வாசிப்பினை நேசிப்போம்! வாசிப்பினை சுவாசிப்போம்!
பவள சங்கரி
உலகில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், வானியல், சமூகவியல் என அனைத்திலும் முன்னேற்றங்களும், கண்டுபிடிப்புகளும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இவையனைத்தும் உடனுக்குடன் மக்களைச் சென்றடைய உறுதுணையாக இருப்பவை நூல்கள், இணையம், செய்தித்தாள்கள் போன்றவைகளே. நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது!
இதுமட்டுமன்றி, வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.
அந்த வகையில் நல்ல நூல்களை வாசிப்பதை ஒரு தவமாகவேக் கொண்டிருப்பவர் பலர். அப்படிப்பட்ட ஆகச்சிறந்த நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில், அதுவும் கழிவு விலையில் கிடைப்பதென்றால் அதைவிட பேறு வேறு என்ன வேண்டும். அப்படியொரு மகத்தானப் பணியைத்தான் மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழா செய்து கொண்டு வருகிறது!
எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், நல்ல நூல்களையும், சிறந்த பேச்சாளர்களையும் தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் விதமாகவே இத்திருவிழா தொடர்ந்து நடந்துவருவது சிறப்பு.
மக்கள் சிந்தனைப் பேரவை என்ற இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளாகின்றன. பேரவை தொடங்கப்பட்டதிலிருந்தே கல்வி, வாசிப்பு, சமூகசிந்தனை, சமூகசேவை ஆகியவற்றில் பேரவை சார்பில் முழுக்கவனம் செலுத்தப்பட்டு அவற்றுக்கான பல செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஈரோடு புத்தகத் திருவிழாவை கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் சிந்தனைப் பேரவை சிறப்பாக நடத்தி வருகின்றது. வாசிப்பை வலியுறுத்தி 12,500 கல்லூரி மாணவர்களின் மராத்தான் ஓட்டம், ‘ஈரோடு வாசிக்கிறது’ என்ற தலைப்பில் 15,000 மாணவர்கள் ஒரே இடத்தில் ஒருமணி நேரப் புத்தக வாசிப்பு, 20,000 மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நூலகத்தைத் தொடங்க உறுதியேற்பு போன்ற வாசிப்பை வலியுறுத்தும் பல நிகழ்வுகளைக் கடந்த சில ஆண்டுகளில் பேரவை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன் மிகச்சிறந்த பேச்சாளரும், வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். பல்வேறு விருதுகளும், பரிசுகளும், பாராட்டுகளும் ஏற்கனவே பெற்றிருந்தாலும், சமீபத்தில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களின் திருக்கரங்களால், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டுவரும் திருவள்ளுவர் மன்றத்தின் 45ஆம் ஆண்டுவிழா 18.02.2017 ஆம் தேதி ‘திருவள்ளுவர் விருது’ பெற்றது அவர்தம் பெருமைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது என்றால் அது மிகையாகாது.
பேச்சு, எழுத்து, செயற்பாடு ஆகிய முப்பரிமாணங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழ்ப்பணியும் சமூகப்பணியும் ஆற்றிவருவதை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்படுவதாக விருதாளர் அறிமுகத்தில் இம்மன்றத்தின் தலைவர் பேராசிரியர் க. கருத்தப்பாண்டி தெரிவித்ததும், விருது வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விருதாளர் சமூகத்திற்கு ஆற்றிவரும் பல்வகைப் பணிகள் குறித்து தனது சிறப்புரையில் விரிவாகப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் மிகச்சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழா மற்ற மாவட்டங்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு இதன் அடுத்தக்கட்ட நகர்வாக, ஈரோடு மாநகராட்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘வார்டுதோறும் வாசகர்வட்டம்’ என்ற மிகச்சிறப்பானதொரு திட்டத்தையும் முன்னெடுத்துள்ளதை அறிந்து அதுகுறித்து திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது:
18 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வரும் மக்கள் சிந்தனைப் பேரவையின் அடுத்தகட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘வார்டுக்கு ஒரு வாசகர்வட்டம்’ என்ற வகையில் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படும் நிலையில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் சிறந்த வாசகர்களாகவும், கல்விமான்களாவும், படைப்பாளர்களாகவும் உருவாகவும் வழிவகுக்கும் என்று தாம் திடமாக நம்புவதாகக் கூறினார்.
வாசகர் வட்டத்தின் நோக்கமும் செயல்பாடும் குறித்து வினவியபோது,
ஒரு பகுதியில் குறைந்த பட்சம் 20 பேர் இவ்வாசகர் வட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தால் அங்கு ஒரு வாசகர் வட்டம் தொடங்கலாம். அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அவ்வட்டத்தில் இருக்கலாம். அதற்கும் மேல் உறுப்பினர்கள் சேர்ந்தால் அதே பகுதியில் இன்னொரு வாசகர் வட்டத்தைத் தொடங்கலாம். 50 க்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை இருந்தால் அவ்வட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறாது.
இவ்வாசகர் வட்டத்தில் இணைய அடிப்படைத் தகுதி அவர் புத்தகம் மற்றும் இதழ்களை வாசிப்பவராக இருக்க வேண்டும். இப்போது தீவிர வாசகராக இல்லாவிடினும் இனிமேலாவது வாசிப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணமுடையவராக இருக்கவேண்டும்.
மாதமொருமுறை வாசகர் வட்டம் கூட்டப்பட வேண்டும். இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, மூன்றாவது சனிக்கிழமை என்று ஏதாவது ஒருநாளை தொடக்கத்திலேயே அனைவரும் கூடிப்பேசி அப்பகுதிக்குப் பொருத்தமான ஒருநாளைத் தேர்வு செய்துகொண்டு ஒரு மாதம் கூட இடைவெளி விடாமல் முறையாகக் கூட்ட வேண்டும். அக்கூட்டம் சரியான நேரத்திற்குத் தொடங்குவதும், முடிவதும் மிகவும் முக்கியம்.
வாசகர் வட்ட மாதாந்திர கூட்டத்திற்கு யாராவது ஒரு படைப்பாளியை அழைத்து வந்து சிறிது கருத்துரை வழங்க ஏற்பாடு செய்யலாம். அவ்வாறு அவர் பேசி முடித்த பிறகு அவர் பேசிய கருத்திலிருந்து சில கேள்விகளை எழுப்பி அவருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளலாம். பிறகு வட்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அந்த மாதத்தில் அவர்கள் படித்த ஏதேனும் ஒரு புத்தகத்தில் அவருக்கு பிடித்த சில அம்சங்கள் குறித்துப் பேசலாம். அதே போல ஒவ்வொருவரும் அவசியம் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். அழைக்கப்படும் படைப்பாளி ஒரு பேச்சாளர் பாணியில் பேசுபவராகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. வட்டக் கூட்டங்களில் கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறான கூட்டங்களின் விளைவாக புதிய புதிய பயனுள்ள புத்தகங்கள் அனைத்து வாசகர்களுக்கும் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது. புத்தகப் பரிமாற்றமும் நடைபெறும். செய்தித் தாள்களிலோ, வார – மாத இதழ்களிலோ வாசித்தவை குறித்தும் இதில் பேசலாம்.
வாசகர் வட்ட உறுப்பினர்களின் அறிவை விரிவு செய்வது மட்டும் இவ்வட்டத்தின் நோக்கமல்ல. தங்களை வளர்த்துக் கொள்ளும் அதே நேரத்தில் அவ்வட்டம் அமைந்துள்ள ஊரிலோ அப்பகுதியிலோ உள்ள பிற மக்களையும் புத்தகம் வாசித்துப் பயன்பெறக் கூடியவர்களாக வளர்ந்திடத் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வாசிப்பு குறித்த விழிப்புணர்வை தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், நாடகங்கள், குறும்படங்கள் போன்ற பல வடிவங்களைப் பின்பற்றி மக்களிடத்தில் உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
வாசகர் வட்ட உறுப்பினர்கள் அவரவர் பகுதியிலோ, அருகாமையிலோ உள்ள அரசு நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அத்தோடு அந்நூலகம் சிறப்பாகவும் உயிரோட்டமாகவும் செயல்பட அந்நூலகரோடு ஒருங்கிணைந்து எல்லா முறைகளிலும் ஒத்துழைக்க வேண்டும்.
ஆண்டுக்கொருமுறை நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவை வாசகர் வட்டம் உள்ள பகுதிவாழ் மக்கள் அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் அளவில் புத்தகத் திருவிழா நடைபெறும் சமயங்களில் திருவிழா குறித்த துண்டறிக்கை, அழைப்பிதழ் போன்றவற்றை மக்களிடத்தில் நேராக வீடு வீடாகச் சென்று வழங்குவதோடு அவர்களுக்கு புத்தகத் திருவிழாவைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்ற அளவில் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஈரோடு புத்தகத் திருவிழா குறித்து சுவரெழுத்து, சுவரொட்டி, பரப்புரை போன்ற முறைகளிலும் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் விதத்தில் சிறிய அளவிலேனும் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
வாசகர் வட்டம் உள்ள பகுதிகளில் ஆண்டுக்கொருமுறை வட்டத்தின் சக்திக்கும் அப்பகுதி மக்களின் தேவைக்கும் ஏற்றவாறு சிறிய அளவிலேனும் 2 நாட்கள், 3 நாட்கள் என்ற அளவில் புத்தகக் கண்காட்சி வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட வேண்டும். அளவு சிறியதாக இருப்பினும் இப்புத்தகக் கண்காட்சி உயிரோட்டமானதாக அமைய வேண்டும். அதிக செலவினங்கள் செய்யாமல் அந்தப் பகுதியிலுள்ள பள்ளிகள், கட்டணமில்லாமல் கிடைக்கிற தனியார் கட்டிடங்கள் போன்றவற்றை இதற்குப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய புத்தகக் கண்காட்சிகளுக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைமையே தக்க ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும்.
வாசகர் வட்டம் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் மீது வட்டம் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அப்பள்ளி நிர்வாகத்தின் அனுமதி பெற்று மாணவர்களுக்கு வாசிப்பு குறித்த விழிப்புணர்வை வட்டத்தின் சார்பில் பல உத்திகளைப் பின்பற்றி ஏற்படுத்த வேண்டும். போட்டிகள் வைத்தல், அரசு நூலகங்களில் உறுப்பினராகச் சேரத் தூண்டுதல், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு அருகிலுள்ள அரசு நூலகங்களில் உறுப்பினர் கட்டணத்தை வட்டமே செலுத்துதல், உரிய சொற்பொழிவாளர்களை அழைத்து வந்து புத்தகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்களிடையே உரையாற்றவைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஒருவாசகர் வட்டம் தன்னுடைய தரத்தில், செயல்பாட்டில் முன்னேற்றம் காண முயலுகிற அதே நேரத்தில் இன்னொரு வாசகர் வட்டத்தை உருவாக்குகிற பணியிலும் இறங்க வேண்டும். Each One Catch One என்பதைப் போல ஒரு வாசகர் வட்டம் இன்னொரு வாசகர் வட்டத்தை உருவாக்குவதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
உலக புத்தக தினம், உலக எழுத்தறிவு தினம் போன்ற புத்தகம், அறிவு, படைப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தப்படுவது அவசியம்.
நகரங்களில் – படித்தவர்கள் நிறைந்த பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமங்களில் ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டும் அவசியம் வாசகர் வட்டத்தை உருவாக்க வேண்டும்.
நூலகமோ வாசக சாலையோ இல்லாத பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு சிறிய அளிவிலான வாசகசாலையாவது வாசகர் வட்டத்தின் சார்பில் உருவாக்க முயல வேண்டும். வாய்ப்பிருந்தால் தனியார் நூலகங்களை ஆங்காங்கு தொடங்கலாம்.
வாசகர் வட்டங்கள் வெறும் பொழுதைப்போக்கும் நோக்கில் அல்லாமல் சமூக உணர்வோடும் சமூக அக்கறையோடும் நடத்தப்பட வேண்டும். சிறந்த, அறிவார்ந்த, பண்பட்ட, ஆளுமை மிக்க தனிமனிதர்களை உருவாக்குவதும் சமூக முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டும் இவ்வாசகர் வட்டங்கள் செயல்படுதல் வேண்டும்.
மக்கள் சிந்தனைப் பேரவை ஈரோடு அலுவலகத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழகம் தழுவிய அமைப்பாகும்.
வேறு மாவட்டங்களிலும் பேரவையின் மாவட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு உருவான பின்பு தமிழகம்தழுவிய முறையில் வாசகர்வட்டங்கள் அந்தந்த மாவட்டத் தன்மைக்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்படும். இதற்கெல்லாம் ஒரு முன்னோட்டமாகவே ஈரோடு மாநகராட்சியில் ‘வார்டுதோறும் வாசகர் வட்டம்’ என்ற திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது என்று உற்சாகமாகக் கூறினார்.
மேலும் அவர், தங்களது வார்டுகளில் வாசகர்வட்டம் தொடங்க எண்ணுவோர் அதற்கான படிவத்தைப் பெற A- 47, சம்பத் நகர், ஈரோடு – 638 011 என்ற முகவரியில் இயங்கும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைமை அலுவலகத்தை அணுகி அதற்கான துண்டறிக்கைகளையும் படிவங்களையும் ஆலோசனைகளையும் பெறலாம் என்றும் கூடுதல் விபரங்களும் தகவல்களும் பெற விரும்புவோர் 0424 – 2269186, 88831 24443 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறினார்.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு பல்கலைக்கழகமாக விளங்க வேண்டுமென்றால் அக்குடும்பத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்றிருத்தல் வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பமே கல்வி கற்றதற்குச் சமம் என்பார்கள். அந்த வகையில் பெண்களுக்கும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும் வாசகர் வட்டம் என்ற இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு நாடு முழுவதும் நல்ல வாசகர்களை உருவாக்க வேண்டும் என்று வல்லமை வாழ்த்துகிறது.
******************************************************************************************