நாகேஸ்வரி அண்ணாமலை

9ef7bb3611a95004e759864385ba59ee

காந்திஜி என்றாலே அவருடைய எளிமைதான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும்.  (இப்போது போப்   பிரான்ஸிஸும் என் நினைவுக்கு வருகிறார்.  எளிமைக்கும் பணிவிற்கும் இலக்கணமான போப் பிரான்ஸிஸ் பற்றி ஒரு புத்தகம் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.)  இப்போது காந்திஜியின் எளிமையைப் பின்பற்றுபவர்கள் யார் என்று தேடிப் பார்த்தால் யாரும் கிடைக்கவில்லை.  அவருடைய காலத்திலேயே, அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் பலரே அவருடைய எளிமையைப் பின்பற்றவில்லை.

800px-gandhi_spinning-ed

நம் அரசியல் தலைவர்கள் பலரை நினைத்துப் பார்க்கிறேன்.  முதல் பிரதமர் நேருவிலிருந்து இன்றைய பிரதமர் மோதி வரை எளிமையாக உடை உடுத்துதல் என்பதை யாரும் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை.  லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் ஆகிய பிரதமர்கள் இதற்கு விதிவிலக்கு.  ஏழைகளின் வறுமையை ஒழிக்கப் போவதாக உருக்கமாகப் பேசும் மோதி பத்து லட்சம் ரூபாய் செலவில், வரிசை வரிசையாக அவருடைய பெயர் பொறிக்கப்பட்ட ஷர்வானியில் ஒபாமா கலந்துகொள்ள வந்திருந்த குடியரசு தின விழாவில் காட்சி அளித்தார்.  உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்க அதிபரைக் கவர்வதற்காக அந்த விலையுயர்ந்த உடையில் தோன்றினார் போலும்.  ஒபாமா காந்திஜியின் ரசிகர்; அவருடைய எளிமை அவருக்கு மிகவும் பிடிக்கும்.  மோதி எளிமையாக உடை உடுத்தியிருந்தாலும் ஒபாமாவுக்குப் பிடித்திருக்கும்.  அது பற்றி மோதியை விமர்சித்தவர்களுக்கு தனக்கு ஒரு நண்பர் அதை அன்பளிப்பாகக் கொடுத்ததாகக் கூறினார்.  அது அன்பளிப்பாகவே இருக்கட்டும்.  அவர் அதை வேண்டாம் என்று கூறியிருக்கலாமே.  அப்படியே அந்த நண்பர் கொடுத்திருந்தாலும் அதை அணிந்துகொண்டு குடியரசு தினத்தன்று வலம் வந்திருக்க வேண்டியதில்லை.

சரி மோதியை விடுங்கள்.  இவர் காந்தி வழியில் வந்தவர் இல்லையே.  காந்தி வழியைப் பின்பற்றியவர்கள், அவரோடேயே சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள் யாரும் எளிமையுடன் சேர்த்து அவரை  எதிலும் பின்பற்றவில்லை.  காமராஜ், ராஜாஜி போன்ற அரசியல்வாதிகள் உண்மையான காந்தியவாதிகள்; அவர்களே இதற்கு விதிவிலக்கு.  அந்தத் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் மறைந்த பிறகு அரசியலுக்கு வந்த தலைவர்கள் – காங்கிரஸிலும் சரி, மற்றக் கட்சிகளிலும் சரி – ஏழைகளுக்காகப் பாடுபடுகிறோம் என்று சொன்னாலும், எளிமையை யாரும் கடைப்பிடிக்கவில்லை.  எளிய குடும்பத்திலிருந்து வந்ததாகக் கூறிக்கொள்ளும் முன்னாள் உத்திரப் பிரதேச முதல் மந்திரி மாயாவதி எப்படிப்பட்ட உடைகளை அணிந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.  காந்திஜியையும் அவருடைய கொள்கைகளையும் மறந்தவர்கள்  அவருடைய எளிமையையா நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறோம்?

உலகிலேயே அதிகப் பணக்காரர்கள் வசிக்கும் அமெரிக்காவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பகட்டாக உடை உடுத்துதல் என்பது அத்தியாவசியமான ஒன்றாக ஆகிவிடுகிறது.  காந்திஜியின் மேல் இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் ஒபாமாவோ அவரது மனைவி மிஷலோ எளிமையாக உடை உடுத்துவதில்லை.   அப்படி அவர்கள் உடை உடுத்தினால் அவர்களுக்கு நாகரிகம் தெரியவில்லை என்று அவர்களை ஒதுக்கிவிடுவார்களாம் அமெரிக்க மக்கள் என்.று கூறினார் ஒரு அமெரிக்க நண்பர்.  அது சரி போல்தான் தெரிகிறது..  வேலை இழந்த பாட்டாளி வர்க்கத்தினரின் நலனுக்காகப் பாடுபடப் போவதாகக் கூறி அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அணியும் சூட்டும் கோட்டும் 17,000 (பதினேழாயிரம்) டாலர்கள் பெறுமானவையாம்.  ஹிலரி கிளிண்டன் தினமும் ஒரு உடை அணிவதாக நான் நினைத்திருக்கிறேன்.  ஆனால் இப்போது புரிகிறது அவர் ஒரே நாளில் வேளைக்கு ஒரு உடை அணிகிறார் என்று.  கடந்த ஜூலை மாதம் ஜனநாயகக் கட்சி ஹிலரியை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததும் தன்னுடைய வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆற்றிய உரையில் உலகில் சமத்துவமின்மை பெருகி வருவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எச்சரித்தார்.  அப்போது அவர் அணிந்திருந்த சூட்டின் மதிப்பு என்ன தெரியுமா?  12,495 டாலர்கள்.  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்க ஏழைகளின் இன்னல்களைத் துடைப்பதே தன்னுடைய குறிக்கோளாக இருக்கும் என்று தேர்தல் பிரச்சாரம் முழுவதும் பேசிவந்தார்.  இவருக்கோ  ட்ரம்புக்கோ சாதாரண மக்கள் வாழ்க்கையை ஓட்ட எவ்வளவு திணறுகிறார்கள் என்று கொஞ்சமும் தெரியாது.

பிரிட்டனில் கேமரூனுக்குப் பிறகு பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றிருக்கும் தெரஸா மே 4000 பவுண்டு மதிப்புள்ள உடை அணிந்திருப்பதைப் பார்த்து மக்களிடையே பெரிய எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.  ‘இவ்வளவு விலயுயர்ந்த உடை அணியும் உங்களுக்கு சாதாரண மக்களின் கஷ்டங்கள் புரிகிறதா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எல்லோரின் நலனுக்காகவும் தன் அரசு பாடுபடுவதாகக் கூறியிருக்கிறார்.  ‘நான் ஒருபோதும் இத்தகைய விலையுயர்ந்த ஆடைகளை வாங்கியதில்லை.  என்னுடைய திருமண உடையைத் தவிர எந்த உடைக்கும் இவ்வளவு பணம் செலவழித்ததில்லை’ என்று தெரசா மேயின் உடையை விமர்சித்த அவருடைய கல்வி மந்திரி தன் பதவியை இழந்தார்.  ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் விலகியதைப் பற்றிய கருத்தரங்கில் கலந்துகொள்வதாக இருந்த கல்வி மந்திரி அது துவங்கும் முன்னாலேயே விலக்கப்பட்டார்.  தெரசா மேக்கு முன்னால் பிரிட்டனின் பிரதமராக இருந்த கேமரூனும் 4000 டாலர் மதிப்புள்ள உடைகளை அணிந்ததற்காக முன்னால் பலரால் விமர்சிக்கப்பட்டார்.

மறுபடியும் இந்தியத் தலைவர்களைப் பற்றிப் பார்ப்போம்.  ஏழ்மையைப் பற்றித் தங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாரும் எளிமையைக் கடைப்பிடிப்பதில்லை.

உண்மைக்கும் அரசியலுக்கும் அதிக தூரம் இருப்பதுபோல் எளிமைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அதிக தூரம்.  இந்த விதிக்கு ஒரே விலக்கு காந்திஜி ஒருவர்தான்.  அவர் அரசியலில் உண்மையை மட்டும்தான் பேசினார்; வாழ்க்கையில் எளிமையைத்தான் கடைப்பிடித்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *