அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ட்ரம்பின் முதல் தோல்வி

0

நாகேஸ்வரி அண்ணாமலை

தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலேயே ஜனாதிபதி ட்ரம்ப் (தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று அவரே நினைக்காத நேரத்திலேயே) ‘ஜனாதிபதி ஆனவுடன் நான் முதல் முதலாக ஒபாமாவின் ‘எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு’ திட்டத்தை எடுத்துவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவருவேன்’ என்று கூறிக்கொண்டிருந்தார்.  2012-இல் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட ராம்னி தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவியேற்றவுடனேயே அந்தச் சட்டத்தை எடுத்துவிடுவேன் என்று சூளுரைத்தார்.  அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை.  அதன் பிறகு அடுத்த தேர்தலில் 2016-இல் போட்டியிட்ட ட்ரம்ப் ராம்னி கூறியது மாதிரியே தானும் அந்தச் சட்டத்தை எடுத்துவிடுவேன் என்றார்.  பதவிக்கு வந்தவுடனேயே தன் கட்சிக்காரர்களிடமும் தன் ஆலோசகர்களிடமும் சீக்கிரமே ஒபாமா கொண்டுவந்த சட்டத்திற்கு மாற்றுச் சட்டம் கொண்டுவரும்படி கூறிக்கொண்டிருந்தார்.

ஒபாமா 2009-இல் பதவிக்கு வந்தவுடனேயே எல்லோருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் கிடைக்கும் திட்டத்தை கொண்டுவர முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தார்.  பல வல்லுனர்களைக் கலந்தாலோசித்து, அந்தச் சட்டத்தின் எல்லா அம்சங்களையும் தானும் ஆராய்ந்து அவருடைய மிகப் பெரிய சாதனையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.  அந்தத் திட்டத்திலும் சில குறைகள் இருப்பதாக எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள்.  ஆனாலும் இதுவரை உள்ள திட்டங்களில் இதுதான் சிறந்ததாகக் கருதப்பட்டது.  அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதுகளிலேயே கட்டுக்கடங்காமல் போய்விட்டிருந்தன.  1945-இல் பதவிக்கு வந்த ட்ரூமன் முதல் கிளின்டன் வரை எல்லா ஜனாதிபதிகளும் எவ்வளவோ முயன்றும் எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் மருத்துவ இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை.  ஒபாமா இதை ஒரு சவாலாக ஏற்றுத் தன் முழு உழைப்பையும் கொடுத்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றினார்.  அதை ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு குடியரசுக் கட்சித் தலைவர்கள் திட்டம் தீட்டினர்.  ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பல வெள்ளையர்கள் விரும்பவில்லை.  அவர் செய்யும் எல்லாக் காரியங்களிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தனர்.

இப்போது ட்ரம்ப் ஜனாதிபதி பதவி கிடைத்தவுடன் ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சட்டங்களையும் ஒழித்து அவருக்குக் கிடைத்திருக்கும் சாதனையாளர் என்ற நல்ல பெயரை எப்படியும் கெடுத்துவிட வேண்டும் என்று காரியங்கள் செய்துவந்தார்.  ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் பதவி ஏற்புக்கு முன்னால், ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.  அப்போது அவருக்குச் சில யோசனைகள் கூறியதாகவும் அவற்றை ஏற்று நடப்பதாக ட்ரம்ப் கூறியதாகவும் ஒபாமா அறிவித்தார்.  ஆனால் அப்படி ஒபாமாவிடம் வாக்களித்தாலும் ட்ரம்ப் முதல் நாளிலிருந்தே ஒபாமா கொண்டுவந்திருந்த எல்லாச் சீர்திருத்தங்களையும் ஒவ்வொன்றாக ஓழித்துக்கொண்டிருக்கிறார்.  வங்கிகள் செய்துகொண்டிருந்த சில அநியாயங்களை ஒழிக்க ஒபாமா கொண்டுவந்த சில கட்டுப்பாடுகளை எடுத்தார்; வங்கிகளுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.  சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கனடாவிலிருந்து அமெரிக்க மாநிலம் டெக்ஸாஸிற்குக் கச்சா எண்ணெய் கொண்டுவரும் திட்டத்திற்கு ஒபாமா சம்மதம் கொடுக்கவில்லை.  இப்போது ட்ரம்ப் அந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.

ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுச் சட்டத்தை எதிர்க்கும் மசோதாவிற்கு ஓட்டுப் போடவில்லையென்றால் கீழவை உறுப்பினர்கள் பதவி அடுத்த தேர்தலில் போய்விடும் என்று பயமுறுத்தினார்.  தன் கட்சி உறுப்பினர்களையே அவரால் புது மசோதவிற்கு ஓட்டுப்போடவைக்க முடியவில்லை.  (இந்தியாவில்போல் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதில்லை.  எல்லோரும் சுயமாகச் சிந்திப்பவர்கள்.  தாங்கள் சரியென்று நினைப்பதைச் செய்வார்கள்.)  கீழவையிலேயே அது தோற்றுப் போனது.  435 உறுப்பினர்கள் உள்ள கீழவையில் 235 பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.  அவர்களிலேயே பழமைவாதிகளில் சிலர் ஓட்டுப் போடவில்லை.  குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஓட்டுப் போடவில்லை.  அதனால் பெரும்பானமை கிடைக்காமல் மசோதா தோல்வியுற்றது.

தோல்விக்குப் பிறகும் ட்ரம்ப் தன் தவறை உணர்ந்ததாகத் தெரியவில்லை.  எப்போதுமே பொய்களாகச் சொல்லிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் இதிலும் ஒரு பொய்யைக் கூறுகிறார்.  தான் ஒருபோதும் உடனேயே ஒபாமாவின் சட்டத்தை மாற்றுவதாகச் சொல்லவில்லை என்கிறார்.  தேர்தல் பிரச்சாரத்தின்போதே, தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே ஒபாமாவின் சட்டத்தை மாற்றுவதாக திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தவர்  இப்போது அப்படியொன்றும் தான் கூறவில்லை என்று முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்.  அது மட்டுமல்ல, ஒபாமாவின் சட்டம் இன்னும் சில நாட்களில் தானாக வெடித்துவிடும் அல்லது சிதைந்துவிடும் என்றும் கூறி அவர் சொல்வதையெல்லாம் நம்பும் தன் ஆதரவாளர்களை ஏமாற்றி வருகிறார்.  ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து ஒத்துழைக்காததால்தான் மசோதா தோற்றுவிட்டது என்று இன்னொரு பொய்.  இந்தப் பொய்களை யார் நம்பப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  இதையும் சிலர் நம்புவார்களோ என்னவோ.  இப்போது ட்ரம்பால் பதவி இறக்கம் செய்யப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ப்ரீத் பரேரா (இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் ட்ரம்பால் பதவி இறக்கம் செய்யப்படவில்லை.  நேர்மையான அரசு வழக்கறிஞர் என்பதால்) கூறியதுபோல் ஆட்டுமந்தைகள் அடங்கிய சமூகம் ஓநாய்கள் ஆளும் அரசைத்தான் தேர்ந்தெடுக்கும்.  இந்த ஓநாய்கள் செய்வது எதையும் இந்த ஆட்டுமந்தைகள் ஏற்றுக்கொள்ளும்.

இந்த மசோதா தோற்றுப் போனதால் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குஷியாக இருக்கிறார்கள்.  ஆவணப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் மூர் இதை வெற்றியாக நினைத்து விழாக் கொண்டாடுவதற்குப் பதில் தொடர்ந்து ஜாக்கிரதையாக இருந்து இனியும் ட்ரம்ப் செய்யபப்போகும் காரியங்களை முறியடிக்க வேண்டும் என்கிறார்.  அவர் சொல்வது மிகவும் சரி.  அமெரிக்காவின் படிமத்தை உலக நாடுகளிடையே உயர்த்த வேண்டும் என்று எண்ணி ஒபாமா செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும் ட்ரம்ப் முறியடித்து அமெரிக்கா என்றாலே உலகம் வெறுக்கும் அளவிற்குக் கொண்டுவந்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *