திவாகர்
மனிதர்களுக்கு இளமைப் பருவமும், இளமையில் காதலும், காமமும் மிக முக்கியமான கட்டங்களாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆண் பெண் இடையே காதலும் அதன் பின்னர் வரும் காமமும் மிகவும் அவசியமான ஒன்றாகவே நம் மூதாதையர் கருதி வந்திருக்கின்றனர். எத்தனையோ இலக்கியங்கள் இந்தக் காதலுக்கும் காமத்துக்கும் மிகவும் முக்கியமான இடத்தைக் கொடுத்தே வந்திருக்கின்றன.
இலக்கியத்தில் காதல் சுவையை இனிக்க இனிக்க சொல்லும்போதும் எழுதும்போதும் தேனுண்ட வண்டு போல நாமும் மயங்குவது கூட இயல்புதான். ஆனாலும் காதல் என்பதில் அன்பு எனும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதும், இங்கே அன்பு எல்லையில்லாமல் பரந்து விரிந்து இருப்பதையும், அதே சமயத்தில் உடல் சம்பந்தப்பட்ட காமத்துக்கு எல்லை வகுக்கப்பட்டிருப்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
இந்த முக்கியமான தெளிவைத்தான் திருக்குறளின் காமத்துப்பால் நமக்கு விளக்கி வருவதாக நினைக்கிறேன். இந்த திருவள்ளுவர் எல்லா வகை மக்களையும் மிக நன்றாக அறிந்தவர் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனால் குறட்பாக்களில் காமத்துப் பால் இனிமையின் உச்சகட்டம். அறிவுரையை விட ருசிக்க இனிப்பு கொடுப்பது என்பது எல்லோருக்கும் இஷ்டம்தானே.
அப்படிப்பட்ட சுவையான காமத்துப்பால் பாடல்களை சிலவற்றை எடுத்துக்கொண்டு இந்த வார வல்லமையில் மேகலா இராமமூர்த்தி அவர்களின் ‘வள்ளுவர் வரைந்த காதற்கவிதை’ என்றதொரு அருமையான கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.
”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.” .
தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள். இதனையே
“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.
”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.”
மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.
இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க பல குறட்பாக்கள் குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள் எனலாம். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் திருவள்ளுவப் பெருந்தகை சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம். (மேலும் படித்து இன்புற http://www.vallamai.com/literature/articles/32085/#comment-6111
நல்லதொரு சுவையான வள்ளுவ விருந்தினைப் படைத்த மேகலா இராமமூர்த்தி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமையாளர் குழு தேர்ந்தெடுக்கிறது. அவருக்கு நம் இனிமையான வாழ்த்துகள்.
கடைசி பாரா: அமைதிச் சாரல் சாந்தி அவர்களின் கவிதை. இந்த இலையுதிர்களில் மரத்தின் கீழே படுத்திருக்கும் நாயையும் அவர் விடவில்லை.
பிளிறலுடன் நிலையத்தினுள்
நுழைந்தது ரயில்
மதம் பிடித்ததுவோ எனவஞ்சும்படி
ஆர்ப்பரித்துக்கொண்டு.
அரைகுறை உறக்கத்தில்
ஒவ்வொரு இலையாயுதிர்த்துக்கொண்டிருந்த
அரச மரமொன்று
தடதடவென அகிலமெங்கும் கிடுகிடுத்ததில்
சரசரவென வியர்த்துக் கொட்டியது
இலைத்துளிகளை
மடியில் உறங்கிக்கொண்டிருந்த
நாய்க்குட்டியின் மேல்..
அதிகபட்ச எதிர்ப்பாய்த்
திரும்பிப்படுத்துறங்குதலைக் காட்டிய
நாயிடம் கோபித்துக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தது ரயில்

Leave a Reply