Tag: பெருவை பார்த்தசாரதி

  • “குறையொன்றுமில்லை”!…..

    பெருவை பார்த்தசாரதி

     

    ‘எப்படியோ?..ஒரு வழியா என்னோட பையன் கணேஷ் லவ் மேரேஜ் பண்ணிகிட்டு அஞ்சு வருஷம் ஆவுது’………….உன்னோட பொண்ணத்தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு எனக்கு ஆசை, ஆனா, ‘காதல்’, ‘லவ்’ அது இதுன்னு போயிட்டதால, என்னால ஒண்ணும் செய்யமுடியல!….  எங்களோட பேச்சக் கேக்காம அவன் நினச்சத சாதிச்சுக்கிட்டான்….நண்பன் சுரேஷிடம் சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீராம்…

    அப்பா சொல்றத பையன் கேக்காததும், பையன சொல்றத அப்பா உதாசீனப் படுத்தறதும் சகஜம்தானேப்பா?…..சரி, சரி, இப்ப பழசெல்லாம் கிளறாத, உன் மருமகளுக்கு வருஷக் கணக்கா உடம்பு சரியில்லன்னு சொல்லிகிட்டு இருக்கியே?…… ஓ வைராக்கியத்த விட்டுட்டு, ஒரு தடவ  போய் பாத்துட்டு வந்தா என்ன குறஞ்சா போய்டுவே?”…சுரேஷ் உரிமையோடு நண்பனைக் கேட்கிறான்.

    அதெல்லாம் ஒண்ணுமில்ல சுரேஷ், அவன் விரும்பியபடி லவ் மேரேஜ் பண்ணி, என்ன சுகத்த கண்டானோ தெரியல, அவன் தலயெழுத்து ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்கும் அலஞ்சுகிட்டுருக்கான். விளையாட்ட அஞ்சு வருஷம் ஓடி போயிட்டுது, இது வரைக்கும் குழந்த பத்தி பேச்சே இல்ல, என்ன சிக்கலோ தெரியல….கடவுளுக்குதான் வெளிச்சம். அம்மனுக்கு காப்பு கட்டி இன்னியோட 7 நாள் ஆவுது, இன்னும் 3 நாள் போகட்டும் பட்டணம் போய் பார்த்துட்டு, கொஞ்ச நாள் அவனோட இருந்துட்டு வரலாம்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.  பெத்த பாசம் யார விட்டு வச்சுது சொல்லு, சுரேஷ்!……….

     ஸ்ரீராம் தன்னோட மனைவியோடு பையன் வீட்டுக்கு வந்து ஒருவாரமாகிறது

    அப்பா…….இன்னிக்கு நான் ஆபீஸ் போய்ட்டு அப்படியே டாக்டர பாத்திட்டு வரணும், ராத்திரி 11 மணிக்கு மேலாகும், நீங்க சாப்பிட்டு தூங்குங்கப்பா…..

    ஏங்க போன வாரம் கொடுத்த என்னோட பிளட் ரிப்போர்ட் வந்திருச்சா, டாக்டர் என்ன சொன்னாரு…கமலா

    தெரியல கமலா?…., ஒவ்வொரு டெஸ்டா எடுக்கச்சொல்றாரு…இப்ப எனக்கும்  சில டெஸ்ட்  எழுதிக் கொடுத்திருக்காரு.

    அன்று அலுவலகம் முடிந்து டாக்டரைப் பார்த்துவிட்டு, மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டத்தோடு வீட்டினுள் நுழைந்த கணேஷிடம்,

    ஏண்டா டாக்டரப் பாத்தியா, ஒரு வாரமா நான் வந்ததிலேர்ந்து அலஞ்சிகிட்டு இருக்கியே, என்ன சொல்றாரு டாக்டர், அவளுக்கு என்ன வியாதியாம்?..படபடப்போடு வினவுகிறாள் அம்மா…

    சும்மா தொண தொணன்னு ஏதாவது கேக்காதம்மா, சாப்டுட்டு போய் டிவி பாரு. எங்களுக்கு என்ன ஆனா, உங்க ரண்டு பேருக்கும் என்ன அவ்வள கவல, உனக்கும் அப்பாவுக்கும் வேற வேலயே கிடையாது. தின்னுட்டு போய் பேசாம படுத்துக்கங்க.  உள்ளுக்குள் எரிச்சலோடு வெடிக்கிறான் கணேஷ்.

    ஏண்டா அம்மாவ இப்படி கரிச்சுக் கொட்டற, உன்ன பத்துமாசம் சுமந்து பெத்தவ, அவளுக்கும் ஓம்மேல கரிசனமும், அக்கறயும் இருக்கு?…உனக்கு ஒண்ணுன்னா அவளுக்கும் பங்கு உண்டுடா!…

    அய்யோ, ஆபீஸல பிரச்னன்னு, வீட்டுக்கு வந்தா, நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து வார்த்தையால என்ன கொல்லறீங்க?.. உங்க பேச்ச கேட்காம, லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு எங்க இரண்டு பேரையும் வார்த்தையாலயே அப்பப்ப கொட்டுறீங்க……………நான் விரும்பின பெண்ணை கல்யாணஞ் செஞ்சுகிட்டதுல தப்பு கிடையாதுப்பா?…அதே மாதிரி உங்க ப்ரண்டு சுரேஷோட பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதும் தப்பில்ல?..இரண்டையுமே நீங்க எப்படி எடுத்துக்கறீங்க என்பதப் பொருத்துதான் அமையும்.

    அப்டி என்னதான் நா சொல்லிட்டேன், ஒரே அடியா எர வானத்துல ஏறி கத்துற. எங்க ரெண்டு பேரையுமே நீ மதிக்கல, நீ நெனச்சதயே சாதிச்சுட்டே, என்னோட உயிருக்குயிரான நண்பன் சுரேஷோட பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா, நாங்க ரெண்டு பேருமே பழக்கப்பட்ட குடும்பத்தோட அனுசரிச்சு, கொஞ்ச காலம் சந்தோஷமா இருந்திட்டு போய்ச்சேர்ந்திருப்போம்…அப்பா ஆவேசப்படுகிறார்.

    எது நடக்குமோ, அதான் நடக்கும்!….கணேஷ் முணு முணுக்கிறான்.

    அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கிற வாக்குவாதம் சரியில்லை என்பது தெரிந்ததும் “ஏங்க உள்ள வாங்க, வந்ததும் வராதுமா என்னங்க அப்பாவோட வாக்கு வாதம், ஏதோ பழசெல்லாம் மறந்திட்டு கொஞ்ச காலம் நம்மளோட இருக்கணும்னு வந்தவங்கள அவமதிக்காதீங்க” அவங்க அனுபவத்தில முதிர்ந்தவங்க……கணவனனச் சமாதானப் படுத்த நினைக்கிறாள் கமலா.

    பாத்தீங்களா?…..பாத்தீங்களா?, அவளுக்கு என்ன திமிறுன்னு, நமக்கு சோத்துக்கு வழியில்ல கடைசி காலத்துல இவகிட்ட வந்து ஒட்டிக்கிட்டதா ஜாடபேசுறா…இதுக்கு மேல இங்க குந்த வழியில்ல, இன்னிக்கே நம்ம கிராமத்துக்கே போயிடலாம்…அடுத்து கணேஷின் அம்மா படபடக்கிறாள்.

    ஏண்டா?…..மழ, தண்ணி இல்லாம வயக்காடல்லாம் காஞ்சு போச்சுன்னுதான், இங்க கொஞ்ச நாள் இருக்கணும்னு வந்தோம், இங்க நிலைமை தலைகீழா இருக்கு, ஒரு நிமிஷம் கூட நிம்மதியில்லையே!…அப்படி என்ன பாவம் பண்ணிணோம், நாங்க உன்ன பெத்து, வளர்த்து, படிக்க வைச்சு ஆளாக்குனதுக்கு?…அப்பா அழாத குறையாகப் புலம்புகிறார்.

    கணேசும், கமலாவும் தங்களுடைய ரூமுக்குள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொள்கிறார்கள்.

    கமலா நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத, எங்க அம்மாவும் அப்பாவும் கிராமத்துலேயே வளர்ந்தவங்க, ரொம்ப சென்சிட்டிவ் டைப், சட்டுனு எடுத்த எடுப்பில வார்த்தயக் கொட்டிடுவாங்க, அப்பாவோட ப்ரண்டு சுரேஷோட பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல, இன்னிக்கும் அந்த வருத்தம் அவருக்குள்ள இருந்துகிட்டு ஆட்டிவைக்கிது. வேலைக்குப் போகாம, வீட்டிக்குள்ள சொல்ற வேலய செய்துகிட்டு கிடக்கிற மருமக வல்லியேன்னு எங்கம்மாவுக்கு ஆதங்கம். இதெல்லாம் தான் அவங்கள உன்ன அடிக்கடி வார்த்தையால கொட்டச் சொல்லுது. நீ ஒண்ணும் இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காத கமலா!….

    இதெல்லாம் ஓண்ணுமில்லீங்க, இது கிடக்கட்டுங்க, இன்னிக்கு கிளினிக்குப் போனீங்கள ரிப்போர்ட்ட கலெக்ட் பண்ணி டாக்டர்கிட்ட காமிச்சீங்களா? என்ன சொன்னாரு?….கமலா வினவுகிறாள்.

    ஆமா, ஆமா, காமிச்சேன், அவரு இன்னும் சில டெஸ்ட்டுக்கு எழுதிக் கொடுத்திருக்காரு,  உனக்கு எழுதிக் கொடுத்தது போதாதுன்னு, இப்ப புதுசு புதுசா எனக்கும் டெஸ்ட் எழுதிக் கொடுத்திருக்காரு. சில சமயம் கமிஷணுக்கு ஆசப்பட்டு, எல்லா டெஸ்ட்டும் எடுக்கச் சொல்றாரோன்னு தோணுது. நாளக்கி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காரு. நீயும் வரயா,

    இல்லங்க, நாளைக்கு உங்க நாத்தனாரும் இங்க வறாங்களாம், ரண்டு நாள் தங்குவாங்களாம். முதல் முறையா நம்ம வீட்டுக்கு வர அவங்களுக்கு ஒரு புடவயாவது எடுத்துக் கொடுக்கணுமில்லையா, நான் திநகர் போய் எல்லோருக்கும் நல்லதா எதாவது வாங்கிட்டு வர்ரேன். பணம் இருந்தா ஆபீஸ் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் கொடுத்துட்டு போங்க!…

    கமலா நீ ஒரு புத்திகெட்டவ, எங்க அம்மா, அப்பா எல்லோரும் வாய்க்கு வந்தபடி ஒன்ன கடுமையாத் தூத்துராங்க, நீ என்னடான்னா, அவங்கள, உழுந்து உழுந்து அவங்கள உபசரிக்கற.  போதாதுக்கு என் அக்கா வேற வந்து உனக்கு என்ன வெடி வக்கப் போறாங்களோ?….. கடவுளுக்குதான் வெளிச்சம்.

    ஆரம்பத்திலே அப்படிதாங்க இருக்கும், பழகப் பழக எல்லாம் சரியாயிடுங்க. உங்களுக்கு பிபி ஏறிடிச்சு, நீங்க ஆபீஸ் கிளம்புங்க, இன்று வெள்ளிக்கிழமை, புத்துக் கோயிலுக்கு போய் பால் தெளிச்சிட்டு வந்திடுறேன். அந்த அம்மனாவது நமது வயிற்றில் பால் வார்க்கட்டும் என்று சொல்லிவிட்டு நம்பிக்கையோட கிளம்புகிறாள் கமலா.

    கமலா போன பிறகு, “அம்மா……நேத்திக்கு கோவில்ல அப்பாவோட பிரண்ட் சுரேஷ் அவர் மகளப் பார்த்தேன். அதான் நம்ம கணேஷுக்கு பாத்தோமே, அவளப் பத்திதா சொல்றேன், அவ இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலயாம். எனக்கு ஒரு ஐடியா தோணுது, இப்ப நம்ம கணேஷுக்கு குழந்தயில்லாம அவஸ்த்தப்படரத நினச்சுப் பாக்கறப்ப, எப்படியாவது அவளயே இவனுக்குக் மறுபடி பேசி இரண்டாந் தாரமா கட்டி வச்சா என்னன்னு தோணுதும்மா?.. நீ அப்பாகிட்டப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வா?….. நாத்தனாருக்கு வந்த வேலை ஆகிவிட்டது. நான் இப்ப ஊருக்குக் கிளம்புறேம்மா!..சீக்கிரம் உங்க முடிவச் சொல்லுங்க.

    கமலா புத்துக்குப் பால் தெளித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது, அம்மாவும் நாத்தனாரும் பேசிக்கொண்டிருப்பது லேசாக காதில் விழுகிறது. அதைக்கேட்டு இடிந்து போன கமலா, அப்படியே அங்கேயே திண்ணையில் உட்கார்ந்துவிடுகிறாள்.

    கனேஷுக்கு அலுவலத்தில் வேல முடியவில்லை, சீக்கிரம் அங்கிருந்து கிளம்பி டாக்டரிடம் போகலாம் என்று முடிவெடுக்கிறான். போவதற்கு முன்பு, அவன் மனம் பலவாறு குழம்புகிறது, கமலாவுக்கு சும்மா அடிக்கடி ஜுரம் வருதுன்னுதானே போனோம், உண்மையா அவளுக்கு என்ன பிரச்சினை, சொல்லமுடியாதபடி அப்படி என்னதான் நோய், டாக்டர், அவ மலடி அது இதுன்னு ஏதாவது சொல்லிவிடுவாறோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு, டாக்டரின் ரூமுக்குள் நுழைந்து, என்ன டாக்டர் என்னோட மனைவியின் ரிப்போர்ட் பாத்தீங்களா.

    வாங்க கணேஷ், நான் இப்ப அவசரமா, ஒரு கிரிட்டிகல் ஆபரேஷனுக்காக கிளம்பிக் கொண்டிருக்கிறேன்….இந்த மெடிகல் ரிப்போர்ட்ல எல்லாம் எழுதியிருக்கிறேன். படிச்சுப் பாத்திட்டு, இன்னொரு நாளைக்கு நீங்க இரண்டு பேரும் வாங்க.

    அந்த ரிப்போர்ட கையில் வாங்கிய கணேஷ், அத படிச்சுப்பார்த்துட்டு, மிகுந்த குழப்பத்தோடு, வீட்டிற்கு வந்ததும், யாருடனும் பேசாமல் உள்ளே சென்று கதவைத் தாளிட்டுக் கொள்கிறான்.

    அவன் மனைவி காப்பியுடம் உள்ளே நுழைகிறாள். என்னங்க உங்கக்காவுக்கு வாங்கியிருக்கிற பொடவயப் பாருங்க. நல்லா இருக்கா. அப்படியே அம்மாவுக்கும் ஒண்ணு, அப்பாவுக்கு எட்டு முழம் வேஷ்டி துண்டு சேர்த்து வாங்கியாந்துட்டேன். அவன் முகம் ரொம்ப வாடியிருப்பதைப் பார்த்துவிட்டு, ஆபிஸ்ல ஏதாச்சும் பிரச்சினையா, வரும்போது உங்கப்பாவுக்காக, ஒரு அரை கவுளி கும்பகோண வெத்தல வாங்கி வரச்சொன்னேனே வாங்கிட்டீங்களா?….

    ‘வெத்தல’ அது இதுன்னு சொல்லி வந்ததும் வராததும் வெறுப்பேத்தாத கமலா?…,அதெல்லாம் வாங்க நேரமில்ல, டாக்டர்கிட்டே போய்ட்டு, அப்படியே நேரா இங்கதான் வரேன்.

    சரி சரி, அது போகட்டும், டாக்டர் என்ன சொன்னார்?….கமலா பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறாள்.

    கமலா, நான் சொல்லப் போறத கவனமா கேளு, மனச சிதற விடாம, பொருமையா கேப்பியா?……

    என்னங்க பெரிசா பொடி வச்சு பேசுரீங்க, எதுவா இருந்தாலும் சுத்தி வளச்சு சொல்லாம நேரடியாச் சொல்லுங்க. உங்க அப்பா, 10 மணியான சுருண்டு படுத்துக்குவாரு, அவருக்கு சாதம் போடணும்.

    நம்ம இரண்டு பேரையும் அறவே வெறுக்கற அம்மா, அப்பா, அக்கா எல்லோரையும் நீ ஒரேயடியாத் தாங்கற, ஆனா அவங்க அதெயெல்லாம் புரிஞ்சுக்காம, உன்ன அப்பப்ப கரிச்சுக் கொட்டறாங்க.

    அதெல்லாம் கிடக்கட்டும், இப்ப விஷயத்த சொல்லுங்கங்க…..கமலா கேட்கிறாள்.

    இடிபோல பட்டுன்னு ஏதாவது சொல்லப் போய், ஏடாகூடமா ஏதாவது ஆயிடக்கூடாதுன்னு நினைச்ச கணேஷ், மெதுவாக…இதமாக…..’கமலா, இரண்டு வருஷம் முன்னாடி, நம்ம ஜாதகத்த பாத்துட்டு ஒரு ஜோசியர் சொன்னாருல்ல, டாக்டரும் அதையே தான்’…………பேச்ச இழுக்கிறான் கணேஷ்.

    என்னங்க இழுக்கறீங்க, டாக்டர் உடனே சொல்லாம ஒரு வாரம் காலங்கடத்துனதுக்கு, இப்பதான் அர்த்தம் விளங்குதுங்க. நான் மலடின்னு டாக்டர் சொல்லப்போறார்ன்னு, நீங்க சொல்ல வந்தத இழுக்கும் போதே, எனக்கு சூசகமா எனக்குத் தெரிஞ்சுப் போச்சு, இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க.  நான் ஒரு மலடின்னு மட்டும் பேரு வாங்க மாட்டேங்க, ஒருவன் எவ்வளவு வசதியோட வாழ்ந்தாலும், குறை இல்லாத மனிதன் என்பவன் யாரும் இவ்வுலகில் கிடையாது. குறை இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு, இருக்கறத வச்சுக்கிட்டு சந்தோஷமா “எனக்கு ஒரு குறையுமில்லை” என்று எவன் வாழ்கிறோனோ அவன் தான் உண்மையான மனிதப்பிறவி…?… இப்ப நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன், இரண்டு மாசத்துக்கு முன்னாடி, உங்களோட பிரண்டு ஒருத்தர் குடும்பத்தோட ஆக்சிடெண்ட்ல இறந்தப்ப, அவரோட குழந்தய எங்கோ ஒரு ஆஸ்ரமத்துல சேத்துட்டதா சொன்னீங்களே, அதுதாங்க இப்ப நம்மோட குழந்தயா ஆகப்போவுது. நாளக்கு நாம இரண்டு பேருமே அங்க போயி குழந்தய எடுத்துட்டு வந்துருவோம். குழந்தையில்லை என்ற குறை இனி நமக்குக் கிடையாது!………..கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு பெரிய சொற்பொழிவே தங்கு தடையில்லாமல் நிகழ்த்துகிறாள் கமலா. சிறிது நேரம் கழித்து மீண்டும் பெருமூச்சு விட்டு, மறுபடி தொடங்குகிறாள்…..இத பாருங்க, நீங்க இந்த விஷயத்துல முடிவெடுக்கலேன்னா, நா ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டேன்!……

    என்ன, என்ன சொல்லு கமலா, அவசர கதியில் அவசரப் படுகிறான் கணேஷ்!….

    உங்க அம்மா, அப்பா, நாத்தனார் இவர்கள் மூணு பேரும் எடுத்த முடிவை நான் மனதார ஆதரிக்கிறேன், உங்களுக்குச் சம்மதமா?…

    என்னன்னு சொல்லாமலாயே புதிர் போடாதா, நீட்டி வளச்சுப் பேசாம, சட்டுனு சொல்லு, கமலா

    அவசரப் படாதீங்க, இது இரண்டு பேரோட வாழ்க்கைப் பிரச்சின, இந்த விஷயத்துல இருவருக்கும் பூரண ஒத்துழைப்போடுதான் இத செயல்படுத்தமுடியும்.

    இதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கணேஷ் ஆறுதல் அடையவில்லை மாறாக, மீண்டும் அவன் உள்மனம் பதை பதைக்கிறது. சரி சொல்லு நான் நிதானமா கேட்கிறேன்.

    உங்களய கணவனா அடையுனுமின்னு, இன்னும் கன்னியாவே இருக்கிற உங்க அப்பாவோட நண்பன் சுரேஷ் பொண்ண உங்களுக்கு இரண்டாம் தாரமா கட்டி வைக்கிறதுக்கு உங்க அம்மா, அப்பா, அக்கா மூணு பேரும் முடிவு பண்ணிருக்காங்க.  எது எப்படியோ உங்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்பதால், நானும் இதுக்கு மனப்பூர்வமா சம்மதம் தெரிவிக்க முடிவுக்கு வந்து விட்டேன்.

    இதைக் கேட்டவுடன், இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறான் கணேஷ், அவன் மனதுகுள்ளே பல கேள்விக்கணைகள் துளைத்துக் கொண்டிருக்கின்றன.  அய்யோ கடவுளே என் மனைவியைப் பற்றி நான் எவ்வளவு தவறான எண்ணங்களுடன் டாக்டரிடம் சென்றேன்.  அவர் எழுதிக் கொடுத்த மெடிகல் ரிப்போர்ட், அவன் எதிரில் வந்து பூச்சாண்டி காட்டுகிறது.

    ஏங்க, நா எவ்வளவு சீரியஸான விஷயத்தைச் சொல்லிகிட்டிருக்கேன், நீங்க என்னடான்னா, எதைப் பத்தியோ யோசிச்சுகிட்டு இருக்கீங்க, இது வாழ்க்கப் பிரச்சினங்க. ஜோக்கா எடுத்துக் காதீங்க, ஒரு முடிவுக்கு வாங்க.

    கணேஷ்….மறுபடி மெளனமாகிறான்.

    என்னங்க நா திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கேன், நீங்க எதையுமே காதுகொடுத்துக் கேக்காம, எங்கோயோ மனசப் பரிகொடுத்துட்டு யோசிக்கிறீங்க!….

    மீண்டும் யோசனையில் மூழ்குகிறான்…..மனதுக்குள் மீண்டும் மத்தாப்பு.

    ‘கமலா சொல்வது போல, என் நிலைமையை எப்படி மற்றவரிடம் சொல்ல முடியும்?… கமலாவைப் போல ஒரு புதுமைபெண்ணை நான் மனைவியாகப் அடைந்தது கடவுள் கொடுத்த வரமல்லவோ?……குறை என்னிடம்தான் இருக்கிறது என்பதை முழுவதுமாகத் தெரிந்து கொள்வதற்கு முன், அதை மனைவியின் பக்கம் திருப்பி விட நினைப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்?. கள்ளம் கபடமற்ற கமலாவை எனக்குக் கொடுத்த கடவுளே!……’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமல்லவா!….கமலா சொன்னது போல் ‘எனக்கு ஒரு குறையுமில்லை’….என நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும்போதே குடுகுடுப்பைக்காரன் மாதிரி டமடமவென்று அந்த மெடிக்கல் ரிப்போர்ட் மீண்டும் மணி அடிக்கிறது.

    “கணேஷ், உங்களுக்கு கருவை  உற்பத்திசெய்கிற உயிரணுக்களில் உயிரணு இம்மியளவும் இல்லை’ மருத்துவத்தால் இந்தக் குறையை நிவர்த்தி செய்யமுடியாதெனினும், மனம் தளராமல் முயன்று பார்ப்போம்!.. அடுத்த வாரம் என்னை சந்தியுங்கள்”.

    இதை அப்படியே கமலாவிடம் சொல்லி விடலாமா?……..யோசித்தவன் சட்டைப்பையிலிருக்கும் மெடிக்கல் ரிப்போர்ட்டைத் தொட்டுப் பார்த்து கொள்கிறான்.

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-27

     பெருவை பார்த்தசாரதி

    வரலாற்றில் இடம்பெற்ற பெரிய விவேகிகள் எல்லோருமே, தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சூழல்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து,  பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதைத்தான் கடந்த 26 தொடர்களிலும் எழுதி வருகிறேன்.

    இவர்கள் அனைவருமே, உள்ளத்தின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் நேர்மை நிரம்பிய ஆற்றலை வெளிக்கொணர்ந்து, ஒருமுகக் கவனத்தின் மூலம் உலகுக்கு வழிகாட்டினார்கள் என்பதை பலவித சான்றுகளோடு விவரிக்கப்பட்டது. இவர்களின் சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ரகசியம் யாதென!….. ஆராயும்போது, ‘ஆழ்மனத்தில் மறைந்திருக்கும் ஆக்கப் பூர்வமான ஆற்றலை’ பிறர் அறியும்படி வெளிக்கொணர்ந்த விதமே, இவர்களை உலகறியச் செய்தது எனத் தோன்றும்.

    இருபத்திநான்கு மணி நேரத்தில், காலை எழுந்தது முதல், இரவு படுக்கைக்குப் போகும் வரை ‘நேரம் எவ்வாறு கழிந்தது’!… என்பதை யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. அதேசமயத்தில், நேரம் வீணாகக் கழிந்துவிட்டதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவரும் இருக்க முடியாது என்றே கூறமுடியும். ஆனால், அறிவாளிகளும், சாதனையாளரும், சிந்தனையாளரும் ஒவ்வொரு நிமிடமும் ஆக்கப் பூர்வமான நேர்மை நிரம்பிய எண்ணங்களோடு ஒவ்வொரு நிமிடமும் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

    ஒரு நல்ல காரியத்தைத் தொடங்க நினைக்கும்போது, வேறொரு எண்ணம் அதைச் செய்ய விடாமல் தடுக்கிறது, அப்போது, ‘ஆஹா’ அந்த நல்ல செயலை நேற்றே செய்திருக்கலாமே!….,நேற்று நேரம் இருந்தும் அதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே!…”என்ற எண்ணம் எல்லோருக்கும் மறுநாள்தான் உதயமாகிறது.

    ஒரு நல்ல நிகழ்ச்சி ஒன்றை மனம் விரும்பி ஏற்கின்ற அதே சமயத்தில், கெட்ட நிகழ்ச்சியைக் காண அதே மனம் விரும்புவதில்லை. ஆனால் நல்லதோ, கெட்டதோ, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தீர ஆராய்ந்து அதிலிருந்து நல்லதைப் பெற முடியும் என்பதையே வாழ்வியல் பாடம், படிப்பிணை, பட்டறிவு, அனுபவம் என்றெல்லாம் பலவாறாகக் கூறக் கேட்டிருக்கிறோம்.

    தீய எண்ணங்களை விலக்கி, தீச்சொற்களைப் பயன்படுத்தாமல், ஆக்கப் பூர்வமான எண்ணங்களுக்கு இடம் விடும்போது, வாழ்க்கைப் பயணம் இனிதே தொடர்கிறது என்பதை   வள்ளுவர் பின்வரும் குறளில்:- “ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நின்றாகாதாகி விடும்”  என்கிறார். அதாவது பாலில் துளி நஞ்சு கலந்தது போல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லானால் அதுவரை கூறிய நல்ல சொற்கள் அனைத்தும் பயனற்றுப் போய்விடும்” என்பதே இக்குறளின் கருத்து.

    ஒரு நாட்டின் அரசன் என்ற முறையில், செய்ய வேண்டிய எவ்வளவோ நல்ல காரியங்கள் இருந்தும், தீய செயலை உடனே செய்த “இராவணன்”, இராமாயணம் உருவாகக் காரணமாயிருந்தான். அவனது தீய எண்ணத்துக்கு வித்திட்டவள் சூர்ப்பனகை. மாகாபாரதத்தில் “சிசுபாலன்” தீச்சொற்களால், பகவான் கிருஷ்ணனையே சுட்டெறித்தான், ராஜசூய யாகம் நடக்கும் போது, பலர் முன்னிலையில் சபையில் அவதூறு பேசி பகவானையே பகைத்துக் கொண்டவன் சிசுபாலன். “துரியோதனன்” கடுஞ்சொற்களால் மகான்கள் அனைவரையும் மட்டம் தட்டினான். தீய எண்ணத்தால் எழுந்த பேச்சால், பீஷ்மர், விதுரர், துரோணர் போன்ற பெரியோர்களின் ஆசியைப் பெறமுடியவில்லை. துரியோதனன் மனதில் தீய எண்ணங்களை வளர்த்தவர் “சகுனி”. இவர்கள் மூவரின் மன நிலையைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, யாவரும் அறிந்ததே.

    இப்படி மனதில் தீய எண்ணங்கள் நிறைந்தவர்கள் பலர், கொடுஞ்செயல்களைப் புரிந்து உலக வரலாற்றிலே இடம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். சிறுவயதிலேயே எதிர்மறை எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் வெகு விரைவில் வளர்த்துக் கொண்ட சிறுவன் ஒருவன் வளர்ந்து பெரியவனாகும் போது, உலகறிந்த மிகப் பெரிய கொடுங்கோலனாக வலம் வந்தான் என்பதை விவரிக்கிறது வரலாறு.

    ‘வெற்றி வீரன்’, ‘மாவீரன்’, ‘உலகை ஆளப்பிறந்தவன்’, ‘சர்வ வல்லமை படைத்தவன்’ என்றெல்லாம் தன்னைத் தானே நினைத்துக் கொண்டு, மமதை என்கிற சிம்மாசத்தில் வாழ்ந்தவன். ஆணவம், அகங்காரம், அதிகாரம் இவற்றின் பிறப்பிடமாக இருந்த இவன் உலகமே தன்னைக் கண்டு அஞ்ச வேண்டும் என்று நினைத்தானே தவிர, இரக்கம், அன்பு என்றால் என்ன வென்று அறியாதவனாகவே வாழ்ந்தான். தன்னிடம் மண்டியிட்ட பல்லாயிரக்கான யூதர்களின் மண்டையை உடைத்தான், உயிர்ப்பிச்சை கேட்டு மன்னிப்புக் கோரியவர்களை தூக்கிலிட்டான் என்பது இவனது சரித்திரம். கொடுமைக்கடலில் குதித்து சந்தோச நீச்சல் கற்றவன் ஹிட்லர். யாராவது கொடுஞ்செயல் புரிந்தால் அவர்களை ‘ஹிட்லர்’ என்று சொல்கிறோமே, இந்த அடைமொழிக்கு அடையாளமாகத் திகழ்ந்தவன். பலருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவன்.  இவனைப் போன்றே “மனித நேயம்” இல்லாத, உலக சரித்திரத்தில் இடம்பெற்ற மற்ற வீரர்களையும் நாம் அடையாளம் காணமுடியும்.

    இவர்களை நினைக்கும் போது, நாம் எப்படி வாழக்கூடாது என்பதை நன்றாக அறியமுடியும். அதே சமயத்தில், நாம் ஒன்றைச் சிந்திக்க மறந்து விடுகிறோம், அதாவது, எத்தகய கொடுஞ்செயல்களையும் புரியாது, ஈகைக் குணத்தால், புலவர்களைப் பாராட்டிப் பரிசு கொடுத்து, பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தில் வெற்றிக் கொடி நாட்டிய நமது நாட்டில் தோன்றிய ஆக்கப் பூர்வமான சிந்தனைகளையும், செயல்களையும் புரிந்த சேர, சோழ, பாண்டியர் என்னும் வீரர்களை நினைவுக்குக் கொண்டுவர வேண்டியது நமது கடமை. இவர்களும் போர்புரிந்து பகைவரை வென்ற மாவீரர்கள்தான். ஆனால் எத்தகய நல்லெண்ணத்தோடு வாழ்ந்தார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

    ஒருவரது வாழ்க்கை, அவரது எண்ணம்போல்தான் அமையும் என்பதற்கு “எண்ணம் போல் வாழ்வு”,மனம் போல் மாங்கல்யம்”, “எண்ணம்போல் செயல்” என்றெல்லாம் சொல்வதை நாம் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம். எண்ணத்தைப் பொருத்தே, செய்யக்கூடிய செயல் அமைவதால்தான், தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே என்பதை சிறுவயதிலிருந்தே படித்து வருகிறோம்.

    ஆக, எண்ணத்திற்கும் செயலுக்கும் தொடர்பு உண்டு. எண்ணம், புத்தி, மனம், சிந்தனை போன்ற அனைத்திற்கும் விரிவான விளக்கமளிக்கிறார் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸிக்மண்ட் ப்ராட் (Sigismund Schlomo Freud:: 6 May 1856 – 23 September 1939) என்னும் உளவியல் மருத்துவர். மனிதர்களின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாயும்போது, மனதின் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனித மனம் பற்றிய உளப்பாகுபடுகளை, ஐடி (ID), ஈகோ (Ego), சூப்பர் ஈகோ (Super Ego) என்று மூன்று வகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் மிக நுண்ணிய விளக்கம் தந்திருக்கிறார் ஸிக்மண்ட். மனத்தை அறிந்து கொண்டால் மகான்களாக முடியும் என்று சொல்கிறோம் அல்லவா!…ஸிக்மண்ட் என்ன கூறுகிறார் என்பதை மேலும் தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் செல்லவும்.

    http://en.wikipedia.org/wiki/Id,_ego_and_super-ego)

    ஒரு நல்ல விஷயத்தை மற்றவரிடம் சொல்லும்போது, அதை அவர் மகிழ்ச்சியாக மனதார ஏற்றுக்கொள்கிறாரா?..இல்லையா?….என்பதை அவரது பதிலை வைத்தே அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒருவர் ‘என்னுடைய மகன் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறான்’ என்ற தகவலை மிகவும் மகிழ்ச்சியாக அவரது நண்பனுக்குத் தெரிவிக்கிறார், இதைக்கேட்ட அவரது நண்பர் ‘என்ன மார்க் வாங்கி என்ன ப்ரயோசனம், எவ்வளவு படிச்சாலும் வேல கிடைக்க மாட்டேங்குது’ என்ற பதிலிலிருந்து அவரது எதிர்மறை எண்ணமும் சுயநலமும் வெளிப்பட்டு விடுகிறதல்லவா?.. இதேபோல சுபகாரியங்கள் நடக்கும் இடத்தில் அபசகுனமாகவும், அனர்த்தமான வார்த்தைகளையும் பிரயோகிப்பவர்களது மனதை எளிதாக அடையாளம் காணமுடியும்.

    இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்தும், வாழ்வியல் கல்வியைத் தொடங்கும்போது, பலரது மனம் நல்லனவற்றையே விரும்புகிறது. வாழ்வில் மகிழ்ச்சி ஒன்றே போதும் என்று மனம் நினைக்கிறது, சிறிது துன்பம் இடர்வந்தாலும் அதை மனம் ஒப்ப இயலாது என்பதை சென்ற இதழில் விளக்கி இருந்தேன்.

    நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ள வழிகாட்டியாக அறநெறிக்கதைகள் அடங்கிய மகாபாரதக் கிளைக்கதைகள், இராமாயணக்கதைகள், முல்லாக் கதைகள் மற்றும் ஸென் மற்றும் சூஃபி கதைகள் நமக்கு அவ்வப்போது உதவுகிறன்றன. உதாரணத்திற்கு ‘ஸென்’ கதைகளில் வரும் கருத்துக்களில் மேலெழுந்தவாரியாக ஒன்றுமில்லாததாகத் தோன்றினாலும், ஆழ்ந்து படித்தால் உள்ளுக்குள் அர்த்தம் பொதிந்ததாகத் தெரியும். வாழ்வியல் நடைமுறைகளை எதார்த்தமாக எடுத்துச் சொல்லும். எடுத்துக்காட்டாக, ஸென் கதைகளின் வருகின்ற ஒன்றை இங்கே கூறவிரும்புகிறேன். ஸென் துறவி ஒருவர், சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது, குதிரை மேய்ப்பவன் ஒருவன், சாட்டையினால் ஒரு குதிரையின் முதுகில் பலமாக அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, ‘துஷ்டனே, ஏன் அந்த வாயில்லா ஜிவனை அடிக்கிறாய்’ என்று கூச்சலிடுகிறார். அவனோ எதையும் சட்டை செய்யாமல் குதிரையை நையப் புடைத்துக் கொண்டிருப்பதிலேயே கவனம் செலுத்துகிறான். திரும்பத் திரும்ப ஸென் துறவி கூச்சலிடுவதைப் பார்த்துவிட்டு, குதிரை மேய்ப்பவன் சாட்டையை அவர் பக்கம் திருப்புகிறான். பிறகு, அவரைப் பார்த்து ‘நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?..என்கிறான்.

    “அந்தக் குதிரையை அடிப்பதை நிறுத்து, தீய எண்ணங்களால் சூழப்பட்டு, உனக்குள் தறிகெட்டு ஓடும் மனக் குதிரையை, முதலில் சாட்டையால் அடித்து, அதைச் செம்மைப்படுத்து” என்று ஸென் துறவி…..சொல்கிறார்

    ஒரு சிறிய நிகழ்ச்சியில், பல அர்த்தங்கள் பொதிந்து காணப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

    சிறார் பருவத்தில் வகுப்பறையில் பாடம் படிக்கிறோம், பிறகு கல்லூரி, அதன் பிறகு உயர் படிப்பிற்காக வெளிநாட்டில் என்றெல்லாம் கல்வி பயின்று, ஒரு கால கட்டத்தில் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். கல்வி பயிலுவது என்பது ஒரு காலகட்டத்தில் நின்று விட்டாலும், ‘வாழ்வியல் கல்வி’ வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    தினந்தோறும், பத்திரிகைகள், தொலைக்காட்சி, ஊடகம், இணையதளம், குடும்ப அனுபவங்கள் இதுபோல் உலகியல் நடப்புகள் அனைத்துமே, நமக்கு அனுதினமும் வாழ்வியல் பாடம் புகட்டிக் கொண்டேயிருக்கின்றன. ஏதாவதொரு பாடம் அல்லது படிப்பிணை எங்கோ நடந்த சம்பவத்திலிருந்து நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இப்படி நாம் அனைவருமே புதிது புதிதாக, தீயதை விலக்கி நல்ல வாழ்வியல் பாடங்களை ஏதோ ஒரு சம்பவங்களிலிருந்து கற்றுக் கொண்டே வரும்போது, அதற்கு முடிவு என்பது இருக்குமா?…என்ற கேள்வி எழுந்தால், வாழ்வியல் கல்வி என்பது ‘இறக்கும் வரை தொடரும்’ என்பதே பதிலாக இருக்க முடியும்.

     தொடரும்………

    Share
  • “தமிழ்தாத்தா” பிறந்த நாள்

    பெருவை பார்த்தசாரதி

     

    (19-02-1855 – 28-04-1942)

    பண்டிதர்க்கெல்லாம் பண்டிதரான ‘மஹாமஹாஉபாத்தியாயர்’என்ற  த்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதய்யர் அவர்களின் 157 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றய தினம் அவரைப்பற்றி நம் சிந்தனையைச் செலுத்துவோம். சுருக்கமாக அவரது பெயரை ‘உவேசா’ என்பதைவிட “தமிழ்தாத்தா” என்று சொன்னால் தமிழ்மக்கள் அனைவரும் அறிவர்.

    உண்மையாகச் சொல்லப்போனால், வாழ்நாள் முழுவதையும், தமிழுக்காக அற்பணித்த அவருக்குக் கிடைத்த வெகுமதி, ஏனையோரைக் காட்டிலும் மிகக் குறைவே.

    ஒவ்வொரு வருடமும் உவேசா அவர்கள் பிறந்த திருவாருர் மாவட்டத்தைச் சேர்ந்த “உத்தமதானபுரம்” கிராமத்தில், அவருடைய நினைவு இல்லத்தில் தமிழ்சங்கங்கள் பல கூடி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தும், நாடெங்கிலும் உள்ள உவேசா அவர்களின் திரு உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவிக்கப் படும். இது தொடர்ந்தாலும், இதுவரை அவரது நினைவு இல்லம் புதுப்பிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் இருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகும்போது, தமிழ்மேல் பற்றுள்ளவர்களை வருத்தமடையச் செய்கிறது.

    கடந்த 16-09-2012 அன்று, ஒரு துயரமான செய்தி ஒன்று ‘தி ஹிண்டு’ நாளிதழில் வெளியானது. திருவெட்டீஸ்வரன்பேட்டையில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்த “உவேசா இல்லம்” என்ற பெயர்ப்பலகை நீக்கப்பட்டு, தமிழ்மக்களின் தலையில் இடிவிழுந்ததுபோல், அந்த உத்தமரின் வீடும் கடப்பாறையால் இடிக்கப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் பலர் இச்செய்தி கேட்டறிந்து, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியதாகக் தகவல், அந்த இடத்தைப் பற்றி தற்போதுள்ள நிலை குறித்து அறியமுடியவில்லை.

    வெளி இணைப்புகள்

    http://www.thehindu.com/news/cities/chennai/article3901883.ece

    தமது சிறு வயதில் உவேசா அவர்கள் பெற்ற பட்டங்களையும், ஓலைச்சுவடிகளைச் சேகரிக்க எப்படி அரும்பாடுபட்டார் என்பதையும் 21-02-2012 அன்று வல்லமையில் குறிப்பிட்டிருந்ததையும், இங்கே நினைவு கூற விழைகிறேன்.

    http://www.vallamai.com/literature/articles/16553/

    ஓலைச்சுவடியில் இருந்த பழங்காலத்து இலக்கியங்களை அச்சிட்டு, தமிழுக்காகத் தொண்டாற்றி தனது வாழ்நாள் முழுவதையும் அற்பணித்த தமிழ்தாத்தாவின் புகழ் ‘தமிழ்நாட்டின்’ புகழாகும். ‘கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப்புலவன்’ என்று மஹாகவியால் பாராட்டு பெற்ற ‘உவேசா’ அவர்களின் பெயரில் இதுவரை ஒரு பல்கலைக்கழகமோ, கல்வி நிறுவனமோ தமிழ்நாட்டில் இல்லை என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் வருத்தமளிக்கவே செய்கிறது,

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-26

     பெருவை பார்த்தசாரதி

    சமுதாயத்தின் இன்றய சூழ்நிலை மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்குப் முன் வாழ்ந்த மகரிஷிகளும், முனிவர்களும், மஹான்களும் நமக்கு விட்டுச்சென்ற அறநெறிகள் என்கிற பொக்கிஷங்களை எவ்வாறு படைத்திருப்பார்கள். சற்று ஆராந்து பார்த்தோமானல், இவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தார்கள்?…யாரிடம் கல்வி பயின்று பட்டம் பெற்றார்கள்?….,எப்படி அறிவிற்சிறந்து விளங்கினார்கள்?…என்ற சந்தேகங்கள் எழும்.  அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை எண்ணிப் பார்த்தால் கூட வியப்பு மிகும். இயற்கையோடு ஒன்றி, விலங்கினங்களோடும், தாவரங்களோடும், சுற்றுப் புற சூழ்நிலைகளோடும் ஒட்டி உறவாடி வாழ்ந்தார்கள். இயற்கையே தெய்வமாக வணங்கினார்கள். இயற்கையோடு நல்லுறவாடும்போது, போற்றி வணங்கும்போது, விண்ணிலும் மண்ணிலும் அமைதி நிலவுவதை உணர்ந்தார்கள். இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதினார்கள். அவர்களால் படைக்கப்பட்ட இதிகாசங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், காப்பியங்கள் போன்றவற்றில் நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகள் நிறைந்து காணப்படுகின்றன. இது போன்ற போற்றுதற்கரிய காப்பியங்களைப் படைத்தவர்கள், எந்தச் சூழ்நிலையை அடிப்படையாக வைத்து, இதைப் படைத்திருப்பார்கள்?… விஞ்ஞான வளர்ச்சியடையாத பண்டைக் காலத்தில் ‘வாழ்வதற்கே சிரமப்பட்ட சூழ்நிலையில்’ இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சகல செளகர்யங்களில் ஒன்று கூடத் தோன்றாத கற்காலத்தில், இப்படிப்பட்ட அரிய சிந்தனைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்வாழ்ந்தவர்கள் மனதில் தோன்றியது வியப்புக்குறியது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில், இன்று ‘தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற படி மாறிக்கொள்ளும் மாட மாளிகைகளும், அதிநவீன கம்ப்யூட்டர் யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியோடு சுகபோகத்தை அனுபவித்துவாழும் அறிஞர்களுக்குக் கூட காட்டில் வாழ்ந்த ஞானிகளின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.

     மனித வாழ்க்கையே ஒரு போராட்டம், இந்த நிலையில் சிந்தனை தோன்றுவது அபூர்வம் அதிலேயும், துன்பங்கள் என்னும் அலைகளில் சிக்கித் தவிக்கின்றபோது நற்சிந்தனைக்கும், சாதனைக்கும் இடமில்லை. பணிசெய்யும் இடத்தில் பிரச்சினை, குடும்பத்தில் சிக்கல், உறவினர்களால் வரும் துன்பம், நாமே தேடி வரவழைத்துக் கொள்ளுகின்ற கவலைகள் இப்படி துன்பங்கள் ஏதும் இல்லாமல் இருப்பவர் இவ்வுலகில் உண்டா?.. என்ற கேள்விக்கு விடை காண்பதரிது…எல்லா வசதிகள் இருந்தும், ஏதாவதொரு துன்பத்தை அனுபவிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

     நல்வாழ்க்கை வாழ அனைவருமே ஏதாவதொரு வேலையில், பணியில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளின் அருளினால், சுபிட்சமான வாழ்க்கை கிட்டினாலும் அதை அனுபவிக்கத் தெரியாமல் சிக்கித் தவிப்போரும் உண்டு.  ஒரு சிறிய துன்பத்தைக் கூட ஏற்றுக் கொள்ள மனம் ஒப்புவது இல்லை. சாதாரணமாக நம்மிடம் பழகுபவர்கள் சிலரிடத்தில் ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். உடனே அதை ஏன் கேட்கிறீகள், அலுவலகத்தில் ஒரே வேலை, இங்கும் அங்கும் ஓட வேண்டியிருக்கிறது, இடையே டிரெய்னிங் ப்ரோக்ராம் வேறு, ஒரு வாரம் சரியாகச் சாப்பிடவில்லை, உடம்பு சரியில்லை, தூங்கவில்லை, வீட்டைக் கவனிக்க முடியவில்லை, என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொள்வார்கள், முடிவில் பெரிதாக ஒன்றும் சாதித்திருக்கவும் மாட்டார்கள். இதில் உடற்குறையைச் சொல்லி, கடமையைத் தட்டிக் கழிப்பவர்களும் உண்டு.ஆக நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால் இத்தகய சலிப்புக்கு அங்கே இடமிருக்காது. எதையுமே இன்முகத்தோடு வரவேற்பவருக்கு எல்லாமே இன்பம்தான். வாழ்க்கை எவ்விதம் அமைந்தாலும், அதை ஏற்று வாழும் மனப்பக்குவம் உள்ளவர்களுக்கு முதுமையும், உடல் உபாதைகளும் பெரிதாகத் தோன்றாது, வயதானாலும் இளைமையாகத் தோன்றுவதற்கு இதுவே காரணம் என்பது மனநல ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இவை அனைத்துக்கும் காரணமாக அமைவது மனது. மனம் தெளிவாக இருந்தால் சிந்தனை பிறக்கும். சிந்தனை தெளிவானால் மனதிலே சக்தி பிறக்கும், மனசக்தி தடைகளை உடைத்தெறியும், சாதனை படைக்கும்.

    ஒரு வயதானவர் கூறுகிறார், என்னுடைய கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன்.  பிள்ளைகள் எல்லோரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது, ஆனால் அவர்கள் இன்னும் செட்டில் ஆக வில்லை என்கிறார். பிள்ளைகள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் பெற்றோர் பங்கெடுத்துக் கொள்வதால், இந்தக் கடமை என்பதற்கு எல்லை இல்லைபோலும். சிலர் வசதியாக வாழ்ந்து பிறகு முதியவராகும்போது, ஏதாவதொரு வகையில் மற்றவர்களைச் சார்ந்து வாழவேண்டிய நிலைக்கு (dependent) ஆகிவிடுகிறார்கள்.  உடல்நலக் குறைபாடுகள் ஒன்றா, இரண்டா,  மருத்துவரிடம் விவரிக்கும்போது, அவரே குழப்பத்துக்குள்ளான மாதிரி, உடலில் ஏகப்பட்ட சிக்கல்கள், முடிவில் ஒரு பெரிய மருத்துவசோதனைப்பட்டியல், மருந்துச்சீட்டு, இயன்முறை பயிற்சிமையத்துக்கு (psysiotheraphy centre) ஒரு வாரகாலம் பரிந்துரைத்தல் போன்றவற்றோடு மருத்துவமனையிலிருந்து விடுதலை. இம்மாதிரி இக்கட்டான சந்தர்ப்பந்தங்களில் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி விடுவது சகஜம். துன்பம் வரும்போது துணைக்கு வருபவரது அறிவுரை, உறவினர், நண்பர்களது பரிந்துரை, நல்ல மருத்துவர் மற்றும் மருத்துவமனையைத் தேடுதல் போன்றவைகளும் பின் தொடரும், இதனால் மனம் மேலும் குழப்பமடையும், நாம் பூஜை, பிரார்த்தனை, பரிகாரம் முதலியவற்றைச் சரிவர செய்துகொண்டிருக்கின்ற போதிலும், பரிகார ஸ்தலங்கள், குளங்கள், மஹான்கள், சாதுக்கள் முக்கியமாக துறவறம், காவிவேட்டி போன்றவைகள் அடிக்கடி ஞாபத்துக்கு வந்து மேலும் நம்மை அலைக்கழிக்கும். நலம் விசாரிப்பவர்களோடும்,  நண்பர்களோடும் உரையாடும்போது தத்துவங்கள் பேசத்தோன்றும். மருத்துவமனையில் தனிமையை விரட்டி, மருத்துவருக்காகவும், மருத்துவ சோதனைக்காகவும் காத்திருக்கும் நேரத்தில், மற்றவரின் அறிவுரையைவிட, நமக்கெல்லாம் உதவக்கூடியது, கைகொடுக்கக்கூடியது என்று சொன்னால், நம்மைப் போல வேறு பலரும் துன்பங்களை அனுபவிப்பவர்களைப் பார்க்கும் போது சற்று ஆறுதல் கிடைக்கும். உடலில் ஒரு சிறிய காயம் பட்டால்கூட, சாதாரண மருத்துவரிடம் செல்லாமல் நிபுணரிடமல்லவா செல்கிறோம். இந்நேரத்தில் ஜனனம் எடுக்கும்போதே குறைகளோடு பிறப்போரைப் பற்றிச் சிந்திக்கிறோமா?…பிறக்கும் போதே ஊனத்தோடு பிறந்தவர்கள், உலக சாதனை புரிவதைப் பற்றி எண்ணிப் பார்க்கிறோமா?…என்றால் ‘இல்லை’ என்பதே பெரும்பாலானவரிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். மருத்துவரிடம் போகும் போது மட்டும் இத்தகய சிந்தனைகள் நமக்கு எழுவது இயல்பு என்றாலும், மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் போதாவது, இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவதில்லை. கஷ்டத்தை வெல்ல மந்திர உச்சாடனை செய்வதைவிட, குறைகளைக் களைந்து சாதனை வாழ்க்கை வாழ்ந்த பலரில், ஒரு சிலரை மட்டும் நினைத்தாலே துன்பங்கள் ஓடோடிவிடும். தினமும் காலையில் மகிழ்ச்சியாக படுக்கையைவிட்டு எழுந்தவுடன் காபி அருந்திவிட்டு, மின்விசிறியை ஆன் செய்து, தினசரிகளைப் புரட்டுகிறோம் அல்லது பாட்டுக் கேட்கிறோம். இந்த ஒரு சாதாரண செயலுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைகளை என்றாவது ஒரு நாள் சிந்தித்தித்திருக்கிறோமா!..

    தனது 46 வது வயதில், இடது கையிலும், காலிலும் சில இடங்களில் நிரந்தரமாக செயலிழந்த போது இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஒருவித ஆராய்ச்சித் துறையில் முழுவதுமாக தன்னை இணைத்துக் கொண்டார். பதப்படுத்துதல், நுண்ணுயிர்கள் பற்றிய இவரது தொடர் ஆராய்ச்சிகள் முடிவில் இவருக்கு உலகப் புகழைத் தேடித்தந்தன. அனுதினமும் பால், பியர், ஒயின், மதுவகைகள் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள் இவரை நினைத்து நன்றி செலுத்த வேண்டும். தினமும் அதிகாலையில், பாக்கட் பால் வாங்குபவர்கள் காபி குடிப்பதற்கு முன் தவறாமல் நினைத்துப் பார்க்க வேண்டியவர்தான் லூயிஸ் பாஸ்ச்சர்

    இன்று நாம் மகிழ்ச்சியோடு பாட்டு மற்றும் பலரது பேச்சுக்களையும் கேட்கிறோம். வெளிச்சம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்பதுபோல மின்சார வெளிச்சத்தில் வாழ்க்கை முழுவதும் பலன்களை அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஐந்து நிமிடம் கரெண்ட் இல்லையென்றால், ஒருவேலையும் செய்ய இயலவில்லை. ‘சம்சாரம் இல்லாமல் வாழ்ந்தாலும், மின்சாரம் இல்லாமல் வாழமுடியாது’ என்பதை உணருகிறோம். ஆனால் தனது இளம் வயதிலேயே ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் நோய் தாக்கி, நாளடைவில் காது கேட்கும் திறனையும் வெகுவாக இழந்து விட்டார் ஒருவர். அதனால் படிப்பிலும் அதிக நாட்டம் இல்லை. அங்கக் குறையைத் தாங்கி, அயறாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகத்துக்கே ஒளி ஏற்றினார். இவரது கண்டுப்பால் இரவு பகலானது. நமது வீட்டில் மின்சாரத்தால் இயங்கும் எந்தவொரு பொருளைத் தொடும் போதும், தவறாமல் நம் நினைவில் கொள்ள வேண்டியது இவரைத்தான். இவர் இறந்தபோது உலகமே ஒரு நிமிடம் கண்ணைமூடி (மின்சார விளக்குகளை அணைத்து) நன்றி செலுத்தியது, அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன்.

    மிகச்சிறந்த இசைப் படைப்பாளர் என்ற பெயருக்கு உரியவர். உலகத்தை தன் இசையால் கட்டிப்போட்டவர் என்றுகூடச் சொல்லுவார்கள். இவர் ஒரு கால கட்டத்தில் முழுவதும் காது கேளாதவராக இருந்தார் என்பதும் அந்தக் கால கட்டத்தில்தான் தனது 9 வது சிம்பனியை உருவாக்கி சாதனை நிகழ்த்தினார். இனிமையான இசையைக் காதால் கேட்டுத்தானே ரசிக்க முடியும். காதால் கேட்டு இசையை ரசிக்கக்கூடிய பாக்கியத்தைத் தான் பெறவில்லை என்றாலும், பிறருக்கு அந்த இன்பத்தைத் தரமுடிந்த அந்தக் கலைஞனின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்?……நிச்சயமாக எல்லோரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தனது சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்களை எதிர்கொண்டு, உலகையே இனிமையான இசையால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்தான் இசைச் சக்கரவர்த்தி பீத்தோவான்.

    இவர்களைப் போல் இன்னும் எத்துணையோ சாதனையாளர்கள், பிறவித் துன்பத்தைத் துச்சமாகக் கருதி, சுயநலம் இன்றி சிந்தித்ததால்தான், இன்றய வாழ்க்கையில் மேம்பட்ட நிலையை நாம் எட்டமுடிகிறது.  

    மகாகவி பாரதி எப்போதுமே, உலகவியலைப் பற்றிக் கனவு கண்டவர். வாழ்க்கையில் நிகழும் துன்பங்களைக் கண்டு ஒரு போதும் உழல மாட்டேன் என்று உறுதிபட எடுத்துரைத்தவர். அவரது படைப்புகளில் ‘என்னுடைய வாழ்நாளில் நான் சாகாமல் இருக்கும் கலையைக் கற்றவன்’ என்று சொல்வது போல ஒரு பாடலை அமைத்திருப்பதைக் காணமுடியும். உலகநியதி என்று சொல்லக்கூடியவைகளை வென்று காட்டுவேன் என்று சொன்ன அவர், பிறப்பும், இறப்பும் மாற்றமுடியாத உலக நியதி, அதிலே கூட மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு ரசிக்கும் பாரதி, துன்பங்களைக் கண்டு ஒருபோதும் நான் சாக மாட்டேன் என்று உறுதி கூறுகின்றான் போலும். கவலையையும், அச்சத்தையும் போக்கி, துன்பத்திலிருந்து விடுபட்டு மரணத்தை வெல்ல மாகாளியிடம் வரம் வேண்டுவதைப் பாருங்கள்!…

    முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்

    முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.

    பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ

    புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே

    சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே

    சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,

    நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை;

    நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!

    அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;

    அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!

    சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,

    தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,

    பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

    பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!

    மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,

    மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,

    நலிவுமில்லை, சாவுமில்லை! கேளீர்,கேளீர்!

    நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

    சுருங்கச் சொல்லின், வருகின்ற துன்பத்தை இன்பத்தோடு வரவேற்று, அதையும் இன்பமாகவே கருதினால், பகைவரும் கூட பாராட்டுவர் என்பதைத்தான் ‘துன்பத்தை இன்பமெனக் கொண்டு அமைதி வாழ்க்கை வாழ்தலே சாலச்சிறந்தது’ என்கிறது வள்ளுவனின் வாழ்வியல் பாடம்.

     இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

    ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள்-630)

    தொடரும்………

    Share
  • ‘பொய் வாழ்க்கை’

    பெருவை பார்த்தசாரதி

    “அய்யா, வெளிய கூட்டம் காத்திருக்குது”!……….வழக்கம்போல உங்க தீர்ப்புக்காக காத்திருக்காங்க அய்யா!…முதுகை வில்லாக வளைத்து பயபக்தியுடன் முதலாளியிடம் சொல்கிறான் கருப்பன்.

    “கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லு”, ஆமா, வந்திருக்கிறவங்க என்ன ப்ரச்சினயா கொண்டுவந்திருக்காங்க” …….சங்கரய்யா கட்டைக்குரலில் வினவுகிறார்.

    “வழக்கமா வர கேசுதாங்கய்யா, ‘அய்யாவு மகனுக்கும், மேட்டுத் தெரு பழனிக்கும் வரப்புத் தகராரு’!…

    “இதுவரையிலும் நிறய தீர்ப்பு சொல்லியாச்சு, இன்னக்கி ஏம்மனசு செரியில்ல, ரண்டு தரப்புக்காரர்களையும் நாளைக்கு வரச்சொல்லு” சங்கரய்யாவிடமிருந்து கட்டளையாக வருகிறது பதில்

    “இல்லங்க அய்யா!..ரொம்ப நேரமா வராந்தவிலே குந்தியிருக்காங்க”….

    இப்படி தினமும் வேலிச்சண்டை, குடும்பத்தகறாரு, கள்ளக்காதல், சொத்துத்தகறாரு போன்ற ஏதாவதொரு பிரச்சினைக்குத் தீர்ப்புச் சொல்லிக்கொண்டிருந்த சங்கரய்யா, ஊர்ப்பஞ்சாயத்தில் கோர்ட்டு, போலீஸ் தலையீடுக்கு இடங்கொடாமல் நீதிக்கு மட்டுமே தலைவணங்குவார். தனிநபர், கட்டை பிரம்மச்சாரி. கெளரவம் மிகுந்தவர், தயாள குணம் நிரம்பியவர், பண்ணையார் என்ற மிடுக்கு இல்லாமல் சகஜமாக எல்லோரிடத்திலும் பழகினாலும் கெளரவத்தை எப்போதும் தக்க வைத்துக்கொள்வார். அதற்கொரு கேடு வந்தால் கவரிமானாகிவிடும் பண்பு. ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை நிறைவேற்றும் மன உறுதி கொண்டவர் “சங்கரய்யா”.

    சங்கரய்யாவின் சொத்துக்களுக்கு கணக்காளராகவும், அந்தரங்க காரியதரிசியும் கூட, யாரிடமும் அதிகம் பேசமாட்டார், முதலாளியிடம் மிகுந்த விசுவாசம் உள்ளவர். அதிகம் படிக்காத இவருக்கும் குடும்பம், குட்டி, உறவினர் என்று யாருமில்லாத பிரம்மச்சாரி. எந்த காரியமானாலும் முதலாளியிடம் தெரிவிக்காமல் செய்யமாட்டார். கட்டளையை மீறமாட்டார், அவர்தான் கருப்பன்.

    சங்கரய்யாவும், கருப்பனும் ‘தலைஞாயிறு” என்ற அந்தக் கிராமத்தைத் தத்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

    கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத சங்கரய்யாவுக்கு, கடந்த ஒன்றிரண்டு மாதமாக தீவிர மன உளைச்சல். திடீரென்று ‘இந்த ஊரைவிட்டு, வேறு எங்காவது யாரும் கண் காணாத இடத்திற்கு சென்றுவிடவேண்டும்’ என்று மனதுக்குள் ஒரு இருக்கம், மனம் மாறுவதற்கு முன் உடனே முடிவுக்கு வருகிறார். பண்ணைத் தொழிலாளிகளின் கேள்விக்கு இடம் கொடாமல், அவசர அவசரமாக ஒரு வாரத்திற்குள், சொத்து, பத்து எல்லாவற்றையும் பைசல் செய்து விட்டு பட்டணத்தில் செட்டில் ஆகப்போகிறேன் என்று சொல்லிவிட்டு ஊரைக் காலிசெய்து விடுகிறார்.

    இது நடந்தது 45 வருடத்திற்கு முன்னால்………..

    சங்கரய்யாவுக்கு அம்மாவும் அப்பாவும் இறந்த பிறகு உறவினர் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. காலையில் வீட்டைவிட்டு கிளம்பி தோட்டம் துறவு எல்லாவற்றையும் சுற்றிவிட்டு மதியம் 2 மணிக்கு வீடுதிரும்புவார். கருப்பனின் மேற்பார்வையில் சாப்பாடு எல்லாம் தயாராக இருக்கும். குளித்து சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு மறுபடி தமது வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிடுவார். அவ்வப்போது கோவில்களில் நடக்கும் விழாவிற்குத் தலைமை தாங்குவார். அன்னதானம் செய்வார். அனாதை ஆசிரமத்திற்குச் சென்று குழந்தைகளுடன் தங்குவார். ‘அய்யாவுக்கு இன்னும் கல்யாணமே ஆகல, ஆனா குழந்தைகள் மேல் எவ்வளவு பிரியம்’ ஊர்மக்கள் மூக்கில் விரலை வைத்து பிரமிப்பார்கள். இவர்களெல்லாம் தவிர மற்ற நேரங்களில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர கருப்பனும் சமையல் காரனும் இருந்தார்கள். பக்கத்து கிராமங்களில் உள்ள நிலங்களை மேற்பார்வை இடும்போது மட்டும் விசுவாசம் மிகுந்த ஒரிரு பண்ணைத்தொழிலாளி வீட்டில் சில மணிநேரம் ஓய்வெடுப்பதுண்டு. அதில் பரம்பரையாக பண்ணையாருக்குச் சேவகம் செய்த குடும்பத்தின் வழிவந்த ஒரு மீனவப் பெண் சித்ராவின் வீட்டு திண்ணையில் சற்று நேரம் இளைப்பாறுவார் என்று சிலருக்குத் தெரியும். மற்றபடி கிராமத்தில் சங்கரய்யா என்றால் தனி மரியாதை, அவருடைய தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது.

    அய்யா ஊர விட்டுப் போகப்போறாகளாம், திடுதிப்பினு அய்யாவுக்கு ஏன் இந்த பட்டணப் பிரவேச ஆசை, கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஊர்மக்களின் கேள்விக் கணைகளுக்கு யாருக்குமே விடை தெரியவில்லை. கருப்பனும் முயன்று பார்த்தான் முடியவில்லை. ‘அய்யாவுக்கு ஊர்ப்பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லி அலுத்துப் போச்சாம், பட்டணத்தில் வாழவேண்டும் என்று சின்னக் குழந்தைமுதலே ஆசையாம் அதுதான்’ என்று கடைசியில் பண்ணையாருக்குப் பதில் தானாகவே ஏதோ ஒரு பதிலைச் சொல்லி எல்லொருக்கும், சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தான் கருப்பன்.

    கிராமத்தை விட்டு கிளம்பும் கடைசி நாள், கருப்பனை சீக்கிரம் வருமாறு தகவல் அனுப்புகிறார் சங்கரய்யா. என்னமோ!.., ஏதோ!..என்று அலரிஅடித்துக்கொண்டு ஓடிவருகிறான் கருப்பன்.

    ‘சொல்லுங்க அய்யா’ எதுக்குக் கூப்பிடிங்க?

    ‘ஒண்ணுமில்லே கருப்பா’ நம்ம பண்ணய கவனிச்சிகிட்டவங்க, ஊர் சனங்க எல்லாருக்கும் என்னன்ன தேவையோ வேண்டுமளவு கொடுத்து விட்டேன். வழி வழியாக் குத்தகை பாத்தவங்க நிலத்த அவங்களயே வச்சுங்கங்கன்னு சொல்லிட்டேன். ஆனா, வாழ்நாள் பூரா என்னோட கூட இருந்த உனக்கு மட்டும், கண்ணனாறு கரையோரத் தென்னந்தோப்பும், கொளத்துமேட்டுக் கழனியும் உனக்கு எழுதிவைத்திருக்கிறேன்!…போதுமா?

    ‘வாயெல்லாம் பல்லாக கருப்பன் பயத்துடன் ‘எனக்கு எதுக்குங்கய்யா!..இவ்வளவு சொத்து, எனக்குன்னு யார் இருக்கா!…நானும் உங்ககோட வந்துர்ரேங்கய்யா, இல்லன்னா நீங்க அன்பா நேசிக்கிற அனாத ஆஸ்ரமத்துக்கு……..என்று இழுக்கிறான்.

    இடைமறித்த சங்கரய்யா, ஆமாமா!….ஆஸ்ரமுன்னு சொன்னோன்ன, முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்திட்டென், பக்கத்து ஊர் ராஜாமடம் கிராமத்திலிருக்கிற அனாத ஆஸ்ரமக் குழந்தைகளை வாரம் தவராம நீ நேரில போய் கவனிச்சுக்க. அங்க என்னோட மனசுக்குப் பிடிச்ச, நா அதிகமா நேசிக்கிற “தங்கம்”னு சொல்ர குழந்தைய நீ கண்ணுங்கருத்துமா பாத்துக்கணும். அதமட்டும் நல்லா கவனிச்சுகிறதுக்குன்னு தனியா உனக்குப் பணம் எடுத்து வைச்சுருக்கேன். ‘உண்மையிலேயே ஏ மேல பாசம் இருக்குன்னா’ நா சொன்னத நீ தவறாம செய்வியா?….

    என்னங்க அய்யா உங்க உப்பத் தின்னு வளந்தவன், நா கொடுத்த வாக்க காப்பாத்தாம இருப்பேனா?. ஆனா ‘எதுக்கு அய்யா திடுதிப்பினு ஊர உட்டு காலி பண்றாகன்னு ஊரு சனம் கேட்டா எப்படி பதில் சொல்றதுன்னுதா தெரியலீங்கய்யா!….

    அதெல்லாம் கடக்கட்டும் நீ இப்ப சொன்னத செய்வியா? மாட்டியா?..சங்கரய்யாவின் முகத்தில் லேசாக கோபக்கனல்.

    இப்படித்தான், சரிங்க அய்யான்னு சொல்லி, அய்யாவும் பட்டணம் போயி ஒரு வருடம் ஓடிவிட்டது…..பழய நினைவுகள் அலைபோல் புரண்டுவர, கருப்பன் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது……….‘சார் போஸ்ட்’ போஸ்ட்மேன் ஒரு லெட்டரைக் கொடுத்து விட்டுச் செல்கிறான். ‘பொருளாதார நெருக்கடி காரணமாக அனாத ஆஸ்ரமத்த நாங்க மூடப்போறோம் அதனால நீங்க உடனடியாக இங்கு வரவும்’ கடிதத்தைப் படித்து முடிக்கிறான் கருப்பன்.

    அங்கு சென்றதும் ஆஸ்ரம நிர்வாகிகள், ‘உங்க முதலாளி எங்க ஆஸ்ரமத்துக்கு நிறைய நன்கொடை அளித்து ‘தங்கம்’ என்கிற குழந்தையையும் எங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். இப்ப எங்களால ஆஸ்ரமத்த நடத்த முடியல, அதனால, குழந்தையையும், அக்குழந்தைக்காக சங்கரய்யா கொடுத்த காசோலையையும் சேர்த்து அவனிடம் ஒப்படைக்கிறார்கள். கருப்பனுக்கு எதுவும் விளங்காமல் தலைஞாயிறு வருகிறான். நடந்த விஷயத்தை அய்யாவிடம் சொல்ல்லாம் என்றால், அவரைத் தேடுவதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல் இரண்டு ஆண்டுகள் கழித்து தங்கத்தின் படிப்பிற்காக, கிராமத்தைக் காலி செய்துவிட்டு தஞ்சாவூரில் செட்டில் ஆகிவிடுகிறான். தங்கத்தை ஒரு நல்ல கான்வெண்டில் படிக்க வைத்து, காலேஜ் முடிச்சு, இப்ப சொந்தமாக ஒரு கம்பெனியையும் நிர்வகிக்ற அளவுக்கு அவன் தரத்தை உயர்த்துகிறான். ‘ஏ அப்பா’, வருஷமெல்லாம் எப்படி நிமிஷமா ஓடிருச்சு’ நினைத்து பெருமூச்சு விட்ட கருப்பனுக்கு தஞ்சாவூரில் பங்களாவுடன் கார், டிரைவர் என்று ஏகப்பட்ட வசதி. ஏழ்மை அகன்றுவிட்டது ஆனால் மனதில் இருந்த நெருடல் அகலவில்லை. சங்கரய்யா எங்கே போனார்?…, எப்படி இருக்கார்?….என்ற விவரம் மட்டும் இன்று வரை தெரியவில்லை. நம்ம வாழ்க்கைத் தரத்த இந்த அளவுக்கு உசத்துனது சங்கரய்யாவோட கருணைதான்னு அடிக்கடி தங்கத்துகிட்டே மட்டும் சொல்வான். ‘யார் இந்த சங்கரய்யா?…’ என்று தங்கம் கேட்டால், ‘நாம இப்படி வசதியா வாழரத்துக் காரணமானவர்” திடீர்னு சன்னியாசம் வாங்கிட்டு எங்கேயோ போய்விட்டார் யாருக்கும் அவரது இருப்பிடம் தெரியவில்லை என்று ஒரு பொய்யைச் சொல்லி வைப்பான். அவன் ஒரு ராஜாமடத்து அனாதை என்பது மட்டும் தங்கத்துக்கு இன்று வரை தெரியாதபடி அவனை வளர்த்து ஆளாக்கி அந்த ரகசியத்தை இன்றுவரை கட்டிக்காத்து வருகிறான். காலம்தான் எப்படி ஓடிப்போச்சு, ஒரு நாள் உண்மையைச் சொல்லிவிடலாம் என்றால் முடியவில்லை.

    பட்டணம் போன சங்கரய்யாவுக்கு கடந்த 45 வருடமாக நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய்குத்திக் கொண்டிருக்கிற அந்த நெருடலுக்கு விடை காண முடியவில்லை. எதற்காக இப்படி அவசரப்பட்டு ஊரைக் காலிசெய்தோம்!….பட்டணம் போனபிறகு சொந்த கிராமத்துக்கு ஒரு தடவைகூட நான் திரும்ப வில்லையே, கருப்பனும், ஊர்மக்களும் என்னவானார்கள். ஊர்மக்களின் ப்ரச்சினைக்குத் நீதி வழுவாமல் தீர்ப்பு சொன்னோமே, ஒருவருக்குக் கூட நான் என்ன ஆனேன் என்ற கவலையில்லையா?…ஒன்றுக்கும் பதில் தெரியாமல் ஏதோ மனநிலை பாதிக்கப் பட்டவன் போல தாடிமீசை மழிக்கப்படாமல், மன அமைதிவேண்டி தலயாத்திரை சென்று கொண்டிருந்தார் சங்கரய்யா. எல்லா ஊர்களுக்கும் சென்று விட்டு தள்ளாத 80 வயதில், ‘தலைஞாயிறு தலைவர்’ என்ற பேரெடுத்த சங்கரய்யா கடைசியாக 48 வருடம் கழித்து தஞ்சாவூருக்கு அருகே வந்தடைந்தார். இங்கே சில காலம் தங்க முடிவு செய்தார். இங்கிருந்து 7 கிலேமீட்டர் தூரத்தில்தான் கடந்த கால வாழ்வில் கூட இருந்த கருப்பன், தற்போது வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டார்.

    அன்று இரவு முழுவதும் புரண்டு,புரண்டு படுத்ததுதான் மிச்சம் தூக்கம் வரவில்லை.

    அப்பப்பா, போதுமடா இந்த நெருடல், இந்த அந்திம காலத்தில் எப்படியாவது கருப்பனைப் பார்த்து நம் விஷயத்தை அவனிடம் சொல்லி விட்டு ஒரு புது வாழ்வை இனிமேலாவது தொடங்கவேண்டும் என்கிற வைராக்கியம் காலம் கடந்து இந்த வயாதான காலத்தில் சங்கரய்யாவின் மனதுக்குள் அனலாய்ப் பொங்கியது. மீண்டும் மீண்டும் மனதில் அதே நெருஞ்சிமுள் நெருடல்.

    அடுத்த நாள் காலை,

    தள்ளாத வயதில் அடையாளம் தெரியாத சங்கரய்யா வீறுநடைபோட்டு கருப்பனைச் சந்திக்கச் சென்றார். பெரிய பங்களாவின் கேட்டில் பொருத்தியிருக்கும் காலிங்பெல்லை அழுத்த, வாட்ச்மென் ‘யாரப்பா அங்கே’ ஒன்றும் பதிலில்லை. டாபர்மென் நாய் கட்டுக்கடங்காமல் குரைத்துக் கொண்டேயிருக்கிறது. கிட்டேவந்து அதட்டலுடன் ‘இங்கே பிச்சைபோட யாருமில்லை போப்பா போ வேறேஇடம் பார்’.

    ஈனமான குரலில் ‘ஏம் பேரு சங்கரய்யா’ நான் கருப்பண்ணணைப் (கருப்பன்) பார்க்க வேண்டும்.

    ‘அண்ணன இப்ப பாக்கமுடியாதுப்பா நீ போய்ட்டு அப்புரமா வா’, வேறு வழியில்லாமல், சில நிமிட போராட்டத்துக்கு பிறகு உள்ளெ சென்ற வாட்ச்மென் ‘யாரோ சங்கரய்யாவாம்!…’ உங்களப் பார்க்க பிடிவாதமா பிச்சக்காரன் மாதிரி கேட்டருகில தவங்கிடக்கிறாரு. நானும் வெரட்டிப் பார்த்தேன், இங்கிருந்து நகர்றதா மாதிரி தெரியல!….

    பெயரைக்கேட்ட அதிர்ச்சியில் கருப்பன் தலைதெரிக்க கேட்டருகே ஒடுகிறான். புரிந்து கொள்வதற்கு சில நொடிகள் ஆனாலும், தடாலென்று அவர் காலில் நெடுசான்கிடையாக விழுந்து ‘அய்யா உள்ள வாங்க, எங்கய்யா போனீங்க இவ்வளவு வருஷமா?…, உங்களுக்காகத் தானெ இந்த உசிரு ஓடிக்கிட்டிருக்கு’ படபடன்னு கேள்விய அடுக்கிகிட்டே, அவரை மெதுவாக கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைக்கிறான் கருப்பன்.

    அன்றிரவு முழுவதும் கடந்த கால வாழ்க்கைப் பயணங்களை இருவரும் அசைபோடுகிறார்கள். ‘அய்யா நீங்க இனிமே எங்கேயும் போகவேண்டாம், நீங்க ஊர விட்டுப் போகும்போது சொன்னது நினைவிருக்காங்கய்யா!…நீங்க அன்பா நேசிச்ச ராஜாமடம் அனாதப்பையன் ‘தங்கம்’ இப்ப என்னோட பையனாயிட்டான். நீங்க கொடுத்த பணத்த வெச்சு, அவன் மெத்தப் படிச்சு சுயமா தொழில் செய்யறான். உங்களப் பத்தி அவங்கிட்ட நிரய சொல்லியிருக்கேங்கய்யா, நீங்கதான் என்ன வளர்த்து ஆளாக்கிய தெய்வம்னு சொல்லி வச்சிருக்கேன், தொழில் விஷயமா சென்னப்பட்டிணம் போயிருக்கான், நீங்க வந்த விஷயத்த அவன் காதில போட்டிருக்கேன், உடனே கிளம்பி வர்ரதா சொல்லியிருக்கான்’ அவன் வரட்டும் மிச்சதை பேசிக்கலாம். நீங்க போய் அந்த ஏசி ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கங்க, விடிஞ்சதும் பேசிக்குவோம்.

    இரவு முழுதும், ஏசி ரூம் இதமா இருந்தாலும், நெஞ்சில் இருந்த நெருப்பின் கனப்பு அடங்கவில்லை, மன உளைச்சலில் சங்கரய்யா கண்ணயரவில்லை. விடிந்தவுடன் கருப்பனும், தங்கமும் ஒண்ணா இருக்கும்போதே விஷயத்த சொல்லலாமா? வேண்டாமா? மீண்டும் அந்த நெருசிமுள் நெசில் கடப்பாரையாக குத்துகிறது.

    விடிந்ததும் சங்கரய்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வெளிகேட்டிற்கும் உள்வாசலுக்கும் உலாத்திக்கொண்டே தங்கத்தின் வரவுக்காக பரபரப்பாயிருந்தார்.

    ஏர்போர்ட்டிலிருந்து தங்கத்தின் காரை டிரைவர் சாமிக்கண்ணு வேகமாக வீடு நோக்கி ஓட்டி வந்து கொண்டிருக்கிறான்.

    டிரைவர் தம்பி!.., ஊர்ல என்னப்பா விஷேஷம்!…..

    சொல்ரத்துக்கு ஒண்ணுமில்லீங்கய்யா, ஏதோ ஓடுதுங்கய்யா!… ‘ஆமா நீங்க ஊருக்குப்போகும்போது வரதுக்கு ஒருவாரம் ஆகும்னு சொன்னீங்க, இப்ப அவசரமா திரும்பீட்டீங்க, ஏதாவது மறந்து வீட்ல வெச்சுட்டீங்களாய்யா?…டிரைவர்

    அது ஒண்ணுமில்லப்பா….அப்பாவோட பால்ய சினேகிதன் வந்திருக்காராம், உடனே நான் அவர பாக்கணுமாம், அவசரமா வரச்சொல்லி, அப்பா உத்தரவு போட்டுருக்காங்க, அதான்…பாதில திரும்பிட்டேன்.

    சங்கரய்யா இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் அலைவதைப் பார்த்த வாட்ச்மேன் ‘இன்னும் கொஞ்ச நேரத்துல அய்யா வந்துருவாரு’, அய்யாவோட கார் தெருமுனைக்கு வரும்போதே எங்க டாபர்மெனுக்குத் தெரிந்துவிடும், சங்கிலியைப் பிய்த்துக்கொண்டு கத்த ஆரம்பிச்சுடுவான்…வாட்ச்மென் பெருமைப்பட்டுக்கொள்கிறான்.

    ‘அவன் சொல்லி அரைமணி ஆகியும், நாய் இன்னும் குரைக்கவில்லையே…..மீண்டும் சங்கரய்யாவுக்குப் பதற்றம்.

    சட்டென்று மூன்று அடிஉயரம் பாய்கிறது டாபர்மென், ‘வாவ்’ ‘வாவ்’ அடிவயிற்றிலிருந்து வரும் அதிரடிக்கும் காட்டுக் கூச்சல், வாட்ச்மேன் ஓடிவந்து வாசல் கேட் திறந்ததும், வேகமாகப் உள்ளே நுழையும் கப்பல் போன்ற ‘கண்டெஸ்ஸா’ காரின் சப்தம்.

    பத்தடி தூரத்தில், வாட்ச்மேன் காரின் கதவைத் திறந்ததும், தங்கத்தின் முகத்தைப் பார்த்த சங்கரய்யாவின் உயிர்நாடிகள் கொதித்து எழும்புகின்றன, தள்ளாத வயதில் கட்டுக்கடங்காத உணர்ச்சிப் பெருக்கில், ரத்தம் சூடேறி இடிதாக்கிய தென்னைமரம் போல் பொத்தென்று சாய்கிறார்.

    ‘அய்யா என்னாச்சுங்கய்யா’ கருப்பன் பதறியடித்துக்கொண்டு, சங்கரய்யாவின் சட்டையைப் பிடித்து உலுக்கிறான்.

    சங்கரய்யாவின் விழிகள் இரண்டும் செருகிக் கொள்ளுகிற நேரம், அவரின் உள்ளம் 48 வருடத்திற்கு முன்னால் தாவிச் செல்கிறது.

    அவர் வாய் திறந்து…………

    ‘ஏ ‘தங்கம்’ நீ தான்டா!…., நீ தாண்டா!……என்னோட வாரிசு எனக்கும் சித்ராவுக்கும் பிறந்தவன்’ என்று வேகமாக உரக்கக் கத்த நினைத்ததை…………சட்டென்று ஸ்ட்ரோக் (Stroke) எடுத்துக்கொண்டு சங்கரய்யாவின் வாயைக் கோணச்செய்து இவ்வுலகை விட்டு வழியனுப்பியது. கருப்பனின் மடியில் தலைவைத்து கண்குத்திய நிலையில் மூன்று நிமிடத்துமுன் சங்கரய்யா செத்துப்போயிருந்தார். பிணமாக இருந்த சங்கரய்யாவின் முகத்தில் அவிழ்க்க முடியாத புதிர் நிறைந்த முகத்துடன் ரத்தம் உறைந்து கொண்டிருந்தது. இளவயதில் மீனவப் பெண் சித்ராவிடம் தன் மனதைப் பரிகொடுத்து, அதற்குப் பரிசாக அவள் தங்கத்தைப் பெற்றுக்கொடுத்துவிட்டு அவளும் இறந்து போன சம்பவம் சங்கரய்யா மட்டுமே அறிந்த ரகசியம்.

    தகப்பனின் பூத உடலை தன் தோளிலே சுமக்கிறோம் என்றறியாத மகன் தங்கத்தும், அவனை வளர்த்து ஆளாக்கிய கருப்பனுக்கும் ‘சங்கரய்யாவின் வாழ்க்கை ரகசியமும், பொய்யான வாழ்க்கையும் அவர்களுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமே புரியாமல், எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கெளரவத்துடன் கவரிமானாக இருந்து ஊர் மக்களுக்குத் தீர்ப்புச் சொன்ன சங்கரய்யாவின் வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்ப்பு சொல்ல உண்மை அறிந்தவர் யாருமில்லை. சங்கரய்யாவின் வாழ்க்கை ரகசியம் அவரின் ‘பொய் வாழ்க்கைக்கு’ முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-25

    பெருவை பார்த்தசாரதி

    நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்களை சந்திக்கின்றோம்?…….ஒன்றா இரண்டா எளிதில் எண்ணி விடமுடியுமா? வாழ்வில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மாற்றங்களையும் நினைத்துப் பார்க்கக் கூட இங்கே நேரம் கிடைக்கவில்லை, ஒரு நொடி யோசிப்பதற்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்து விடுகிறது என்பதே உண்மை. அன்றாடப் பணிகளில், உணவில், உடையில், வீட்டில், அலுவலகத்தில் இன்னும் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் தினமும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆக மனிதன் விரும்புகின்ற ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு நொடியிலும் ஏதாவதொரு மாற்றத்தை எதிர்நோக்கியே சென்றுகொண்டிருக்கிறான் என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது.

    நமது வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த பெரியோர்களைக் கேளுங்கள், ஒரு காலத்தில் அவர்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதையே விரும்புவார்கள். உணவை இலையில் பரிமாரிய பிறகு, அவசரப்படாமல் நிம்மதியாக, மெதுவாக மென்று நிதானித்துச் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறி, நேரமின்மை காரணமாக நின்று கொண்டே சாப்பிடும் மாறுதல். கால அவசரத்தின் கட்டாயத்தால், சாதாரண உணவகமெல்லாம் துரித உணவகமாக (Fast Food) மாறிவிட்டது, அங்கே உட்க்கார நினைத்தாலும் நாற்காலி கிடைக்காது. தோசை மாறி இப்போது பிசாவாகிவிட்டது(pizza), இட்லிக்கு பதில் பர்கர். நவீன உடைகள் நுழைந்து, பாரம்பரிய உடைகளான பாவாடைதாவணிகள், வேட்டிகள் எல்லாம் பரண் ஏறிவிட்டன. வீட்டில் உள்ள பொருட்களில்தான் எத்தனை மாற்றம், ஒரு காலத்தில் ரேடியோ, பிறகு இடத்தை அடைக்கக்கூடிய மிகப்பெரிய தொலைக்காட்சிப் பெட்டி, இவையெல்லாம் மாறி, காலண்டர் போல சுவற்றில் மாட்டகூடிய TV, கையடக்கக் கணிணி மற்றும் கைபேசி எல்லாம் வந்து விட்டது. இந்த மாற்றங்கள் பின்வரும் நட்களில் எப்படி இருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்கமுடியாது. உதாரணமாக, 20 வருடங்களுக்கு முன்னால் கைபேசி மற்றும் SMS பற்றி பேசியிருந்தால் ‘முட்டாள்’ என்ற அடைமொழிதான் நமக்குக் கிடைத்திருக்கும்.

    நியூமராலஜி என்ற ஒன்று நம்மை ஆட்கொண்டபிறகு மனிதர்களின் பெயரிலேதான் எவ்வளவு மாற்றங்கள். முன்பு ஒருவரது பெயரை கேட்டமாத்திரத்திலேயே எழுதிவிடலாம், தற்போது சரியான எழுத்துக்களைத் (spelling) தெரிந்துகொண்டபிறகுதான் எழுதமுடியும். இப்பொழுதெல்லாம் ‘அங்காடி’, ‘கடை’ என்ற பெயர்களெல்லாம் அநாகரீகமாகி, “அகம்” என்ற வார்த்தை அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நூலகம், படிப்பகம் என்பதுபோல், அனைத்துப் பெயர்களையும் மாற்றி பாலகம், முடிதிருத்தகம், தேநீரகம், செய்தித்தாளகம், மருந்தகம், நகலகம், இப்படியெல்லாம் மாற்றம். நல்ல வேளையாக பஞ்சர் ஒட்டும் கடைக்கு “ஒட்டகம்’’ என்று பெயரிடாமல் இருப்பது சந்தோஷமளிக்கிறது. நல்லதோ, தீயதோ ஒரே அரசாங்கத்தை மக்கள் விரும்புவதில்லை, மக்கள் மனதில் மாற்றம் நிகழும்போது அரசியலையும் விட்டுவைப்பதில்லை, அவ்வப்போது அரசாங்கம் மக்களின் மனதுக்கு ஏற்ப மாற்றப்படுகிறது.

    இயற்கை என்றுமே மாறுவதில்லை, நாம்தான் இயற்கையோடு மாறுபட்டு நிற்கிறோம். இயற்கையில் ஏற்படும் மாற்றத்தைத் வெளியுலகுக்கு கொண்டு வருபவர்தான் விஞ்ஞானி என்று புகழப்படுகிறார். சாதாரண மனிதரிலிருந்து சற்று வேறுபட்டு மாற்றுச் சிந்தனையோடு திகழ்பவர்களைத்தான் ‘ஞானி’, ‘மேதை’, ‘அறிஞன்’, ‘கவிஞன்’, ‘ஓவியன்’, ‘கலைச்சிற்பி’, ‘சிந்தனைச் சிற்பி’ என்றெல்லாம் வரலாறு போற்றுகின்றது. ஒவ்வொரு நொடிக்கும் இன்றைய உலகில் அறிவியலில் வியக்கத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டேஇருக்கிறது. இங்கே நமக்குக் கிடைக்கின்ற பொன்னான நேரமெல்லாம், வீணே கழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், உலகின் ஒரு மூலையில் ஒருவர் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். ஒரு நூற்றாண்டுக்கு முன் அங்கே புயல் அடித்தது என்றும் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். இதற்கு அடிப்படையாக அமைவது மனிதனுக்குக் கிடைத்த அற்புத “சிந்தனை”. இப்படிப்பட்ட மாற்றுச் சிந்தனை என்பது லட்சத்தில் ஒருவருக்கே உதிக்கின்றது. நாம் உபயோகப்படுத்தும் எத்துணையோ பொருட்கள் எளிதில் கெட்டுப் போகின்றன, ஏன் இவை கெட்டுப் போகின்றன என்று யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறார்களா?…இடைவிடாது இந்தச் சாதாரண கேள்வியைத் தனக்குள் கேட்டுக்கொண்டே இருந்த ஒருவன் உலக அளவில் அறியப்பட்டான். அவன்தான் லூயிஸ் பாஸ்டர். இதேபோல இயற்கையை ரசிப்பது கூட மற்ற யாவரும் போல் சாதாரணமாக சிந்திக்காமல், மாற்றுச் சிந்தனையோடு, ஏன்?..எதற்கு?…எப்படி?…என்ற வினாவோடு வானத்தில் தோன்றும் மாற்றங்களை ஒரு இளைஞன் சிந்திக்கிறான். பஞ்ச பூதங்களின் தோற்றங்கள் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிகின்றன. குறிப்பாக ஒளியைப் பற்றியே அவனது சிந்தனை வட்டமிட்டுக்கொண்டேயிருந்தது. சூரிய ஒளியில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொரு நொடியும் சிந்தித்துக் கொண்டே இருந்தான். மாற்றுச் சிந்தனை மூலம் ஏழு ஆண்டுகள் கடின ஆராய்ச்சி செய்து யாரும் அறிந்திராத புதிய கண்டுபிடிப்பின் மூலம் ‘நோபல் பரிசு’ பெறுகிறான். ஒவ்வொரு வருடமும் ஒரு வயது பூர்த்தியாவது போல், தம்முள், தம்மனதுள் வித்தியாசமாக எழும் கேள்விகளுக்கு விடையாக “இராமன் விளைவு” என்ற பதிலை உலகம் அறியச்செய்தான். ஒரு சாதாரண அரசாங்க ஊழியனாக இருந்த இராமன் என்வரை அறிவியல் விஞ்ஞானியாக உலகமறியச்செய்து, பாரதத்தின் மிக உயரிய விருதான ‘பாரத்ரத்னா’ விருதையும், ‘சர்’ பட்டத்தையும் பெற்றுத்தந்தது. இந்திய அரசின் முன்னாள் குடியரசுத்தலைவரும், விஞ்ஞானியுமான மேதகு அப்துல் கலாமின் “இந்தியா 2020” என்ற கனவை நனவாக்க, தற்போதிருக்கும் இந்தியாவின் சூழ்நிலையை ஒட்டுமத்தமாக மாற்றவேண்டும் என்று அனுதினமும் அறைகூவல் விடுக்கிறார். இத்தகய வலுவான மாற்றத்திற்கு, மாற்றுச் சிந்தனா சக்தி உள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும் என்கிறார்.

    இப்படி ஒவ்வொன்றிலும் மாற்றத்தை விரும்புகின்ற மனிதர்கள் தம்முடைய வாழ்க்கையில் கடைபிடிக்கின்ற தவறுகளையோ, பிறருக்கு ஒவ்வாத பழக்கவழக்கத்தையோ மாற்றிக்கொள்ள மட்டும் விரும்புவதில்லை. அப்படி யாராவது ஒருவர் நம்முடைய குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் நட்பு முறிந்து போகுமே தவிர பழக்கம் மாறாது. தவறு என்று தெரியும் போது அதைத் திருத்திக்கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகிறது என்பதற்கு இதிகாசத்திலிருந்து இதற்கு ஒரு உதாரணமொன்றைச் சொன்னால் பொருத்தமாக என்று நினைக்கிறேன்.

    ஒரு இளைஞன் காலத்தின் கட்டாயத்தால், பிறரை இம்சித்து கொள்ளை அடித்து, அவர்களிடம் இருக்கும் பொருட்களை கவர்ந்து சென்று தனது குடும்பத்தை மகிழ்வித்து வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் கொள்ளை அடிப்பதற்கு ஒன்றும் கிடைக்காததால், வழியில் சன்னியாசைப்போல நடந்து வரும் ஒருவரை வழிமறித்து அதட்டலாக அவரிடம் ‘உபயோகமான பொருள் ஏதேனும் உன்னிடம் உள்ளதா?..’ என்று கேட்கிறான்.

    அதற்கு அவர் நானோ சன்னியாசி, என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் ஒரு உபதேசம் ஒன்று இருக்கிறது, அதைத் தரட்டுமா?…என்று சொல்கிறார்.

    கொள்ளையனும் ‘சரி சொல்லும்’ என்கிறான்

    சன்னியாசி அவரிடம் “நீ கொள்ளை அடிக்கும் பொருட்களை உமது குடும்பத்தார் ஏற்றுக் கொள்கிறார்களா?..

    மகிழ்ச்சியாக ஏற்கின்றனர்….என்கிறான் கொள்ளைக்காரன்.

    இந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், உன்னோடு பங்கிட்டுக்கொள்ளும் உனது குடும்பத்தார், உனக்கு நேர்கின்ற துன்பத்திலும், பாபத்திலும் சரிபாதியை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?…என்று கேட்டு வந்து என்னிடம் சொல் என்கிறார் சன்னியாசி.

    மறுநாள் சன்னியாசியைத் தேடிவந்த கொள்ளைக்காரன், ஒரு மாறுதலான முகத்துடன், முனிவரே நீங்கள் சொல்வது சரிதான், குடும்பத்தார் யாவரும் இதற்கு உடன்பாடில்லை. ஒருவரும் எனக்கு நேர்கின்ற துன்பத்திலோ, பாபத்திலோ பங்கெடுக்க விரும்பவில்லை என்று கூறுகிறான்.

    பிறகு அந்த முனிவர் (நாரதமுனி) அவனுக்கு மந்திரோபதேசம் செய்து அவனை மாமுனிவராக்கிய கதை எல்லோருக்கும் தெரியும். கொள்ளைக்காரனாக இருந்த ரத்னாகரன், தன் மனதை மாற்றிக்கொண்டு, தவமகிமையால் வால்மீகி என்ற பெயர்பெற்று, ‘இராமாயணம்’ என்ற அழியாக் காப்பியத்தைப் படைத்தான்.

    ஒவ்வொரு செயலிலும், நிகழ்ச்சியிலும் அவ்வப்போது மாற்றத்தை விரும்பும் சாதாரண மனிதர்கள், வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளில், பண்புகளில் தம்மை மாற்றிக் கொள்ள முன்வருவதில்லை. தற்கால சூழ்நிலைக்கேற்றவாறு, தமது பிள்ளைகளை வளர்க்கும் முறைகளிலும் பெரிய அளவில் மாற்றத்தையும் கொண்டுவர விரும்புவதில்லை. இன்றய வாலிபர்களிடம் காணும் தகாத பழக்கவழக்கங்களுக்கெல்லாம் முழு முதற்காரணம் அவர்கள் இளம்பிராயத்தில் வளர்க்கப்படுகின்ற முறைகளில் காணும் முரண்பாடுகள் என்பது பெரியோர்களின் வாதம். ஒரு மனிதனின் சுபாவத்தைத் தீர்மானிப்பது, அவனுடனை ஜீன் என்பது இப்போது பழய கதையாகிவிட்டது. மனிதனுடைய பிறப்பும், வளர்ப்பும் ஒன்றோடென்று பின்னிப் பிணைந்தது என்பது தற்போதைய கண்டுபிடிப்பு. நம் ஜீன்களில் சுவிட்ச் ஒன்று உள்ளது என்றும், அதனை ப்ரமோட்டர் என்று அழைக்கிறார்கள். இதனுடன் என்ஹான்சர் என்ற ஒன்றும் சேர்ந்தும் ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்த சுவிட்ச் எப்போது போடப்படுகிறது, அணைக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே பிறப்பின் ரகசியம் வெளிப்படுகிறது. வெறும் பிறப்பினால் மட்டும் மனிதன் உருவாவதில்லை, மற்ற விஷங்களை அனைத்தையும் தீர்மானிப்பது வளர்ப்பினால் ஏற்படும் சூழ்நிலையேதான் என்று ஒரு ஆய்வரிக்கை கூறுவதாக தினத்தந்தியில் வெளியாகியிருந்த செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பது நல்வாழ்க்கைக்கு உதவாது. ஒரு காலத்தில் ஒற்றுமையுடனும், ஒழுக்கத்துடனும், மனித நேயத்துடனும் வாழ்ந்த கிராமிய வாழ்க்கை கூட இன்றைக்கு மாறி நாகரீகத்தால் சுற்றுப்புறச் சூழலும், மனதும் கூட மாசுபடத் தொடங்கிவிட்டது. அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்த அபரிமிதமான வளர்ச்சியினால் குக்கிராமம் கூட காலமாற்றத்தில் சிக்கி உருக்குலைந்து வருகின்றன. குளங்கள், ஆலயங்கள், பூங்காக்கள், பசுமை நிறைந்த வயல் வெளிகள் இவைகள் தரும் சுகத்தினால் இன்புற்று இருந்த காலம் மாறி இயற்கை நமக்கு அளித்த கொடைகளை மற்ற உயிரிடத்திலிருந்து பிடுங்கி நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தால் மனிதர்கள் மன அமைதியின்றி வாழ்கின்றனர் என்பதை சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது எடுத்துச் சொல்கிறார்கள். ஆன்றோர்களும், சான்றோர்களும், மாமனிதர்கள் என்று போற்றப்படுகின்ற மகான்களும், நல்வாழ்க்கைக்கு வேண்டிய மாற்றத்தையும், அவசியத்தையும் காலம் தவறாது நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    காலச்சக்கரத்தோடு, வாழ்க்கைச் சக்கரமும் விடாமல் சுழன்று கொண்டிருக்கும் போது, அதனோடு மாற்றங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற உலக நியதியை, எல்லொரது வீட்டிலும் அழகுக்காக சுவற்றிலே தொங்கவிடப்பட்டிருக்கும் “கீதாச்சாரம்’’ தெளிவுபட ‘மாற்றத்தின் நியதியை’ என்றென்றும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். வாழ்க்கை முறையில் மாற்றம் என்பது வரவேற்கத்தக்கதே, ஆனால் அந்த மாற்றம் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதமாகமும், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

    தொடரும்…………

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-24

     பெருவை பார்த்தசாரதி

    சென்ற மாதம் வெளிவந்த 23 வது தொடருக்குக் கிடைத்த வல்லமை வார விருது, என்னை மேன்மேலும் சிந்திக்க வைத்துவிட்டது. விருதை வழங்கிய எழுத்தாளர் மதிப்பிற்குறிய திவாகர் அவர்கள், தனது முன்னுரையில் “நேரத்தின் முக்கியத்துவத்தை”ப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தபோது, நேரமும், காலமும் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள, இந்த ‘பொன்னான நேரத்தை’ இந்த வாரத் தொடருக்காக அற்பணிக்கிறேன்.

    நேரம் கிடைக்கும் போது, அதைத் திட்டமிட்டுச் செலவிட்டால் அதன் பலனுக்கு எல்லையில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் அனுபவத்தில் உணரமுடியும். நேரத்தை நல்வழியில் செலவிடும்போது, பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது, நண்பர்களின் தொடர்பு விரிவடைகிறது, உறவினர்களுக்கிடையே இருந்த உறவு மேலும் பலப்படுத்தப்படுகிறது, புதிய சுற்றத்தார்களின் நட்பு கிடைக்க வாய்ப்புகள் வருகிறது. இதே நேரத்தை வாசிப்பிலே செலவிடும்போது, பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளமுடிகிறது. நேரத்தைக் கணக்கிட்டு, சரியாகப் பயன்படுத்துபவர்கள் “நேரம் போவதே தெரியவில்லை’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா?… ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வழிகள் பல இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே நேரத்தைச் சேமிக்க முடியும். நேரத்தைச் சிக்கனமாக்கி பயனுள்ள வழிகளில் சிந்தனையைச் செலுத்தும்போது, சிறிது நேரமாவது, இப்பிரபஞ்சத்தில் சந்தித்துக்கொண்டிருக்கும் தொந்தரவுகளிலிருந்து தற்காலிக விடுதலை கிடைக்கும் அனுபவத்தை அனைவரும் உணரமுடியும். பரபரப்பான நம் வாழ்க்கையில், எல்லாவிதமான ஆடம்பரமும் அத்தியாவசியமாகிவிட்ட இன்று, எதையுமே விட்டுக்கொடுக்கும் மனோபாவம் இல்லாமல் ‘நேரம்’ என்பது பல சமயங்களிலெ வீணே வெகுசீக்கிரம் கழிந்துவிடுகிறது என்பதும் உண்மை.

    இன்றைக்கு, கிடைக்கும் நேரத்தில் நாம் அதிகமாக செலவிடுகின்ற இடம் இணையதளம், பொதுவாக அனைவரின் மனதையும் வெகுவாகக் கவரக்கூடிய தன்மையைப் பெற்றது. ஏனென்றால் வேறு எங்கும் தேடியது, இங்கு தேடாமலே கிடைக்கிறது. இவ்வாறு பயனடைபவர்கள், பயனை முழுவதுமாகப் பெற்றபின், தங்கள் கருத்துகளை பதிலாகத் தெரிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் எல்லா வலைப்பூக்களிலும் “comments please” என்ற வாசகத்தைப் படைப்பாளர்கள் பதித்திருப்பார்கள். தனக்கு வேண்டிய அத்துணை தகவல்களையும் முழுமையாகப் பெற்ற பிறகு கூட நன்றி தெரிவிக்காமல் ‘பதில்’ என்கிற விசையை அழுத்துவதற்கே நேரமில்லை சார்’? என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் தமக்கு வரும் அஞ்சல்களை திறந்து பார்ப்பதே கிடையாது. நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு,பல்லாயிரக்கணக்காண அஞ்சல்கள் பார்வைக்காக (Mail-Inbox) தேங்கியிருக்கின்றன, அவை அனைத்தையும் பார்க்க வேண்டுமானால் இனி மறுபிறவி எடுத்தால் கூட முடியாது. அஞ்சல் எழுதுவதாவது? படிப்பதாவது?..அலுவலக வேலை, வீட்டு வேலை, குடும்பச்சுமை, இத்யாதிகள்… இதற்கே நேரம் போதவில்லை, சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் தூங்குவதற்கே நேரமில்லை, இதற்கெல்லாம் ஏது நேரம்?…….என்று அலுத்துக் கொண்டு மேட்ச் (cricket) பார்ப்பதில் மூழ்குபவரும் இருக்கிறார்கள்.

    யதார்த்த எழுத்தாளர் திரு லேணா தமிழ்வாணன் அவர்கள் நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு, நேரத்தைத் திட்டமிட்டு செலவிட பலவழிமுறைகளுடன் கையடக்கமாக ஒரு சிறிய புத்தகம் வெளியிட்டிருக்கிறார், நேரமிருந்தால் வாங்கிப் படித்துப் பயனை நேரத்தின் பயனை அனுபவிக்கலாம். நான் படித்த துணுக்கு ஒன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒருவரிடம் எதைப் பற்றிக்கேட்டாலும் ‘நேரமில்லை’, ‘நேரமில்லை’ என்பாராம். இதற்கு அவருடைய நண்பர் ஒரு உபாயம் சொல்லியிருக்கிறார். உன்னுடைய மனைவி நிறையப் படித்தவர் ஆயிற்றே, உன்னிடம் இருக்கும் சில பொருப்புகளை அவரிடம் ஒப்படைத்து விட்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாமே. அவசியம் ஏற்ப்பட்டால் அவரையே ‘பர்சனல் செகரட்டரியாக’க் கூட நியமிக்கலாம் என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, ‘என்ன உங்கள் மனைவி உங்களுக்கு உதவிகரமாக செயல்படுகிறாரா’?.. என்றாராம். அதற்கு அவர் எல்லாம் சரியாய்ச் சென்றுகொண்டிருக்கிறது, என்னுடைய பாதி வேலையை அவளே கவனிக்கிறா…இப்ப அவ்வளவா!….நேரங்கறது……ஆனா……என்று இழுத்திருக்கிறார். என்ன ஆனா, ஆவன்னா பதில் சொல்லுங்கள் என்று நண்பர் அதட்டலாகக் கேட்டதற்கு, அவர் கூறிய பதில்: ‘அவ என்னோட வேலைகளைச் செய்யும் போது, 24 மணி நேரமும் அவகூட நான் இருப்பதுதான் மிகவும் கொடுமையானது’ என்றாராம்.

    நம் மனதைக் கவருகின்ற ஒரு முக்கியச் செய்தியைப் பற்றி படிக்கும்போது, அச்செய்தியைப்பற்றி எங்காவது ஓரிடத்தில் நேரம் கிடைக்கும்போது குறித்து வைத்தோமானால் அது என்றைக்காவது ஒருநாள் எழுதுவதற்கு உதவும். நேரம் போகவில்ல்லை, வேறு எதுவும் வேலையுமில்லை, என்ன செய்வது, இப்படி தூக்கம் வராமல் படுக்கையில் புரள்பவர்கள் உடனே பேனாவை எடுத்து எதையாவது மனதில் தோன்றுபவைகளை எழுதிப் பாருங்கள், உடனே தூக்கம் வந்துவிடும். நமது குழந்தைகள் சில சமயம், புத்தகத்தை கையில் பிரித்தபடி வைத்துக்கொண்டு அப்படியே தூங்குவது இதற்கோர் உதாரணம். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் கையில் எப்போதும் ஒரு பேனாவும், சிறிய நோட்டுப் புத்தகமும் இருக்கும். எங்காவது பொதுக்கூட்டங்களில் பங்கு பெறும்போது, சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும், சிறு சிறு குறிப்புகளையும், நீதிக்கதைகளையும் ஞாபகம் வரும்போதெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, சந்தர்ப்பம் வரும்போது, தனது உரையில் அச்சிறு குறிப்புகளை நினைவு கூறும் நற்பழக்கம் அவரிடையே இருந்தது.

    தங்களுக்கு தெரிந்த ஒரு தகவல், மற்றவருக்கு தெரிந்திருக்கும் என்று யூகிக்க முடியாது, அதேபோல், மற்றவர்களுக்கு கிடைக்கும் எல்லா தகவல்களையும் நாமும் அறிந்திருக்க வாய்ப்பில்லையாதலால், அறிந்தவைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளும்போது, ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க வழிவகுக்கிறது. இதற்கெல்லாம் நேரம் கிடைக்கும்போது நூலகத்தையும் நம்மோடு இணைத்துக் கொண்டு நிறைய படிக்கவேண்டியிருக்கும். படிப்பதற்கு நேரமில்லை என்று சொல்வதைவிட, கிடைக்கும் நேரத்தை படிப்பதற்குப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்!………பண்டித நேரு அவர்களும், அண்ணல் காந்தி அடிகளும் நேரம் தவறாமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள். அண்ணல் பிறந்து ஒரு நூற்றாண்டு முடிந்து விட்டது, பிறந்த நாளையும், இறந்த நாளையும் கொண்டாடத் தவறியதில்லை. நமெகெல்லாம் காந்தியை நினைவிருக்கிறது, ஆனால் ‘காந்தியக்கொள்கை’ நினைவிருக்கிறதா?.. அண்ணல் அவர்கள் மனிதர்கள் மத்தியிலே தெய்வமாக வாழ்ந்தவர், இந்தியாவின் பிரதமர் பதவிக்கோ, ஜனாதிபதி பதவிக்கோ ஆசைப்படவில்லை, கடைசிவரை எளிமையாக ஒரு சந்நியாசியைப் போல வாழ்ந்து காட்டியவர். நேரம் தவறாமை என்பதும் அவரது கொள்கையில் ஒன்று. டால்ஸ்டாயின் பண்ணையில் பணிசெய்தபோது, பள்ளிச் சிறார்களுக்கு நேரத்தைச் செலவிடுவதற்கு திட்டமிட்டுக் கொடுத்தவர். பள்ளி நேரம் தவிர, மற்ற நேரங்களில் குழந்தைகள் ஏதாவதொரு கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்ரீ கால்லென்பாக், ஸ்ரீ பிரக்ஜி தேசாய் போன்றவர்களிடம் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக் கொண்டார். பள்ளிக் குழந்தைகள் ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் இருக்க, தச்சுவேலை, நூல்நூற்றல், சமையல் போன்ற கைத்தொழிலை பள்ளிச் சிறார்களுக்குப் பயிற்றுவிக்க ஊக்குவித்தார். ஒருமுறை பொதுக்கூட்டத்துக்குச் செல்ல சற்று தாமதமாகி விட்டது. அவர் செல்லும் வழியில் ஒரு சைக்கிளில் சென்றவரிடம் அந்த சைக்கிளை இரவல் வாங்கி அவரே சைக்கிளை மிதித்துச் சென்று சரியான நேரத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக ஒரு நூலில் படித்திருக்கிறேன்.

    இதே போல் பண்டித நேரு அவர்கள் தனியாக லிஃப்டில் மாட்டிக்கொண்டுவிட்டார். பிறகு லிஃப்ட் சரிசெய்யப்பட்டு, வெளியில் வரும்போது அருகிலிருக்கும் அதிகாரிகளிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அவர் போட்ட உத்தரவு என்ன தெரியுமா? “இனிமேல் எல்லா லிஃப்ட்களிலும் தவறாமல் ஒரு நல்ல விஷயங்களைத் தரக்கூடிய ஒரு தரமான புத்தகம் வைக்கப்படவேண்டும்” என்பதே. “எனக்குக் கிடைத்த இந்த அரிய அரைமணி நேரத்தில் நான் பல நல்ல விஷயங்களைப் படித்திருப்பேனே”?…….என்று ஆதங்கப்பட்டுக்கொண்டாராம். அன்றைக்கு இருந்த பெருந்தலைவர்களெல்லாம், நேரம் தவறாமைக்கு (punctuality) மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள், இன்று நாம் சொல்லிப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    ஒவ்வொரு நாளும் எப்படிக் கழிந்தது?..கழிந்த நாட்கள் திரும்ப வருமா?..என்றெல்லாம் நாம் சிந்திக்கிறோம். ஒரு நாளில் இருபத்திநான்கு மணிநேரம் என்பது, அதில் உண்பதற்கு மூன்று மணிநேரம் (மூன்றுவேளை), அரசியல் கலந்த அலுவலகத்தில் பத்துமணி நேரம், மீதி இருக்கும் நேரமெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி, இடையில் ஒன்றுக்கும் உபயோகமில்லாத வெட்டிப்பேச்சு, இத்யாதிகள் போன்றவற்றில் காலம் வீணே கழிந்து விடுகிறது. அனுதினமும், மூன்று வேளை உணவு உண்டு, இரவு தவறாமல் உறக்கம் செய்து மறுபடி திரும்பத் திரும்ப செய்த வேலைகளையே செய்து கொண்டிருக்கின்றோம்!…நமக்கு ஏதாவதொரு அற்பவிஷயம் தெரிந்து விட்டால் போதும், அதையே மறுபடி பேசிப்பேசி நண்பர்களைப் பகைத்துக் கொள்கிறோம், புதிதாக வேறு ஒன்றையும் கற்றுக் கொள்ள மனம் இயம்பவில்லை என்பதைச் சிந்தித்து மனம் வருந்துவதை!……..
    “உண்டதே உண்டு உடுத்ததே உடுத்து
    உரைத்ததே அடுத்தடுத்து உரைத்து
    கண்டதே கண்டு கேட்டதே கேட்டுக்
    கழிந்தன கடவுள் நாள் எல்லாம்”
    என்று நான்கு வரிகளில் மிக அழகாக ‘இறைவன் நமக்களித்த வாழ்நாள்’ என்றும், நித்தமதை வீணே கழிக்கிறோமே!……..என்றும், மாதுறவு நீக்கி மா-துறவு (மகத்தான துறவு வாழ்க்கை) விரும்பி ஏற்ற பட்டிணத்தடிகள் நம்மிடம் சொல்லிச் சொல்லி வருந்துகிறார்.

    மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையோடு ஒன்றி வாழுகின்றன. உணவு, உழைப்பு, உறக்கம் இம்மூன்றையும் காலத்தோடு செய்து முடிக்கிறது. இப்பூவுலகைச் சுற்றியுள்ள கிரகங்களும் இம்மி பிசகாமல் திட்டமிட்டால்போல செயல்படுகின்றன, ஒரு நிமிடம் அவை மாறிச் செயல்பட்டால் இவ்வுலகில் எத்தகய மாற்றம் நிகமும்!…என்பதைச் சற்று சிந்தித்தால் வியப்பாக இருக்கிறதல்லவா?….இவை யாவுமே கிரமப்படி, திட்டமிட்டபடி செய்ல்படுவதால்தான் இயற்கை தன் வேலையைச் செவ்வனே செய்யமுடிகிறது. இப்படி காலமும் நேரமும் இயற்கையோடு இணைந்து செயல்படுகின்றன. நிமிடங்கள் பலருக்கு பொருட்டே இல்லை, ஆனால் அதே நிமிடங்கள் சிலருக்குத் திருப்பு முனையாகவோ, சாதனையாளராகவோ மாற்றுவதற்குத் துணை போகிறது. மகாபாரதத்தில், அருச்சுனன் தவசு பற்றி அறியாதவர் இலர். சிவபெருமானிடமிருந்து ‘பசுபதாஸ்த்திரம்’ என்ற அரிய அஸ்த்திரத்தைப் பெற தன்னைத் முற்றிலுமாக நேரத்தைத் திட்டமிட்டு காலைமுதல், இரவு படுக்கைக்குச் செல்லும் வரையில் தனது அன்றாட அலுவல்களை முறைப்படுத்தி ஒரு நாளில் கிடைக்கும் நேரத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என மாற்றி அமைத்துக் கொள்கிறான். சாதாரண மனிதனைப் போலல்லாது, படிப்படியாக தனது உணவு உண்ணும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்கிறான். முதல் ஆறு மாதத்திற்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் மூன்று வேளை உணவு உண்கிறான், அடுத்த ஆறு மாதம், அதற்கடுத்த ஆறு மாதம் என்று படிப்படியாக ஒரு வேளை உணவைக் குறைத்து, பதினெட்டாவது மாதத்திலிருந்து முற்றிலும் உணவு உண்பதைத் தவிர்க்கிறான். கடைசியில் வெறும் தண்ணீரையும், காற்றையும் உண்டு, சுவாசித்து, ஒற்றைக்காலில் நின்று கடும் தவமிருந்து, அவன் நினைத்த பசுபதாஸ்த்திரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றதாக மாபாரதத்தில் தகவல் உள்ளது. இந்தச் சம்பவத்தை, இத்தருணத்தில் நாம் நினைவு கூர்ந்தால், ஒவ்வொரு மனிதனும் நேரத்தின் அவசியத்தை உணர்ந்து திட்டமிட்டு செயல்படமுடியும்.

    இந்த உலகத்தில் கண் இமைக்கும் நேரத்தில் என்னவெல்லாம் அதிசயம் நிகழ்ந்து விடுகிறது. உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவதொரு அதிசயம் நிகழ்வதாக கூறுகிறார்கள். நமது நினைவுகளை ஒரு அரை நூற்றாண்டுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றால் அன்று நேரத்தைக் கணக்கிடுவதிலும், செலவழிப்பதிலும் அதிக சிரமம் இருந்தது என்பதை உணரமுடியும். ஏனென்றால் அன்று பொழுதைக் கழிப்பதற்கு பொழுது போக்கு சாதனங்கள் (Electronic gadgets) அவ்வளவாக இல்லை. அன்றய சூழ்நிலையில் இணையதளம் (Net), டிவி (TV), கணிணி (Computer), முகநூல் (Facebook) முதலியவை இல்லை. ஒரு நிமிடம்தானே என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம், ஆனால் இந்த ஒரு நிமிடத்தில் நடக்கும் ஒன்றிரண்டு அதிசயங்களைச் சற்று கூர்ந்து படிப்போம்: ஒரு நிமிடத்தில் இந்தியாவில் 54 ஜனனமும், 10 மரணமும் நிகழுகிறது, 780 அலைபேசிகள் (cellphones) உருவாக்கப்படுகின்றன, உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் வருமானம் 15,000 டாலருக்கு மேல், இணையதளத்தில் 7,75,000 பேர் எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள், 141 மில்லியன் மக்கள் மெயில் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள். முகநூலில் (Facebook) 50,000 பேர் உரையாடிக்கொண்டிருக்கும்போதே, 1,35,800 பேர் தங்களது படங்களை தரவேற்றம் (uploading photos) செய்து கொண்டு, 5,10,000 கருத்துக்களும் (comments) எழுதப்படுகின்றன என்பதை இணைய ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இது போல் ஒரு நிமிடத்திற்குள் நடந்தேறும் இன்னும் பல ஆய்வுக் குறிப்புகளை நேரம் போவது தெரியாமல் அடிக்கிக் கொண்டே போகலாம். இதைப் படித்துக் கொண்டிருக்கின்ற நமது இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடித்திருக்கும், 15 முறை கண்சிமிட்டி இருக்கும். அற்ப ஜீவியான கொசு ஒரு நிமிடத்துக்கு 750 முறை தமது சிறகை அடித்துக் கொள்ளுகிறதாம். இத்தகய வியக்கத்தக்க அதிசயங்களை, சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யப்படும்படி கழிந்துகொண்டு இருக்கிறது. நேரம் கிடைக்கவில்லை என்பதைவிட கிடைக்கும் நேரத்தில் பயனுள்ள, படித்த, சேகரித்த நல்ல தகவல்கள், செய்திகள் போன்றவைகளை மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கின்ற பழக்கத்தைக் (Hobby) கடைபிடிக்கும்போது ‘இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்குமே!..என்ற ஆதங்கத்தை எழுத்தாளர்களாக இருப்பவர்கள் உணரமுடியும். ‘ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்’ என்ற பாடலும், ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார், வீணாய் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’ என்ற திரையிசைப் பாடல்களின் வரிகளை நினைவு கூர்ந்து திட்டமிட்டு கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டால் எந்நேரமும் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் நல்ல நேரமாக அமையும் என்பதை உணரலாம்.

    தொடரும்………

    Share
  • பாத யாத்திரை (திருவேங்கடமலை) அனுபவங்கள்::

    பெருவை பார்த்தசாரதி  ::

    இறை வழிபாட்டு முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பின் வரும் சந்ததியினருக்கு மிகத் தெளிவாக வழங்கி இருக்கிறார்கள். இவ்வழிபாட்டு முறைகளை எல்லாம் மஹான்கள், ரிஷிகள், ஆசார்ய புருஷர்கள், குருமார்கள் போன்றோர்கள் அவ்வப்போது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவ்விதம் புனிதமான ஆலயங்களுக்குச் செல்லுதல், தீர்த்த யாத்திரை, பாதயாத்திரை, நாம சங்கீர்த்தனம், பஜனை செய்தல், அனுதினமும் வீட்டிலேயே பெருமானை ஆராதனம் செய்தல் போன்ற பல வழிகளைப் பின்பற்றும் அன்பர்கள் இருக்கிறார்கள். நமது வசதிக்காக நாம் பின்பற்றும் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளாமல் முறைப்படி பின்பற்றுவதே மேல் என்றும், மாறாக வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டால் புனிதத்தலங்களின் ‘சாந்நித்தியம்’ மாசுபடத்தொடங்கிவிடும் என்பதையும் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே எடுத்துரைத்திருக்கிறார்கள். இறை வழிபாட்டுக்கென்று இடமும், தகுந்த நேரமும் இருக்கிறது, ‘ஏதோ நமக்கு நேரம் கிடைக்கிறது’ என்று நினைத்து ஆலயங்களுக்கும், பூஜை போன்ற சுபகாரியங்களுக்கும் நாம் நினைத்த நேரத்தில் செல்ல முடியாது, அதற்கும் பகவானின் அருள் வேண்டும் என்பதால்தான், “ஏழுமலையான் அழைத்தால் மட்டுமே திருமலைக்குச் செல்ல முடியும்” என்பதைச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக இறை சிந்தனையும் நம்மோடு கைகோர்க்கவேண்டும்.  ‘பசி’ எடுக்கிறது என்று யாரும் நமக்குச் சொல்வதில்லை, அதுபோல் ‘தாகம்’ எடுக்கிறது தண்ணீர் குடி என்று யாரும் தூண்டுவதில்லை. பசியும், தாகமும் இயற்கையாக தோன்றுவதுபோல், ‘இறை சிந்தனை’ என்பதும் இயற்கையாகவே எழவேண்டுமாம். நம்மை அறியாமலேயே நமது உடம்பும் மனமும் மாசு படிந்து இருக்கலாம். ஆதலால் தான் நாம் குளித்து முடித்து, மடித்துணி தரித்த சமயத்தில் மாத்திரம் இறைச்சிந்தனையோடு ஆலயத்துக்குச் செல்கிறோம். தருமமிகு பாரதத்தில் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்ற போதிலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்துவிக்கப் பட்ட வைணவ திவ்ய ஆலயங்களுக்கு (108) செல்வதையும், இதேபோல ‘அப்பர்’, ‘சுந்தரர்’, ‘மாணிக்கவாசகர்’ போன்ற நாயன்மார்களால் பாடல்பெற்ற சைவத்தலங்களுக்கு (274) யாத்திரை செல்லுதலை மட்டுமே ஒரு கடமையாகக் கொண்டுள்ள பக்தர்களையும் நம்மிடையே காணலாம்.  இப்படிக் குறிப்பிட்ட தலம், குறிப்பிட்ட நேரம் என்பது மனிதன் செய்கின்ற எல்லா நல்ல காரியங்களோடும் இணைந்து விடுவது மிகவும் அவசியமாகிறது, அது மாறும் போது தவறாகிறது. இப்படிப்பட்ட நல்ல நேரமும், சந்தர்ப்பமும் கைகூடும் சமயத்தில்தான் மனமொத்த கருத்துடைய நண்பர்கள் ஒருங்கே இணைந்து, மார்கழித் திங்களில், ‘ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடிக்கொண்டு’ (திருப்பாவையின் மூன்றாவது பாசுரம்) பாதயாத்திரையை பதினெட்டு நண்பர்களுடன் சென்னை மகாலிங்கபுரத்திலிருந்து பிரசன்னவேங்கடேஷ் என்பவரது வழிகாட்டுதலுடன் தொடங்கினோம். நான்கு நாட்கள் பாதயாத்திரை சென்ற அனுபவத்தில், பல ஆலயங்களைக் காண முடிந்த போதிலும், மிகச்சிறப்பாக அமைந்த ஒரு சில விஷேசமான ஆலயங்களின் சிறப்பை மட்டுமே இங்கே மிகச்சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். என்னதான் பத்திரிகையிலும், மாத இதழ்களிலும் இத்தலங்களைப் பற்றி அனேகர் அறிந்திருந்தாலும், புதிதாக பாதயாத்திரை தொடங்கும் அன்பர்களுக்கு நிச்சயமாக உதவும் என்பதால், ஆலய பட்டர்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும் நேரடியாக பெறப்பட்ட இத்தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். இந்த அரிய ஆலயத் தகவல்கள், நம்மை ஆச்சரியத்துக்குள் ஆழ்த்துகின்றன.முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம்

    பாற்கடலைக் கடைந்து, அமுதத்தை எடுக்கும்போது ஆலகால விஷத்தை ஈஸ்வரன் உண்டதாக நாம் படித்திருக்கிறோம். அந்த விஷத்தை அப்படியே விழுங்கி விட்டதால் சர்வ லோகமும் அழியும் என்பதாலும், விழுங்கியதை உமிழ்ந்து விட்டால் அதைவிட ஆபத்து என்பதாலும் பார்வதி தேவி, ஈஸ்வரனை தன் மடியில் கிடத்தி, அவ்விஷத்தை கண்டத்தில்(கழுத்தில்) கைவைத்து அதே இடத்தில் நிறுத்திவிட்டார். ஆலகால விஷத்தைத் தடுத்து சர்வ லோகத்தையும் காப்பாற்றி அமுதத்ததயும் வழங்கியதால் இறைவி “அமுதாம்பிகை” என்றும், இறைவன் “பள்ளி கொண்ட பரமன்” என்றும் அழைக்கப் படும் ‘சுருட்டப் பள்ளி என்ற இடத்தில் முதல் நாள் இரவு தங்கினோம். சயனத் திருக்கோலத்தில் ஈஸ்வரன், பார்வதிதேவியின் மடியில் பள்ளிகொண்டிருக்கும் ஒரே ஆலயம் என்று சொல்லும்படியாக சுருட்டப்பள்ளி திகழ்கிறது. இங்கே வைணவ ஆலயத்தைப் போல், பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, துளசி வழங்குவது ஆலய சிறப்பம்சத்தில் ஒன்று. குடும்ப சமேதரராக தட்சிஷினாமூர்த்தியை இவ்வாலயத்தில் மட்டுமே காணமுடியும்.

    அடுத்து வருவது நாகலாபுரம் ‘ஸ்ரீவேதநாராணப் பெருமாள்’ ஆலயம். திருவரங்கத்தில் பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிப்பதுபோல், இங்கே வித்தியாசமாக அனைத்து ஆலயங்களிலிருந்தும் மாறுபட்டு மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள் சூரியாஸ்தமனத்தின் போது, ஒரு குறிப்பிட்ட நாழிகையில் சூரியநாராயணனின் சூரியக்கிரணங்கள் வேதநாராயணப் பெருமானின் சன்னிதியில் பகவானின் பாதம் தொடங்கி, நாபி, சிரசு என்று மூன்று நாட்கள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருப்பது அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் சூரியபூஜை என்று நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு தெப்போற்சவமும் நடைபெறுமாம். பத்து அவதாரங்களில் முதலாவதாரத்தில் “மச்சாவதாரம்” என்கிற மீன் வடிவத்தில் ‘மூலவர்’ தோற்றமளிக்கிறார். கோவிலின் சிற்பங்கள் அனைத்திலும் மச்சாவதாரத்தின் மகிமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

    மூன்றாவதாக நாராயண வனத்தில் எழுந்தருளியிருக்கும் “கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள்” ஆலயம். ஆலயத்தின் தோற்றமே அனனவரையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீனிவாசனுக்கும், பத்மத்தில் (தாமரை மலர்) அமர்ந்திருக்கும் தேவி பத்மாவதிக்கும் திருமணம் நடந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. திருமணத்தின் போது பங்கு கொண்ட அனைவருக்கும் ‘மஞ்சள் பிரசாதம்’ வழங்குவதற்காக சுமார் ஒரு டன் எடைகொண்ட மஞ்சள் தயாரிக்கும் மிகப் பெரிய பாறைக்கல்லால் ஆன இயந்திரம் ஒன்று தாயாரின் சந்நிதிக்கு முன்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறது. எம்பெருமான் வேட்டைக்கு வரும்போது இச்சம்பவங்கள் நிகழ்ந்ததால், எம்பெருமானின் விழிகள் திறந்த நிலையிலும், திருக்கரத்தில் உடைவாளுடன், திருஒட்டியானத்தில் பத்து அவதாரங்களின் தோற்றங்களும் இடம்பெற்றிருப்பது அபூர்வம். யாத்திரையின் இடையில் ‘ராமகிரி’ என்றொடு தலத்தைப் பற்றிய தகவலை அறிந்தோம், பிரதான சாலையிலிருந்து சற்று தொலைவில் இருப்பதாலும், நேரக்குறைவின்மையாலும் அங்கு செல்லமுடியவில்லை.

     நீண்ட தூரம் நடந்து ஒரு இடத்தைக் கடப்பது, அவ்வளவு எளிதல்ல என்பதை பாதயாத்திரையின் போது தோன்றும் ‘உடல் உபாதைகள்’ மூலம் அறியலாம். இதனைக் கருத்தில் கொள்ளும்போது, இங்கே திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருமங்கையாழ்வார் தனது பெரியதிருமொழியில் “நாராயணா” என்னும் திருநாமத்தை அனுசந்தித்துக் கொண்டிருக்கும் அடியார்களுக்கு, அவர்கள் படும் துன்பங்களெல்லாம் கதிரவனைக் கண்ட பனித்துளிபோல் மறைந்து விடும் என்கிறார். மகத்தான இச்சொல், சகலவிதமான செல்வத்தையும், தாய் தன் மகவுக்குச் செய்யும் நலனைவிடவும், தீவினைகளைப் போக்கி பரமபதத்தையும் கூட அளித்துவிடும் என்பதை பின்வரும் பாடல் மூலம் விளக்குகிறார். அதனால்தான் ‘நாராயணா’ என்ற சொல்லை “நலம் தரும் சொல்” என்கிறார்.

     “குலம்தரும் செல்வந் தந்திடுமடியார் படுதுய ராயின வெல்லாம்

    நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்

    வலம்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்

    நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்  ‘நாராயணா’ வென்னும் நாமம்” 

     அடியார்கள் அனைவரும் மாஹாலிங்கபுரத்தில் ஒன்றுகூடித் தொடங்கிய பாதயாத்திரை, சூளைமேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர் வழியாக ரெட் ஹில்ஸ், பிறகு கண்ணணோடை பாலம், மதுரவாயல், சூளைமேனி, ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி, நாகலாபுரம், பிச்சாட்டூர், நாராயணவனம், புத்தூர், ‘புடி’ ரயில் நிலையம், திருச்சானூர் வழியாக முடிவில் திருமலை சென்றடைந்து ஏழுமலையானைத் தரிசித்து சென்னை வந்தடைந்தோம்.

    “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒர் திருப்பம் நேருமடா” என்பது போல், பாத யாத்திரை முடித்து  சென்னை திரும்பிய அன்று (20-12-12)எனக்கோர் மகிழ்ச்சியான செய்தி, வல்லமை குழுவினர் மீண்டும் ஓர் முறை தொடர் கட்டுரைக்கு “வல்லமை விருது” வழங்கி சிறப்பித்திருந்தார்கள்.

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-23

    பெருவை பார்த்தசாரதி

    ஒரு குறிப்பிட்ட  வயது வரை “சிறார்” என்று  அழைக்கப்படுபவர்கள், 15 வயதை எட்டும்போது “இளைஞர்கள்”, “இளைய தலைமுறையினர்” என்ற பட்டத்திற்கு உரியவராகிறார்கள். பள்ளிப் படிப்பில் பத்தாம்  வகுப்பைத் தாண்டிவிட்டாலே, வாலிபன் ஆகி விடுகிறான். இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களின், திறமைகள், அவர்களின் குறிக்கோள், நோக்கம், செயல்பாடுகள் பற்றிய எண்ணங்களை இக்கட்டுரை மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    முதலில் இந்திய இளைஞர்களின்  சாதனைகளைப் பற்றிய ஒரு சிறிய  கண்ணோட்டத்தோடு இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன். அண்மையில் இந்தியாவிலிருந்து இன்சாட் செயற்கைக்கோள் மற்றும் பிருதிவி ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து உலக அளவில் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு மேலும் ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் வெற்றியின் பின்னணியில் இரவு பகலாக உழைத்த எத்துனையோ இளைஞர்களின் திறமைகள் ஒளிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சில பட்டதாரி இளைஞர்கள் கிராமப்புறங்களில் விவசாயத்தில் புதிய உத்திகளைக் கொண்டு பயிர் விளைச்சலிலும், மகசூலிலும் சாதனை படைக்கிறார்கள்.  சிலர் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்தோடு புதிய கருவிகளைக் கண்டுபிடித்து உலக சாதனை நிகழ்த்தி வருவதையும் ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்கிறோம். இப்படி இளைஞர்களின் ஆற்றல்களுக்கு சவால் விடும் துறைகள் பல இந்தியாவில் இருந்தாலும், இன்று படித்த இளைஞர்கள் வேலை தேடி அதிகம் நாடுவது வெளிநாடுகளைத்தான் என்ற பரவலான கருத்து நிலவுகிறது.  ஏனென்றால் வெளிநாடுகளில் இளைஞர்களுக்கு கட்டுக்கடங்காத சுதந்திரம் உண்டு, இங்கே தனிப்பட்ட கலாச்சாரம் அனைத்தையும் கட்டுக்கோப்புக்குள் வைக்கிறது. மேலும் படித்தவுடன் இங்கே உடனே வேலைகிடைப்பதில்லை, உலக அளவில் 20 கோடியே 50 இலட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள், இந்தியாவில் 6 கோடிக்கும் மேல் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதால், வங்கிகளில் வசூலாகாத கல்விக் கடன்கள் அதிகரித்துள்ளது என்பதை ‘தினமலர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

    பிறவிகளிலேயே மனிதப் பிறவி அரிது. அதிலும் இளைமைப் பருவம் என்பது மிக அரிது. இப்படி அரும்பிறவி எடுத்த அனைவரும் தம் வாழ்நாள் முழுவதும் நல்ல ஒழுக்கத்துடன், நன்னடத்தையுடன் வாழ்கின்றனரா .என்பது கேள்விக்குறியே. நூற்றில் ஒரு சிலரே நல்ல மனிதராக வாழ்கின்றனர். ஏன் என்றால், ஏனயவர்கள் சிறார் முதலே நல்ல பண்புடனும், ஒழுக்கத்துடனும் வளர வழிகாட்டப்படாததுதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறமுடியும். அனைத்துத் தரப்பினரிடமிருந்து இன்றய இளைஞர்களைப் பற்றிய சிந்தனையை மதிப்பிடும்போது, ஒருமித்த கருத்தாக வெளிப்படுவது “இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள்” என்பதுதான். இப்படி வெறும் சொல்லிலே மட்டும் சொல்லிவிட்டால் போதுமா?.. அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் ஆராயத் தவறி விடுகிறோம் என்பதே  உண்மை நிலை.

    குழந்தையாகப் பள்ளிப்  படிப்பை முடித்துவிட்டு, வளர்ச்சியடைந்த வாலிபனாக கல்லூரியிலிருந்து வெளிவந்து,  அபரிமிதமான கனவுகளோடு சமுதாயத்தில் கலக்கும்போதுதான் பலவித இன்னல்களுக்கு ஆளாகி விடுகிறான். ஒரு அரை நூற்றாண்டுக்கு பின்னே சென்று பார்த்தால், இதே கனவு சற்று வேறுபடும். அன்று இருந்த பொருளாதார சூழ்நிலையில் ஒரு சைக்கிள், ரேடியோ அல்லது தொலைபேசியோ ஒரு வளர்ச்சியடைந்த கிராமத்தில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. அப்போது வளர்ந்த சூழ்நிலை, இளைஞர்களுக்கு சிந்தனையை சிதறவிடுவதற்கு வழிவகுக்கவில்லை. தானுண்டு தன்பள்ளியுண்டு, படிப்புண்டு என்றிருந்த போது கடமையும் ஒழுக்கமும், பண்பும் இளைஞர்களோடு ஒட்டி உறவாடியது. ஆனால் இப்போது காணும் விஞ்ஞான வளர்ச்சியினால், இணையதளம் (net), முகநூல் (Facebook) சினிமா, எலக்ட்ரானிக் கேட்கெட்டுகள் (Electronic gadgets) போன்றவற்றில் கவனம் சிதறி படிப்பிலும், பண்பிலும் நாட்டம் குறைந்து விட்டது. ஒரு விதத்தில் இன்றைய இளைஞர்களை தவறான பாதையில் செல்ல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிக அளவில் காரணிகளாக இருக்கின்றன என்று கூடச் சொல்லலாம்..  ஒன்றுக்கும் உதவாத இத்தகைய களிப்பூட்டும் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் நேரத்தைச் செலவிடுவதால், இளைமையில் கல்லாது ஊர்சுற்றித் திரிந்து, வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கின்ற பலரைக் காணமுடிகிறது. இப்படிச் சமுதாயத்தில் நிலவி வரும் சீர்கேடுகளே இளைஞர்களுக்கு ஒரு சவாலாக அமைந்துவிடுவதை நாம் உணர்ந்து கொண்டு வருகிறோம்.

    இச்சமுதாயச் சூழ்நிலையை மேலும் சற்று ஆராய்ந்து  நோக்கினால், உண்மை நிலவரம்  புரியும். இப்போது வெளிவருகின்ற பெரும்பாலான திரைப்படங்கள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வலைதளம், வானொலி, செய்தித்தாள் போன்றவை வெளியிடும் தலையங்கச் செய்திகள் அனைத்துமே, இளைஞர்களுக்கு வக்கிரத்திற்கும், வன்முறைக்கும் வழிகாட்டுகின்றன என்பதே பெற்றோர்களின் ஒருமித்த கருத்து. இவர்களின் கூற்றுப்படி, இன்றைய சமுதாய சூழ்நிலை இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகிறதா?… என்றால் ‘இல்லை’ என்று அடித்துக் கூறமுடியும். இளைஞர்கள் தவறான பாதையில் செல்லும்போது, ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?….என்பதற்கு இந்த வருடத்தில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களை உதாரணங்களாக உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

    சமீபத்தில்  தமிழகத்தில் ‘பாங்க் கொள்ளை’  பல இடங்களிலும் பரவலாக சர்வ சாதாரணமாக நிகழும் ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், இந்தக் குற்றங்களுக்குப் பின்னணியில்  பொறியியல் துறையில் நன்றாகப் படித்துப் பட்டம் பெற்ற  இளைஞர்களே காரணமாக இருந்தனர்  என்ற தகவல் தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்தது. காவல்துறையினர் இவர்களைக் கைது செய்யமுடியாமல் கடைசியில் அந்த இளைஞர்களைச் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றது, அனைவரின் நினைவை விட்டு அகலவில்லை. பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் தனது ஆசிரியரைக் கத்தியால் குத்தி கொலைசெய்து விட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளான். அந்த மாணவனை இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியது எது?……என்ற கேள்விக்கு கல்வி அறிஞர்களும், சான்றோர்களும் பெற்றோர்களும் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முன் வைக்காமல், இன்றைய சீர்கெட்ட சமூகம், தரமற்ற கலாசாரம், வன்முறை நிறைந்த சினிமா போன்றவை உடந்தையாக இருந்திருக்கிறது என்று அன்றைய  பத்திரிக்கையிலும், தொலைக்காட்சிகளிலும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    படித்துப் பட்டம் பெற்ற  ஒரு குழுவினர், தங்களின் ஆடம்பரத்திற்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. இளவயதிலேயே இணையதள வியாபாரத்தில் தோற்று நஷ்டமடைந்த இவர்கள் தேர்ந்தெடுத்த குறுக்கு வழி என்ன?…..ஒரு பணக்காரரின் பள்ளிக் குழந்தையைக் கடத்தி பணம் பறிக்க முயன்று, கடைசியில் சிறைச்சாலையில் இளைமைக் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று 20-12-12 இச்சம்பவங்களைப் பற்றி எழுதும் போது கூட, தலைநகர் புதுதில்லியில், நான்கு இளைஞர்கள் ஒரு பெண்ணுக்கு இழைத்த கொடூரச் சம்பவத்தையும் படித்திருப்பீர்கள். ஒட்டு மொத்த இந்திய மக்களையே உலுக்கும் செய்தியாக, இந்த இளைஞர்கள் இக்கொடூரச் செயலைச் செய்திருக்கிறார்கள்.

    அனைத்து வசதிகளையும்  ஒரே நாளில் அனுபவித்து விடவேண்டும் என்கிற இளைஞர்களின் பேராசைகளைப் பூர்த்திசெய்ய பெற்றோர்கள் செவிசாய்ப்பது இன்னொரு காரணம். நம்ம பையன் நன்றாகக் படிக்கிறானே என்று ‘ப்ராவிடண்ட் பண்ட்’ (Provident Fund), ‘த்ரிஃப்ட் சொஸைட்டி லோன்’ (Society loan) என்று அனைத்து விதமான கடனையும் வாங்கி அம்மாவும், அப்பாவும் கஷ்டப்பட்டு தினமும் 12 மணிநேரம் உழைத்தது போதாது என்று ‘ஒவர்டைமில்’ (OT) சேமித்த பணத்தில் விலைமதிப்பு மிகுந்த அதிவேகமாகப் பறக்கும் இரு சக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் படும் அல்லல்களை என்றாவது ஒருநாள் இந்த இளைஞர்கள் சிந்தித்திருக்கிறார்களா?….மாறாக பெற்றோர்களை மதிக்காமல், முகத்தை மூடியபடி, பனியன் அணிந்த யுவதிகளோடு இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றுவது, போதைப் பொருள் பரிச்சயம் இவற்றால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோரைப் புறக்கணித்தல் போன்ற சம்பவங்களையும் கேள்வியுறுகிறோம்.

    அப்பா, அம்மாவினுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுகிற இன்னொரு விஷயம் பாக்கெட் மணி (pocket money). பெற்றோர்களை  வற்புறுத்திப் பெறுகின்ற  இந்த பாக்கெட் மணி, இளைஞர்களை  அழைத்துச் செல்லும் இடம் எது தெரியுமா?………அவசர கதியில் நின்று கொண்டே சாப்பிடும் ‘துரித உணவகம்’ (Fast food), சுகாதாரம் சற்றும் இல்லாத ‘சாலையோர கையேந்திபவன்’ (Roadside eatables), பள்ளி, கல்லூரிக்கு அருகாமையில் சந்துமூலையில் அவ்வப்போது முளைக்கும் ‘சாட்ஷாப்’ (chat shop) ‘பானிபூரி’ அல்லது ‘பான்ஷாப்’ (pan shop). இதைப்போல், இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இன்று இளைஞர்களின் கல்வி அறிவுக்குப் பஞ்சமில்லை என்றாலும் நல்வாழ்க்கைக்கு இட்டுச் செல்லுகின்ற பாதைகள்தான் அவ்வப்போது தடம் மாறுகிறது. ஒரு வகையில் அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியும் கூட இளைஞர்களின் சிந்தனையைத் திசை திருப்புகிறது என்பதை முன்பே சொல்லியிருந்தேன். “தனிமரம் தோப்பாகாது” என்பது போல, பலதரப்பட்ட மக்களைக் கொண்ட ஒரு சமுதாயம் சிறப்பாக அமையவேண்டுமானால், நல்லொழுக்கமும், பண்பும் நிறைந்த இளைஞர்களின் பங்கு மிக மிக அவசியம். இளைஞர்களின் பிரச்சினைகளை மட்டுமே சீர்தூக்கிப் பார்க்காமல், நல்வழி காணும் யோசனைகளையும் ஒவ்வொரு மனிதனும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

    வாழ்க்கையில்  பலவித இன்னல்களைச் சந்தித்த பிறகுதான் ஒரு தாய் தன்  மகவை ஈன்றெடுக்கிறாள், பின்னர்  அவன் வளந்து வாலிபனாகி அறிவிற்சிறந்து விளங்கினால் மட்டுமே அந்தத் தாயின் இன்னல்கள் மறைந்து வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நீடிக்கிறது. தந்தைக்கு மகனைச் சான்றோனாக்குகின்ற கடமை மற்ற கடமைகளுள் முன்னிலை வகிக்கிறது. இத்தகைய கடமைகள் எல்லோருக்குமே பொதுவானது என்றாலும், அதை நிறைவேற்றுவதில்தான் ஒவ்வொருவரும் வேறுபட்டு நிற்கின்றனர். இன்றைக்குக் கூட தந்தையின் அன்புக்கு ஏங்கும் பல குழந்தைகளைக் காணமுடியும். அவர்களுக்கெல்லாம் துருவனின் சாதனையையையும், பிரகலாத சரித்திரத்தையும் எடுத்துக் கூற வேண்டிய காலக்கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.

    அன்னிய ஆதிக்கத்தின் பிடியில் இந்தியா சிக்கித் தவித்தபோது, இந்தியாவின் பெருமைக்குரிய கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் போன்றவையும் அடிமைப்பட்டுக் கிடந்தது. இந்திய இளைஞர்கள் குருட்டு நம்பிக்கையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும், சமயப் பூசல்களிலும் உழன்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு இளைஞன் குறுகிய காலத்தில் அரும் பெரும் தலைவனாகவும், இந்திய கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் உலகுக்கு அறியச் செய்து அரும்பணியாற்றி உலக சாதனை செய்யமுடிந்தது. தியாக மனப்பான்மையோடு சேவையாற்றுகின்ற இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி “ராமகிருஷ்ணாமிஷன்” என்ற பேரியக்கத்தை நிறுவமுடிந்தது. அவரது இளமைப்பருவத்தில் பண்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியதால்தான் ஒரு ‘மஹானாக’ முடிந்தது. குடும்பத்தில் பெண்குழந்தைகளுக்கு நடுவே அதிக தவம் செய்து பெற்ற ஆண்குழந்தை அவர். நல்லொழுக்கம் நிறைந்து ‘நரேந்திரன்’ என்ற பெயரோடு தனது இளைமைப் பருவத்தில் ஆற்றிய பணி பாரதப் பண்பாட்டை வெளிஉலகுக்கு அறிமுகப் படுத்தியதோடு மட்டுமில்லாமல் உலக அளவில் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்தது. இவர் ஆற்றிய உரையில் மனம் நெகிழ்ந்து போன மக்கள் இவரை “ஸ்வாமி” என்றே அழைத்தனர். அன்று முதல் ஸ்வாமி விவேகானந்தர் என்று உலகத்தாரால் அழைக்கப்பட்டார். ஒரு இளைஞனாக தமது 39 வயது முடிவதற்கு முன், மற்ற இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக விளங்கி, தன்னம்பிக்கையே வாழ்க்கை, உடலின் சக்தியே பலம், பலவீனம் மனித வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதல் எழுந்திருங்கள், விழித்திருங்கள் குறிக்கோளை எட்டும் வரை அயராது உழையுங்கள் என்று வீரமுழக்கம் செய்தவர்.

    இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல பல காரணங்கள் இருந்தாலும், நல்வழியில் செல்வதற்கு ஒரு சில வழிகளே உள்ளன. தற்காலத்தில் இளைஞர்களின் அபரிமிதமான செயல்திறம் அதிகமாக இருந்தாலும் ஒழுக்கமும் பண்பும் மிகக் குறைந்து காணப்படுகிறது என்பதால்தான்…..இந்திய விஞ்ஞானிகளும், பொருளாதார வல்லுனர்களும் மற்றும் அறிஞர்களும் இன்றைய இளைஞர்களை மையமாக வைத்து, அவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என்ற மாபெரும் சக்தி இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.  ஒரு வலுவான, ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உண்டாக்க முதன் முதலில் வழிகாட்டுபவர் ஈன்றெடுத்த அன்னை பிறகு கடமையை உணர்த்தும் தந்தை அடுத்தடுத்து ஆசிரியர், சமூகம் இவையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து, கடைசியில் இறை நம்பிக்கையோடு கலந்து நிற்கவேண்டும். இளைமைபருவத்தில் எந்த ஒரு செயலுக்கும் முடிவெடுக்கும் திறன் மிக முக்கியம், முடிவெடுக்க முடியாத நிலை வரும்போது பெரியோர்களின் வழிகாட்டல் இளைஞர்களுக்கு அவசியமாகிறது. தற்போது இருக்கும் சமுதாய சூழ்நிலையில், இளைஞர்களை நல்வழியில் செயல்பட வைப்பது அனைவருக்கும் ஒரு “சவால்” என்றே கூறமுடியும்!..அதில் வெற்றி கிடைத்தால் “சாதனை” என்று கூடச் சொல்லிக்கொள்ளலாம். இதனால்தான், இளைஞர்களின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்த, இந்தியாவில் தோன்றிய எண்ணற்ற மகான்களும், அறிஞர்களும், தலைவர்களும் நிகழ்த்திய சாதனைகளையும், அருமை, பெருமைகளையும், அவ்வப்போது இன்றய இளைஞர்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இன்றும் நாம் இருக்கின்றோம்.

    தொடரும்………

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-22

    பெருவை பார்த்தசாரதி

    அன்றாடம் அதிகாலை எழுந்தவுடன், தேனீர் அருந்திவிட்டு, தினசரிகளை முழுவதும் படிக்காமல், தலைப்புச் செய்திகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவசரமாக ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பி, மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஓரளவுக்கு கவனம் செலுத்தும் போது, முழுவதும் படிக்க முடியாமல் அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிடுகிறது. அவசர அவசரமாக குளித்து முடித்துவிட்டு உடலில் துவளும் தண்ணீர்த் துளிகளைக் கூட துவட்டாமல் அப்படியே நின்று கொண்டு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அவசரகதியில் அலுவலகம் சென்று விடுகிறோம். அவரவர் வேலைக்கேற்றபடி அயறும் வரை உழைத்துவிட்டு மறுபடி பசியாறுகிறோம். அந்திசாயும் வேளையில் சிற்றுண்டி அருந்திவிட்டு, மறுபடி கணிணியின் மானிட்டரில் முகத்தை நுழைத்து, மெளஸைக் (mouse) கையில் பிடித்துக்கொண்டு, காதில் ஹெட்போனுடன் நேரம் தெரியாமல் எதையோ, யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டேயிருக்கிறோம். அலுவலகப் பணி முடிந்தவுடன் வாகனத்தை வேகமாக ஓட்டி, வீடு வந்து சேர்கிறொம். என்ன சாப்பிடுகிறோம் என்றுகூடத் தெரியாமல், காதைப் பிளக்கும் சத்தத்துடன் டிவி பார்த்துவிட்டு, பத்து பதினோரு மணிக்கு நித்திரா தேவி அருளால் கண்ணைமூடி, உண்ட களைப்பில் கிடந்து உறங்குகிறோம். அடுத்த நாள் காலை அதிகாலையில் எழுந்திருப்பதற்கு அலாரம் வைத்துவிட்டு, மணி ஒலித்ததும் நிதானமாக அணைத்துவிட்டு, மீண்டும் தூங்குவதற்கு எத்தனிக்கிறோம். இதுதான் இன்றய வாழ்க்கை முறை என்பது பொதுவாக அனைவருக்குமே பொருந்தும் விஷயமாக ஆகிவிட்டது.

    இயல்பாக நம்முடைய வாழ்க்கை முறையை நாம் சிந்தித்துப் பார்த்தோமானால், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் நாம் எதற்காகச் செய்கிறோம் என்று கூடத் தெரியாமல் அதைச் செய்துகொண்டே இருக்கிறோம். இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்து பார்த்தால், பல விஷயங்கள் நமக்குப் புலப்படாது. இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்த நமது முன்னோர்கள் பின்வரும் சந்ததியினருக்கு சூட்சுமமான விஷயங்களை எளிதில் புரியும்படி ஏட்டில் எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள். இதையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளவோ?..சிந்தித்துப் பார்க்கவோ நேரமில்லாமல் எதை எதையோ தேடி அலைந்து கடைசியில் மனிதப் பிறவி எடுத்த வாழ்க்கை முற்றுப் பெறாமலேயே முடிந்து விடுகிறது. நம்முடைய உடலும் உள்ளமும் சில நாள் சுறு சுறுப்பாக இயங்குகிறது, மறுநாள் உழைக்க மறுக்கிறது. நமது வயிறும் நான்கு வேளை உண்டதை, ஒரு சில நாள் ஒரு வேளை போதும் என்று மறுக்கிறது. சுறுசுறுப்பாக இயங்கிய மூளை சில நேரம் மக்கர் செய்து, சிந்தனையை மழுங்கச் செய்து, தேவையில்லாத கற்பனை உலகத்துக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. அமைதியாக இருந்த மனதுக்குள் புயலை உண்டாக்குகிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு பயம் வந்து, எதிர்காலத்தை நம் கண்முன் காட்டி நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஒரு வீடுதானெ இருக்கிறது, இரண்டு குழந்தைகள் ஆயிற்றே, இன்னமும் அலுவலகத்தில் அசிஸ்டண்டாகவே (&) இருக்கிறோமே, நம்மோடு சேர்ந்தவர்கள் அனைவரும் வானில் பறக்கும் (&) போது, நம்மிடம் கார் மற்றும் ஏசி இல்லையே, என்றெல்லாம் மனம் அலைபாய்கிறது. அடுத்த ஐந்து வருடத்தில் ரிடையர்மெண்ட் (&) வரப்போகிறது, அதற்குப் பிறகு எந்த அலுவலகத்தில் ‘கன்சல்டண்ட்’ (&) ஆகப்போகிறோம்?…………….மனது இன்றிலிருந்தே கணக்குப் போடத் தொடங்குகிறது. பன்னெடுங்காலத்திற்கு நல்ல வாழ்க்கை வாழ பட்ஜெட் போட்டுக்கொண்டே ஓவ்வொரு நாளையும் கூட்டி அதை மாதமாக்கி, வருடமாக்கி காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.

    இப்படியாக, சிறுவயது முதல் யாரோ ஒருவரது வழிகாட்டுதலின் உதவியுடன், பல இன்னல்களைக் கடந்து படிப்படியாக முன்னேறி, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, 25 வயது நிரம்பிய வாலிபனாக மனதில் பலவித ஆசைகளுடன் வேலைதேடிச் செல்லும்போது சிந்தனையும், செயலும் சுறுப்பாக செயல்படுகிறது. விருப்பப்பட்ட வேலை கிடைத்தவுடன் மனது மகிழ்ச்சியில் தாண்டவமாடுகிறது. முழு குதூகலத்துடன் எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்துக்கு, லிஃப்டைத் தவிர்த்து மாடிப்படிகளை  வேகமாகக் கடந்து சென்றடைகிறோம். பால்ய வயதில் நடந்த சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வருகிறது. வேகமாக ஓடும் ஆற்றிலே எதிர் நீச்சல் போட்டதெல்லாம் நினைவுக்கு வரும். எங்கும் எதிலும் வேகம்தான். பல மைல் தொலைவில் உள்ள பள்ளிக்கு, சைக்கிளில் பத்து நிமிடத்தில் சென்றடைந்தோம். சைக்கிள் இல்லையேல் நடையும் ஓட்டம்தான். அன்றைக்குத் தொடர்ந்த ஓட்டம் இன்று வரையில் தொடர்கிறது. ஒவ்வொரு நாளாக ஓட்டமெடுத்து,  பல வருடங்கள் கடந்து விட்டதை நினைக்கும்போது மனதுக்கு மலைப்பாகக் தோன்றும். இன்றும் ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்து, நாம் நினைத்தையெல்லாம் அடைந்து விட்டோம். சாதிக்க நினைத்தை சாதித்துவிட்டோம். இன்று நம் வயதைக் கேட்டால், ஓட்டமாக ஓடிய அனுபவங்களை முன்வைத்து 45, 50, 60 என்று நம் வயதைச் சொல்லிவிட்டு, மீண்டும் வாழ்க்கைப் பாதையில் ஓட எத்தனிக்கிறோம். ஆனால் முடியவில்லை, நடை தளர்ந்து, வேகம் குறைந்து, தள்ளாமையால் ஓடமுடியாமல் நிதானத்தை அடைந்து விடுகிறோம்.

    பாதை முடிந்துவிட்டாலும் பயணம் முடியவில்லை என்பது போல ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி தினமும் கவலையுடனோ, கவலை இல்லாமலோ, ஒரு நாள் என்பது, ஒரு நிமிடம் போல் கழிந்து விடுகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் எங்கு நாம் ஓடிக்கொண்டிருகிறோம், எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூடத் தெரியாமல், வாழ வேண்டிய வாழ்க்கையேல்லாம் சட்டெனக் கழிந்து கொண்டே வருகிறது. ‘நாளை’ என்பதே நிச்சமில்லாமல் இருக்கும்போது, அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகள் என்றில்லாமல், நூற்றாண்டுகளை நல்ல முறையில் கடக்க நம் மனம் எந்நேரமும் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது. ஓய்வில்லாமல் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தேடி எண்ண அலைகள் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

    குடியிருக்கும் வீடு பழுதடைந்து, கூரை எந்த நேரமும் விழக்கூடிய நிலையில் இருந்தால், அந்தவீட்டில் குடியிருப்போமா, இதைப்போலவே, இந்த உடம்பு நன்றாக இருக்கும் வரையில், நம்மால் இயன்றவரை பொருள் ஈட்டுகிறோம். இங்கிருப்பது போதாதென்று சீமை தேடி ஓடுகிறோம். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், பார்க்கும் இடமெல்லாம் விலையுயர்ந்த பொருட்கள், மார்பில் தவழும் முத்து மாலைகள் இவையெல்லாம் நமது உடம்பு நன்றாக இருக்கும்போது ஓடி, ஓடி சம்பாதித்தவை. வசதியாக வாழும்போது, உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் போன்றோர்களின் கூட்டம் நம் அருகே என்றுமே உண்டு.  வசதி இல்லாதபோதோ அல்லது கடைசி காலத்தில் யார் நம்மோடு கூட வருவார்கள் போன்ற எண்ண அலைகள் வரும்போது, ‘வீடு வரை உறவு, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ’?…………….என்ற கவியரசர் பாட்டுதான் நம் நினைவுக்கு வரும். அந்திமகாலத்தில் உயிர்பிரியும்போது இவையெல்லாம் கூட வருமா?  என்றால், “எதுவுமே கூடவராது” என்பதுதான் நமக்கு முன் வாழ்ந்த ஞானிகளின் கூற்று. இத்தொடரில் இடம்பெற்ற அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைப்பது போல், சிறந்த சிவனடியார்கள் என்ற பெயர்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரும், திருமாலே சரணாகதி என்று வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும் நமது சிந்தனைக்கு விருந்தாக, செவிக்கு இனிதான பாடல் மூலம் மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக நமக்கெல்லாம் நல் வழிகாட்ட வருகிறார்கள்.

    ஒன்றே ஒன்றைத்தவிர, நாம் வாழ்ந்த காலத்தில்  சம்பாதித்தது எதுவுமே இறந்த  பிறகு நம்முடன் வராது என்கிறார் திருமூல நாயனார். நம்முடன் காலம் பூராவும் வாழ்ந்து, நம்மோடு ஒட்டி உறவாடிய மனைவி மற்றும் நாம் சம்பாதித்தையெல்லாம் அனுபவித்து வாழ்ந்த நம் மக்களும் கூட வரமாட்டார்கள்.  அப்படியென்றால் எதுதான் நம்முடன் கடைசி வரையில் வரும்?…என்ற வினாவுக்கு அருமையான பதிலை இங்கே நம் முன் வைக்கிறார் நாயனார். வாழ்க்கையின் அனுபவத்தில் நாம் பெறுகின்ற ஞானமும், நாம் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் தவிர வேறொன்றும் கூட வராது என்பதை நான்கே வரிகளில் பின் வருமாறு விளக்குகிறார்:-

    பண்டம்  பெய் கூரை பழவி விழுந்தக்கால்
    உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
    கொண்ட விரதமும் ஞானமும் அன்றி
    மண்டி அவ்வழி நடவாதே.

    நாயனாரை ஆழ்வாரோடு  ஒப்பிட்டு நோக்கையில், வாழ்க்கை அனைத்தையும் பெருமானிடத்தில்  சமர்ப்பித்து விட்டு, இப்பூவுலக  வாழ்க்கையில் கிடைக்கும் பணம், பதவி, புகழ் எதுவுமே  வேண்டாமென்கிறார் ஆழ்வார்களில் ஒருவரான விப்ர நாராயாணர். வாழ்க்கையில் வழிதவறும் போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் போன்றோர் நமக்குதவ முன்வருவார்கள். ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஆழ்வாருக்கு உதவ அரங்கனே வந்தான் என்கிறது வரலாறு. ஒவ்வொரு மனிதனும் நிம்மதி தேடி, அது எங்குமே கிடைக்காமல் கடைசியில் இறைவனைச் சரணடைவது இயற்கை. துன்பம் வரும்போது இறைவனை நினைந்து பிறகு மகிழ்ச்சியில் திளைக்கும்போது மறந்து விடுவது மனித இயல்பு. உலகத்திலேயே உயர்ந்த பதவியினால் கிடைக்கும் சுகத்தைவிட இறையுணர்வுதான் மிகப்பெரியது என்கிறார் ஆழ்வார். அடியார்களின் காலடி பட்ட மண்ணை தன் தலையில் சுமந்து தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்ற இவர் இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.

    பச்சைமா மலைபோல்  மேனி, பவளவாய்க் கமலச்  செங்கண்
    அச்சுதா அமரர்  ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

    வாழ்க்கைப்  பயணத்தில் சாதாரண மனிதன் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் சமாளிக்கும் திறனையும், கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளையும் மேற்கூறிய ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமல்ல, அரிய பெரிய பல்லாயிரம் பாடல்கள் (ப்ரபந்தம்-4000, திருமந்திரம்-3000) மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளுமாறு நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

    தொடரும்…….

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ :: தொடர்-20

     

    பெருவை பார்த்தசாரதி

    புராண காலத்தில் மட்டுமில்லாமல், இன்று கூட நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறவர்களை வெவ்வேறு காலகட்டத்தில் கைக்கொண்டு வாழ்க்கை நலம் பெறவும், வாழ்வில் உயர்ந்த நிலை அடையவும் ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம். நாம் நமது சொந்தக்காலில் நிற்கமுடியும், நமது உழைப்பிலே நாம் வாழமுடியும் என்கிற தளராத தன்னம்பிக்கை வளர இவர்கள் காட்டும் வழி நமக்கு ஒளிகாட்டுகிறது. பண்டைக்காலத்தோடு இன்றய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், தடைக்கற்களை சுட்டிக்காட்டி தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை உருவாக்கித் தருபவர்களை Counsellors, Advisors, Organisers, TeamLeader, Members என்று பெயர் சூட்டி அழைப்பெதெல்லாம் இன்று பெயரளவிலே தான் மாற்றமே தவிர,  செயல் அளவில் பெரிய மாற்றமிருக்காது. அன்று ‘குரு’ என்று சொல்கிறவர்களை இன்று ‘தலைவர்’, ‘வழிகாட்டுபவர்’ என்று சொல்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு திறமையான தலைவனாகச் செயல்படக்கூடிய ஒருவர் (Leader) தன்னுடைய உறுப்பினர்களுக்கு (Team Members) வழிகாட்டியாக இருந்தால், அவர் எடுக்கின்ற செயலும், முடிவும் வளரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. திறமை இருந்தும் ஒரு காரியத்தைத் திறம்பட செய்ய முடியாமல் திணறுபவர்களுக்கு, முதலில் அவர்களை மனக் குழப்பத்தில் இருந்து விடுவித்தால்தான் அவர்கள் திறம்பட செயல்படமுடியும். தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, தாம் சொல்கின்ற பணிகளைத் திறம்பட செய்யும் ஊழியனிடத்தில் காணும் மன சஞ்சலங்களை அகற்றி, அவனிடத்தில் இருக்கும் திறமையை எடுத்துக் காட்டுபவன்தான் மற்றவரிடமிருந்து தனிப்பட்டு “தலைவன்” என்ற தகுதியைப் பெறுகிறான்.  அறிவு, திறமை, பொருமை, ஆற்றல் இவை எல்லா அம்சத்திலும் சிறந்து விளங்கினாலும், தலைவனாகச் செயல்படுபவனுக்கு ‘தெளிவான சிந்தனை’ என்பது மிக மிக அவசியம். அப்பொழுதான் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு எடுத்துக் காட்டாக அமையமுடியும். ஒரு வண்டி சீராக ஓட வேண்டுமானால், இரண்டு சக்கரங்களும் ஒரே அளவாக இருக்கவேண்டும், அதுபோல எண்ணங்கள், செயல்கள் என்ற இரு சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் வண்டியாகிய செய்கின்ற செயல் சிறப்பாக அமையமுடியும். இந்த எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மூலக்காரணமாக அமைவது தெளிவான “மனம்”. என்பதை மையமாக வைத்துதான் கவியரசரின் சிந்தனையில் “வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும், அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்” தமது பாடல் வரிகளை அமைத்து இருப்பார்.

    மனதைக் கட்டுப்படுத்தி, ஆசைக்கு அளவிட்டால் கடையனும் கடைத்தேற்றம் பெறலாம் என்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆசையை அடக்க முடியாமல் இன்று பலர் வாழ்வில் வழி தவறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எல்லாவித இன்ப துன்பங்களுக்கும் மனம் ஒன்றுதான் காரணமாக அமைகிறது. நல்ல மனைவி, தகராறு செய்யாத குழந்தைகள், உறவாடும் சுற்றத்தார்கள் இவர்களோடு அமைதியான முறையில், தனது வருமானத்திற்கேற்றவாறு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான் ஒருவன். அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்கள் எல்லாம் வசதியாக காரில் போவதைப் பார்க்கிறான். இவனுக்கும் லேசாக ஆசை பிறக்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும்?..ஆசை துளிர் விடுகிறது. உடனே வாங்கிவிடு என்று மனது சொல்கிறது, மறு நிமிடம் வேண்டாமென்று மறுக்கிறது. அடுத்த நிமிடம் கடன் வாங்கியாவது கார் வாங்கிவிடு என்று உத்தரவிடுகிறது. படிப்படியாக இந்த சாதாரண ஆசை பேராசையாக உருவெடுத்தது. இப்படித்தான் ஒவ்வொரு நிமிடமும் மனம் என்பது குரங்காக மாறிவிடுகிறது. மனதைக் கண்டபடி அலைபாய விட்டதால் அமைதியான வாழ்க்கையில் சூறாவளி வீசத்தொடங்கியது. இதுவரை கடன் என்று அறியாதவன், ஒரு காலகட்டத்தில் கடனைத் திரும்பச் செலுத்தமுடியாத பெரும் கடனாளி ஆகி  விடுகிறான். பணத்திற்காக ஒழுக்கத்திலிருந்து வழுவுகிறான். ஒழுக்கம் கெட்டவன், நடத்தை கெட்டவன் என்று பெயரெடுக்கிறான். முடிவில் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையையும் சீரழித்துக் விடுகிறான்.

    மக்கள் அறவழியில்  சென்று ஒழுக்கத்தை முறையாகக்  கடைபிடித்து நல்வாழ்க்கை  வாழவேண்டும் என்ற உயரிய  நோக்கத்திற்கு வித்திடுவது ஒழுக்கம் என்பதை வலியுறுத்தினார்கள் பெரியோர்கள். நல்லொழுக்கத்துக்கு முக்கிய வழி ‘மன அடக்கம்’ மற்றும் ‘மனத்தூய்மை’. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளலார் மனதைக் கட்டுப்படுத்தி தனது வாணாள் முழுவதும் நல்லொழுக்கத்தை பேணிக்காத்து தனது வாழ்வில் அதை முழுமையாகக் கடைபிடித்தும் வந்தார். மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கருணைக்கும் இரக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி அருட்செயல் புரிந்து மற்றவரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி சமுதாயத்தை சீர் செய்த சீர்திருத்தவாதியாக, மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்து காட்டினார். மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்ற பொருள் படும். நினைப்பதற்கு உறுதுணையான கருவி மனம். மனத்தையுடையவன் மனிதன். அதிலும் மனத்தை அடக்கியவனே சிறந்த மனிதன் என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். அவருடைய சொற்பொழிவில் இருந்து ஒரு செய்தி, திருவொற்றியூரிலே ஒரு மகான் இருந்தாராம். அவர் ஆலய வழிபாட்டிற்காகச் செல்லும்பொருட்டு, வீதியில் தம்மைக் கடந்து செல்பவர்களைப் பார்த்து அதோ ‘எருமை போகிறது’, ‘நாய் போகிறது’, ‘ஆடு போகிறது’, ‘பூனை போகிறது’ என்று கூறுவாராம். வள்ளலார் தெருவிலே செல்லும்போது அவரைப்பார்த்து “மனிதன் போகின்றான்” என்பாராம். ஆகவே எல்லோரையும் அந்த மகான் மனிதனாகக் கருதவில்லை என்று தெரிகிறது. மண்ணாசை, பொருளாசை, பெண்ணாசையால் நிரம்பி ஆசையினால் லயிக்கப்பட்டுக் கிடந்த மனதை வெறுத்து துறவறம் பூண்ட பட்டினத்தடிகளுக்கு “காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” என்ற வாசகம் தான் அவருக்கு ஞான வழி காட்டியது. ஒரு நொடியில் சட்டென்று மனம் மாறியதால், பெரும் செல்வந்தராக இருந்தும், கடைசியில் சகலத்தையும் துறந்து கோவணம் கட்டிய துறவியானார்

    எண்ணிலடங்கா மஹான்கள், பதினென் சித்தர்கள், இன்றய சிறந்த எழுத்தாளர்கள், மனநல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் மனதைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்கள். மனதை ஒடுக்க, ஒடுக்க மனம் விரிவடைந்து விசாலமடைகிறது. மனம் விசாலமாகிவிட்டால் அங்கே ஈகைக் குணம் குடிகொண்டு விடுகிறது. தீக்குணங்களை விரட்டி அடித்து விடுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள் பொன்னையும் பொருளையும் புலவர்களுக்கும், வறியவர்களுக்கும் வாரி வழங்கினார்களே, இவர்கள் மனத்தைச் செம்மை படுத்தியது எது?…முன்னூருக்கும் மேற்பட்ட கிராமங்களை புலவர் கபிலருக்கு ஈந்தான் பாரி, முல்லைக்கொடிக்குத் தனது பொற்றேரைக் கொடுத்தான். தன்னிடமுள்ள பொருளைக் கொடுக்க இசைகின்ற அதேமனம், தன்னிடம் சேர்ந்து இருக்கின்ற உடலைக் கொடுக்க இசையுமா?… ஒரு புறாவின் அற்ப உயிருக்காக தன் தசையறுத்து துலாவில் ஏறிய வள்ளல்தன்மையைக் கண்டு வியக்காதவர் உண்டோ?…………அவர்களுடைய விசாலமடைந்த மனதிற்குள் விகாரத்து அங்கே இடமில்லை.

    மனத்தை பேய் என்றே குறிப்பிடுகிறார் பதினென் சித்தர்களில் ஒருவரான  அகப்பை சித்தர். அகம் என்றால் மனம் என்றும் பொருள் படும். இவரது உண்மைப் பெயர் அகப்பேய் சித்தர். இவருடைய பாடல்களில் அகத்தை (மனதை) பேய் என்று சித்தரித்து பாடல் எழுதியதாலேயே இவர் அகப்பேய் சித்தர் எனப் பெயர் பெற்றார். பின்னாளில் அகப்பேய் என்ற பெயர் மருவி அகப்பை ஆகிவிட்டார் என்பது பலரது கருத்து. மனதில் தூய்மையான எண்ணங்கள் எழும்போது, நமது முகம் பிரகாசமடைகிறது. மனம் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் முகத்தின் அழகு அமையும். இதைத்தான் “அகத்தின் அழகு முகத்திலே தெரியும்”, “ எண்ணம்போல வாழ்வு”, “எண்ணம்போல செயல்” என்பர். “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பதும் வள்ளுவன் வாக்கு. மனதைப் ஒருநிலைப்படுத்துவது மற்றும் சஞ்சலப்படாமல் எப்படி ஒடுக்குவது என்பது பற்றி அகப்பேய் சித்தர் பாடல்களில் முக்கியத்துவம் பெற்று இருக்கும்.

    குரங்கானது சிறிது நேரமேனும் சும்மாயிராது, ஏதாவது விஷமம் செய்து கொண்டேயிருக்கும். மரத்துக்கு மரம் தாவுவதும், குதிப்பதும், தொங்குவதும் இவற்றுக்குச் சாதாரமான செயல். அதனால்தான் நிலையில்லாத மனித மனத்தையும் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள் கவிஞர்கள். ‘மனித மனம் ஒரு குரங்கு’ என்ற கவியரசரின் பாடல்கள் இங்கே  நினைவுக்கு வரவேண்டும்…….மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தன்னிச்சையாக இயங்கவிடாமல் செய்துவிட்டால், மனமானது தூய்மையாகி என்நேரமும் சஞ்சலத்திற்கு இடம் கொடாமல், அமைதியாகவே இருக்கும்.

    ‘’நில்லென்று  மனதை நிலை நிறுத்தவல்லார்க்கு

    கொல்லென்று  வந்த எமன் குடியோடிப் போனாண்டி’’

    என்பது சித்தர்கள் கண்ட வித்தை. மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி விட்டால், மரணத்தையும்கூட வென்றுவிடலாம் என்பதே சித்தர்கள் கூற்று, இக்கலையைக் கைவரப்பெற்றவர்களின் உயிரை எடுக்க வந்த எமன் கூட அருகில் வராமல் ஒடிவிடுவானாம்.

    ‘குறுமுனி’ என்றும் ‘தலைமைச் சித்தர்’ என்றும் புகழ்பெற்ற அகத்தியர் “மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டா’’ என்கிறார். மனதைச் செம்மைப் படுத்தினால் எல்லாவித சித்திகளையும் பெற்றும் விடலாம் என்கிறார். எல்லா வியாதிகளுக்கும் மருந்துண்டு, மன உளைச்சலுக்கும் உண்டு, ஆனால் மருந்தைவிட மனதில் உள்ள அழுக்குகளை அகற்றிடும் பயிற்ச்சியே அருமருந்தென்று அகத்தியமுனி இங்கே உட்கருத்தாக சூசகமாகத் தெரிவிக்கிறார் என்றே பொருள் கொள்ளவேண்டும்.

    தற்காலத்தில்  அனைத்துமே கணிணியில் சேகரிக்கப்பட்டு சேமிக்கப் படுகிறது. இதில் அவ்வப்போது தேவையில்லாத சமாச்சாரங்களை ரிசைக்கிள் பின் (Recycle bin) என்ற இடத்திற்கு தள்ளிவிடுகிறோம். தேவையில்லாமல் கணிணியின் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் கோப்புகளை (unwanted files) குப்பைத்தொட்டிக்கு (Recycle bin) அனுப்புவது போல, அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனதில் இருத்திக்கொள்ளாமல் உடனே மனதிலிருந்து களைந்து எரிந்து நல்லதைத் தவிர, ஒன்றுக்கும் உபயோகப்படாததை மனதில் சேமித்து வைப்பதை தவிர்க்கவேண்டும்.  இந்தப் பயிற்ச்சி மூலம் விரக்தி, கோபம், துவேஷம், எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றைத் தவிர்த்து மனதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வழி சொல்லுகிறார்கள் மனநல ஆராய்ச்சியாளர்கள்.

    பகவத் கீதையை ஆழ்ந்து படிப்போருக்கு மனதைப் பற்றிய விஷயங்களெல்லாம் தெளிவாக விளங்கும். ஒரு சமயம் மனதைக் கட்டுப்படுத்தமுடியாமல் தடுமாறிய அருச்சுனன், பகவான் கிருஷ்ணனிடம் “ஒரு நிலையில் இல்லாத மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?”…என்று வினவுகிறான். அதற்கு பகவான், நம்முடைய மனதுதான் எல்லாவித செயலுக்கும் காரணமாக அமைகிறது, காற்றைப்போல எந்நேரமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்த இடைவிடாத பயிற்ச்சியினால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் இது யோகத்தினால் கைவரப்பெறும் என்றும் உரைக்கிறார். இறைநம்பிக்கையோடு இடைவிடாத பயிற்சியினால் மனதை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும் என்பதை கீதை மூலம் வலியுறுத்தினார். பலவித மனக்குழப்பத்துக்கும் மனசஞ்சலத்துக்கும் அடிமையாகியிருந்த அருச்சுனனக்கு நல்லுபதேசம் செய்து மனிதப் பிறவிக்கும் கீதையுரை மூலம் நல் வழிகாட்டினான் மாயக் கிருட்டினன்.  மனமே ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மனோதைரியமும், மனக்கட்டுப்பாடும் இருந்தால் மகத்தான சாதனை புரியமுடியும் என்பதை கீதோபதேசத்திலிருந்து எளிதாக அறிந்து கொள்ளமுடியும். சாதனைகளையும், குறிக்கோளையும் எட்டுவதற்கு இந்த ‘மனோதைரியம்’ மனிதனுக்கு மிக அவசியம் என்பதற்கு ஒர் உதாரணத்தை இங்கு எடுத்துச் சொல்ல விழைகிறேன். ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் வீரவிளையாட்டு, அதாவது ‘காளைச்சண்டை’ (Bull Fight) என்பது உலகப் பிரசித்தம். வழக்கமாக நடைபெறும் இந்த மரண விளையாட்டில், ஆக்ரோஷமாக சீறிவரும் காளையை அடக்கி, எப்போதும் வெற்றிவாகை சூடும் ஒரு வாலிபன் கடைசி நேரத்தில் வீரவிளையாட்டில் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு வந்தவுடன் பத்திரிகையாளர்கள் கூட்டம் அவரிடம், ஏன் இந்த திடீர் முடிவு? என்ற கேட்டனர். அதற்கு அவருடைய உடன் பிறந்த சகோதரர் ஒருவர் போட்டியின் போது காளை முட்டி உயிர்துறந்த சம்பவத்தால்தான், வருகின்ற போட்டியில் நான் கலந்து கொள்ள இயலவில்லை என்று பதில் சொன்னார். மைதானத்தில் காளையோடு சண்டைபோடுவதைவிட யாருக்கு வெற்றி?…..யாருக்கு மரணம்?..என்று மனத்துக்குள் நடக்கும் போராட்டமே மேலோங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் ஆறறிவு படைத்த மனிதனுக்கும், ஐந்தறிவு பெற்ற விலங்குக்கும் ஒருவரை ஒருவர் வெல்வதே குறிக்கோள். வெற்றி, தோல்வி, மரணம் என்பதெல்லாம் விலங்குக்குத் தெரியாது, ஒன்று போராடும் அல்லது போராட முடியாமல் தன்னை மாய்த்துக்கொள்ளும். ஆனால் மனிதனோ ஒரு நொடியில் மனம் தளர்ந்து, தன்னம்பிக்கை இழந்து விட்டால் போட்டியிலிருந்து விலகிவிடுகிறான். இப்படித்தான் அந்த வாலிபனும் போட்டி நடக்கும் ஒரு சில வினாடிக்கு முன்பு மனம் மாறிவிட்டான். அன்று பகவான் கீதையில் அருச்சுனனுக்கு வழிகாட்டியதுபோல், அந்த வாலிபனின் திறமையை அறிந்த அவரது ‘கோச்’ என்று சொல்லக்கூடிய(அவரைப் போட்டிக்குத் தயார்படுத்தியவர்) மனக்குழப்பத்தில் இருந்த வீரனுக்கு உற்சாகம் கொடுத்து, போட்டியில் பங்கேற்கச் செய்து காளையை அடக்கி மரணத்தை வென்று வெற்றியைத் தேடித்தந்தார்.

    ஏதோ ஒரு காரணத்தால், சோர்வடைந்த மனதை தக்க சமயத்தில் திசைதிருப்பி உற்சாகமளித்தால், ஆக்கப்பூர்வமான திறமைகள் மனதிலிருந்து வெளிப்படும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆக நமது மனதை உற்சாகத்தோடும், உறுதியோடும் பாதுகாத்துக் கொள்ள நாம் பல வகைகளில் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறோம். மூலைக்கு மூலை வினையகற்றுபவனுக்கு ஆலயம் இருப்பதுபோல, இன்றைக்கு எங்கு நோக்கினும் யோகாசன மையங்கள் ஆக்கிரமித்து விட்டன.  இங்கெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘’மனஅமைதிக்கான வழிகள்’’ என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து வியாபாரமும் செய்கிறார்கள். யோகசன மையங்கள் இன்று வாழ்வில் முக்கியத்துவம் பெற்று மனதையும் உடலையும் பாதுகாக்க வழிசொல்வது அவசியமாகிறது. மருத்துவ மனைகளில் உடல்நிலை பரிசோதனை முடிந்த பிறகு, கடைசியாக ‘மனதை அலசி ஆய்வு செய்யும்’ மனநல மருத்துவரின் சான்றிதழும் (psychiatrist certificate) உடல் நல மருத்துவத்துக்கு அவசியமாகி வருகிறது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

    யார் சொன்னாலும், எங்கு தேடினாலும் எண்ணற்ற  புத்தகங்களைப் புரட்டினாலும், முடிவாக அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தைத்தான் வலியுருத்துகிறார்கள். அதாவது மனசஞ்சலங்களை அகற்றுவதற்கு எங்கும் செல்லவேண்டாம், மன அமைதியில்லாமல் இருக்கும் போது உங்கள் இஷ்ட தேவதையை மனதில் இருத்தி அலுவலகத்திலோ, வீட்டில் தனியாக இருக்கும் போதோ அல்லது அமைதியான ஏதோவதொரு இடத்தில் அமர்ந்து ஒரு பத்து நிமிட நேரம் அமைதி காத்து தியானம் செய்யுங்கள் போதும் என்பதே இதன் ஒட்டுமொத்த சாராம்சம். இதைத்தான் நமது முன்னோர்களும், முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும் நமக்கு விட்டுச் சென்ற ‘வாழ்க்கை ரகசியம்’ என்று கூடச் சொல்லலாம்.

    தொடரும

    படத்திற்கு நன்றி :

    http://suddhasanmargham.blogspot.in/2012_02_01_archive.html

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-19

    பெருவை பார்த்தசாரதி

     

    கடந்த 01-10-12 அன்று “முதியோர்களின் நிலை” என்ற தலைப்பில் வெளியான தனிக்கட்டுரையோடு (http://www.vallamai.com/literature/articles/26855/), இந்தத் தொடரையும் சேர்த்து வாசிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். 

    ஏழை, பணக்காரன், விலங்குகள், பறவைகள் என்ற பேதமில்ல்லாமல், மண்ணுலகில் பிறவி எடுத்த அனைவருக்கும் ‘முதுமை’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி முதுமையில்  துன்பங்களையும் சேர்த்து விடுகிறது. பல குழந்தைகள் அல்லது ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடு, நற்பண்புகள் கொண்டவனாக வளர்த்து விட்டால், அது முதுமையில் அனுபவிக்கும் பல இன்னல்களுக்குத் தீர்வாக அமைந்துவிடும். 

    எங்காவது நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பத்தில் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் விஷயங்களில் எத்தகைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?… ‘தான் பெற்ற குழந்தைகள், தாங்கள் சொல்லுவதைக் கேட்க மறுக்கிறார்கள்’ ‘இப்போது இருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் விரும்புவதைச் செய்வதில்லை’, ‘இன்றய இளையதலைமுறையினர் தவறான பாதையில் செல்லுகின்றனர்’  போன்ற செய்திகளே அதிக அளவில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் செய்திகளில் இடம்பெறுகின்றன. பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்ளுகின்ற பிள்ளைகள், பெரியோர்களின் அறிவுரையை ஏற்க மறுக்கும் சந்ததிகள் இவர்கள் அனைவரையும் அவரவர் குடும்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்ளமுடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறாக நடந்துகொள்ளும்போது அதை அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திருத்த முயற்சித்து, குடும்பம் பிரிந்து விடுவதும் சகஜம். ஒரு பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, சகோதரர்கள் ஒன்று கூடிச் செய்வதில்தான் பெரும்பாலும் சிக்கல்கள் தோன்றுகின்றன. குடும்பத்தை நல்வழியில் நடத்திச் சென்ற வயதான முதியவர்களை யார் வைத்துக் காப்பாற்றுவது?….என்ற தருணத்தில்தான், அவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையையும் தேவைப்படுகிறது.  மதிப்பு மிகுந்த இத்தகய வழிகாட்டலுக்குச் செவிசாய்க்க மறுப்பவர்களுக்கு இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள் வழிகாட்டுகின்றன.          

    வளர்த்த பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அந்திமக் காலத்தில் உயிர் ஊசலாடும் போது, ஆறுதல் சொல்ல பெற்ற பிள்ளகளே வரவில்லை என்கிறபோது வேறு யார்?….வருவார்கள்.  முக்காலமும் உணரும் முனிவர் போல, இதையெல்லாம் முன்பே உணர்ந்ததுபோல் நமது கவியரசர், 1968ல் வெளிவந்த ‘எங்க ஊர் ராஜா’ என்ற படத்திற்காக எழுதிய

    ‘பெட்டியிலே பணமில்லே, பெத்தபுள்ளே சொந்தமில்லே,

    தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு,

    பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா…….’ 

    என்ற பாடல் வரிகளின் முடிவில் 

    சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே”

    என்று எழுதியிருப்பார். இம்மாதிரி பாடல்கள் வேண்டுமானால் முதியோரின் சங்கடங்களுக்குச் சற்று நேரத்திற்கு ஆறுதல் தரும்.         

    உயிரோடு இருக்கும் போது, பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தாலும், இறந்த பின்னும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் தொடருகிறது. தன்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையர் உயிரோடு இருக்கும்போது அவர்களைக் காப்பதும், காலமானபின் அவர்களுக்கு ‘திதிகளைச்’ செய்வதன் மூலம் தொடர்ந்து அவர்களுக்கு மரியாதை அளிப்பதாகக் கூறுகிறார் ‘ஆதிசங்கரர்’. கடமைகளிலேயே மிகச் சிறப்பான கடமை என்பது தனது பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைதான் என்பதை, புராண, இதிகாசங்கள் அவ்வப்போது நமக்கு வலியுறுத்தி உள்ளன. வேத நூல்கள், மனிதன் கடைபிடிக்கவேண்டிய  அறநெறிகள் பற்றிக் குறிப்பிடும்போது, உறவினர்கள் மேல் வைக்கும் பாசத்தையும், பரிவையும், பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை. 

    பன்னிரண்டு ஆண்டுகள் வனவாழ்வு, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை என்ற துன்பங்களை அனுபவித்த போதும், உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பினார் தருமர். குடும்ப ஒற்றுமைக்காக, தருமரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர் தம்பியர் அனைவரும். ஒவ்வொரு முறையும் அதர்மத்துக்குத் துணைபோன உறவினர்களை அழிக்கக் கொதித்தெழுந்தனர் தம்பிமார்கள்.  “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” அரசுரிமைக்காக ஒரே குடும்பத்தில் பிறந்த உறவினர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை உலகமறிந்தால், நாம் எப்படி உலகத்தாரின் நலனுக்கு வழிகாட்டமுடியும்?….என்று சமாதானம் சொன்ன தருமரின் சொல்லுக்கு தம்பிமார்கள் அனைவரும் கட்டுப்பட்டது எதற்காக?….என்பதைச் சற்று சிந்தித்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இன்று கூட கிராமப்புறங்களில் ஒரு குடும்பத்தில் முதலாவதாகப் பிறக்கும் ஆண்குழந்தை, அக்குடும்பத்துக்குக் குலவிலக்காய் இருந்து, குடும்ப நலத்திற்கும், தனது சகோதர, சகோதரிகளிக்கு உற்ற துணையாக இருந்து குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்வான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் “தருமன்” என்ற பெயரைச் சூட்டுவதை வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். 

    பிள்ளைகளின் குணநலன்கள் சிறப்பாக அமைந்துவிட்டால், அதைவிட தாய் தந்தையருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி வேறு ஒன்றுமில்லை. இதற்கு சிறுவயது முதலே அவர்களுக்கு நீதிநெறிகளை எடுத்துச்சொல்லி, இளவயதிலேயே அவர்கள் மனதில் நற்சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் நமக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். மராட்டிய மன்னன் சிவாஜியும், கவி தாகூரும், மஹாத்மாவும் இளமைக் காலத்திலேயே இத்தகைய பாக்கியத்தைப் பெற்றதால்தான், பின்னாளில் உலகம் போற்றும்படி வாழ்ந்தார்கள்.         

    வேதங்கள் காட்டுகின்ற வழிகள் தவிர, பதினெண் புராணங்களும், காப்பியங்களும், மனிதன் பின்பற்றவேண்டிய பல நன்னெறிக் கோட்பாடுகளையும், போதனைகளையும் அளவில்லாமல் அள்ளி வழங்கியிருக்கின்றன. மகாபாரதத்தில் தாய்தந்தையரின் மகிழ்ச்சியே தன்னுடைய மகிழ்சியாகக் கருதிய ஒரு உத்தமரின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது?….தந்தைக்காக தன் வாழ்க்கை முழுவதும் துணையின்றியே வாழ்ந்தான். அரசனாக இருந்த அவனுடைய தந்தை, ஒரு பெண்ணை விரும்பியபொது, அப்பெண் ஒரு வாக்குறுதியை தனக்கு அளித்த பிறகே அவனை மணக்க முடியும் என்பதை வலியுறுத்தினாள்.  தனக்குப் பிறக்கும் வாரிசுக்கே அரசுரிமை அளிக்க வேண்டுமென்பதே அவளுடைய நோக்கம்.  இதனைக் கேள்வியுற்று செய்வதறியாது திகைத்தான் மன்னன். அவனுடைய மூத்த மகன், தந்தையின் விருப்பத்திற்காக, வாரிசுரிமையை விட்டுக்கொடுப்பதற்காக, தனது வாணாள் முழுவதும் மணமுடிக்காமலேயே வாழ்ந்து காட்டினான். குடும்ப நலம்தான் பெரிது என்று கருதியதால், குடும்ப ஒற்றுமைக்காக தம்முடைய தன்னுடைய வாக்குக்குக் கட்டுப்பட்டு, ஒருபோதும், ‘தனது உரிமை’ என்று எதையும் வாழ்நாள் முழுவதும் கோரவில்லை என்பதை இங்கே குறிப்பில் கொள்ளவேண்டும். பின்னாளில், உலகுக்கே நீதி நெறிகளை எடுத்துச் சொல்லும் “பிதாமகர்” என்று உலகத்தாரால் போற்றப்பட்டார் “வீடுமர்”. 

    பொருளாதார வசதியுடன், பணமும், உடலில் சக்தியும் இருக்கின்ற வரையில்தான் இவ்வுலகில் மதிப்பு இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஒரு காலகட்டத்தில் “உன்னால் ஏதாவது பிரயோஜனம் உண்டா”?….என்ற கேள்விக்கான பதிலைப் பொருத்துத்தான் அவரவர்களின் வாழ்க்கை முறையும் அமையும். பெற்ற பிள்ளைகள் கூட தாய் தந்தையருக்குச் செய்கின்ற பணிவிடைகளை ஒரு சுமை!… என்று நினைக்கும் இன்றய சூழ்நிலையில்  பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை தவறாத கண்ணியனுக்கு, ஒரு உதாரணம் ஒன்றையும், இதிகாசங்களிருந்து எடுத்துக் கூற விரும்புகிறேன். 

    வயோதிக பருவத்தில், உடல் நலமின்றி, சக்தியற்று படுக்கையில் இருந்த தாய் தந்தையர்களை மிகவும் அன்போடும், மகிழ்ச்சியோடும் தெளிவான சிந்தனையோடும் ஒருவன் கனிவோடு, முகம் சுளிக்காமல் பொருப்பாகக் கவனித்து வருவதை அந்நாட்டு மன்னன் கேள்விப் பட்டு அவனைச் சந்திக்க அவன் இருப்பிடம் வருகிறான். 

    ‘நான் இந்நாட்டு மன்னன் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன்’……என்று வீட்டு வாசலில் நின்று கூக்குரலிடுகிறான். 

    அவனோ சிறிதும் சட்டை செய்யாமல் தனது பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதில் கவனமாக இருக்கிறான். 

    மறுபடி திரும்பத் திரும்ப அவனை அழைக்கிறான் மன்னன். 

    நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளியாக வரும்போது, நாம் ஏதாவதொரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்போம், அப்போது……. 

    சற்று பொருங்கள்!..இதோ வந்து விடுகிறேன்!…என்று சொல்வதைப் போல், அவனும் 

    சற்று பொறுமய்யா!…நீர் யாராக இருந்தாலும் சரி, நான் எனது பெற்றோர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன், அதை முடித்துவிட்டு உம்மை சந்திக்கிறேன், அதுவரை இதோ இந்தக் கல்லில் உட்காரும், என்று சொல்லி ஒரு செங்கல்லைத் தூக்கி எறிகிறான் அந்தச் சிறுவன். 

    கடமையில் கண்ணாக, இப்படியும் ஒரு சிறுவனா!…இவனைப் பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்!……வந்தவன்!……..வழிந்து ஓடுகிற அழுக்குத் தண்ணீரில் விழுந்த அந்தச் செங்கல்லின்மீது நின்ற படியே அவனுக்கு ஆசி வழங்குகிறான். 

    மன்னனாக வந்தவன் ‘பகவான் விட்டல் ஸ்ரீகிருஷ்ணன்’, அவரைச் சந்திக்காமலேயே அருள் பெற்ற நல்லவன் ‘புண்டரீகன்’ என்ற சிறுவன். 

    நற்குடும்பத்தில் பிறந்த சிறுவன் புண்டரீகனுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்குக் கடமை தவறாது பணிவிடை செய்கின்ற நல்லவர்கள் அனைவருக்குமே இன்றும் அதே செங்கல்லின் மீது நின்று கொண்டே “விட்டல் கிருஷ்ணனாக” பண்டரிபுரத்திலிருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறான். மராத்தியில் ‘விட்’ என்ற சொல்லுக்கு செங்கல் என்ற பொருள் படும். 

    நற்குடும்பத்தில் பிறப்பதே அரிது என்பதை புராணங்கள் கூறுகின்றன. இதுகூட முற்பிறப்பில் செய்த புண்ணிய பலன்களின் வாயிலாகவே இத்தகைய நற்பிறப்பு சாத்தியமாகக் கூடும். ஆக நற்குடும்பம், நற்பிறப்பு என்பதெல்லாம் ஒருவனது நல்ஒழுக்கம், நற்பண்பு, கடமை தவறாமை போன்றவையே தீர்மானிக்கின்றன.  வாழ்க்கையில் மிக உன்னத நிலைக்குச் சென்ற பலரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், அவர்களது முன்னோர்களும் இவர்களைப் போலவே உயர்ந்த நிலையில் வாழ்ந்து இருந்ததை அறியமுடியும். இவர்கள் கூறும் அறிவுரைகளை ஒருகாலும் புறக்கணிக்கக் கூடாது என்பதற்கு, எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி அமைந்த சித்தர் தத்துவப்பாடல் வரிகளில் ஒன்றிரண்டைக் காண்போம். 

    “நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்

    நாலெட்டிலொன்றை நாடித் தள்ளாதே

    பொல்லாங்கி லொன்றும் கொள்ளாதே – கெட்ட

    பொய் மொழிக் கோள்கள் பொருத்த விள்ளாதே”         

    நல்லவர்களின் வார்த்தைகள், சான்றோர்கள் சொன்ன அறங்கள் இவற்றைப் புறக்கணிக்கக்கூடாது. புறம் பேசாமல், பொல்லாத காரியங்களைச் செய்ய வேண்டாம் என்பதை இப்பாடல் விளக்குகிறது. நன்னெறிகளையும், அறநெறிகளையும், இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள் மூலமாக அறிந்துகொண்டாலும், வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நல் ஆலோசனைகளை, வேறு எங்கும் தேடாமல் நம்மை வளர்த்து ஆளாக்கிய, நமது முன்னோர்களின் அனுபவங்களிலிருந்தே, எளிதாகப் பெற்று விட முடியும்!….அதை இன்றளவும் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை?……         

    தொடரும்…..

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-18

    பெருவை பார்த்தசாரதி

    நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலைக்கும், நிகழ்ச்சிக்கும், செயலுக்கும் ஒருவரது உதவியை நாடி அவரிடம் ஆலோசனை பெற்று எடுக்கின்ற காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்கும் யுக்தியை, நமக்கு முன் வாழ்ந்தவர்களது அனுபவங்கள் மூலம் அறிந்து கொண்டு, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்ற ஒருவர் லெளகீக வாழ்க்கைக்கு வழிகாட்டுவது போல், வேறு யாரெல்லாம் நம் ஆனந்த வாழ்க்கைக்கும், ஞான மார்க்கத்தும் வழிகாட்டுகின்றனர்?என்பதை நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், புராண, இதிகாசங்களில் இடம் பெறும் அறநெறிகள் மூலம் பாடம் பெறமுடியும் என்பதே இத்தொடரின் முக்கிய குறிக்கோள். ஆலோசனை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அவசியமாகி, வாழ்வின் இறுதிக் கட்டம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதைத் தொடர்ந்து உதாரணங்கள், மேற்கோள்கள் மூலம் வலியுறுத்துவதே இத்தொடருக்கு இன்னொரு சிறப்பு.

    அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் கடமைகளுள் ஆன்மீகத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அன்றாடம் நாம் சந்திக்கும் இன்ப, துன்பப் படிகளைக் கடந்து வரும்போது, ஏதாவதொரு இடத்தில் தடைக்கல்லாக ஏதோ ஒரு துன்பம் நம்மைத் தடுக்கும்போது, நமக்கு ஆறுதலாக, அருமருந்தாக அந்த நேரத்தில் உதவுவது ஆன்மீகம். ஆனாலும் ஆன்மீகத்தை முழுமையாக அனுபவித்து உணர முடியாமல் திணறும்போது, ஞான வாழ்க்கைக்குக் வழிகாட்டுகின்ற ஆன்மீககுருவின் உதவியைப் பெற தொடர்ந்து ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்.

    உலகில் வாழும் மனிதர்கள் எவருமே துன்பத்தோடும், வருத்தத்தோடும் வாழ விரும்புவதில்லை. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நீடித்திருக்க வேண்டும், சந்தோஷம் எங்கே கிடைக்கிறதோ அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் யாராவது மறுக்கப் போகிறார்களா என்ன?…. ஆக வாழ்க்கையில் எவ்வளவு பொருளாதார வசதிகள் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியும் சந்தோஷமும் இதில் கலந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மற்றவர் உதவியுடன் இதைப் பெறுவதற்கான முயற்சியை வாணாள் முழுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்கள், தொழிலதிபர்கள், தங்கள் வேலையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வருடத்தில் சில நாட்கள் நிம்மதி தேடி ஆன்மீகம் தழைத்திருக்கும் இமாலயம், ஹரித்வார், ரிஷிகேசம், காசி போன்ற புண்ணியத்தலங்களுக்குச் சென்று ஆன்மீகக்குருக்களிடம் அறிவுரை பெற்று வருவதை நாம் படித்திருக்கிறோம். குருவைப் பற்றிய சிந்தனையைத் தொடருவோம்.

    இதிகாசங்களில் குருவாக வருணிக்கப்படுபவர் மும்மூர்த்திகளுக்கும் சம்மானவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “குருபிரம்மா குரு விஷ்ணோ, குருதேவோ மஹேஸ்வரஹா, குரு சாக்ஷாத் பரப்ரும்மம், குரவே நமஹா”…குருவே பிரம்மா, அவரே விஷ்ணு, மஹேஸ்வரன் எல்லாமும், ப்ரப்பிரும்மும் அவரே என்கிறது வேத உபநிஷத்துக்கள். இதிகாசங்களில் கூறப்படும் அறநெறிகளை எடுத்துச் சொல்லி, உலகை நல்வழியில் நடத்திய இத்தொடருக்குப் பொருந்துகின்ற வகையில் அமைகின்ற ஒரு சில குருமார்களைப் பற்றி இந்த நேரத்தில் சற்று மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டுவந்து பிறகு தொடருவோம்.

    அறவழியில் ஆட்சி செய்ய, இஷ்வாகு வம்சத்தின் குலகுருவாக ‘வசிட்டமுனி’, தசரதனுக்கு அவ்வப்போது நல்லுபதேசங்களைத் தந்தருளினார்.

    திருதராஷ்டிரனின் தீய எண்ணங்களைப் போக்கி, அவரை நீதி வழியில் நல்வழிப்படுத்த விதுரன் தன் வாழ்நாளைச் செலவிட்டான். ‘விதுரர்’ உபதேசித்தது அனைத்தும் ‘விதுர நீதி’ என்ற பெயரில் புத்தக வடிவில் இன்றும் உலகுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

    தன்னை யார் என்று அறிவித்து, தாம் அடைந்த முன்வினைகளைக் களைந்து, சந்தத்தினுள் சதாசிவத்தைக் காட்டி, உள்ளுக்குள் இருக்கும் ஞானக் கனலை எழுப்பி, கருத்தறிவித்து தனக்கு ‘விநாயகப் பெருமான்’ அருள் புரிந்ததாக அவ்வை மூதாட்டி விநாயகர் அகவலில் சொல்லியதைப் படித்திருக்கிறொமல்லவா?…

    மாபாரதத்தில், ‘தருமன்’, தனது மற்ற சகோதரர்களுக்கு சகோதரராக மட்டுமல்லாமல், சில சமயம், அவர்களுக்குக் குருவாக இருந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சகோதரர்களையும், நாட்டு மக்களையும் அறவழியில் செயல் பட வைத்திருக்கிறார்.

    ஆஸ்திகப் பெருமக்களுக்கு என்றுமே மானசீக குருவாக திகழ்பவர்கள் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், ஸ்ரீ மத்வர், ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ விவேகானந்தர் போல இன்னும் பலர் இருக்கின்றனர். இன்று இவர்கள் நிலவுலகில் இல்லையென்றாலும், பல தரப்பட்ட மக்கள் தங்கள் மனதில் மானசீக குருவாக இம்மஹான்களையெல்லாம் வரித்துக் கொண்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. கோடானுகோடி மக்களுக்குக் குருவாக இருந்த இவர்கள் அனைவருக்குமே கூட குருவாக அமைந்தவர்களும் உண்டு.

    பதினெட்டு முறைக்கு மேல் இடைவிடாமல் யாத்திரை சென்று, சபரியில் மணிகண்ட சுவாமியை தரிசிப்பவர்கள், குருசாமி பதவிக்குத் தகுதி அடைந்தவராகி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து விடும் தகுதியை அடைகிறார். தன் வழி நடப்பவர்களை நெறிப்படுத்தி, உடலுக்குக் கல்லினாலும், முள்ளினாலும் உண்டாகும் பாதகம் தெரியாமல், நெஞ்சத்துக்கு இதத்தைக் கொடுத்து இறைதரிசனம் செய்துவிக்கும் பணியினால், ஐயப்பகுருசாமிக்கு மட்டுமல்ல, அவரைப் பின்பற்றுபவருக்கும் அது ஆத்ம திருப்தியை அளிக்கிறதல்லவா?

    இன்றைய உலகம் ஒரு அதிஅற்புத உலகம். ஒவ்வொரு பொருளிலும் நாம் ஒரு பாடத்தை ஒருவர் மூலம் கற்றுக் கொள்ள முடியும். தினமும் தொலைக்காட்சியைத் திறந்தால், எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கு இடையில் யாராவது ஒரு மருத்துவர் உடல் வியாதிக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருப்பார். இன்னொருவர் ஆன்மீக விஷயங்களுக்கு விளக்கம் அளித்து மன அமைதிக்கு வழி காட்டுவார். வேதங்களையும் இதிகாஸங்களையும், உபநிஷத்துகளையும் கற்றுத் தேர்ந்து, அதிலுள்ள சாரங்களைப் பக்குவமாகத் தெளிவு பட உரைக்கத் தெரிந்த ஒருவரே, அனைவராலும் ஆன்மீகக்குருவாக எங்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார். அறநெறிகளைத் தவறாக உபதேசித்து, ஆலோசனைகள் எதிர்மறையாக அமைந்தால், குருவின் பதவி அங்கே கேள்விக்குரியதாகி விடுகிறது… அதேபோல

    தனது வாழ்க்கைக்குச் சரியான வழிகாட்டுதலை அளிக்க முடியாத குருவைத் தேர்ந்தெடுத்தாலும் தவறு நேர்ந்து விடும் என்பதை மகாபாரதத்தின் மூலம் அறிய முடியும். அனுவமும், பக்குவமும், திறமையும் ஒருங்கே அமைந்த துரோணாச்சார்யர் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் குருவாக இருந்தாலும், அறிவும், பக்குவமும் இல்லாத வஞ்சக எண்ணம் கொண்ட சகுனியைத்தானே இன்னொரு குருவாகத் துரியோதனன் வரித்துக்கொண்டு அவர் வழி நடந்து அழிவைத் தேடிக்கொண்டான். துரியோதனின் அறியாமையை நீக்கும்படி ஒரு போதும் சகுனி செயல்பட்டதில்லையே!…..

    குருவின் தகுதியைப் பற்றிய கருத்தைத் தனக்கே உரிய பாணியில் ரத்தினச்சுருக்கமாக நான்கு வரிப்பாடலில் திருமூலநாயனார் அவர்கள் அருளிய அருமையான தமிழ்ப்பாடல் ஒன்று:- தகுதிகள் இல்லாத ஒருவரைக் குருவாக அடைந்தால், என்ன நடக்கும் என்பதை மூவாயிரம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த திருமுலர், எளிய தமிழில் யாவரும் புரிந்து கொள்ளும்படி இயற்றிய ‘திருமந்திரம்’ நமக்குத் தெளிவுபட உரைக்கிறது.

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
    குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி
    குருடுங் குருடுங் குழிவிழு மாறே

    அறிவும், பக்குவமும் இல்லாத ஆச்சார்யனைத் (குருவினை) தேர்ந்தெடுத்தால், வாழ்வில் கெடுவர். அறியாமயைக் களையும், நீக்கும் குருவினை ஒரு போதும் இவர்கள் பெற மாட்டார்கள். குருவின் தகுதி இப்படி இருந்தால் என்ன நடக்கும்?.. என்பதற்கு ஒரு உதாரணமும் சொல்லுகிறார். ஒரு குருடனைக் குருவாகத் தேர்ந்தெடுத்த மற்ற இரண்டு குருடர்கள், கூத்தாட்டம் போட்டு, குருட்டாட்டம் ஆடி, முடிவில் கண் தெரியாமல் படுகுழியில் விழுவதைப் போல அமைந்துவிடாமல், குருவைத் தேர்ந்தெடுப்பதற்கு உள்ள அவசியத்தை, ஒரு நான்கு வரிகளில் எளிய பாடலால் விளக்குகிறார். குருவின் தேடுதல் முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற உட்கருத்தை இதை விட அழகாக யாரால்?…. நயம்பட விளக்க முடியும். எப்பொழுதுமே சித்தர் பாடல்கள் மேலோட்டமாகப் புரிவது போல் இருந்தாலும், உட்கருத்தை அறிந்து பொருள் கொள்ள வேண்டுமென்று படித்திருக்கிறேன்.

    குருவின் வழிகாட்டல் வாழ்க்கைக்கு அவசியமா?….. என்ற கேள்வியை முன் வைப்பவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு சிறிய கதை மூலம் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

    ஒரு குருகுலத்தில் படிப்பு முடிந்த பிறகு சீடர்கள் ஒவ்வொருவரும் கல்வியில் முழுமை அடைந்திருக்கிறார்களா என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பது குருவின் கடமை அல்லவா!….

    குருகுலத்தை விட்டுச் செல்லும் சீடர்களிடம்…….
    “வாழ்க்கையில் மிக மிக அரிதாகக் கிடைப்பதும், மதிப்பு வாய்ந்ததும் எது?… கேட்கிறார் குரு.

    தங்கம்தான் மிக அரிதாகக் கிடைப்பது,
    இல்லை வெள்ளிதான்,
    இல்லை, இல்லை வைரம், நவரத்தினம் என்று ஒவ்வொரு சீடரும் ஒரு பொருளைச் சொல்லுகிறார்கள்.

    குருவுக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை ஆதலால், மறுபடி ‘வேறு ஏதாவதொன்று சொல்ல முடியுமா’?… என்று கேட்கிறார்.

    கடைசியில் ஒருவன் “வாழ்க்கையில் மிக மிக அரிதாகக் கிடைப்பதும் மதிப்பு வாய்ந்ததும் ஒன்றே ஒன்றுதான் அது உண்மையான “குருவின் வழிகாட்டல்”.

    ஏன் அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?… குரு

    “நான் எங்கு தேடியும் எனக்கு உண்மையான ‘குரு’ கிடைக்கவில்லை, கடைசியில் இங்கு கல்வி பயின்றதில் குரு போதனையால் அனைத்துக் கலைகளிலும் பூரண தேர்ச்சி பெற்றேன். நம்மிடத்தில் இருக்கும் திறமைகளை நாம் அறியாவிட்டாலும், அதை அறிந்து வெளிக்கொணர்வது, நமக்குக் குருவாக அமைவதைப் பொருத்தே அமையும் என்பதை அறிந்தேன். எல்லாம் எளிதாகக் கிடைக்கும் இந்த உலகத்தில், ஒருவருக்கு மிக மிக அரிதாகக் கிடைப்பதும், அமைவதும் ‘உண்மையான குருவும் அவரது போதனையும்’ என்பதை இங்கு உணர்ந்தேன்”.

    ‘சீடனின் விரிவான விளக்கத்தால்’ குருவுக்கு திருப்தி ஏற்பட்டது.

    (தொடரும்)

    Share
  • வயதானபின் மனிதனின் நிலை

    பெருவை பார்த்தசாரதி

    மண்ணில் பிறந்த மனிதர்கள் அனைவரும், குடும்பத்திற்காகவும், தனது சந்ததிகளின் நலனுக்காகவும் உழைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கிறோம். தேகத்தில் சக்தி நிலையாக இருக்கும்போது, குடும்பத்தினர் தவிர பிறருக்காகவும் உழைக்க வேண்டியிருக்கிறது. இப்படி உழைத்துக் கொண்டே இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் தேக சக்தி குறைந்து, பெரியோர்கள், வயதானவர்கள், முதியோர்கள் என்ற நிலைக்கு வரும்போது பிறருடைய உதவியுடன் வாழும் நிலை வருகிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தரும் வரை மாடாக உழைத்து, மண்வெட்டியாகத் தேகம் தேய்ந்து, வயதான காலத்தில் ஓய்வெடுக்கும் நிலையில், உடல் ரீதியாகப் பலவித சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலை, தவிர்க்க முடியாக துன்பங்களில் ஒன்றாகி விடுகிறது. யாருக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்டோமோ?.. யாருக்காகச் செல்வம் சேர்க்கப் பாடுபட்டோமோ?.. அவர்களால்கூட கடைசி காலக் கட்டத்தில், தங்களுக்கு உதவமுடியாத சூழ்நிலையும் முதுமையோடு ஒட்டிக் கொள்கிறது.

    கூட்டுக் குடும்பத்துடன் தொடங்கி குதூகலமாக வாழ்க்கை நடத்தியவர்கள், முடிவில் தங்களால் வளர்த்து ஆளாக்கியவர்களால் கைவிடப்பட்டு முதியோர் இல்லங்களில் வாழும் நிலை இன்று நகர்ப்புறங்களில் பெருகி வருவது எதனால்?. குறுகிய காலத்தில் பெருந்தொகை ஈட்ட வியாபாரக் கூடமாகி விட்ட கல்வி நிலையங்களைப் போல, முதியோர் இல்லம் என்ற வணிகமும் சேர்ந்து பெருகி விட்டது. “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக” இந்தத் தொழில்கள் வளர்ந்து வருவதே இதற்குச் சான்று. ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க பெற்றோர்கள் படும் இன்னல்கள், முதுமை அடைந்த பிறகும் அவர்களைத் தொடர்கிறது. சிறுவயதில் பாடுபட்டு, பின்னால் எல்லா சக்தியையும் இழந்து விட்ட நிலையில், சில சமயம், சந்ததிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் முதுமையுடன் சேர்ந்து வருகிறது.

    பிள்ளைகளும் மருமகள்களும் அல்லது மகளும் மாப்பிள்ளையும் இருவருமே அலுவலகம் செல்பவர்கள், சொந்தமாகத் தொழில் என்று வாழ்நாளில் பாதியை வெளியூரிலேயே கழிப்பவர்கள், வசதிகள் இருந்தும் சமூக அந்தஸ்துக்காகப் பெற்றோர்களை விலக்கி வாழ்பவர்கள், குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கின்ற அண்ணன் தம்பிகள், இவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களால் இனி நம் பெற்றோர்களைச் சரிவரக் கவனிக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்படும்போது, இவர்களைப் பராமரிக்கின்ற இல்லங்களின் அவசியத்தை நாட வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.

    இந்த நிலையில், இளம் வயதில் சந்ததிகளின் நலனுக்காகப் பாடுபட்டு படிப்படியாக மாறி வயதான நிலைக்கு வரும்போது, குடும்பத்தில் நிலவும் சில அசெளகர்யங்களால் குடும்பம் தவிர்த்து, வெளி இல்லங்களில் வாழும் முறைக்கும் தங்களை மாற்றிக்கொள்வது நல்லது என்று வயதானவர்கள் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் ஆளாகிறார்கள். பண்டைய காலத்தில் வயதானவர்களைப் பராமரிப்பதில் அசெளகர்யம் ஏற்பட்டாலும், சந்ததிகள் அதைப் பொருட்படுத்தாது, முதியோர்களைக் காப்பாற்றினார்கள். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சந்ததிகள் வெளிநாட்டிலே பணிபுரிகிறார்கள், தொழில் ரீதியாக உலகெங்கும் வலம் வருபவர்கள், தன் மனைவியையும், பிள்ளைகளையுமே சரிவர கவனிக்க முடியாத சூழ்நிலையில் தங்கள் பெற்றோர்களை அன்புடன் கவனிக்க முடியவில்லை என்பது அவர்கள் வைக்கின்ற வாதம்… ஒருபுறம்.

    மறுபுறம்!…….
    உள்ளூரிலேயே நல்ல வசதியுடன் வாழ்பவர்கள் ஏன் தங்களது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய்த் தள்ளுகிறார்கள்?… தனக்காக வாழாமல் சந்ததிகளுக்காக வாழ்ந்து, தங்களால் சேர்த்து வைக்கப்பட்ட பெரும் செல்வத்தை அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெற்ற அதே சந்ததிகள், பெற்றோர்களின் அந்திமக் காலத்தில் அவர்களைக் கை கழுவி விட்டு, அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க முயற்சி செய்வதும் கேள்விக்குறிய ஒன்று. வயதானவர்கள் விரும்புவது பணம் அல்ல, மாறாக பந்தம், அரவணைப்பு மற்றும் ஆறுதல் தேடி ஓடுபவர்கள் அனேகம். பல குழந்தைகளுக்குத் தகப்பன் ஆகும் பாக்கியம் பெற்றவர்கள், வாழ்வின் கடைசி காலத்தில், தன்னருகே ஒருவர் கூட இல்லாமல் உயிர் நீத்த துர்பாக்கியத்தையும் அனுபவித்து இருக்கிறார்கள். அதேபோல, உயிரோடு இருக்கும்போது பெற்றோர்களுக்கு உதவாமல், இறந்த பிறகு ஈமக்கடன் செய்வதில் பெருமை அடையும் சந்ததிகளையும் பார்க்கிறோம். இப்படிச் செய்பவர்களுக்கு, இதே அவல நிலை நமக்கும் வராது என்று என்ன நிச்சயம்!…

    வயதான காலத்தில் வரும் பிரச்சினைகளை மட்டுமே பெரிது படுத்திப் பார்க்காமல், இதற்குத் தீர்வு காணும் விதத்திலும் அனைவரும் சற்று யோசிக்க வேண்டும்!….நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும், பிள்ளைகளால் சரிவரக் கவனிக்க முடியாத நிலையில், முதியோர் இல்லத்தில் வாழும் வயதான பெண்மணி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம், முதியோர் இல்லத்தின் சூழ்நிலையைப் பற்றிய ஆய்வையும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    வயதான காலத்தில், தங்களைக் கவனிப்பார் இல்லை என்ற சூழ்நிலையைச் சமாளிக்க முடியவில்லை என்றால், வெளி இல்லங்களில் வாழ்வதற்கும் நம்மை நாமே தயாராக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வருவது இயற்கைதானே!…. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், வேறு வழியில்லாமல், வெளி இல்லங்களில் வாழும் இழிந்த நிலை வரும்போது, இன்று முதியோர்கள் முகம் சுளிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்ற தகவல் சற்று நிம்மதி தருகிறது. சொந்த வீடுகளில் நாம் அனுபவிக்கின்ற அனைத்து வசதிகளும், கட்டணத்தைப் பொருத்துத் தரமான முதியோர் இல்லங்களில் கிடைக்கிறது. உறவினர்களாலும், பிள்ளைகளாலும் சொந்த வீட்டிலே பட்ட அவமானங்களும், அசெளகர்யங்களும், உதாசீனங்களும் இங்கே இல்லை. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்குப் பொதுவான முதியோர் இல்லம் (common old age homes), வசதி உள்ளவர்களுக்கு தனிப்பட்ட முதியோர் காப்பகம் (gated community) என்று வசதி வாய்ப்புகள் இன்று பெருகிவிட்டன. வயதான காலத்தில் நல்ல முறையில் வாழ, ஆயுட் காப்பீடு, ஓய்வூதியப் பென்ஷன் போன்றவற்றில் முதலீடு செய்வது போல், இன்றைக்கு “உங்களுக்கென்று தனியாக ஒரு முதியோர் இல்லம் (Gated community for old age people) கட்டித்தருகிறோம்” என்ற விளம்பரங்களையும் நாம் பத்திரிகைகளில் பார்க்கிறோம். உடல் நலத்தோடு நன்றாகச் சம்பாதிக்கும் போதே இம்மாதிரித் திட்டங்களில் முதலீடு செய்வதும் பிற்காலத்தில் வசதியாக, நிம்மதியாக வாழ உதவும்.

    இம்மாதிரிப் பிரச்சினைகளுக்கு, இன்னொரு ஆறுதலான விஷயம், வயதான முதியோர்களைப் பாதுகாக்க தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றைக் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி காவல் துறை மூலம் அறிமுகப் படுத்தியுள்ளது. தனியாக வாழும் முதியோர், பெண்கள், குழந்தைகள் இவர்களைப் பாதுகாக்கவும், இவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர போலீஸ் கமிஷனருக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த இடத்தில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளராகப் பணியாற்றும் பெண் போலீசார் இதற்கு உதவி செய்வார். 60 வயது முதல் 100 வயது வரையிலான ஆண், பெண் முதியவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இவர்கள் உதவி செய்வார்கள். உடனுக்குடன் புகார்களைத் தெரிவிக்க, பிரத்யேகமான தொலைபேசி எண்ணையும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தப் புதிய பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதியோர்கள், உறவினர் அல்லாதோர், பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிகின்ற பட்சத்தில், தனியாக வாழும் வயது முதிர்ந்தோர் போன்றவர்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தை அணுகி பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

    இந்தக் கட்டுரையின் நோக்கமே, மனிதனாகப் பிறந்து விட்டால், அவன் கடைப்பிடிக்கவேண்டிய அனைத்துக் கடமைகளும் கூடவே வந்து விடுகிறது, அவற்றுள் மிக முக்கியமான கடமையாக, வயதான பின் பெற்றோர்களைக் காப்பது என்பதை வலியுறுத்துவதுதான். எல்லோர் வீட்டிலும், பூஜை அறையில் பல தெய்வங்களின் படங்களுக்கு அருகாமையில், நமது மூதாதையர் படங்களையும் இடம் பெறச்செய்கின்றோமே, அது எதற்காக?…. என்று சிந்தனை செய்ய வேண்டும். அனுதினமும், பூஜை அறையைத் திறக்கும் போது, அவன் செய்ய வேண்டிய கடமைகளை, அந்தப் படங்கள் அறிவுறுத்தும். இன்று வாழ்கின்ற நல்வாழ்க்கைக்கு, நமது மூதாதையர்களே காரணம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

    ஒவ்வொரு வருடமும், அக்டோபர் முதல் தேதியை, “உலக முதியோர் தினம்” என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அன்றைய தினம், தவிர்க்க முடியாத சூழ்நிலையால், முதியோர் இல்லங்களில் வாழும் முதியவர்களை உறவினர்களோடு குடும்பத்துடன் இணைத்து, அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அனைவருக்கும் நினைவூட்டுவோம்.

    Share