எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

குருவி ஒன்று மரத்திலே
கூடு கட்டி வாழ்ந்தது!                                                    bird nest
தெருவில் போகும் மனிதரைத்
தினமும் பார்த்து நின்றது!

குருவிக் கூட்டில் குஞ்சுகள்
குதூகலமாய் வளர்ந்தன!
அனுதினமும் தாயைப் பார்த்து
அகமகிழ்ந்து நின்றன!

தெருவில் போகும் மனிதரின்
தில்லு முல்லு பார்த்ததும்
திகைப் படைந்த குஞ்சுகள்
திரும்பித் தாயைப் பார்த்தன!

தெருவில் சண்டை நடந்திடும்
தினமும் மனிதர் மோதுவார்
அதனைப் பார்க்கும் குஞ்சுகள்
அஞ்சித் தாயைப் பார்க்குமே!

சண்டை நடக்கும் காரணம்
சரியாய்த் தெரியாக் குஞ்சுகள்
மென்று விழுங்கிக் கேட்டிடும்
மெதுவாய்த் தாயும் சொல்லுமே…

சிண்டு முடிக்கும் குணமெலாம்
சீராய் மனிதர் செய்குவர்!
அண்டை அயலில் உள்ளவர்
மண்டை உடைத்து நிற்பரே!

வம்பு தும்பு பேசியே
வாழ்வு நடத்தும் மனிதரால்
எங்கும் சண்டை நடக்குதே
இதனை எங்கு சொல்வது?

கோள்முடிக்கும் கூட்டமும்
குறைகள் சொல்லும் கூட்டமும்
நாள்முழுக்கச் சண்டையை
நடக்கவிட்டுப் பார்க்குது!

விலங்கு பறவை என்றெமை
விலக்கி விட்ட மனிதர்கள்
விளக்கமின்றி நாளுமே
வெட்டிக் குத்தி மாள்கிறார்…

என்று சொல்லிக் குருவித்தாய்
ஏக்க மூச்சு விட்டதும்
எல்லாக் குஞ்சும் ஒன்றாக
இரையைக் கொத்தி நின்றன!

தாயைப் பார்த்த குஞ்சுகள்
தயங்கித் தயங்கிக் கேட்டன
எங்கள் கூட்டை மனிதர்கள்
ஏறிப் பிடுங்க மாட்டாரா…?

என்று கேட்டு நிற்கையில்
எங்கிருந்தோ வந்த கல்
குஞ்சைப் பதம் பார்த்தது
குருவிக் கூடும் விழுந்தது!

விலங்கு பறவை யாவுமே
விலத்தி நின்ற போதிலும்
நலங் குறைந்த மனத்துடன்
நாட்டில் மனிதர் வாழ்வதேன்!?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *