திவாகர்
முருகனென்றாலே இனிமை என்றொரு பொருளுண்டு. முருகனைப் பற்றி நா பேசப் பேச நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும். அவன் திருப்புகழ் நமக்கு மாபெரும் திரவியம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆந்திராவில் முருகன் எப்போதிலிருந்து சரித்திரபூர்வமாக அறியப்படுகிறான் என்பதில் எனது ஆராய்ச்சிப் பணி சென்று கொண்டிருந்தது. இதுவும் முருகன் எனக்குக் கொடுத்த அருளென்றே பாவித்ததால் அவனைப் பற்றிய இனிமையான செய்திகள் பல கிடைத்துக் கொண்டே இருந்தன. அவன் கோயில் கொண்ட இடத்தைக் காணச் செல்லும்போதெல்லாம் இன்ப மயம்தான். அவனைக் கண்டாலோ அது ஒரு தனி சுகம். இதையெல்லாம் எழுத்தில் வர்ணிப்பதுதான் கஷ்டம்.
அப்படிப்பட்ட முருகன் பற்றி திரு டி. சச்சிதானந்தன் அருமையாக அறுமுகநூறு எழுதி வருகிறார்.
அடிமனக் கடலின் அமுதே போற்றி,
அறுமுக நிலவின் ஒளியே போற்றி,
அதிமது ரத்தின் சுவையே போற்றி,
அருள்மனம் பொங்கி அருள்வாய் போற்றி! 6
கவிமனம் கொண்ட கந்தா போற்றி,
குவிமனம் என்றாய் குகனே போற்றி,
செவியினில் மந்திரம் சொன்னாய் போற்றி,
புவியினைக் காக்கும் புதல்வா போற்றி!
முருகனைப் போலவே அவனைப் பற்றிய போற்றிப் பாடலும் இனிக்கிறது. அந்த இனிமையைத் தந்து கொண்டிருக்கும் இனியவர் திரு சச்சிதானந்ததை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மிகுந்த மன மகிழ்ச்சி. முருகனைப் போற்றும் அவருக்கு முருகனின் இனிய அருள் என்றும் கிடைப்பதாக.
கடைசி பாரா : திரு ரிஷி ரவீந்திரனின் மழை.
மீன்களும் மழைநீரினால் அடித்துச் செல்லப்படுவதுண்டு. சில மீன்கள் நீரின் மேற்பரப்பில் துள்ளித் துள்ளி நடனமாடித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும். எனக்கென்னவோ அந்த மீன்களும் என்னைப் போல் மழையினில் நனைய ஆசைப்படுவதாய்த்தான் நான் நினைப்பதுண்டு. அவைகள் அதிக உற்சாகமாய் நீரின் மேற்பரப்பில் துள்ளிக்கொண்டிருக்கும். நான் அப்பொழுதெல்லாம் அது மழையில் மகிழ்ச்சியாக நடனமாடுகின்றதோ என எண்ணிக்கொண்டாலும் அதன் மரணபயமும் என்னை பயமுறுத்தும். சில நேரங்களில் பாம்புகள் அவைகளை நீர்ப்பயணத்திலேயே விழுங்குவதும் எனக்குள் கிலியினை ஏற்படுத்தும்.

Leave a Reply