சொ. வினைதீர்த்தான்

சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த கண்டரமாணிக்கம் என்ற சிற்றூரில் 1950ல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளங்கலை வேதியல் பட்டம் படித்தவர். இன்சூரன்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவில் ஃபெல்லொஷிப் பட்டயம் பெற்றவர். இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் 1971 முதல் 40 ஆண்டுகாலம் நிர்வாகம், மார்க்கெட்டிங், டிரெயினிங் துறைகளில் பல்வேறு பதவிகள் வகித்துப் பகுதி மேலாளராக ஓய்வு பெற்றவர். பணியின் இறுதி ஆறு ஆண்டுகளில் பயிற்றுனராக 6000 முகவர்களுக்கும், அலுவலர்களுக்கும் இன்சூரன்சு கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் மனித உறவுகள் குறித்துப் பயிற்சியளித்துள்ளார். தற்போது உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவச் செல்வங்களுக்கு சுய முன்னேற்றப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். தணியாத தமிழார்வம் உடையவர். அம்பத்தூர் கம்பன் கழக ஆயுட்கால உறுப்பினர். காப்பீடு விற்பனை பற்றிய ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மனம் கவரும் மேடைப் பேச்சாளர். வல்லமை, மின்தமிழ், தமிழ்மன்றம்,மழலைகள் முதலிய இணைய மடலாடல் குழுமங்களில் ஆர்வத்துடன் பங்குபெற்றுத் தன் கருத்துக்களைப் பதிவுசெய்து வருகிறார். தமிழ் இலக்கியங்கள் கூட்டுறவும், தமிழ் ஆர்வலர்கள் ஒட்டுறவும், மாணவச் செல்வங்கள் உயர்வும் அவருக்கு உவப்பானவை.