இசைக்கவி ரமணன்

மதுரையில் கோரிபாளையம் மிகவும் சுவாரசியமான இடம். கே.கே. நகரிலிருந்து சைக்கிளில், சினிப்ரியா தியேட்டரைத் தாண்டி, வலதுபுறம் திரும்பி, வாய்க்கால் வழியாக அமைதியும், மரங்களும் கப்பிக் கிடக்கும் காந்தி நினைவாலயத்தைத் தாண்டி, வலது பக்கம், சந்தடியும், புழுதியும் மிகுந்த தமுக்கம் மைதானம் பக்கம் செல்லாமல், இடதுபுறம் திரும்பினால் கோரிபாளையம்தான். வைகை ஆற்றுக்கு அந்தப் புறம் இருப்பதால், இதை வடகரை என்றும் சொல்வார்கள்.

நாம் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் செல்கிறோம். இரவு 12 மணிக்குமேல் இருக்கும். மதுரையில் நள்ளிரவு, நடுப்பகல் இவற்றுக்கு அதிகம் வேறுபாடு கிடையாது! பகலில் கொளுத்தும்; இரவில் பிழியப் பிழியப் புழுங்கும், அவ்வளவுதான்! ராஜ மாதங்கி அரசோச்சும் மதுரை ஒருபோதும் தூங்காது. ராத்திரியின் வசியப் போர்வையில் கட்டிடங்களும் களைத்திருக்கும் காட்சியை நான் உலகெங்கும் கண்டிருக்கிறேன், மதுரையைத் தவிர! மாடுகள் வாலசைத்தபடி, அசைபோட்டபடிப் படுத்திருக்கும். கண்கள், சாலை மற்றும் வாகன விளக்கொளியில், நெருப்புக் கங்குகள் போல் ஜொலிக்கும். கட்டை வண்டியில், ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அசந்திருக்கிறான் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அசதியிலும் ஒரு கூச்சம் இழையோடுகிறது! மதுரை, மறவரின் வீரமண். இன்றைக்கும், கால்வைத்தாலே ஜிவ்வென்று ஏறுகிறது எனக்கு.

நடு ராத்திரியில், கோரிப்பாளையத்தில் எனக்கென்ன வேலை? வேலைக்கு நடுவே ஓர் இடைவேளை! ஆம், அப்போது இந்து பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு மிகவருகே வீடு. வெற்றிலை துப்ப (புகையிலை என்று படிக்கவும்!) வெளியே வந்தால் வீட்டுக்காரி பார்த்து விடுவாள்! இன்றும் உற்ற நண்பர்களாகத் தொடரும் சக ஊழியர்கள், ஜன்னல் வழியே சைகையிலேயே சமையல் என்ன என்பதைக் கேட்டுக்கொண்டு விடுவார்கள். அலுவலகத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் இனிப்பை அள்ளிக் கொண்டு வந்து விடுவார்கள்! அருகாமை, அணுக்கம் இரண்டும் சேர்ந்தே இருந்தன எங்கள் மதுரை வாழ்க்கையில்.

எல்லோரும் தூங்கிவிட்ட பிறகு, படு சுறுசுறுப்பாய் இயங்குவதே பத்திரிகை அலுவலகம். இரவில்தான் அச்சுவேலை. இயந்திரம், மளமளவென்று அச்சிட, அந்தக் காதுபிளக்கும் ஓசைக்கு நடுவே ஊழியர்கள், பரபரப்பாகவும், உற்சாகமாகவும் வேலை செய்வதைப் பார்க்கும்போதே நமக்கும் புத்துணர்ச்சி ஏற்படும். ஆறு பிரிவுகளாக இருக்கும் இயந்திரம்; அடிக்கடி மாநில சுயாட்சி கேட்டு முரண்டு பிடிக்கும்; அதைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் உடனே சரிசெய்ய வேண்டும். பேச முடியாது. சீழ்க்கைதான் அச்சாலய மொழி. மைதோய்ந்த விரலை வாயில் வைத்துச் சீட்டியடித்தால் மறுநாள் தர்மாஸ்பத்திரிதான்! நாலு பேர் அடிக்கக் கூடிய சீழ்க்கையை ஒருவரே விரல்போடாமல் அடிப்பதைப் பத்திரிகை அச்சிடும் இடத்தில்தான் பார்க்கலாம். இந்தச் சைகைகளால்தான் தவறுகளை உடனே சரிசெய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், பல நூறு பிரதிகள் வீணாகிவிடும். மறுநாள் தலைமை அலுவலகத்து சோடாபுட்டிக் கண்ணாடிக் கணக்கர்களுக்குப் பதில் சொல்வதற்குள் உயிரே போய்விடும். பழுதுபட்ட பிரதி ஏதேனும் வெளியே போய்விட்டால் இன்னோர் ஆபத்து; எங்கோ சத்திரப்பட்டி கிராமத்திலிருந்து எப்போதோ ஓய்வுபெற்ற ஒருவர் ஒரு தபால் கார்டில், ‘இதுதானா இந்து?’ என்ற தலைப்பில் சிற்றெறும்புக் கையெழுத்தில் கம்பராமாயணத்தை எழுதி அனுப்பிவிடுவார். பலமைல் தூரம் சைக்கிள் மிதித்து, வயக்காட்டில் அதைத்தள்ளிக் கொண்டுபோய் அவரது என்றைக்கும் கட்டி முடியாத வீட்டுக்குச் சென்று அவர் காலில் விழவேண்டும். இந்த மரியாதையை மிகவும் ரசித்த பிறகே அவர், ‘அடடா! நான் ஒண்ணுமே பெரிசா எழுதலீங்களே! இதுக்குப் போயா இத்தன தொலவு வருவீங்க?’ என்பார் அப்பாவிபோல! ‘இது எங்க கடமை’ என்று நாங்களும் சிவாஜி மாதிரிக் கனிவாகச் சொல்வோம். கூடவந்த ஏஜெண்டோ எரிச்சலோடு, ‘சார், இவுரு மூணு மாசமா சந்தாவே கொடுக்காம..பேச்சப் பாரு..’ என்று சில ‘பிரத்யேக’ அடைமொழிகளை முணுமுணுத்துவிட்டு நான் பக்கத்தில் இருப்பதைத் திடீரென்று உணர்ந்து வெட்கப்பட்டுத் தலையைச் சொறிந்து கொள்வார்! உள்ளே எங்களுக்குக் காப்பி கொடுக்க முடியுமா என்று பார்க்கப் போன வாசகர், தன் முயற்சியில் (நல்ல காலமாய்த்) தோற்றுத் திரும்புவார். அதை மறைத்துக் கொள்ள ஓர் ஏவு கணையை நம் மீது வீசுவார். ‘இன்டுல வரவர நீசஸ் (நியூஸ் என்பதற்கு இவரே பன்மை பாவித்து அதை நியூஸஸ் ஆக்கி அதை வக்கணையாக நீசஸ் என்கிறார்!) எல்லாம் ஒண்ணும் சரியா இல்ல. கொஞ்சம் பாத்துக்கிடணும்.’ அவர் எழுதிய அந்தக் கார்டோடு அவரையும் அப்படியே கிழித்துப் போடலாம் போலத் தோன்றும். ‘ஆகட்டுங்க, அவசியம்,’ என்று சொல்லி விட்டு வருவோம். ‘ஒங்களுக்கும் வேல இல்ல ஒங்க ஆபீசுக்கும் வேற வேல இல்ல,’ என்று சலித்துக் கொண்டே வருவார் சத்திரப்பட்டி சண்முகவேல்.

 ram1

குடிசைகளால் நெருக்கப்பட்ட ஒரு சந்தில் சைக்கிளை ஒருமாதிரியாகத் தள்ளிக் கொண்டு வரும்போது, எதிரே கருப்பு மின்னலாய், அப்போதுதான் பிறந்திருந்த பன்றிக் குட்டி ஒன்றை நெஞ்சோடு அணைத்துக் கொஞ்சிக் கொண்டு துள்ளி வந்தாள் ஒருத்தி! அதுபோல் அழகான இளம்பெண்ணை இதுவரை நான் காணவில்லை! எனக்கென்னமோ பராசக்திதான் அந்தச் சேரிப்பெண்ணாக வந்து என் சித்தத்தை நிரந்தரமாகச் சீண்டிவிட்டுப் போனதாகவே தோன்றுகிறது. நிக்கல் போன்ற ஓர் உலோகத்தில் அவள் மூக்குப்பொட்டு அணிந்திருந்தாள். அது, மொத்தக் கருப்பையும் தூக்கலாய்க் காட்டியது. அந்தக் கருமையின் பளபளப்பும், மின்னற் பற்களும், சோழி குலுங்கும் சிரிப்பும், பேரழகின் ராஜாங்கத்திலிருந்து நான் பேதைபோல் அவளுக்குத் தென்பட்டதும் என்னால் என்றும் மறக்க முடியாது. தரிசனம் என்பது எங்கோ தியானத்திலோ, மலையுச்சிக் கோவிலிலோதான் நேரவேண்டியது என்பதில்லை. நெருக்கடியான சந்தில், நேருக்கு நேர் நேர்வதே தரிசனம்! நமது நிலையை மாற்றுவதில்லை தரிசனத்தின் நோக்கம். என்றும் மறக்க முடியாதபடி, நம் நிலையை நமக்குச் சொல்லிவிடுவதுதான் தரிசனத்தின் குசும்பு!

 unnamed

அவள் கையில்பட்டு நெஞ்சில் குலவியதாலோ என்னமோ, பன்றிக் குட்டியைப் போல் அழகான ஜீவன் வேறெதுவுமே இருக்க முடியாது என்று தோன்றியது எனக்கு. இதை என்னோடு வைத்துக் கொண்டிருந்திருக்கலாம். கனமுடையாய் என் தந்தையாரிடம் இதைப்போய்ச் சொன்னேன். அவர், ‘ஆமாண்டா, குட்டியில எல்லாம் அழகாத்தான் இருக்கும். அட நீ கூடத்தான் கொழந்தயா இருக்கும்போது கொஞ்சம் பாக்கும்படியா இருந்தே!’ என்றாரே பார்க்கலாம்!

அட, உங்களைக் கோரிப்பாளையத்தில் நிற்கவைத்துவிட்டு நான் பாட்டுக்குச் சத்திரப்பட்டிக்குப் போய்விட்டேனா? இதோ, ஒரே நிமிடம், வந்து விட்டேன்!

புகைப்படங்கள் : ரமணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *