மார்கழி மணாளன் -1 மதுராபுரி -ஸ்ரீ கிருஷ்ணன்
க.பாலசுப்பிரமணியன்
காசினியின் துயரங்கள் களையெடுக்க
காரிருளில் மின்னொளியே துள்ளிவர
கம்சனுடன் காளிங்கன் கதைமுடிக்க
கருவண்ணம் இங்கே கண்விழித்தம்மா !!
எட்டாத வேறுலகில் அவனில்லை
எட்டுகின்ற மனத்திற்குள் அவன் சிறை !
எட்டாம் நாளோ தேய்பிறையோ
எட்டாம் குழந்தை எட்டி யுதைத்ததம்மா !!
கொட்டும் மழையிலே குடை நாகம் பிடிக்க
கூடை யிலே குழந்தையாய் சிரித்திருக்க
விண்ணவரும் மண்ணவரும் வியந்திருக்க
இன்னொரு அவதாரம் இங்கே வந்ததம்மா !
மண்கொண்டவாயினைக் கண்கொண்ட மங்கை
மழலையென முகம்பிடித்து வாய்திறக்க
மூவுலகும் முக்காலமும் ஏழ்பிறப்பும்
முகுந்தன் காட்டிவிட மூவினை கழித்தாளே !
கள்ளத்தனம் வெள்ளையுள்ளம் தீதில்லா கிள்ளைமனம்
காரிகையர் குடமுடைத்து வெண்ணையுண்ணும் !
உரலிழுத்து உடைத்துவிடும் அரக்கர்குணம்
குழலேடுத்துக் கோதையர்தம் உளம்கவரும் !
கருநாகன் தலைமேல் கால்வைத்தே கண்ணா !
காளிங்கன் ஆணவத்தை அவன் வாலில் சுருட்டி
தக்கத்திமி தாம் தம் திமிதோ மென்றே தாளமிட்டே
தரணியில் ஆணவத்தை அறிவால் அழித்தாயே !
சின்னப்பிள்ளை கண்ணனென்று நினைத்தவர் சிறுமையுற
சின்னஞ்சிறு விரல்களால் விந்தை பல படைத்தான் !
சின்னக் குழலொன்றை இதமாய் இசைத்தே சிங்காரன்
சிந்தைகள் ஆயிரம் ஆயிரம் சிலிர்த்திட வைத்தான் !
பால்மணமும் பூமணமும் அவன் மணமே !
பாசறையில் பிறந்தாலும் மதுராவின் மன்மதனே !
ஆலிலையில் அவன் உறங்குவதைப் பாருங்கள் !
ஆராரோ, ஆராரோ பாடிடலாம் வாருங்கள் !