எம்.ஜெயராமசர்மா … மெல்பேண்
சித்திரைப் புத்தாண்டை
சிறப்பாக வரவேற்போம்
எத்திக்கும் இன்பம்பொங்க
இறைவனிடம் வரம்கேட்போம்
முத்திக்கு வித்தாக
முன்னிற்கும் கணபதியை
சொத்தான தமிழ்கொண்டு
துதிபாடி நிற்போமே
கோவில்சென்று கும்பிட்டு
குறையெல்லாம் போக்கிடுவோம்
குலதெய்வ வழிபாட்டை
குடும்பத்துடன் செய்திடுவோம்
நாலுபேர் மனம்மகிழ
நயமாக நடந்திடுவோம்
நாடுசெழிக்க வேணுமென்று
நாம்வேண்டி நிற்போமே
பட்சணங்கள் பலசெய்து
பாசமொடு பகிர்ந்துண்போம்
இஷ்டமுடன் கூடிநின்று
எல்லோர்க்கும் விருந்துவைப்போம்
கஷ்டமெலாம் போகவென்று
கடவுளைநாம் வேண்டிடுவோம்
துஷ்டகுணம் ஓடிவிட
தூய்மையுடன் நின்றிடுவோம்
அன்னைதந்தை போற்றிடுவோம்
அனைவரையும் அரவணைப்போம்
சின்னத்தனம் அத்தனையும்
சிதறியோடச் செய்துநிற்போம்
சொன்னயமாய்ப் பேசிநிற்போம்
சுற்றமெலாம் சூழநிற்போம்
என்னாளும் எம்மனத்தில்
இரக்ககுணம் ஓங்கட்டும்


Leave a Reply