( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

 

தீபங்கள் எரியட்டும் பாவங்கள் பொசுங்கட்டும்

கோபங்கள் மடியட்டும் குணமங்கே பிறக்கட்டும்

சாபங்கள் தொலையட்டும் சந்தோஷம் மலரட்டும்

தீபங்கள் ஒளிபரப்பத் தீபாவாவளி சிறக்கட்டும் !

 

கோவில்சென்று கும்பிடுவோம் குணம்சிறக்க வேண்டிடுவோம்

பாவவினை போகவெண்ணி பக்குவமாய் வணங்கிநிற்போம்

தூய்மைநிறை மனம்கேட்போம் துட்டகுணம் அறக்கேட்போம்

வாய்மையுடன் வாழ்வதற்கு வரம்கேட்போம் வாருங்கள் !

 

குறைசொல்லும் குணமகல குட்டிக்குட்டிக் கும்பிடுவோம்

கறைபடிந்த மனம்வெளுக்க கைகூப்பி தொழுதழுவோம்

வறுமைபிணி நோயகல மனமார வேண்டிநிற்போம்

மறுமையிலும் வாய்மையுடன் வாழ்வதற்கு வரம்கேட்போம் !

 

ஏழையாய் பிறந்தாலும் கோழையாய் இருக்காமல்

தாழ்மையிலும் தளர்வின்றி தலைநிமிர வேண்டிடுவோம்

பொய்களவு சூதுவாது பொறாமைக் குணமணுகாமல்

தெய்வமே காத்திடென தெண்டனிட்டு வணங்கிநிற்போம் !

 

எத்திக்கும் ஒளிபரப்பும் தித்திக்கும் தீபாவளி

எமைநோக்கி வருகிறது இன்முகமாய் வரவேற்போம்

சுற்றியெமைச் சூழ்ந்திருக்கும் துன்பமெலாம் பறந்தோட

சுமைதாங்கும் இறைவனைநாம் தொழுதேத்தி வணங்கிநிற்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வரம்கேட்போம் வாருங்கள் !

  1. அருமை. வல்லமையாளர் அனைவரும் ஒருங்கிணைந்து வரம் கேட்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  2. சத்திய மணியின் உத்தமமான வார்த்தைக்கு
    முத்தான நன்றியினை முத்தமிழால் ஈய்கின்றேன் !

    எம். ஜெயராமசர்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.