பெருவை பார்த்தசாரதி

வரலாற்றில் இடம்பெற்ற பெரிய விவேகிகள் எல்லோருமே, தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சூழல்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து,  பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதைத்தான் கடந்த 26 தொடர்களிலும் எழுதி வருகிறேன்.

இவர்கள் அனைவருமே, உள்ளத்தின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் நேர்மை நிரம்பிய ஆற்றலை வெளிக்கொணர்ந்து, ஒருமுகக் கவனத்தின் மூலம் உலகுக்கு வழிகாட்டினார்கள் என்பதை பலவித சான்றுகளோடு விவரிக்கப்பட்டது. இவர்களின் சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ரகசியம் யாதென!….. ஆராயும்போது, ‘ஆழ்மனத்தில் மறைந்திருக்கும் ஆக்கப் பூர்வமான ஆற்றலை’ பிறர் அறியும்படி வெளிக்கொணர்ந்த விதமே, இவர்களை உலகறியச் செய்தது எனத் தோன்றும்.

இருபத்திநான்கு மணி நேரத்தில், காலை எழுந்தது முதல், இரவு படுக்கைக்குப் போகும் வரை ‘நேரம் எவ்வாறு கழிந்தது’!… என்பதை யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. அதேசமயத்தில், நேரம் வீணாகக் கழிந்துவிட்டதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவரும் இருக்க முடியாது என்றே கூறமுடியும். ஆனால், அறிவாளிகளும், சாதனையாளரும், சிந்தனையாளரும் ஒவ்வொரு நிமிடமும் ஆக்கப் பூர்வமான நேர்மை நிரம்பிய எண்ணங்களோடு ஒவ்வொரு நிமிடமும் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஒரு நல்ல காரியத்தைத் தொடங்க நினைக்கும்போது, வேறொரு எண்ணம் அதைச் செய்ய விடாமல் தடுக்கிறது, அப்போது, ‘ஆஹா’ அந்த நல்ல செயலை நேற்றே செய்திருக்கலாமே!….,நேற்று நேரம் இருந்தும் அதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே!…”என்ற எண்ணம் எல்லோருக்கும் மறுநாள்தான் உதயமாகிறது.

ஒரு நல்ல நிகழ்ச்சி ஒன்றை மனம் விரும்பி ஏற்கின்ற அதே சமயத்தில், கெட்ட நிகழ்ச்சியைக் காண அதே மனம் விரும்புவதில்லை. ஆனால் நல்லதோ, கெட்டதோ, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தீர ஆராய்ந்து அதிலிருந்து நல்லதைப் பெற முடியும் என்பதையே வாழ்வியல் பாடம், படிப்பிணை, பட்டறிவு, அனுபவம் என்றெல்லாம் பலவாறாகக் கூறக் கேட்டிருக்கிறோம்.

தீய எண்ணங்களை விலக்கி, தீச்சொற்களைப் பயன்படுத்தாமல், ஆக்கப் பூர்வமான எண்ணங்களுக்கு இடம் விடும்போது, வாழ்க்கைப் பயணம் இனிதே தொடர்கிறது என்பதை   வள்ளுவர் பின்வரும் குறளில்:- “ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நின்றாகாதாகி விடும்”  என்கிறார். அதாவது பாலில் துளி நஞ்சு கலந்தது போல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லானால் அதுவரை கூறிய நல்ல சொற்கள் அனைத்தும் பயனற்றுப் போய்விடும்” என்பதே இக்குறளின் கருத்து.

ஒரு நாட்டின் அரசன் என்ற முறையில், செய்ய வேண்டிய எவ்வளவோ நல்ல காரியங்கள் இருந்தும், தீய செயலை உடனே செய்த “இராவணன்”, இராமாயணம் உருவாகக் காரணமாயிருந்தான். அவனது தீய எண்ணத்துக்கு வித்திட்டவள் சூர்ப்பனகை. மாகாபாரதத்தில் “சிசுபாலன்” தீச்சொற்களால், பகவான் கிருஷ்ணனையே சுட்டெறித்தான், ராஜசூய யாகம் நடக்கும் போது, பலர் முன்னிலையில் சபையில் அவதூறு பேசி பகவானையே பகைத்துக் கொண்டவன் சிசுபாலன். “துரியோதனன்” கடுஞ்சொற்களால் மகான்கள் அனைவரையும் மட்டம் தட்டினான். தீய எண்ணத்தால் எழுந்த பேச்சால், பீஷ்மர், விதுரர், துரோணர் போன்ற பெரியோர்களின் ஆசியைப் பெறமுடியவில்லை. துரியோதனன் மனதில் தீய எண்ணங்களை வளர்த்தவர் “சகுனி”. இவர்கள் மூவரின் மன நிலையைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, யாவரும் அறிந்ததே.

இப்படி மனதில் தீய எண்ணங்கள் நிறைந்தவர்கள் பலர், கொடுஞ்செயல்களைப் புரிந்து உலக வரலாற்றிலே இடம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். சிறுவயதிலேயே எதிர்மறை எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் வெகு விரைவில் வளர்த்துக் கொண்ட சிறுவன் ஒருவன் வளர்ந்து பெரியவனாகும் போது, உலகறிந்த மிகப் பெரிய கொடுங்கோலனாக வலம் வந்தான் என்பதை விவரிக்கிறது வரலாறு.

‘வெற்றி வீரன்’, ‘மாவீரன்’, ‘உலகை ஆளப்பிறந்தவன்’, ‘சர்வ வல்லமை படைத்தவன்’ என்றெல்லாம் தன்னைத் தானே நினைத்துக் கொண்டு, மமதை என்கிற சிம்மாசத்தில் வாழ்ந்தவன். ஆணவம், அகங்காரம், அதிகாரம் இவற்றின் பிறப்பிடமாக இருந்த இவன் உலகமே தன்னைக் கண்டு அஞ்ச வேண்டும் என்று நினைத்தானே தவிர, இரக்கம், அன்பு என்றால் என்ன வென்று அறியாதவனாகவே வாழ்ந்தான். தன்னிடம் மண்டியிட்ட பல்லாயிரக்கான யூதர்களின் மண்டையை உடைத்தான், உயிர்ப்பிச்சை கேட்டு மன்னிப்புக் கோரியவர்களை தூக்கிலிட்டான் என்பது இவனது சரித்திரம். கொடுமைக்கடலில் குதித்து சந்தோச நீச்சல் கற்றவன் ஹிட்லர். யாராவது கொடுஞ்செயல் புரிந்தால் அவர்களை ‘ஹிட்லர்’ என்று சொல்கிறோமே, இந்த அடைமொழிக்கு அடையாளமாகத் திகழ்ந்தவன். பலருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவன்.  இவனைப் போன்றே “மனித நேயம்” இல்லாத, உலக சரித்திரத்தில் இடம்பெற்ற மற்ற வீரர்களையும் நாம் அடையாளம் காணமுடியும்.

இவர்களை நினைக்கும் போது, நாம் எப்படி வாழக்கூடாது என்பதை நன்றாக அறியமுடியும். அதே சமயத்தில், நாம் ஒன்றைச் சிந்திக்க மறந்து விடுகிறோம், அதாவது, எத்தகய கொடுஞ்செயல்களையும் புரியாது, ஈகைக் குணத்தால், புலவர்களைப் பாராட்டிப் பரிசு கொடுத்து, பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தில் வெற்றிக் கொடி நாட்டிய நமது நாட்டில் தோன்றிய ஆக்கப் பூர்வமான சிந்தனைகளையும், செயல்களையும் புரிந்த சேர, சோழ, பாண்டியர் என்னும் வீரர்களை நினைவுக்குக் கொண்டுவர வேண்டியது நமது கடமை. இவர்களும் போர்புரிந்து பகைவரை வென்ற மாவீரர்கள்தான். ஆனால் எத்தகய நல்லெண்ணத்தோடு வாழ்ந்தார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

ஒருவரது வாழ்க்கை, அவரது எண்ணம்போல்தான் அமையும் என்பதற்கு “எண்ணம் போல் வாழ்வு”,மனம் போல் மாங்கல்யம்”, “எண்ணம்போல் செயல்” என்றெல்லாம் சொல்வதை நாம் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம். எண்ணத்தைப் பொருத்தே, செய்யக்கூடிய செயல் அமைவதால்தான், தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே என்பதை சிறுவயதிலிருந்தே படித்து வருகிறோம்.

ஆக, எண்ணத்திற்கும் செயலுக்கும் தொடர்பு உண்டு. எண்ணம், புத்தி, மனம், சிந்தனை போன்ற அனைத்திற்கும் விரிவான விளக்கமளிக்கிறார் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸிக்மண்ட் ப்ராட் (Sigismund Schlomo Freud:: 6 May 1856 – 23 September 1939) என்னும் உளவியல் மருத்துவர். மனிதர்களின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாயும்போது, மனதின் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனித மனம் பற்றிய உளப்பாகுபடுகளை, ஐடி (ID), ஈகோ (Ego), சூப்பர் ஈகோ (Super Ego) என்று மூன்று வகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் மிக நுண்ணிய விளக்கம் தந்திருக்கிறார் ஸிக்மண்ட். மனத்தை அறிந்து கொண்டால் மகான்களாக முடியும் என்று சொல்கிறோம் அல்லவா!…ஸிக்மண்ட் என்ன கூறுகிறார் என்பதை மேலும் தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் செல்லவும்.

http://en.wikipedia.org/wiki/Id,_ego_and_super-ego)

ஒரு நல்ல விஷயத்தை மற்றவரிடம் சொல்லும்போது, அதை அவர் மகிழ்ச்சியாக மனதார ஏற்றுக்கொள்கிறாரா?..இல்லையா?….என்பதை அவரது பதிலை வைத்தே அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒருவர் ‘என்னுடைய மகன் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறான்’ என்ற தகவலை மிகவும் மகிழ்ச்சியாக அவரது நண்பனுக்குத் தெரிவிக்கிறார், இதைக்கேட்ட அவரது நண்பர் ‘என்ன மார்க் வாங்கி என்ன ப்ரயோசனம், எவ்வளவு படிச்சாலும் வேல கிடைக்க மாட்டேங்குது’ என்ற பதிலிலிருந்து அவரது எதிர்மறை எண்ணமும் சுயநலமும் வெளிப்பட்டு விடுகிறதல்லவா?.. இதேபோல சுபகாரியங்கள் நடக்கும் இடத்தில் அபசகுனமாகவும், அனர்த்தமான வார்த்தைகளையும் பிரயோகிப்பவர்களது மனதை எளிதாக அடையாளம் காணமுடியும்.

இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்தும், வாழ்வியல் கல்வியைத் தொடங்கும்போது, பலரது மனம் நல்லனவற்றையே விரும்புகிறது. வாழ்வில் மகிழ்ச்சி ஒன்றே போதும் என்று மனம் நினைக்கிறது, சிறிது துன்பம் இடர்வந்தாலும் அதை மனம் ஒப்ப இயலாது என்பதை சென்ற இதழில் விளக்கி இருந்தேன்.

நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ள வழிகாட்டியாக அறநெறிக்கதைகள் அடங்கிய மகாபாரதக் கிளைக்கதைகள், இராமாயணக்கதைகள், முல்லாக் கதைகள் மற்றும் ஸென் மற்றும் சூஃபி கதைகள் நமக்கு அவ்வப்போது உதவுகிறன்றன. உதாரணத்திற்கு ‘ஸென்’ கதைகளில் வரும் கருத்துக்களில் மேலெழுந்தவாரியாக ஒன்றுமில்லாததாகத் தோன்றினாலும், ஆழ்ந்து படித்தால் உள்ளுக்குள் அர்த்தம் பொதிந்ததாகத் தெரியும். வாழ்வியல் நடைமுறைகளை எதார்த்தமாக எடுத்துச் சொல்லும். எடுத்துக்காட்டாக, ஸென் கதைகளின் வருகின்ற ஒன்றை இங்கே கூறவிரும்புகிறேன். ஸென் துறவி ஒருவர், சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது, குதிரை மேய்ப்பவன் ஒருவன், சாட்டையினால் ஒரு குதிரையின் முதுகில் பலமாக அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, ‘துஷ்டனே, ஏன் அந்த வாயில்லா ஜிவனை அடிக்கிறாய்’ என்று கூச்சலிடுகிறார். அவனோ எதையும் சட்டை செய்யாமல் குதிரையை நையப் புடைத்துக் கொண்டிருப்பதிலேயே கவனம் செலுத்துகிறான். திரும்பத் திரும்ப ஸென் துறவி கூச்சலிடுவதைப் பார்த்துவிட்டு, குதிரை மேய்ப்பவன் சாட்டையை அவர் பக்கம் திருப்புகிறான். பிறகு, அவரைப் பார்த்து ‘நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?..என்கிறான்.

“அந்தக் குதிரையை அடிப்பதை நிறுத்து, தீய எண்ணங்களால் சூழப்பட்டு, உனக்குள் தறிகெட்டு ஓடும் மனக் குதிரையை, முதலில் சாட்டையால் அடித்து, அதைச் செம்மைப்படுத்து” என்று ஸென் துறவி…..சொல்கிறார்

ஒரு சிறிய நிகழ்ச்சியில், பல அர்த்தங்கள் பொதிந்து காணப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

சிறார் பருவத்தில் வகுப்பறையில் பாடம் படிக்கிறோம், பிறகு கல்லூரி, அதன் பிறகு உயர் படிப்பிற்காக வெளிநாட்டில் என்றெல்லாம் கல்வி பயின்று, ஒரு கால கட்டத்தில் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். கல்வி பயிலுவது என்பது ஒரு காலகட்டத்தில் நின்று விட்டாலும், ‘வாழ்வியல் கல்வி’ வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தினந்தோறும், பத்திரிகைகள், தொலைக்காட்சி, ஊடகம், இணையதளம், குடும்ப அனுபவங்கள் இதுபோல் உலகியல் நடப்புகள் அனைத்துமே, நமக்கு அனுதினமும் வாழ்வியல் பாடம் புகட்டிக் கொண்டேயிருக்கின்றன. ஏதாவதொரு பாடம் அல்லது படிப்பிணை எங்கோ நடந்த சம்பவத்திலிருந்து நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இப்படி நாம் அனைவருமே புதிது புதிதாக, தீயதை விலக்கி நல்ல வாழ்வியல் பாடங்களை ஏதோ ஒரு சம்பவங்களிலிருந்து கற்றுக் கொண்டே வரும்போது, அதற்கு முடிவு என்பது இருக்குமா?…என்ற கேள்வி எழுந்தால், வாழ்வியல் கல்வி என்பது ‘இறக்கும் வரை தொடரும்’ என்பதே பதிலாக இருக்க முடியும்.

 தொடரும்………

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-27

  1. அருமை!!, அருமை…. எழுந்து நின்று கைதட்டத் தோன்றுகிறது.  தொடர்ந்து படைப்புகள் பெருகவும் வாழ்த்துகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.