வாழ்வதைப் பற்றி அமெரிக்கப் பார்வை
நாகேஸ்வரி அண்ணாமலை
சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் 1963-இல் கொலைசெய்யப்பட்ட ஜான் கென்னடியின் மனைவி, பெயர்போன ஜாக்குலின் கென்னடியின் சமையல்காரராக இருந்த ஒரு பெண் பற்றிய செய்தி படித்தேன். அதில் அவர் 1968-இல் ஜாக்குலினின் உணவுப் பழக்கக்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் தன்னுடைய உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதில் எவ்வளவு கவனம் செலுத்தினார், அதற்காக எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டார் என்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஜாக்குலின் கணவன் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தன் உடல் அழகைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவு முயன்றிருக்கிறார் என்பதை அறிந்து நம் கலாச்சாரத்திற்கும் அவர்களுடைய கலாச்சாரத்திற்கும் எத்தனை வேறுபாடு என்று என்னை எண்ணவைத்தது. இத்தனைக்கும் இவர் கணவர் சுடப்பட்ட பிறகு அவருடைய ரத்தம் தோய்ந்த உடைகளை மாற்றாமல் மூன்று தினங்கள் இருந்தார் என்று செய்திகள் வந்தன. அந்தச் செய்தியைப் பத்திரிக்கையில் படித்த என் பாட்டியும் (அவருக்கு அப்போது வயது 72) அதை வெகுவாகச் சிலாகித்துப் பேசினார். அப்படிக் கணவருக்காகத் துக்கம் அனுஷ்டித்த ஜாக்குலினே ஐந்து வருடங்களில் ‘வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு போக வேண்டும்’ (‘Get on with life’) என்ற அமெரிக்கத் தத்துவத்தின்படி தன்னுடைய நலன்களில் அக்கறை செலுத்தத் தொடங்கினார். கணவர் இறந்து நாலைந்து நாட்களில் வந்த நன்றி தெரிவிக்கும் பண்டிகையிலும் தன்னுடைய குழந்தைகளின் விருப்பத்திற்காகக் கலந்துகொண்டார் என்று சொல்வார்கள்.
என் பாட்டி, தாய் காலத்தில் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டாலும் அந்தப் பெண்களை விதவைக் கோலம் பூணவைத்தனர். (இந்தப் பழக்கம் எல்லாச் சமூகங்களிலும் இல்லாவிட்டாலும் நிறையச் சமூகங்களில், குறிப்பாக உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டோரிடம், இருந்தது.) பின் அவர்கள் எந்த வைபவங்களிலும் கலந்துகொள்வதில்லை. இறந்த கணவனின் நினைவு அவளுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இன்னொரு முறை திருமணம் செய்துகொள்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இன்னொரு திருமணம் செய்துகொள்வதைப் பற்றி அவள் நினைக்க முடியாது என்பதோடு தன்னை அலங்கரித்துக்கொள்வதையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. என் தாய் கொஞ்சம் வித்தியாசமாக நினைப்பவர். கணவனுக்குப் பிறகு பெண்களுக்கு பூவும் பொட்டும் மறுக்கப்பட்டதைப் பற்றிக் கூறும்போது ‘அது ஏன் அப்படி? திருமணத்திற்கு முன்பே பெண் பூவும் பொட்டும் வைத்துக்கொண்டவள்தானே? அவளுடைய கணவனா இவற்றையெல்லாம் அவளுக்குக் கொடுத்தான் அவன் இறந்த பிறகு அவற்றையெல்லாம் விட்டுவிடுவதற்கு?’ என்பார். அது உண்மையென்றாலும் விதவையான பிறகு பிறர் கண்களுக்கு அவள் அழகாகத் தென்பட்டுவிடக் கூடாது என்பதுதானே இந்த விதிகளை வகுத்தவர்களுடைய நோக்கம்?
கணவனை இழந்தவர்கள், அதிலும் சிறு வயதில் அப்படி ஆனவர்கள், மறுபடி திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது, நகை நட்டுகளையும் அலங்காரத்தையும் தவிர்ப்பது இப்போது நம் சமூகத்தை விட்டுப் போய்விட்டாலும் மேற்கத்திய நாடுகளில்போல் தன்னுடைய அழகைப் பராமரித்துக்கொண்டு தீவிரமாக இன்னொரு துணை தேடும் வழக்கம் வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில் கதாசிரியர் பிலஹரி தன்னுடைய கதாநாயகி தனக்குத் துரோகம் விளைவித்த கணவன் இறக்கவில்லை என்றும் தன் ஒரே வாழ்வாதாரமாக இருந்த தன்னுடைய மகன் இறந்த செய்தியைதான் தனக்கு வந்த தந்தி தாங்கி வந்திருக்கிறது என்றும் அறிந்து ஓரளவு நிம்மதி அடைந்தாள் என்று சொல்லி ‘பாரதம் பாரதம்தான்’ என்று கதையை முடித்திருப்பார். அது ஆனந்த விகடன் வார இதழில் முத்திரைக் கதை அந்தஸ்தைப் பெற்றது. இப்போது அப்படிப்பட்ட பிலஹரிகளும் இல்லை, அவர் போற்றிய கதநாயகிகளும் இல்லை என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவில் இல்லற வாழ்க்கை என்றில்லை, வாழ்க்கையில் யாரும் யாருக்காகவும் தங்கள் நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதில்லை. பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இருக்கலாம். அவர்களைத் தங்களுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கலாசாரக் கட்டாயம் இல்லை. பெற்றோர்களும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளப் பழகிக்கொள்கிறார்கள். முடிந்தவரை முதியோர் இல்லங்களுக்குப் போவதைத் தள்ளிப் போடுகிறார்கள். தாங்களாக இயங்கப் பழகிக்கொள்கிறார்கள்.
இந்தியாவில், எலும்பு முறிவு ஏற்பட்டால் இளம் வயதினர் என்றால் மருத்துவர்கள் அவற்றை சர்ஜரி செய்து சரிசெய்ய முயல்கிறார்கள். ஆனால் வயதானவர்கள் என்றால் சர்ஜரி தேவையில்லை என்று விட்டுவிடுகிறார்கள். வயதானவர்கள் முன்னைப்போல் நிறைய வேலைகள் செய்வதில்லையாம். அவர்களுக்கு அவர்களுடைய உறுப்புகள் முன்போல் வேலைசெய்ய வேண்டியதில்லையாம்! அவர்களைப் பார்த்துக்கொள்ள, வீட்டு வேலைகளைச் செய்ய யாராவது வீட்டில் இருப்பார்களாம்.
அமெரிக்காவில் அப்படியில்லை. முதியோர் முடிந்தவரை, முதியோர் இல்லம் போகும்வரை தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் எந்த வயதில் எங்கு அடிபட்டாலும் அதை முழுமையாகச் சரிசெய்வதில் அமெரிக்க மருத்துவர்கள் முனைப்பாக இருப்பார்கள். ‘உங்களுக்கு வயதாகி விட்டது. இனி இந்த சர்ஜரி தேவையில்லை’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
எங்கள் சித்தப்பா ‘கடைசிப் பயணத்திற்கு டிக்கெட் வாங்கிவிட்டோம். ரயிலுக்காகக் காத்திருக்கிறோம்’ என்பார். ‘காடு வா, வா என்கிறது. வீடு போ, போ என்கிறது’ என்று சில முதியவர்கள் இந்தியாவில் சொல்வார்கள். ஆனால் அமெரிக்காவில் அப்படிக் கூறுவோர்களைப் பார்க்க முடியாது. எந்த வயதிலும் இன்னும் பல வருடங்கள் உயிரோடு இருப்பதைப்போல்தான் பேசுவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணிற்கு வயது எண்பதிற்கு மேலிருக்கும். உடல்நலமும் அவ்வளவு சரியில்லை. இருந்தாலும் உடல் தேறிய பிறகு என்றாவது இந்தியாவுக்குப் போய்வர வேண்டும் என்பார். ஒரு முறைதான் பிறக்கிறோம். அதை எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் சுயமாக வாழ்ந்துவிட வேண்டும் என்பது மேற்கத்திய சித்தாந்தம்.
அருமையான, பொருள்பொதிந்த கட்டுரை, நாகேஸ்வரி!