பெருவை பார்த்தசாரதி

 

(19-02-1855 – 28-04-1942)

பண்டிதர்க்கெல்லாம் பண்டிதரான ‘மஹாமஹாஉபாத்தியாயர்’என்ற  த்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதய்யர் அவர்களின் 157 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றய தினம் அவரைப்பற்றி நம் சிந்தனையைச் செலுத்துவோம். சுருக்கமாக அவரது பெயரை ‘உவேசா’ என்பதைவிட “தமிழ்தாத்தா” என்று சொன்னால் தமிழ்மக்கள் அனைவரும் அறிவர்.

உண்மையாகச் சொல்லப்போனால், வாழ்நாள் முழுவதையும், தமிழுக்காக அற்பணித்த அவருக்குக் கிடைத்த வெகுமதி, ஏனையோரைக் காட்டிலும் மிகக் குறைவே.

ஒவ்வொரு வருடமும் உவேசா அவர்கள் பிறந்த திருவாருர் மாவட்டத்தைச் சேர்ந்த “உத்தமதானபுரம்” கிராமத்தில், அவருடைய நினைவு இல்லத்தில் தமிழ்சங்கங்கள் பல கூடி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தும், நாடெங்கிலும் உள்ள உவேசா அவர்களின் திரு உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவிக்கப் படும். இது தொடர்ந்தாலும், இதுவரை அவரது நினைவு இல்லம் புதுப்பிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் இருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகும்போது, தமிழ்மேல் பற்றுள்ளவர்களை வருத்தமடையச் செய்கிறது.

கடந்த 16-09-2012 அன்று, ஒரு துயரமான செய்தி ஒன்று ‘தி ஹிண்டு’ நாளிதழில் வெளியானது. திருவெட்டீஸ்வரன்பேட்டையில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்த “உவேசா இல்லம்” என்ற பெயர்ப்பலகை நீக்கப்பட்டு, தமிழ்மக்களின் தலையில் இடிவிழுந்ததுபோல், அந்த உத்தமரின் வீடும் கடப்பாறையால் இடிக்கப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் பலர் இச்செய்தி கேட்டறிந்து, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியதாகக் தகவல், அந்த இடத்தைப் பற்றி தற்போதுள்ள நிலை குறித்து அறியமுடியவில்லை.

வெளி இணைப்புகள்

http://www.thehindu.com/news/cities/chennai/article3901883.ece

தமது சிறு வயதில் உவேசா அவர்கள் பெற்ற பட்டங்களையும், ஓலைச்சுவடிகளைச் சேகரிக்க எப்படி அரும்பாடுபட்டார் என்பதையும் 21-02-2012 அன்று வல்லமையில் குறிப்பிட்டிருந்ததையும், இங்கே நினைவு கூற விழைகிறேன்.

http://www.vallamai.com/literature/articles/16553/

ஓலைச்சுவடியில் இருந்த பழங்காலத்து இலக்கியங்களை அச்சிட்டு, தமிழுக்காகத் தொண்டாற்றி தனது வாழ்நாள் முழுவதையும் அற்பணித்த தமிழ்தாத்தாவின் புகழ் ‘தமிழ்நாட்டின்’ புகழாகும். ‘கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப்புலவன்’ என்று மஹாகவியால் பாராட்டு பெற்ற ‘உவேசா’ அவர்களின் பெயரில் இதுவரை ஒரு பல்கலைக்கழகமோ, கல்வி நிறுவனமோ தமிழ்நாட்டில் இல்லை என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் வருத்தமளிக்கவே செய்கிறது,

3 thoughts on ““தமிழ்தாத்தா” பிறந்த நாள்

  1. ’தமிழ்த்தாத்தா’ தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டு வார்த்தைகளால் விவரிக்க இயலாப் பெருந்தொண்டு. அவர்மட்டும் இல்லையேல் சங்க இலக்கியங்களை நாம் கண்ணால் கண்டிருக்க முடியுமா? பண்டைய தமிழர்தம் பண்பட்ட நாகரிகத்தின் அடையாளச் சின்னங்கள் அல்லவா அவை!
    பெரும்பேராசிரியர் (மஹாமஹோபாத்தியாயர்) உவேசா வாழ்ந்த இல்லத்தையும், அவர் மீட்டுத்தந்த தமிழ்ச் செல்வங்களையும் கண்போல் காக்கவேண்டியது தமிழர்தம் தலையாயக் கடனாகும்.
    தமிழ்த்தாத்தாவை அவர்தம் பிறந்தநாளில் நினைவுகூர்ந்த ’நல்வழிகாட்டி’ திரு. பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றிகள் பல!

    -மேகலா

  2. உங்கள் ஆதங்கம் நியாயமானது. யாரேனும் முயற்சி எடுத்தால் ஒருவேளை நிறைவேறலாம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க