-எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து               firing the library
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியதால்
ஓடாக உழைத்துநிதம் உருப்படியாய்ச் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்!

எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
நித்தமும்நாம் படிப்பதற்குப் புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்!

நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடலாம் அறிவையெலாம்
பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்!

யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்ச்
சிறந்தோங்கி நின்றதனைத் தேசமே தானறியும்!

எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்!

கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்தஇடம்
கண்ணியத்தின் உறைவிடமாய்க் கருத்திலே நின்றஇடம்
பெற்றவர்கள் பிள்ளைகளைப் பெரிதாக்க நின்றஇடம்
பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்!

கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தைக்
கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொளுத்தியே விட்டார்கள்
தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது
ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே!

நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறைப் பணிந்தாலும்
தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா?
எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா?
அரக்க குணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *