மாடிவீட்டு ஏழைகள்!

-எம்.ஜெயராமசர்மா – மெல்பேண்

ஓலைக் குடிசைக்குள்
ஒக்காந்து இருந்தாலும்                                                                 huts
காலுக்குச் செருப்புமின்றி
கல்லுமுள்ளு நடந்தாலும்
ஆளுக்கு ஆள்நல்லாய்
அன்புகாட்டும் பண்பெலாம்
மாடிக்குள் வந்திடுமா
மனதிலெழும் கேள்வியது!

கூழையே குடிப்பார்கள்
குதூகலமாய் இருப்பார்கள்
நாலுகாசு கிடைத்தாலும்
நல்லாத்தான் மகிழ்வார்கள்
காரென்றும் வீடென்றும்
கணக்கின்றி வைத்திருப்பர்
மாடிவீட்டு ஏழைகளாய்
வாழ்ந்திடுவார் என்னாளும்!

நாகரிகம் தெரியாது
நஞ்சுமவர் நெஞ்சிலிலை
ஓய்வின்றி உழைப்பார்கள்
உறக்கமோ நல்லாய்வரும்
வேர்வையென்றால் தெரியாது
விலைபேசி நிற்பார்கள்
மாடிவீட்டு மக்களுக்கு
மருந்துவேணும் உறங்குதற்கு!

நாளெல்லாம் பசித்திடுமே
நன்றாக உழைப்பார்கள்
வேருக்கு நீர்போல
விலக்கின்றி உண்டிடுவார்
காசிருக்கும் ஆளிருக்கும்
கச்சிதமாய் உணவிருக்கும்
காணுகின்ற அத்தனையும்
கண்ணால்தான் உண்டிடுவர்!

வீடின்றி இருப்பார்கள்
வீதியிலே படுப்பார்கள்
நோயின்றி வாழ்வார்கள்
நூறாண்டும் இருந்திடுவார்
நூறுவீடு இருந்தாலும்
நோயுடனே இருப்பார்கள்
மாடிவீட்டு ஏழைகளின்
வழக்கமான வாழ்வாகும்!

ஏழைகளாய் இருந்தாலும்
கோழைகளாய் இருக்காரே
மாடிவீட்டில் வாழ்ந்தாலும்
மதிப்பு ஒன்றும் வந்திடாது
மண்குடிசை வாழ்வென்ன
மதிப்பிலே குறைந்தாபோச்சு?
மண்குடிசை மக்களன்றோ
மாடிவீட்டின் அத்திவாரம்!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *