இந்த வார வல்லமையாளர்
திவாகர்
செய்திகள் என்பது எப்போதுமே பரபரப்பாகவும் மக்கள் உடனடியாக படித்து பதட்டம் அடைவதாகவும் இருக்கவேண்டும் என்று எந்த அறிவாளி எப்போது எந்தக் காலத்தில் சொல்லி வைத்தாரோ, தினமும் பத்திரிகைகளின் வரும் செய்திகள் இந்தக் கொள்கையைத் தவறாமல் கடைபிடித்து வருகின்றன. பத்திரிகைகள் கிடைக்காத அந்தக் காலக் கட்டத்தில் கிராமங்களில் செய்தி பரப்புவதைப் பற்றிய நகைச் சுவைக் கட்டுரை ஒன்றில் ‘ஒரு பாட்டி கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது மண்குடத்தைத் தவறிப் போட்டு விட்டாள்’ என்பது வார்த்தைகள் திரிக்கப்பட்டு காட்டுத் தீ போல் ஒவ்வொருவர் வாய் மூலமாகவே கடைசியில்’அந்தப் பாட்டி யாரையோ கிணற்றில் தள்ளிவிட்டு தானும் விழுந்து விட்டாள்’ என்பதாகப் பரவும் என எழுதி இருப்பார். (இல்லாவிட்டால் பாட்டி தவறிப்போய் போட்டுவிட்ட அந்த மண்குடத்தை யார் மதிப்பார்கள்..)
என்னுடைய ‘எம்டன்’ புதினத்துக்காக சென்ற நூற்றாண்டின் முதல் வருடங்களின் செய்திகளை அதிகம் புரட்டிப் பார்க்க நேர்ந்தது. அப்போதும் கூட அந்த காலத்துக்கேற்ப பல பரபரப்பான செய்திகள் அரங்கேற்றம் ஆகிக் கொண்டே இருந்தனதான். ஒரு மாதிரிக்காக, அன்றைய அன்னி பெசண்ட் அம்மையாருக்கும் ஹிந்துப் பத்திரிகைக்கும் ருக்மிணி அருண்டேல் விஷயத்தில் நடந்த கருத்து மோதல்கள் மிக விறு விறுப்பாகப் படிக்கப்பட்ட செய்தியாகவும், மதராஸ் ஆங்கிலேய கவர்னர் தனிப்பட்ட முறையில் ஹிண்டு பத்திரிகைக்கு ஆதரவு அளித்ததையும் சொல்லலாம். ஆனால் உண்மையில் பார்த்தால் இவையெல்லாம் பொது மக்களுக்குத் தேவையான செய்தியா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஆனால் பொது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள் ஏனென்றால் வம்புகளில் கிடைக்கும் ஒரு கிளர்ச்சிகரமான இன்பம் மட்டுமே’ என்பேன்.
காலம் எத்தனைதான் மாறிவிட்டாலும், இப்போதும் இத்தகைய செய்திகளுக்குத்தான் எங்கும் எதிலும் முதலிடம். காலம் மாறினாலும் கோலம் மாறாது என்பது போல பத்திரிகைகளின் இந்தக் கொள்கையும் மாறவே மாறாது போலும்.
இத்தகைய நிலையிலும் ஏதோ சில நல்ல செய்திகளும் அந்தப் பத்திரிகைகள் வேறு வழியில்லாமல் பிரசுரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய நல்ல செய்திகள் வரும்போதெல்லாம் நமக்குத் தவறாமல் அதைப் பதிப்பித்து எடுத்துச் செல்கிறார் திரு சங்கர ராமசாமி அவர்கள். இதோ சமீபத்திய அவர்களின் பதிவிலிருந்து ஒரு நல்ல செய்தி..
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கெனத் தனியான தமிழ் எழுத்துருக்கள் மற்றும் விசைப்பலகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட அரசு தலைமை அலுவலகங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் முற்றிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கோப்புகளைத் தயார் செய்வது உள்பட பெரும்பாலான பணிகள் கம்ப்யூட்டர் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு அலுவலகத்திலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போன்று எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அலுவலகங்களில் வானவில் என்ற பெயரிலான எழுத்துரு உபயோகிக்கப்படுகிறது.
ஆனால், இந்த எழுத்துருவுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தியாக வேண்டும். வேறு சில எழுத்துருக்களைப் பயன்படுத்த வேண்டுமானாலும் அதற்குக் கட்டணம் அவசியம். இதனால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே எழுத்துரு பயன்படுத்துவது என்பது கனவாகி இருந்தது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே எழுத்துருக்கள் மற்றும் விசைப் பலகைகளை பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான முயற்சி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
இதற்காக, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் பி.ஆர்.நக்கீரன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பி.செல்லப்பன், மணிவண்ணன், தேசியத் தகவலியல் மையத்தின் உறுப்பினர் ஜே.டி.பிரின்ஸ், தேசியக் கம்ப்யூட்டர் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தக் குழு சார்பில் பாரதி, கபிலர், கம்பர், வள்ளுவர், காவிரி ஆகிய பெயர்களில் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துருக்கள் ஒரே வகையைச் சேர்ந்தவைதான். இவற்றை விண்டோஸ், லினக்ஸ் உள்ளிட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்களில் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
பல கோடி ரூபாய் மிச்சம்: இந்த எழுத்துருக்களுக்கான விசைப் பலகை, சாதாரண டைப்ரைட்டிங் இயந்திரத்தில் உள்ளது போன்றும், ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை அடித்தால், அது அப்படியே தமிழில் மாறுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், விசைப் பலகையை வேகமாக இயக்கத் தெரியாதவர்கள்கூட, ஆங்கிலத்தில் எழுத்துக்களை அடித்து அதைத் தமிழில் தோன்றச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி வழங்கிக் கொண்டிருக்கும் திரு சங்கர ராமசாமி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழு மிக மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுக்கிறது. திரு ராமசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.
கடைசி பாரா: சத்தியமணி’ யின் கவிதை வரிகளிலிருந்து
அன்னமன் னந்நடை அரிவையாகி காதல் கற்றாள்
தெரிவை எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள்
பேரிளம்பெண் அன்னை யென்றே பாசம் பொழிந்தாள்
நுங்கையாகி நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்தாள்
திருமிகு சங்கர ராமசாமி, திருமிகு சத்தியமணி முதலானோர்க்கு வாழ்த்துகள்!!
நண்பர் சங்கர ராமசாமி, சமூக உணர்வு மிக்கவர். ஓய்வு பெற்ற பிறகும் யாருக்கு என்ன உதவி செய்யலாம் என முனைந்து உழைப்பவர். இது அவரது வலைப்பதிவு – http://rssairam.blogspot.in; அவர் வல்லமையாளர் விருது பெறுவதில் மகிழ்ச்சி. அவரது ஆற்றலும் புகழும் ஓங்கிட வாழ்த்துகள்.
திருமிகு சங்கர ராமசாமி வாழ்த்துகள்!! தேசியத் தகவலியல் மையத்தின் உறுப்பினர் ஜே.டி.பிரின்ஸ்,திருமிகு சங்கர ராமசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!! /* சென்னையில் தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட அரசு தலைமை அலுவலகங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் முற்றிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. */ இதற்கு தேசியத் தகவலியல் மையத்தின் பங்கு அதிகம். அதில் தான் நான் பணியாற்றி வருகிறேன் (தில்லியில்) என்பதில் பெருமையுண்டு. இந்திய மொழிகளில் அனைத்திலுமே மென்பொருட்களை உருவாக்கி அரசு-குடிமக்கள் உறவுகளை பலபடுத்தி வளர்கிறது. அதில் எம் பணியும் பங்கும் உண்டெனச் சொலவதில் மகிழ்ச்சி. அதன் இருமடங்காக மீண்டும் நுங்கையாகி நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்த எம் அன்னைக்கும் மதுரை மீனாளுக்கும் பாராட்டு கொடுத்த திரு திவாகர் ஐயா அவர்களுக்கு என் பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்.
வல்லமையாளர் சங்கர ராமசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நேர்மறையான ஆக்கப் பூர்வமான செய்திகளை வெளியிட்டு வரும் திரு.சங்கர ராமசாமி அவர்களுக்கும், தொடர்ந்து இனிமையான கவிதைகளை எழுதிவரும் திரு.சத்தியமணி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக அக்கறை கொண்ட நபர்களை அறிமுகப்படுத்தும் வல்லமைக்கு நன்றி !