இந்த வார வல்லமையாளர்
திவாகர்
விசாகப்பட்டினத்தில் வாழும் பழமையான தமிழர் திரு ராஜேஸ்வரன் இந்த நகரத்து மக்களுக்காக நகரின் மையத்தில் அழகான கோயில் ஒன்று விநாயகருக்கு எடுத்துச் சிறப்பித்தவர், அந்தக் கோயிலுக்கு தமிழிலும் சம்பத் விநாயகர் என்று பெயரிட்டதுடன் தமிழர்களாலேயே பூசனை செய்யும் விதானத்தையும் கொண்டு வந்தவர். கேட்டவர்களுக்கெல்லாம் கேட்பவற்றை அள்ளித் தரும் இந்த சம்பத் விநாயகருக்கு வரும்படி அதிகம். இதை அரசாங்கம் கவனித்து விட்டது. விடுமா இப்படி பணம் பெறும் இயந்திரத்தை.. அப்படியே தத்து எடுத்துக் கொண்டார்கள். ஆனால் நமது தலைவர் இந்தத் தத்துக்கு முன்பே நகரத்தை அடுத்த கிராமப்புறத்தில் விநாயகர் டிரஸ்டில் சில ஏகராக்கள் நிலத்தை வாங்கிப் போட்டார். அங்கே சிறு விநாயகர் கோயில் ஒன்றையும் அந்த விசாலமான பகுதியில் எடுப்பித்தவர் மீதி உள்ள இடங்களில் எல்லாம் முதியோர் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளையும் கொண்டவைகளாக நிர்மாணித்தார்.
முதியோர் விடுதி என்று பேச்சுக்கே தவிர அங்கே இந்த இருப்பிடங்களைக் கவனித்தால் ஏதோ ஒரு கார்பொரேட் கஸ்ட் ஹவுஸ் சூழ்நிலையைத் தான் உணர்த்தும். இத்தனைக்கும் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாகவும் இருப்பதால் நகரத்துக்கே உரிய பரபரப்பும், பொல்லூஷனும் அறவே அங்கே கிடையாது. வசதிகள் உள்ள அந்த விடுதிகள், வயோதிகர்களின் கடைக் காலங்களில் நிச்சயமாக ஒரு நிம்மதியை ஏற்படுத்தித் தந்து விடும். சிறிது காலம் தங்கினால் அங்கிருந்து வெளியே வர யாருக்குமே மனம் வராது.
இதைப் பற்றி ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் எடுத்துச் சொன்னேன்.. ஏன் இந்த அழகான விடுதிகளை முதியோர் விடுதி என்கிறீர்கள். முதியோர் விடுதி என்றாலே ஏறத்தாழ அநாதை விடுதிகள் போலத்தானே என்றேன்.. அதற்கு அவர் அப்படி இல்லை.. இதை வயோதிகர் உல்லாச உலகம் என்று பொருள்படும் விதத்தில் ரிசார்ட் என அழைக்கிறோம், இங்கே அவர்கள் உல்லாசமாக உற்சாகமாக இருக்கும் விதத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்றார். பேருக்கு வாடகை என்றாலும் மிக மிகக் குறைந்த விலையில்தான் ஏழை எளியவர்களுக்காகத்தான். அவர்கள் எல்லா வசதிகளையும் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் ஆழ் மனதில் கொண்டு நிர்மாணித்தோம், என்கிறார் இவர். எனக்கு இவரைப் போன்றவர்கள் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது இந்த நாட்டுக்குத் தேவை எனத்தான் பட்டது.
சமீபத்தில் (இந்த வார வல்லமையில்) திரு கோபி சரபோஜி எழுதிய ‘விதையின் குணம்’ என்ற ஒரு கவிதை படித்தேன்.
பெற்றோர்களே….
வயது போனதற்காய்
நீங்கள்
உதிரமும்,உணவும் தந்து
கை தூக்கி விட்ட பிள்ளைகள்
உங்களை
கை விட்டு விட்டதை எண்ணி
வருந்தாதீர்கள்.
நீங்கள் – விருட்சம்
அவர்கள் – விதை.
விழுந்து எழுவது தானே
விதையின் குணம்.
விட்டு விடுங்கள்
எழும்போதாவது
வீரியமாய் எழட்டும்.
கை விட்ட நிலையில் முதியவர்கள் வருத்தத்தைத் துடைக்கும் ஒரு கவிதை. எனக்கு ஏனோ இந்தக் கவிதை திரு ராஜேஸ்வரனின் ‘ரிஸார்ட்’ விஷயத்தை ஞாபகப்படுத்தியது. விருட்சமான முதியவர்கள் இனி வரும் கால கட்டத்தில் சற்று புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டால்தான் உண்டு. விதைகளான உதிர்த்தபின் தனக்குப் பாந்தமான முறையில் கிடைக்கும் இடங்களில் இடம் பெயரத்தான் வேண்டும் எனவும் போன்றியது. கிடைக்கும் இடம் நல்ல விதமாக, ’ரிஸார்ட்டாக’ அமைந்தால் விருட்சத்துக்கு மகிழ்ச்சிதானே. இன்று விதையாகக் காணப்படும் பிள்ளைகள் நாளைய விருட்சங்கள் அல்லவா.. அவர்களுக்கும் இது ஒரு பாடம் மட்டுமல்ல.. எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக ஆக்கிக் கொள்ள வழியாகவும் இருக்கும்.
யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா.. இப்படி யோசிக்க வைத்த திரு கோபி சரபோஜி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்த்டுக்கிறது. அவருக்கு நம் வாழ்த்துகள்.
கடைசி பாராவில் இந்த வாரம் முழுவதும் என் நினைவில் நிற்பது தூத்துக்குடி துரைதான். முகத்தில் ஆசிட் வீசப்பட்டு கொடுமைக்கு ஆளான அந்த இனிய இளம்பூவான வினோதினிக்கு ஆறுதலாக முன்வந்து உதவித்தொகை சேகரித்துக் கொடுத்ததும், அவரை ஊக்கப்படுத்த முயற்சிகள் எடுத்து வருவதும் சாதாரண செயல் அல்ல.பெரிய மனசு கொண்ட துரை வாழ்க!
வல்லமையாளருக்கும், அண்டை வீட்டுக்காரர் துரை அவர்களுக்கும் வாழ்த்துகள்!!
சிந்திக்க வைக்கும் கவிதை வரிகளுகாகப் பாராட்டப் பெற்ற கவிஞர் கோபி சரபோஜி, மனித நேயதிற்காகப் பாராட்டப் பெற்ற அன்பு துரை, சேவை உள்ளத்திற்காகப் பாராட்டப் பெற்ற ராஜேஸ்வரன் ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
….. தேமொழி
என்னை இந்த வார வல்லமையாளராக தேர்வு செய்த வல்லமை ஆசிரியர் குழுவிற்கும், திவாகர் சார் அவர்களுக்கும்,பரிசு பொதியை வழங்கிய ஐக்கியா நிறுவனத்தின் வையவன் சார் அவர்களுக்கும் –
என் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு அதை புதியதொரு வாசக தளத்திற்குள் கொண்டு சென்ற ஆசிரியர் பவள சங்கரி அவர்களுக்கும்,வாழ்த்து சொல்லிய பழமைபேசி, தேமொழி ஆகியோர்க்கும் –
இந்த சந்தோச நேரத்தில் தனது வலைப்பக்கம் மூலம் வல்லமை இதழை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கும் – என் நன்றிகள்.
மனித நேயம் இன்னும் மறைந்து விடவில்லை என்பதற்கு உதாரணமாய் திகழும் திரு.ராஜேஸ்வரன் அவர்களை வணங்குகிறேன்.திரு.துரையின் பணி க்கு என் பாராட்டுகள்.
இந்த வார ‘வல்லமையாளர்’ கவிஞர். கோபி சரபோஜி அவர்களுக்கு என் வாழ்த்துகள்!!!
தன்னலம் வேரூன்றித் தழைத்து விட்ட இந்தச் சமூகத்தில், மனிதத்தை நீரூற்றி மலர வைத்துக் கொண்டிருக்கும் திரு. துரை மற்றும் திரு. ராஜேஸ்வரன் அவர்களின் சமூகத் தொண்டிற்கு என் பாராட்டுகள்!
மிக்க நன்றி….மாதவன் இளங்கோ