இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 14 , 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு சொ.வினைதீர்த்தான் அவர்கள்

**************************************************************************************

 

vinay3முத்துச்சிவிகை; முத்துக்கள் இழைத்து அலங்கரித்த பல்லக்கு. இதனை ஒருவரை பெருமை படுத்த வழங்கியதாக தமிழ் இலக்கியங்கள் அறிவிக்கின்றன. செங்குந்தர் குலத்தைப் போற்றி ‘தக்கயாகப் பரணி’ இலக்கியம் படைத்த ஒட்டக்கூத்தருக்கு செங்குந்தர்கள் மனம் மகிழ்ந்து முத்துச்சிவிகை அளித்து அவரைப் பெருமைப் படுத்தினார்கள் என்பது வரலாறு.

பெண்ணாடகம் சென்று வழிபட்ட பின்னர் நெல்வாயில் அரத்துறையைத் தரிசிக்க திருவுள்ளம் கொண்டார் திருஞானசம்பந்தர். செல்லும் வழியில், மாலைப்  பொழுதாகிவிட, களைப்பு மேலிட திருமாறன்பாடியில் இரவு தங்கினார். அவ்வூர்வாசிகளின் கனவில் தோன்றிய சிவன், “எனது பக்தன் சம்பந்தன் களைப்பு மேலிட சத்திரத்தில் உறங்குகின்றான். அவனுக்காக எமது கோயிலில் முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை முதலியவற்றை அளித்துள்ளோம். அவற்றை அவனுக்கு வழங்கி என்னிடம் அழைத்து வருக,” என ஆணையிட்டார். விழித்தெழுந்த அவ்வூர் மக்கள் கனவில் தோன்றிய சிவன் உரைத்தபடியே கோயிலில் முத்துச்சிவிகை, குடை, சின்னம் ஆகியவை இருக்கக் கண்டு வியந்து, அவற்றுடன் சென்று சம்பந்தரை வரவேற்றதாக திருமாறன்பாடி தலவரலாற்றில் கூறப்படுகிறது.

இந்த திருமாறன்பாடி நகரில் உள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 170 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது இந்த வார வல்லமையாளர் திரு. சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு.

vinay2காரைக்குடியைச் சேர்ந்த திரு. வினைதீர்த்தான் அவர்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவர். பணி ஓய்விற்குப் பிறகு, தனது பொழுதை பயனுள்ள வகையில் பல தன்னார்வப் பணிகளில் செலவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டது போல பள்ளி மாணவர்களுக்கு தன் முன்னேற்றப் பயிலரங்கங்கள் நடத்துவதும் ஆகும். இம்முறை இப்பள்ளியில் பயிலரங்கம் நடத்திய பொழுது மாணவச் செல்வங்களின் மனதில் பதியும் வண்ணம் அவ்வூர் தல வரலாற்றையும், முத்துச் சிவிகையையும் தொடர்பு படுத்தி உரையாடி இருப்பது அவர் வல்லமையில் பகிர்ந்து கொண்ட அவரது கட்டுரை [https://www.vallamai.com/?p=44002] அறியத் தருகிறது. அதில், முத்துச்சிவிகையை அடைவதை குறிக்கோளை அடைவதுடன் ஒப்பிட்டுள்ளார். இதன் பிறகு அவ்வூரில் பயிலரங்கத்தில் பங்கேற்ற மாணவர்கள் எக்காலமும் இப்பயிலரங்கம் குறிப்பிட்டதை மறக்க வழியுண்டா? இனி இப்பயிற்சிகளைப் பற்றி அவரே விவரித்ததை வழங்குவதே பொருத்தமாக இருக்கும். அக்கட்டுரையில் இருந்து சில வரிகள் கீழே…..

“பயிலரங்கில் முதற் செய்தியாகத் தல வரலாறைப் பகிர்ந்துகொண்டு முயற்சியும் ஆர்வமும் இருந்தால் என்ன நிகழும் என்பதற்கு இத்தலமே ஒரு காட்டு என்று சுட்டினேன். முத்துச்சிவிகை என்பது என்ன? அது குறிக்கோளை எளிதல் அடைய உதவும் ஒரு சாதனம். அந்த ஊர்தி நமக்குத் தருவது குறிக்கோளை நோக்கியான வேகமான நகர்வு. குடையும், பொற்சின்னமும் குறிப்பது ஒரு உயரிய, கௌரவ, சமுதாய அடையாளம். முயற்சியும், பயிற்சியும், கொண்ட குறிக்கோளில் தணியாத ஆர்வமும் மாணவர்களிடமிருந்தால் அவர்களுக்குச் சமுதாயத்தில் ஏற்றமும், கௌரவமும், வாழ்வில் உயர்வும் ஏற்படுமென்பதற்குத் திருஞான சம்பந்தர் வாழ்க்கை நிகழ்வை மனதில் எண்ணி அயராது முயல வேண்டுமென்றேன்.

அடுத்து அந்தக் குறிக்கோளின் வரையறையை S M A R T வழியில் விளக்கிக் குறிக்கோளை நிர்ணயித்தலை எடுத்துக்கொண்டேன். 4 “M” Goals – Micro, Mini, Middle, Mega goals – 1.ஒவ்வொரு நாளுக்கான செயல்பாடுகள் 2. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் எடுத்தல் 3. அடுத்துப் பட்டப் படிப்பு வாய்ப்புக்கள், படிப்பினைத் தெரிவு செய்தல், பட்டம் பெறல் 4. அடுத்த நீண்ட காலக் குறிக்கோளான தொழிலும் வாழ்வும் சமுதாயப் பணிகளும் என்ற நோக்கில் பயிற்சி அமைந்தது.

S W O T – பலம், பலவீனம், வாய்ப்புக்கள், தடங்கல்கள் என்ற வகையில் மாணவச் செல்வங்களை எண்ணிப் பார்க்கச் செய்தேன். அவர்களைத் தன் திறமைகளையும், துணையாக அமையக் கூடியவர்கள் உதவக் கூடிய வழிகளையும் பட்டியிலிட வைத்தேன். பலவீனங்களையும் பட்டியலிட்டார்கள். பலத்தைப் பெருக்கும் வழிகளும் பலவீனத்தைத் தவிர்க்கவுமான வழிகளும் அவர்களே கூற ஆராயப்பட்டன. பலம் பெருகும்போது சந்தர்ப்பங்கள் “மடி தற்றித் தான் முந்துறும்” என்பது போல வந்தெய்துகின்றன என்பதை உணர்த்தினேன்.”

ஓய்வு பெற்றாகிவிட்டது, இனி சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து, தினசரிகள் சில படித்து, அரட்டைகள் பல அடித்து பொழுதைக் கழிக்கலாம் என்று இயல்பாகத்  தோன்றும் எண்ணத்தைத் தவிர்த்து, ஓய்வு காலத்தை பயனுள்ளதாக மாற்றி வாழ்ந்து வரும், தனது செயலின் வழியாக பிற பேரிள மக்களுக்கு முன்மாதிரியாகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் செயலாற்றி வரும் சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்..!

Leave a Reply

Your email address will not be published.