திவாகர்

வல்லமைக் குழுவின் அன்பு உள்ளங்களுக்கு விஜய வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நன்னாளில் புது வருட வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புது வருடம் பெயருக்கேற்றாற்போல் எல்லா வெற்றிகளையும் நமக்குத் தரவேண்டும். தந்தே ஆகவேண்டும் (அப்படித் தராவிட்டால் அடுத்த அறுபது வருடம் கழித்து வரும் இந்தப் பெயரை எடுத்து விடுவோம்)

பொதுவாக ஒவ்வொரு புதுவருடமும், தமிழ்நாட்டில் எப்படியோ, இந்த ஆந்திர தேசத்தில் மட்டும் ஊருக்கு ஊர் பஞ்சாங்கம் படிப்பார்கள். இந்த வருடத்தில் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஆரூடம் சொல்லி, அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு லாபம் எவ்வளவு கிரயம் எத்தனை என்பதைக் கூட கணக்கிட்டுச் சொல்வார்கள். தேச சுபிட்சத்தைப் பற்றியும், ஒவ்வொரு சமயம் சில அரசியல் வாதிகளைப் பற்றியும் கூட ஆரூடங்கள் வருவதுண்டு. தேச சுபிட்சம் என வரும்போது, பொய்த்துப் போகும் மழையைப் பற்றியும் அல்லது அதீதமான புயல் மழை போன்றவற்றினால் பாதிப்புகளைக் கூட கணக்கிட்டு சொல்லும்போது சில சமயம் எனக்கே வியப்பாக இருக்கும். இதுவெல்லாம் இப்படித்தான் என எப்படித்தான் கணிக்கிறார்களோ. ஆனால் பல சமயங்களில் இவர்கள் கணக்குப்படிதான் நடக்கிறது என்பதையும் சமபவங்கள் நிகழ்கையில் நமக்குக் காணக் கிடைக்கின்றன என்பதையும் நாம் சொல்லிவிடவேண்டும்.

அதே போல் மனிதர்களுக்கான ஆரூடச்செய்திகளும் கூட இவர்கள் சொல்படிதான் நடக்கின்றனவா என்ற மாயை எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. ஆரூடங்கள் பொய்ப்பதில்லை என்பதை சில சமயம் நானே உணர்ந்திருக்கும்போதும், பல சமயங்களில் இந்த ஆரூடத்தினால் நன்மைகள் விளைகின்றனவா என்றும் யோசிப்பதுண்டு. நாளை நடப்பது என்ன என்பது இப்போதே தெரிந்தால் வாழ்வின் சுவாரசியம் போய்விடாதா என என்னுள்ளேயே கேள்விகள் கேட்டுக் கொள்வதுண்டு. ஆனாலும் இந்த ஆரூடங்கள் ஒருவிதத்தில் நல்லதைத்தான் செய்கின்றன. அதாவது மனிதனது வாழ்வில் நம்பிக்கை மேலும் பெருகவும், இப்படி ஒருவேளை நிகழ்காலத்தில் நடந்து விட்டால் தன்னைத் தானே அவன் அதற்கேற்றபடி தயார் செய்து கொள்ளவும் நிச்சயம் உதவுகின்றன. நடப்பதும் நடக்க இருப்பதும் நம் கையில் இல்லை என்ற தத்துவ நிலையைக் கூட இந்த ஆரூடங்கள் உணர்த்துவதாக நான் நினைத்துக் கொள்கின்றேன். வாழ்வின் மீது நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.இந்த ஒன்றே போதுமல்லவா ஆரூடத்தினால் ஏற்படும் பலன்கள் உண்டு என்பதற்கு?

வல்லமையில் பலவாரங்களாக இப்படிப்பட்ட வாரபலன்களை திருமதி காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிவருகின்றார்கள் இந்தப் புதிய வருடம் நல்ல நல்ல பலன்களை எல்லாருக்கும் அள்ளி வழங்குமா என்று அவர்தான் கணித்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும் இத்தனை வாரங்களாக வாசகர்கள் மனதில் வாழ்வின் மீது ஒரு நம்பிக்கையை. வளர்த்து வந்திருக்கும் இவரை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆகையினால் வல்லமை குழுவினர் ஒரு மனதாக திருமதி காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்களை இந்த வார வல்ல்மையாளராக சிறப்பிக்கிறோம்.

வல்லமையாளர் விருது என்பது வல்லமையில் இது ஐம்பதாவது வாரமாக வழங்கப்படும் விருதாக இந்த வார விருது அமைகின்றதும். அதுவும் இந்தப் புதிய வருடமான விஜய வருட ஆரம்ப வாரத்தில் நிகழ்வதால் இந்த விருதுக்கு ஏதோ ஒரு சிறப்பு பெருமையும் சேர்ந்து கொள்வதாக எனக்குள் ஒரு பிரமை. எப்படி இருந்தாலும் இந்த விருதை வாங்கியவருக்கு என் வாழ்த்துக்கள்.

கடைசி பாரா: பூந்தலைச் சிறுகோல் – முனைவர் பானுமதி.

சிறு வயதில் தாய் (செவிலி) பொன்னால் ஆன கிண்ணத்தில் பால் சோற்றை ஏந்திக் கொண்டு குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தை உண்ண மறுத்து கால் கொலுசு ஒலிக்க இங்குமங்கும் ஓடி ஒளிந்து கொள்கிறது.. மூச்சிறைக்கத் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அக்குழந்தைக்கே மூச்சிறைக்கும் போது அத்தாய்க்கு எப்படி இருக்கும். பொறுமையாக அத்தாய் அக்குழந்தையின் பின்னால் ஓடுகிறாள். அப்போதும் உண்ண மறுக்கும் குழந்தையை அவள் அடிக்கவில்லை. மாறாக அடிப்பதாக நடிக்கிறாள். அதுவும் எப்படி? பூவால் சுற்றப்பட்ட ஒரு கோலைக் கையால் ஓங்கிக் காட்டி. ஆம் ஒரு வேளை அக்கோல் அக்குழந்தையின் மேல் பட்டு விட்டால் வலித்து விடுமே என்பதால் அக்கோலைப் பூவால் சுற்றியிருந்தாளாம். இதைச் செய்தவள் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயல்ல. செவிலித்தாய். இக்கால வழக்கில் கூறவேண்டுமானால் வேலைக்காரப் பெண்மணி.

“புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,‘உண்’ என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்

முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி”

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. வல்லமையாளர் விருது பெற்ற திருமதி. காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், ‘கடைசி பாரா’ வரிகளுக்குச் சொந்தக்காரரான முனைவர் பானுமதி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!

 2. இருவருக்கும் வாழ்த்துகள்

 3. வல்லமையாளர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  பூந்தலைச் சிறுகோல்; பள்ளிப்படிப்பின் போது படித்த நியாபகம். பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது நன்றிகள்.

 4. வாழ்த்துக்களை அள்ளித்ததந்த அன்பு நெஞ்சங்களான மேகலா ராமமூர்த்தி, பழமைபேசி மற்றும் தனுசு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

 5. திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியம் அவர்களுக்கும், முனைவர்.பானுமதி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

 6. இவ்வார வல்லமையாளர், திருமதி. காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், கடைசி பாராவுக்குச் சொந்தக்காரரான, முனைவர், திருமதி.பானுமதி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 7. வல்லமைத் தோழர்குலாம் அனைவருக்கும் இனிய வெற்றி(விஜய) புத்தாண்டு வாழ்த்துகள். பலன்களைத் தருவது கோள்களின் களிப்பு. பலன்களைப் பகிர்வது சோதிடர்க் கணிப்பு. தினப் பலன், வாரப் பலன், மாதப் பலன், வருடப் பலன்கள் எல்லாம் பயன்களாக மாற்றுதலும் அந்தக் கோள்களின் பார்வையில் தான். திடமனமற்றவர்க்கு நம்பிக்கைத் தருவருவதும் , திடமுள்ளோர்க்கு உற்சாகம் தருவதும் சோதிடம் தான். அந்தவகையில் இவ்வார வல்லமையாளர், திருமதி. காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், கடைசிப் பாராவுக்குச் சொந்தக்காரரான, முனைவர், திருமதி.பானுமதி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

 8. இந்த வார வல்லமையாளர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 

  என்னையும் வல்லமையாளராக இணைத்த வல்லமை தேர்வுக் குழுவுக்கு நன்றி.

  தாமதமான நன்றி நவிலல் இது. ஆனால் உணர்வுப் பூர்வமான நன்றி நவிலல். . வாழ்த்திய திருமதி. மேகலா இராமமூர்த்தி, திரு. பழமை பேசி, திரு. தனுசு, திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியம்,  திரு. சச்சிதானந்தம், திருமதி. பார்வதி இராமச்சந்திரன்,  சத்தியமணி அனைவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.