சிறப்பு தரும் சித்திரைப் புத்தாண்டு
ராஜராஜேஸ்வரி ஜெகமணி
சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாக
சிறப்புறக் கொண்டாடுகிறோம்..
நாம் மட்டுமல்ல ..இயற்கை அன்னையும் பழுத்த பழைய இலைகளை உதிர்த்து மண்ணுக்கு உரமாக்கிவிட்டு பச்சைப்பசும் இலைத்தளிர் ஆடைகளை அணிந்து கண்களிக்கும் வண்ணம் காட்சிதருகிறாள்…
மரம் முழுக்க இலைகளே தெரியாமல் சரக்கொன்றை மரம் தங்கநகைகளை தாராளமாக அணிந்த புதுமணப்பெண்ணாய் ஏராள புன்னகையொடு வரவேற்பதைக் கண்குளிரக்காணும்போதே சித்திரை பிறக்கப்போகிறது என கட்டியம் கூறும்..
வாகை மரத்தின் பூக்கள் சித்திரையை சாமரம் வீசி வரவேற்கும்..
அப்போதுதான் முட்டையிலிருந்து வெளிவந்து அனுபவம் கற்காத இளம் குஞ்சுப்பற்வைகள் கண்திறந்ததும் செந்நிறமலர்கள் மரம் முழுவதும் பூத்திருப்பதைப் பார்த்து காடே தீப்பற்றிவிட்டதோ என அலறி தாயின் சிறகிற்குள் தஞ்சமடைந்து மழலை மிழற்றுவதைக் கேட்டு இயற்கை அன்னை ஆனந்தமடைந்து தன் வண்ணமலர்களால் அர்ச்சித்து மண் மகளையும்
நதி மகளையும் பூவாடை போர்த்துகிறாள்..
வேப்பம்பூக்கள் கொத்துக்கொத்தாய் மலர்ந்து மணம்பரப்பி மகிழ்ச்சியூட்டும்..
சித்திரை முதல்நாளில் வேப்பம்பூக்களையும் , வாழைப்பழத்தையும் ,கரும்பு சர்க்கரையும் , புளிப்புக்கு சிறிது மாங்காயும் கலந்து அறுசுவையாக முதல் உணவாக எடுத்துக்கொள்வது ஆண்டுமுழுவதும் பிணிகளை அறுத்து நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் என்பது நம்பிக்கை..
முக்கனிகளும் கனிந்து வாசம் வீசும் திருநாள்..
சித்திரையின் முதல் நாளில் நித்திரைநீங்கி எழுந்ததும் முதல்காட்சியாகக் காணும் கனிகாணல் நிகழ்ச்சி ஆண்டின் மங்களகரமான தொடக்கத்திற்கு அச்சாரமாக திகழ்கிறது..
பெரியோர்களிடம் ஆசிபெற்று கைநீட்டம் என்று நாணயம் பெறுதல் செல்வ வளம் ஆண்டுதோறும் சிறப்பாக இருப்பதை குறிக்கிறது..
ஆலயங்களில் சிறப்புப்பூஜைகளும் , நாணயம் பெறுதலும் இறைவனின் அருளை பெற்றுத்தருகிறது..
சித்திரைப்புத்தாண்டு அன்று சிறப்பு விருந்து உணவுகளும் பூஜை அறை அலங்காரங்களும் அன்று தொடங்கும் உறுதியான முதலடி ஆண்டு தோறும் தொடர்ந்து வருவதான தன்னம்பிக்கையைத்தருகிறது..!
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது.
இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்ததமிழ்புத்தாண்டு தினத்தன்று வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பது வழக்கம்.
பூஜை அறையில் உள்ள படங்களை மங்களகரமான மஞ்சள் நிற மலர்களால் மலர்களாலும் ரூபாய் நாணயங்களினாலும், பழங்களினாலும் அலங்கரித்து வருடத்தின் முதல்நாள் இவற்றில் கண் விழித்தால் வீட்டில் மங்களம் பொங்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கையாகும்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மஞ்சள் நிற பூக்கள் அதிகமாய் பூத்துக்குலுங்கும். பூக்களினால் பூஜை அறையை அலங்கரிக்கிறோம்..
தாமரை மலரில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பதால் நடுநாயகமாக லட்சுமி தேவியின் படத்தை வைத்து தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.
கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும் மாங்கனி. பசும் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே கண்ணைப் பறிக்கும்.
அதேபோல் ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரிக் கனி,போன்றவைகளை தட்டில் வைத்து நடுவில் சிகரம் வைத்ததுபோல மாதுளம் பழங்களையோ, ஆப்பிள் பழங்களையோ அடுக்கலாம்.
செல்வத்தின் திரு உருவான லட்சுமி தேவி வீட்டில் வாசம் செய்ய தாம்பாளத்தில் சில்லறை நாணயங்களைக் கொட்டி அதனைச் சுற்றி ரூபாய் நோட்டுக்களை அடுக்கலாம்
பலவகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரிப்பார்கள்.
வருடப்பிறப்பிற்கு முதல்நாள் இரவே பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து விடுவார்கள்.
விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறைக்கு அழைத்து செல்லும் அம்மா அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்கச் சொல்வார்கள்.
இதுபோன்ற மங்கலப் பொருட்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அன்றைய தினம் கனி காணுதலும், கை நீட்டம் நிகழ்ச்சியும் புது வருட தினத்தன்று உற்சாகத்தைத் தருவது ஆண்டு முழுதும் தொடரும்