ரிஷி ரவீந்திரன்

 

பால்ய காலத்தில் மழையில் நனைந்து ரசிப்பது மிகவும் பிடிக்கும்..

கல்லூரிக்காலங்களில் எங்கள் கிராமத்திலிருந்து கல்லூரிக்கு சைக்கிளில் பயணிப்பது வழக்கம்.பெருமழைக் காலங்களில் சிலசமயம் சைக்கிளை மேற்செலுத்த இயலாமல் பேய்மழை கண்களை மறைக்கும். ஒரு புறம் மழையில் நனைவதென்பது  மற்றவர்கள் நினைப்பது போல் எதோ ஷவர் பாத்தில் தூவாளையாகக் குளிப்பது போலன்று.

எங்கள் கிராமங்களில் பெய்யும் மழையானது பேய்மழை ! கன்னத்திலும் உடலிலும் பொளேர் பொளேர் என அறையும். அதிக திசைவேகத்துடன் புவியீர்ப்பு முடுக்கத்தினால் வேகமாய் நம் மீது வந்தறையும். அறைதலின் வலி அனுபவித்தவர்களுக்கே புரியும். ஒரு புறம் புத்தகப் பை முழுதும் நனைந்து பேனா மசியினால் எழுதிய த்துக்களெல்லாம் மறைந்து போகும்.

என் கல்லூரிக் காலங்களில் எங்கள் கிராமத்திலிருந்து அந்தக் கல்லூரிக்கு தினமும் ஒரு 21 + 21 கிலோமீட்டர்கள் காட்டுப் பாதையில் சைக்கிள் பயணம். அப்பொழுதெல்லாம் நான் பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. நோட்டீஸ்களின் பின்புறம் வெறுமையாய் இருக்கும். அப்பக்கங்களை இணைத்து நானே ஒரு நோட்டுப் புத்தகம் தயாரித்துக்கொள்வேன். அதில்தான் பாடங்கள் எழுதிவைப்பேன். இந்த மழையினால் பேனா மைய்யும் கறைந்து அத்துடன் அந்த நோட்டீஸிலுள்ள வண்ணங்களும் கறைந்து ….. புத்தகப் பை ஒருவித புது வண்ணத்தில் நிறம் மாறியிருக்கும்.

மழையினால் காட்டுப் பாதை சகதியாயிருக்கும். கரிசல் நிலங்கள். மேற்கொண்டு சைக்கிளைச் செலுத்த இயலாது. மெல்ல உருட்டிக்கொண்டே நடைபயிலவேண்டும். மழை வலுக்கும். நிலம் வழுக்கும். மரங்களின் கீழே ங்கலாமாவென்றால், மரங்கள் இடி, மின்னல்களை வெகுவாய் ஈர்க்கும் என்ற என் பெளதிக அறிவு தடுக்கும். மேற்கொண்டு பாம்புகள் நம்மை எப்பொழுதும் அன்பாய் ஓட ஓட விரட்டும், குறிப்பாக இந்த மழைக் காலங்களில்…!

நோட்டுக் குறிப்புக்கள் காணாமல் போவதில் எனக்கு சிறிதும் வருத்தமே ஏற்படுவதில்லை. என் சைக்கிள் பயணத்திலேயே நியூட்டனும், ஐன்ஸ்டீனும், ரூதர்ஃபோர்டும் ஆசானாய் பெளதிகப் பாடங்கள் வெகு ஆர்வமாய் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பர்.

நோட்டுப் புத்தகத்தில் அழிந்து போனவைகளை மீண்டுமொருமுறை என் நினைவுப் பெட்டகத்திலிருந்து மீட்டெடுத்துவிடுவேன். பெளதிகமும் கணக்கும் தவிர மற்ற பாடங்களனைத்தும் வேப்பங்காயாகியிருந்தது. குறிப்பாக வேதியியல் மற்றும் ஆங்கிலம்.

மழையினால் பலமுறை பாடசாலைகளும் கல்லூரிகளும் விடுப்பாகிவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.(I Love School, When it is closed….!) ஒருமுறை நான் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்க ஒரு பெரும் புயல் ஒன்று வீசியது. புயல் ஒருவார காலம் நீண்டது. இதனால் நடக்கவிருந்த எங்களது பல்கலைக் கழகத் தேர்வுகள் ரத்தானது கண்டு எனக்கு சொல்லொணா இன்பம் ஏற்பட்டு அந்த புயலிலும் என் அறையிலிருந்து வெளியே ஓடிவந்து மொட்டை மாடிக்குச் சென்று அப்பொழுது பெய்த மழையில் நனைந்து நடனமாடியது ஒரே உற்சாகமாயிருந்தது.

நடுக்காடுகளில் மழைபொழியும் பொழுது நனைவதில் எனக்கு வெகு ஆனந்தம். நம்மைச் சுற்றி யாரும் இருப்பதில்லை. மக்களின் பார்வை இல்லை. சர்வ சுதந்திரம். அங்கே நனைந்து கொண்டே நடனமாடுவது, தொடர்ந்து மழையில் நனைந்து அதன் லயத்துடன் நம் லயத்தினையும் ஒன்றிணைப்பது ஏறக்குறைய ஒரு நெடுந்தவம் செய்த பரம திருப்தி கிடைக்கும்.

மழைக்காலங்களின் சைக்கிள் பயணத்தில் தவறாமல் ஒரு கொங்காணி( கொங்காணி என்பது கோணிப்பையில் செய்யப்படும் மழைத் தடுப்பு்) எடுத்துச் செல்லப் பணிக்கப்படுவேன் வீட்டினரால். ஆனாலும் இந்தப் பெருமழையில்
கொங்காணிகளினால் ஒரு பயனும் விளைவதில்லை. மாறாக மழையில் அதுவும் நனைவதால் அதனது எடை கூடி நமக்கு அது ஒரு சுமையாகிப் போய்விடுவதுண்டு

நெடும்பயணத்தில். குடை மழைக்காற்றில் அடித்துச் செல்லப்படும். பல குடைகளை நான் மழைக்காற்றினால் இழந்ததுண்டு. சில குடைகள் வளைந்து நெளிந்து உருக்குலைந்து போனதுமுண்டு. குடை பிடித்துக்கொண்டு காட்டுவழியே நெடும் சைக்கிள் பயணம் அந்தப் பெரும் மழையுடன் கூடிய பேய்க்காற்றில் சிரமமே. சில நேரங்களில் பனிக்கட்டி மழை விழுவதுண்டு. பனிக்கட்டிகள் என்பது எங்கள் பால்ய காலத்தில் அரிதான ஒன்றே.

அப்பொழுதெல்லாம் எங்கள் சுற்றுவட்டாரங்களில் சிவகாசி போன்ற நகர்களில் மட்டுமே உயர்குடிகளிடம் செயற்கை பனிக்கட்டிகளின் பயன்பாடு இருந்தது. ஜன்னலை ஊடுருவி பனிக்கட்டி மழை வீட்டினுள்ளும் வருகை புரியும். நான் வீட்டின் பரந்து விரிந்து கிடக்கும் நிலவெளிக்கு ஓடிச்சென்று பனிக்கட்டிகளைப் பொறுக்கி ஒரு எவர்சில்வர் தூக்கிவாளியில் போட்டு அதன் வெளிப்புறம் சிறிது நேரத்தில் நீர்த்திவலைகள் ஜனிப்பதைக் கண்டு ரசிப்பேன். அது வியர்வை போல் வியர்த்திருப்பதைப் போல் எனக்குள் ஒரு வித பிரமிப்பு ஏற்படுத்தும்.

அப்பொழுதெல்லாம் எனக்குள் ஆழ் சிந்தனை ஏற்படும். இது எப்படி நீர்த்திவலைகள் எவர்சில்வர் தூக்குவாளியின் பின்புறத்தில் பிறப்பிக்கின்றது ? என ஆச்சர்ய அலைகளை அது ஏற்படுத்தும். அப்பொழுதெல்லாம்Properties of Matterஐ சரியாகப் புரிந்துகொள்ளாத பால்ய காலப் பிராயம்.

ஆனாலும் ஒன்று மட்டும் புரிந்தது. ஒன்று இன்னொறாக மாறுகின்றதோ….? என ஆச்சரியப்படுவேன். அந்த நீர்த்திவலைகள தொட்டுப் பார்ப்பேன். அதனது சில்லென்ற வெப்பம் எனக்குள் பரவசமேற்படுத்தும். மழை பெய்யும் சிறிது நேரத்திற்கெல்லாம் இயற்கையே நீரானது ஒரு ஆறு போன்ற அமைப்பினை ஏற்படுத்திவிடுவது எனக்குள் மிகப் பெரிய ஆச்சர்யம் விளைவிக்கும். மழை நீரானது ஓடிக்கொண்டிருக்கும் அதன் அழகு அபாரம். அந்த
நீரில் மழைத் துளிகள் விழும்பொழுது நீர் மேற்பரப்பில் அது ஏற்படுத்தும் ஒரு வித அழகான வட்டவடிவ அமைப்பும் அதன் கடைசி துளி நீருடன் சங்கமிக்கும் அந்த அழகும் ஆயிரம் ஃபில்டர் காஃபிகளை ரசித்து ருசித்துக் குடிப்பதைவிட ஒரு படிமேலான லயமான ஒருவித சுகானுபவம். அது ஏற்படுத்தும் ஒலியானது ஆயிரக்கணக்கான இளையராஜாக்களைத் தன்னுள் ஒளித்துவைத்திருக்கின்றதோ என பிரமிப்பேன்.

மழையில் நனையும்பொழுது மேலே அண்ணாந்து பார்ப்பேன். சில சமயங்களில் சூரிய ஒளியானது வானில் நீர்த்திவலைகளில் பட்டு நிறப்பிரிகைகளை ஏற்படுத்தி வானவிற்களை ஜனிக்க வைத்திருப்பதை (எங்கள் கிராமங்களில், ‘ராமர் வில் விட்ருக்கார்…’ என்போம்) பலமுறை ரசித்திருக்கின்றேன். மழை நீர்த் திவலைகள் இலைகளிலிருந்து சொட்டுச் சொட்டாக விழுவதைக் கவனித்தாலே ஆயிரம் தவங்களுக்குச் சமம். அதன் அழகே அழகு. ஒரே சீராக ஒருவித லயத்துடன் இலைகளிலிருந்து நீர்த்திவலைகளானது புவியினை நோக்கிவிழுவது, அடடா… எத்தனை அழகு….!

மழைபொழிந்த சில சமயங்களில் நீரினால் பாம்புகள் அடித்துச் செல்லப்படுவதுண்டு. அது நீரினில் துள்ளிக்கொண்டே செல்லும். மீன்களும் மழைநீரினால் அடித்துச் செல்லப்படுவதுண்டு. சில மீன்கள் நீரின்
மேற்பரப்பில் துள்ளித் துள்ளி நடனமாடித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும். எனக்கென்னவோ அந்த மீன்களும் என்னைப் போல் மழையினில் நனைய ஆசைப்படுவதாய்த்தான் நான் நினைப்பதுண்டு. அவைகள் அதிக உற்சாகமாய் நீரின் மேற்பரப்பில் துள்ளிக்கொண்டிருக்கும். ச்ச்ச்சடேரென கொக்குகள் மிக லாவகமாகத் தங்களது அலகினால் அவைகளைக் கவர்ந்து செல்லும். அலகுகளினிடையே மாட்டிக்கொண்டும் மீன்கள் துள்ளி நெளியும். நான் அப்பொழுதெல்லாம் அது மழையில் மகிழ்ச்சியாக நடனமாடுகின்றதோ என எண்ணிக்கொண்டாலும் அதன் மரணபயமும் என்னை பயமுறுத்தும். சில நேரங்களில் பாம்புகள் அவைகளை நீர்ப்பயணத்திலேயே விழுங்குவதும் எனக்குள் கிலியினை ஏற்படுத்தும்.என்னையொத்த பல சிறார்களும் பல பெரியோர்களும் நீரினை லாவகமாக
நீர்பரப்பிற்கு வெளியேத் தட்டிவிட அதிலிருந்து சில கெண்டை,அயிரை,கெளுத்தி ரக மீன்கள் தரையில் நடனமாடுவதைக் கண்டு ரசிப்பதைவிட உடனே அதனை எடுத்து சூட்டான் போட்டு சாப்பிடுபவர்களே திகமாகியிருந்தனர். அந்த மீன்களானது எதையோ சொல்ல முயல்கின்றது. என்னை ஏன் நீரிலிருந்து பிரித்தாய்….?
உனக்கு இது அதர்மமாய் படவில்லையா…..? என்பதைப் போலிருக்கும்.

நீரினால் அடித்துச் செல்லப்படும் சில பாம்புகள் நீரின் மேற்பரப்பில் துள்ளி விளையாடிக்கொண்டே செல்லும் சில மீன்களை லாவகமாய்த் தன் வாய்க்குள் தள்ளுவதைக் கண்டு இயற்கையின் கோட்பாடே இதுதானோ என எண்ணிக்கொள்வேன்.

வலிமைவாய்ந்தவை வாழ்கின்றன. போராட்டத்தில் வெற்றி பெறுபவை வாழ்கின்றன. மற்றவை சாகின்றன என டார்வினின் தியரி ஃப்ளாஷ் ஆக அவ்வப்பொழுது மனதினில் வந்து மறையும்.ஒருமுறை நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் படிக்கும்பொழுது ஒரு பெருத்த மழை, புயலின் காரணமாக எங்கெங்கும் ஒரே வெள்ளம், இடிபாடுகளும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன. மழை நின்றவுடன் நாங்கள் வழக்கமாய் ஒன்று சேரும் தோப்பிற்குச் சென்றால் அங்கே அந்த பிரமாண்டமான ஆலமரம் சாய்ந்துகிடந்தது. எங்களனைவருக்கும் சோகம் கப்பிக்கொண்டது. ஏனெனில் அம்மரத்திற்கென ஒரு சரித்திரம் உண்டு.

எங்கள் கிராமத்தில் நாச்சியாரம்மாள் என்ற பெண் கடவுளர் பிறந்ததாய் ஒரு சரித்திரம் உண்டு. நாராயணசாமி எங்கள் கிராமத்திற்கு வந்து நாச்சியாரம்மாள் அவர்களைக் க்ரம்பிடித்ததாய் ஒரு வரலாறு. இதன் நிமித்தமாக ஆண்டிற்கொருமுறை நாராயணசாமியும் நாச்சியாரம்மாளும் தம்பதி சமேதரராய் எங்கள் கிராமத்திற்குத் திருத்தங்கல்லிலிருந்து ஒவ்வொரு பங்குனி மாதத்திலும் வருகை புரிவர். அவர்களின் வருகை மற்றெல்லா பண்டிகைகளையும்விட வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே நாங்கள் தயாராகிக்கொண்டிருப்போம்.

இத்திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் முறுக்கு சுடுவது என்பது ஒரு வழக்கம். காலப்போக்கில் ‘முறுக்குச்சாமி’ என மறுவிப்போனது. இன்றும் இந்த விழா கொண்டாடப்படுகின்றது.

நாராயணசாமியும் நாச்சியாரம்மாளும் திருத்தங்கல்லிலிருந்து பல்லக்கில் வருகை புரியும்பொழுது எங்கள் ஊர் கிருஷ்ணன் கோவிலின் எல்கைக்கு வெளியே இரண்டு ஆலமரங்கள் இருந்தன. இவை பறவைகளின் சரணாலயமாகத் திகழ்ந்தன. ஒரு மரம் நாச்சியாரம்மாள் இளைப்பாற; இன்னொரு மரம் நாராயணசாமி இளைப்பாற.

சாமிகள் கிருஷ்ணன் கோவிலுக்கெதிரே கூரைப்பள்ளியில்தான் தங்குவது வழக்கம். ஊர் மக்கள் அங்கு தரிசனம் செய்து இரவினில் நடக்கும் நாடகங்களோ வில்லிசைகளையோ கண்டு ரசிப்பர். இப்பொழுது இந்த மழையின் காரணமாக நாராயணசாமியின் மரம் வீழ்ந்து கிடந்தது எங்களுக்குள் ஒரு மிகப்பெரிய வலியினை ஏற்படுத்தியது. எங்கள் கிருஷ்ணன் கோவில் அம்பி எதேதோ சாத்திரங்கள் சொன்னார். அதெல்லாம் எனக்குப் புரியவில்லை.

அவ்வொப்பொழுது நான் அந்த வயதினில் நாத்திகம் பேசிப் பிதற்றித் திரிந்துகொண்டிருந்தாலும் கூட மரம் செடி கொடிகள் என வரும்பொழுது அது எனக்குள் மிகப்பெரும் வலியையே தந்தது. மரங்கள் காற்றினில் ஆடும்பொழுது
அதில் பூக்கும் பூக்களும் இலைகளும் காய் கனிகளும் எப்பொழுதும் என்னுடன் பேசி சிநேகிப்பதாகவே இருக்கும்.

அதன் பாஷையில் எதேதோ சொல்லி அழகாய்ச் சிரிப்பதாகவே எனக்குத் தெரியும். அதன் மீது ஏறும்பொழுதுகூட அதற்கு வலிக்குமோ என நினைப்பதுண்டு. பாவம் என நினைப்பதுண்டு. நம் பயன்பாடுகளுக்காக அதிலிருந்து காய் கனிகளைப் பறிக்கும் பொழுது அதன் வலி என்னுள் பாய்வதை உணர்வேன்.

உண்மையில் செடிகொடிகள் குழந்தைகளைப் போன்றே வெண்மையான மனம் கொண்டவையாய் இருப்பதைக் கண்டு ஆனந்தித்திருக்கின்றேன். எங்கள் தோட்டங்களில் பயிருடும்பொழுது அதற்கு நீர்ப்பாய்ச்சும்பொழுதெல்லாம் ஒரு குழந்தைக்கு உணவளிப்பது போன்று அகமகிழ்ந்திருக்கின்றேன்.

சில கால வெளியில் அவைகள் பளிச்சென வளரும்பொழுது என்னுள் அளப்பறியா ஒரு மகிழ்ச்சி. அது பூ பூக்கும்பொழுது நான் வானில் பறப்பேன். பிஞ்சு விடும்பொழுதெல்லாம் நான் அதனை ஆசை ஆசையாய் வாஞ்சையாய் அன்பால் கோதிவிடுவேன். அது நிஜமாகவே என்னுடன் பேசுவது போலும் எனக்குள் அது எதையோ பரிமாறிக்கொள்வது போன்றுமே இருக்கும். ஒரு இனம் புரியா அன்பால் பிணைக்கப்பட்டிருப்பேன். காய் காய்ப்பது, பழமாவது என அதன் இறுதி நொடிவரை அதனுடன் உறவு. அறுவடைசெய்யும்பொழுது மட்டும் மனம் கனத்துப்போகும். ஒரு வார காலத்திற்கு யாருடனும் பேசாமல் தனியாய் புலிப்பாறைகளுக்குச் சென்று அமர்ந்துகொண்டு மிகவும் யோசிப்பேன்.

இத்தனை காலம் அன்பாய் உறவாடிய செடி கொடிகள் இப்பொழுது நம் சுய நலத்திற்காக அதனை அழிக்கின்றோமே….? என்ன தர்மமிது….? ஒரு குழந்தையை வளர்த்து அதனை அந்தத் தாயே கொல்வது எத்தனை கொடூரம்…..? அந்த குழந்தை அந்த தாயின் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தது…..? கொல்லும்பொழுது கூட குழந்தை ‘அம்மா….’ என்றுதானே அழைக்கும்….? ஆயிரம் சிந்தனைகள் மனதினுள் அலை அலையாய் ஆர்ப்பரித்து உணர்வுகள் பீரிட்டு கண்களில் நீர்த் திவலைகள் ஓடும். என் உணர்வுகள் எவருக்கும் புரியவில்லை. பெரியவர்கள் என்னை எள்ளி நகையாடியது எனக்குள் இன்னமும் , ‘நன்றியற்ற பிணந்தின்னிக் கழுகுகள்……’ என கோபம் கோபமாய் வரும்.

அடச் சே…. நான் எங்கோ ட்ராக் மாறுகின்றேனே….! மழையில் நனைவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்…..? ஒன்றிலிருந்து மனம் எங்கெங்கோ ஓடுகின்றதே…! இதுதான் என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம். ம்ம்ம்….சரி எங்க விட்டேன்….? இருங்க ஒரு முறை ஸ்க்ரோல் அப் பண்ணி பாத்துட்டுவர்ரேன்….

என் நினைவலைகளைக் கிளர்ந்தெழ இக்கட்டுரை காரணமாகிவிட்டதே….! காட்டாற்று வெள்ளமென அதன் திசையில் என் எண்ண அலைகள் பயணிப்பதால் இத்துடன் நிறுத்திவிட்டு மீண்டும் வருகின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மழை!….

  1. தங்களின் மழை அனுபவங்கள் மனதை வருடுவதாயுள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல மழையும் சில சமயங்களில் இயற்கைச் செல்வங்களின் அழிவிற்குக் காரணமாகிவிடுகின்றது. மிகப் பெரிய ஆலமரத்தையே சாய்க்கும் மழையின் ஆற்றலை என்னவென்பது!
    இளமைக் காலத்தைக் கிராமங்களில் கழிக்கும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர் என்றே எண்ணுகின்றேன். அதன் வாயிலாக அவர்கள் பெறும் அனுபவ அறிவை ஆயிரம் ஆசிரியர்களிடம் பாடம் கற்றாலும் பெறவியலாது. இதனைத்தான் ‘Up up my friend quit your books! let nature be your teacher’ என்றான் இயற்கைக் கவிஞன் வேர்ட்ஸ்வொர்த் (Wordsworth). தங்கள் ’மழை’ நாட்களை’ எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    -மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *