தன்முன்னேற்றப் பயிலரங்கம் – அருணா மேல்நிலைப் பள்ளி – திருமாறான்பாடி என்ற இறையூர்.

சொ.வினைதீர்த்தான்

வணக்கம்.

vinay2

24.1.2014 அன்று பெண்ணாடத்திற்கு அருகிலுள்ள திருமாறன்பாடி என்ற இறையூரிலுள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 170 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது.

vinay3திருமாறன்பாடி சைவத்தில் ஒரு முக்கியமான தலம். இங்கு தாகம் தீர்த்தபுரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள ஆழ்குழாய் கிணறு சுற்றியுள்ள ஐந்து கிராமங்களுக்கு இன்றும் குடிநீர் வழங்கி வருவது அதிசயம்.

பல தலங்களில் பதிகம் இசைத்து வழிபட்டுப் பின்னர் கால் நடையாகவே இவ்விடம் வந்த பாலகனான திருஞானசம்பந்தர் நான்கு கல் தொலைவிலுள்ள பாடல் பெற்ற தலமான திருநெல்வாயில் அரத்துறை செல்வதற்காகத் தந்தையார், துணைவர்களுடன் இரவு இங்கு தங்கியிருந்தார். மறுநாள் காலை எழுந்தபோது சிவன் அருளால் திருஞான சம்பந்தருக்கு முத்துச் சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம் ஆகியவை தந்தருளப்பட்டுக் காத்திருந்தன.

பயிலரங்கில் முதற் செய்தியாகத் தல வரலாறைப் பகிர்ந்துகொண்டு முயற்சியும் ஆர்வமும் இருந்தால் என்ன நிகழும் என்பதற்கு இத்தலமே ஒரு காட்டு என்று சுட்டினேன். முத்துச்சிவிகை என்பது என்ன? அது குறிக்கோளை எளிதல் அடைய உதவும் ஒரு சாதனம். அந்த ஊர்தி நமக்குத் தருவது குறிக்கோளை நோக்கியான வேகமான நகர்வு. குடையும், பொற்சின்னமும் குறிப்பது ஒரு உயரிய, கௌரவ, சமுதாய அடையாளம். முயற்சியும், பயிற்சியும், கொண்ட குறிக்கோளில் தணியாத ஆர்வமும் மாணவர்களிடமிருந்தால் அவர்களுக்குச் சமுதாயத்தில் ஏற்றமும், கௌரவமும், வாழ்வில் உயர்வும் ஏற்படுமென்பதற்குத் திருஞான சம்பந்தர் வாழ்க்கை நிகழ்வை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டுமென்றேன்.

அடுத்து அந்தக் குறிக்கோளின் வரையறையை S M A R T வழியில் விளக்கிக் குறிக்கோளை நிர்ணயித்தலைvinai1 எடுத்துக்கொண்டேன். 4 “M” Goals – Micro, Mini, Middle, Mega goals – 1.ஒவ்வொரு நாளுக்கான செயல்பாடுகள் 2. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் எடுத்தல் 3. அடுத்துப் பட்டப் படிப்பு வாய்ப்புக்கள், படிப்பினைத் தெரிவு செய்தல், பட்டம் பெறல் 4. அடுத்த நீண்ட காலக் குறிக்கோளான தொழிலும் வாழ்வும் சமுதாயப் பணிகளும் என்ற நோக்கில் பயிற்சி அமைந்தது.

S W O T – பலம், பலவீனம், வாய்ப்புக்கள், தடங்கல்கள் என்ற வகையில் மாணவச் செல்வங்களை எண்ணிப் பார்க்கச் செய்தேன். அவர்களைத் தன் திறமைகளையும், துணையாக அமையக் கூடியவர்கள் உதவக் கூடிய வழிகளையும் பட்டியிலிட வைத்தேன். பலவீனங்களையும் பட்டியலிட்டார்கள். பலத்தைப் பெருக்கும் வழிகளும் பலவீனத்தைத் தவிர்க்கவுமான வழிகளும் அவர்களே கூற ஆராயப்பட்டன. பலம் பெருகும்போது சந்தர்ப்பங்கள் “மடி தற்றித் தான் முந்துறும்” என்பது போல வந்தெய்துகின்றன என்பதை உணர்த்தினேன்.

நான் அண்மையில் பயிலரங்கு நடத்திய பள்ளிகளில் மிகச் சிறப்பான மாணவச் செல்வங்களைக் கொண்ட பள்ளி அருணா மேல்நிலைப் பள்ளியாகும். முன்பு அருணா சுகர்ஸ் நிர்வாகத்திலும் தற்போது ஒரு குழு நிர்வாகத்திலும் இயங்கும் அரசு சார்ந்த பள்ளி இதுவாகும். பிள்ளைகள் பயிற்சியைப் பற்றியும், குறிக்கோள் பற்றியும், பெற்ற தாய்க்கும் பிறந்த பொன்னாட்டிற்கும் ஆற்ற விரும்பும் பணி பற்றியும் தங்கள் கருத்துக்களாக (Feed back) எழுதித் தந்தவற்றைப் படித்தபோது சிலிர்த்துப் போனேன். மன நிறைவடைந்தேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க