-எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

கண்ணதாசன் கவிதைக்குக்                                           kannadasan - jayarama sarma
கற்கண்டே தோற்றுவிடும்
அவ்வளவு சுவையினையும்
அவன்தந்து நின்றானே!

காதலினைப் பாடிவிடின்
காமனுமே வந்திடுவான்
தேமதுரத் தமிழாலே
திசைநுகரக் கவிதைதந்தான்!

பாவாணர் மத்தியிலே
பக்குவமாய்க் கவிதைதந்தான்
பாரதிரக் கவிதந்த
பாரதிக்கு மகனானான்!

ஓவியமாய்க் கவிதைதந்தான்
உயிர்ப்புடனும் கவிதைதந்தான்
சேமமுற வாழ்வதற்கும்
சீராகக் கவிதைதந்தான்!

நாத்திகம் பேசிநின்ற
நாட்களை நாமொதுக்கிவிடின்
ஆத்திகம் தானவனை
அனைவர்க்கும் காட்டியது!

சிறுகூடல் பட்டியிலே
சிரித்து விளையாடியவன்
சிந்தனைக்குக் கவிதைதரும்
சிறப்பினையே பெற்றுவிட்டான்!

வேதக் கருத்தையெல்லாம்
விளக்கியே கவிதைதந்தான்
சாதலுக்கும் விளக்கம்தந்து
தத்துவக் கவியும்சொன்னான்!

நோதலுக்கும் ஒத்தடமாய்
நுட்பமாய்க் கவிதைதந்தான்
போதிக்கும் அவன்கவிதை
புதுக்கருத்தைத் தந்தனவே!

சொத்துக் குவிப்பதனைச்
சுகமாகக் கொள்ளாமல்
வித்தகனாய் இருப்பதையே
விருப்பமாய்க் கொண்டானே!

வர்த்தகச் சினிமாவில்
மாட்டாமல் இருந்திருப்பின்
வையகத்தை வாழ்விக்க
வந்திருப்பான் கம்பனைப்போல்!

அரசியலை எறிந்துவிட்டு
ஆன்மீகம் நாடியதால்
அவனின்று சமூகத்தின்
அரவணைப்பில் நிற்கின்றான்!

அர்த்தமுள்ள இந்துமதம்
அவன்தந்த மருந்தாகும்
அத்தனையும் எங்களுக்கு
அருளுள்ள விருந்தாகும்!

கவியரசு கண்ணதாச…
காலமெலாம் நீவாழ்க!
புவிமுழுதும் உன்கவிதை
புகழோடு நிற்குமையா!

செவிநுகரக் கவிதந்த
கவியரசன் நீயன்றோ!
புவிமுழுதும் உன்கவிதை
பூக்களாய்க் கிடக்குதையா!!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “புகழோடு நிற்குமையா!

  1. அன்புநிறை ஜெயராமசர்மா  அவர்களுக்கு..

    காவிரிமைந்தனின் கனிவான வணக்கங்கள்.

    எண்ண ரதமேறி நம் கவிஞர் கண்ணதாசன் எழுதிவைத்த எல்லாமே…
    பொன்னாக மின்னுதன்றோ…  வண்ணத்தமிழ் அங்கே வாழும் தமிழாகி 
    எந்நாளும் வென்றிடுதே!   சொல்லாத சொல் எங்கே.. சுவை சிந்தும் பொருள் அங்கே..
    அணு அணுவாய் அச்சுவையை அறிந்தவர்கள் ரசிகரன்றோ?
    உங்கள் வரிகளில் அந்த சுகத்தை நானும் கண்டேன்…
    எந்த வரி இந்தக் கவிதைக்குத் தலைப்பாகும் என்று நான் எதிர்பார்த்தேனோ…
    அந்த வரியே அங்கு மகுடம் சூட்டியதைப்போல் மிளிர்ந்ததை என்ன சொல்வேன்?

    நன்றிகளும்..  இனி எந்த நாளும் தொடர்புகளும்.. வளர்க..

    அன்புடன்..
    காவிரிமைந்தன் 

    அபுதாபி 

  2. எண்ணமெல்லாம் நிறைந்து
    எழுதவைத்த,
    எழுத்தை ரசிக்கவைத்த
    கண்ணதாசன் புகழ்பாடும
    வண்ணத்தமிழ்க் சவிதை நன்று,
    வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *