Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • ஒரு வித்தியாசமான திருமணம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நான் எத்தனையோ திருமணங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்.    ஆனால் போன வாரம் நான் கலந்துகொண்ட திருமணம் மிகவும் வித்தியாசமானது.  கல்யாணம் நடந்த இடம், சூழ்நிலை, திருமணம் செய்துகொண்டவர்கள், கல்யாணச் சடங்குகள், வந்திருந்த விருந்தினர்கள் என்று எல்லாமே வித்தியாசமாக இருந்தன.

    திருமணம் நடந்தது அமெரிக்காவில் மிகவும் பெயர்பெற்ற ஸயான் தேசியப் பூங்காவில்.  இது இயற்கை எழில் கொஞ்சும் உயர்ந்த மலைகளும் ஆங்காங்கே சிறு ஆறுகளும் பல வகையான செடி கொடிகளும் மரங்களும் உள்ள மலைப்பிரதேசம்.   அமெரிக்காவில் இயற்கை வளத்திற்கா பஞ்சம்?  அந்த இயற்கை வளங்களை  ரசிப்பதற்கு அமெரிக்க அரசு எத்தனையோ வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது.  நானும் என் மகளும் சிகாகோவிலிருந்து விமானத்தில் லாஸ் வேகஸ் நகருக்குச் சென்று பின் அங்கிருந்து வாடகைக் கார் ஒன்றை எடுத்துக்கொண்டு ஸயான் பூங்காவிற்குச் சென்றோம்.  இந்தப் பூங்கா இருப்பது ஊட்டா என்னும் மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில்.  லாஸ் வேகஸ் இருப்பது நெவாடாவின் தெற்குப் பகுதியில்.  லாஸ் வேகஸிலிருந்து ஸயான் பூங்காவிற்கு அரிஸோனா மாநிலத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் போவதுதான் குறுகிய வழி.  ஆக மூன்று மாநிலங்களின் வழியாகப் போகும்போது மூன்றிலும் வெவ்வேறு நேரம்.  நெவாடா வேறு தீர்க்க ரேகையில் (longitude) இருப்பதால் அங்கு ஒரு நேரம்.  அரிஸோனாவும் ஊட்டாவும் ஒரே தீர்க்கரேகையில் இருந்தாலும் அரிஸோனா மற்ற மாநிலங்களைப்போல் வசந்தகாலம் ஆரம்பித்தவுடன் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்துக்கொள்வதில்லை.  அதனால் அரிஸோனாவில் மூன்று மணி என்றால் ஊட்டாவில் நான்கு மணி ஆகியிருக்கும்.  லாஸ் வேகஸ் அடுத்த தீர்க்கரேகையில் இருப்பதால் அங்கு நேரம் இரண்டுதான்.  இப்படிப் பல கால நேரங்களில் (Time Zones) பயணித்தது ஒரு சுவையான அனுபவம்.   பக்கத்துப் பக்கத்து ஊர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால் சில மைல்கள் சென்றவுடனேயே ஒரு மணி நேரம் முன்னால் இருப்போம்.

    நெவாடாவின் தெற்குப் பகுதி, ஊட்டாவின் தென்கிழக்குப் பகுதி, அரிஸோனாவின் வட மேற்குப் பகுதி ஆகியவை மலைகள் அடர்ந்த பாலைவனப் பிரதேசம்.  சாலைகளில் நிறையக் கார்களைப் பார்க்க முடியாது.  சில சமயங்களில் நாம் மட்டும்தான் காரில் போய்க்கொண்டிருப்போம்.  முன்னாலும் பின்னலும் யாரையும் பார்க்க முடியாது.  பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்காவில் இந்தப் பாலைவனப் பிரதேசத்தில் நிறையப் பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.  அவற்றில் மிகவும் அழகானது கிராண்ட் கான்யான் (Grand Canyon).  செங்குத்தான பாறைகளும் பல வண்ணங்களில் காட்சியளிக்கும் மலைகளும் கண்ணுக்கு விருந்து.  இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்த எழில்மிகு கான்யானைப் பார்த்துவிடலாம் என்று திட்டமிட்டு அங்கு சில மணி நேரங்கள் தங்கி அந்த எழிலை ரசித்துவிட்டு ஸயான் பூங்காவிற்குச் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கினோம்.

    திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஸயான் பூங்காவிற்கு வருவதற்கு உல்லாசப் பயணம் ஏற்பாடு செய்பவர்களின் பேருந்துகளிலோ அல்லது நாமாக சொந்தக் காரிலோ அல்லது வாடகைக் காரிலோதான் செல்ல வேண்டும்.   பொதுப்போக்குவரத்து வசதிகள் கிடையாது.

    ஸயான் பூங்காவைக் கடந்து அதன் விளிம்பில் இருக்கும் ஸ்பிரிங்டேல் என்னும் ஊரில் தங்கினோம்.  நாங்கள் தங்கிய ஓட்டல் கார்களை நிறுத்திக்கொள்ள வசதியான மோட்டல்.   அறைகள் எல்லாம் அத்தனை சுத்தம்.  அது மட்டுமல்ல, விசாலமான அறைகளில் நேர்த்தியான படுக்கைகளோடு குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோவேவ் அவன் (microwave oven) என்று பல வசதிகள்.  சமைப்பதற்கு அடுப்புகள் இல்லையென்றாலும் மைக்ரோவேவ் அவனில் சமைத்துக்கொள்ளலாம்.  வீட்டிலேயே சமைக்காத அமெரிக்கர்கள் ஓட்டல் அறைகளில் சமைக்கப் போகிறார்களா என்ன.  இருந்தாலும் இந்த வசதிகள் இருக்கின்றன.  ஸயான் பூங்காவிற்குள் இலவச ஷட்டில் வசதி உண்டு.  உல்லாசப் பயணிகள் நடப்பதற்கு ஏதுவான இடங்களில் (trails) ஷட்டிலை நிறுத்துகிறார்கள்.  இப்படி எட்டு இடங்கள் இருக்கின்றன.  ஏதாவது ஒன்றில் இறங்கி நடந்துவிட்டு (சில இடங்கள் ஒரு மைல் தூரம் இருக்கின்றன.  இதற்கு மேல் நீளமாக இருக்கும் பாதைகளும்  உயரத்தில் ஏற வேண்டிய நடைபாதைகளும் உண்டு.)  மறுபடி ஷட்டில் நிற்கும் இடத்திற்கு வந்துவிடலாம். திருமணம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடந்தாலும் இடையிடையே நிறைய நேரம் இருந்ததால் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் –முக்கியமாகப் பல இளவயதினர் – இந்த நடைபாதைகளில்  நடந்து பொழுதை இனிமையாகக் கழித்தனர்.

    திருமணத்திற்கு முந்தின நாளே வந்திருந்த விருந்தினர்களுக்கு மதிய உணவிற்கு அங்கிருந்த ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர்.  ஓட்டலுக்கு வெளியே, மரங்களுக்கு அடியில் சாப்பிடுவதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.  காலை  உணவைத் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே எல்லோரும் முடித்துக்கொண்டோம்.   திருமணம் செய்துகொள்ளப் போகும் தம்பதியரில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும் மதிய உணவில் இந்தியச் சாப்பாடு எதுவும் இல்லை.  அன்றைய இரவு விருந்திலும் மறு நாளைய இரவு விருந்திலும் இந்தியச் சாப்பாடு எதுவும் இல்லை.  அங்கிருந்த ஓட்டலில் இந்தியச் சாப்பாடு சமைப்பதற்கு வசதிகளும் சமையல்காரர்களும் இல்லை என்று நினைக்கிறேன்.  அன்று இரவு ஓட்டலுக்குள் எல்லோரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அதன் பிறகு மணமக்களைப் பற்றி நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் உரையாற்றினார்கள்.  அதன் பிறகு நீண்ட நேரம்  விருந்தினர்களும் மணமக்களும் மேற்கத்திய நடனமாடினர்.

    திருமணம் ஸயான் பூங்காவிற்கு உள்ளேயுள்ள ஒரு சிறு ஆம்ஃபி தியேட்டரில் (amphitheater) நடந்தது.  இது ஒரு திறந்தவெளி தியேட்டர்.   அவரவர்கள் தங்கியிருந்த ஓட்டல்களிலிருந்து திருமணம் நடந்த இடத்திற்கு வாகனங்களில் அழைத்துச் சென்றார்கள்.  எல்லோர் முகத்திலும் ஒரு குதூகலம்.   இப்போது ஸயானில் சூரியன் மறைவதற்கு இரவு எட்டு மணியாகிறது.  அதனால் வெயிலுக்கு வசதியாக எல்லோருக்கும் குடைகள் வழங்கினார்கள்.   அடிக்கடி இந்த மாதிரிப் பாலைவனப் பிரதேசத்தில் தாகம் எடுக்கும் என்பதால் தண்ணீர் பாட்டில்களும் வழங்கினார்கள்.  அதில் மணமகன்கள் இருவர் பெயர்கள் அடங்கிய லேபிள் ஒட்டப்பட்டிருந்தது.  தியேட்டரில் ஒரு சிறிய மேடை இருந்தது.  மேடைக்கு முன்னால் விருந்தினர்கள் அமருவதற்கு நீண்ட பெஞ்சுகள் இருந்தன.  சரியாக ஐந்து மணிக்கு மணமகன்கள் இருவரும் – ஆம், தம்பதிகள் இருவரும் ஆண்கள்; இது ஒரு ஓரின ஈர்ப்பு உள்ள இருவர் செய்துகொள்ளும் திருமணம் – அவர்களுடைய தாய்மார்கள் அழைத்துவர மேடைக்கு வந்தனர்.  இந்தியாவைச் சேர்ந்த மணமகன் குஜராத்தி பாணியில் உடை அணிந்திருந்தார்.  அமெரிக்க மணமகன் அமெரிக்க பாணியில் உடை அணிந்திருந்தார்.  நிகழ்ச்சி நிரல் பற்றிய அட்டவணையை எல்லோருக்கும் அங்கு வந்தவுடனேயே வழங்கினர்.  அது மறுசுழற்சி செய்யப்பபட்ட காகிதத்தால் ஆனது.  (திருமண அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தனர்.)  ஸயான் பூங்காவிற்குள் நெருப்பு மூட்டக் கூடாது என்பதால் இந்திய மணமகனின் உறவினர் ஒருவர், நெருப்பைச் சாட்சியாக வைத்துத் திருமணம் நடக்க வேண்டும் என்பதால் மூன்று பெரிய மெழுகுவர்த்திகளை ஏற்றினார்.  இதை அக்னியாகப் பாவித்து மணமக்கள் நான்கு முறை அதை வலம் வந்தனர்.  ஒவ்வொரு சுற்றும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்வின் நான்கு நிலைகளைக் குறிப்பதற்காக.  எல்லா நிகழ்ச்சிகளும் இந்து அல்லது கிறிஸ்தவ சமய பாரம்பரிய வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன.  அமெரிக்க மணமகனின் தம்பியின் மகன் – மூன்று வயதுக் குழந்தை – மேடைக்கு வந்து இரண்டு மோதிரங்களைத் திருமணத்தை நடத்தி வைத்தவர் கையில் கொடுத்தான்.  திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் அந்தக் குழந்தைக்கு மேடைக்கு எப்படிச் செல்வது, யார் கையில் மோதிரங்களைக் கொடுப்பது என்பனவற்றிற்குப்  பயிற்சி கொடுத்தார்கள்.  திருமணத்தை நடத்திவைத்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஓரின ஈர்ப்பு உள்ளவர்தான்.

    திருமணத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்பதற்கு அமெரிக்க மணமகனின் தம்பி ஆங்கிலத்தில் ஒரு பாட்டுப் பாடினார்.  அவர் ஒரு நாடகமேடை நடிகர்.  அதன் பிறகு இந்திய மணமகனின் பெற்றோர்களும் அமெரிக்க மணமகனின் தாயும் (இவருடைய தந்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார்.) தனித்தனியாக மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.  அதன் பிறகு மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டனர்.  கடைசியாகக் காந்திஜிக்குப் பிடித்த வைஷ்ணவ ஜனதோ என்ற பாடலோடு திருமண நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.  விருந்தினர்களுக்கு நம் திருமணங்களில் பையில் தேங்காய் வைத்துக் கொடுப்பதுபோல் ஒரு சணலில் செய்த பையில் மணமக்கள் இருவரும் அவர்கள் வாழ்ந்த ஊர்களுக்கே உரிய சிறப்புப் பொருள்களை வைத்துக் கொடுத்தனர்.  கடைசியாக போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி.  எல்லோரும் எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  இரவு மறுபடி வெளியிடத்தில் விருந்து.  விருந்து ஆரம்பிக்கும் முன் அமெரிக்க மணமகனின் தம்பி உரையாற்றினார்.  அவர்களது தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவருடைய அண்ணனின் திருமணத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டிருந்திருப்பார் என்று குரல் தழுதழுக்கக் கூறினார்.  சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.  விருந்திற்குப் பிறகு விரும்பியவர்கள் எல்லாம் மேற்கத்திய நடனம் ஆடினர்.  இரவு பதினொரு மணிவரை இது நடந்தது.

    மணமகன்கள் இருவரும் அறிவுஜீவிகள்; இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களாக வேலைபார்ப்பவர்கள்.  திருமணத்திற்கு முன்பு மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தவர்கள்.  பரந்த மனப்பான்மை உடையவர்கள்.  தங்கள் தங்கள் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.   மதச்சார்பற்றவர்கள்.  (திருமண மேடைக்கு அருகில் ஒரு மேஜையில் சிறிய கணேசர் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது.  எல்லா இந்து மத வைபவங்களிலும் கணேசரை முன்வைத்துத்தான் நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பார்கள் என்பதால்தான் இந்த ஏற்பாடு என்று சொன்னார்கள்.) உலகில் சமத்துவமின்மையை ஒழிக்கப் பாடுபடுபவர்கள்.  அமெரிக்க மணமகனுக்கு நன்றாகச் சமைக்க வரும்.  பல வகையான கேக்குகளை ‘பேக்’ பண்ணுவதோடு இந்திய உணவு வகைகளையும் சமைப்பார்.

    திருமணத்திற்கு வந்தவர்களில் சிலர் ஓரின ஈர்ப்பு முறையில் திருமணம் செய்துகொண்டவர்கள்.  இவர்கள் உட்பட எல்லோரும் தம்பதிகளை மனமார வாழ்த்தினர்.  உலகில் பல நாடுகளில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட வேண்டியவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.  சில சமூகங்களில் அவர்களுக்கு மரண தண்டனையே வழங்கப்படுகிறது.  அமெரிக்கவிலோ சில மாநிலங்களிலாவது அவர்களும் மற்றவர்களைப்போல் நடத்தப்படுகிறார்கள்.  அவர்களில் இருவர் திருமணம் செய்துகொண்டால் அவர்களுடைய திருமணத்தை சட்டபூர்வமாக ஆதரிக்கிறார்கள்; வாழ்த்துகிறார்கள்.  அப்படித் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு ஆண்-பெண்ணாகத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு அளிக்கப்படும் எல்லா உரிமைகளும் வழங்கப்படுகின்றன.  அமெரிக்கா பல விஷயங்களில் முன்னணியில் இருப்பதுபோல் இதிலும் முன்னணியில் இருக்கிறது.  இதுதான் அமெரிக்காவின் தனித்துவம்.

    Share
  • யாருக்கும் வெட்கமில்லை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நம்மை ஆண்ட பிரித்தானியர்கள் நமக்குச் சுதந்திரம் கொடுக்க நினைத்து அதற்கான திட்டங்களை 1920களில் ஆரம்பித்தபோது அரசுப் பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிராமணர்களே அதிக அளவில் இருந்தனர். அரசியலில் ஒரே கட்சியான காங்கிரஸில் பிராமணர்களின் ஆதிக்கமே இருந்தது.  பிராமணரல்லாத சில நிலச்சுவான்தார்களும், பெரும் வணிகர்களும், படித்து முன்னுக்கு வந்த சில பிரமுகர்களும் பிராமணரல்லாதவர்களுக்கும் கல்வியிலும், அரசு வேலையிலும் அரசியலிலும் பங்கு வேண்டும் என்று போராடத் தொடங்கினர்.  அவர்களுடய ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து விலகிவந்து அந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார் பெரியார்.  சமூகச் சமத்துவமே அவருடைய குறிக்கோள்.  இதை அடைய இந்து மதம் தடையாக உள்ளது என்று கருதியதால் அதை எதிர்த்தார்.  இந்து மதத்தின் தலைமை ஸ்தானத்தில் இருந்த பிராமணர்களையும் எதிர்த்தார்.  சமூகச் சீர்திருத்தம் பிரித்தானிய ஆட்சியின் உதவியோடுதான் செய்ய முடியும் என்று நம்பினார்.  சுதந்திர இந்தியாவின் ஆட்சி பிராமணர்களின் கைக்குப் போகும்; சமூகச் சமத்துவம் ஏற்பட முடியாது என்று நினத்ததால், பிரித்தானியர் நம்மை விட்டுச் சென்ற நாளைத் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  பிராமணர் ஆதிக்கத்தை, அதை நியாயப்படுத்தும் இந்து மதத்தின் ஆதிக்கத்தை, ஒழிக்க வேண்டும் என்று அவர் ஆரம்பித்த கட்சிதான் திராவிடர் கழகம்; ஆரபித்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். .

    திராவிடர்களின் உரிமைகளைப் பாதுக்காப்பதற்காக ஆரம்பித்த திராவிடர் கழகம் அரசியலில் நுழைந்தால் பதவியில் இருப்பதற்காகக் கொள்கையில் சமரசம் செய்துகொள்வது தவிர்க்க முடியாதது என்பதால் திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதைப் பெரியார் விரும்பவில்லை.  அவருடன் இருந்த அவருடைய சிஷ்யர்களுக்கோ அரசியலில் நுழைந்து அதிகாரம் பெற்றுச் சமூக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆசை.  அதைக் கூறாமல் வயதான காலத்தில் பெரியார் திருமணம் செய்துகொண்டதைக் காரணம் காட்டித் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர்.  தேர்தலிலும் பங்கேற்கத் தொடங்கினர்.  அரசியல் பதவி ஊழலுக்கு வழி வகுக்கும என்று பெரியார் நினைத்தாரா என்று தெரியவில்லை.

    தேர்தலில் பங்கேற்கத் தொடங்கிய புதிதில் சட்ட மன்றத்தில் நிறைய இடங்கள் கிடைக்கவில்லையென்றாலும், 1967-இல் நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியும் அமைத்தனர்.  திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைவராக விளங்கிய அண்ணாதுரை உயிரோடு இருந்திருந்தால், அவருடைய கட்சியில் பின்வந்த ஊழல்கள் நடந்திருக்காதோ என்னவோ?  காந்திஜியோடு இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பணியாற்றிய காங்கிரஸ்காரர்களே ஊழல் புரிந்தார்கள் என்றால் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

    கருணாநிதியைக் கணக்குக் காட்டும்படி தட்டிக் கேட்ட எம்.ஜி.ஆர். புதிய கட்சியைத் தொடங்கி ஊழல் இல்லாத நல்ல ஆட்சியைத் தரப் போவதாகக் கூறினார்.  அவர் காலத்தில் ஊழல்கள் பெருகினவேயொழியக் குறையவில்லை.  அதன் பிறகு பதவிக்கு வந்த அ.தி.மு.க. தலைவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  அவர்கள் அடித்த கொள்ளைகள் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமண்றம் அளித்த தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.  ஊழல்கள் பெருகிக்கொண்டே போய் அண்மையில் காலமான அம்மையாரின் காலத்தில் உச்சத்தைத் தொட்டது ஊர் அறிந்த ஒன்று.  எதற்காக அரசியலில் நுழைவது தவறு என்று பெரியார் நினைத்தாரோ அந்த அரசியலில் நுழைந்து ஊழலை வளர்த்தது தி.மு.க.வில் தொடங்கி அ.தி.மு.கவில் பூர்த்தி அடைந்தது.  சொத்துக் குவித்த ஊழலுக்காகக் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்ட தலைவருக்குத் தேவாலயம் கட்ட வேண்டும் என்னும் அளவுக்குப் போயிருக்கிறது.

    இப்போது அந்த அம்மையாரின் ‘வாரிசுகள்’ அவரையே மிஞ்சிவிடுவார்கள் போல் தெரிகிறது.  மொத்த அ.தி.மு.க. கூட்டமும் –அதன் பல பிரிவுகளும்- எப்படியும் ஆர்.கே.நகர் தொகுதியைக் கைப்பற்றிவிடத் தீர்மானித்து வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பணமழை பொழிந்திருக்கிறார்கள்.  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஊழலற்ற மோதி என்ற பிம்பத்தை ஏற்படுத்தி,  பி.ஜே.பி. தமிழ்நாட்டு அரசியலில் நுழையத் திட்டமிடுகிறது.  பணப்புழக்கம் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி தேர்வாணையம் ஆர்.கே.நகர். தேர்தலை இப்போதைக்கு ரத்து செய்திருக்கிறது.  இந்த முடிவில் பி.ஜே.பி.யின் பங்கு இருக்கலாம்.  இந்துத்துவக் கொள்கையை மூச்சாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.தான் இன்று பி.ஜே.பி.யை ஆட்டுவிக்கிறது.  இவர்களின் கைக்குள்தான் மொத்த இந்தியாவும் போய்க்கொண்டிருக்கிறது.  வட இந்தியாவில் பல மாநிலங்களைப் பிடித்துவிட்ட இவர்கள் இப்போது தென்னிந்தியா மீது தங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள்.  அதிலும் தமிழ்நாட்டைக் கைப்பற்றுவது இவர்களின் கனவுகளில் ஒன்று.

    இவர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றிவிட்டால் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் – அவர்கள் அனுதாபிகள்தான் – பதவியில் அமருவார்கள்.  இவர்களில் பிராமணரல்லாதவர் இருந்தாலும் பிராமணர்களுடய ஆதிக்கம்தான் இருக்கும்.  இந்த ஆதிக்கத்தை ஒழித்து கீழ் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று பெரியார் பாடுபட்டார்.  அவருடைய அந்தக் கனவை அவருடைய கொள்கை வழியில் வந்ததாகக் கூறிக்கொள்ளும் திராவிடக் கட்சிகளே இன்று அழிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.  அவர்களுடைய ஊழல் இதற்குத் துணைபோகிறது.

    சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியாரின் வழியில் வந்ததாகக் கூறிக்கொள்ளும் அவருடைய வாரிசுகளில் பலருக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.  வட இந்தியர்களின் ஆதிக்கமே வேண்டாம் என்று தனித் திராவிட நாடு கேட்டவர்களின் வாரிசுகள்  வடக்கத்தியர்களுக்கு, பிராமணர்களுக்குத் அடிபணியத் தயாராகிவிட்டனர்;. தமிழ்நாட்டையே தாரைவார்க்கத் தயாராகிவிட்டனர்.

    தமிழர்களின் சுய மரியாதையை அடகுவைத்துவிட்டதற்கு இது ஒரு உதாரணம்.  உத்தரப் பிரதேசத்தில் நோய்டா ஊரில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் படிக்க வந்திருக்கும் மாணவர்கள் தாக்கப்பட்ட செய்தியைப் பற்றி பி.ஜே.பி.யைச் சேர்ந்த தருண் விஜய்  விளக்குகையில், ‘ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவு நிலவுகிறது.  அப்படி இருக்கும்போது நாம் ஏன் அங்கிருந்து வந்திருக்கும் மாணவர்களைத் தாக்கும் செயல்களில் ஈடுபடப் போகிறோம்?  இந்தியா இனத்துவேஷ நாடு அல்ல.  கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களோடு நாங்கள் சுமுக உறவு கொண்டாடவில்லையா?’ என்று கேட்டிருக்கிறார்.  எவ்வளவு திமிர்!  இவர் தான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவதாக நடித்தவர்.  அப்படிப் பேசிவிட்டு வாய் தவறிப் பேசியதாக வேறு கூறி மன்னிப்புக் கோருகிறார்.  எவ்வளவு தாழ்வாக தென்னிந்தியர்களை மதிப்பிடுகிறார்.  இதைக் கேட்டு திராவிடக் கட்சியினர் பொங்கி எழவில்லை.

    இவரைப் போன்ற பி.ஜே.பி.காரர்களிடமல்லவா தமிழ்நாடு தன்னை ஒப்படைக்கப் போகிறது.  இதுதானா பெரியார் கண்ட கனவு.  இதற்காகவா அவர் தன்னுரிமைப் போராட்டத்தைத் தோற்றுவித்தார்?

    Share
  • அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ட்ரம்பின் முதல் தோல்வி

    நாகேஸ்வரி அண்ணாமலை

    தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலேயே ஜனாதிபதி ட்ரம்ப் (தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று அவரே நினைக்காத நேரத்திலேயே) ‘ஜனாதிபதி ஆனவுடன் நான் முதல் முதலாக ஒபாமாவின் ‘எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு’ திட்டத்தை எடுத்துவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவருவேன்’ என்று கூறிக்கொண்டிருந்தார்.  2012-இல் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட ராம்னி தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவியேற்றவுடனேயே அந்தச் சட்டத்தை எடுத்துவிடுவேன் என்று சூளுரைத்தார்.  அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை.  அதன் பிறகு அடுத்த தேர்தலில் 2016-இல் போட்டியிட்ட ட்ரம்ப் ராம்னி கூறியது மாதிரியே தானும் அந்தச் சட்டத்தை எடுத்துவிடுவேன் என்றார்.  பதவிக்கு வந்தவுடனேயே தன் கட்சிக்காரர்களிடமும் தன் ஆலோசகர்களிடமும் சீக்கிரமே ஒபாமா கொண்டுவந்த சட்டத்திற்கு மாற்றுச் சட்டம் கொண்டுவரும்படி கூறிக்கொண்டிருந்தார்.

    ஒபாமா 2009-இல் பதவிக்கு வந்தவுடனேயே எல்லோருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் கிடைக்கும் திட்டத்தை கொண்டுவர முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தார்.  பல வல்லுனர்களைக் கலந்தாலோசித்து, அந்தச் சட்டத்தின் எல்லா அம்சங்களையும் தானும் ஆராய்ந்து அவருடைய மிகப் பெரிய சாதனையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.  அந்தத் திட்டத்திலும் சில குறைகள் இருப்பதாக எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள்.  ஆனாலும் இதுவரை உள்ள திட்டங்களில் இதுதான் சிறந்ததாகக் கருதப்பட்டது.  அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதுகளிலேயே கட்டுக்கடங்காமல் போய்விட்டிருந்தன.  1945-இல் பதவிக்கு வந்த ட்ரூமன் முதல் கிளின்டன் வரை எல்லா ஜனாதிபதிகளும் எவ்வளவோ முயன்றும் எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் மருத்துவ இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை.  ஒபாமா இதை ஒரு சவாலாக ஏற்றுத் தன் முழு உழைப்பையும் கொடுத்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றினார்.  அதை ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு குடியரசுக் கட்சித் தலைவர்கள் திட்டம் தீட்டினர்.  ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பல வெள்ளையர்கள் விரும்பவில்லை.  அவர் செய்யும் எல்லாக் காரியங்களிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தனர்.

    இப்போது ட்ரம்ப் ஜனாதிபதி பதவி கிடைத்தவுடன் ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சட்டங்களையும் ஒழித்து அவருக்குக் கிடைத்திருக்கும் சாதனையாளர் என்ற நல்ல பெயரை எப்படியும் கெடுத்துவிட வேண்டும் என்று காரியங்கள் செய்துவந்தார்.  ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் பதவி ஏற்புக்கு முன்னால், ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.  அப்போது அவருக்குச் சில யோசனைகள் கூறியதாகவும் அவற்றை ஏற்று நடப்பதாக ட்ரம்ப் கூறியதாகவும் ஒபாமா அறிவித்தார்.  ஆனால் அப்படி ஒபாமாவிடம் வாக்களித்தாலும் ட்ரம்ப் முதல் நாளிலிருந்தே ஒபாமா கொண்டுவந்திருந்த எல்லாச் சீர்திருத்தங்களையும் ஒவ்வொன்றாக ஓழித்துக்கொண்டிருக்கிறார்.  வங்கிகள் செய்துகொண்டிருந்த சில அநியாயங்களை ஒழிக்க ஒபாமா கொண்டுவந்த சில கட்டுப்பாடுகளை எடுத்தார்; வங்கிகளுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.  சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கனடாவிலிருந்து அமெரிக்க மாநிலம் டெக்ஸாஸிற்குக் கச்சா எண்ணெய் கொண்டுவரும் திட்டத்திற்கு ஒபாமா சம்மதம் கொடுக்கவில்லை.  இப்போது ட்ரம்ப் அந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.

    ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுச் சட்டத்தை எதிர்க்கும் மசோதாவிற்கு ஓட்டுப் போடவில்லையென்றால் கீழவை உறுப்பினர்கள் பதவி அடுத்த தேர்தலில் போய்விடும் என்று பயமுறுத்தினார்.  தன் கட்சி உறுப்பினர்களையே அவரால் புது மசோதவிற்கு ஓட்டுப்போடவைக்க முடியவில்லை.  (இந்தியாவில்போல் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதில்லை.  எல்லோரும் சுயமாகச் சிந்திப்பவர்கள்.  தாங்கள் சரியென்று நினைப்பதைச் செய்வார்கள்.)  கீழவையிலேயே அது தோற்றுப் போனது.  435 உறுப்பினர்கள் உள்ள கீழவையில் 235 பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.  அவர்களிலேயே பழமைவாதிகளில் சிலர் ஓட்டுப் போடவில்லை.  குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஓட்டுப் போடவில்லை.  அதனால் பெரும்பானமை கிடைக்காமல் மசோதா தோல்வியுற்றது.

    தோல்விக்குப் பிறகும் ட்ரம்ப் தன் தவறை உணர்ந்ததாகத் தெரியவில்லை.  எப்போதுமே பொய்களாகச் சொல்லிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் இதிலும் ஒரு பொய்யைக் கூறுகிறார்.  தான் ஒருபோதும் உடனேயே ஒபாமாவின் சட்டத்தை மாற்றுவதாகச் சொல்லவில்லை என்கிறார்.  தேர்தல் பிரச்சாரத்தின்போதே, தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே ஒபாமாவின் சட்டத்தை மாற்றுவதாக திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தவர்  இப்போது அப்படியொன்றும் தான் கூறவில்லை என்று முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்.  அது மட்டுமல்ல, ஒபாமாவின் சட்டம் இன்னும் சில நாட்களில் தானாக வெடித்துவிடும் அல்லது சிதைந்துவிடும் என்றும் கூறி அவர் சொல்வதையெல்லாம் நம்பும் தன் ஆதரவாளர்களை ஏமாற்றி வருகிறார்.  ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து ஒத்துழைக்காததால்தான் மசோதா தோற்றுவிட்டது என்று இன்னொரு பொய்.  இந்தப் பொய்களை யார் நம்பப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  இதையும் சிலர் நம்புவார்களோ என்னவோ.  இப்போது ட்ரம்பால் பதவி இறக்கம் செய்யப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ப்ரீத் பரேரா (இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் ட்ரம்பால் பதவி இறக்கம் செய்யப்படவில்லை.  நேர்மையான அரசு வழக்கறிஞர் என்பதால்) கூறியதுபோல் ஆட்டுமந்தைகள் அடங்கிய சமூகம் ஓநாய்கள் ஆளும் அரசைத்தான் தேர்ந்தெடுக்கும்.  இந்த ஓநாய்கள் செய்வது எதையும் இந்த ஆட்டுமந்தைகள் ஏற்றுக்கொள்ளும்.

    இந்த மசோதா தோற்றுப் போனதால் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குஷியாக இருக்கிறார்கள்.  ஆவணப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் மூர் இதை வெற்றியாக நினைத்து விழாக் கொண்டாடுவதற்குப் பதில் தொடர்ந்து ஜாக்கிரதையாக இருந்து இனியும் ட்ரம்ப் செய்யபப்போகும் காரியங்களை முறியடிக்க வேண்டும் என்கிறார்.  அவர் சொல்வது மிகவும் சரி.  அமெரிக்காவின் படிமத்தை உலக நாடுகளிடையே உயர்த்த வேண்டும் என்று எண்ணி ஒபாமா செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும் ட்ரம்ப் முறியடித்து அமெரிக்கா என்றாலே உலகம் வெறுக்கும் அளவிற்குக் கொண்டுவந்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.

    Share
  • தமிழக மக்களே உஷாராகுங்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    தமிழ்நாடில் சில காலமாக நடக்கும் நிகழ்ச்சிகளும் காதலர் தினத்தன்று அதிரடியாக உச்சநீதிமனறம் அளித்த தீர்ப்பும் தமிழ்ப் படம் ஒன்றை இடைவேளைவரை பார்த்த ஒரு உணர்வை நம்மிடையே ஏற்படுத்தியிருக்கிறது.  இன்னும் மீதிப் படமும் க்ளைமேக்ஸும் பாக்கியிருக்கின்றன.

    இதற்கிடையில் தமிழக மக்களை அடுத்த தேர்தலுக்குத் தயார்படுத்துவது சமூகத்தில் இருக்கும் சில சிந்தனையாளர்களின் கடமை ஆகிறது.

    பிப்ரவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு நம் முன் சில உண்மைகளை வைத்திருக்கிறது.  தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்.  பதினாலாம் தேதிய தீர்ப்பு மிகத் தாமதமான தீர்ப்பு என்றாலும் முழுமையாக மறுக்கப்பட்ட நீதி என்று சொல்ல முடியாது.  வழக்கில் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர் இறந்துவிட்டாலும் மற்ற மூவரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு நிம்மதியைத் தருகிறது.

    தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா சசிகலாவைத் தன்னுடன் வைத்துக்கொண்டது அவருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அல்ல என்றும் தான் சட்டத்திற்குப் புறம்பாக பல ஊழல்கள் புரிந்து சேர்த்த பணத்திலிருந்து தமிழக மக்களை அச்சுறுத்தி வாங்கிய சொத்துக்களை மறைப்பதற்குத் தேவையான பினாமிகளை ஏற்பாடு செய்யவும் மற்றும் சில தவறுகளை மறைக்கவும் சசிகலாவைத் தன்னோடு வைத்துக்கொண்டார் என்றும் கூறியிருக்கிறார்கள்.  (இதற்கு ஆதாரத்தை என்னால் கொடுக்க முடியாது.  ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிபதிகள் இதைக் கூறியிருக்கிறார்கள்.)  ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதற்காக அவர் மீதுள்ள எந்தக் குற்றங்களையும் குறைத்து மதிப்பிடவில்லை நீதிபதிகள்.  ஊழல் புரிந்தவர் என்று கடுமையாகவே சாடியிருக்கிறார்கள்.  மற்ற குற்றவாளிகளையும் நடு நிலையில் நின்று அவர்கள் புரிந்த குற்றங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.  மேலும் நாட்டில் அரசியல் ஊழல்கள் மலிந்துவருவதாகவும் மக்கள் விழிப்புடன் இருந்து இனிமேலாவது ஊழல்செய்பவர்களை அவர்கள் அப்படி ஊழல் செய்யாமல் தடுக்கவேண்டும் என்றும் இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.  இந்த அறிவுரையைத்தான் நான் தமிழக மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்

    ஊழல் புரிவதில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றும் சொல்லப்போனால் ஜெயலலிதா முதல் சூத்திரதாரி என்றும் சசிகலா அவருக்குத் துணைபோன இரண்டாவது சூத்திரதாரி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  இது இப்படி இருக்க ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல் மந்திரி பதவி வகிக்க நியமிக்கப்பட்ட பன்னீர்செல்வம் (பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியைப் பறித்துக்கொள்ள மாட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஜெயலலிதா அவரை முதல் மந்திரி பதவியில் அமர்த்தினாரேயொழிய அவர் மீது இருந்த அதி அன்பினாலோ அவருடைய திறமையினாலோ அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.) ஜெயலலிதாவை ஊழலே புரியாத அரசியல்வாதி போலவும் எல்லா ஊழல்களுக்கும் காரணகர்த்தா சசிகலா போலவும் பேசிவருகிறார்.  அன்றுவரை சசிகலாவுக்கு அடிபணிந்தவர் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று நாற்பத்து ஐந்து நிமிஷம் தியானத்தில் மூழ்கி ‘அம்மாவின்’ ஆசி பெற்று சசிகலாவை எதிர்க்கத் துணிந்தாராம்!  சசிகலா ஊழல் புரிந்தவர் என்றால் ஜெயலலிதா அவரைவிடப் பெரிய ஊழல் புரிந்தவர் என்றுதானே நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.  பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை புடம் போட்ட தங்கமாக ஜெயலலிதா மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிவந்திருக்கிறார்.  இது எப்படி சாத்தியம்?  சசிகலா சிறைக்குச் செல்வது சரிதான் என்று கூறும் பன்னீர்செல்வம் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்?  இது என்ன முரண்பாடு?  ஜெயலலிதாவின் கொள்கைகளைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஒரு பொற்காலத்தை உருவாக்கப் போகிறாராம்!  அவரைவிட அதிக ஊழல்கள் புரிந்து தமிழ்நாட்டை ஊழல் சக்கரவர்த்திகளின் கூடாரமாக மாற்றப் போகிறாரோ என்னவோ.

    தமிழக மக்களே, தயவுசெய்து சிந்தியுங்கள்.   தமிழக சட்டசபை கலைக்கப்பட்டு புதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அம்மாவின் வழியில் வந்த யாருக்கும் ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்.  நீதிமன்றமே அம்மாவைப் பற்றிய இந்த மதிப்பீட்டை வழங்கிய பிறகு இனிமேலாவது ‘அம்மா தெய்வம், தெய்வத்தைத் தண்டிக்க மனிதனால் முடியாது’ என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்காதீர்கள்.  (உங்களது இதய தெய்வமான அம்மாவை மனிதனால் தண்டிக்க முடியாது என்பதால்தான் அவர் இறந்துவிட்டார் என்று கூறினாலும் கூறுவீர்கள்.)  தமிழ்நாட்டில் எதிலும் எங்கும் ஊழல் நீக்கமற நிறைவதற்கு வித்திட்டுத் தன்னை ஏழைகளின் நலன்களில் அக்கறை செலுத்துபவர் என்று காட்டிக்கொண்ட அம்மாவின் சுயரூபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.  ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்கியதன் மூலம் தன்னைத்தானே எப்படி வளப்படுத்திக்கொண்டார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  சசிகலா ஊழல் பேர்வழி என்றால் ஜெயலலிதா அவரைவிடப் பெரிய ஊழல்வாதி என்னும் உண்மையை மறைக்கும், இரட்டை வேடம் போடும் பன்னீர்செல்வம் போன்ற அரசியல்வாதிகளைப் பொதுவாழ்வில் இருந்தே நீக்குங்கள்.  அம்மாவின் வழியைப் பின்பற்றுவதாகச் சொல்லும் எந்த அரசியல்வாதியையும் நம்பாதீர்கள்; அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.  இதை நீங்கள் செய்யத் தவறினால் தமிழ்நாடு இதைவிடப் பெரிய ஊழல் நாடாக மாறும்.    அ.தி.மு.க. மட்டுமல்ல, மற்ற எந்த ஊழல் கட்சி வேட்பாளர் என்றாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.  இப்போது பண மதிப்பு நீக்கம் அமலில் இருந்தும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு யார் முதல்வர் நாற்காலியைப் பிடிப்பது என்ற போட்டியில் ‘குதிரை பேரம்’ நடக்கிறது, கோடிக்கணக்கில் பணப்புழக்கம்  இருக்கிறது.  இதுவரை இந்தக் கட்சிகள் நம்மை முட்டாளடித்தது போதும்  இனியாவது அப்படிச் செய்யாமல் நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம்.  எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.  நாம் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு நம்மை ஆள அனுமதி கொடுத்தால்தானே இவர்கள் நம்மைச் சுரண்டுவார்கள்.

    ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளில் ஒருவரான அமிதவா ராய் கூறியுள்ள அறிவுரையைக் கேளுங்கள்.  ஊழல் கொடிய நோய் போல் சமூகத்தில் பரவிவரும்போது ஊழல் புரிபவர்கள் மக்களிடம் ஒரு பயத்தையும் பக்தியையும் உண்டாக்கிவிடுகிறார்கள். அப்போது நேர் வழியில் போக நினைக்கும் மனிதர்களுக்கு மூச்சுத் திணறுகிறது.  அவர்களின் நிலை என்ன என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.  ஊழல் புரிபவர்களை சமூகத்திலிருந்து நீக்குவதற்கு ஒட்டுமொத்தமாக எல்லோரும் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுங்கள்.  சுதந்திர இந்தியாவுக்காக போராடியது போல இந்த ஊழலுக்கு எதிராகவும் மிகப் பெரிய போராட்டத்தில் தன்னலம் இல்லாமல் அனைவரும் ஈடுபட வேண்டும்.  இது ஒவ்வொரு குடிமகனின் கடமையும்கூட என்கிறார் நீதிபதி.

    தமிழக மக்களே, இனி மேலாவது விழித்தெழுங்கள்.  நம் உரிமைகளைக் காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.

    Share
  • என்று முடியும் பணமதிப்பு நீக்கத்தின் பணத் திண்டாட்டம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நவம்பர் எட்டாம் தேதி திடீரென்று ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.  அன்றிலிருந்து ஏழை மக்கள் தாளாத துன்பத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தத் திட்டம் பணக்காரர்களிடம் இருந்த கள்ளப் பணத்தை வெளியே கொண்டுவருவதற்கு என்று அரசு அறிவித்தது.  ஆனால் எவ்வளவு கள்ளப் பணம் வெளியே வந்தது, எவ்வளவு வரும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது என்று அரசு சொல்லும் கணக்குக்கும் உண்மையில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை.  சில தினங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் இந்தப் பிரச்சினைக்கு விடிவு விரைவில் வரப் போவதாகத் தெரியவில்லை.

    சிறந்த பொருளாதார நிபுணர்களை ஆலோசிக்காமல் மத்திய அரசு எடுத்த முடிவு என்று முன்னாள் நிதிமந்திரி கூறுகிறார்.  இம்மாதிரியான தீவிர நடவடிக்கை எடுக்கும் முன் அதற்கேற்றவாறு மத்திய அரசுத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  கள்ளப் பணத்தில் – அதாவது வரி கட்டாத பணத்தில் – ஆறு சதவிகிதம்தான் பணமாகப் பதுக்கப்பட்டிருக்கிறது; மீதிப் பணம் நிலத்திலும் கட்டடங்களிலும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களிலும் முடக்கப்பட்டிருக்கிறது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமெர்த்தியா சென் சொல்கிறார். அதாவது, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 94 சதவிகிதக் கள்ளப்பணம் வெளியே வராது.  நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல, கள்ளப் பணம் வைத்திருப்போரின் பணத்தை வெளியே கொண்டுவந்து வறுமையைப் போக்கும் திட்டங்களைச் செயல்படுத்த, இந்தியாவை முன்னேறிய நாடுகளின் வரிசையில் நிறுத்த இந்தத் திட்டம் என்று பிரதம் மந்திரி கூறி வருகிறார்.  பழைய நோட்டுகளை செல்லாது என்று சொன்னதன் மூலம் பணமுதலைகளும் பயங்கரவாதிகளும் பணத்தைப் பதுக்க முடியாது என்று இவர்கள் சொல்லிக்கொண்டிருக்க புது நோட்டுக்களும் அவர்கள் வசம் முதலில் வருவது வேடிக்கையிலும் பெரிய வேடிக்கை.

    இந்தத் திட்டம் ஏழைகளைத்தான் அதிகம் பாதித்திருப்பதாகத் தெரிகிறது.  இந்தியாவில் அடித்தட்டு மக்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு அமெரிக்கப் பத்திரிக்கை பட்டியல் போட்டுத் தந்திருக்கிறது.  இவர்கள் எல்லோரும் டெல்லியிலோ டெல்லிக்கு அருகிலோ வசிப்பவர்கள்.  யாஷ்பால் ரத்தோர் (வயது 29) என்பவரின் திருமணம் அவருக்கு மணமகளாக வரவிருந்தவரின் பெற்றோர்களால் பணப்புழக்கம் இல்லாததால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.  ரத்தோர் வேலைபார்த்த இருசக்கர் வாகனங்கள் விற்பனை செய்யும் ஹீரோ மோட்டார் கம்பெனி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு வாங்குவோர் இல்லாமல் உற்பத்தி குறைந்ததால் இவரை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது.  அவர்களுடைய விற்பனை முப்பது சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.  அவர்களுடைய லாபம் குறைந்தால் தங்களைத் தானே அவர்கள் காத்துக்கொள்வார்கள்.  ‘இந்தத் திட்டத்தால் என் வேலையும் போய்விட்டது, என் திருமணமும் நின்றுவிட்டது’ என்று அழுகிறார் ரத்தோர்.

    இதே கம்பெனியில் வேலைபார்த்த சுனில் குமார் (வயது 28) என்பவர் எந்தவித முன்னறிவுப்பும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தால் வேலையை இழந்தார்.  15,000 ரூபாய் சம்பளத்தில் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி வந்த இவரால் இப்போது தன்னுடைய கைக்குழந்தைக்குகூட தேவையானதை வாங்க முடியவில்லை.  நவம்பர் 29-ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று வேலை போனதிலிருந்து இவரது குடும்பத்தால் தங்களுக்குத் தேவையான அளவு பால், பழங்கள், காய்கறிகள் வாங்க முடியவில்லை; வீட்டு வாடகை கட்ட முடியவில்லை.

    தினக்கூலி வேலைசெய்பவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  மாதத்தில் எல்லா நாட்களும் வேலைபார்த்தவர்கள் இப்போது வாரத்தில் சில தினங்கள்தான் வேலைசெய்கிறார்களாம்.  பார்க்கும் நாட்களிலும் முழுக் கூலி கிடைப்பதில்லையாம்.  இரண்டு மாதங்களில் பன்னிரெண்டே நாட்கள் மட்டும் வேலைசெய்த ரஃபீக் அலியால் (வயது 32) குடும்பம் நடத்த முடியவில்லை.  மனைவியையும் குழந்தைகளையும் தன் சொந்தக் கிராமத்திற்கு அனுப்பிவிட்டார்.  தங்கள் மகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல மனைவி தன்னிடம் பணம் கேட்டபோது இவரிடம் அனுப்புவதற்கு ஒன்றுமில்லை.

    ஹோதி லாலுக்கு (வயது (38) மூன்று குழந்தைகள்.  சென்ற இரண்டு மாதங்களில் இவருக்கு ஆறு நாட்கள்தான் வேலை கிடைத்தது.  இவருடைய மகன் அலுவலங்களைச் சுத்தம் செய்து ஏழாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்.  அவனைச் சீக்கிரமே அந்த வேலையிலிருந்து எடுத்துக் கல்லூரிக்கு அனுப்ப முடிவுசெய்திருந்த தந்தையால் அப்படிச் செய்ய முடியவில்லை.  அவனுடைய சம்பளத்தில்தான் இப்போது குடும்பம் நடந்து வருகிறது.  ராகேஷ் யாதவ் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் கிராமத்திற்கு அனுப்பிவிட்டு ஒரே அறை கொண்ட தன் வீட்டை வாடகை கொடுக்க முடியாதலால் காலிசெய்துவிட்டு மற்ற நான்கு பேரோடு ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

    சொன்னபடி கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர முடியவில்லை என்றதும் மத்திய அரசு திட்டதின் நோக்கத்தை மாற்றிக்கொண்டது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்குத்தான் இந்தத் திட்டமாம்.  எல்லாரும் ஆன்லைனில் பணம் கட்டலாம், கடன் அட்டையை உபயோக்கிக்கலாம் என்கிறது மத்திய அரசு.  பரிவர்த்தனனையை இப்படி மக்களுக்குக் கஷ்டத்தை உண்டுபண்ணி மாற்ற முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கின்றன.  கடன் அட்டை விநியோகிக்கும் கம்பெனிகள் பொது மக்களை ஏமாற்றாமல் இருக்க அமெரிக்காவில் பல சட்டங்கள் இருக்கின்றன.  முதலில் அப்படிப்பட்ட சட்டங்களையெல்லாம் கொண்டுவந்த பிறகல்லவா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்?  அமெரிக்காவில் கடன் அட்டைகள் புழக்கத்திற்கு வந்த பிறகு நிறையக் கடனாளிகள் உருவாகியிருக்கிறார்கள்.  அந்தத் தலைவிதி இந்தியாவுக்கும் வேண்டுமா?

    எல்லாக் கஷ்டங்களும் இன்னும் சில தினங்களுக்குத்தான் என்று சொல்லிச் சொல்லி மூன்று மாதங்களைக் கடத்திவிட்ட மத்திய அரசு ‘கஷ்டங்கள் சீக்கிரம். முடிந்துவிடும்.  இனி நாட்டில் பாலும் தேனும் ஓடும்.  அதுவரைக் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறி வருகிறது.  சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களால் காய்கறிகள்,  பழங்கள் வங்க முடியாதலால் அவற்றின் விலை குறைந்து வருகிறதாம்.  மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு இதனால் இன்னும் நல்லதாகப் போயிற்று.  குறைந்த விலையில் இவற்றை வாங்கலாமே.  பாலும் தேனும் ஓடும் காலம் வருவதற்குள் இப்போது வேலை இழந்தவர்கள் எப்படி உயிர் வாழப் போகிறார்கள்?

    அமெரிக்காவில் வேலை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுபோல் இந்தியாவிலும் மத்திய அரசு தன் திட்டத்தால் வேலை இழந்தவர்களுக்காவது ஏதாவது செய்ய வேண்டும்.  அரசின் திட்டத்தால் வேலை இழந்தவர்களுக்கு மறுபடி அவர்களுக்கு வேலை கிடைக்கும்வரை மத்திய அரசு பண உதவி செய்ய வேண்டும்.  தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கும் நம் அரசியல்வாதிகளுக்கு இதையெல்லாம் சிந்திக்க நேரம் இருக்குமா?

    Share
  • அமெரிக்க ஜனநாயகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    2016 நவம்பரில் அமெரிக்கத் தேர்தல்கள் முடிந்து அமெரிக்கப் பாராளுமன்றத்தின் செனட்டிற்கும் பிரதிநிதிகள் சபைக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் 2017 ஜனவரி மூன்றாம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள்.  புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி இருபதாம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார்.  ட்ரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்; புதிய செனட்டிலும் பிரதிநிதிகள் சபையிலும் குடியரசுக் கட்சியினரே பெரும்பான்மை வகிக்கின்றனர். இதனால் தங்களுடைய கொள்கைகளுக்குத் தக்கவாறு சட்டங்களை ஏற்றவும் பழைய சட்டங்களைத் திருத்தவும் முடியும் என்று குடியரசுக் கட்சியினர் நினைக்கின்றனர்.  அவர்கள் உடனடியாகத் திருத்த நினைப்பது ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.  பதவிக்கு வந்த முதல் நாளன்றே இந்தச் சட்டத்தை முழுவதுமாக விலக்கிவிடுவதாக ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் சூளுரைத்தார்.  இந்தச் சட்டத்தால் இருபது லட்சம் அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைத்திருக்கிறது, அவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்யப் போகிறார் என்ற விபரம் எதையும் சொல்லவில்லை.    ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சட்டங்களையும் நிராகரிப்பதுதான் குடியரசுக் கட்சியின் பிரதான நோக்கமாக இருக்கிறது.  இப்போது இரண்டு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாலும் ஜனாதிபதியே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர்களுடைய இந்த நோக்கம் எளிதாக நிறைவேறலாம்.

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அவருடைய அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுப்பவர்களை செனட் உறுப்பினர்கள் ஆறு பேர் அடங்கிய கமிட்டி – இதை செனட் ஒழுக்க நெறி கமிட்டி என்று அழைக்கிறார்கள் (Senate Ethics Committee)   – அவர்களிடம் பல கேள்விகள் கேட்டு – அவர்களுடைய சொந்த வாழ்க்கை நெறிமுறைகள் பற்றியும் பல கொள்கைகளில் அவர்களின் நிலைப்பாடு பற்றியும் – அவர்களை எடைபோடுவார்கள்.  அதன் பிறகு செனட்டின் ஓட்டெடுப்பிற்கு அவர்களுடைய பெயர்களைப் பரிந்துரை செய்வார்கள்.  செனட் உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் அவர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் ஜனாதிபதியின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்கள்.  நம் நாட்டில்போல் நாட்டின் பிரதம மந்திரியோ மாநில முதல் அமைச்சர்களோ தங்கள் இஷ்டத்திற்கு தங்கள் மந்திரி சபை சகாக்களைத் தேர்ந்தெடுக்க முடியாது.  அமெரிக்காவிலும் ஜனாதிபதியே தேர்ந்தெடுத்தாலும் செனட்டின் பெரும்பான்மையோர் அனுமதி இல்லாமல் அவர்களைத் தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடியாது.  நம் நாட்டிலும் இப்படி இருந்தால் எவ்வளவோ ஊழல்கள் களையப்படுமே.

    ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப் தன் அமைச்சரவைக்குப் பெரிய பணக்காரர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்களில் பலருக்கு அரசில் அங்கம் வகிக்கும்போது அவர்களுடைய தொழில்களின் நலமும் அரசின் நலமும் முரணும் அளவுக்கு நிறையத் தொழில்கள் உள்ளன.  (ட்ரம்ப்பிற்கே நிறையத் தொழில்கள் இருப்பதால் அந்த மாதிரி நடக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.    ஜனாதிபதி மட்டும் தன்னுடைய வணிக நிறுவனங்களை விட்டுவிடச் சட்டத்தின் கட்டாயம் இல்லையாம். ஆனாலும் இது மரபாக இருந்து வருகிறது.  அவற்றை நான் விடத் தேவை இல்லை சொல்லிக்கொண்டிருந்தாலும், பலர் எதிர்த்ததால் அவற்றையெல்லாம் ஒரு ட்ரஸ்டில் வைக்கப் போவதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்.)  ட்ரம்ப்பால் அவருடைய அமைச்சரவைச் சகாக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களில் பலர் பல தொழில்கள் செய்துகொண்டிருப்பதால் அவர்களுடைய தொழில்களில் அவர்கள் செய்யும் முடிவுகள் அரசின் நன்மைகளைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய பாரத்தில் அவர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.  தாங்கள் செய்யும் தொழில்கள் பற்றிக் குறிப்பாக அந்த பாரத்தில் குறிப்பிட வேண்டும்.  தேவையென்றால் தங்கள் தொழில்களை விட்டுவிடவேண்டும்.  மூன்று பேர்தான் அந்த பாரத்தை முழுமையாக நிரப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.  மற்றவர்கள் அந்த பாரத்தை அரைகுறையாக நிரப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.  எப்படியாவது செனட் ஒழுக்க நெறி கமிட்டி தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் தெரிந்துகொள்ளும் முன் பதவிகளைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    இது ஒரு புறம் இருக்க, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகள் சபை அங்கத்தினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு முந்தைய நாளே ரகசியமாக கூட்டம் கூட்டி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்கள்.  இந்த சபையிலும் உறுப்பினர்களின் ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்க ஒரு குழு (House Ethics Committee) இருக்கிறது.  2008-இல் இது முதன்முதலாக நிறுவப்பட்டது.  ஊழல் புரியும் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களின் சட்டத்தை மீறும் குற்றங்கள் இந்தக் குழுவின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டால் அந்தக் குற்றங்களை விசாரிக்கும்படி ஒழுக்க நெறிகள் அலுவலகத்தைக் (Office of the Congressional Ethics) இந்தக் குழு கேட்டுக்கொள்ளும்.  இந்த ஒழுக்க நெறிகள் அலுவலகம் அந்த உறுப்பினர்கள் பற்றி விசாரித்து பிரதிநிதிகள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.  உறுப்பினர்கள் குற்றம் புரிந்ததாக ஒழுக்க நெறிகளின் அலுவலகம் தீர்மானித்திருந்தால் ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்கும் குழு அந்த உறுப்பினர்களுக்குத் தண்டனை வழங்கும்.  பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மூன்று பேர் இம்மாதிரித் தண்டிக்கப்பட்டுச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அவர்கள் இழைத்த தவறு என்ன தெரியுமா?  அப்படி ஒன்றும் நம் நாட்டு அரசியல்வாதிகள் செய்ததுபோல் ‘மலைமுழுங்கிக் குற்றங்கள்’ இல்லை.  வெளிநாட்டிற்குப் போனபோது அங்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அந்த நாட்டின் அரசிடமிருந்து பெற்றார்களாம்.

    தங்களுடைய தவறுகளைக் கண்டுபிடித்துப் பிரநிதிகள் சபை தண்டனை வழங்குவது இந்த அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவில்லை.  மேலும் சில சமயங்களில் தங்கள் மீது தவறாக வழக்குகள் போடப்படுவதாகவும் அதை நிரூபிப்பதற்கு தாங்கள் அதிகப் பணம் செலவழிக்க வேண்டியிருப்பதாகவும் பிரதிநிதி சபை உறுப்பினர்கள் அலுத்துக்கொள்கிறார்கள்.  அதனால் இரண்டாம் தேதி இரவோடு இரவாகக் கூடி ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்கும் குழுவின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.  அதன் பிறகு என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்.  மறு நாள் காலையில் அவர்கள் தங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது பொதுமக்களிடமிருந்து அத்தனை மின்னஞ்சல்கள் அவர்களுக்கு வந்திருந்தனவாம்.  கூகுளின் வரலாற்றிலேயே அதிகபட்ச அளவில் ‘பிரதிநிதி சபையின் என்னுடைய பிரதிநிதி யார்?’ என்று கேட்டு அத்தனை தேடல்கள் (searches)  வந்திருந்தனவாம்!  தங்களுடைய பிரதிநிதி யார் என்று தெரியாமல்தான் ஓட்டுப்போட்டார்களா என்று கேட்கிறீர்களா?  தீவிர குடியசுக் கட்சி ஆதரவாளர் என்றால் பெயரைக் கூடப் பார்க்காமல் அந்தக் கட்சியின் சின்னத்திற்குப் பக்கத்தில் தன் ஓட்டைப் பதிவு செய்துவிடுவார்.  அதே மாதிரிதான் ஜனநாயகக் கட்சி ஆதரவாளரும்.  சில சமயங்களில் பிரதிநிகளுடைய தொலைபேசி எண்ணை, மின்னஞ்சல் முகவரியைக் கண்டறியவும் இப்படிச் செய்திருக்கலாம்.  இப்படித் தங்கள் பிரதிநிதிகளைத் தொலைபேசியில் அழைத்தவர்கள், மின்னஞ்சல் அனுப்பியவர்கள் ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்கும் குழுவின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் போட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனராம்.  இப்படி நிறையப் பேரிடமிருந்து வேண்டுகோள் வந்ததால் பயந்துபோய் தங்கள் தீர்மானத்தை உடனேயே வாபஸ் வாங்கிவிட்டார்களாம்.  அது மட்டுமல்ல, செனட் அங்கத்தினர்களும் அவசர அவசரமாக ஆரம்பித்த மந்திரிசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விசாரிக்கும் படலத்தை அடுத்த வாரத்திற்குத் தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்.

    ஆஹா, மக்கள் குரலைக் கேட்கும் இதுவல்லவோ ஜனநாயகம்!  காலில் விழும் கலாச்சாரத்திலிருந்து தமிழ்நாடு எப்போது ஜனநாயகம் பக்கம் திரும்பப் போகிறது?

    Share
  • பணம் படுத்தும் பாடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    பணம் படுத்தும் பாட்டைப் பற்றி பலர் பல விதமாக எழுதியாயிற்று.  இப்போது என் முறை.  நானும் எழுதுகிறேன்.

    நாங்கள் சிகாகோவில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் வசித்து வருகிறோம்.  அடுக்கு மாடிக் கட்டடத்தில் வசிப்பவர்களுக்கு அவரவர்களுடைய அபார்ட்மென்டின் சாவிகளோடு அந்தக் கட்டடத்தின் இரண்டு நுழைவாயில்களுக்குரிய சாவியையும் கொடுப்பார்கள்.  அதை வைத்திருப்பவர்கள் மட்டுமே கட்டடத்திற்குள் நுழைய முடியும்.  பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாடு.  தபால்காரரிடமும் பத்திரிக்கை டெலிவரி செய்பவர்களிடமும் கட்டடத்திற்குரிய சாவி இருக்கும்.  முன்பெல்லாம் நிறைய பிரதிகள் அடங்கிய ஒரு பெரிய கட்டாக பத்திரிக்கைகள் வருமாம்.  இப்போது பலர் செல்போனிலும் கணினியிலும் செய்திகளைப் பார்த்துவிடுவதால் பத்திரிக்கை படிப்பவர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.  140 அப்பார்ட்மென்ட்கள் உள்ள எங்கள் கட்டடத்திற்கு நான்கு பிரதிகள்தான் வருகின்றன.

    நான்கு வருடங்களுக்கு முன்னால் எங்களுக்குத் தினமும் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை பன்னிரெண்டாவது மாடியில் இருக்கும் எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து கொடுப்பதற்கு பத்திரிக்கை ஒருவரை ஏற்பாடு செய்திருந்தது.  எங்கள் அபார்ட்மென்டிற்கு மிக அருகில் லிஃப்ட் இருந்தது.  அதனால் பத்திரிக்கை டெலிவரி செய்பவர் லிஃப்டில் பன்னிரண்டாவது மாடிக்கு வந்து லிஃப்டிலிருந்து பத்திரிக்கையை அப்படியே எங்கள் அப்பார்ட்மென்டிற்கு அருகில் வீசிவிட்டு லிஃப்ட் மறுபடி அந்தத் தளத்தை விட்டுப் போவதற்கு முன் அதைப் பிடித்து அதிலேயே திரும்பிச் சென்றுவிடுவார்.  பலமுறை பத்திரிக்கை எங்கள் அப்பார்ட்மென்டிற்கு வெகு தொலைவில் கிடக்கும்.  அது மட்டுமல்ல, பல முறை பத்திரிக்கை பிரிந்து பலவாறாகச் சிதறிக் கிடக்கும்.  இவ்வளவு தூரம் வருபவர் லிஃப்டை விட்டு வெளியே வந்து எங்கள் அப்பார்ட்மென்டிற்கு அருகிலேயே பத்திரிக்கையை வைத்துவிட்டுப் போகலாமே என்று நாங்கள் நினைத்ததுண்டு.  ஒரு முறை அவரிடம் கூறிப் பார்த்தும் அவர் தொடர்ந்து தான் செய்ததையே செய்துவந்தார்.

    அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இன்னொருவர் பத்திரிக்கையை டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.  இவர் முந்தையவரைப்போல் அல்லாமல் அப்பார்ட்மென்டிற்கு அருகிலேயே  மடித்த மடிப்புக் கலையாமல் அபார்ட்மென்டின் வாசலில் பத்திரிக்கையை வைத்துவிட்டுப் போவார்.  கதவைத் திறந்தாலே பத்திரிக்கை கைக்குக் கிடைக்கும்.  இரவு உடையை மாற்றாமலே பத்திரிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.  இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.  தினமும் காலை ஐந்திலிருந்து ஐந்தரைக்குள் பத்திரிக்கையை டெலிவரி செய்துவிடுவார்.  எழுந்தவுடனேயே பத்திரிக்கை கைக்குக் கிடைத்துவிடுவதால் இதுவும் எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

    ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சில நாட்கள் முன்னதாக இப்படிப் பத்திரிக்கை டெலிவரி செய்பவர்கள் பத்திரிக்கையோடு தங்கள் விலாசமிட்ட ஒரு கவரைப் பத்திரிக்கையோடு இணைத்துவைத்துவிடுவார்கள்.  அதில் அவர்களுக்குச் சன்மானமாக பத்திரிக்கையைப் பெற்றுக்கொள்பவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப பணம் வைத்து தபாலில் அனுப்பிவிடுவது வழக்கம்.  எங்களுக்கு டெலிவரி செய்தவர் நேரம் தவறாமல், நாள் தவறாமல் நேர்த்தியாக டெலிவரி செய்ததால் 25 டாலர் பணத்தை அவர் வைத்திருந்த கவரில் வைத்துத் தபாலில் அனுப்பினோம்.  அவரும் மிகவும் மகிழ்ந்துபோய் அடுத்த முறை பத்திரிக்கை டெலிவரி செய்தபோது ஒரு மூலையில் பெரிதாக நன்றி என்று எழுதியிருந்தார்.  இப்படித்தான் நாங்கள் தகவல் பரிமாறிக்கொண்டோம்.  அவர் எங்களைப் பார்த்ததில்லை; நாங்கள் அவரைப் பார்த்ததில்லை.  இரண்டு வருடங்கள் இப்படியே எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் பத்திரிக்கை எங்களுக்குக் கிடைத்துவந்தது.

    யார் கண்பட்டதோ.  மூன்றாவது வருடம் நாங்கள் இந்தியா சென்று திரும்பிய பிறகு அடிக்கடி நேரம் தவறாமல் டெலிவரி செய்வதில் தவறியதோடு எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து கொடுப்பதற்குப் பதில் எங்கள் அப்பார்ட்மென்ட் இருந்த கட்டடத்தின் வாசலிலேயே வைத்துவிட்டுப் போய்விடுவார்.  நாங்கள் இரவு உடையை மாற்றிக்கொண்டு கீழே இறங்கிப் போய் கட்டடத்தின் கதவைத் திறந்து வெளியே சென்று பத்திரிக்கையை எடுத்து வர வேண்டும்.  குளிர் காலத்தில் கட்டடத்தின் கதவைத் திறந்தாலே கடுமையான குளிர் வாட்டும்.  அதற்கும் சேர்த்து கம்பளி உடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.  சில சமயம் வாசல் வரை பனி கூட இருக்கும்.  ‘தயவுசெய்து எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து வைத்துவிடுங்கள்’ என்று கூறிப் பார்த்தோம்.  ஒரு நாள் நாங்கள் சொன்னபடிச் செய்வார்.  ஆனால் மறு நாளே பழையபடி வெளியே வைத்துவிட்டுப் போய்விடுவார்.  ஒரு முறை எங்கள் கட்டடத்தின் சாவி தன்னிடம் இல்லையென்று கூறினார்.  கட்டடத்தின் மேனேஜரிடம் சொல்லி அவருக்கு ஒரு சாவி கொடுக்கச் செய்தோம்.  ஆனாலும் எந்தவித பயனும் இல்லை.  வழக்கமாக கிறிஸ்துமஸுக்கு முன்னால் தன்னுடைய விலாசமிட்ட கவரை வைப்பதற்குச் சில நாட்கள் முன்னாலேயே ஒழுங்காக டெலிவரி செய்ய ஆரம்பித்தார்.  நாங்களும் ‘இதுவரை அவருக்கு ஏதோ கஷ்டம் இருந்திருக்க வேண்டும்.  அதனால்தான் அப்படிச் செய்தார் என்று நினைத்துக்கொண்டு வழக்கம்போல் 25 டாலரைக் கவரில் வைத்து அனுப்பினோம்.  ஒரு சில நாட்கள் ஒழுங்காக எல்லாம் நடந்து வந்தது.  மறுபடி அதே ஒழுங்கீனம் தொடர்ந்தது.  போகட்டும் என்று விட்டுவிட்டோம்.  நாங்களே கீழே போய் எடுத்துவர ஆரம்பித்தோம்.

    இந்த வருடம் இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததும் அதே ஒழுங்கீனத்தைத் தொடர்ந்தார்.  சாவிப் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று கேட்டுப் பார்த்தோம்.  சரியாகப் பதில் வரவில்லை.  நாங்கள் தகவல் பரிமாறிக்கொள்வதெல்லாம் கடிதம் மூலம்தான்.  அவர் கூற விரும்புவதை ஒரு பேப்பரில் எழுதிப் பத்திரிக்கையோடு சேர்த்துவிடுவார்.  நாங்கள் தபால் மூலம் அவரிடம் பேசுவோம்.  அவர் சமீபத்தில்தான் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருந்ததால் சரியாக ஆங்கிலம் பேச வராது.  அதனால் தொலைபேசியில் பேச விரும்ப மாட்டார்.  இந்த வருடமும் கிறிஸ்மஸுக்குக் கொஞ்ச நாட்கள் முன்பு தன்னுடைய விலாசமிட்ட கவரைப் பத்திரிக்கையோடு வைத்திருந்தார்.  இந்த முறை என் கணவர் விடுமுறைக்காக ஊரை விட்டுச் செல்லும் முன் ‘நாங்கள் ஊருக்குப் போகிறோம்.  திரும்பி வந்த பிறகு எப்படி டெலிவரி செய்கிறீர்கள் என்று பார்த்துவிட்டு கிறிஸ்துமஸ் இனாமைக் கொடுக்கிறோம்’ என்று கடிதம் மூலம் அவருக்குத் தெரியப்படுத்தினார்.  நாங்கள் திரும்பி வந்த அன்று பத்திரிக்கையோடு ஒரு சிறு தாளைச் செருகிவைத்திருந்தார்.  அதில் தான் ஏன் அதுவரை சரியாக டெலிவரி செய்யவில்லை என்பதற்குப் பலவித காரணங்களைச் சொல்லியிருந்தார்.  அவற்றில் பல அப்பட்டமான பொய்கள்.  அதைப் பார்த்து எனக்கு ஆத்திரப்படுவதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை.  இப்படிப் பொய்கள் சொல்லுகிறாரே என்று ஆத்திரம்.  25 டாலர்களைப் பெறுவதற்கு இத்தனை பொய்கள் சொல்ல வேண்டுமா என்று அழுகை மற்றொரு புறம்.  பணத்திற்கு இத்தனை சக்தியா?  இனி எப்படி டெலிவரி செய்கிறார் என்பதைப் பார்க்கக்கூட விரும்பாமல் அன்றே வழக்கமாகக் கொடுக்கும் 25 டாலரை அனுப்பிவிடும்படி கணவரிடம் கூறினேன்.  அவரும் அப்படியே செய்துவிட்டார்.

    இன்னும் வரும் வருடங்களிலும் அவர் எப்படி டெலிவரி செய்தாலும் அவருக்குரிய 25 டாலர் பணத்தைக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்தோம்.

    .

    Share
  • அரசியல் பணியும் பகட்டும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    9ef7bb3611a95004e759864385ba59ee

    காந்திஜி என்றாலே அவருடைய எளிமைதான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும்.  (இப்போது போப்   பிரான்ஸிஸும் என் நினைவுக்கு வருகிறார்.  எளிமைக்கும் பணிவிற்கும் இலக்கணமான போப் பிரான்ஸிஸ் பற்றி ஒரு புத்தகம் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.)  இப்போது காந்திஜியின் எளிமையைப் பின்பற்றுபவர்கள் யார் என்று தேடிப் பார்த்தால் யாரும் கிடைக்கவில்லை.  அவருடைய காலத்திலேயே, அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் பலரே அவருடைய எளிமையைப் பின்பற்றவில்லை.

    800px-gandhi_spinning-ed

    நம் அரசியல் தலைவர்கள் பலரை நினைத்துப் பார்க்கிறேன்.  முதல் பிரதமர் நேருவிலிருந்து இன்றைய பிரதமர் மோதி வரை எளிமையாக உடை உடுத்துதல் என்பதை யாரும் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை.  லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் ஆகிய பிரதமர்கள் இதற்கு விதிவிலக்கு.  ஏழைகளின் வறுமையை ஒழிக்கப் போவதாக உருக்கமாகப் பேசும் மோதி பத்து லட்சம் ரூபாய் செலவில், வரிசை வரிசையாக அவருடைய பெயர் பொறிக்கப்பட்ட ஷர்வானியில் ஒபாமா கலந்துகொள்ள வந்திருந்த குடியரசு தின விழாவில் காட்சி அளித்தார்.  உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்க அதிபரைக் கவர்வதற்காக அந்த விலையுயர்ந்த உடையில் தோன்றினார் போலும்.  ஒபாமா காந்திஜியின் ரசிகர்; அவருடைய எளிமை அவருக்கு மிகவும் பிடிக்கும்.  மோதி எளிமையாக உடை உடுத்தியிருந்தாலும் ஒபாமாவுக்குப் பிடித்திருக்கும்.  அது பற்றி மோதியை விமர்சித்தவர்களுக்கு தனக்கு ஒரு நண்பர் அதை அன்பளிப்பாகக் கொடுத்ததாகக் கூறினார்.  அது அன்பளிப்பாகவே இருக்கட்டும்.  அவர் அதை வேண்டாம் என்று கூறியிருக்கலாமே.  அப்படியே அந்த நண்பர் கொடுத்திருந்தாலும் அதை அணிந்துகொண்டு குடியரசு தினத்தன்று வலம் வந்திருக்க வேண்டியதில்லை.

    சரி மோதியை விடுங்கள்.  இவர் காந்தி வழியில் வந்தவர் இல்லையே.  காந்தி வழியைப் பின்பற்றியவர்கள், அவரோடேயே சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள் யாரும் எளிமையுடன் சேர்த்து அவரை  எதிலும் பின்பற்றவில்லை.  காமராஜ், ராஜாஜி போன்ற அரசியல்வாதிகள் உண்மையான காந்தியவாதிகள்; அவர்களே இதற்கு விதிவிலக்கு.  அந்தத் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் மறைந்த பிறகு அரசியலுக்கு வந்த தலைவர்கள் – காங்கிரஸிலும் சரி, மற்றக் கட்சிகளிலும் சரி – ஏழைகளுக்காகப் பாடுபடுகிறோம் என்று சொன்னாலும், எளிமையை யாரும் கடைப்பிடிக்கவில்லை.  எளிய குடும்பத்திலிருந்து வந்ததாகக் கூறிக்கொள்ளும் முன்னாள் உத்திரப் பிரதேச முதல் மந்திரி மாயாவதி எப்படிப்பட்ட உடைகளை அணிந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.  காந்திஜியையும் அவருடைய கொள்கைகளையும் மறந்தவர்கள்  அவருடைய எளிமையையா நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறோம்?

    உலகிலேயே அதிகப் பணக்காரர்கள் வசிக்கும் அமெரிக்காவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பகட்டாக உடை உடுத்துதல் என்பது அத்தியாவசியமான ஒன்றாக ஆகிவிடுகிறது.  காந்திஜியின் மேல் இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் ஒபாமாவோ அவரது மனைவி மிஷலோ எளிமையாக உடை உடுத்துவதில்லை.   அப்படி அவர்கள் உடை உடுத்தினால் அவர்களுக்கு நாகரிகம் தெரியவில்லை என்று அவர்களை ஒதுக்கிவிடுவார்களாம் அமெரிக்க மக்கள் என்.று கூறினார் ஒரு அமெரிக்க நண்பர்.  அது சரி போல்தான் தெரிகிறது..  வேலை இழந்த பாட்டாளி வர்க்கத்தினரின் நலனுக்காகப் பாடுபடப் போவதாகக் கூறி அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அணியும் சூட்டும் கோட்டும் 17,000 (பதினேழாயிரம்) டாலர்கள் பெறுமானவையாம்.  ஹிலரி கிளிண்டன் தினமும் ஒரு உடை அணிவதாக நான் நினைத்திருக்கிறேன்.  ஆனால் இப்போது புரிகிறது அவர் ஒரே நாளில் வேளைக்கு ஒரு உடை அணிகிறார் என்று.  கடந்த ஜூலை மாதம் ஜனநாயகக் கட்சி ஹிலரியை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததும் தன்னுடைய வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆற்றிய உரையில் உலகில் சமத்துவமின்மை பெருகி வருவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எச்சரித்தார்.  அப்போது அவர் அணிந்திருந்த சூட்டின் மதிப்பு என்ன தெரியுமா?  12,495 டாலர்கள்.  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்க ஏழைகளின் இன்னல்களைத் துடைப்பதே தன்னுடைய குறிக்கோளாக இருக்கும் என்று தேர்தல் பிரச்சாரம் முழுவதும் பேசிவந்தார்.  இவருக்கோ  ட்ரம்புக்கோ சாதாரண மக்கள் வாழ்க்கையை ஓட்ட எவ்வளவு திணறுகிறார்கள் என்று கொஞ்சமும் தெரியாது.

    பிரிட்டனில் கேமரூனுக்குப் பிறகு பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றிருக்கும் தெரஸா மே 4000 பவுண்டு மதிப்புள்ள உடை அணிந்திருப்பதைப் பார்த்து மக்களிடையே பெரிய எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.  ‘இவ்வளவு விலயுயர்ந்த உடை அணியும் உங்களுக்கு சாதாரண மக்களின் கஷ்டங்கள் புரிகிறதா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எல்லோரின் நலனுக்காகவும் தன் அரசு பாடுபடுவதாகக் கூறியிருக்கிறார்.  ‘நான் ஒருபோதும் இத்தகைய விலையுயர்ந்த ஆடைகளை வாங்கியதில்லை.  என்னுடைய திருமண உடையைத் தவிர எந்த உடைக்கும் இவ்வளவு பணம் செலவழித்ததில்லை’ என்று தெரசா மேயின் உடையை விமர்சித்த அவருடைய கல்வி மந்திரி தன் பதவியை இழந்தார்.  ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் விலகியதைப் பற்றிய கருத்தரங்கில் கலந்துகொள்வதாக இருந்த கல்வி மந்திரி அது துவங்கும் முன்னாலேயே விலக்கப்பட்டார்.  தெரசா மேக்கு முன்னால் பிரிட்டனின் பிரதமராக இருந்த கேமரூனும் 4000 டாலர் மதிப்புள்ள உடைகளை அணிந்ததற்காக முன்னால் பலரால் விமர்சிக்கப்பட்டார்.

    மறுபடியும் இந்தியத் தலைவர்களைப் பற்றிப் பார்ப்போம்.  ஏழ்மையைப் பற்றித் தங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாரும் எளிமையைக் கடைப்பிடிப்பதில்லை.

    உண்மைக்கும் அரசியலுக்கும் அதிக தூரம் இருப்பதுபோல் எளிமைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அதிக தூரம்.  இந்த விதிக்கு ஒரே விலக்கு காந்திஜி ஒருவர்தான்.  அவர் அரசியலில் உண்மையை மட்டும்தான் பேசினார்; வாழ்க்கையில் எளிமையைத்தான் கடைப்பிடித்தார்.

    Share
  • ‘அம்மா’ அங்கும் இங்கும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    தமிழ்நாட்டில் ஒரு அரசியல் தலைவர் மறைந்ததும் ஒரு தமிழ்ப் பத்திரிக்கை வெளியிட்ட செய்திகள்.

    jeya

    “அணைந்தது தமிழகத்தின் ‘ஒளிவிளக்கு’”

    “அஸ்தமித்தது அ.தி.மு.க.வின் ‘விடிவெள்ளி’”

    “தாயை இழந்து தவிக்கிறது தமிழகம்”

    அ.தி.மு.க. பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது 68-வது வயதில் நேற்று இரவு 11;30 மணிக்குக் அமரரானார்.  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலன் அளிக்கவில்லை.  கண்ணீர் கடலில் தொண்டர்களைத் தவிக்கவிட்டுவிட்டு அ.தி.மு.க.வின் விடிவெள்ளி அஸ்தமித்தது.  தாயை இழந்து தவிக்கிறது தமிழகம்.

    “அம்மா என்றழைக்க உயிரில்லையே”

    “சாதனைகளின் சரித்திர நாயகி”

    “ஜெயித்துக் காட்டிய ‘ஜெ’”

    “அச்சமில்லை, அச்சமில்லை

    அச்சமென்பதில்லையே

    உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும்

    அச்சமில்லை, அச்சமில்லை

    அச்சமென்பதில்லையே”

    என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர்தான் ஜெயலலிதா.  அசாத்திய துணிச்சலுடன் சினிமா, அரசியல் என பல துறைகளிலும் தடம் பதித்தார்.  காலத்தை வென்று காவியம் படைத்த இவர், தமிழக வரலாற்றில் தனக்கென இடம் பிடித்தார்.

    தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர்; இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதல்வர்களுள் 2வது நபர்; 29 ஆண்டுகளாக அ.து.மு.க.வின் பொதுச்செயலர்; தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்; சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்; ஏழு மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்தவர்; திருமணமாகாத பெண் தலைவர்; தைரியமான பெண்மணி; ‘அம்மா’ என அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுபவர் என பல சாதனைகளைக் கொண்டிருந்தவர் முதல்வர் ஜெயலலிதா.

    இந்தியாவுக்கு இந்திரா, தமிழகத்திற்கு ‘ஜெ’

    ஜெயலலிதா 16 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்துள்ளார்.  இவர் நிறைவேற்றிய திட்டங்கள் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களைச் சென்றடைந்துள்ளது.  அதுவும் கடந்த 6 ஆண்டுகளாக சிறந்த ஆட்சியை நடத்தினார்.

    காலத்தை வென்றவர்…..காவியமானவர்.

    விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா நிலைநாட்டியது பூமி உள்ளவரை ‘ஜெ’, புகழே நிலைத்திருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

    இதே தலைவரைப் பற்றி அமெரிக்கப் பத்திரிக்கையான நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி இதோ.

    அதன் தலைப்பு: தமிழ்நாட்டின் முதல்வர் இறந்ததால் அம்மாநிலத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது.

    இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு முன்னாள் நடிகையும், இப்போது பல ஆண்டுகளாக அரசியல் தலைவராகவும் விளங்கும், ‘அம்மா’ என்று அவருடைய தொண்டர்களால் அழைக்கப்படும் அதிகாரத் தோரணையுள்ள, கர்வமிக்க தலைவர் இறந்துவிட்ட செய்தி அறிவிக்கப்பட்டதும் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.

    68 வயதான தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிறன்று மாரடைப்பு ஏற்பட்டது.

    தங்கள் மன உணர்வுகளை நாடகத்தனமாக மக்கள் வெளிப்படுத்துவது தென்னிந்திய அரசியலில் அப்படியொன்றும் புதிதல்ல.  அதிகாரத் தோரணையுள்ள ஜெயலலிதா ஏழை மக்களுக்குப் பல இலவசங்களைக் கொடுத்து உணர்ச்சிகளைத் தீவிரமாக வெளிப்படுத்தும் தொண்டர்களை உருவாக்கியிருந்தார்.

    பலர் வன்முறைகள் நிகழலாம் என்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேமிக்கத் தொடங்கினர்; சிலர் சென்னையை விட்டே வெளியேறினர்.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததாக வதந்திகள் வெளியானவுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையின் முன்னே கூடியிருந்த தொண்டர்கள் மருத்துவமனையின் கேட்டுகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர்.

    சுமார் எட்டு கோடி ஜனத்தொகை கொண்ட தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் இறப்பு ஒரு உறுதியற்ற நிலையை உருவாகியிருக்கிறது.  அவருக்குப் பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவிக்கு யார் வருவார்கள் என்பது உறுதியில்லாததும் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம்.

    ஜெயலலிதாவின் நெடுநாளைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும் அவருடைய விசுவாசியுமான ஒ. பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இதற்கு முன்னால் இரண்டு முறை ஜெயலலிதாவிற்குப் பதிலாக முதல்வர் பதவியைத் தற்காலிகமாக ஏற்றுக்கொண்ட இவர் ஜெயலலிதாவின் முதல்வர் நாற்காலியில்கூட உட்காராமல் ஜெயலலிதாவிற்குத் தன்னுடைய பணிவைக் காட்டியுள்ளார்.

    யாரையும் தனக்கு எதிராக வளர்ந்துவிடாமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார் என்பதைக் குறிக்க சரித்திர ஆய்வாளர் ஒருவர் ஒரு கிரேக்க கதையை மேற்கோள் காட்டினாராம்.  அந்தக் கதையில் வரும் அரசன் ஒருவன் தன் மக்களுக்குப் பாடம் போதிப்பதற்காக, மற்றச் செடிகளைவிட அதிக உயரமாக வளரும் செடிகளை வெட்டிவிடுவானாம்.  கடந்த 25 ஆண்டுகளாக தன்னைச் சார்ந்து, தன்னை மட்டுமே சார்ந்து இருக்கும், தங்களுக்கென்று ஒரு ஆதரவாளர் கூட்டத்தை வளர்த்துக்கொள்ளாத, ஒரு கூட்டம் அடங்கிய ஒரு அரசியல் கட்சியைக் கவனமாக உருவாக்கியிருக்கிறார்..

    ஜெயலலிதாவின் எதேச்சதிகாரம் அவருக்கு மக்களிடம், குறிப்பாக ஏழைகள், கீழ் மட்டத்தைச் சேர்ந்தவர்களிடம், செல்வாக்கையும் ஆதரவையும் பெருக்கியதேயொழிய அவற்றைக் குறைக்கவில்லை.  தன்னுடைய கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் தன்னிடம் வெளியிடங்களிலும் பணிவைக் காட்ட வேண்டுமென்று எதிர்பார்த்தார்.  அவர்கள் அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து தரையில் தங்கள் தலையை வைப்பதைப் பார்த்து ரசித்தார்.  ஆண்களை இப்படித் தன்னுடைய கால்களில் விழவைத்ததுமல்லாமல் அதைப் பெரிய காட்சியாகவும் ஆக்கினார்.  இப்படி ஆண்கள் அவர் கால்களில் விழுந்ததைப் பெண்கள் வெகுவாக ரசித்தனர்.

    அவரை அரசியலுக்கு அறிமுகம் செய்த, அவரோடு பல திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரனின் இறப்பிற்குப் பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவியை எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தன் திறமையினால் கைப்பற்றினார்.  இறக்கும்வரை அந்தப் பதவியை வகித்தார்.

    தமிழ்நாட்டில் ஏழைகளுக்காகப் பல இலவசத் திட்டங்களைக் கொண்டுவந்தார்.  மிகவும் குறைந்த விலையில் உணவுகள் கிடைக்கும் உணவகங்களையும் மருந்தகங்களையும் தன் பெயரில் நிறுவினார்.

    1991-இல் முதல்வரகப் பதவியேற்றவுடனே ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே பெறப் போவதாக அறிவித்தார்.  ஆனால் பல வழிகளில் தன் செல்வத்தைப் பெருக்கிக்கொண்டார்.  1995-இல் தன் வளர்ப்பு மகனுக்கு மிக ஆடம்பரமாகத் திருமணம் நடத்திவைத்தார்.  சுமார் 40,000 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். 2014-இல் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக நீதிபதியொருவர் இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.  1996-லும் 2014-லும் ஊழல் செய்ததற்காக சில நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.  இருப்பினும் இவருடைய ஆதரவாளர்கள் ‘கடவுளை எப்படி ஒரு மனிதன் தண்டிக்க முடியும்?’ என்ற வாசகங்களைத் தாங்கிய போஸ்டர்களை ஒட்டினர்.  இவரை அவர்கள் கடவுளாகவே பாவித்தனர்.

    2009-இல் அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசிய அறிக்கை ஒன்றில் (இது விக்கிலீக்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது) தன்னுடைய குறிக்கோளை அடைய எந்த வித வன்முறையையும் ஜெயலலிதா கையாளுவார்; இது பெண்களும் ஆண்களுக்குச் சமமாக ஈவிரக்கமற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற கருத்தை நிலைநாட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஜெயலலிதாவிற்கு துணிச்சலானவர் (அவருடைய தொண்டர்களுக்குப் புரட்சித் தலைவி) என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தது.  அவருக்குத் தங்கள் கீழ்ப்படியும் விசுவாசத்தைக் காட்ட அவருடைய கட்சியைச் சேர்ந்த ஆண்கள் ஒருவடொருவர் போட்டி போட்டனர்.    இதைப் பெண்கள் மிகவும் ரசித்தனர்.

    ஒரு தலைவர், ஒரு மரணம். இந்தியச் செய்தியாளர்களும் அமெரிக்கச் செய்தியாளர்களும் பார்க்கும் விதம் வேறு. முன்னவர்கள் சாதாரண மக்களைப் போலவே புகழையே பாடுகிறார்கள். பின்னவர்கள் விலகி நின்று பார்த்து எதிர்மறை உண்மைகளையும் சொல்கிறார்கள்.

    Share
  • இப்படியும் மனிதர்களா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவின் நியுயார்க் மாநிலத்திலுள்ள யூடிகா என்னும் ஊரில் உள்ள, போதைப்பொருள் விற்றதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சீர்திருத்தச் சிறையில் நடந்த கொடுமையைப் பற்றி அறியும்போது குலை நடுங்குகிறது.

    ஜூலை ஆறாம் தேதி திடீரென்று இந்தச் சிறையைக் கண்காணிக்கும் நாற்பது அதிகாரிகள் சிறைக்கு வந்து அங்கு இருக்கும் கைதிகளைத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.  மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு அதிகாரி சிறையில் காயமடைந்ததாகவும் அதற்கு சிறைக் கைதிகளே காரணம் என்று அனுமானித்து முப்பத்திரெண்டு கைதிகளுக்கும் மேலானவர்களை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். அந்த அதிகாரி வளைக்கக்கூடிய ஒரு நாற்காலியில் அமர்ந்து கால்களை முன்னால் உள்ள ஒரு மேசையில் வைத்துக்கொண்டு ஒரு நாவலைப் படிக்க முயன்றிருக்கிறார். ஆனால் கண்களை என்னவோ மூடிக்கொண்டிருந்தார். திடீரென்று அந்த நாற்காலியிலிருந்து விழுந்து தலையில் காயம் பட்டு மயக்கம் அடைந்திருக்கிறார்.  இரு கைதிகள் அதைக் கண்டு அவருக்கு உதவ விரைந்திருக்கிறார்கள்.  அதிகாரிகள் தங்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உதவி கோருவதற்காக வைத்திருந்த அவசர அலார பட்டனை அழுத்த முயன்றிருக்கிறார்கள்.  கண் விழித்த அவர் ‘வேண்டாம்’ என்று கூறியும் அதற்குள் அவர்கள் பட்டனை அழுத்திவிட்டார்கள்.  உதவிக்கு வந்த அதிகாரிகள் அதிகாரி காயமடைந்திருப்பதையும் அவர் அருகே இரண்டு கைதிகள் இருப்பதையும் பார்த்து அவர் காயமடைந்ததற்கு அந்தக் கைதிகள்தான் காரணம் என்றும் அது திட்டமிட்டுச் செய்த சதி என்றும் கூறி அவர்கள் இருவரையும் தனி செல்லுக்கு மாற்றித் துன்புறுத்தியிருக்கிறார்கள். அந்த அதிகாரிக்கு நடந்தது பற்றிய உண்மையை அறிய அந்த அறையில் கேமரா எதுவும் இல்லை.  இந்தச் சம்பவம் நடந்த பிறகு அந்த அதிகாரி இரண்டு மாத மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.  பத்திரிக்கைக்காரர்கள் அவரைப் பேட்டி காண முயன்றபோது ஒத்துழைக்கவில்லை.  அதன் பிறகு அந்தக் கைதிகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒருவரை மட்டும் இன்னொரு சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள்.  சிறையில் இன்னொரு கைதி அடிக்கடி அந்த அதிகாரியிடம் ‘ஒரு நாள் நீங்கள் இந்த நாற்காலியிலிருந்து விழுந்துவிடப் போகிறீர்கள்’ என்று ஜோக்கடிப்பாராம்.  அதேபோல் விழுந்திருக்கிறார்!

    அந்த அதிகாரி நாற்காலியிலிருந்து கீழே விழுந்து மூன்று நாட்கள் கழித்து – அதாவது ஜூலை ஆறாம் தேதி – அதிகாரிகள் சிறைக்கு வந்து முப்பத்தி இரண்டு கைதிகளைப் பலவாறாகத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  இவர்கள் உண்மையில் என்ன நடந்தது என்று கைதிகளை விசாரிக்க வந்தவர்கள்.  கைதிகளிடம் கடுமையாக நடந்துகொண்டால்தான் உண்மையை வரவழைக்க முடியும் என்று நினைத்து அவர்களைத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  கூச்சலிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த அதிகாரிகள் கைதிகள் எல்லோரையும் தரையில் படுக்குமாறு ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.  சிலரைச் சுவரில் மோதி அவர்கள் மூக்கை உடைத்திருக்கிறார்கள்; ஒருவரின் ஆசனத் துவாரத்தில் இரும்புக் குழாய்களை நுழைத்திருக்கிறார்கள்; ஒருவரின் நெஞ்சில் மேல் ஏறி நின்றுகொண்டு பலவாறாக அவரை உதைத்திருக்கிறார்கள்; ஒரு வெள்ளை இனக் கைதி அதிகாரி விழுந்ததற்கு கைதிகள் யாரும் பொறுப்பில்லை என்று சொன்னதற்கு அவரை ‘வெள்ளை இனத்தவனான நீ எதற்காக இவர்களைக் காப்பாற்ற முயல்கிறாய்?’ என்று மிரட்டியிருக்கிறார்கள்.  அங்குள்ள கைதிகளில் கிட்டத்தட்ட எல்லோரும் கருப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள்.  ஹெர்னியா ஆபரேஷன் செய்துகொண்ட ஒரு கைதியை உதைத்துத் தரையில் தள்ளிவிட்டு எழுந்திருக்கும்படி கூறிய அதிகாரி கைதி எழுந்திருக்க முயன்றபோது அவர் ஆபரேஷன் செய்துகொண்ட இடத்திலேயே உதைத்தாராம்.  தன்னுடைய பால் அடையாளத்தை (sex identity)  மாற்றுவதற்காக மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு கைதியின் மருந்துகளைத் தரையில் போட்டு மிதித்து ஒரு அதிகாரி பாழாக்கினார்.  அவர் படித்துக்கொண்டிருந்த ஆண்டர்ஸன் கூப்பெர் என்னும் பெயர்பெற்ற பத்திரிக்கையாளர் எழுதிய புத்தக்கத்தை (இவரும் ஓரின ஈர்ப்பு இனத்தைச் சேர்ந்தவர்.  அவரும் அவருடைய தாயும் அவருடைய அந்த நிலையை எப்படிக் கையாண்டார்கள் என்பது பற்றிய புத்தகம்) கிழித்துப் போட்டிருக்கிறார்கள்.  கைதிகளின் உடைமைகளைத் தரையில் போட்டுப் பாழாக்கியிருக்கிறார்கள். வெள்ளை இனக்கைதிகளை நோக்கி, ‘நீங்கள் நம் இனத்திற்கே இழிவு தேடிக் கொடுப்பவர்கள் என்று கூறினாராம் ஒரு அதிகாரி.  கருப்பு இனத்தைச் சேர்ந்த கைதிகளையும் ஹிஸ்பானிய இனத்தைச் சேர்ந்த கைதிகளையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை என்பதால் அவர்களை இப்படி வசைபாடியிருக்கிறார்கள்.  முப்பத்தி இரண்டு கைதிகளையும் அடித்துத் துன்புறுத்திய பிறகு அந்த இடம் புயல் அடித்து ஓய்ந்த இடம்போல் இருந்ததாக ஒரு கைதி கூறியிருக்கிறார்.

    அதன் பிறகு கைதிகளை அந்த இடத்தைச் சுத்தம் செய்யச் சொன்னார்களாம்.  அவர்கள் முன்னாலேயே கைதிகளின் உடைமைகள்மேல் அதிகாரிகள் சிறுநீர் கழித்தார்களாம்.

    ‘இதையெல்லாம் வெளியில் சொன்னால் மறுபடி வந்து உங்களைத் தொலைத்துவிடுவோம்’ என்று மிரட்டினார்களாம்.  அப்படியும் எப்படியோ இந்தக் கொடூரம் வெளியே தெரிந்து நவம்பர் 2-ஆம் தேதி இரண்டு பெரிய அதிகாரிகள் பதவியிலிருந்து தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    சட்டம் கோலோச்சும் அமெரிக்காவில், ஒளிவுமறைவில்லாத ஆட்சியை (transparent government) வலியுறுத்தும் அமெரிக்காவில், ஒபாமா ஜனாதிபதியாக இருக்கும் அமெரிக்காவில் இப்படி நடந்திருக்கிறது.  வெள்ளை இனம்தான் உயர்ந்தது என்று நினைக்கும், கருப்பர்கள், புதிய குடியேறிகள் (இதில் சிலர் விசா இல்லாமல் திருட்டுத்தனமாக வந்தவர்கள்), மாற்றுத் திறனாளிகள், ஏழைகள், பால் உணர்வில் மாறுபட்டவர்கள் ஆகியோர்களின் நலன்களுக்கு எதிராகப் பேசிவரும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  இவர் ஜனாதிபதியான பின் அமெரிக்காவில் இவர்களின் நிலை என்ன ஆகும் என்று எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

    Share
  • வாழ்வதைப் பற்றி அமெரிக்கப் பார்வை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் 1963-இல் கொலைசெய்யப்பட்ட ஜான் கென்னடியின் மனைவி, பெயர்போன ஜாக்குலின் கென்னடியின் சமையல்காரராக இருந்த ஒரு பெண் பற்றிய செய்தி படித்தேன்.  அதில் அவர் 1968-இல் ஜாக்குலினின் உணவுப் பழக்கக்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் தன்னுடைய உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதில் எவ்வளவு கவனம் செலுத்தினார், அதற்காக எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டார் என்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  ஜாக்குலின் கணவன் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தன் உடல் அழகைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவு முயன்றிருக்கிறார் என்பதை அறிந்து நம் கலாச்சாரத்திற்கும் அவர்களுடைய கலாச்சாரத்திற்கும் எத்தனை வேறுபாடு என்று என்னை எண்ணவைத்தது.  இத்தனைக்கும் இவர் கணவர் சுடப்பட்ட பிறகு அவருடைய ரத்தம் தோய்ந்த உடைகளை மாற்றாமல் மூன்று தினங்கள் இருந்தார் என்று செய்திகள் வந்தன.  அந்தச் செய்தியைப் பத்திரிக்கையில் படித்த என் பாட்டியும் (அவருக்கு அப்போது வயது 72) அதை வெகுவாகச் சிலாகித்துப் பேசினார்.  அப்படிக் கணவருக்காகத் துக்கம் அனுஷ்டித்த ஜாக்குலினே ஐந்து வருடங்களில் ‘வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு போக வேண்டும்’ (‘Get on with life’) என்ற அமெரிக்கத் தத்துவத்தின்படி தன்னுடைய நலன்களில் அக்கறை செலுத்தத் தொடங்கினார்.  கணவர் இறந்து நாலைந்து நாட்களில் வந்த நன்றி தெரிவிக்கும் பண்டிகையிலும் தன்னுடைய குழந்தைகளின் விருப்பத்திற்காகக் கலந்துகொண்டார் என்று சொல்வார்கள்.

    என் பாட்டி, தாய் காலத்தில் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டாலும் அந்தப் பெண்களை விதவைக் கோலம் பூணவைத்தனர்.  (இந்தப் பழக்கம் எல்லாச் சமூகங்களிலும் இல்லாவிட்டாலும் நிறையச் சமூகங்களில், குறிப்பாக உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டோரிடம், இருந்தது.)  பின் அவர்கள் எந்த வைபவங்களிலும் கலந்துகொள்வதில்லை.  இறந்த கணவனின் நினைவு அவளுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இன்னொரு முறை திருமணம் செய்துகொள்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.  இன்னொரு திருமணம் செய்துகொள்வதைப் பற்றி அவள் நினைக்க முடியாது என்பதோடு தன்னை அலங்கரித்துக்கொள்வதையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.  என் தாய் கொஞ்சம் வித்தியாசமாக நினைப்பவர்.  கணவனுக்குப் பிறகு பெண்களுக்கு பூவும் பொட்டும் மறுக்கப்பட்டதைப் பற்றிக் கூறும்போது ‘அது ஏன் அப்படி?  திருமணத்திற்கு முன்பே பெண் பூவும் பொட்டும் வைத்துக்கொண்டவள்தானே?  அவளுடைய கணவனா இவற்றையெல்லாம் அவளுக்குக் கொடுத்தான் அவன் இறந்த பிறகு அவற்றையெல்லாம் விட்டுவிடுவதற்கு?’ என்பார்.  அது உண்மையென்றாலும் விதவையான பிறகு பிறர் கண்களுக்கு அவள் அழகாகத் தென்பட்டுவிடக் கூடாது என்பதுதானே இந்த விதிகளை வகுத்தவர்களுடைய நோக்கம்?

    கணவனை இழந்தவர்கள், அதிலும் சிறு வயதில் அப்படி ஆனவர்கள், மறுபடி திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது, நகை நட்டுகளையும் அலங்காரத்தையும் தவிர்ப்பது இப்போது நம் சமூகத்தை விட்டுப் போய்விட்டாலும் மேற்கத்திய நாடுகளில்போல் தன்னுடைய அழகைப் பராமரித்துக்கொண்டு தீவிரமாக இன்னொரு துணை தேடும் வழக்கம் வந்திருப்பதாகத் தெரியவில்லை.  ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில்  கதாசிரியர் பிலஹரி தன்னுடைய கதாநாயகி தனக்குத் துரோகம் விளைவித்த கணவன் இறக்கவில்லை என்றும் தன் ஒரே வாழ்வாதாரமாக இருந்த தன்னுடைய மகன் இறந்த செய்தியைதான் தனக்கு வந்த தந்தி தாங்கி வந்திருக்கிறது என்றும் அறிந்து ஓரளவு நிம்மதி அடைந்தாள் என்று சொல்லி ‘பாரதம் பாரதம்தான்’ என்று கதையை முடித்திருப்பார்.  அது ஆனந்த விகடன் வார இதழில் முத்திரைக் கதை அந்தஸ்தைப் பெற்றது.  இப்போது அப்படிப்பட்ட பிலஹரிகளும் இல்லை, அவர் போற்றிய கதநாயகிகளும் இல்லை என்று நினைக்கிறேன்.

    அமெரிக்காவில் இல்லற வாழ்க்கை என்றில்லை, வாழ்க்கையில் யாரும் யாருக்காகவும் தங்கள் நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதில்லை.  பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இருக்கலாம்.  அவர்களைத் தங்களுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கலாசாரக் கட்டாயம் இல்லை.  பெற்றோர்களும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளப் பழகிக்கொள்கிறார்கள்.  முடிந்தவரை முதியோர் இல்லங்களுக்குப் போவதைத் தள்ளிப் போடுகிறார்கள்.  தாங்களாக இயங்கப் பழகிக்கொள்கிறார்கள்.

    இந்தியாவில், எலும்பு முறிவு ஏற்பட்டால் இளம் வயதினர் என்றால் மருத்துவர்கள் அவற்றை சர்ஜரி செய்து சரிசெய்ய முயல்கிறார்கள்.  ஆனால் வயதானவர்கள் என்றால் சர்ஜரி தேவையில்லை என்று விட்டுவிடுகிறார்கள்.  வயதானவர்கள் முன்னைப்போல் நிறைய வேலைகள் செய்வதில்லையாம்.  அவர்களுக்கு அவர்களுடைய உறுப்புகள் முன்போல் வேலைசெய்ய வேண்டியதில்லையாம்!  அவர்களைப் பார்த்துக்கொள்ள, வீட்டு வேலைகளைச் செய்ய யாராவது வீட்டில் இருப்பார்களாம்.

    அமெரிக்காவில் அப்படியில்லை.  முதியோர் முடிந்தவரை, முதியோர் இல்லம் போகும்வரை தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.  அதனால் எந்த வயதில் எங்கு அடிபட்டாலும் அதை முழுமையாகச் சரிசெய்வதில் அமெரிக்க மருத்துவர்கள் முனைப்பாக இருப்பார்கள்.  ‘உங்களுக்கு வயதாகி விட்டது.  இனி இந்த சர்ஜரி தேவையில்லை’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

    எங்கள் சித்தப்பா ‘கடைசிப் பயணத்திற்கு டிக்கெட் வாங்கிவிட்டோம்.  ரயிலுக்காகக் காத்திருக்கிறோம்’ என்பார்.  ‘காடு வா, வா என்கிறது. வீடு போ, போ என்கிறது’ என்று சில முதியவர்கள் இந்தியாவில் சொல்வார்கள்.  ஆனால் அமெரிக்காவில் அப்படிக் கூறுவோர்களைப் பார்க்க முடியாது.  எந்த வயதிலும் இன்னும் பல வருடங்கள் உயிரோடு இருப்பதைப்போல்தான் பேசுவார்கள்.  எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணிற்கு வயது எண்பதிற்கு மேலிருக்கும்.  உடல்நலமும் அவ்வளவு சரியில்லை.  இருந்தாலும் உடல் தேறிய பிறகு என்றாவது இந்தியாவுக்குப் போய்வர வேண்டும் என்பார்.  ஒரு முறைதான் பிறக்கிறோம்.  அதை எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் சுயமாக வாழ்ந்துவிட வேண்டும் என்பது மேற்கத்திய சித்தாந்தம்.

    Share
  • பாவங்களைக் களையும் வழி இதுவா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    sg-map

    செனெகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டில் தாங்கள் செய்த பாவங்களைக் களைவதற்கு ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  தலைநகரமான டாக்கரிலும் மற்றும் சில பெரிய ஊர்களிலும் தெரு ஓரங்களில் பல ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் சிவப்பு அலகுகளையுடைய சிறு பறவைகளை விற்றுக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கலாம்.  இந்தப் பறவைகளில் ஒன்றை அவர்களிடமிருந்து வாங்கி அவற்றின் காதுகளில் மந்திரங்களைச் சொல்லி, அதை வாங்கியவர் தான் செய்த பாவங்களையும் தனக்கு வாழ்வில் ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களையும் கூறியபின் அந்தப் பறவையைப் பறக்கவிட்டுவிட்டால் தான் செய்த பாவங்களிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும் என்றும், தன்னுடைய கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் நம்புகிறார்.

    africa_waterஇப்போது இந்தக் குறிப்பிட்ட பறவை மட்டுமின்றி இன்னும் சில பறவைகளும் ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்குகளும் மனிதனின் பாவங்களைப் போக்கும் என்று செனெகல் நாட்டு மக்கள் எண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.  இந்த நம்பிக்கை மக்களிடையே வேகமாகப் பரவி வருவதால் சமூகத்தின் பெரிய புள்ளிகளான அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரும் பணக்காரர்கள் இந்த மிருகங்களையும் பறவைகளையும் விற்பவர்களின் வீடுகளுக்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள்.  தங்களின் துரதிருஷ்டமும் பாவங்களும் மற்றவர்களைச் சென்று அடையட்டும் என்று சிலர் அவற்றை வெளியில் விட்டுவிடுகிறார்களாம்.  அவை மறுபடி அவற்றை விற்றவரிடமே போய்ச் சேர்ந்துவிடுகின்றனவாம். விற்றவர்களுக்குப் பணமும் கிடைத்துவிடுகிறது. மறுபடியும் அவற்றை விற்றுப் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.  ஜனங்களின் அறியாமையால் ஒரு சிலர் எப்படிப் பணம் பண்ணுகிறார்கள் பாருங்கள்.

    நியுயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் வசிக்கும் யூதர்களிடமும் இது மாதிரியான அறியாமை இருக்கிறது.  (மற்ற ஊர்களில் வசிக்கும் யூதர்களிடமும் இந்தப் பழக்கம் இருக்கும்போல் தெரிகிறது.) புது வருடத்திற்கும் தங்கள் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடும் யூதப் பண்டிகையான யாம் கபூருக்கும் இடையே உள்ள நாட்களில் தாங்கள் செய்த பாவங்களைக் கோழிகளின் மேல் சுமத்தும் பழக்கம் இருக்கிறது.  இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் இடையேயுள்ள பத்து நாட்களில் உயிரோடு கோழிகளை விற்கும் கடைக்குச் சென்று (அமெரிக்காவில் கோழிகளை உயிரோடு விற்கும் கடைகள் எங்காவதுதான் உண்டு.  நன்றி தெரிவிக்கும் பண்டிகை சமயத்தில் சில விவசாயப் பண்ணைகளில் நாம் வேண்டும்போது வான்கோழிகளைக் கொன்று நமக்கு விற்பார்கள்.  சாதாரணமாக அமெரிக்காவில் எல்லாவகை மாமிசங்களையும் உறைந்த நிலையில் பனிப்பெட்டியில் வைத்துத்தான் விற்பார்கள்.  விசேஷ தினங்களில்தான் உயிரோடு கோழிகளையும் வான்கோழிகளையும் விற்பார்கள்.) அவற்றை வாங்கி யாருடைய பாவங்கள் களையப்பட வேண்டுமோ அவர்களுடைய தலைக்கு மேலே கோழிகளைச் சுற்றி மந்திரம் ஓதிவிட்டால் அந்த மனிதரின் பாவம் கோழிகளுக்குச் சென்றுவிடுமாம்.  பின் அவற்றைக் கொன்று அவற்றை சாப்பிட விரும்பும் ஏழைகளுக்கு விநியோகிப்பார்களாம்.  பாவங்களை நினைத்துத் திருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரும் நாளில் எவ்வளவு எளிதாகப் பாவங்களைக் களைந்து மன்னிப்புப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்!

    தான் செய்யும் தவறுகளையும் பாவங்களையும் யாரும் எளிதில் ஒப்புக்கொள்ளுவதில்லை.  அப்படி ஒப்புக்கொள்ளுபவர்களும் தங்களுடைய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் யாரையாவது பொறுப்பாக்குவார்கள்.  இதற்குமேல் இது மாதிரி மிருகங்களைப் பலிகொடுத்து இறைவனிடம் தன்னுடைய பாவங்களுக்குப் பரிகாரம் தேட மனிதன் முயல்கிறான்.

    கோவில்களில் மிருகங்களைப் பலிகொடுத்துத் தன்னுடைய பாவங்களுக்குப் பரிகாரம் தேட மனிதன் எப்போதிலிருந்து முயன்று வருகிறான் என்று தெரியவில்லை.  ஒரு வேளை அல்லது ஒரு நாள் உணவைத் துறந்து விரதம் இருந்து மனிதன் தன் பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதையோ புண்ணியம் சேர்த்துக்கொள்ள விரும்புவதையோ வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.  அதில் ஒரு வகைத் தியாகம் இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம்.  ஏனெனில் ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதன் மூலம் தங்கள் பசியைத் தாங்கிக்கொள்கிறார்கள்.  தங்கள் பாவங்களை அப்பாவிக் கோழிகள் மேல் சுமத்துவது எவ்வளவு பெரிய அறியாமை!  நியுயார்க்கில் ஒரு யூதப் பெண்ணிற்கு கோழிகளைத் தொடவே பிடிக்காதாம்.  அதனால் மந்திரம் சொல்வது மட்டும் இவளுடைய வேலை.  கோழியை இவளுடைய தலையைச் சுற்றி சுற்றுவது இவளுடைய கணவனின் வேலையாம்.  கோழிகளின்மேல் தன்னுடைய பாவங்களைச் சுமத்துவதற்குக்கூட இன்னொருவர் உதவி தேவைப்படுகிறது.

    நாம் செய்த பாவங்களை உணர்ந்து வருந்தி அதற்குப் பரிகாரமாக நல்ல செயல்களைச் செய்து இறைவனிடம் இறைஞ்சி மன்னிப்புக் கேட்பதன் மூலம்தான் இறைவனிடம் மன்னிப்புப் பெறமுடியும் என்பதை இவர்களுடைய மதத்தலைவர்கள்கூட இவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லையா?  இவர்களுடைய மதத்தலைவர்களே இவர்களுக்குப் புத்தி புகட்டவில்லையென்றால் யார் இவர்களுக்குப் புத்தி புகட்டுவார்கள்?

    Share
  • எல்லோருக்கும் சமநீதி எப்போது?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நடிகர் அருண் விஜய் போதையில் காரை ஓட்டி ஒரு காவல் நிலையத்தில் நின்றிருந்த வேனில் மோதி, அதைச் சேதப்படுத்தினார். நான்கு நாட்களுக்குமுன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடிகை ராதிகாவின் மகளின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு, விடிய விடிய மது அருந்தியிருக்கிறார். மறுநாள் காலை மூன்று மணிக்கு ஒட்டலிலிருந்து கிளம்பி நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வந்திருக்கிறார். அவருடைய மனைவியும் உடன் இருந்தார். காரை மிகவும் வேகமாக ஓட்டிச் சென்று காவல்நிலைய வாகனத்தின் மீது மோதி அதைச் சேதப்படுத்திய.சத்தம் கேட்டு வெளியே வந்த நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரிகள் காரிலிருந்து  போதையில் தள்ளாடியபடி இறங்கிய அருண் விஜயையும் அவர் மனைவியையும் கைதுசெய்தனர். காவல்துறையினர் அருண் விஜயை விசாரித்தபோது செமபோதையில் இருந்தார். பரிசோதனையில் குடித்த மதுவின் அளவு இரத்தத்தில் சதவிகிதமாக ஐம்பது இருந்தது.

    வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க அருண் விஜய் பேரம் பேசினார். காவல் அதிகாரிகள் உடன்பட மறுத்தனர்; உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பினர். இதற்கிடையில் நடிகர் அருண் விஜயின் தந்தையான நடிகர் விஜயகுமார் அங்கு வந்து சேர்ந்தார். மகன் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்றும். சேதமடைந்த வாகனத்தைத் தான் சரிசெய்து தருவதாகவும்  கூறினார். தனி நபர் வாகனங்களில் சேதம் ஏற்படுத்தினால் மட்டுமே இந்திய சட்டப்பிரிவு 279இன் கீழ் சமரசம் செய்துகொள்ள முடியும். பொதுச் சொத்து என்றால் சமரசம் ஏற்படுத்த முடியாது. அதனால் அதிகாரிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு மாறாக விஜய்குமார் தன் அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையாக இருக்க முடியாது.

    நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவிலிருந்து அருண் விஜயின் வழக்கு பாண்டிபஜார் காவல்நிலையத்திற்கு போக்குவரத்துக் குற்றங்களை வழக்கை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு அருண் விஜய் போலீசார் அழைத்தபோது தந்தை விஜயகுமாரின் காரில் வருவதாகச் சொன்னார், போலீசாரும் அதை அனுமதித்தனர். ஆனால் அவர் வரவில்லை.

    அதனால், காவலிலிருந்து தப்பி ஓடியவர்களின் பட்டியலில் அருண் விஜய் சேர்க்கப்பட்டார். இதன் பிறகு அருண் விஜய் சரணடைந்தார். அதை அடுத்து வாகன சட்டப் பிரிவு 185, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 279 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் பணம் செலுத்திய பின் ஜாமீனில் அவர்களுடைய காரை எடுத்துச் சென்றனர். அருண் விஜய் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பொதுச் சொத்திற்குச் சேதம் ஏற்படுத்தியது என்ற பிரிவுகளின்கீழ்மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

    இதே மாதிரி இன்னொரு வழக்கு. பெங்களூரைச் சேர்ந்த பவதாரணி என்பவர் ஒரு பார்ட்டியில் குடித்துவிட்டுத் தன் காரை ஓட்டிக்கொண்டுவந்த போது வேலை முடிந்து வீட்டுக்குத் தெருவில் நடந்துகொண்டிருந்த ஐம்பது வயதான ஒரு தையல்காரர் மீது காரை ஏற்றினார். அதன் பிறகு அருகில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் மீது மோதினார்; நடைப் பயிற்சியில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதினார். நல்ல வேளையாக, இவர் சிறு காயங்களுடன் தப்பினார். ஆனால், தையல்காரர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தார். லண்டனில் MBA Pடித்துக்கொண்டிருக்கும் இப்பெண் இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருக்கிறார். போலீசாரின் இரத்தப் பரிசோதனையில் இவர் அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்தது தெரிய வந்தது. இவரைக் காவல்துறை கைதுசெய்து காவலில் வைத்திருக்கிறது. போலீஸிடம் தான் ஒரு பத்திரிக்கையாளர்  என்று பொய் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன பத்திரிக்கை நின்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

    ஒரு அப்பாவி தையல்காரரைக் கொன்றதற்கு இவளுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? போக்குவரத்து சம்பந்தமான கொலை என்றாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் பதினைந்து ஆண்டுகளாவது சிறைத்தண்டனை கிடைக்கும் இந்தியாவில் இந்தப் பெண் ஜாமீனில் வெளியே வந்து லண்டனுக்குப் போய்விடலாம்!

    பிரபல இந்தி நடிகர் மும்பையில் கடற்கரைச் சாலையில் குடித்துவிட்டுக் காரை ஓட்டிய போது நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த ஆறு பேர் மேல் காரை ஏற்றினார். அவர்களில் ஒருவர் இறந்தார். நீதிமன்றத்தில் முதலில் விபத்து நடந்த நேரத்தில் தன் டிரைவர்தான் காரை ஒட்டினார் என்று சொல்லி, அவருக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்துத் தான் தப்பிக்கலாம் என்று நினைத்தார். ஆனாலும், கீழ் நீதி மன்றம் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்தது. ஜாமீனில் வெளிவந்து. மேல்முறையீடு செய்து பன்னிரண்டு ஆண்டுகள் வழக்கு நடந்த பின் குற்றமற்றவர் என்று   விடுதலை செய்யப்பட்டார்.

    மேலே சொன்ன குற்றங்களை ஒரு எளியவர் செய்திருந்தால் சட்டம் அவரைச் சும்மா விட்டிருக்குமா? முதல் வழக்கிலும் மூன்றாவது வழக்கிலும் ஈடுபட்டவருக்கு நடிகர் என்ற மமதை. இரண்டாவது வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் லண்டனிலிருந்து விடுமுறைக்கு வந்த இடத்தில் குடிக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டு ஒரு அப்பாவி உயிரைப் பலிகொள்ள வேண்டுமா? இவர்களுக்கெல்லாம் இறைவனின் கோர்ட்டில் என்ன தண்டனை காத்திருக்கிறதோ?

    Share
  • சினிமா என்னும் மாயை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அறிஞர் அண்ணா ஆரிய மாயையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல சினிமாவையும் பயன்படுத்தினார்.  இப்போது சினிமாவே மாயை ஆகிவிட்டது.

    கபாலி படம் வெளிவருவதற்கு முன்பே எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.  சினிமா நடிகர்கள் மீது ஏன் இத்தனை மோகம் நம் மக்களுக்கு?  இவர்களுக்கு வேறு எதிலும் பிடிப்பில்லையா?  சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த மீடியம்தான்.  ஆனால் அதையே கதி என்று நினைத்து சினிமா நடிகர்களை வழிபடும் அளவுக்குச் சிலர் போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.  எங்கோ படித்த ஞாபகம்,.  தமிழ்நாட்டு அரசியலில் பங்கு வகிப்பவர்களில் முக்கால்வாசிப் பேர் சினிமாவோடு தொடர்புடையவர்கள் என்று.  தமிழ் அரசியல் கலாச்சாரம் இவ்வளவு கீழிறங்கிப் போய்விட்டதா?

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கடவுள் ஸ்தானத்திற்கே அவரை ஏற்றியிருக்கிறார்கள்.  மிகப் பெரிய கட் அவுட்டுகளைத் தியேட்டர் முன் நிறுத்தி அதற்குப் பால் அபிஷேகம் செய்திருக்கிறார்கள்.  கடவுள் சிலைகளுக்கே எந்த விதமான அபிஷேகமும் செய்யத் தேவையில்லை என்று பெரியார் சொன்னார்.  இவர்கள் மனிதர்களின் கட் அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.  எப்படிப்பட்ட அறியாமை!

    ரஜினிகாந்த் என்னும் நடிகர் சிறந்த நடிகராக இருக்கலாம்.  மக்களை மகிழ்விப்பதில் பெரிய விற்பன்னராக இருக்கலாம்.  தினசரி வாழ்க்கையின் கஷ்டங்களை மறப்பதற்கு ஒரு மருந்தாக அவர் படங்கள் அமையலாம்.  எதுவாக இருந்தாலும் அவருடைய படம் வெளிவருவதற்கு முன்பே இப்படியா பித்தம் பிடித்து அலைவது?  படம் திரையிடப்படுவதற்கு முந்திய நாள் சென்னை நகரமே கபாலி என்ற மாயையில் உழன்றுகொண்டிருந்ததாக ஒரு பத்திரிக்கைச் செய்தி கூறியது.  கபாலி படத்தைப் பற்றி இந்து நாளிதழில் தேவைக்கு மேலேயே செய்திகள் வந்தன.  இதைப் பார்த்துப் பல வாசகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.  இந்து பத்திரிக்கை கூட இந்த அளவிற்குத் தன் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமா என்பது இவர்களுடைய குற்றச்சாட்டு.  அதற்குப் பதில் அளிக்கும் முகமாக எழுத்தாளர் ஒருவர் இந்து பத்திரிக்கை சார்பில் மற்ற முக்கியமான செய்திகளை விட்டுவிட்டு இந்து கபாலி படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் நாட்டு மக்களை உற்சாகப்படுத்தும் ஒரு விஷயமாக இருப்பதால் இதை வெளியிட்டது சரியே என்றும் கூறுகிறார்.  மக்களில் பலர் அறியாமையால் ஒரு காரியம் செய்தால் பொறுப்புள்ள ஒரு பத்திரிக்கையும் இப்படிச் செய்ய வேண்டுமா?

    ஒரு ஆட்டோ டிரைவர் எல்லா ரஜினி படங்களையும் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியையே பார்த்துவிடுவாராம்.  இப்போதும் அப்படிச் செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.  அவருடைய நண்பர் ஒருவர் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறாராம்.  அவரும் இவரைப்போல் ரஜினி படங்களை முதல் நாளே முதல் காட்சியையே பார்க்கும் வழக்கம் உடையவராம்.  ரஜினியின் கபாலி படம் வெளிவரும் அன்று அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பும் அளவுக்கு அவருடைய உடல்நலம் தேறியிருக்காது என்று அவரைக் கவனித்துவரும் மருத்துவர் கூறியிருக்கிறார்.  ஆனாலும் எப்படியாவது முதல் நாள் முதல் காட்சிக்கே கபாலி படத்தைப் பார்க்க வந்துவிடுவார் என்று அவருடைய நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அவரைப் பற்றிப் பெருமையாகக் கூறியிருக்கிறார்.  உடல்நலத்தைக்கூட கவனித்துக்கொள்ளாமல் ஒரு சினிமாப் படத்தைப் பார்ப்பதில் என்ன வீரம் இருக்கிறது?  இது கின்னஸ் புக்கில் இடம் பெறக் கூடிய சாதனைபோல் கூறுவது எவ்வளவு மடமை?

    சினிமா மோகம் நம் மக்களைப் பிடித்து ஆட்டுவது மட்டுமல்ல,  சினிமாவில் நடப்பதை அப்படியே உண்மை வாழ்க்கையில் நடப்பதாக நினைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க நினைக்கிறார்கள் சிலர்.  எல்லாப் படங்களிலும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களிடையே, வெவ்வேறு சமூக அந்தஸ்தில் உள்ளவர்களிடையே காதல் கனிந்து திருமணம் நடப்பதாகக் காட்டுகிறார்கள்.  உண்மை வாழ்க்கையில் நடப்பது என்ன?  வெவ்வேறு சமூக அந்தஸ்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை.  வீட்டு எஜமானன் மகனுக்கும் வேலைக்காரப் பெண்ணிற்கும் இடையே காதல் மலர்வதில்லை.  ஒரே சமூக அந்தஸ்தில் இருக்கும் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை.  இருவரையும் எப்படியாவது பிரிப்பது, இருவரையும் கொல்ல முயற்சிப்பது இவைதான் நடக்கின்றன.  சினிமாவில் நடப்பதுபோல் நிஜத்தில் உப்பரிகையில் வாழும் கதாநாயகி குடிசையில் உழலும் கதாநாயகனை மணந்துகொள்வதில்லை.  இந்த நிதர்சனத்தை ஏன் நம் இளைஞர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

    படிக்காதவன் என்று ஒரு படம்.  2009-இல் வெளிவந்தது.  ஊரிலேயே பணக்காரப் பெண்ணை அவளுடைய கார் டிரைவர் கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறான்.  வழியில் காரில் ஏதோ கோளாறு ஏற்பட, சாதாரண வசதி உள்ள, படிக்காத ஒரு பையனிடம் அந்தப் பெண்ணைக் கல்லூரியில் விட்டுவிடச் சொல்கிறார் டிரைவர்.  அவள் கதாநாயகனின் ஸ்கூட்டரின் பின்னால் உட்கார்ந்தவுடனேயே கதாநாயகன் கனவு காண ஆரம்பித்து அதில் அவளோடு ஒரு டூயட் பாடுகிறான்.  கண்டதும் காதல் என்றாலும் இப்படியா.  இவன் படிக்காதவன் என்றாலும், வாழ்க்கையில் உருப்படியாக எதுவும் செய்யாதவன் என்றாலும் எப்படியாவது அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள் என்று அவனுடைய நண்பர்கள் அவனை உசுப்பிவிடுகிறார்கள்.  அவனும் உடனே அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறான்!

    இந்தக் கதைதான் சமீபத்தில் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்ட சுவாதியின் கொலைக்கு ஆதாரமாக அமைந்தது எனலாம். சுவாதியைக் கொலைசெய்த ராம்குமார் எந்த வகையிலும் – அழகு, அறிவு, படிப்பு, சமூக அந்தஸ்து – அவளுக்கு நிகரானவன் இல்லை.  இருந்தாலும் படிக்காதவன் போன்ற படங்களின் தாக்கத்தால் அவள் எப்படியாவது தன்னைக் காதலிப்பாள் என்று நம்புகிறான்.  படத்தில் போலவே ராம்குமாரின் நண்பர்களும் ‘அவளை எப்படியாவது உன்னைக் காதலிக்கும்படிசெய்’ என்று உசுப்பிவிடுகிறார்கள்.  படிக்காதவன் போன்ற படங்கள் எடுக்கப் போய் சுவாதி போன்ற இளம்பெண்கள் கொலைசெய்யப்படுகிறார்கள்.  ராம்குமார் போன்ற பையன்களும் குற்றம் புரியத் தூண்டப்பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்.

    கபாலி படத்திற்கு பல நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டனவாம்.  இது இந்திய நிலை.  அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் கபாலி படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறதாம்.  சினிமா மாயையில் மூழ்கியிருப்பவர்கள் இந்தியாவில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் குடியேறியிருக்கும் இந்தியர்களும்தான் என்பது புலனாகிறது.

    சினிமாத் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.  சினிமா மக்களை மயக்கும் ஒரு ஊடகம்.  அதைத் தயவுசெய்து தவறாக உபயோகித்து இளைஞர்களைத் திசை திருப்பாதீர்கள்.  சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் ‘தற்போது சமுதாயத்தில் நடக்கும் பல குற்றச் சம்பவங்களுக்கு சமீபத்திய திரைபடங்களின் தாக்கமே காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.  சினிமா மாயையில் இருக்கும் பாமர மக்களை ஆக்கபூர்வ செயல்களுக்குத் திருப்புங்களேன்.

    Share
  • மன்னிப்பு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் கார்டினல் தன் பால் ஈர்ப்பு உடையவர்களை ஈடுபடுபவர்களை இதுவரை கத்தோலிக்க மதம் ஒதுக்கி வைத்து உரிமைகளை மறுத்ததற்கு அவர்களிடம் மதம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார். எப்போதுமே இம்மாதிரி சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள், எளியவர்கள், வறியவர்கள் ஆகியோர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறிவரும் பிரான்ஸிஸ் போப் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மேலே குறிப்பிட்டவர்களிடம் மட்டுமல்ல பெண்கள், இள வயதிலேயே நாம் வேலைவாங்கிய சிறார்கள் ஆகியோரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு நம் நாட்டில் நாம் தலித்துகளை எவ்வளவு சிறுமைப்படுத்தியிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. அவர்களிடம் நாம் எவ்வளவு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது உறைத்தது. நான் சிறுமியாக வளர்ந்துவந்தபோது மனிதக் கழிவுகளை வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று கழிப்பறையை சுத்தம் செய்த பெண்ணின் ஞாபகம் வருகிறது. ஒரு மாதம் முழுவதும் கழிவுகளைச் சுமந்து சென்ற பெண்ணிற்கு சம்பளம் ஐந்து ரூபாய். லட்ச ரூபாய் சம்பளமாகக் கொடுத்திருந்தாலும் இந்த வேலையை நான் செய்திருப்பேனா என்ற எண்ணம் எழுந்தது. அப்படி இருக்கும்போது கீழ் ஜாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்தப் பென் அந்த வேலையை ஏன் செய்தாள். ஏன் தன்னால் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று அவள் மறுக்கவில்லை. அவளுடைய வாழ்வாதாரத்திற்கு அவளுக்கு அந்த ஒரு வழிதான் இருந்தது. இப்போது எண்ணிப் பார்த்தால் மனது குமுறுகிறது.

    இந்த ஐந்து ரூபாய் சம்பளத்திற்கு மேல் சில வீடுகளில் உணவு கொடுப்பதுண்டு. அதுவும் எல்லோர் வீடுகளிலும் கொடுப்பதில்லை. உணவு கொடுக்கும் வீடுகளிலும் வாழை இலை விரித்து பாயசத்தோடு விருந்தா பரிமாறினார்கள்? பழைய சாதம், அதற்குத் தொட்டுக்கொள்ள ஏதாவது வற்றல் அல்லது மிஞ்சிப்போன குழம்பு. எங்கள் வீட்டில் வேலைசெய்த பெண்ணிற்கு தினமும் பழைய சாதம் கிடைக்கும். சில சமயங்களில் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் கறிக்குழம்பில் கொஞ்சம் நான் கொடுப்பேன். எண்ணெயில் பொரித்த மோர் மிளகாய் என்றால் அவளுக்குக் கொள்ளை ஆசை. நாங்கள் கொடுக்கும் மோர் மிளகாயில் பாதியைப் பழைய சாதத்தோடு சாப்பிட்டுவிட்டு மீதியை வீட்டிற்கு எடுத்துச் செல்வாள். இந்த மோர் மிளகாயை அவள் ஏன் வீட்டிலேயே செய்துகொள்ளவில்லை என்று நான் அடிக்கடி இப்போது நினைக்கிறேன். மிளகாயை மோரில் ஊறவைத்து வெயிலில் காயவைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் வீட்டில் இருந்து அதைச் செய்துகொள்வதற்கு அவளுக்கு நேரம் இருந்ததா என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு அதை எண்ணெயில் வறுத்து எடுக்க வேண்டுமே. அவள் எண்ணெய்க்கு எங்கே போவாள்? அவளுடைய தினசரி உணவெல்லாம் காலையில் முந்தின தினம் இரவு சமைத்த அரிசிச் சோற்றில் மிஞ்சியதைத் தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சாதம்தான். அதிலும் வீட்டில் உள்ள மற்ற அங்கத்தினர்களுக்குப் போக மிச்சம் இருந்தால்தான். மதியமும் அதே பழைய சாதம்தான். இரவு மட்டும் சூடாக ஆக்கிய சோறு.

    அவளுக்கு நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளி வேலை. ஊர் முழுக்க நகராட்சிக்குச் சொந்தமான கழிப்பறைகளிலுள்ள மனிதக் கழிவுகளை சேகரித்துச் செல்வதுதான் அந்த வேலை. அந்த வேலையை ஆரம்பிக்கும் முன் 50 மில்லி டீயை கடையிலிருந்து வாங்கிக் குடித்துக்கொள்வாள். மதியமும் இதே மாதிரி ஏதாவது குடித்துக்கொள்வாள். இரவு வீட்டிற்குச் சென்றவுடன் சுடச் சுட சோறு ஆக்கி கருவாட்டுக் குழம்பு வைப்பாள். எங்கள் ஊரில் கருவாடு மிகவும் பிரபலம். அசைவம் சாப்பிடும் பலர் வீடுகளிலும் அடிக்கடி கருவாட்டுக் குழம்பு சமைப்பார்கள். எங்கள் துப்புரவுத் தொழிலாளி வாங்கும் கருவாடு விலையில் மலிவானது. குழம்பு நிரக்க வேண்டும் என்பதற்காகக் கருவாட்டோடு கத்திரிக்காயைச் சேர்த்துக்கொள்வாள். இரவு ஆக்கிய சோற்றில் மிஞ்சியதைத் தண்ணீர் ஊற்றி மறு நாளைக்கு காலை உணவு, மதிய உணவிற்கு வைத்துக்கொள்வாள். சில சமயங்களில் விருந்தினர் வந்துவிட்டால் இரவு சமைத்த சாதம் மிஞ்சாது. ‘நேற்று விருந்தாடி வந்துவிட்டது. சோறு மிஞ்சவில்லை’ என்பாள்.

    இவளுக்குத் தேவையான ஊட்டச் சத்து எங்கிருந்து கிடைத்தது? அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இந்தியர்களாகிய நாங்கள் சாதத்தோடு உருளைக்கிழங்கு பொரியலும் வைத்துக்கொள்வோம் என்றேன். உருளைக் கிழங்கும் கார்போஹைட்ரேட், சாதமும் கார்போஹைட்ரேட் அது எப்படி போதும், புரோட்டீனுக்கு என்ன செய்வீர்கள் என்றார். அமெரிக்கர்கள் தினமும் இவ்வளவு கார்போஹைட்ரேட், இவ்வளவு புரோட்டீன் என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவார்கள். அமெரிக்க ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரிடம் எங்கள் துப்புரவுத் தொழிலாளிக்கு எப்படி அவள் சாப்பிடும் எளிய உணவில் எல்லா ஊட்டச் சத்துக்களும் கிடைத்தன என்று கேட்க வேண்டும் என்று ஆசை. இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஊட்டச்சத்து சரியாகக் கிடைக்கவில்லை என்றால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்பார்கள். அவள் பள்ளிக்குச் செல்லாததால் நம்மைப்போல் விபரமாகப் பேசத் தெரியாது. ஆனால் அதை விடுத்து உடல்நலத்திலோ மனநலத்திலோ ஆரோக்கியமாகவே இருந்தாள்.

    அடுத்ததாக, எங்கள் அழுக்குத் துணிகளை வீட்டிற்கு வந்து எடுத்துக்கொண்டுபோய்த் துவைத்துக்கொண்டு வரும் சலவைத் தொழிலாளி. நம் அழுக்குத் துணிகளைத் தொடுவதற்கு நாமே தயக்கம் காட்டும்போது அவள் எப்படி எங்கள் அழுக்குத் துணிகளைத் தொட்டு மூட்டை கட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்று துவைத்துக் கொண்டுவந்தாள்? துவைத்து இஸ்திரி போட்டுக் கொண்டுவந்த வேலைக்குக் கூலி மிகவும் குறைவு.

    இந்த வேலைகளை எல்லாம் ஏன் அவர்கள் செய்தார்கள் என்று நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது. அதற்குப் பெரிய பரிகாரம் தேட வேண்டும் என்று மனம் துடிக்கிறது. நம் நாட்டில் இவர்களுக்குச் சமூகம் செய்த அநியாயத்திற்குப் பரிகாரம் தேடுவதற்கு அரசு, அரசு அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு செய்திருக்கிறது. இது போதுமா? இந்த சலுகைகளையும் அங்கு மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்குச் செய்த அநியாயத்திற்குப் பரிகாரம் தேடுவதற்கு மேல் இன்னும் ஏதாவது செய்ய வேண்டாமா?

    போப் பிரான்ஸிஸ் சொல்வதுபோல் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாட்டின் பிரதிநிதியான பிரதம மந்திரியும் மாநில பிரதிநிதியான முதல் மந்திரியும் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். தனிப்பட்ட மனிதர்களும் எல்லோரிடமும் ஜாதித் துவேஷமின்றி நடந்துகொள்ள வேண்டும். எந்த உறவிலும் திருமண உறவானாலும் சமமாக நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுக்கும் வேட்பாளர்கள் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்.

    Share