Tag: எம்.ஜெயராமசர்மா

  • மாஇசை கொடுத்து நின்றார்

     
    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் 

    dr-m-balamuralikrishna-thiruvananthapuram-january-2008
    சுந்தரத் தெலுங்கென்று
    சுவைபடக் கூறிநின்றான்
    செந்தமிழ்ப் புலவனவன்
    சிறப்பான பாரதியும்

    பாரதியின் கூற்றறிந்த
    பாலமுரளி கிருஷ்ணாவும்
    பாட்டாலே எம்மையெலாம்
    பதப்படுத்தி வைத்தாரே

    தெலுங்கோடு பிறந்தாலும்
    தீராத காதலுடன்
    பலமொழிகள் தான்கற்று
    பாட்டிசைத்து நின்றாரே

    இசையோடு தானிணைந்து
    ஈடில்லா முயற்சிசெய்து
    தனியான இசைகண்டு
    தரணிதனில் உயர்ந்தாரே

    புதுராகம் பலகண்டார்
    புத்துணர்வு கொண்டெழுந்தார்
    அதிமேதை என்றவரை
    அனைவருமே போற்றுகின்றார்

    மற்றவரைப் பாராது
    மனத்தோடு ஒன்றிநின்று
    வெற்றிச் சிரிப்புடனே
    விதம்விதமாய்ப் பாடுகிறார்

    பொட்டுவைத்துச் சபையேறி
    புன்சிரிப்புத் தவழஅவர்
    தொட்டுநின்ற ராகமெலாம்
    சுவைததும்பி நிற்கிறதே

    மிருதங்கம் வயலீனை
    விட்டுவிடின் பாட்டில்லை
    என்றெண்ணும் எண்ணத்தை
    இல்லையென ஆக்கியவர்

    தாளத்தை மட்டுமவர்
    தன்கையில் எடுத்தபடி
    சளைக்காமல் கச்சேரி
    சபையதிரச் செய்தாரே

    பிரமித்து நின்றார்கள்
    பெருங்கலைஞ்ஞர் எல்லாரும்
    ஒருமித்த குரலெடுத்து
    உயர்ந்ததெனப் பகர்ந்தார்

    தேசியவிருதை வென்றார்
    திசையெலாம் புகழநின்றார்
    மாஇசை கொடுத்துநின்றார்
    மதுரமாய்க் குரலினாலே

    பாரததத்தின் விருதையெல்லாம்
    பாட்டாலே பெற்றுநின்றார்
    பாரதிரப் பாடிநின்று
    பரிமளிக்கச் செய்கின்றார்

    பாலமுரளி கிருஷ்ணா
    பலவிதமாய்ப் பாடுவதால்
    பாரிலுள்ளோர் மனமெல்லாம்
    பக்குவமாய் நிறைந்துவிட்டார்

    காலமுள்ள வரைக்குமவர்
    கானமழை பொழிந்திடுவார்
    கந்தருவக் குரலோனை
    கண்மணியாய்க் காத்திடுவோம்

    Share
  • காதலால் வாழ்த்துகிறேன்

     
    ( எம். ஜெயராமசர்மா – மெல்பேண் )

     
    காலத்தை வென்று நிற்கும்kana1
    கவி எலாம் தந்தவனே
    ஞாலத்தை மகிழ்விக்க
    நற் கருத்தைத் தந்தவனே
    மூலைக்கு மூலை உந்தன்
    முழுக்கவியும் ஒலிக்கிறது
    பாவாடை போர்த்தி உனை
    பாராட்டி மகிழ்கின்றேன்

    பிறந்த நாள் உனக்கின்று
    பெரியளவில் எடுக்கின்றார்
    பெரி யவரும் சிறியவரும்
    பெருமையுடன் நினைக்கின்றார்
    பெருங் கவிதை தந்தவனே
    பிறந்த நாள் சிறக்கட்டும்
    உறங்கு கின்ற மனிதரெலாம்
    உன்கவியால் விழிக்கட்டும்

    வாழ்த்துகள் கூறுதற்கு
    வரவில்லை தமிழெனக்கு
    வாழநாம் வேண்டுதற்கு
    வழிகள் பல சொன்னவனே
    காலமுள்ள வரையினிலும்
    கவியரசன் நீதானே
    காதலால் வாழ்த்துகிறேன்
    கவியரசே வாழ்த்துக்கள்

    Share
  • குருவிக்கூடு!

    எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    குருவி ஒன்று மரத்திலே
    கூடு கட்டி வாழ்ந்தது!                                                    bird nest
    தெருவில் போகும் மனிதரைத்
    தினமும் பார்த்து நின்றது!

    குருவிக் கூட்டில் குஞ்சுகள்
    குதூகலமாய் வளர்ந்தன!
    அனுதினமும் தாயைப் பார்த்து
    அகமகிழ்ந்து நின்றன!

    தெருவில் போகும் மனிதரின்
    தில்லு முல்லு பார்த்ததும்
    திகைப் படைந்த குஞ்சுகள்
    திரும்பித் தாயைப் பார்த்தன!

    தெருவில் சண்டை நடந்திடும்
    தினமும் மனிதர் மோதுவார்
    அதனைப் பார்க்கும் குஞ்சுகள்
    அஞ்சித் தாயைப் பார்க்குமே!

    சண்டை நடக்கும் காரணம்
    சரியாய்த் தெரியாக் குஞ்சுகள்
    மென்று விழுங்கிக் கேட்டிடும்
    மெதுவாய்த் தாயும் சொல்லுமே…

    சிண்டு முடிக்கும் குணமெலாம்
    சீராய் மனிதர் செய்குவர்!
    அண்டை அயலில் உள்ளவர்
    மண்டை உடைத்து நிற்பரே!

    வம்பு தும்பு பேசியே
    வாழ்வு நடத்தும் மனிதரால்
    எங்கும் சண்டை நடக்குதே
    இதனை எங்கு சொல்வது?

    கோள்முடிக்கும் கூட்டமும்
    குறைகள் சொல்லும் கூட்டமும்
    நாள்முழுக்கச் சண்டையை
    நடக்கவிட்டுப் பார்க்குது!

    விலங்கு பறவை என்றெமை
    விலக்கி விட்ட மனிதர்கள்
    விளக்கமின்றி நாளுமே
    வெட்டிக் குத்தி மாள்கிறார்…

    என்று சொல்லிக் குருவித்தாய்
    ஏக்க மூச்சு விட்டதும்
    எல்லாக் குஞ்சும் ஒன்றாக
    இரையைக் கொத்தி நின்றன!

    தாயைப் பார்த்த குஞ்சுகள்
    தயங்கித் தயங்கிக் கேட்டன
    எங்கள் கூட்டை மனிதர்கள்
    ஏறிப் பிடுங்க மாட்டாரா…?

    என்று கேட்டு நிற்கையில்
    எங்கிருந்தோ வந்த கல்
    குஞ்சைப் பதம் பார்த்தது
    குருவிக் கூடும் விழுந்தது!

    விலங்கு பறவை யாவுமே
    விலத்தி நின்ற போதிலும்
    நலங் குறைந்த மனத்துடன்
    நாட்டில் மனிதர் வாழ்வதேன்!?

    Share
  • பக்குவத்தை அடையாரா!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    வானத்து வெண்நிலவு
    வசைபாடி நிற்பதில்லை                                             moon and clouds for jayarama sarma kavithai
    வண்ணமிகு தாரகைகள்
    வம்புதும்பு செய்வதில்லை
    நீலநிற முகிற்கூட்டம்
    நிந்தனையும் செய்வதில்லை
    நீள்புவியில் வாழ்பவர்கள்
    நினைத்துமிதைப் பார்ப்பதுண்டா?

    கண்சிமிட்டும் தாரகைகள்
    கண்டனமும் செய்வதில்லை
    கருமேக முகிற்கூட்டம்
    கருத்தேதும் சொல்வதுண்டா?
    சுட்டெரிக்கும் சூரியனும்
    சுடுசொற்கள் சொல்வதில்லை
    சுற்றிநிற்கும் மனிதரிதைக்
    கற்றுக்கொள்ள வேண்டாமா!

    சோலைமயில் எந்நாளும்
    தோகைவிரித் தாடிவிடும்
    காலைமாலை என்றின்றி
    கருங்குயிலும் பாடிவிடும்
    காலைவேளை வருந்தென்றல்
    கன்னமதை வருடிவிடும்
    ஞாலமீது உள்ளவர்கள்
    நல்லதையேன் மறக்கின்றார்?

    வளர்ந்து மரம்நிழல்கொடுக்கும்
    வகைவகையாய்க் கனிகொடுக்கும்
    பரந்தவெளி வளர்புல்லும்
    பசுவினத்தின் பசிதீர்க்கும்
    பயன்கருதா உதவிநிற்கும்
    பாங்கினையும் பார்த்தபின்னர்
    பாரிலுள்ள மனிதரெல்லாம்
    பக்குவத்தை அடையாரா!

    Share
  • மாடிவீட்டு ஏழைகள்!

    -எம்.ஜெயராமசர்மா – மெல்பேண்

    ஓலைக் குடிசைக்குள்
    ஒக்காந்து இருந்தாலும்                                                                 huts
    காலுக்குச் செருப்புமின்றி
    கல்லுமுள்ளு நடந்தாலும்
    ஆளுக்கு ஆள்நல்லாய்
    அன்புகாட்டும் பண்பெலாம்
    மாடிக்குள் வந்திடுமா
    மனதிலெழும் கேள்வியது!

    கூழையே குடிப்பார்கள்
    குதூகலமாய் இருப்பார்கள்
    நாலுகாசு கிடைத்தாலும்
    நல்லாத்தான் மகிழ்வார்கள்
    காரென்றும் வீடென்றும்
    கணக்கின்றி வைத்திருப்பர்
    மாடிவீட்டு ஏழைகளாய்
    வாழ்ந்திடுவார் என்னாளும்!

    நாகரிகம் தெரியாது
    நஞ்சுமவர் நெஞ்சிலிலை
    ஓய்வின்றி உழைப்பார்கள்
    உறக்கமோ நல்லாய்வரும்
    வேர்வையென்றால் தெரியாது
    விலைபேசி நிற்பார்கள்
    மாடிவீட்டு மக்களுக்கு
    மருந்துவேணும் உறங்குதற்கு!

    நாளெல்லாம் பசித்திடுமே
    நன்றாக உழைப்பார்கள்
    வேருக்கு நீர்போல
    விலக்கின்றி உண்டிடுவார்
    காசிருக்கும் ஆளிருக்கும்
    கச்சிதமாய் உணவிருக்கும்
    காணுகின்ற அத்தனையும்
    கண்ணால்தான் உண்டிடுவர்!

    வீடின்றி இருப்பார்கள்
    வீதியிலே படுப்பார்கள்
    நோயின்றி வாழ்வார்கள்
    நூறாண்டும் இருந்திடுவார்
    நூறுவீடு இருந்தாலும்
    நோயுடனே இருப்பார்கள்
    மாடிவீட்டு ஏழைகளின்
    வழக்கமான வாழ்வாகும்!

    ஏழைகளாய் இருந்தாலும்
    கோழைகளாய் இருக்காரே
    மாடிவீட்டில் வாழ்ந்தாலும்
    மதிப்பு ஒன்றும் வந்திடாது
    மண்குடிசை வாழ்வென்ன
    மதிப்பிலே குறைந்தாபோச்சு?
    மண்குடிசை மக்களன்றோ
    மாடிவீட்டின் அத்திவாரம்!

    Share
  • சூறையாடிவிட்டார்கள்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து               firing the library
    நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியதால்
    ஓடாக உழைத்துநிதம் உருப்படியாய்ச் செய்தமையே
    வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்!

    எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
    எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
    நித்தமும்நாம் படிப்பதற்குப் புத்தகமாய் இருக்குமவை
    எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்!

    நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
    நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடலாம் அறிவையெலாம்
    பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
    நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்!

    யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
    வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
    தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்ச்
    சிறந்தோங்கி நின்றதனைத் தேசமே தானறியும்!

    எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
    அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
    சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
    சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்!

    கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்தஇடம்
    கண்ணியத்தின் உறைவிடமாய்க் கருத்திலே நின்றஇடம்
    பெற்றவர்கள் பிள்ளைகளைப் பெரிதாக்க நின்றஇடம்
    பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்!

    கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தைக்
    கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொளுத்தியே விட்டார்கள்
    தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது
    ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே!

    நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறைப் பணிந்தாலும்
    தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா?
    எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா?
    அரக்க குணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா?

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –எம். ஜெயராமசர்மா

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanகாலத்தை வென்றவன். காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன். சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.  முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். “முத்தைத்தரு” என்று அருணகியாரைப் பாடவைத்து – அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது. கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்குஉலகில் பெரும் புகழைத்தேடித்தந்தது. இவையாவும் ஆண்டவனின் அனுக்கிரகத்தால் ஆகியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

    அருணகிரியார் முருகன் அருள் பெற்றதால் மடைதிறந்த வெள்ளமெனச் சந்தப்பாடல்கள் வந்து குவிந்தன. எங்கள் கவியரசரும் ஆண்டவனின் வரம்பெற்று வந்தவராகையால் கம்பனுக்குப் பிறகு “சந்தத்தை” தமிழில் கையாண்ட பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.

    நெற்றியில் விபூதியும், வாயிலே முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன். சேரக்கூடாத கூடாரத்துக்குள் சேர்ந்ததால் அவரின் பேச்சும் போக்கும் , ஏன் எழுத்தும் கூட மாறியது. ஆனால் அவரின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து நின்ற ஆண்டவன் நினைப்பு மட்டும் அப்படியேதான் அடங்கிக்கிடந்தது. காலமும் கனிந்துவரக் கடவுள் நம்பிக்கை கண்ணதாசனிடம் மேலோங்கத்தொடங்கியது.

    நாத்திகம் பேசி நாத்தழும்பேற்றியும், கடவுள் கண்டனம் செய்தும் நின்ற கண்ண தாசன் கடவுளே கதியென்னும் நிலைக்கு வந்து விட்டதை அவர் வாயிலாகவே நாங்கள் அறிந்து கொள்ளமுடிகிறது. “நாத்தினாக இருந்தது இரண்டு மூன்று ஆண்டுகளே. “கந்தபுராணம், பெரியபுராணம், கம்பராமாயணம், திருவாசகம், திருப்பாவை, நாலாயிரத்திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் இவற்றை எல்லாம் கண்டனம் பண்ணப் படித்தேன். ஆனால், அவற்றைப் படிக்கப் படிக்க என்மனம் அவற்றில் ஆழ்ந்து விட்டது என்று அவரே சொல்லுகின்றார். “நாத்திக வாதம் என்பது அரசியல் நோக்கங் கொண்டது என்பதையும், உள்மனத்தின் உண்மையான உணர்வல்ல என்பதையும் உணர்ந்தேன்” என்பது கண்ண தாசனின் வாக்குமூலமாகும்.

    கண்ணதாசன் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் என்ன தெரியுமா ? ” திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா” என்பதாகும். அவரின் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் “கிருஷ்ணர்” படமாகும்.

    இந்தியாவிலே கடவுளை நம்பாதவர்கள் ஒரு கட்சியாகக் கூட இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து கடவுளைக் கண்டனம் செய்தாலும் அதனால் கடவுளுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. அதே வேளை கடவுள் நம்பிக்கையும் இல்லாமற் போய்விடவும் இல்லை. இதில் கண்ணதாசன் மிகவும் நம்பிக்கை உடையவராக இருந்த படியால்தான் படித்தவர்களும் போற்றுகிறார்கள் பாமரரும் போற்று கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது.

    கடவுளைப்பற்றி சந்தேகம் வருபவர்களுக்கு …

    தெய்வம் என்றால் அது தெய்வம்
    வெறும் சிலை என்றால் அது சிலைதான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை

    என்று சொல்லும் விளக்கத்தைவிட வேறு எப்படிச் சொல்லமுடியும். இதுதான் கண்ணதாசன். சினிமாவுக்கு என்று எழுதப்பட்டாலும் உள்ளத்தில் இருப்பதுதானே வரமுடியும்.

    பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
    ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
    அவனைப் புரிந்து கொண்டால்
    அவன்தான் இறைவன்

    பாமரரும் புரியும்படி கடவுள் தத்துவத்தைக் காட்டிவது அவரின் தனித்துவம்தானே.

    ஆண்டவனின் அருள் அவருள் உறைந்து கிடந்தமையால்தான் அவரின் வார்த்தைகளில் அத்வைதம் இருந்தது. துவைதம் இருந்தது. விசிட்டாத்வைதமும் இருந்தது. வேதாந் தமும் சைவசித்தாந்தமும் கூட இருந்தது எனலாம். சரஸ்வதி அவரது நாவிலே சம்மாணம் போட்டே இருந்தாள். மேலே காட்டிய தத்துவங்களை எவ்வாறு நாசூக்காகக் கண்ணதாசன் காட்டுகிறார் பாருங்கள்…..

    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
    அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
    மண்ணைத்தோண்டி கண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி
    என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி
    உண்மை என்ன பொய்மை என்ன
    இதில் தேன் என்ன
    கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன
    நீ வந்த கதை என்ன

    தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
    இந்த ஊரென்ன
    சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன
    நீ வந்த கதை என்ன

    சகல வித தத்துவங்களும் இங்கே பாமரரரும் புரியச் சொல்லி நிற்கின்றார் கண்ண தாசன். இதனால் வெற்றித்திருமகன் தானே!

    கவிஞன் என்பவன் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கக் கூடாது. அவன் சொல்லும் கருத்துக்கள் உலகம் தழுவ வேண்டும், வள்ளுவர் குறள் அப்படிப்பட்டதுதான். வள்ளுவரின் பரந்து விரிந்த நோக்கால் அவரின் திருக்குறள் உலகம் தழிவியதாக இருக்கிறது. நமது கவிஞரும் அப்படியான ஒரு மனநிலையில்தான் செயற்பட நினைக்கின்றார். வள்ளுவர் அறம், பொருள், இன்பம் பற்றியெல்லாம் பாடினார். கண்ணதாசனும் அறத்தை , இன்பத்தை , பொருளை எல்லாம் பாடினார். அத்தோடு அருளையும் தமது பாட்டுக்களால் தந்தும் நின்றார்.

    சங்கரமடத்தைச் சரண் அடைந்தார். ஒருகாலத்தில் காவிகட்டியவர்களையும் சங்கரமடத்தாரையுமே சாடியவர் பின்பு தானாகவே சரண்புகுந்தார். இது அவரிடம் ஏற்பட்ட மடை மாற்றமாகும். அதே கண்ணதாசனே ” யேசுகாவியத்த ” ப்பாடி மீண்டும் தனது நோக்கை விரிவாக்கிக் கொள்கின்றார். புத்தரைப் பாடுகிறார். நபிகளைப் பாடுகிறார். சத்தியம், நேர்மை, சமத்துவம் யாவற்றையும் போற்றிப் பாடுகின்றார். இறையுணர்வு ஊறிவிட்டால் யாவும் சிறந்த கருத்துக்களாகவே வந்து நிற்கும். அதில் பல தத்துவங்கள் வந்துவிடும். வேதத்திலும், உபநிடதத்திலும், உன்னை அறிதல் என்பது அரிய பெரிய தத்துவமாகும். “தத்துவம் அஸி ‘ அஹம் பிரம்மாஸி” உபநிடதத்தின் உயிநாடியாகக் கருதப்படுகிறது. ரமண மகரிஷியும் “முதலில் நீ யார் என்பதை அறி” என்றுதான் சொல்லுகிறார். இப்படியான உயர்தத்துவக் கருத்தை கண்ணதாசன் மிகவும் எளிதாக்கி எமக்குத் தரும்விதம் அவரின் உயராற்றலைத்தான் வெளிப்படுத்துகிறது எனலாம்.

    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல்  நீ வாழலாம்

    வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் வாழுவோம் என்பது எல்லோரிடத்தும் எளிதாக் வரக்கூடிய தல்ல. அதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்னும் நாவுக்கரசர் அஞ்ஞாவார்த்தை “தலை வணங்காமல்வாழுதலில்” தெரி கிறதல்லவா?

    மனமானது சமநிலைக்கு வந்து விட்டால் எதற்கும் அது ஆயுத்தமாகிவிடும். இது ஒரு யோக நிலையாகும். இதனைக் கவிஞர் எப்படிச்சொல்கிறார் பாருங்கள்.

    கடலளவே கிசைதாலும்  மயங்கமாட்டேன் – அது
    கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்

    இந்த நிலை சாதாரணமாக எல்லோருக்கும் வந்து விடமாட்டாது என்பதைக் கவிஞரின் வரிகள் மிக அற்புதமாகக் காட்டிநிற் கின்றன் அல்லவா?

    குழப்பங்கள் வருவது மனித வாழ்வில் தடுக்கமுடியாத ஒன்று. ஆனால் அந்தக் குழப்பத்தையும் நாம் விலக்கி மனத்தைக் கலங்க விடக்கூடாது என்கின்றார் கவிஞர்.

    மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்

    வாழ்க்கையில் குழப்பம் வந்தால் தயக்கம்வரும், அதே நேரம் நடுக்கமும் வந்தே சேரும். அரசன் முதல் ஆண்டிவரை அனைவருக்கும் இந்த நிலை வெவ்வேறு உருவத் தில் – வெவ்வேறு விதமாக வரும். எல்லார் வீட்டுக்கும் வாசற்படி இருப்பது போல வேதனைகளும் வீடுதோறும் இருக்கவே செய்யும். இது எத்தனை அனுபவமான ஒரு மிகப்பெரிய கருத்து. யாருமே வேதனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது. எனவே …

    “கலங்காதிருமனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என ஆறுதலும் கூறுகின்றார் கண்ணதாசன் அவர்கள்.

    அதே வேளை …

    வந்த துன்பம் எது என்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயமிருந்தால்
    இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்

    …..

    நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

    என்று புத்தியும் கூறுகின்றார். அதோடு நின்றுவிடாமல் மிகவும் முக்கியமாக ஒன்றையும் சொல்லி நிற்கின்றார்…

    உனக்குக் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    எப்பொழுதும் நாம்  அனைவருமே நம்  நிலையை மட்டுமே தினமும் பார்த்துப்பார்து எனக்கு மட்டும் ஏன் இப்படி? அவன் நல்லாய் இருகிறானே! என்று அல்லும் பகலும் மற்றவர்களைப் பார்த்து நமக்குக் கிடைத்தவற்றையும் வீணடித்து விடுவோம். காலுக்குச் செருப்பில்லை என்பவனுக்கும் கவலை. அதே நேரம் காலே இல்லை என்பவனுக்கும் கவலை. கஞ்சிக்கு உப்பில்லை என்பவனுக்கும் கவலை. குடிக்கக் கஞ்சி இல்லையே என்பவனுக்கும் கவலை. இதில் எது முக்கியம் என்பதை உணராமல் இருப்பதே பெரிய கவலை என்பதை யாவரும் உணர்தல் வேண்டும் என்பதை கவிஞர் சொல்லுவதை விட யாராலும் இவ்வளவு எளிமையாகச் சொல்லி விட முடியாதல்லவா? எத்தனையோ பேர் எம்மைவிடவும் மோசமாக இருக்கிறார்கள் என்பதை ஒர் கணம் நினைத்தால் நாங்கள் படும் துன்பம் பெரிதாகவே தெரியாமல் போய்விடும் என்பதைக் கண்ணதாசன் சொல்லும் இடத்தால் அவர் உயர்ந்த கவிஞன் ஆகி நிற்கிறார் எனலாம்.

    வாழ்க்கையில் அவர் அனுபவிக்காத இன்பங்களும் இல்லை, .துன்பங்களும் இல்லை எனலாம். அவற்றை யெல்லாம் அவர் எங்களுக்குத் தனது கவிதைகள் வாயிலாகத் தரவும் மறக்க வில்லை.

    எங்கே வாழ்க்கை தொடங்கும் – அது
    எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம்
    என்பது எவருக்கும் தெரியாது 

    இது பெரிய தத்துவம்தான் ஆனால் இதில் கவிஞரின் ஒரு பங்கும் காணப்படுகிறது. சிறு கூடல்பட்டியில் இருந்து சென்னை வந்து படுக்க இடமில்லாமல் கடற்கரை ஓரத்தில் படுக்க அங்கும் படுக்க முடியாமல் போலீஸ்காரர்களால் கண்ணாதாசன் போக்கிடம் இல்லாமல் விரட்டி அடிக்கப்படுகிறார். அப்பொழுது அவரது வாழ்க்கைப் பயணம் எப்படி அமையப் போகிறது எங்கே முடியப்போகிறது என்பது அவருக்கே புரியாத ஒன்றாக இருந்திருக்கலாம் அல்லவா? இதுவும் ஒருகருத்தாயும் இருக்கலாம். அதேவேளை மனித வாழ்வை நாங்கள் தீர்மா னிக்கவும் முடியாதிருக்கும் என்பதும் கூட கருத்தாகலாம்தானே!

    சுத்திச்சுத்தி கடவுளிடம்தான் கண்ணதாசன் வருகின்றார். எதைச் சொல்லுவதானாலும் கடவுளையும் கூடவே வைத்திருப்பார்.

    நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனட்சாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் சாட்சியம்மா — அதுதான் உண்மையின் சாட்சியம்மா

    மனிதர்களே மனட்சாட்சிக்கு மதிப்பளியுங்கள். அல்லது தெய்வத்தை நம்புங்கள். இப்படி செய்யாதுவிட்டால் அது உங்களுக்கு ஏற்றதல்ல அது நல்ல வாழ்வுக்கும் வழி வகுக்காது என்று சொல்லி எமக்கு நற்சிந்தனை வழங்குகின்றார் கண்ணதாசன் அவர்கள்.

    அவரின் பாடல்கள் அழியாப் புகழ் பெற்றன என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் கண்ணதாசன் வாழ்கின்றார் என்றால் அவரின் “அர்த்த முள்ள இந்துமதம்” பெருங்காரணம் என்பதை எவருமே மறுக்க முடியாது.

    முப்பத்தெட்டு வருடங்கள் கவியரசனாகப் புவியையாண்டவன் கண்ணதாசன். எழுத்தாலும், பேச்சாலும் எம்மைக்கட்டிப்போட்டவன். “வாழநினைத்தால் வாழலாம்” என்று தைரியம் கூறிய தமிழ்க்கவிஞன். ஆகவே அவன் காலத்தை வென்று , காவியமாக வெற்றித்திருமகனாகவே நிற்கிறான்.

    [எம். ஜெயராமசர்மா, மெல்பேண்]

     

     

     

     

     

     

     

    Share
  • புகழோடு நிற்குமையா!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    கண்ணதாசன் கவிதைக்குக்                                           kannadasan - jayarama sarma
    கற்கண்டே தோற்றுவிடும்
    அவ்வளவு சுவையினையும்
    அவன்தந்து நின்றானே!

    காதலினைப் பாடிவிடின்
    காமனுமே வந்திடுவான்
    தேமதுரத் தமிழாலே
    திசைநுகரக் கவிதைதந்தான்!

    பாவாணர் மத்தியிலே
    பக்குவமாய்க் கவிதைதந்தான்
    பாரதிரக் கவிதந்த
    பாரதிக்கு மகனானான்!

    ஓவியமாய்க் கவிதைதந்தான்
    உயிர்ப்புடனும் கவிதைதந்தான்
    சேமமுற வாழ்வதற்கும்
    சீராகக் கவிதைதந்தான்!

    நாத்திகம் பேசிநின்ற
    நாட்களை நாமொதுக்கிவிடின்
    ஆத்திகம் தானவனை
    அனைவர்க்கும் காட்டியது!

    சிறுகூடல் பட்டியிலே
    சிரித்து விளையாடியவன்
    சிந்தனைக்குக் கவிதைதரும்
    சிறப்பினையே பெற்றுவிட்டான்!

    வேதக் கருத்தையெல்லாம்
    விளக்கியே கவிதைதந்தான்
    சாதலுக்கும் விளக்கம்தந்து
    தத்துவக் கவியும்சொன்னான்!

    நோதலுக்கும் ஒத்தடமாய்
    நுட்பமாய்க் கவிதைதந்தான்
    போதிக்கும் அவன்கவிதை
    புதுக்கருத்தைத் தந்தனவே!

    சொத்துக் குவிப்பதனைச்
    சுகமாகக் கொள்ளாமல்
    வித்தகனாய் இருப்பதையே
    விருப்பமாய்க் கொண்டானே!

    வர்த்தகச் சினிமாவில்
    மாட்டாமல் இருந்திருப்பின்
    வையகத்தை வாழ்விக்க
    வந்திருப்பான் கம்பனைப்போல்!

    அரசியலை எறிந்துவிட்டு
    ஆன்மீகம் நாடியதால்
    அவனின்று சமூகத்தின்
    அரவணைப்பில் நிற்கின்றான்!

    அர்த்தமுள்ள இந்துமதம்
    அவன்தந்த மருந்தாகும்
    அத்தனையும் எங்களுக்கு
    அருளுள்ள விருந்தாகும்!

    கவியரசு கண்ணதாச…
    காலமெலாம் நீவாழ்க!
    புவிமுழுதும் உன்கவிதை
    புகழோடு நிற்குமையா!

    செவிநுகரக் கவிதந்த
    கவியரசன் நீயன்றோ!
    புவிமுழுதும் உன்கவிதை
    பூக்களாய்க் கிடக்குதையா!!

     

    Share
  • வளர்ந்திடுக பல்லாண்டு !

    — எம்.ஜெயராமசர்மா

     

    Vallamai_5
    சொன்னயமும் பொருனயமும்
    சுவையாகத் தந்துநிற்கும்
    தென்னகத்தின் தமிழேடே
    சிறந்தென்றும் வாழியநீ (more…)

    Share
  • நீதானே தெய்வம் அம்மா

     


    எம். ஜெயராமசர்மா.. மெல்பேண் 

     

    கருவறையில் சுமந்தவளே14547_622869037804572_1530437069541877286_n
    கண்விழித்துக் காத்தவளே
    பெருவிருப்பத் தோடென்னை
    பெத்து வளர்த்தவளே
    அருமருந்தாய் காத்தவளே
    அன்பிலென்னைத் தோய்த்தவளே
    ஒருக்காலும் உனைமறவேன்
    உள்ளமெலாம் நீதானே

    நானழுத போதெல்லாம்
    ஊனுருகி நின்றவளே
    தேனெனவே எனதெச்சில்
    திகட்டாமல் சுவைத்தவளே
    பாலொழுகும் முகம்பார்த்து
    பனிபோல சிரித்தவளே
    பழிங்குமுகம் என்மனதில்
    பதிந்துபோய் இருக்கிறது

    பால்குடித்த போதெல்லாம்
    பல்லாலே கடித்திடுவேன்
    நீசிரித்து நின்றிடுவாய்
    நெத்தியிலே கொஞ்சிடுவாய்
    கடித்த இடம் நொந்தாலும்
    கருணையுடன் பார்த்திடுவாய்
    நினைத்துமே பார்க்கின்றேன்
    நீதானே தெய்வமம்மா

     

    Share
  • நிம்மதி நெஞ்சில் நிற்கும்!

    எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    அடிக்கடி அழுவாய் நீயும்
    அனைவரும்  விழிக்கச் செய்வாய்!
    துடித்து நாம் ஓடிவந்தால்
    தூக்கமாய் இருப்பாய் அப்போ                                                           nimmathi nenjil nirkum
    அடிக்கவா முடியும் உன்னை?
    அரவணைத் திடுவோம் நாங்கள்!
    சிரிப்புடன் விழித்துப் பார்ப்பாய்
    சிலிர்த்துமே நிற்போம் அங்கே!

    பல் இல்லா வாயினாலே
    பலகதைச் சொல்வாய் நீயும்!
    சொல்லிடும் கதைகள் கேட்டுச்
    சொக்கியே நிற்போம் நாங்கள்!
    மெல்லிய விரல்கள் கொண்டு
    மேனியைத் தீண்டும் போது
    எல்லையில் இன்பம் வந்து
    எங்களை அணைத்தே நிற்கும்!

    கவலையில் மூழ்கி நாங்கள்
    கட்டிலில் இருக்கும் போது
    ’களுக்’கென்று சிரித்து நிற்பாய்
    கவலைகள் பறந்தே போகும்!
    பதட்டமாய் இருக்கும் போது
    பால்முகம் பார்த்தோ மாயின்
    நெருக்கடி மறைந்தே போகும்
    நிம்மதி நெஞ்சில் நிற்கும்!

    பிரசவத்தில் தாய் அழுவாள்
    பிறந்தவுடன் நீ அழுவாய்
    பெண்ணாகப் பிறந்து விட்டால்
    பெற்றவரும் அழுதிடுவார்!
    அழுதழுது பிள்ளை பெற்று
    ஆருக்கு என்ன பயன்?
    அப்படி நினைப்பதனை
    அடியோடு மறவுங்கள்!

    ஆண்பிள்ளை பெண்பிள்ளை
    அத்தனையும் எம்பிள்ளை!
    ஆதலால் பிள்ளைதனில்
    அன்னியத்தைக் காட்டாதீர்!
    பிள்ளையின் சிரிப்பினிலே
    கொள்ளையின்பம் இருக்குதப்பா!
    குழந்தைகளைத் தெய்வமாய்க்
    கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!

    மலடு என்று பேசாமல்
    மனங் குளிரச் செய்வதற்கு
    வரமாக வந்ததுவே
    மடிதவழும் எம் குழந்தை!
    குழந்தை என்று சொன்னாலே
    குதூகலமே வந்து நிற்கும்!
    குழந்தைகளைப் பெற்றிடுவோம்
    குறைவின்றி வாழ்ந்திடுவோம்!

     

    Share
  • நல்ல வாழ்வு பிறந்திடும் !

     

    எம்.ஜெயராமசர்மா — மெல்பேண் 

     

    புத்தர் வந்தார் யேசு வந்தார் bhud
    புனிதரான காந்தி வந்தார்
    எத்தனையோ சொல்லிநின்றார்
    எதையும் காது வாங்கவில்லை

    சத்தியமே பேசு என்று
    தர்மயுத்தம் செய்தாரே
    அத்தனையும் என்னவாச்சு
    அவற்றை எண்ணிப்பார்த்தோமா

    ஊழல் என்னும் பேயது
    ஊரை விழுங்கப் பார்க்குது
    உலகம் முழுக்கப் பார்த்திடின்
    ஊழல் ஓங்கி நிற்குது

    தேர்தல் என்னும் பேரிலே
    தினமும் ஊழல் நடக்குது
    நீரில் கூடக் கலப்படம்
    நிறைந்து எங்கும் இருக்குது

    நீதிகிடைக்கும் என்று எண்ணி
    நீதி மன்றம் சென்றிடின்
    ஊதிப் பெருத்த ஊழல்தான்
    உறைந்து அங்கே கிடக்குது

    சமயச் சண்டை நடக்குது
    சாதி வெறி ஓங்குது
    இமயம் உடையப் பார்க்குது
    இன்னும் சிக்கல் தேவையா

    நல்ல எல்லாம் இருக்குது
    நாங்கள் எடுக்க மறுக்கிறோம்
    சொல்லி விட்டுப் போனதை
    சுமையாய் எண்ணி நிற்கிறோம்

    தொல்லை ஒழிய வேண்டிடின்
    துயரம் தொலைய எண்ணிடின்
    நல்லவற்றை நாடுவோம்
    நாட்டில் நன்மை வந்திடும்

    ஊழல் பேயை ஓட்டுவோம்
    உலுத்தர் தம்மை விரட்டுவோம்
    நாளை நல்ல தாக்குவோம்
    நல்ல வாழ்வு பிறந்திடும்

    Share
  • சிறப்பாக வரவேற்போம் !

    எம்.ஜெயராமசர்மா … மெல்பேண்

    t-images

    சித்திரைப் புத்தாண்டை
    சிறப்பாக வரவேற்போம்
    எத்திக்கும் இன்பம்பொங்க
    இறைவனிடம் வரம்கேட்போம்
    முத்திக்கு வித்தாக
    முன்னிற்கும் கணபதியை
    சொத்தான தமிழ்கொண்டு
    துதிபாடி நிற்போமே
    கோவில்சென்று கும்பிட்டு
    குறையெல்லாம் போக்கிடுவோம்
    குலதெய்வ வழிபாட்டை
    குடும்பத்துடன் செய்திடுவோம்
    நாலுபேர் மனம்மகிழ
    நயமாக நடந்திடுவோம்
    நாடுசெழிக்க வேணுமென்று
    நாம்வேண்டி நிற்போமே
    பட்சணங்கள் பலசெய்து
    பாசமொடு பகிர்ந்துண்போம்
    இஷ்டமுடன் கூடிநின்று
    எல்லோர்க்கும் விருந்துவைப்போம்
    கஷ்டமெலாம் போகவென்று
    கடவுளைநாம் வேண்டிடுவோம்
    துஷ்டகுணம் ஓடிவிட
    தூய்மையுடன் நின்றிடுவோம்
    அன்னைதந்தை போற்றிடுவோம்
    அனைவரையும் அரவணைப்போம்
    சின்னத்தனம் அத்தனையும்
    சிதறியோடச் செய்துநிற்போம்
    சொன்னயமாய்ப் பேசிநிற்போம்
    சுற்றமெலாம் சூழநிற்போம்
    என்னாளும் எம்மனத்தில்
    இரக்ககுணம் ஓங்கட்டும்

     

    Share
  • மேலோங்கி நிற்கிறது

    எம்.ஜெயராமசர்மா …. மெல்பேண்

    applepromoxxx

    விஞ்ஞான வளர்ச்சியினால் விந்தை பல வந்தனவே
    எஞ்ஞான்றும் பார்த்து நிற்க எத்தனையோ வருகிறதே
    நல்ஞானம் என்றெண்ணி நயந்தேற்று நிற்கின்றோம்
    விஞ்ஞானம் தானிப்போ மேல் ஓங்கி நிற்கிறதே

    விளையாத நிலமெல்லாம் விளைந்தோடி நிற்கிறது
    விதையெல்லாம் விரைவாக வேர்விட்டு எழுகிறது
    தரையுள்ளே பலபாதை தலை நிமிர்ந்து நிற்கிறது
    விரைவாகப் பயணிக்க விமானம் பல வந்தாச்சு

    விண்ணோக்கிக் கட்டிடங்கள் விரைந்தோங்கி நிற்கிறது
    மண்ணுள்ளோர் விண்செல்ல வாய்ப்புமே இருக்கிறது
    எண்ணிவிடும் எண்ணமெலாம் எல்லோர்க்கும் சொல்லிவிட
    கண்முன்னே வந்துள்ளார் கணினி எனும் காப்பாளர்

    கணினி யிப்போ உலகெங்கும் களிப்புடனே வருகிறது
    ணினியெனும் கருவியிப்போ காலத்தின் தேவையது
    ணினியின்றி கல்விக்கூடம் காணுவதும் அரிதிப்போ
    கற்கின்றார் கைகளெல்லாம் கணினி தான் இருக்கிறது

    மடிக்கணினி வந்தாச்சு மனமெல்லாம் நிறைந்தாச்சு
    படிக்கின்ற மாணவரின் பார்வையெல்லாம் அங்கேதான்
    அடுக்கடுக்காய் பலவேலை அதனூடே பார்க்கின்றார்
    தடுக்கிநாம் விழுந்திடுனும் தரையெங்கும் கணினிமயம்

    தொலைக்காட்சி கூடயிப்போ கணினியுடன் தொடர்பாச்சு
    தொழில் துறைகள் கணினியுடன் சொந்தமாய்ப் போச்சுயதிப்போ
    ணினியில்லாத் துறையை நாம் காணவேமுடியாது
    ணினியிப்போ நம்வாழ்வில் கச்சிதமாய் இணைந்தாச்சு

    காதலரின் தூதுவனாய் கணினிதான் இருக்கிறது
    காவல்துறை ஊழியனாய் கணினியே அமைஞ்சாச்சு
    மருத்துவத்தில் நுழைந்திப்போ மகத்தான இடம்பிடித்து
    இருக்கையிலே இருக்கிறது எல்லாமே கணினியன்றோ

    வானவூர்தி போவதற்கு வழிசமைத்து நிற்கிறது
    வானிலையைக் கணிப்பதற்கு வலக்கரமாய் இருக்கிறது
    கானமெலாம் கேட்பதற்கு கைகொடுத்து நிற்கிறது
    ணினியெனும் கருவியிப்போ கண்போல இருக்கிறது

    பழந்தமிழ் நூலையெல்லாம் பத்திரமாய் வைப்பதற்கும்
    பக்திப் பனுவல்களை பலபேரும் படிப்பதற்கும்
    சுத்தியுள்ள கோவில்பற்றி சுகமாக அறிவதற்கும்
    சக்திமிக்க ஒன்றாகிச் சபைநடுவே நிற்கிறது

    ஓங்கி உலகளந்தான் புகழ்கேட்டு மகிழ்வதற்கும்
    உமையோடு இணைந்தானின் உயர்பற்றி அறிவதற்கும்
    பாங்காகத் தத்துவங்கள் பலபார்த்து விளங்குதற்கும்
    வாங்கிநாம் மகிழ்ந்திடுவோம் வகைவகையாய் கணினிகளை !

    படத்திற்கு நன்றி:

    http://www.shutterbug.com/content/computer-digital-photography

    Share
  • தம்மையே இழந்திடுவார் !

    எம்.ஜெயராமசர்மாimages

    போதை தலைக்கேறி
    புத்தி  தடுமாறி
    பாதைதனை மறந்து
    பரிதவிக்கும் வேளையிலே

    காதும் அடைத்துவிடும்
    கண்களுமே கட்டிவிடும்
    பேதலித்த மனத்தோடு
    பெருமரமாய் வீழ்ந்திடுவர்

    வேர்த்து விறுவிறுக்க
    வெயிலெல்லாம் திரிந்தலைந்து
    பார்த்து உழைத்தபணம்
    பாதியிலிலே போய்விடுமே

    சோற்றுக்குக் காத்திருப்போர்
    சுகமின்றி படுத்திருப்போர்
    வீட்டிலே காத்திருக்க
    வீதியிலே குடித்துநிற்பார்

    நடுவீதி நாயகராய்
    நாளுமே நிற்பார்கள்
    தெருநாய்கள் கண்டுவிடின்
    தீராத கோபம்கோள்ளும்

    வெறிதலையில் ஏறிவிடின்
    நெறியெல்லாம் கெட்டுவிடும்
    தறிகெட்டுப் போயிடுவார்
    தம்மையே இழந்திடுவார்

    குடிபோதை வந்துவிடின்
    குணமெல்லாம் கெட்டுவிடும்
    மனைகூட அவனுக்கு
    மாறாகத் தெரிந்துவிடும்

    வாய்மையும் ஓடிவிடும்
    வல்லமையும் ஒழிந்துவிடும்
    பெய்கொண்ட மனமங்கே
    பேருருவம் கொண்டுவிடும்

    சிவமாக இருந்தவனோ
    சவமாகப் போயிடுவான்
    உவமானம் சொல்வதென்றால்
    உயிரற்ற பிணம்தானே

    மதியிழந்து கதியிழந்து
    மானமும் இழந்துநிற்கும்
    குடிபோதை நம்வாழ்வில்
    கெடுதியே தந்துவிடும்

    நாகரிகம் என்றெண்ணி
    நன்றாக குடித்திடுவார்
    நாட்டிலே உள்ளவரை
    நாகரிகம் என்னாகும்

    ஆதலால் குடிவிடுவோம்
    அனைவர்க்கும் வாழ்வுவரும்
    பேதலிக்கும் மனக்குரங்கை
    பிய்த்தெறிவோம் வாருங்கள் !

    http://fineartamerica.com/art/all/wine+bottle/canvas+prints

    Share