ஆனாலும் ஐம்பதைக் கடந்துச் சென்றாலும்…
அன்னை தந்தை இருவருக்கும் அன்புக் குழந்தை என்றாலும்…
அடுத்தவர் கண்களில் அக்குழந்தை அங்ஙனம் தோன்றுமென எண்ணலாமா…?

இருபத்து நான்கு மணிநேரம் இயற்கை நமக்கு அளிக்கையிலே…
இருபத்து நான்கு மணித்துளிகள் தம் பிள்ளைகட்கு ஒதுக்காமல்…
இருக்கும் மணித்துளி அனைத்தையுமே காசுகளாக்கி என்ன பயன்…?

இணைய சேவைகள் அனைத்திலுமே நெறிமுறை ஏதும் வேண்டாமா…?
இச்சை கொண்டோர் பிடியிலிருந்து பிஞ்சுகளைக் காக்க வேண்டாமா…?
இந்திய அரசு நினைத்துவிட்டால் ஒருநொடி இதற்குப் போதாதா…?

பண்பில் சிறந்த குழந்தைகளை பெற்றோர் உருவாக்கித் தரவேண்டும்…!
பண்பில் சிறந்த சமுதாயத்தை பள்ளிகள் உருவாக்கித் தரவேண்டும்…!
பண்பில் சமுதாயம் சிறந்திடவே அரசு வழிவகை செயவேண்டும்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க