-பிச்சினிக்காடு இளங்கோ   

அறுபதைத் தொடும்போதுதான்                                                          Bhagat-Singh
உன்னைத் தொட்டேன்
மன்னிக்கவும்!

செவிவழியாய்ச் சேர்த்தவை
ஏராளம் எனினும்
கண்வழியாய் நீ
என்மனம் புகக்

கவிஞர் மலர்மகனே காரணம்!

பொருளே வாழ்க்கையென
வாழுவோர்க்கிடையில்
பொருளுடையதாக வாழ்க்கையை
ஆக்கப் பார்க்கிறேன்…

அறுபதை நெருங்கியும்கூட
ஆகவில்லை அந்தக்கனவு!

அகவை இருபத்துநான்குக்குள்
அகப்பட்டுவிட்டது உனக்கு!
பொருளுடையதாய் மட்டுமல்ல
புரட்சியுடையதாய்…
புகழுடையதாய்!

அழுக்கும்
இழுக்கும் சேராப்
புரட்சி நெருப்பாய்
நூறுவிழுக்காடு
வாழ்ந்த சூரியன் நீ!

நீ
மரித்ததற்குப்பின்
இன்னும்
பிறக்கவில்லையே ஏன்?

சூரியன்
மரிப்பதுமில்லை!
பிறப்பதுமில்லை!

உன்னைப் பேசுகிறவர்களாக
வாழ்கிறோம்
உன்னைப்போல்
வாழ்கிறவர்களாக இல்லை!

புரட்சியைக்
கொச்சைப்படுத்தலைத் தவிர
புரட்சியின் எச்சம்
எதுவுமே இல்லை

புரட்சி
அடைமொழியாய்ச்
சுவர்மொழியாய் வாழ்கிறது!

பயம்
உன்னைக்கண்டுதான்
பயந்திருக்கிறது!
மரணம்

உனக்காகத்தான்
அழுதிருக்கிறது!

நகலெடுக்க முடியாத
அசல் நீ!
நிழலே இல்லாத
நிஜம் நீ!
சிறையைத் திருத்திய
சீர்திருத்தம் நீ!
பயணத்திற்குக் கிடைத்த
பகல் நீ!

உன் நாத்திக விளக்கம்
ஆறுபடை வீடிருந்தும்
அந்நிய மண்ணில்
அடிபடும் தமிழர்க்குப் பாடம்!

காந்திக்கு
நீ வைத்த கேள்விகள்
அறிவின் சூடு!

விடம் குடித்தும்
நேரம் நெருங்கியும்
படித்துக்கொண்டிருந்தான்
சாக்ரடீஸ்!

நீயும்
மரணம் வரையிலும்
படித்துக்கொண்டிருந்தாய்
மாவீரனை!

நீ படித்தவன்!
அநீதி கண்டு துடித்தவன்!
உண்மையை வெடித்தவன்!

இந்திய மண்ணில்
நீதான் மாவீரன்!

(14.12.2011 மலர்மகன் எழுதிய
பஞ்சாப் சிங்கம் பகத்சிங் நூலைப்படித்ததும் எழுதியது)

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க