மீனாட்சி பாலகணேஷ்

கும்போதயன் பரவு அன்னை கோமதி!

பிள்ளைத்தமிழ் நூல்கள் பல தலங்களில் உறையும் தெய்வங்களின் பெருமையைக்கூறி அத்தலச் சிறப்பினையும் புகழ்ந்து பாடுவது வழக்கம். இத்தகைய பொருள்நயம் செறிந்த பாடல்கள் பலவற்றை மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் காணலாம். ‘தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி,’ எனவும், ‘மதுரம் ஒழுகிய தமிழின் இயல் பயில் மதுரை மரகதவல்லி,’ எனவும் குமரகுருபரர் அம்மையைக் கூறுவார். ‘சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி,’ என முச்சங்கங்களைப்பற்றியும் போற்றுவார். அவ்வகையில் நாம் இன்று காணப்போகும் பிள்ளைத்தமிழான சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழிலும் இத்தகைய தலபுராண விளக்கப் பாடல்களைக் கண்டு, படித்து மகிழலாம்.

சங்கரன் கோவிலெனும் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது; ‘அரியும் அரனும் ஒன்றே’ என உயிரினங்களுக்கு உணர்த்த, இறைவன் சங்கரநாராயணர் வடிவில் எழுந்தருளியுள்ளார். அன்னை பார்வதி தவம் செய்து வேண்டியதன் பேரிலேயே இவ்வாறு எழுந்தருளினாராம். அன்னையின் இத்தவம் ‘ஆடித்தபசு,’ எனும் பெயரில் ஆண்டுதோறும் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு ஈசன் புற்றிடங்கொண்ட நாதர் (வன்மீகநாதர்) என்றும் வழங்கப்படுகிறார். இந்தப்புற்றுமண் பலவிதமான நோய்களுக்கும் மருந்தாகும் எனவும் கருதப்படுகிறது.

அன்னை, ‘ஆவுடையாள்,’ எனவும், ‘கோமதியம்மை,’ எனவும் அழைக்கப்படுகிறாள். அன்னை தவம்செய்த காலத்து, தெய்வப்பெண்டிர் அன்னையைப் பிரியாதிருக்க வேண்டினர்; அவள் கருணையினால் அன்னை தவம் செய்யுமிடத்தில் பசுக்களாக நின்று பால் பொழிந்தனர்; ஆகவே அன்னை இறைவனிடம் வேண்டிக்கொண்டு தன்னை உலகத்தோர் ‘ஆ+ உடையாள்= ஆவுடையாள்’ (கோமதி) என்றழைக்க வேண்டும் எனும் வரம் பெற்றாளாம். இதனை ஒரு அழகிய பாடல் விளக்குகிறது:

தூதுலாங் குழலரம்பையர் ஆவுருத் தாங்கிப்
போது தோறுமின் கால்பொழிந்துள்ள மகிழ்புரிவீர்
ஆதலா லெமக்கு ஆவுடையா ளெனச் சிறந்த
கோமதினாம மெவ்வுலகுங் கூறிட வேண்டும்.

இப்பிள்ளைத்தமிழ் சங்கரன்கோயிலில் எழுந்தருளியுள்ள கோமதியம்மை பேரில் ஊற்றுமலை சமஸ்தானப்புலவரான புளியங்குடி முத்துவீரக் கவிராயர் இயற்றியருளியது.

கோமதித்தாயின் முன்பு வந்து வேண்டிக்கொண்டவர்களுக்கு அவள் அருளும் திறத்தைப் பட்டியலிடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

‘மலடியாகியவரும் நன்மக்கட்பேறு பெறுவர்; வளைந்து கூனலாகியவர்கள் நிமிர்ந்து மன்மதன்-இரதி போல் அழகான உருவம் பெறுவர்; மற்ற மக்கள் அனைவரும் எள்ளி நகைக்கும் படியான குள்ளத்தோற்றம் உடையோன் நல்ல உருவம் வாய்க்கப்பெறுவான்; சந்திரன், சூரியன் இவர்களின் ஒளி இவ்விதமானது என அறிந்திராத கண்பார்வையற்றோர் தமது அழகான விழிகளில் ஒளிவரப் பார்வை கிடைக்கப்பெறுவர்;
‘இருமல், குட்டநோய், வயிற்றுவலி, ஈழை எனும் காச நோய், மஞ்சள்காமாலை நோய், தலைவலி, கைகால் முடக்குவாதம், இன்னும் முன்பு உண்ட மருந்துகளினால் தீராத பலவிதமான நோய்கள், பேய் பிசாசு பிடித்து வாட்டுதல், பால்வினை நோய்கள், பித்தநோய், இவற்றினால் வருந்துவோர் உனது சன்னிதியின் முன்பு வந்தால் அந்நோய்கள் அவர்களின் முன்பு வர அஞ்சி ஓடுமாறு செய்யும் முதன்மைப்பொருள் கோமதி அன்னை!

a1
‘அந்திப்பூ, அழகான பிறைநிலா இவற்றினைச் சடையில் சூடும் சிவசங்கரப்பெருமான் மகிழ்ந்து குலவும் பெண்ணரசியே! அரியமறைநூல்களின் பொருளானவளே! எம்முன் வந்தருளுவாயாக! கடலினைக் கையிலேந்திக் குடித்த குறுமுனியாகிய அகத்தியன் போற்றிப்பாடும் கோமதி அன்னையே! வருகவே!’ என வேண்டுவதாக அழகுற அமைந்துள்ளது.

வந்தியரும் நன்மகப்பேறு பெறவளை கூன் (வந்தி- மலடி)
மன்மதஆதி ரதியாக
மானிலத்தவர் இகழவரு சிந்துநல் உருவம்
வாய்க்கமதி இரவிகதிரும்
இந்தவிதம் என்றுஅறி கிலாப்பிறவி அந்தகரும்
எழில்விழிப் பிரபைஎய்த
இருமல்குட்டம் குன்மம் ஈழை காமாலை
தலைவலி இருகை கால்முடக்கு
முந்தை வினையான் மருந்தில் தீர்ந்திடாதநோய்
முதுபேய் தொடக்கு பித்தம்
உற்றுநின் சன்னிதியின் முன்வந் தவர்க்கு
முன்வாராது நீக்குமுதலே!
அந்தியம் பிறைசூடு சிவசங்கரே சர்மகிழ்
அருமறைப்பொருள் வருகவே!
அம்போதி யைப்பருகு கும்போதயன் பரவும்
அன்னை கோமதி வருகவே!
(அம்போதி- கடல்: கும்போதயன்- அகத்தியமுனி)
(சங்கரன் கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ்- சப்பாணிப்பருவம்)

___________________

a4

சங்கன், பதுமன் எனும் இரு நாகர்களில் ஒருவன் சிவபக்தன்; மற்றவன் திருமால் பக்தன். இவர்கள் இருவரும், ‘அரன் பெரியவன், அரியே பெரியவன்,’ என வாதிட்டு அலைந்தனர். அவர்களுக்கு உண்மையை உணர்த்த அன்னை பராசக்தியாகிய கோமதித்தாயின் வேண்டுதலால் ஈசன் சங்கரநாராயணனாகக் காட்சியளித்தான். சங்கன், பதுமன் மட்டுமின்றி உலகத்தோரும், அனைத்துக் கடவுள்களும் சிவபிரானிடம் அடக்கம் என அறிந்து தெளிந்தனர். இந்த நாகர்களால் பின்பு ஒரு சுனை இத்திருக்கோயிலின்கண் கோமதி அம்மையின் முன்பு அழகானதோர் நடுமண்டபத்துடன் அமைக்கப்பட்டது; இதனை நாகசுனை என்பர். இச்சுனையில் ஆமை, நண்டு, தவளை, மீன் என்பன கிடையாதாம். இச்சுனையில் மூழ்கி எழுவோர் கவலை தீர்ந்து நற்கதி அடைவர் என்பதும் ஐதீகம். இதனை நயம்பட புராணச் சான்றுகளுடன் விளக்குகிறார் புலவர்.

a2
கௌதம முனிவரின் மனைவியான அகலிகை பேரழகி. அவளழகில் ஆசைகொண்டு, மோகத்தினால் வருந்தினான் தேவர்களின் தலைவனான இந்திரன். கௌதமரைப்போல உருவெடுத்துக்கொண்டு, அவர் ஆசிரமத்தில் இல்லாத ஒருபொழுதில், அகலிகையைக் கூடினான். அதனை உணர்ந்த முனிவர், ‘உனது உடல்முழுதும் பெண்குறியாகக் கடவது,’ எனச் சாபமிட்டார். அப்படியே ஆக, இந்திரனைக் கண்டு முவ்வுலகும் எள்ளி நகையாடியது.

Kakasuran and ramas Brahmastram(Dharbai)

இவ்வாறெல்லாம் தகப்பனான இந்திரன் அவமானப்பட்டதை அறிந்தபின்னும் அவன் மகனான சயந்தன் பாடம் கற்றானில்லை! அவன் சீதையின் மேல்கொண்ட ஆசையினால் ஒரு காகமாக வடிவெடுத்துக் கொண்டு, அவள் தனங்களை அலகினால் குத்தித் தொல்லை கொடுத்தான். அப்போது சீதையின் மடியில் இராமபிரான் தலைசாய்த்து உறங்கியிருந்தான். உறக்கம் கலைந்த இராமன், சீதை படும் துயரைக்கண்டு, சயந்தனைச் சினந்து, ஒரு தர்ப்பைப்புல்லினை எடுத்து, மந்திரம் செபித்து, அதனை அம்பினைப்போல், காகமாகிய சயந்தன் மீது ஏவினான். அது சயந்தனை மூவுலகங்களிலும் துரத்தியது. கடைசியில் வேறுசெயலின்றி அவன் தகப்பனான இந்திரன் சொற்படி அவன் தந்த ஒரு முத்துமாலையை இந்த சங்கரலிங்கத்திற்குச் சாற்றி வழிபட்டு, நாகசுனையிலும் படிந்து எழுந்து, பின் ஈசன் திருவருளால் சயந்தன் பழைய வடிவை அடைந்தான்.

இவ்வாறு அவனை நற்கதி பெறச்செய்தவள், கோமதி அன்னை என்கிறார் புலவர். அவள் எத்திசையும் விரிந்துள்ள அமுதம் போன்றவள்! புன்னைவனத்தினில் வாழும் பெண்ணானவள். ‘என் அன்னையே வருக! மணம் கமழும் மலர்களைக் குழலில் சூடியவளே! வருக!’ என அன்னை ஆசையுடன் தனது குழந்தையை விளிப்பதுபோல் பாடியுள்ளார் புலவர்.

மோகத் துயரால் தந்தைமுன் ஓர்
முனிவன் பன்னிதனைச் சேர்ந்து
அம்முனி சாபத்தால் மூன்றுலகும்
நகைக்க முகில்போல் நிறத்தனது
ஆகத்தலம் எலாம் யோனியாகக்
கண்டும் சீதை தனத்து
ஆசையாலே சயந்தன் தன்
அழகார் தெய்வஉரு மறைத்துக்
காகத்து உருவாய்க் குத்துவினை
கடிந்து திவ்விய வடிவம்நல்கும்
கமழ்பூ நாகசுனை படிந்தோர்
கவலை தீர்த்துக் கதிபெறசெய்
மாகத்து அமுதே! புன்னைவன
வாழ்வே! வருக வருகவே!
மன்றல் கமழுமலர்க் குழல்
கோமதியே! வருக வருகவே!

(மாகம்- திசை; ஆகாயம்; மன்றல்- மணம்)
(சங்கரன் கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ்- சப்பாணிப்பருவம்)

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.