இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
இன்றைக்கு உலகமக்களையே ஆட்டுவிக்கும் துறை ஒன்று உண்டென்றால் அது திரைப்படத்துறை மட்டும்தான். ஒரு திரைப்படம் ஒன்று வெற்றிகரமாக ஓடினால் அந்த வெற்றியின் பின்னே பலர் இருக்கிறார்கள் என்ற செய்தியெல்லாம் மறந்து போய் அந்த வெற்றியின் முழுப்புகழையும் அந்த நடிக நடிகையருக்கே இந்த மக்கள் வழங்கி வருவதுதான் வேடிக்கை. எத்தனைதான் அந்த நடிகர்களுமே சேர்ந்து இது ஒரு கூட்டணியால் ஏற்பட்ட வெற்றி என்று சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.. அவர்களுக்கு அந்த வெற்றிப்படத்தில் காண்பிக்கப்பட்ட முகங்கள் மட்டுமே தெரிகின்றன. அந்த முகங்களுக்குப் பின்னால் நிற்கும் மிகப்பெரிய தொழில் வல்லுநர்கள் கூட அதிகமாக அறியப்படுவதில்லை. இதனால் புகழ்ச்சியானது பங்கு பிரிக்கப்படாமல் ஓரிடத்திலேயே சென்று பாய்ச்சப்படுகிறது.
ஆனாலும் இப்படி வரும் புகழ் என்பது போதை மருந்துக்கு ஒப்பானதாகும். போதை மருந்து முதலில் போட்டுக்கொண்டால் சுகமாக இருக்கிறதே என்பதால் இது அடிக்கடித் தேவைப்பட போதை மருந்துக்காக மனம் ஏங்கும்.. பின்னர் அதற்கே அடிமையாகி வீணாகிப் போவோரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த புகழ் போதை கூட இப்படித்தான்.. ஒரு படத்தில் கிடைத்த ஏராளமான புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் போராட வேண்டிய நிலையை நாளுக்கு நாள் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் அவர்கள் இந்தப் புகழுக்கு ஈடாக எத்தனையோ தியாகங்கள் செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். அன்பு பாசம் கருணை எல்லாமே இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப்படவேண்டிய நிலையில் இந்தப் பணமும் புகழும் இவர்கள் வாழ்க்கையை சோபிக்கச் செய்யுமா? இந்தக் கேள்விக்கு ஒரு நடிகையின் மனதில் புகுந்து கொண்டு அழகான கவிதையைப் பதிலாகத் தந்துள்ளார். பொன் இராம்.
வண்ணச்சாயப் பூவிதழ்
உதடுகள் கூறும்
கண்ணீர் வரிகள்!
அடிமை விலங்கு
அவிழ்க்கப்பட்டும்
அரிதார பொம்மைகளாய்
நனவுலகில் சிரிக்கின்றோம்!
கள் மட்டுமே
போதை!
இங்கு நாங்கள்
திரையுலகக்
கண்ணாடிக் குடுவைக்குள்
போதைப் பதுமைகளாய்
வாழ்கின்றோம்!
இடியாக மாறி
படியாத ஆணுலகை
மாற்றிவிட எத்தனையோ முயன்றாலும்
பணமழை தான் ஜெயிக்குதடி!
பட்டமொன்று பெற்றாலும்
பாவி மனம்
புகழுக்கு ஏங்குதடி!
விடியாத பெண்ணுலகத்
திரையுலகக் கும்மிருட்டில்
விரைவாய் யார் வருவார்
அறிவு விளக்கேற்ற?
பொதுவாகவே திரைப்படக் கலைஞர்களில் இந்த நடிகைகளின் உள்ளக் குமுறல்கள் சற்று அதிகம்தான். பெண்ணாகப் பிறந்து, அதிலும் அழகாகவும் அலங்காரமாகவும் ஆண்களின் பார்வைக்குப் படும்போதும், அதை அவர்கள் கவர்ச்சியாகக் காட்டி செல்வம் ஈட்டும்போதும், அவள் படும் மனத் துயரங்கள் இந்தப் புகழ் எனும் போதை மருந்து மூலம் சற்று நேரத்துக்கு மறக்கடிக்கப்பட்டாலும், இப்படிப்பட்ட போதை மருந்துதான் நிரந்தரத் தீர்வா என்றால் அதைவிடக் கொடுமை ஏது என்ற இன்னொரு கேள்விதான் பிறக்கும்.
நடிகையின் குரல் மூலம் சிந்தனையைத் தூண்டிவிட்ட பொன் இராம் அவர்கள் இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள்.
கடைசி பாரா: முதலைக் கண்ணீர்:
முதலை அழுவதால் வருகிற கண்ணீர் இல்லை அது. சும்மாவே அதோட உடம்புல ஊறுகிற நீர் கண்கள் வழியா வெளியே வருமாம். அதனால் அந்தக் கண்ணீருக்கு எந்த அர்த்தமும் இல்லைதானே. அதுபோலத்தான் சில பேர் உலகத்துல தன் காரியம் ஆகணும்கறதுக்காக முதலையாட்டமா போலிக் கண்ணீர் வடிப்பாங்க.. நாமதான் அவங்ககிட்ட சூதானமா இருந்துக்கணும். இல்லேனா முதலைக் கண்ணீர் வடிச்சி நம்மளையும் ஏமாத்திப்புடுவாங்க (பவளசங்கரி)
பொன் இராம் அவர்கட்கு வாழ்த்துகள்!!
இவ்வார வல்லமையாளர் பொன் இராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
….. தேமொழி
வாழ்த்துக்கள் பொன் ராம்.
திரு. பொன் ராம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.
திரு. பொன்ராம் அவர்களுக்கு என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்.