திவாகர்

ஆமாம்.. இந்த விஷயம் இப்போதெல்லாம் தனி மனிதன் வாழ்வில் மிகவும் உள்ளூற ஊறிவிட்டதுதான். நாம் நம் ஞாபகசக்தியை நன்றாக கூர் தீட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.. இது உண்மையில் நமக்குக் கிடைத்த சாதகமா அல்லது சாபமா என பல சமயங்களில் முழித்துள்ளேன். இனி வரப் போகும் காலங்களில் இது மிக மிக அத்தியவாசியமாகிப் போய்விடும் என்று இப்போதே கண்கூடாகத் தெரிகிறது.

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. இனி இது இல்லையென்றால் உங்களையே உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டி அடுத்தவரை நாட வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளி விடும் என்று மட்டும் சொல்லிக் கொண்டு கீழே பெரியவர் கல்பட்டு நடராஜன் அவர்கள் ‘இதை’ப் பற்றி எழுதிய கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

கணினி திறந்தேன்

மடல்கள் படித்திட

கேட்டதது கடவுச் சொல்


கணினி வழியே

கட்டிட நினைத்தால்

மின் கட்டணம்

கேட்கிறதது கடவுச் சொல்

தானியங்கி வங்கி சென்றேன்

வாங்கி வரப் பணம்

அட்டை உள்ளே செலுத்திடக்

கேட்டதது கடவுச் சொல்

தெருவிலே சிறார்

ஆடுகின்றார் ஓர் விளையாட்டு

நின்றபடி இருவர்

நீட்டிய அவர் கைகளைக் கோர்த்தபடி

இணைந்திருந்த கைகளின்

அடி வழியே நுழைந்திட

முயல்கிறான் மூன்றாம் சிறுவன்

பாம்பன் பாலமென மேலெழும்பு கின்றன

கோர்த்திருக்கும் கைகள் ஒரு கணம்

மறு கணம் திரும்பிட அக் கைகள்

சிறையிலே சிறுவன் இப்போது

விட்டிட வெளியே அவனைக்

கேட்டிடுறார் கடவுச் சொல்

கோர்த்த கைகள் கொண்டோர்

கடவுச் சொல் கடவுச் சொல்

கடந்திட எதையும்

தேவையாம் கடவுச் சொல்

வாழ்க்கையை வெறுத்தேன்

உயிரை விட்டேன்

சென்றடைந்தேன் எமலோகம்

நின்றிருந்த காவலாளி சொன்னார்

தேவையில்லை கடவுச் சொல்லேது மிங்கு

சென்றிடலாம் தாராளமாய்

உள்ளே நீ யென்று.

எட்டிப் பார்த்தேன் உள்ளே

திறந்திருந்த கதவின் வழியே

பெரியதொரு எண்ணெய்க் கொப்பரை

அதனடியே எரிகின்ற நெருப்பு

நின்றிருந்தார் கிங்கரர் இருவ ரங்கு

தலை கீழாய் ஆளொருவரை

முக்கி முக்கி எடுத்தபடி

கொதித்திடும் எண்யெய்க் கொப்பரையி லவரை.

பறந்தேன் அங்கிருந்து சுவர்க்க லோகம்

நின்றிருந்த காவலாளி கேட்டிட

கடவுச் சொல் என்ன வென்று

திரு திருவென விழித்தேன்

திருடனைப் போல நான்.

மறந்தனையா கடவுச் சொல்

கடவுச் சொல் லென்பதன்

முதல் மூன் றெழுத்துடனே

சேர்த்திட ஓரெழுத்து

கிடைத்திடுமே உன் கடவுச் சொல்

மறவாதிருந்தால் உன் கடவுச் சொல்லதை

வருத்த மேதுமின்றி வாழ்ந்திருக்கலாமே நீ

புவியிலே பல காலம் என்றார் காவலாளி

வருந்தினேன் திருந்தினேன்

கடவுச் சொல்லதை

மறந்த நான்

ஒரு ஆன்மீகப் பெரியவர் சென்றவாரம் இந்தக் கடவுச் சொல்லைப் பற்றிக் குறிப்பிடுகையில் வைகுண்டம் போவதற்கு கடவுச்சொல் நாராயணா என்றும், கைலாயம் போவதற்கு கடவுச்சொல் நமசிவாய என்றும் இதைக் கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருப்பாயானால் இந்தக் கடவுச் சொல் நிச்சயம் கைகொடுக்கும் என்று தொலைக்காட்சி அருளுரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனாலும் ஆனானப்பட்ட ஆழ்வார் பெருமக்களே இப்படி கடைசி கால கடவுச்சொற்களைப் பற்றிப் பேசும்போது ‘அப்போதெல்லாம் அந்தக் கடைசிக் கணங்களில் நான் மறந்துவிட்டாலும் மறந்துவிடுவேன், அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன், அரங்கமாநகரருளானே’ என்று ஆண்டவனிடம் பெர்மிஷன் வாங்கி வைத்துக்கொண்டனர். அவர்கள் பகவானின் தூதர்கள். அவர்களுக்குப் பர்மிஷன், நடைமுறை ரிலாக்சேஷன் அனைத்தும் உண்டுதான். ஆனால் சாதாரண மானிடராகிய நாம் என்ன செய்யப் போகிறோம்.. வேறு வழியில்லை.. முடிந்தவரை கடவுச்சொல்லை நினைவில் வைத்துக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டே இருக்கவேண்டியதுதான்..

பெரியவர் கல்பட்டு நடராஜன் அவர்களை இந்த வார வல்லமையாளராக ஒருமனதாக தேர்ந்தெடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி எங்களுக்கு. இந்த வல்லமையாளர் என்பதைப் பார்க்க எந்தவிதக் கடவுச் சொல்லுமில்லாமல் நேரடியாக வல்லமையைத் திறந்து பார்க்கலாம்தான். ஆனால் இந்தப் பதிவைப் பற்றி யாராவது எழுத வேண்டுமென்றால் இந்தக் கடவுச்சொல் தொல்லை இருக்கத்தான் செய்யும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, கடவுச்சொல்லைப் பற்றிய அழகிய கவிதையை அளித்த கல்பட்டாருக்கு நம் வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைசி பாரா: திரு சு. ரவியின் ஊடலும் சமாதானமும் :

சுர நதிப் பெண்ணாள் கங்கை

சுந்தரா நின்னைத் தேடி

சரசரத் திறங்கிப் பாய்ந்த

சரசத்தில் மயங்கினாயோ!

வருவது வரட்டும் என்று

வார்சடை ஏற்றாய்! வெள்ளிப்

பருவதன் மகளின் ஊடல்

பரமனே, பார்த்தாய் அன்றோ?

 

ஆடகப் பொன்னால் வேய்ந்த

அம்பலம் ஆடும் தேவா!

ஊடலும், ஊடலின் பின்

ஒன்றி நீர் கூடலும் உம்

நாடகக் காட்சி…………………….

========================

படத்திற்கு நன்றி: தமிழமுதம்

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. திருமிகு கல்பட்டு நடராஜன் ஐயா அவர்களுக்கும் திருமிகு சு. ரவி அவர்களுக்கும் எமது வணக்கமும் வாழ்த்தும்!!

 2. இவ்வார வல்லமையாளராகத் தேர்வாகியுள்ள பெரியவர் திரு. கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். கடவுச்சொல் குறித்த தங்கள் கவிதை அருமை. கடைசிப் பாராவிற்குச் சொந்தக்காரரான திரு. சு. ரவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

 3. வல்லமையாளர் ஐயா நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 4. உண்மைதான் ‘கடவு சொல்’ களவு செல்லாமல் இருக்க பயன்படுத்த படுகிறது.  எங்கெங்கு காண்கினும் கடவுகள்டா ! ( சக்தியடா ? ) வாழ்விலும் சரி  வீழ்விலும் சரி  பெயரைக் கூட மறக்கலாம் ஆனால் கடவை மறந்தால் அல்லல் தான் என்ற எளிமயான அறிவு முதிர்ச்சி கவிதை. கடவு சொல் மறந்தாலும் கடவுள் சொல்லை (அவன் திருநாமத்தை)
  மறக்கலாகாது என்பது ஆன்றோர் / சான்றோர் வாக்கு. கவிதையை அளித்த கல்பட்டாருக்கும் வல்லமையாளராய் மகுடமேற்றிய‌ வல்லமையாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

  ஊடலைக் கூட்டி வைப்பான்
  உமையவள் தாடைக் கொய்து
  கூடலும் செய்வான் திண்ணம்
  கூடல்மா நகருள்ளானும்
  பா’சுர வி’த்தைக் காட்டும்
  பரமனின் காதற் காண்க‌
  பூசர மதுரை மீனாள்
  புதுமணக் கோலம் வாழ்க‌
  கவிதைச் சித்திரைத் திருவிழாதான்!  சித்திரத் திருவிழாதான்!!
  மனமார்ந்த பாராட்டுகள். – சத்தியமணி

 5. கணினியையும் நம் வாழ்க்கையையும் கட்டிப்போடும் கடவுச் சொல்லைப் பற்றிய கவிதை அருமை. இந்த வார வல்லமையாளர் ஐயா கல்பட்டு திரு.நடராஜன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.

  ஊடலும் சமாதானமும் என்ற இனிமையான கவிதையைப் படைத்த திரு.ரவி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

 6. திரு கல்பட்டார் ஐயா இந்தவார வல்லமையாளர் என்றறிவதில் மிக மகிழ்ச்சி. சுவாரஸ்யமாகச் செல்லும். வணக்கங்கள்.

 7. இந்த வார வல்லமையாளர், திரு.கல்பட்டு நடராஜன் அவர்களுக்கும், கடைசி பாராவுக்குச் சொந்தக்காரர், திரு.சு.ரவி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *