Tag: வல்லமையாளர்

  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து

    திருவாசகத்து சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் இந்தக் கடைசி நான்கு வரிகளில் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்’ என்பதை மிகவும் ஊன்றிப்பார்த்தால் புரியும், நாம் பாடும் பாடலின் பொருளை நாம் சரியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதில் எத்தனை முனைப்பாக இருக்கிறார் என்பதும் தெரியவரும்.

    வடமொழியில் பாடப்படும் வேதத்தின் சாரமாகவே தமிழில் கொடுக்கப்பட்டதுதான் தேவார திருவாசகமும், திவ்வியப்பிரபந்தங்களும் என்பதை நம் முன்னோர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் சொல்லி வந்தனர்தாம். வடமொழி வேதங்கள் அவ்வளவு சுலபமாக அறியப்படுபவை அல்ல. அப்படியே வேதங்களை நாம் செவிவழியாகப் பயின்று அதை சரியானபடி படித்தாலும் பாடினாலும் அதன் பொருள் நிச்சயமாக நாம் அறிந்ததுதானா என்ற கேள்வி கூட வரும். இதனால் எல்லாம் வேதங்களுக்கும் வேதப் படிப்புக்கும், வேத ஞானத்துக்கும் நாம் எதிர்மறையாகப் பேசப்போவதில்லை. வேதங்களின் நாயகன் இறைவன் என்பதும் அந்த வேதமானது நம் சனாதன தர்மத்தின் ஆணிவேர் என்பதும் பாரத ஆன்மீக வரலாற்றில் பன்னெடுங்காலமாகவே போற்றப்பட்டு வந்ததுதான். இங்கு நாம் சொல்ல வந்த கருத்து கூட கையிலே வெண்ணெயிருக்க நெய்க்கலைவானேன், என்பது மட்டுமே

    ஈழத்தைச் சேர்ந்தவரும், வடமொழியில் தேர்ந்து, பைபிளையும் பயின்றவருமான தமிழ்ப் புலவர் சாமிநாதசர்மா, தேவாரத்தை பல்வேறு வகையில் வேதங்களின் மூலக் கருத்தோடு இணைத்து நூறாண்டுகளுக்கு முன்பாகவே நூல் படைத்திருக்கிறார். மானிடராய பிறந்த ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல் தேவாரம் என்று எழுதுவதோடு வேதத்தின் பொருளை அறிந்து கொள்ள தேவாரம் பாடல்களைப் பொருளுணர்ந்து படித்தால் போதுமானது என்பார்

    பொருளுணர்ந்து பாடவேண்டும் என்கிறபோது, அதுவும் தேவாரப் பாடல்களை ஆழமாக உள்வாங்கி, உணர்ந்து பாடும்போதே அந்தப் பாட்டில் பொருள் நமக்கு சாதாரணமாகவேப் புரியும். சில சமயங்களில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான பொருள் தரும் கட்டங்களும் வரும். அதில் ஒன்றுதான் அப்பர் சுவாமிகள் பாடிய ’நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்ற ஒரு அருமையான தேவாரப் பாடல். இதன் ஆழமான பொருளை திரு லோகநாதன் அவர்கள் சமீபத்தில் ஒரு மடலில் தந்துள்ளார். அந்தப் பாடலின் விளக்கத்தை அவர் மொழியில் கீழே தந்துள்ளோம்.

    வேதங்களிலிருந்து ஒரு சுலோகமும் அறியாதவனும் பல நாடுகளின் நல்ல ஞானியாக எழுந்துள்ளான். இவ்வாறு கோயில்களே இல்லாத பண்பாடுகளிலும் நல்ல ஞானிகள் உண்டு ஆக அனைவருக்கும் பொதுவாகிய ஓர் சாதனம் தான் யாது?
    இங்குதான் நம் அப்பர் பெருமான் உதவுகின்றார்.

    இறைவன் தான் யார்க்கும் குடி அல்லாதவன் அவனை நெருங்கினால்தான் அகத்தே ஞனபிரகாசம் தானே மலர்ந்திடும் ஞான அந்தகாரத்தைத் தரும் ஆணவ இருளும் உயிரை நெருங்காது.

    தான் யார்க்கும் குடியல்லாத சங்கரனின் நெருக்கத்தை, தான் யார்க்கும் குடியலாத் தனமையே வளர்க்கும், ஒவ்வொரு ஆன்மாவின் சுயத்தை மீட்கும் அதன் சுதந்திரத்தை வளர்க்கும் ஓர் போதனாமுறையே ஈட்டித் தரும்.

    அடிமைத் தனத்தை வளர்க்கும் எந்த சமய சாதனமும் பயனின்றி விழும், பண்பாட்டின் சிதைவுக்கும் அழிவுக்கும் வித்திடும்.

    அதுதானே இப்பொழுது தமிழ் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது?

    காவி உடுத்தி சாமியாராகத் திரியும் பெரும்பாலோர், அடியார்கள் அனைவரும் தனக்கே அடங்கி அடிமையாகி இருக்க வேண்டும் தன்னையே இறைவனாக நினைத்து தனக்கே உடல் பொருள் ஆவி அனைத்தையும அர்ப்பணிக்க வேண்டும் என்றல்லவா நினைக்கின்றார்கள்?

    இவரகட்கு ஏற்ப பெரும்பாலான மக்களும் இவ்வாறு ஒருவனுக்கு அடிமைப் பட்டு கிடத்தலையே விரும்பி அதுவே தக்க வழி என்று நினைத்து தன் சுயத்தை வளர்க்காது இப்பேற்ப்பட்ட சாமியாரகட்கும் இழக்கின்றார்கள்.

    அடிமை படுத்துபவன் உள்ளத்திலும் அடிமைப் படுகின்றவன் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்க மாட்டான் என்பதோடு அங்கே ஆணவ மலத்தை விரட்டும் ஞானப்பிரகாசமும் சுடராது.

    பண்பாட்டு வீழ்ச்சியின் முதன் படியே இப்படிப்பட்ட சுயத்தின் இழப்புதான். இன்றையத் தமிழர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இதனை நினைக்க மிகவும் வேதனையாகவும் இருக்கின்றது.. இதனால்தான் போலும் உலகிலேயே முதன் முதலில் மனித சுயத்தைப்பற்றி மிக ஆழமாக சிந்தித்து முழங்கிய அப்பர் பெருமானின் “நாம் யாருக்கும் குடி அல்லோம்” எனும் பாடல் போற்றுவாரின்றி வாளே கிடக்கின்றது. இளமை காலத்திலேயே எனை ஈர்த்து எனை சைவன் ஆக்கிய அந்தப் பாடலை இங்கு தருகின்றேன்– அனைவர் உள்ளதிலும் அது ஆழப் பதிய.

    961.

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தில் இடர்படோம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர் சேவடி இணையே குறுகி னோமே

    ஓர் சிறிய நாட்டின் தலைவனாக இருக்கும் யாருக்கும் அடிபணிந்து அந்நாட்டின் குடியாக இருக்கமாட்டோம், அவ்வாறுசெய்யுங்கால் தண்டித்து கொலை நோக்கோடு வந்தாலும் நமனை அஞ்சோம்; பலவித தண்டனைகள் கொடுத்து வாழ்க்கையைநரகமாக்கினாலும் இடர்படோம் , நடுங்கவுஞ் செய்யோம்; எச்சூழ்நிலையிலும் மனங்குழையாது ஏமாப்புடனேயே இருப்போம்,எவ்வகையான பிணியும் அறியோம் என்பதின் பணிவோம் அல்லோம்; யாது நடந்தாலும் அது இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இவ்வாறு நாம் இருப்பதற்கு காரணம் தாம் யார்க்கும் குடியல்லாத சர்வ சுதந்திரத் தன்மையான அர்த்தநாரீ வடிவத்துவெண்குழையோர் காதில் அணிந்திருக்கும் சங்கரனை நம் தலைவராய்க் கொண்டு, அவனுக்கே மீளா ஆளாய் நின்று அவனது மலர்களைப் போன்ற சேவடிகளைத் தொழுவதற்கே நாம் குறுகினோம் என்பதால் என்றறிக

    தேவாரப்பாடல்கள் இப்போது முழுமையான பொருளில் தேவாரம் தளத்தில் கிடைக்கின்றன என்பது சிவன் அவன் திருவருள்தான். அதனுடன் திரு லோகநாதன் போன்றோர் இப்படிப்பட்ட ஆழமான பொருளையும் சேர்ந்து நமக்குத் தருவது என்பதும் நமக்கு கூடுதலான இன்பம்தானே.

    இந்தவாரத்தில் ஒரு இனிய பாடலுக்கு விளக்கமளித்த திரு லோகநாதன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்தெடுக்கின்றது. அவருக்கு நம் வாழ்த்துகள்.

    http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-01-20-30-58/2008-12-01-20-31-36/2008-12-01-21-38-40 வல்லமையாளர் திரு லோகநாதன் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த தளத்திற்குச் செல்லுங்கள். நன்றி.

    கடைசி பாரா: சாந்தியின் ‘காகிதக் குறிப்புகள்’ லிருந்து

    அற்புதமானதாகவோ சாதாரணமாகவோ
    ஏதேனும் ஒரு
    கிறுக்கலையாவது பரிசளிப்பது மிக நன்று.
    அதை
    வெறுமையாகவே விட்டுச்செல்வதை விட.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இந்த வார வல்லமையாளர் என்ற பகுதி வல்லமையில் ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் ஆகின்றது. முனைவர் அண்ணா கண்ணன் இந்தப் பணியைக் கொடுக்கும்போது விளையாட்டாக ஏதோ சொல்கிறார்.. சரி, நாமும்தான் விளையாடிப் பார்ப்போமே என்றுதான் ஒப்புக்கொண்டேன். ஏனெனில் இப்படியெல்லாம் இன்னொருவர் எழுத்துக்களைப் பற்றி எழுதும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிதானவனோ, அறிவாழம் மிக்கவனோ இல்லை என்ற அடிப்படை உண்மை எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் நம்மைக் கூட நம்பி ஒருவர் இப்பணியை ஒப்படைக்கிறார், அவருடைய மனதை நாம் சங்கடப்படுத்துவானேன் என்ற எண்ணத்தில் எழுத ஒப்புக்கொண்டேன். நடுவில் ஒரு நான்கு வாரம் பணி நிமித்தம் வெளியூர் சென்றபோது பெரியவர் இன்னம்பூரார் மிகச் செவ்வனே செய்தார்.

    இன்னம்பூராராகட்டும் நானாகட்டும், நிச்சயமாக மூன்றாவது மனிதராக இருந்து, ஒரு நடுநிலை வாசகனாக மாறித்தான் இந்தப் பணியைச் செய்தோம் என்று இந்த நிமிடத்தில் எம்மால் நிச்சயமாக சொல்லமுடியும். ஆகையினால் ஒரு சிறிய மனத் திருப்தி கூட..

    இந்த இனிய கட்டத்தில் இந்த வருடத்து 52 ஆவது வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்க அடியேனும் திரு அண்ணா கண்ணனும் திருமதி பவளசங்கரியும் சேர்ந்து ஆலோசித்ததில் மூவரும் சட்டென சொன்னது கம்பராமாயண வகுப்பை ஆரம்பித்திருக்கும் திரு ஹரிகி அவர்களுக்குத்தான் என்று. மூவரும் ஒரே மனதோடு ஒரே கணத்தில் திரு ஹரிகியைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவேண்டும் என்பதற்காக இதை வெளியிடுகிறேன்.

    தித்திப்பான பால்சமுத்திரத்திலிருந்து பாலைக் கொஞ்சம் குடித்துவிட்டு அதன் ருசியில் மயங்கி, திருப்தியடையாமல் அப்படியே அள்ளி விழுங்க ஆசைப்படும் பூனையாக வால்மீகியின் ராமாயணத்தைப் பற்றி எழுதும்போது, கம்பன் தன்னை வர்ணித்துக் கொள்வார். ஆனால் அதே திருப்பாற்கடலை செந்தமிழில் இத்தனை இனிமையாகக் கொண்டுவந்ததில் கம்பரை நாம் எப்படியெல்லாம் பாராட்டவேண்டும்? அதே சமயத்தில் கம்பரைப் பாராட்டுவது என்பது அவர் எழுதிய ராமாயணத்தைப் படித்தாலே போதுமானது. கம்ப ராமாயணத்தைப் படிப்பது என வரும்போது ஒவ்வொரு பாடலுக்கும் உரை வைத்துப் பார்த்துப் படிக்கவேண்டும். உரை வைத்துப் படிக்கவேண்டும் என்று சொல்லும்போதே அந்த உரையை நன்கு தெளிந்த உரையாசிரியர் ஒருவர் கற்பித்தால் நல்லது எனத் தோன்றும்.. நன்கு தெளிந்த என்று சொல்லும்போதே அந்த உரையாசிரியருக்கு மூலநூலின் ஆழமும் நன்கு உணர்ந்தவராக இருந்தால் நமக்குக் கிடைப்பது தேனில் ஊறிய பலாச்சுளைதான் என்று சொல்லவும் வேண்டுமோ. இப்படிப்பட்ட உரையாசிரியராக உன்னத உருவமாக உருவெடுத்திருக்கும் திரு ஹரிகியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இப்படித்தான் நம்மாழ்வார் ஸ்டடி ஸர்க்கிள் என்று ஒரு குழுமத்தை இங்கே விசாகையில் நானும் திரு ஸம்பத் அவர்களும் ஆரம்பித்தோம். ஆனால் எங்களுக்கு ஒரு நல்ல தெளிந்த உணர்ந்த உரையாசிரியர் சரியாக அமையவில்லை என்பதில் வருத்தமே. இந்த ஆன்மிகச் செழிப்பு மிகுந்த ஆந்திரத்தில் இந்த விஷயத்தில் திரு ஹரிகியை ஒத்த சான்றோர்களின் ஆதரவு கிடைக்காதது என்பது எங்களது துரதிருஷ்டம்தான் (இத்தனைக்கும் சின்னஜீயர், பெரிய ஜீயர் எல்லோரையும் முயற்சி செய்தோம்). ஆனால் பெங்களூரு அந்த அதிருஷ்டத்தைச் செய்துள்ளது.. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வமாக உருவாகி அங்கே அன்பர்களுக்கு அந்த செல்வம் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதே எங்கள் செவியில் தேனாறு போல பாய்கிறது.

    இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு ஹரிகி மேலும் பல விருதுகள் பெற்று கௌரவிக்கப்படவேண்டும் என்பது என்னுடைய அவா. சான்றோர்களின் புலமை வீணடிக்கப்படக்கூடாது என்பதுடன் அது உரியவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்ற விஷயத்தில் நம் முன்னோர்கள் எப்போதுமே தெளிவாக இருந்ததானால்தான் இன்று நாம் எத்தனையோ காவியங்கள் கதைகள் பற்றிப் பேசுகின்றோம். எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து எழுதப்படும் பேசப்படும் எந்த நல்ல செயலும் போற்றப்படவேண்டும் என்பதோடு திரு ஹரிகி அவர்களின் சேவைக்கு நாம் நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.

    வாழ்க அவர் தமிழ்ப்பணி, வளர்க அவரது சேவை..

    கடைசி பாரா: அவ்வபோது நினைவுபடுத்தவேண்டும் என்பது போல சு.கோதண்டராமன் எழுதிய பாரதியின் வேதவாக்கிலிருந்து பாரதியின் முத்திரை வரிகள்:

    நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்
    இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கினிய
    மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
    சிந்தையே இம்மூன்றும் செய்

    அன்பு நண்பர்களே,

    கடந்த ஓராண்டு காலமாக எத்தனையோ பணிகளுக்கிடையேயும் , அடாது மழை பெய்தாலும் விடாது தொடருவோம் என்று குறிப்பிட்ட நேரத்தில் தவறாது நடுவு நிலைமையுடன் வல்லமையாளரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய  தனித்திறமைகளை ஆய்ந்தறிந்து எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தவறாமல் அழகாக வெளியிட்டு வரும் திரு திவாகர் அவர்களுக்கும்,  இடையில் அவசரப் பணி நிமித்தம் நான்கு வாரங்கள் தொடர முடியாத சூழலில் அதே முனைப்போடு இந்தப்பணி தடைபடாமல் செய்து முடித்த திரு இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கும் வல்லமை குழுவினரின் மனம் நிறைந்த நன்றி.

    இந்த வார வல்லமையாளராகப் பிரகாசிக்கும் திரு ஹரிகி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ஆமாம்.. இந்த விஷயம் இப்போதெல்லாம் தனி மனிதன் வாழ்வில் மிகவும் உள்ளூற ஊறிவிட்டதுதான். நாம் நம் ஞாபகசக்தியை நன்றாக கூர் தீட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.. இது உண்மையில் நமக்குக் கிடைத்த சாதகமா அல்லது சாபமா என பல சமயங்களில் முழித்துள்ளேன். இனி வரப் போகும் காலங்களில் இது மிக மிக அத்தியவாசியமாகிப் போய்விடும் என்று இப்போதே கண்கூடாகத் தெரிகிறது.

    ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. இனி இது இல்லையென்றால் உங்களையே உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டி அடுத்தவரை நாட வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளி விடும் என்று மட்டும் சொல்லிக் கொண்டு கீழே பெரியவர் கல்பட்டு நடராஜன் அவர்கள் ‘இதை’ப் பற்றி எழுதிய கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

    கணினி திறந்தேன்

    மடல்கள் படித்திட

    கேட்டதது கடவுச் சொல்


    கணினி வழியே

    கட்டிட நினைத்தால்

    மின் கட்டணம்

    கேட்கிறதது கடவுச் சொல்

    தானியங்கி வங்கி சென்றேன்

    வாங்கி வரப் பணம்

    அட்டை உள்ளே செலுத்திடக்

    கேட்டதது கடவுச் சொல்

    தெருவிலே சிறார்

    ஆடுகின்றார் ஓர் விளையாட்டு

    நின்றபடி இருவர்

    நீட்டிய அவர் கைகளைக் கோர்த்தபடி

    இணைந்திருந்த கைகளின்

    அடி வழியே நுழைந்திட

    முயல்கிறான் மூன்றாம் சிறுவன்

    பாம்பன் பாலமென மேலெழும்பு கின்றன

    கோர்த்திருக்கும் கைகள் ஒரு கணம்

    மறு கணம் திரும்பிட அக் கைகள்

    சிறையிலே சிறுவன் இப்போது

    விட்டிட வெளியே அவனைக்

    கேட்டிடுறார் கடவுச் சொல்

    கோர்த்த கைகள் கொண்டோர்

    கடவுச் சொல் கடவுச் சொல்

    கடந்திட எதையும்

    தேவையாம் கடவுச் சொல்

    வாழ்க்கையை வெறுத்தேன்

    உயிரை விட்டேன்

    சென்றடைந்தேன் எமலோகம்

    நின்றிருந்த காவலாளி சொன்னார்

    தேவையில்லை கடவுச் சொல்லேது மிங்கு

    சென்றிடலாம் தாராளமாய்

    உள்ளே நீ யென்று.

    எட்டிப் பார்த்தேன் உள்ளே

    திறந்திருந்த கதவின் வழியே

    பெரியதொரு எண்ணெய்க் கொப்பரை

    அதனடியே எரிகின்ற நெருப்பு

    நின்றிருந்தார் கிங்கரர் இருவ ரங்கு

    தலை கீழாய் ஆளொருவரை

    முக்கி முக்கி எடுத்தபடி

    கொதித்திடும் எண்யெய்க் கொப்பரையி லவரை.

    பறந்தேன் அங்கிருந்து சுவர்க்க லோகம்

    நின்றிருந்த காவலாளி கேட்டிட

    கடவுச் சொல் என்ன வென்று

    திரு திருவென விழித்தேன்

    திருடனைப் போல நான்.

    மறந்தனையா கடவுச் சொல்

    கடவுச் சொல் லென்பதன்

    முதல் மூன் றெழுத்துடனே

    சேர்த்திட ஓரெழுத்து

    கிடைத்திடுமே உன் கடவுச் சொல்

    மறவாதிருந்தால் உன் கடவுச் சொல்லதை

    வருத்த மேதுமின்றி வாழ்ந்திருக்கலாமே நீ

    புவியிலே பல காலம் என்றார் காவலாளி

    வருந்தினேன் திருந்தினேன்

    கடவுச் சொல்லதை

    மறந்த நான்

    ஒரு ஆன்மீகப் பெரியவர் சென்றவாரம் இந்தக் கடவுச் சொல்லைப் பற்றிக் குறிப்பிடுகையில் வைகுண்டம் போவதற்கு கடவுச்சொல் நாராயணா என்றும், கைலாயம் போவதற்கு கடவுச்சொல் நமசிவாய என்றும் இதைக் கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருப்பாயானால் இந்தக் கடவுச் சொல் நிச்சயம் கைகொடுக்கும் என்று தொலைக்காட்சி அருளுரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனாலும் ஆனானப்பட்ட ஆழ்வார் பெருமக்களே இப்படி கடைசி கால கடவுச்சொற்களைப் பற்றிப் பேசும்போது ‘அப்போதெல்லாம் அந்தக் கடைசிக் கணங்களில் நான் மறந்துவிட்டாலும் மறந்துவிடுவேன், அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன், அரங்கமாநகரருளானே’ என்று ஆண்டவனிடம் பெர்மிஷன் வாங்கி வைத்துக்கொண்டனர். அவர்கள் பகவானின் தூதர்கள். அவர்களுக்குப் பர்மிஷன், நடைமுறை ரிலாக்சேஷன் அனைத்தும் உண்டுதான். ஆனால் சாதாரண மானிடராகிய நாம் என்ன செய்யப் போகிறோம்.. வேறு வழியில்லை.. முடிந்தவரை கடவுச்சொல்லை நினைவில் வைத்துக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டே இருக்கவேண்டியதுதான்..

    பெரியவர் கல்பட்டு நடராஜன் அவர்களை இந்த வார வல்லமையாளராக ஒருமனதாக தேர்ந்தெடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி எங்களுக்கு. இந்த வல்லமையாளர் என்பதைப் பார்க்க எந்தவிதக் கடவுச் சொல்லுமில்லாமல் நேரடியாக வல்லமையைத் திறந்து பார்க்கலாம்தான். ஆனால் இந்தப் பதிவைப் பற்றி யாராவது எழுத வேண்டுமென்றால் இந்தக் கடவுச்சொல் தொல்லை இருக்கத்தான் செய்யும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, கடவுச்சொல்லைப் பற்றிய அழகிய கவிதையை அளித்த கல்பட்டாருக்கு நம் வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடைசி பாரா: திரு சு. ரவியின் ஊடலும் சமாதானமும் :

    சுர நதிப் பெண்ணாள் கங்கை

    சுந்தரா நின்னைத் தேடி

    சரசரத் திறங்கிப் பாய்ந்த

    சரசத்தில் மயங்கினாயோ!

    வருவது வரட்டும் என்று

    வார்சடை ஏற்றாய்! வெள்ளிப்

    பருவதன் மகளின் ஊடல்

    பரமனே, பார்த்தாய் அன்றோ?

     

    ஆடகப் பொன்னால் வேய்ந்த

    அம்பலம் ஆடும் தேவா!

    ஊடலும், ஊடலின் பின்

    ஒன்றி நீர் கூடலும் உம்

    நாடகக் காட்சி…………………….

    ========================

    படத்திற்கு நன்றி: தமிழமுதம்

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    வல்லமைக் குழுவின் அன்பு உள்ளங்களுக்கு விஜய வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நன்னாளில் புது வருட வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புது வருடம் பெயருக்கேற்றாற்போல் எல்லா வெற்றிகளையும் நமக்குத் தரவேண்டும். தந்தே ஆகவேண்டும் (அப்படித் தராவிட்டால் அடுத்த அறுபது வருடம் கழித்து வரும் இந்தப் பெயரை எடுத்து விடுவோம்)

    பொதுவாக ஒவ்வொரு புதுவருடமும், தமிழ்நாட்டில் எப்படியோ, இந்த ஆந்திர தேசத்தில் மட்டும் ஊருக்கு ஊர் பஞ்சாங்கம் படிப்பார்கள். இந்த வருடத்தில் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஆரூடம் சொல்லி, அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு லாபம் எவ்வளவு கிரயம் எத்தனை என்பதைக் கூட கணக்கிட்டுச் சொல்வார்கள். தேச சுபிட்சத்தைப் பற்றியும், ஒவ்வொரு சமயம் சில அரசியல் வாதிகளைப் பற்றியும் கூட ஆரூடங்கள் வருவதுண்டு. தேச சுபிட்சம் என வரும்போது, பொய்த்துப் போகும் மழையைப் பற்றியும் அல்லது அதீதமான புயல் மழை போன்றவற்றினால் பாதிப்புகளைக் கூட கணக்கிட்டு சொல்லும்போது சில சமயம் எனக்கே வியப்பாக இருக்கும். இதுவெல்லாம் இப்படித்தான் என எப்படித்தான் கணிக்கிறார்களோ. ஆனால் பல சமயங்களில் இவர்கள் கணக்குப்படிதான் நடக்கிறது என்பதையும் சமபவங்கள் நிகழ்கையில் நமக்குக் காணக் கிடைக்கின்றன என்பதையும் நாம் சொல்லிவிடவேண்டும்.

    அதே போல் மனிதர்களுக்கான ஆரூடச்செய்திகளும் கூட இவர்கள் சொல்படிதான் நடக்கின்றனவா என்ற மாயை எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. ஆரூடங்கள் பொய்ப்பதில்லை என்பதை சில சமயம் நானே உணர்ந்திருக்கும்போதும், பல சமயங்களில் இந்த ஆரூடத்தினால் நன்மைகள் விளைகின்றனவா என்றும் யோசிப்பதுண்டு. நாளை நடப்பது என்ன என்பது இப்போதே தெரிந்தால் வாழ்வின் சுவாரசியம் போய்விடாதா என என்னுள்ளேயே கேள்விகள் கேட்டுக் கொள்வதுண்டு. ஆனாலும் இந்த ஆரூடங்கள் ஒருவிதத்தில் நல்லதைத்தான் செய்கின்றன. அதாவது மனிதனது வாழ்வில் நம்பிக்கை மேலும் பெருகவும், இப்படி ஒருவேளை நிகழ்காலத்தில் நடந்து விட்டால் தன்னைத் தானே அவன் அதற்கேற்றபடி தயார் செய்து கொள்ளவும் நிச்சயம் உதவுகின்றன. நடப்பதும் நடக்க இருப்பதும் நம் கையில் இல்லை என்ற தத்துவ நிலையைக் கூட இந்த ஆரூடங்கள் உணர்த்துவதாக நான் நினைத்துக் கொள்கின்றேன். வாழ்வின் மீது நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.இந்த ஒன்றே போதுமல்லவா ஆரூடத்தினால் ஏற்படும் பலன்கள் உண்டு என்பதற்கு?

    வல்லமையில் பலவாரங்களாக இப்படிப்பட்ட வாரபலன்களை திருமதி காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிவருகின்றார்கள் இந்தப் புதிய வருடம் நல்ல நல்ல பலன்களை எல்லாருக்கும் அள்ளி வழங்குமா என்று அவர்தான் கணித்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும் இத்தனை வாரங்களாக வாசகர்கள் மனதில் வாழ்வின் மீது ஒரு நம்பிக்கையை. வளர்த்து வந்திருக்கும் இவரை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆகையினால் வல்லமை குழுவினர் ஒரு மனதாக திருமதி காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்களை இந்த வார வல்ல்மையாளராக சிறப்பிக்கிறோம்.

    வல்லமையாளர் விருது என்பது வல்லமையில் இது ஐம்பதாவது வாரமாக வழங்கப்படும் விருதாக இந்த வார விருது அமைகின்றதும். அதுவும் இந்தப் புதிய வருடமான விஜய வருட ஆரம்ப வாரத்தில் நிகழ்வதால் இந்த விருதுக்கு ஏதோ ஒரு சிறப்பு பெருமையும் சேர்ந்து கொள்வதாக எனக்குள் ஒரு பிரமை. எப்படி இருந்தாலும் இந்த விருதை வாங்கியவருக்கு என் வாழ்த்துக்கள்.

    கடைசி பாரா: பூந்தலைச் சிறுகோல் – முனைவர் பானுமதி.

    சிறு வயதில் தாய் (செவிலி) பொன்னால் ஆன கிண்ணத்தில் பால் சோற்றை ஏந்திக் கொண்டு குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தை உண்ண மறுத்து கால் கொலுசு ஒலிக்க இங்குமங்கும் ஓடி ஒளிந்து கொள்கிறது.. மூச்சிறைக்கத் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அக்குழந்தைக்கே மூச்சிறைக்கும் போது அத்தாய்க்கு எப்படி இருக்கும். பொறுமையாக அத்தாய் அக்குழந்தையின் பின்னால் ஓடுகிறாள். அப்போதும் உண்ண மறுக்கும் குழந்தையை அவள் அடிக்கவில்லை. மாறாக அடிப்பதாக நடிக்கிறாள். அதுவும் எப்படி? பூவால் சுற்றப்பட்ட ஒரு கோலைக் கையால் ஓங்கிக் காட்டி. ஆம் ஒரு வேளை அக்கோல் அக்குழந்தையின் மேல் பட்டு விட்டால் வலித்து விடுமே என்பதால் அக்கோலைப் பூவால் சுற்றியிருந்தாளாம். இதைச் செய்தவள் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயல்ல. செவிலித்தாய். இக்கால வழக்கில் கூறவேண்டுமானால் வேலைக்காரப் பெண்மணி.

    “புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,‘உண்’ என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்

    முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
    அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
    பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
    ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி”

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இன்றைக்கு உலகமக்களையே ஆட்டுவிக்கும் துறை ஒன்று உண்டென்றால் அது திரைப்படத்துறை மட்டும்தான். ஒரு திரைப்படம் ஒன்று வெற்றிகரமாக ஓடினால் அந்த வெற்றியின் பின்னே பலர் இருக்கிறார்கள் என்ற செய்தியெல்லாம் மறந்து போய் அந்த வெற்றியின் முழுப்புகழையும் அந்த நடிக நடிகையருக்கே இந்த மக்கள் வழங்கி வருவதுதான் வேடிக்கை. எத்தனைதான் அந்த நடிகர்களுமே சேர்ந்து இது ஒரு கூட்டணியால் ஏற்பட்ட வெற்றி என்று சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.. அவர்களுக்கு அந்த வெற்றிப்படத்தில் காண்பிக்கப்பட்ட முகங்கள் மட்டுமே தெரிகின்றன.  அந்த முகங்களுக்குப் பின்னால் நிற்கும் மிகப்பெரிய தொழில் வல்லுநர்கள் கூட அதிகமாக அறியப்படுவதில்லை. இதனால் புகழ்ச்சியானது பங்கு பிரிக்கப்படாமல் ஓரிடத்திலேயே சென்று பாய்ச்சப்படுகிறது.

    ஆனாலும் இப்படி வரும் புகழ் என்பது போதை மருந்துக்கு ஒப்பானதாகும். போதை மருந்து முதலில் போட்டுக்கொண்டால் சுகமாக இருக்கிறதே என்பதால் இது அடிக்கடித் தேவைப்பட போதை மருந்துக்காக மனம் ஏங்கும்.. பின்னர் அதற்கே அடிமையாகி வீணாகிப் போவோரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த புகழ் போதை கூட இப்படித்தான்.. ஒரு படத்தில் கிடைத்த ஏராளமான புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் போராட வேண்டிய நிலையை நாளுக்கு நாள் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    இந்தப் போராட்டத்தில் அவர்கள் இந்தப் புகழுக்கு ஈடாக எத்தனையோ தியாகங்கள் செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். அன்பு பாசம் கருணை எல்லாமே இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப்படவேண்டிய நிலையில் இந்தப் பணமும் புகழும் இவர்கள் வாழ்க்கையை சோபிக்கச் செய்யுமா? இந்தக் கேள்விக்கு ஒரு நடிகையின் மனதில் புகுந்து கொண்டு அழகான கவிதையைப் பதிலாகத் தந்துள்ளார். பொன் இராம்.

    வண்ணச்சாயப் பூவிதழ்
    உதடுகள் கூறும்
    கண்ணீர் வரிகள்!
    அடிமை விலங்கு
    அவிழ்க்கப்பட்டும்
    அரிதார பொம்மைகளாய்
    நனவுலகில் சிரிக்கின்றோம்!
    கள் மட்டுமே
    போதை!
    இங்கு நாங்கள்
    திரையுலகக்
    கண்ணாடிக் குடுவைக்குள்
    போதைப் பதுமைகளாய்
    வாழ்கின்றோம்!
    இடியாக  மாறி
    படியாத ஆணுலகை
    மாற்றிவிட எத்தனையோ முயன்றாலும்
    பணமழை தான் ஜெயிக்குதடி!
    பட்டமொன்று பெற்றாலும்
    பாவி மனம்
    புகழுக்கு ஏங்குதடி!
    விடியாத பெண்ணுலகத்
    திரையுலகக் கும்மிருட்டில்
    விரைவாய்  யார் வருவார்
    அறிவு விளக்கேற்ற?

    பொதுவாகவே திரைப்படக் கலைஞர்களில் இந்த நடிகைகளின் உள்ளக் குமுறல்கள் சற்று அதிகம்தான். பெண்ணாகப் பிறந்து, அதிலும் அழகாகவும் அலங்காரமாகவும் ஆண்களின் பார்வைக்குப் படும்போதும், அதை அவர்கள் கவர்ச்சியாகக் காட்டி செல்வம் ஈட்டும்போதும், அவள் படும் மனத் துயரங்கள் இந்தப் புகழ் எனும் போதை மருந்து மூலம் சற்று நேரத்துக்கு மறக்கடிக்கப்பட்டாலும், இப்படிப்பட்ட போதை மருந்துதான் நிரந்தரத் தீர்வா என்றால் அதைவிடக் கொடுமை ஏது என்ற இன்னொரு கேள்விதான் பிறக்கும்.

    நடிகையின் குரல் மூலம் சிந்தனையைத் தூண்டிவிட்ட பொன் இராம் அவர்கள் இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள்.

    கடைசி பாரா:   முதலைக் கண்ணீர்:

    முதலை அழுவதால் வருகிற கண்ணீர் இல்லை அது. சும்மாவே அதோட உடம்புல ஊறுகிற நீர் கண்கள் வழியா வெளியே வருமாம். அதனால் அந்தக் கண்ணீருக்கு எந்த அர்த்தமும் இல்லைதானே. அதுபோலத்தான் சில பேர் உலகத்துல தன் காரியம் ஆகணும்கறதுக்காக முதலையாட்டமா போலிக் கண்ணீர் வடிப்பாங்க.. நாமதான் அவங்ககிட்ட சூதானமா இருந்துக்கணும். இல்லேனா முதலைக் கண்ணீர் வடிச்சி நம்மளையும் ஏமாத்திப்புடுவாங்க (பவளசங்கரி)

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    செய்திகள் என்பது எப்போதுமே பரபரப்பாகவும் மக்கள் உடனடியாக படித்து பதட்டம் அடைவதாகவும் இருக்கவேண்டும் என்று எந்த அறிவாளி எப்போது எந்தக் காலத்தில் சொல்லி வைத்தாரோ, தினமும் பத்திரிகைகளின் வரும் செய்திகள் இந்தக் கொள்கையைத் தவறாமல் கடைபிடித்து வருகின்றன. பத்திரிகைகள் கிடைக்காத அந்தக் காலக் கட்டத்தில் கிராமங்களில் செய்தி பரப்புவதைப் பற்றிய நகைச் சுவைக் கட்டுரை ஒன்றில் ‘ஒரு பாட்டி கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது மண்குடத்தைத் தவறிப் போட்டு விட்டாள்’ என்பது வார்த்தைகள் திரிக்கப்பட்டு காட்டுத் தீ போல் ஒவ்வொருவர் வாய் மூலமாகவே கடைசியில்’அந்தப் பாட்டி யாரையோ கிணற்றில் தள்ளிவிட்டு தானும் விழுந்து விட்டாள்’ என்பதாகப் பரவும் என எழுதி இருப்பார். (இல்லாவிட்டால் பாட்டி தவறிப்போய் போட்டுவிட்ட அந்த மண்குடத்தை யார் மதிப்பார்கள்..)

    என்னுடைய ‘எம்டன்’ புதினத்துக்காக சென்ற நூற்றாண்டின் முதல் வருடங்களின் செய்திகளை அதிகம் புரட்டிப் பார்க்க நேர்ந்தது. அப்போதும் கூட அந்த காலத்துக்கேற்ப பல பரபரப்பான செய்திகள் அரங்கேற்றம் ஆகிக் கொண்டே இருந்தனதான். ஒரு மாதிரிக்காக, அன்றைய அன்னி பெசண்ட் அம்மையாருக்கும் ஹிந்துப் பத்திரிகைக்கும் ருக்மிணி அருண்டேல் விஷயத்தில் நடந்த கருத்து மோதல்கள் மிக விறு விறுப்பாகப் படிக்கப்பட்ட செய்தியாகவும், மதராஸ் ஆங்கிலேய கவர்னர் தனிப்பட்ட முறையில் ஹிண்டு பத்திரிகைக்கு ஆதரவு அளித்ததையும் சொல்லலாம். ஆனால் உண்மையில் பார்த்தால் இவையெல்லாம் பொது மக்களுக்குத் தேவையான செய்தியா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஆனால் பொது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள் ஏனென்றால் வம்புகளில் கிடைக்கும் ஒரு கிளர்ச்சிகரமான இன்பம் மட்டுமே’ என்பேன்.

    காலம் எத்தனைதான் மாறிவிட்டாலும், இப்போதும் இத்தகைய செய்திகளுக்குத்தான் எங்கும் எதிலும் முதலிடம். காலம் மாறினாலும் கோலம் மாறாது என்பது போல பத்திரிகைகளின் இந்தக் கொள்கையும் மாறவே மாறாது போலும்.

    இத்தகைய நிலையிலும் ஏதோ சில நல்ல செய்திகளும் அந்தப் பத்திரிகைகள் வேறு வழியில்லாமல் பிரசுரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய நல்ல செய்திகள் வரும்போதெல்லாம் நமக்குத் தவறாமல் அதைப் பதிப்பித்து எடுத்துச் செல்கிறார் திரு சங்கர ராமசாமி அவர்கள். இதோ சமீபத்திய அவர்களின் பதிவிலிருந்து ஒரு நல்ல செய்தி..

    தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கெனத் தனியான தமிழ் எழுத்துருக்கள் மற்றும் விசைப்பலகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 13 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட அரசு தலைமை அலுவலகங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் முற்றிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    கோப்புகளைத் தயார் செய்வது உள்பட பெரும்பாலான பணிகள் கம்ப்யூட்டர் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு அலுவலகத்திலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போன்று எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அலுவலகங்களில் வானவில் என்ற பெயரிலான எழுத்துரு உபயோகிக்கப்படுகிறது.

    ஆனால், இந்த எழுத்துருவுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தியாக வேண்டும். வேறு சில எழுத்துருக்களைப் பயன்படுத்த வேண்டுமானாலும் அதற்குக் கட்டணம் அவசியம். இதனால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே எழுத்துரு பயன்படுத்துவது என்பது கனவாகி இருந்தது.

    இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே எழுத்துருக்கள் மற்றும் விசைப் பலகைகளை பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான முயற்சி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

    இதற்காக, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் பி.ஆர்.நக்கீரன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பி.செல்லப்பன், மணிவண்ணன், தேசியத் தகவலியல் மையத்தின் உறுப்பினர் ஜே.டி.பிரின்ஸ், தேசியக் கம்ப்யூட்டர் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

     இந்தக் குழு சார்பில் பாரதி, கபிலர், கம்பர், வள்ளுவர், காவிரி ஆகிய பெயர்களில் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துருக்கள் ஒரே வகையைச் சேர்ந்தவைதான். இவற்றை விண்டோஸ், லினக்ஸ் உள்ளிட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்களில் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

    பல கோடி ரூபாய் மிச்சம்: இந்த எழுத்துருக்களுக்கான விசைப் பலகை, சாதாரண டைப்ரைட்டிங் இயந்திரத்தில் உள்ளது போன்றும், ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை அடித்தால், அது அப்படியே தமிழில் மாறுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால், விசைப் பலகையை வேகமாக இயக்கத் தெரியாதவர்கள்கூட, ஆங்கிலத்தில் எழுத்துக்களை அடித்து அதைத் தமிழில் தோன்றச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி வழங்கிக் கொண்டிருக்கும் திரு சங்கர ராமசாமி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழு மிக மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுக்கிறது. திரு ராமசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.

    கடைசி பாரா:  சத்தியமணி’ யின் கவிதை வரிகளிலிருந்து

    அன்னமன் னந்நடை அரிவையாகி காதல் கற்றாள்
    தெரிவை எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள்
    பேரிளம்பெண் அன்னை யென்றே பாசம் பொழிந்தாள்
    நுங்கையாகி நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்தாள்

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    இந்த ‘காலகட்ட’ ஆராய்ச்சிகளென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.நம்மாழ்வார் எப்போது பிறந்திருப்பார், திருவள்ளுவரின் காலம் என்ன, திருவள்ளுவருக்கு திருமூலர் முந்தியவரா பிந்தியவரா, மாணிக்கவாசகரின்காலம் தேவார மூவருக்கும் முந்தியதா என்பதெல்லாம் ஆராயப் பிடிக்கும்.அப்படித்தான் மாணிக்க வாசகர் பற்றிய காலகட்டத்தின் ஆராய்ச்சியொன்றினை என் வலைப்பகுதியில் தொடராக எழுதியுள்ளேன்.

    ஆனால் இவையெல்லாம் வருங்காலம் இன்னமும் எளிதாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.நாம் எத்தனைதான் முன்னோரைப் பற்றி ஆராய்ச்சி செய்தாலும்சம்பந்தப்பட்டவராகவே வந்து நமக்கு சரிவரத் தெரிவிக்காவிடில் எல்லாமும் கணிப்புகளின் ஒரு பகுதிதான் என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் எத்தனைதான் சந்தேகமற நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் தெளிவாக ஆராய்ந்து எழுதினாலும் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்கள் கிடைக்காத மட்டில் இந்த ஆராய்ச்சிகள் அனைத்துமே மறு ஆராய்ச்சிக்கு உட்பட்டதுதான். உதாரணமாக நம் தேச தந்தை காந்தியடிகளின் வரலாறு ‘சத்திய சோதனை’ என்று அவரே கைப்பட எழுதியதுதான் அவரது காலக் கட்டத்தைப் பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் எதிர்காலத்தவருக்கு சரியான செய்தியாகப் போய்ச் சேரும். ஒருவேளை காந்தி எழுதவில்லை என்றால் வேறு ஆயிரம் பேர்கள் காந்தியைப் எழுதினாலும் அத்தனை எழுத்துக்களும் மறு ஆய்வுக்குரியதே.

    இந்த வகையில் பார்க்கும்போது டாக்டர் செம்மல் அவர்கள் ஒரு சிறந்த சேவையாக அறிஞர்களின் வாழ்க்கையை நேரடியாக அவர் வாய் மூலமாகக் கேட்டு அதைக் காலப் பெட்டகத்தில் பதிப்பது ஒரு பொறுப்பான சமூகப் பணியாகும். இதோ அவரது கோரிக்கை ஒன்று இந்த வாரத்தில் வல்லமை குழுவில் வெளிவந்தது.

    Subject: Archiving Tamil Scholars Living in Madurai as on March 2013

    Dear All,

    Hereby the Scientific Tamil Foundation launches a new webpage title as http://www.tamillanguagearchives.blogspot.in/Kindly refer the names of the Scholars living in Madurai at present whom you believe may be added to this webpage. Viewing at the activities of the foundation, many may be of the opinion that it will be manned by a team; the reality is that – at present the foundation is manned only by me as a single person.
    Shri. Manavai Mustafa, the founder of the foundation has donated rupees 10 lakhs (INR) (that which was given for nationalization of his
    books) by the Government of tamilnadu to the foundation. With that corpus fund the foundation is able to proceed on various non
    commercial ventures smoothly. Apart from this, every month I am funneling a part of my salary for the ventures.The foundation is registered with the Government and is ready to provide financial assistance for Tamil Development. Archiving will be done by me personally on Tuesday (26th March) (10:00 hours till 16:00 Hours)All the Processing, Recording , Video editing , Uploading will be done Free of cost. Refer the names of the genuine scholars to me as early as possible.

    டாக்டர் செம்மலுக்கு நாம் அனைவரும் உதவுவோமாக.. எதிர்கால தலைமுறைக்குஒரு மிகச் சிறந்த சேவையாக இதைக் கருதி, இச் செய்லை மேற்கொண்டு வரும் டாக்டர் செம்மல் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழு மனமுவந்து தேர்ந்தெடுக்கிறது. டாக்டர் செம்மல் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: ’மலர் சபா’ அவர்களின் சிலம்புத் தமிழ் காணிக்கையிலிருந்து

    இனிய கதிர்களையுடைய
    திங்களது போலும்
    ஒளிர்ந்திருக்கும் முகத்தையுடைய
    தலைவியின் சிவந்த வாயில் இருக்கும்
    அழகிய பற்களுக்கு
    நீ தரும் இந்த முத்துகள் ஈடாகா;

    எனினும்

    ‘முத்துகளை நீங்கள் வாங்குங்கள்’ என்று கூறித்
    திருமாலின் மகன் காமன் அவன் போல் பித்தேறி
    கடலே! நீயும் நாள்தோறும் இங்கு வருகின்றாய்!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சில ஆண்டுகளுக்கு முன்பு அலிகாரில் இருந்த பத்திரிகை நண்பர் மூலம் ஒரு தொலைபேசி. ஒரு தெலுங்கு சிறுவன் ஒருவன் உத்திரப்பிரதேசத்தில் அடிமை முறையில் வேலை செய்வதாகவும் அங்கிருந்து தப்பித்து போலீஸில் சிக்கியதாகவும், அவனிடம் பேச்சுக் கொடுக்க முடியவில்லை, சரியாக பேசமுடியவில்லை, திகிலும், பயமும் அதிகமாக உளறிக்கொண்டே இருக்கிறான்.. தெலுங்கு பாஷையாகத்தான் இருக்கவேண்டும், பக்கத்தில் அனகாபள்ளி என்று ஏதாவது ஊர் இருக்கிறதா என்று விசாரியுங்கள், அங்கு போலீஸ்  ஸ்டேஷனில் விசாரிக்கவும் என்று கோரிக்கை வந்தது. இந்தப் பையனுக்கு ஆறு வயது இருக்கும். அனகாபள்ளியில் ஒரு டீக்கடை வைத்திருப்பவரின் மகன். வீட்டில் யாரோ அடிக்க, ஸ்டேஷன் வந்து ரயில் ஏறி சென்னை வந்து பிறகு அங்கிருந்து இன்னொரு டிரெயின், வடக்கே. அங்கே யார் மூலமோ அடிமை வேலை. இத்தனைக்கும் பையன் போனது குறித்து அவன் குடும்பத்தார் கூட கவலைப்படவில்லையாம்.

    என் அலிகார் நண்பர் விகடன் செய்தியாளர் என்பதால் சென்னையில் சேவாலயா முரளி மூலம் சென்னை போலீஸைத் தொடர்பு கொண்டு அந்த உத்தரப்பிரதேச அடிமைத்தனத்திலிருந்து அந்த சிறுவனை மீட்டு வந்தார். சேவாலயா முரளி இதற்காக பிரத்யேகமாக அந்த ஊருக்கே சென்று ஆவன செய்து அந்தச் சிறுவனை மீட்டு வந்தது ஒரு சிறப்பான பணி. பிறகு அவனுக்குப் படிக்கவும் வகை செய்தார். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சமீபத்தில் ஈரோட்டுக் கதிர் அவர்களின் பதிவு ஒன்றினைக் கண்டந்தும் இத்தகைய மனிதர்கள் யாரோ ஓரிருவர் இருப்பதால் மட்டுமே மழையை பொய்க்க வேண்டிய நிலையில் இந்த உலகத்தார் வைத்திருந்தாலும், அந்த மழையானது இவர்களுக்காக பெய்கிறதோ என்று தோன்றியதுதான். இனி கதிர் அவர்களின் பதிவு

    எப்போதும் எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. எவரொருவர் தன்னலம் பாராது சேவையாற்றுகிறாரோ, அவருக்கான பலன், அவர் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் சரியான நேரத்திலோ, காலம் தாழ்த்தியோ எப்படியேனும் வந்தடைந்தே விடுகின்றது என்பது. ஒருபோதும் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போய்விடுவதில்லை. எப்போதும் தங்களைக் குறித்து மனதில் ஒரு திருப்தி இருந்து கொண்டேயிருக்கின்றது.

    மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன், ஈரோட்டில் இருக்கும் ஒரு மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்குசலுகை விலையில் உணவளிப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழ்மையாய் இருக்கும் 20 நோயாளிகளுக்கு 1ரூபாய் பெற்றுக்கொண்டு மதிய உணவு அளிப்பதாகவும் சொன்னார். அதன்பின் சில நாட்கள் அந்த மெஸ்ஸிற்குசாப்பிடச் சென்றேன். அவர்களின் சேவையில் ஒரு நேர்மைத்திறன் இருப்பதை உணர்ந்தேன். மதியம் உணவுவழங்குகையில் சில படங்களை எடுத்துவந்து அதுகுறித்து ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் கட்டுரையைஎன்னுடைய வலைப்பக்கத்தில் எழுதினேன்.
     

     
    அந்தக் கட்டுரை இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் வாசிக்கப்பட்டது. புதியதலைமுறை இதழ் அதையொட்டிஒரு கட்டுரை எழுதியது. புதியதலைமுறை தொலைக்காட்சி தனது ”பதிவு” நிகழ்ச்சியில் மெஸ் உரிமையாளர் திரு.வெங்கட்ராமனை படம் பிடித்து ஒளிபரப்பி கௌரவப்படுத்தியது.

    நல்ல விஷயங்கள் சரியான சமயத்தில் கொண்டு வரப்படுவதால் இவைகளைப் பார்த்து மேலும் பல நல்ல விஷயங்கள் நடக்க வேண்டிய சந்தர்ப்பத்தைத் தருகின்றோம். சேவாலயா முரளி போல, மதுரை அட்சயா கிருஷ்ணன் போல, இதோ ஈரோடு வெங்கட்ராமனைப் போல சமூகப் பணியாற்றும் மனிதர்கள் மேலும் மேலும் அதிகமாகவேண்டும் என்ற ஆவல் கதிருக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதோடு தக்கதொரு சமயத்தில் வெளிக்கொணர்ந்த திரு கதிரை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சியும் கூடுகிறது. வல்லமையாளர் திரு கதிருக்கு நம் வாழ்த்துகள்

    கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தி அவர்களின் பாடல் தேன்.

    நடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்
    நங்கைஎன்பேர் மறந்தே னடி!
    கடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே
    கன்னியென்னைக் காண்பா னோடி!
    உண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே
    உறக்கத்தைத் தொலைத்திட் டேனே
    கண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே
    கண்கட்டு வித்தை என்பதோ?

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    அனுபவம் அனுபவம் அனுபவம்.. உலகியல் வாழ்க்கையில் இந்த அனுபவம் ஒன்றே உண்மையான கல்வி ஞானம். எத்தனைதான் டாக்டரேட்டுகள் பட்டங்களை தன் பின்னே வைத்துக்கொண்டாலும் அனுபவம் அறியாத அத்தனை பட்டங்களும் விழலுக்கு விழைத்த நீரே. அதனால்தான் மருத்துவப்படிப்பில் அந்தக் காலத்திலிருந்தே ஒரு வருடம் கட்டாய சேவையை படிப்பில் புகுத்தினார்கள். படிக்கும்போது ஏற்படும் அனுபவம் என்பது வேறு. இந்தவகை அனுபவங்கள் பச்சைம்ரத்தாணி போல மனத்திலேயே தங்கிவிடும். பின்னாளில் பலவகை இக்கட்டுகளிலிருந்து காக்கும் அருமருந்து கூட இந்த வகை அனுபவங்களே.  அப்படிப்பட்ட அனுபவக் கட்டுரை ஒன்றை இந்த வாரம் வல்லமையில் பார்த்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தில் எழுதப்படாத விதி.  அப்படியாகத்தான் எனக்குக் கிடைத்த வேலை ஆராய்ச்சி சஞ்சிகளைப் பதிப்பித்து விற்று வருமானம் ஈட்டுவது.  மூன்று சஞ்சிகளைப் பதிக்கும் வேலையைத் தொடங்கி அதன் வடிவமைப்பு விற்பனை என்று நானாவித வேலையையும் செய்து பழகிக் கொண்ட எனக்கு என்பலம் என்னவென்று ஒருநாள் தெரிந்தது.  சக ஆய்வு மாணவர் ஒருவன் என்னுடைய வழிகாட்டியான பேராசிரியத் தலைவர் என்னை வெளியேற்ற ஏற்பாடு செய்துவருவதைச் சொன்னார்.  வழிகாட்டிக்கும் ஆய்வு மாணவனுக்கும் உள்ள உறவு பலசரக்குக் கடைச் செட்டியாருக்கும் பொட்டலம் கட்டும் இளைஞனுக்கும் இடையே உள்ள உறவு போன்றது.  செட்டியார் எச்சரிக்கை எத்திராஜராகப் எதிர்க்கடை வராதவாறு வேலை செய்பவர்களுக்குப் பொட்டலம் கட்டுவது தவிர எந்த வேலையையும் கற்றுக்கொடுக்க மாட்டார்.  அப்படியே அவரைத் தாண்டிக் கற்றுக் கொண்டவனையே விட்டால் வினை என்று கூலியில்லாத வேலையாளாக மாற்றி மருமகனாக ஆக்கிக்கொள்வார்.  இங்கு நான் வெளியேற்ற்ப்படும் நிலையில் முன்யோசனை இல்லாமல் என் சக ஆய்வாளரிடம் இந்த மடம் இல்லையென்றால் எனக்கென்ன கவலை இங்கிருந்து நேராக எந்தப் பத்திரிக்கை வாசலில் நின்றும் நான் ப்ரூஃப் ரீடர் வேலைக்கு வந்திருக்கேன் என்று சொன்னால் அப்படியே தூக்கிட்டுப் போயிடுவாய்ங்க தெரியுமா என்று ஆண்டுக் கணக்காக ஆய்வு என்ற பெயரில் நான் செய்த புரூஃப் ரீடர் வேலையைச் சொல்ல அவர் என்னுடைய பேராசிரியரிடம் போட்டுக் கொடுக்க அதனால் என் வழிகாட்டி என்னை வெளியே போக முடியாதபடி செய்துவிட்டார். அதுமூலம் நான் பத்திரிக்கையில் ஒரு வேலையை உருப்படியாகச் செய்யமுடியும் என்று எண்ணத் தோன்றியது

    எனது நண்பரின் புதிய முயற்சியில் அவர் முன் எடுத்த ஒரு திட்டம் சினிமாத் துறையில்  ஒரு வாரப் பத்திரிக்கை தொடங்குவது.  அந்தக் காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பும் சூல்நிலையில் அவரை ஆசிரியராகக் கொண்டு இந்தப் பத்திரிக்கையை நடத்தவேண்டும் என்பது அவரின் இந்த முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது பத்திரிக்கையைத் தொடங்கி வடிவமைத்து உருவாக்கி வெளிவிடும் வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.  ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்துக்கொண்டு கால் இடறிக்கீழே விழுந்தால் ஒரு தியேட்டர் படியில் விழவேண்டும் என்ற சூழலில் ஆய்வறிக்கைக்காக அல்லும் பகலும் நேரம் செலவழித்ததால் ஒரு திரைப்படம்கூடப் பார்த்ததில்லை.  ஒருமுறை என் சகஆய்வு மாணவரின் காதல் திருமண வரவேற்புக்காக இடம் புக் செய்ய ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில் ஏகப்பட்ட கூட்டம் என்னவென்று தெரியாமலேயே வரவேற்பாளரிடம் சென்று பணம்கட்டிவிட்டுத் திரும்பி வந்தால் கூட்டம் என்னைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் பார்த்தது.  ஏணிப்படி ஏறுமாறாக என்று கேடடதற்கு உன் அருகில் ரிசப்சனில் நின்றது யார் தெரியுமா  என்று கேட்டது கூட்டம். ஐயா தெரியாதய்யா என்று சொன்னேன்.  நீயெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்ததே ஒரு பெரிய பாவம் என்று சலித்துக்கொண்ட ஒரு பெரிசு பையா அதுதான் இந்தியத் திரை உலகின் கனவுக் கன்னி அவரைப் பார்க்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று சொன்னார்கள்.  இந்த இரண்டு நிகழ்வுகளுமே திரைத்துறையைப்பற்றிய என் பாண்டித்துவத்தைப் பறைசாற்றும்.

    எப்படியோ போடப்போகும் பணம் 5 லட்சம் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் நான் கவலைப்படமாட்டேன் நீங்கள் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை என்று சொல்லிவிட்டார் நண்பர். நன்குபடித்துப் பட்டம் பெற்ற எழுத்தாற்ற்ல் மிக்க கணினிப் பயன்பாடு தெரிந்த தலைமை ஏற்கவும் தலைமையின்கீழ்ப் பணி செய்யவும் விழைவுள்ள ஆறுபேரை ஆசிரியக்குழுவாக அமைத்து இந்திய அளவில் தலை சிறந்த இயக்குனர் நடிகர்களை அழைத்துவந்து நேருக்குநேர் சந்திப்பு பேட்டி என்று பயிற்சி அளித்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் தலைமையில் மற்றவர்கள் குழுவாகப் பணி செய்து பத்திரிக்கையைக் கொண்டுவரும் அளவுக்குப் பயிற்சி அளித்துப் பத்திரிக்கையின் வெள்ளோட்டமாக மூன்று மாதங்கள் பத்திரிக்கையை முழுமையாக அச்சிட்டு தெரிந்தெடுத்த சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக் கேட்டு இறுதியில் ஐந்து நிமிட விளம்பரப்படம் ஒன்றை சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் உருவாக்கி அந்தப் பத்திரிக்கை வெளியானது.  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நாடுதிரும்பாமல் அமெரிக்காவில் உயிர் துறந்தார்.  அவருக்கென்று ஆரம்பித்த பத்திரிக்கை என்பதால் வேறு  யாரையும் ஆசிரியராகப் போடாமல் அந்தப் பத்திரிக்கை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்தது.
    அந்தப் பத்திரிக்கையின் ஆல் இன் அழகுராஜாவாக ஆல் ரவுண்டராக நான் இருந்த காலத்தில் ஒரு பெரிய அச்சுக்கூடத்தில் ஸ்டாப் தி பிரஸ் என்று அச்சிடுவதை நிறுத்தும் அதிகாரத்துடன் பவனிவந்து திரை உலகம் தொடர்பான ஒரு பெரிய தரவுத் தளத்தினை உருவாக்கி (திரை உலகக் கிசுகிசுவும் உள்ளடக்கம் ஆனால் வெளியிட்டதில்லை) புலனாய்வுக் கட்டுரை நம்பகமான் தகவல் என்று அது தரமான திரை உலகச் செய்திகளுடன் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடக்க அடித்தளம் அமைத்தேன். (http://www.vallamai.com/literature/articles/33187/)

    பேராசிரியர் நாகராஜனின் இந்த வாழ்க்கைப்படிப்புதான் எத்தனை சுவையாக இருக்கிறது.. ஆனாலும் இந்தப் பேராசிரியர் நகைச்சுவையோடு தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் வல்லவர். இந்த நகைச்சுவையுடனே அந்த அனுபவத்தில் உள்ள கஷ்டங்களையும் ஒருங்கே தெரிவிக்கிற அழகு ஒன்றே நம்மை அவர் பக்கம் ஈர்க்கிறது. இந்த வார வல்லமையாளராகவும் நம் வல்லமை குழு தேர்ந்தெடுப்பதில் பெருமை கொள்கிறது.

    பேராசிரியர் நாகராஜன் மென்மேலும் பல கட்டுரைகள் எழுதவேண்டும் என்று ஆர்வத்தோடு இந்த வல்லமையாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    கடைசி பாரா: இசைக்கவி இரமணன் அவர்கள் கவிதை ஒன்று இந்த வாரத்தில் ஃபேஸ்புக்’ இல் எழுதியது

    நட்டநடு வேவிதை பிளந்திடாமல்
    தளிரேதும் தரைமீது துளிர்ப்பதுண்டோ?
    நட்டநடு நிசியில்மனம் வெடித்திடாமல்
    நல்லதொரு கவிதைதான் பிறப்பதுண்டோ?
    கொட்டுகிறேன் புதுமுரசம்! கொடிபிடித்தேன்!
    குறுக்குத்துறை தனில்விழுந்து குலவும் மின்னல்
    நட்புடனே எனைத்தழுவி நின்றபோது
    நான்தீர்ந்தேன்

    Share
  • இந்தவார வல்லமையாளர்

    திவாகர்

    ’காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி’ என்றொரு நகைச்சுவை நிறைந்த ஆங்கிலத் திரைப்படம், நிறைய பேர் பார்த்தே இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆதிவாசிகளின் இல்லற வாழ்வையும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சுமுகமாகவும் கவலையில்லாத வாழ்வையும் காலம் காலமாக அனுபவித்து வருபவர்கள். அப்படிப்பட்டோரில் இனிய வாழ்க்கையில் வானில் பறந்த ஒரு குட்டி விமானி தான் காலி செய்த கோகோ கோலா பாட்டில் வீசப்பட்டு அது உடையாமல் இவர்களுக்குக் கிடைப்பதன் மூலம் இந்த எளிய மக்கள் வாழ்வில் கலவரத்தை உண்டு பண்ணுவதையும், தங்கள் சண்டைகளுக்கெல்லாம் காரணம் இந்த பாட்டில் எனும் பிசாசுதான் என்று அவர்கள் தலைவர் அந்த காலி பாட்டிலை தொலைவில் உள்ள கடலில் எறிந்து வர முடிவு செய்வதும், அவர் அப்படி காட்டில் செல்லும்போது இந்த நாகரீக மக்கள் மூலம் ஏற்படும் கூத்துகளும்தான் படம்.

    இந்தப் படம் பார்க்கிற (பகுதி 1,2) அத்தனை பேரும் அந்த காட்டுவாசிகள் வாழ்க்கையின் நேர்த்தியினைப் பார்த்து பொறாமைப் படுவார்கள். அத்தனை ஒற்றுமை. அதுவும் அந்தப் படத்தின் இரண்டாவது பகுதியில் (காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி -2) சிறு ஆதிவாசிக் குழந்தைகள் இருவர் ஒருவரை ஒருவர் ஒவ்வொருமுறையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும்போதும் சரி, முடிவில் பிரிந்த குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து தங்கள் பாசத்தைக் காட்டும் விதத்திலும் சரி, அந்தக் கணங்கள் நம் கண்களை நனைக்கும்.

    நாகரீகம் அடைந்து விட்டோம் என்று சொல்கிற நாம்தான் இன்னமும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டும், அடுத்தவர் பற்றி அக்கறை கொள்ளாமல் சுயநலமிக்கோராகவும் அன்பு, பண்பு,  பாசமிழந்து, நல்லுணர்ச்சிகள் ஒவ்வொன்றாக மறந்து கொண்டும் நம் நல் வாழ்க்கையை  வீணாக்கிக் கொள்கிறோம் என்றுதான் படுகிறது. நாம் தற்சமயம் வாழும் வாழ்க்கையால் யாருக்குதான் என்ன பயன் என்ற கேள்வியும் கேட்கத் தோன்றுகிறது.

    இந்தக் கேள்வி திரு சத்தியமணிக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்றுதான் படுகிறது. இல்லாவிட்டால் இத்தகைய கேள்விகளை அவர் எழுப்பியிருப்பாரா..

    பார்வை முன்னால் நடக்கும் கொடுமை
    பாராதிருப்பதில் பயன் என்ன ?
    சால்வை மூடிட வலம்வர கொடியோர்
    சாடாதிருப்பதில் பயன் என்ன?
    வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை
    வீழாதிருப்பதில் பயன் என்ன?
    போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை
    வாழ்க்கை நடத்திட பயன் என்ன?

    படிப்பை கொடுத்தோ சொத்தை சேர்த்தோ
    அடுத்த தலைமுறை வாழ்ந்திடவே
    சிறப்பை காட்டும் பெற்றோர் முயற்சி
    எடுத்த வழிமுறை வீணாமோ
    பாதி வஞ்சம் மீதி இலஞ்சம்
    வளர்ந்திட‌ சமைத்தார் தன்காலம் ?
    நீதி நேயம் நியாயம் தர்மம்
    அழித்திட கொடுத்தார் வருங்காலம் ??

    இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் கெட்ட வார்த்தையாக ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று காட்டுவாசிகளின் வாழ்க்கையைப் பயன் படுத்துகிறோம். ஆனால் என்ன பயன்.. நாம்தான் உண்மையில் பயனில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

    சிந்தனையைத் தூண்டும் நல்ல கேள்விகளைத் தொகுத்து எழுப்பிய திரு சத்தியமணியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வல்லமை குழுவினர் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடைசி பாரா: வருணன் எழுதிய பூக்களுதிர்காலம்

    உதிர்ந்து கருகிய பூக்களின் சாம்பலுக்கிடையே
    முட்டித் துளிர்த்தது
    நட்பெனும் ஒரு பூ
    வையம் பூக்களின் காடானது
    மீண்டும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    முருகனென்றாலே இனிமை என்றொரு பொருளுண்டு. முருகனைப் பற்றி நா பேசப் பேச நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும். அவன் திருப்புகழ் நமக்கு மாபெரும் திரவியம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆந்திராவில் முருகன் எப்போதிலிருந்து சரித்திரபூர்வமாக அறியப்படுகிறான் என்பதில் எனது ஆராய்ச்சிப் பணி சென்று கொண்டிருந்தது. இதுவும் முருகன் எனக்குக் கொடுத்த அருளென்றே பாவித்ததால் அவனைப் பற்றிய இனிமையான செய்திகள் பல கிடைத்துக் கொண்டே இருந்தன. அவன் கோயில் கொண்ட இடத்தைக் காணச் செல்லும்போதெல்லாம் இன்ப மயம்தான். அவனைக் கண்டாலோ அது ஒரு தனி சுகம். இதையெல்லாம் எழுத்தில் வர்ணிப்பதுதான் கஷ்டம்.

    அப்படிப்பட்ட முருகன் பற்றி திரு டி. சச்சிதானந்தன் அருமையாக அறுமுகநூறு எழுதி வருகிறார்.

    அடிமனக் கடலின் அமுதே போற்றி,

    அறுமுக நிலவின் ஒளியே போற்றி,

    அதிமது ரத்தின் சுவையே போற்றி,

    அருள்மனம் பொங்கி அருள்வாய் போற்றி!                                                                     6

     

    கவிமனம் கொண்ட கந்தா போற்றி,

    குவிமனம் என்றாய் குகனே போற்றி,

    செவியினில் மந்திரம் சொன்னாய் போற்றி,

    புவியினைக் காக்கும் புதல்வா போற்றி!   

    முருகனைப் போலவே அவனைப் பற்றிய போற்றிப் பாடலும் இனிக்கிறது. அந்த இனிமையைத் தந்து கொண்டிருக்கும் இனியவர் திரு சச்சிதானந்ததை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மிகுந்த மன மகிழ்ச்சி. முருகனைப் போற்றும் அவருக்கு முருகனின் இனிய அருள் என்றும் கிடைப்பதாக.

    கடைசி பாரா : திரு ரிஷி ரவீந்திரனின்  மழை.

    மீன்களும் மழைநீரினால் அடித்துச் செல்லப்படுவதுண்டு. சில மீன்கள் நீரின் மேற்பரப்பில் துள்ளித் துள்ளி நடனமாடித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும். எனக்கென்னவோ அந்த மீன்களும் என்னைப் போல் மழையினில் நனைய ஆசைப்படுவதாய்த்தான் நான் நினைப்பதுண்டு. அவைகள் அதிக உற்சாகமாய் நீரின் மேற்பரப்பில் துள்ளிக்கொண்டிருக்கும்.  நான் அப்பொழுதெல்லாம் அது மழையில் மகிழ்ச்சியாக நடனமாடுகின்றதோ என எண்ணிக்கொண்டாலும் அதன் மரணபயமும் என்னை பயமுறுத்தும். சில நேரங்களில் பாம்புகள் அவைகளை நீர்ப்பயணத்திலேயே விழுங்குவதும் எனக்குள் கிலியினை ஏற்படுத்தும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    மனிதர்களுக்கு இளமைப் பருவமும், இளமையில் காதலும், காமமும் மிக முக்கியமான கட்டங்களாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆண் பெண் இடையே காதலும் அதன் பின்னர் வரும் காமமும் மிகவும் அவசியமான ஒன்றாகவே நம் மூதாதையர் கருதி வந்திருக்கின்றனர். எத்தனையோ இலக்கியங்கள் இந்தக் காதலுக்கும் காமத்துக்கும் மிகவும் முக்கியமான இடத்தைக் கொடுத்தே வந்திருக்கின்றன.

    இலக்கியத்தில் காதல் சுவையை இனிக்க இனிக்க சொல்லும்போதும் எழுதும்போதும் தேனுண்ட வண்டு போல நாமும் மயங்குவது கூட இயல்புதான். ஆனாலும் காதல் என்பதில் அன்பு எனும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதும், இங்கே அன்பு எல்லையில்லாமல் பரந்து விரிந்து இருப்பதையும், அதே சமயத்தில் உடல் சம்பந்தப்பட்ட காமத்துக்கு எல்லை வகுக்கப்பட்டிருப்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

    இந்த முக்கியமான தெளிவைத்தான் திருக்குறளின் காமத்துப்பால் நமக்கு விளக்கி வருவதாக நினைக்கிறேன். இந்த திருவள்ளுவர் எல்லா வகை மக்களையும் மிக நன்றாக அறிந்தவர் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனால் குறட்பாக்களில் காமத்துப் பால் இனிமையின் உச்சகட்டம். அறிவுரையை விட ருசிக்க இனிப்பு கொடுப்பது என்பது எல்லோருக்கும் இஷ்டம்தானே.

    அப்படிப்பட்ட சுவையான காமத்துப்பால் பாடல்களை சிலவற்றை எடுத்துக்கொண்டு இந்த வார வல்லமையில் மேகலா இராமமூர்த்தி அவர்களின் ‘வள்ளுவர் வரைந்த காதற்கவிதை’ என்றதொரு அருமையான கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.

    ”நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?

    ”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி.” .

    தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள். இதனையே

    “யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.

    ”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு.”

    மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.

    இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க பல குறட்பாக்கள் குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள் எனலாம். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் திருவள்ளுவப் பெருந்தகை சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம். (மேலும் படித்து இன்புற  http://www.vallamai.com/literature/articles/32085/#comment-6111

    நல்லதொரு சுவையான வள்ளுவ விருந்தினைப் படைத்த மேகலா இராமமூர்த்தி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமையாளர் குழு தேர்ந்தெடுக்கிறது. அவருக்கு நம் இனிமையான வாழ்த்துகள்.

    கடைசி பாரா: அமைதிச் சாரல் சாந்தி அவர்களின் கவிதை. இந்த இலையுதிர்களில் மரத்தின் கீழே படுத்திருக்கும் நாயையும் அவர் விடவில்லை.

    பிளிறலுடன் நிலையத்தினுள்
    நுழைந்தது ரயில்
    மதம் பிடித்ததுவோ எனவஞ்சும்படி
    ஆர்ப்பரித்துக்கொண்டு.
    அரைகுறை உறக்கத்தில்
    ஒவ்வொரு இலையாயுதிர்த்துக்கொண்டிருந்த
    அரச மரமொன்று
    தடதடவென அகிலமெங்கும் கிடுகிடுத்ததில்
    சரசரவென வியர்த்துக் கொட்டியது
    இலைத்துளிகளை
    மடியில் உறங்கிக்கொண்டிருந்த
    நாய்க்குட்டியின் மேல்..
    அதிகபட்ச எதிர்ப்பாய்த்
    திரும்பிப்படுத்துறங்குதலைக் காட்டிய
    நாயிடம் கோபித்துக்கொண்டு
    வெளியேறிக்கொண்டிருந்தது ரயில்

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    கடலைப் பற்றிப் பேசும்போது, கப்பல், வாணிகம் என்பதுதான் மிகுதியாக நினைவுக்கு வந்தாலும் அந்தக் கடலை நம்பி வாழ்பவர்களில் பெரும்பான்மை சமூகம் மீனவர்கள்தான். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் ஏற்றுமதியில் முன்னணி வரிசையில் மீன் ஏற்றுமதியும் (அல்லது கடல் வாழ் பிராணிகள் என்று கொள்வோமாக) இருந்து வந்தது. இந்த கடல்வாழ் பிராணிகள் ஏற்றுமதியில் மிகுதியாக ஈடுபடுபவர்கள் தமிழர்கள் அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர்தான் அதிகம். ஏற்றுமதிகள் அதிகம் செல்வது ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்ப நாடுகள் என்பதினால் குளிர்சாதன வசதிகள் கொண்ட கண்டெய்னர்களில் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள் மூலமாக கப்பல்கள் எடுத்துச் செல்கின்றன.

    ஆனால் இந்த கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதியில் ஒரு முக்கியமான விவரத்தை கடல் வாழ் பிராணிகள் பற்றி ஆய்வு செய்து வரும் நண்பர் கலிங்கா பாலு இந்த வாரம் தன் கட்டுரையில் எழுதியுள்ளார். அதாவது   கடலில் மீன் பிடித்து வாழும் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கேரளாவில் விற்பதைப் பற்றி குறிப்புத் தெரிவித்திருக்கிறார்.  கொச்சியில்தான் இந்திய அரசாங்கம் கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதி உதவி மையத்தை தலைமையகமாக அமைத்திருக்கிறது. ஏறத்தாழ பத்தாயிரம் கோடிக்கு மேல் இந்திய அரசாங்கத்துக்கு இந்த ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் வருமானம் வருகிறது என்ற உபரித் தகவலுடன் பாலு என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் படியுங்கள்.

    ”இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரையை ( 1076 கி.மீ. )கொண்ட தமிழகம் , பாக் வளைகுடாவில் நமக்கு ஏற்படும் சிக்கல்கள் இலங்கையால், ஆறுகளை மணல் எடுத்து குப்பைகள் போட்டு மிகவும் அருமையான் கடலை மாநகரக் கழிவுகள அணு உலை கழிவுகள், தொற்சாலைகள் கழிவுகள் என்று குப்பை தொட்டி போல் வைத்து இருந்தாலும் மற்றும் பல் வேறு சிக்கல்கள் இருந்தாலும் எல்லா வளமும் நிறைந்த தமிழக கடலில் ,கடற்கரையில் வாழும் மீனவர்களின் நிலைமை அவர்கள் கொண்டு வரும் மீன்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கேரளா கொண்டு செல்லப்பட்டு 590 கி.மீ. நீளமே கொண்ட கேரளா இன்று இந்தியாவின் மிக முக்கியமான மீன் வளத் துறையாக விளங்குகிறது காரணம் கடற்கரை காயல்கள் ,ஆறுகள் கடலை ஒட்டி உள்ள ஏரிகள் போன்றவற்றிக்கு அவர்கள கொடுக்கும் முன் உரிமையும் தமிழகத்தின் கடற்கரைகளில் வரும் மீன்களை கேரளா மீன் ஏற்றுமதியாளர்கள் வாங்கித் தந்து மதிப்பை கூட்டுவதும் கேரளா மக்களின் வணிக மேலாண்மையைக் காட்டுகிறது
     
    கடலியல் தொன்மை மேலாண்மை தொடர்பாக தேடலில் இருக்கும் எனக்கு நமது கடலில் பிடிக்கும் மீன்களை நாமே வெளிநாட்டிற்கு மதிப்பு கூட்டி விற்க வேண்டும் ,கடல் சூழலியலுக்கு எந்த பாதிப்பும் கொடுக்காமல் அதன் மதிப்பை நம் மாநிலத்திற்கு கொண்டு வந்து நம் மீனவர்களின் வாழ்வியலை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக உண்டு அதற்காக சில முயற்சிகள் எடுத்து வருகிறேன் கடலியல் உயிரினங்களை உலக வணிகத்திற்காக கொல்லக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து , அந்த அந்த கடற்கரை மக்களின் உணவுத் தேவைக்காக மீன்கள் கொல்லபட்டால் கடற்கரை வளம் வற்றாது உலகமயமாக்கலின் கொடுமை புவியில் மனிதனுக்கு இருக்கக் கூடிய அத்தனை உரிமைகளைக் கொண்ட மீன்களும் மனிதனின் தேவைக்குத் தந்து உயிர்களை இழக்கின்றது”

    பாலுவின் கருத்துகள் உயர்ந்த கருத்துகள். உலகமயமாக்கலின் கொடுமை எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நிற்பது அவர் கவலைகளை அதிகமாக்கி இருக்கிறது தெரிகிறது. கடல் சூழ் உலகம் இது. கடலிலிருந்துதான் உலகம் வந்தது. உலகத்தில் உள்ள அனைத்தும் கடலுக்குத்தான் சொந்தம். பஞ்ச பூதங்களும் கடலுக்குத்தான் சொந்தம். அப்படிப்பட்ட கடல் வளங்களைக் காக்க வேண்டாமா என்று கேட்கும் நண்பர் திரு கலிங்கா பாலுவை இந்த வாரத்து வல்லமையாளராக வல்லமைக்குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். பாலுவின் பணிகள் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

    கடைசி பாராவில் இடம் பெறுவது லாஸ் ஏஞ்செல்ஸ் ஸ்வாமிநாதன் அவர்களின் மூக்குப் பொடி ஸ்லோகம்தான்.
    ( ”மூக்குப்பொடிக்கும்  ஸ்லோகம் இருக்கு, தெரியுமா?)

    ” பஸ்ம ரூபிணி பரிமள கந்தினி  மனோரஞ்சினி  ஜலதோஷ நாசினி
      நித்ய சுககாரிணி நமஸ்தே நமஸ்தே நாசிகாசூரணி “

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    விசாகப்பட்டினத்தில் வாழும் பழமையான தமிழர் திரு ராஜேஸ்வரன் இந்த நகரத்து மக்களுக்காக நகரின் மையத்தில் அழகான கோயில் ஒன்று விநாயகருக்கு எடுத்துச் சிறப்பித்தவர், அந்தக் கோயிலுக்கு தமிழிலும் சம்பத் விநாயகர் என்று பெயரிட்டதுடன் தமிழர்களாலேயே பூசனை செய்யும் விதானத்தையும் கொண்டு வந்தவர். கேட்டவர்களுக்கெல்லாம் கேட்பவற்றை அள்ளித் தரும் இந்த சம்பத் விநாயகருக்கு வரும்படி அதிகம். இதை அரசாங்கம் கவனித்து விட்டது. விடுமா இப்படி பணம் பெறும் இயந்திரத்தை.. அப்படியே தத்து எடுத்துக் கொண்டார்கள். ஆனால் நமது தலைவர் இந்தத் தத்துக்கு முன்பே நகரத்தை அடுத்த கிராமப்புறத்தில் விநாயகர் டிரஸ்டில் சில ஏகராக்கள் நிலத்தை வாங்கிப் போட்டார். அங்கே சிறு விநாயகர் கோயில் ஒன்றையும் அந்த விசாலமான பகுதியில் எடுப்பித்தவர் மீதி உள்ள இடங்களில் எல்லாம் முதியோர் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளையும் கொண்டவைகளாக நிர்மாணித்தார்.

    முதியோர் விடுதி என்று பேச்சுக்கே தவிர அங்கே இந்த இருப்பிடங்களைக் கவனித்தால் ஏதோ ஒரு கார்பொரேட் கஸ்ட் ஹவுஸ் சூழ்நிலையைத் தான் உணர்த்தும். இத்தனைக்கும் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாகவும் இருப்பதால் நகரத்துக்கே உரிய பரபரப்பும், பொல்லூஷனும் அறவே அங்கே கிடையாது. வசதிகள் உள்ள அந்த விடுதிகள், வயோதிகர்களின் கடைக் காலங்களில் நிச்சயமாக ஒரு நிம்மதியை ஏற்படுத்தித் தந்து விடும். சிறிது காலம் தங்கினால் அங்கிருந்து வெளியே வர யாருக்குமே மனம் வராது.

    இதைப் பற்றி ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் எடுத்துச் சொன்னேன்.. ஏன் இந்த அழகான விடுதிகளை முதியோர் விடுதி என்கிறீர்கள். முதியோர் விடுதி என்றாலே ஏறத்தாழ அநாதை விடுதிகள் போலத்தானே என்றேன்.. அதற்கு அவர் அப்படி இல்லை.. இதை வயோதிகர் உல்லாச உலகம் என்று பொருள்படும் விதத்தில் ரிசார்ட் என அழைக்கிறோம், இங்கே அவர்கள் உல்லாசமாக உற்சாகமாக இருக்கும் விதத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்றார். பேருக்கு வாடகை என்றாலும் மிக மிகக் குறைந்த விலையில்தான் ஏழை எளியவர்களுக்காகத்தான். அவர்கள் எல்லா வசதிகளையும் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் ஆழ் மனதில் கொண்டு  நிர்மாணித்தோம், என்கிறார் இவர். எனக்கு இவரைப் போன்றவர்கள் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது இந்த நாட்டுக்குத் தேவை எனத்தான் பட்டது.

    சமீபத்தில் (இந்த வார வல்லமையில்) திரு கோபி சரபோஜி எழுதிய  ‘விதையின் குணம்’ என்ற ஒரு கவிதை படித்தேன்.

    பெற்றோர்களே….
    வயது போனதற்காய்
    நீங்கள்
    உதிரமும்,உணவும் தந்து
    கை தூக்கி விட்ட பிள்ளைகள்
    உங்களை
    கை விட்டு விட்டதை எண்ணி
    வருந்தாதீர்கள்.

    நீங்கள் – விருட்சம்
    அவர்கள் – விதை.

    விழுந்து எழுவது தானே
    விதையின் குணம்.

    விட்டு விடுங்கள்
    எழும்போதாவது
    வீரியமாய் எழட்டும்.

    கை விட்ட நிலையில் முதியவர்கள் வருத்தத்தைத் துடைக்கும் ஒரு கவிதை. எனக்கு ஏனோ இந்தக் கவிதை திரு ராஜேஸ்வரனின் ‘ரிஸார்ட்’ விஷயத்தை ஞாபகப்படுத்தியது. விருட்சமான முதியவர்கள் இனி வரும் கால கட்டத்தில் சற்று புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டால்தான் உண்டு. விதைகளான உதிர்த்தபின் தனக்குப் பாந்தமான முறையில் கிடைக்கும் இடங்களில் இடம் பெயரத்தான் வேண்டும் எனவும் போன்றியது. கிடைக்கும் இடம் நல்ல விதமாக, ’ரிஸார்ட்டாக’ அமைந்தால் விருட்சத்துக்கு  மகிழ்ச்சிதானே. இன்று விதையாகக் காணப்படும் பிள்ளைகள் நாளைய விருட்சங்கள் அல்லவா.. அவர்களுக்கும் இது ஒரு பாடம் மட்டுமல்ல.. எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக ஆக்கிக் கொள்ள வழியாகவும் இருக்கும்.

    யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா.. இப்படி யோசிக்க வைத்த திரு கோபி சரபோஜி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்த்டுக்கிறது. அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாராவில் இந்த வாரம் முழுவதும் என் நினைவில் நிற்பது தூத்துக்குடி துரைதான். முகத்தில் ஆசிட் வீசப்பட்டு கொடுமைக்கு ஆளான அந்த இனிய இளம்பூவான வினோதினிக்கு ஆறுதலாக முன்வந்து உதவித்தொகை சேகரித்துக் கொடுத்ததும், அவரை ஊக்கப்படுத்த முயற்சிகள் எடுத்து வருவதும் சாதாரண செயல் அல்ல.பெரிய மனசு கொண்ட துரை வாழ்க!

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    ஒரு நாணயமான உயரதிகாரி ஒருவரின் கதையைச் சொல்கிறேன். இளைஞர், ஐஏஎஸ் தேர்வுக்காகத் தன்னை நான்கு முறை ஈடுபடுத்தி ஒவ்வொரு முறையும் புள்ளிக்கணக்கில் பெரிய தேர்வை கோட்டை விட்டவர். கடைசியில் ஐபிஎஸ் கிடைத்தது. இங்கும் அவருக்கு ஒரு தடை. உயரம் ஒரு சில மில்லி மீட்டர்கள் குறைவானது என்பது. ஆனாலும் தேர்வு உயரதிகாரிகள், இவர் திறமையைக் கண்டு அதிசயமாக பாவித்து இந்த சிறு குறையை கண்டுகொள்ளாமல் விடலாம் என்று யோசனை சொன்னார்கள். ஆனால் நம்மாள் ரோஷம் மிக்கவர்.. இப்போது கண்டுகொள்ளாமல் போனாலும் பின்னாளில் இதுவே தன் வேலைக்கு உலை வைக்கும் தீயாக மாறலாம் என்று மறுத்துவிட்டார்.

    பிறகு இவருக்கு ரெவின்யூ’வில் கிடைத்தது. ஒப்புக் கொண்டார். இவர் சாமர்த்தியம் எக்ஸைஸ் வரி விதிப்பிலும், அதன் வசூலிலும் தெரிந்தது. சரியான நேர்மையாக விதிப்படி யார் யார் எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படியே நேர்மையாகவே வசூல் செய்யுங்கள் என்றார். இங்குதான் வந்தது மிகப் பெரிய சவால். ஏற்கனவே குறைந்த அளவில் உற்பத்தியைக் காண்பித்து குறைந்த அளவில் வரி செலுத்தியவர்கள் உண்மையான முறையில் வரி செலுத்தவேண்டும் என்றால் இத்தனை நாள் வரை ஏமாற்றியதும், இந்த ஏமாற்றலுக்கு உதவிய அதிகாரிகளின் ஏமாற்றுதலும் தெரிய வந்தது. ஆனாலும் சளைக்கவில்லை இவர். இப்போதிலிருந்து வசூலை ஒழுங்காக நடத்துங்கள் என்றார். ஏனைய அதிகாரிகளுக்கும் ஒரு வகையில் சந்தோஷம்.. ஒரே வருடத்தில் வசூல் அதிகமானது. அதே சமயம் ஒரே வருடத்தில் அதிகாரிகள் பலர் தங்கள்மேல் வருவாயை  அதிகபட்சமாக இழந்ததால் வெறுப்புற்று இதற்கெல்லாம் காரணமான இவரிடம் தன் மனதை மாற்றிக்கொள்ளுமாறும் பழையபடியே விட்டுக்கொடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தினர். அத்துடன் தங்கள் வசூலில் இவருக்குப் பாதியை ‘சமர்ப்பிப்பதாகவும்’ ஆசை காட்டினர். ஆனால் இவர் மசியவில்லை.. தனக்கே ஆசை காட்டியவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை வேறு பயனில்லாத பகுதிக்கு மாற்றினார்.. அவ்வளவுதான் வந்தது மோசம். ஏனைய அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து இவருக்கே வேட்டு வைத்தனர். என்ன செய்தனரோ, ஏது செய்தனரோ, இரண்டே நாளில் இவருக்கு பதவி மாற்றம்.

    கலங்கவில்லை.. அடுத்து சென்ற வேலையிலும் இதே தொடர்ந்தது. மறுபடியும் வேலை மாற்றல், இடம் மாற்றல். அங்கேயும் இவர் நேர்மையைப் பழகினார். ஆளில்லாத காட்டில் வசூலே இல்லாத இடத்தில் ‘ஆடிட்’ எனும் பெயரில் அதே பதவியில் இடமாற்றம். கவலைப்படவில்லை. நான் நேர்மையாக இருக்கும் வரை எனக்கு என் நெஞ்சில் பயமில்லை. என் நெஞ்சில் பயமில்லை எனும்போது என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிகிறது’ என்றுதான் ஒவ்வொரு மாற்றத்திலும் இவர் எழுதிக்கொடுப்பது.. இப்போதும் எங்கேயோ ஒரு மூலையில் இருக்கிறார். நேர்மை அவருக்குத் துணையாக இருக்கிறது. நெஞ்சில் பயமில்லை. நிம்மதியாகவே இருக்கிறார்.

    இங்கே இவரைப் பற்றி எழுதுவதற்குக் காரணம் நான் சமீபத்தில் வல்லமையில் மாதவன் இளங்கோ எழுதிய ‘என் இனிய சக இந்தியனே’ என்ற நீண்ட கவிதைதான்.

    மேடைபோட்டு முன்னோர் புகழ்பாடிக் காலங்கடத்தினாய்

    வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொண்டேன்!

    ஐரோப்பியரைப் பாரேன்றேன்!

    ஐயா! தாய்மொழியைக் கொண்டே தழைப்போமென்றேன்

    ஆங்கிலத்தில் அசிங்கமாய் வசவுகள் வீசினாய்

    அமைதியாய் குமுறினேன்!

    சினிமா பின்னால் ஒருகூட்டம்

    கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்

    அரசியல் பின்னால் தெருக்கூட்டம்

    இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்!

    இலக்கியம் பல படைத்த இந்தியன் எங்கே!

    அறிவியல், சிற்பம், வானவியல், கணிதம் என

    அனைத்தும் கண்ட அவன் எங்கே?

    அன்பு, பண்பு, அறம், மறம் –

    இவையெல்லாம்தான் எங்கே?

    எதுவும் இன்றி எல்லாம் கண்டவன் –

    எல்லாமிருந்தும் செய்யாதிருக்கும்

    நிலை ஏனோ?

    வந்தான் பாரதி மீசை முறுக்கியபடி,

    தொடர்ந்தான் முண்டாசை கழற்றி உதறியபடி,

    “‘நெஞ்சு பொறுக்குதிலையே

    இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்!’

    அன்றே பகர்ந்தேன் புரியலையோ?

    அறிவில்லையோ?

    நெஞ்சில் உரமுமில்லையடா,

    நேர்மை சிறிதுமில்லையடா,

    வஞ்சனை சொல்வாரடா,

    வாய்ச்சொல்லில் வீரரடா!

    நீ புறப்படடா!

    உலகெலாம் நம் புகழ் பரப்படா!

    நிலையாய், நீர்நிலையாய்,

    குளமாய் நீ இராதேடா!

    துர்நாற்றம் வீசுமடா!

    ஓடும் ஓடையாய் மாறடா!

    ஓடடா! ஓடடா! ஓடடா!!”

    வந்தோம் ஓடி வெளிநாடு!

    வாவென்றது வளநாடு!

    கடுமையாய் உழைத்தோம் திறமோடு!

    மேலை நாட்டவர் பார்த்தனர் மதிப்போடு!

    நிமிர்ந்தோம் இந்தியர் இறுமாப்போடு!

    என்று மாறும் எம் திருநாடு?

    வாழ்கிறோம் இன்று ஏக்கமோடு!

    எம்மைப்போல் ஏங்குபவர்

    எத்தனை பேர்?

    எத்தனையோ பேர்!

    நான் மேலே குறிப்பிட்ட நண்பரைப் போல எத்தனையோ பேர் எங்கெங்கோ இன்னமும் எந்தந்த நிலையிலோ இந்த பாரதத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களை யாரும் விலைக்கு வாங்கிட முடியாது. அவர்களுக்கும் ஏக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் நம்பிக்கை என்ற ஒன்றுதான் இந்த உலகத்தையே ஆட்டுவிக்கிறது. அந்த நம்பிக்கை இவர்களையும் ஒருநாள் வாழவைக்கும் என்றுதான் நம்ப விரும்புகிறேன்.

    இந்தவாரம் ஒரு சிந்தனைக்குரிய கவிதையைப் படைத்த மாதவன் இளங்கோ அவர்களை இந்தவார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்தெடுக்கிறது. திரு மாதவன் இளங்கோ அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு இன்னம்பூரான் அவர்கள் ‘குசலம்’ விசாரித்து எழுதியதில் ஒரு பகுதி

    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்
    கண்ணில் நல்லஃது   உறும் கமுமல வள நகர்ப்
    பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

    “இவ்வுலகின்கண் நல்ல முறையில் தினமும் வாழலாம்; சிந்தித்துப்பார்த்தால் அடுத்த உலகில் பெறவேண்டிய நல்ல கதிக்கும் யாதொரு விதமான குறையும் ஏற்படாது; கண்ணுக்கினிய நல்ல வளத்தோடு கூடிய கழுமலம் என்னும் சீர்காழிப்பதியின்கண் பெண்ணின் நல்லவளாகிய இறைவியுடன் பெருந்தகையாகிய சிவபிரான் நலமாக இருக்கிறான் அல்லவா”

    Share