தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 7

2

திவாகர்

தேவன் ஒரு சகாப்தம் – 6

”ஏ பைத்தியக்கார மனிதனே1 நீ பிறரைப் பற்றி எவ்வளவு  தவறாக நினைக்கிறாய்? நீ ஒருவன்தான் கவலையுள்ளவன் போலவும்,பொறுப்பு உள்ளவன் போலவும் எண்ணி, பிறர் நிச்சிந்தையாக இருப்பதாக முடிவு செய்கிறாய்.! என்ன ஏமாற்றம் அது.! சிலசமயம் நான்ஒருவனே மேதாவி என்று இறுமாப்புக் கொள்கிறாய்! என்ன முட்டாள்தனம். ஒரு சமயம் நம் சகதியே சக்தி என்று மெச்சிக் கொள்கிறாய்! என்ன அசட்டுத் தனம்’ ”

மிஸ்டர் வேதாந்தம் நடந்துகொண்டேயிருக்கும்போது இப்படித்தான் மனிதர்களைப் பற்றி வேதாந்தமாகப் பேசுவதாக தேவன் எழுதி வைப்பார். ’மிஸ்டர் வேதாந்தம்’ புத்தகத்தைப் படித்தவர்களைக் கேட்டால் இப்படி ஒரு அருமையான கதாபாத்திரத்தைத் தேவன் ஒருவரால்தான் படைத்திருக்கமுடியும் என்பார்கள். ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லாமல் எளிமையான வாழ்க்கைத் தத்துவத்தை மிஸ்டர் வேதாந்தம் என்கிற பாத்திரத்தின் மூலமாக தேவன் தந்திருப்பதே இதற்கு காரணம். வாழ்க்கையில் சுகமும் துக்கமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை முதலிலிருந்து கடைசி வரை வேதாந்தம் மூலம் நாம் பார்க்கலாம்.

சுகஜீவியாக கல்லூரி படிப்பு வரை வாழ்ந்தவன் வேதாந்தம். இவனைப் பற்றிய ஆரம்பகாலக் கட்டங்களை தேவனின் எழுத்துகள் மூலமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி தேசிகாச்சாரி எனபவர் ஏழைகளான பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தாலும்கூட,அவரது வலது உள்ளங்கையின் மத்திய பாகத்தில் செங்குத்தாக ஒரு நீண்ட கோடு ஓடியது. ரேகை சாஸ்திரப் புத்தகங்களில் இது தனப்ராப்தியைக் குறிப்பதாகும் என்று போட்டிருக்கும்.அதையொட்டித்தானோ என்னவோ, அதே ஊரில் மிராசுதாராக இருந்த சக்கரபாணி அய்யங்காருக்குப் புத்திர சந்தானம் ஏறபடவில்லை. தேசிகாச்சாரியின் களை மிகுந்த முகமும் அவரை வசீகரித்தது.. இரண்டாம் பேரைக்கலந்து கொள்ளாமலே அந்தப்பிள்ளையை ஸ்வீகாரம் செயதுகொண்டு விட்டார்.

நமது கதாநாயகனாகிய வேதாந்தத்தின் சாக்ஷாத் தகப்பனார்தான் இந்தத் தேசிகாச்சாரியார். தூத்துக்குடி கிராமத்தில் மாடிவீட்டில் உடகார்ந்துகொண்டு தம் ஏக புதல்வனாகிய வேதாந்தத்தை மாயவரம் ஹைஸ்கூலுக்கு அனுப்பி வைத்தார்.

தேசிகாச்சாரி படித்தவர் இல்லை.தாமாகச் சம்பாதித்தவரும் இல்லை.’’ பூர்வ ஜன்ம க்ருதம்’’ என்று சொலவார்களே, அந்த நியாயத்தின்படி அவரிடம் தனம் வந்து சேர்ந்தது. அதைத் தன் பிள்ளைக்கு தாராளமாகச் செலவழித்தார்.

பையன் பள்ளிக்கூடம் போகிறான் என்றால் , அது சாமான்யமான விஷயமாக கருதப்படவில்லை. மாயவரத்தில் தேசிகாச்சாரியின் பிள்ளையைத் தெரியாதபேர் கிடையாது. அவன் ஹோட்டலில் ஹல்வா தின்றால், அவன்கூட இருபது சகாக்களாவது ஹல்வா தின்பார்கள். பிள்ளையாண்டானுக்கு வெற்றிலைபாக்கு ஒரு ரூபாயக்குக் குறைந்து வாங்கத் தெரியாது.வாங்கினால், அதை ஒரேநொடியில் மாயமாக மென்று துப்ப நணபர்கள் காத்திருந்தார்கள். மாயவரத்தில் புதிதாக நாடகம், சர்க்கஸ், கண்காட்சி என்று எது வந்தாலும் வேதாந்தம் முதல்வரிசையில் இருந்து கொண்டு ஒரு டஜன் பரிவாரங்களுடன் பார்ப்பான்.

வேதாந்தத்தின் தகப்பனார் தேசிகாச்சாரி,பிள்ளை சம்பந்தப்பட்ட வரையில் கடுமையான பேர்வழியே இல்லை.அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்.

ஒருசில ஆப்தர்கள் தேசிகாச்சாரியிடம் , வேதாந்தம் இப்படி இருக்கிறானே, கவனியேன்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘இருக்கட்டுமே..நம்ம பையன்தானே, அவன் பாஸ் செயது முன்னுக்கு வந்து தங்கமும் வெள்ளியுமாக வேண்டியது சம்பாதித்துக் கொள்கிறான்!’’ என்று பதில் சொல்லி அனுப்புவார். அவர் எங்கிருந்து வாரி வீசுகிறார், அவர் வரும்படி என்ன என்பது ஒரு பெரிய மர்மம் .வேதாந்தம் அதைப்பற்றிக் கேட்டதும் இல்லை. மனத்தை வருத்திக் கொண்டதும் இல்லை.

டென்னிஸ் மட்டைகளில் நாலு வைத்திருந்தான். உயர்ந்த துணிகளில் தயாரிக்கப்பட்ட உடுப்புகள் மூன்று பெட்டிகள் இருந்தன. புரொபஸர் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்ல வேண்டியதுதான்.மறுநாள், என்ன விலையானாலும் லடசியம் செய்யாமல் வாங்கிவிடுவான்..

இப்படிப்பட்ட பணக்கார வேதாந்தந்துக்கு விதி ரூபமாக வாழ்க்கை தடம் புரண்டது. அப்பா இஷ்டத்துக்கு வகை வழி இல்லாமல் செல்வத்தைச் செலவு செய்ததும் அல்லாமல் கடனும் நிறைய வாங்க ஆரம்பித்து செல்வந்தனாகவே மறைவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செத்துப்போனதும்தான் வேதாந்தத்துக்குத் தன் உண்மை நிலை புரிய ஆரம்பித்தது. பணம் இருக்கும் வரை, இனிப்பைச் சுற்றி பறக்கும் ஈக்கள் போல இருந்த உற்றார் உறவினர் கல்லூரிப் படிப்பின் கடைசி கால கட்டத்தில் அவனை விட்டு நீங்கியதோடு மட்டுமல்லாமல் மீதி இருந்த செல்வத்தையும் சூறையாடினர். அவனின் அந்தக் கஷ்டகாலத்தில் காப்பாற்றியது அவன் அத்தையும் அத்தை பெண்ணான செல்லமும் தான். அவர்கள் ஏழைதானென்றாலும் வேதாந்தத்தின் செல்லக் காதலியாக வளர்ந்தவள் செல்லம்.

இனி அவன் பரிட்சையில் பெயில் ஆகி, சென்னை மாநகரம் வந்து அவதிப்பட்டு எழுத்துலகத்தில் போராடி தோல்வியுற்று பிறகு மெல்ல மெல்ல எப்படி வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை எட்டிப் பார்க்கிறான் என்பதுதான் கதை.

தேவன் இந்தக் கதையில் சொந்த அனுபவங்களை ஆங்காங்கே தூவினாரோ என்னவோ, பத்திரிக்கையுலகையும், எழுத்தாளர்கள் நிலையையும் துல்லியமாக வெளிப்படுத்துவார் தன் கதையில். வேதாந்தத்துக்கு உதவி புரியும் ஸ்வாமியும் சிங்கமும், அதே போல அவனுக்கு எதிரியாக அவனை வதம் செய்யும் வைரம் போன்ற பாத்திரங்களும் இன்னமும் இந்தக் கால கட்டத்திலும் எங்காவது இருந்துகொண்டே இருக்கின்றனர் என்றுதான் நினைக்கத் தோன்றும். கள்ளமும், சூதும், கபடமும் நிறைந்த வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலுமே அதன் பிரதிபாவம் இருக்கின்றதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதுகையில், தேவனின் கதாபாத்திரங்கள் உருவாகியவுடன் அனுபவங்களின் ஊடே படிப்படியாக மெருகு பெற்று நேர்த்தியான முறையில் நம் உள்ளத்தில் பதிகிறார்கள், அப்படிப்பட்ட வகையில் வேதாந்தத்தின் பாத்திரப்படைப்பு என்பது தேவனின் ‘மாஸ்டர்பீஸ்’ என்பார். இது உண்மைதானே. செல்வம் மறைந்தாலும் நற்குணம் மறையக் கூடாது. ஏழ்மை சூழ்ந்தாலும் சோம்பல் கூடாது, என்பதோடு முயற்சிகள் முதலில் ஏமாற்றத்தைத் தந்தாலும் வெற்றியின் படிக்கட்டை நம்மால் அடையமுடியும் என்ற நம்பிக்கை எப்போதும் வேண்டும் என்பதே வேதாந்தம் நமக்குத் தரும் பாடம்.

தேவன் இந்தக் கதையில் இன்னொன்றையும் வாசகருக்குத் தெரிவிப்பார். வேதாந்தந்துக்கு யார் யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ, யார் யாரெல்லாம் தீங்கிழைத்தார்களோ அவர்கள் எல்லோருமே வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் ஏதாவது ஒருவிதத்தில் கஷ்டப்பட்டு யாருக்கு தீங்கிழைத்தாரோ அந்த வேதாந்தத்திடமே உதவி கேட்டு வருவது. இது நிச்சயமாக ஒரு எழுத்தாளரின் சமூகப் பணியாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். தீங்கிழைத்தவனாகட்டும், மோசம் செய்தவனாகட்டும் வருந்தியோ, தண்டனைப்பட்டோ ஆகவேண்டும் என்பதை சமூகத்துக்கு தெளியவைப்பதும் வாழ்க்கையில் அது ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதை வாசகர் மனதில் பதிப்பதும் சீரிய சமூகச் சேவைதானே.

வேதாந்தத்தை போலத்தான் ஸ்ரீமான் சுதர்சனம் பாத்திரமும் நம் மனதில் பலமாக நிற்கக்கூடியதுதான். நிதர்சனங்களையும், தன்னை அழுத்தும் கட்டாயச் செலவினங்களையும் தாங்கமுடியாமல் ஒரு ஏழை குமாஸ்தா, அதுவும் தனியார் கம்பெனியில் பணிபுரியும் ஒரு சம்சாரி, நல்லவன், ஒவ்வொரு கட்டத்தில் திசை மாறுவதும், ஆனாலும் தகுந்த சமயத்தில் உண்மை உணர்ந்து திருந்துவதோடு மட்டுமல்லாமல் தான் செய்த குற்றங்களையும் தயக்கமில்லாமல் தன் முதலாளியிடமும் கடைசியில் தன் மனைவியிடமும் ஒப்புக் கொண்டு வருந்துவதும் ஒரு யதார்த்தமான முறையில் தேவன் நமக்குக் காண்பித்திருப்பார். சுதர்ஸனமும் அவன் மனைவி கோமளமும் தங்கள் தாய் தந்தையர்களை பட்டணத்துக்கு வரவழைத்து அவர்கள் மருத்துவத்துக்கு ஏற்பாடு செய்கையில் அவர்கள் படும் துன்பம், வலி எல்லாமே நகைச்சுவை போர்வையில் கொடுக்கப்பட்டிருந்ததால் சிரித்துக் கொண்டே வாசகனும் அவர்கள் வலியை உணரும் வாய்ப்பை அளிப்பார் தேவன்.

அதே சமயத்தில் தேவன் வாழ்ந்த கால கட்டத்தில் இருந்த சமுதாயத்தில் முழுச் சூழலையும் இங்கே தெரிவித்திருப்பார். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலகட்டங்கள் மிக மிக ஏழ்மையானவை. பிரிட்டிஷ் அரசு அப்படித்தான் நம்மை விட்டுச் சென்றது என்பதுதான் உண்மை. சமூகம் நலிந்து கிடந்ததென்றால் அந்த சமூகத்தில் இருக்கும் மக்களின் சுயநலங்கள், பகை, மோசம் செய்தல், ஒருவனை ஒருவர் காட்டிக்கொடுத்து வாழுதல் போன்ற நீச குணங்கள் சமூகத்தில் ஏராளமாகவே வேரூன்றிக் கிடந்தாலும், நல்லவர் என நால்வர் இருப்பதால் மட்டுமே இந்த சமூகம் வாழ்கின்றது என்ற எளிமையான தத்துவங்களையும் தேவன் கதை மூலம் அறியலாம்.

சென்னையில் வசிக்கும் மத்திய தர வர்க்கத்தினரைப் பற்றி மகாகவி பாரதியார் ‘ஆறில் ஒரு பங்கு’ எனும் சிறுகதையில் “ஸ்ரீமான் நாயுடுவுக்கு மூன்று வருஷத்துக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும் வீட்டில் ஒரு குழந்தையும் பிரமோஷன்’ என்று நகைச்சுவை பொங்க மக்கள் பெருக்கத்தையும் பொதுஜனக் கஷ்டத்தையும் விவரிப்பார். பாரதியார் காலத்திய கஷ்ட நிலை நாம் சுதந்திரம் பெற்ற பின்னும் வெகு காலம் நீடித்தது என்றே சொல்லவேண்டும். அடிமைகள் போல கஷ்டப்பட்டு அரையணா கூலிக்காக வேலைசெய்து பிழைப்பவர்கள் அந்தக் கால கட்டத்தில் உண்டு.

ஸ்ரீமான் சுதர்ஸனமும் சரி, லக்ஷ்மி கடாட்சம் கதையானாலும் சரி, சற்று துன்பமயமாக சாதாரணமாகத் தோன்றினாலும் உண்மையில் எளிய நகைச்சுவையின் அடிப்படையிலேயே துன்பத்தைக் காண்பித்திருப்பார் தேவன். இது தேவன் டெக்னிக் என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக துன்பத்தை அனுபவிப்பதும், அதைப் பற்றி எழுத பேச நிறைய வாசகர்களுக்குப் பிடிக்காது. ஆனால் சொல்லும் பாணி நகைச்சுவையில்தான் இருப்பதால் கடகடவென படித்துவிடத்தான் தோன்றும். முதலில் சிரிப்பாக இருந்தாலும் அந்தப் பாத்திரம் எத்தனை துன்பப்படுகிறது என்பது புரியும். ஆனால் ஏற்கனவே சொன்னது போலவே அந்தந்த கால கட்டத்தின் பிரதிபலிப்பு அந்தக் கதைச் சம்பவங்களில் ஏராளமாகக் கிடைக்கும்.

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும் மிகவும் பிடித்ததாக ‘ஸ்ரீமான் சுதர்ஸனத்தை’ சுட்டிக்காட்டுகிறார். ”பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்” (நன்றி – சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், பாகம் 1).

நகர வாழ்க்கை இன்னமும் பலம் பெறாத கால கட்டத்தில் கிராமத்தில் உள்ள குடும்பங்களும், நகர வாழ்க்கைக்காக இடம் பெயர்ந்த குடும்பங்களும் (முக்கியமாக ஏழைகள்) எப்படியெல்லாம் அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற நிதர்சனம் இந்தக் கால வாசகர்களுக்குக் கிடைக்கும்.

இப்படி சமூகங்களைப் பற்றிய நிலவரங்களை நகைச்சுவையோடு தன் பாணியில் பிற்கால சமூகத்துக்குத் தந்த தேவன் ஒரு புதுமை நிறைந்த புதினத்தை தமிழுலகத்துக்குப் பரிசாகத் தந்தார். அதுதான் ஜஸ்டிஸ் ஜகன்னாதன்.

(தொடர்ந்து வரும்)

படம்: கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 7

  1. வாழ்வின் துன்பங்களைச் சிரித்துக் கொண்டே சிந்திக்கும் வகையில் கதைகளில் எழுதுவது என்பது மிகப் பெரிய ஆற்றலாகும். அஃது நன்கு கைவரப்பெற்றவர் தேவன் என்பது தங்கள் தொடர் மூலம் நன்றாய்ப் பளிச்சிடுகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்….ரசிக்கக் காத்திருக்கிறோம். நன்றி!

    -மேகலா

  2. நகைச்சுவை கதையில் கூட கருத்து சொல்லலாம் ,சமூகப் பணி என்று செய்துகாட்டியவர் தேவன். வாழ்க அவர்கதைகள். தொடர்ந்து எழுது. விசாகை மனோகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *