நல்ல வாழ்வு பிறந்திடும் !

 

எம்.ஜெயராமசர்மா — மெல்பேண் 

 

புத்தர் வந்தார் யேசு வந்தார் bhud
புனிதரான காந்தி வந்தார்
எத்தனையோ சொல்லிநின்றார்
எதையும் காது வாங்கவில்லை

சத்தியமே பேசு என்று
தர்மயுத்தம் செய்தாரே
அத்தனையும் என்னவாச்சு
அவற்றை எண்ணிப்பார்த்தோமா

ஊழல் என்னும் பேயது
ஊரை விழுங்கப் பார்க்குது
உலகம் முழுக்கப் பார்த்திடின்
ஊழல் ஓங்கி நிற்குது

தேர்தல் என்னும் பேரிலே
தினமும் ஊழல் நடக்குது
நீரில் கூடக் கலப்படம்
நிறைந்து எங்கும் இருக்குது

நீதிகிடைக்கும் என்று எண்ணி
நீதி மன்றம் சென்றிடின்
ஊதிப் பெருத்த ஊழல்தான்
உறைந்து அங்கே கிடக்குது

சமயச் சண்டை நடக்குது
சாதி வெறி ஓங்குது
இமயம் உடையப் பார்க்குது
இன்னும் சிக்கல் தேவையா

நல்ல எல்லாம் இருக்குது
நாங்கள் எடுக்க மறுக்கிறோம்
சொல்லி விட்டுப் போனதை
சுமையாய் எண்ணி நிற்கிறோம்

தொல்லை ஒழிய வேண்டிடின்
துயரம் தொலைய எண்ணிடின்
நல்லவற்றை நாடுவோம்
நாட்டில் நன்மை வந்திடும்

ஊழல் பேயை ஓட்டுவோம்
உலுத்தர் தம்மை விரட்டுவோம்
நாளை நல்ல தாக்குவோம்
நல்ல வாழ்வு பிறந்திடும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க