Tag: ஜோதிர்லதா கிரிஜா

  • ஜிம்முக்குப் போகாமலே ஜம்மென்று வாழலாமே!

    ஜிம்முக்குப் போகாமலே ஜம்மென்று வாழலாமே!

    ஜோதிர்லதா கிரிஜா

    மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஜிம்மில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கருவிகளில் சிலவற்றைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. சில கருவிகளைக் குறை சொல்ல முடியாதுதான். ஆனால் வேறு சில கருவிகள் நம் கைகளையும் கால்களையும் கவ்வி அசைப்பதைப் பார்க்கும்போதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது. நாமே நம் கைகளையும் கால்களையும் அசைத்தால் நிகழும் இரத்த ஓட்டம் அதிகப் பயனுள்ளது என்பதை உணரப் பெரிய அறிவொன்றும் தேவையில்லை. தெம்பின்றித் தளர்ந்து போய்க் கைகால்களை அசைக்கவே முடியாமல் இருக்கும் ஒருவருக்கு உடலின் பகுதிகளில் இரத்த ஓட்டம் ஏற்படச் செய்ய வேண்டுமெனில் அவற்றைப் பிடித்து மற்றவர்களோ அல்லது கருவிகளோ அசைக்கலாம். அதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால் கை, கால்கள் ஒழுங்கான நிலையில் இருக்கின்றவர்கள் தாங்களாகவே அவற்றை அசைத்து அவற்றில் இரத்த ஓட்டம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்குப் பதிலாக, அவை பிறராலோ, கருவிகளாலோஅசைக்கப்படுவது என்பது சிரிப்புக்கு உரியதுதான்.

    ஜிம்முக்குப் போய் அங்குள்ள கருவிகளைப் பயன்படுத்துவது என்பது எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளும் என்றும் சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த ஒரு பெண் – அப்படியொன்றும் ரொம்பவும் குண்டாக இல்லாதவர் – தான் மேலும் இளைத்தால் ‘சிக்’ கென்று இருக்கலாமே எனும் ஆசையில் ஜிம் ஒன்றில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை. உடம்பில் சதை போடத் தொடங்கியது. இவ்வளவுக்கும் உணவுப் பழக்கங்களில் அவர் எந்த மாற்றமும் செய்யவில்லையாம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் கூறிய அறிவுரைப்படி ஜிம்முக்கும் போவதை நிறுத்தினார். ஒரே மாதத்துக்குள் அவரது இயல்பான சற்றே சதைப் பிடிப்புள்ள உடம்பு திரும்பி வந்துவிட்டது. எனினும், ஜிம்முக்குப் போய்ப் பயிற்சி செய்ததற்கும் தன் உடம்பு மேலும் குண்டானதற்கும் தொடர்பு இருக்காது என்றும் அதற்கு வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்றும் தீர்மானித்த அவர் மறுபடியும் ஜிம்முக்குப் போகலானார். மறுபடியும் உடல் குண்டானது. நடையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு, சற்றே சாய்த்துச் சாய்த்து நடக்கலானார். எனவே அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். பழைய உடம்பு திரும்பிவிட்டது. ஜிம் என்பது யாவருக்கும் ஒத்துக்கொள்ளக் கூடியதன்று என்பதற்காக இதைச் சொல்லலாயிற்று.

    குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. தொப்பை குறைய வேண்டுமா? கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் சற்றே வளைத்துப் பின் அவற்றை மெல்லக் கீழே கொண்டுவந்து இரண்டு கைகளாலும் இரண்டு கால்கட்டை விரல்களைத் தொடவும். இவ்வாறு குனியும் போது மூச்சை மெல்ல வெளியேற்ற வேண்டும். பின் பழைய நிலைக்கு மெல்ல இரு கைகளையும் உயர்த்தவும் இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு தொடக்கத்தில் பத்துத் தடவைகள் செய்யலாம். போகப் போக, எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்கையில், உடலை மிகவும் தளர்வாகவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அளவுக்கு மீறிய இறுக்கத்திலும் வைத்துக்கொள்ளக் கூடாது. நடுநிலையான இறுக்கத்துடன் உடல் இருக்க வேண்டும்.

    இதே போல் நின்றுகொன்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, அதன் பின் குதிகால்களை உயர்த்திக்கொண்டு முன்னங்கால்களல் நின்று, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு குதிகால்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தவாறே, மூச்சை வெளியேற்றி, கைகளை அவை இணையாக இருக்கும்படி முன்புறமாக நீட்ட வேண்டும். மீண்டும் பக்கவாட்டில் மூச்சிழுத்து நிறுத்திப் பின் முன் சொன்ன பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதையும் சிறுகச் சிறுக அதிகரித்துக்கொண்டே போகலாம். இது நுரையீரலை வலுவாக்கும். இடக் காது முனையைக் வலக்கையாலும், வலக் காது முனையை இடக் கையாலும் பற்றியபடி — இவ்வாறு இரு காது முனைகளையும் பிடித்துக்கொண்டே – உட்கார்ந்து எழ வேண்டும். இதையும் கொஞ்சங்கொஞ்சமாய் அதிகமாக்கலாம். இந்த உடற்பயிற்சி இடை, தொடை, கால் தசைகள், கைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும். நாம் தோப்புக்கரணம் என்று சொல்லும் இதை அமெரிக்காவில் அண்மைக்காலமாய் உடற்பயிற்சி நிலையங்களில் புகுத்தியிருக்கிறார்களாம்! இதனால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்குவதாய்க் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.

    இவற்றையெல்லாம் செய்வதற்குப் பதினைந்து நிமிடங்கள் போதும். இருபத்துநான்கு மணிப் பொழுதில் இதற்கு நம்மால் கால்மணி நேரம் கூட ஒதுக்க முடியாதா என்ன?

    இவற்றைச் செய்ய முடியாத முதியோர்க்கு மட்டுமே நடைப்பயிற்சி சிறந்ததாகும். முடிந்த அளவுக்கு விரைந்த நடை நல்லது. ‘ஜாகிங்’ எனப்படும் நெளிந்த நடை யாருக்குமே உகந்ததன்று என்பதைக் கொஞ்ச நாள்களுக்கு முன்னால் அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். சில மருத்துவமனைகளில், முதுகுவலி, இடுப்பு வலி, சுளுக்கு, பளுப்பிறழ்வு (disc-prolapse) ஆகியவற்றுக்கு ஆளானவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றிக் கேட்டறிந்த மருத்துவர்கள், அவர்களில் 90 விழுக்காட்டினர் ‘ஜாகிங்’ செய்பவர்கள் என்பதைக் கேட்டறிந்த பிறகு இவ்வாறு அறிவித்துள்ளனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்னால், வடநாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் தம் உடல் இளைப்பதற்காக ஜிம் ஒன்றில் சேர்ந்து அந்தப் பயிற்சிகள் ஒத்துக்கொள்ளாததால் படுத்த படுக்கையாகி, முடிவில் நடைப்பிணமாகவே ஆகி இறந்து போனார். இப்போது கண்டவர்களெல்லாம் ஜிம்மை நடத்துவதால் ஆபத்துகள் அதிகம் என்று சொல்லலாயிற்றே ஒழிய, ஜிம்மை ஒட்டு மொத்தமாய்க் குறைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அண்மையில் கூட ஒரு பெண்மணி தம்

    கணவர் ஜிம்மில் மயங்கி விழுந்து சிறிதே பொழுதில் உயிர் நீத்தது பற்றி உள்ளம் உருக்கிய கட்டுரையை எழுதியிருந்தார். எந்த ஜிம்மிலும் டாக்டர் ஒருவரும் இருப்பதாய்த் தெரியவில்லை.

    கடைசியாக, ஜிம்மால் நமக்கு ஆகும் ஆயிரக்கணக்கான பணச் செலவை நம் வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய பயிற்சிகள் வாயிலாக மிச்சப்படுத்தலாமே. அந்தப் பணத்தை ஏழை எளியவர்க்குத் தரலாமே.

    Share
  • ஆணுக்கு ஆணே எதிரி!

    ஆணுக்கு ஆணே எதிரி!

    ஜோதிர்லதா கிரிஜா

    முன்குறிப்பு1983ஆம் ஆண்டில் வெளிவந்த  ஒரு புலனாய்வு வார இதழில் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்த ஒரு பெண்மணி –  அதிலும் பெண்ணுரிமை இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவர் – “பெண்ணுக்குப்  பெண்தான் எதிரி”  என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை மிகுந்த மனத்தாங்கலுடன் வடித்திருந்தார். அவ்விதழ் வெளிவந்த அன்றே அதை மறுத்து நான் ஒரு கட்டுரையை எழுதி அதன் ஆசிரியருக்கு அனுப்பிவைத்தேன் (ஆனால், என்ன காரணத்தாலோ அது வெளிவரவில்லை. அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துகள் இன்றளவும் பொருந்துவதால் அக்கட்டுரை கீழே வருகிறது).

    “ஆணுக்கு ஆணே எதிரி” –  இப்படி யாரேனும் சொல்லக் கேட்டோ எழுதியதைப் படித்தோ இருக்கிறோமா? “இல்லை” என்னும் நிச்சயமான பதிலை உடனேயே தயக்கமின்றிச் சொல்லிவிடலாம். பெண்கள் பிரச்சினை எதுவானாலும், அது உருவாவதற்கும், அது தீர்க்கப்படாததற்கும் பெண்களே தான் காரணம் என்று அறிவித்துவிட்டு ஆண்கள் (பெண்களில் சிலரும் கூடத்தான்) ‘அப்பாடா’ என்று ஓய்வெடுக்கப் போவது வழக்கமாக ஆகிவிட்டது. ஆண்களுக்கும் பிரிச்சினைகள் ஏராளமாக உண்டு. ஆண்களின் பிரச்சினைகளுக்கு ஆண்களே காரணமாக இருப்பதும் உண்டு. ஆனால், அவற்றை விவாதிக்கும் போது, “ஆணுக்கு எதிரி ஆண்தான்” என்று இதுவரையில் யாருமே சொன்னதாய்த் தெரியவில்லை. இந்த நிலை சிந்தனைக்குரியது.  ஆழ்ந்து சிந்தித்தால்,  பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கிற – இந்த நாட்டின் – ஏன்? பொதுவாக அனைத்துலகத்தின் –  பரம்பரைத்தனமான மனப்பான்மையே இதற்கு அடிப்படை என்று சொல்லிவிடலாம். என்னதான் படித்தாலும், பெரும்பாலான ஆண்களின் சிந்தனை, தன்னலம் என்னும் கோளாறின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.

    பெண்களுக்கு என்று சில சிறப்புகளும், ஆண்களுக்கு என்று சில சிறப்புகளும் – அதே போல் இருபாலருக்குமே சில குறிப்பிட்ட குணக்கேடுகளும் பிறவியிலேயே அமைவதைப் பொதுவாகப் பார்க்கிறோம். ஒருவர்க்கொருவர் இட்டு நிரப்புவதற்காக இயற்கை அவ்வாறு அமைத்திருப்பதாக நாம் கருதி வந்துள்ளோம். பெண்கள் அனைவரும் தேவதைகள் அல்லர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு ஆண்கள் அனைவரும் அரக்கர்கள் அல்லர் என்பதும் உண்மையாகும். ஒரு பென்ணே மற்றொரு பெண்ணுக்குத் தீங்கு செய்வதன் மூல அடிப்படை, அவளது கல்வியறிவின்மையே ஆகும். கல்வி கற்ற மாமியார் எவளும் தன் மகனின் மனைவியை அவள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொல்லமாட்டாள். நாம் அறிந்த வரையில் இது உண்மையே ஆகும் (எனினும் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். அதை நாம் மறுக்கவில்லை). ஆனால், படிப்பு ஆண்களைத் திருத்துகிறதா என்று பார்ப்போம். இல்லை என்கிற பதிலே நமக்குக் கிடைக்கிறது. கல்விமுறையும் பாடத்திட்டமும் சரியாக இராதது இந்தக் குறைபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்தான். ஆனால், இப்படியும் பொத்தாம் பொதுவாய்க் குறை சொல்லிவிடுவதற்கில்லை என்று இதே கல்வியைப் பயிலும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாய்த் திருந்துகிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது தோன்றுகிறது. ஏனெனில் மருமகள் எரிப்பில் பங்குகொள்ளும் மாமியார்கள் படிக்காதவர்களாக இருக்கையில், அந்த மருமகளின் கணவனும், மாமியாரின் கணவனும் பெரும்பாலும் படித்தவர்களாகவே – வங்கி ஊழியர்களாக, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாக, மருத்துவர்களாக – சமயங்களில் காவல்துறை ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் கூட! – இருக்கிறார்கள்! என்னே கொடுமையான வெட்கக்கேடு இது!

    எனினும், படித்த பெண்களில் கூடச் சிலர் “பெண்ணுக்குப் பெண்தான் எதிரி” என்று அறிவிப்பதற்குக் காரனம் அவர்களது இரத்தத்தில் ஊறிப் போய்விட்ட பரம்பரைப் புத்திதானே ஒழிய, வேறு எதுவும் அன்று என்றே முடிவுசெய்யத் தோன்றுகிறது. தலைமுறை தலைமுறையாகச் சில நற்குணங்களையும் குணக் கோளாறுகளையும் ஊட்டி வளர்க்கும் போது அவை மனிதர்களின் உதிரத்தில் ஊறி அவர்களுடைய சந்ததியினரின் இயல்புகளாகவும் ஆகி விடுகிற கோளாறு நேர்ந்துவிடுவதால் சில வேளைகளில் பெண்கள் சிந்தனைத் தேக்கத்துக்கு ஆட்படுகின்றனர். இத் தேக்கத்துக்கு ஆண்களும் விதிவிலக்குகள் அல்லர்.

    கல்லூரிப் பேராசிரியை பென்களின் உரிமைகளுக்காகத் தங்களைப் போன்றவர்கள் போராடுவதைப் பெண்களே எதிர்க்கிறார்கள் என்று குறைப்பட்டுள்ளார். இதற்குக்  மூளைச் சலவையின் அடிப்படையில் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகப் போதிக்கப்பட்டு வரும்  ஒருதலைப்பட்சமான கோட்பாடுகள் தானே காரணம்! நம் நாட்டு முன்னோர்கள் (ஆண்கள்) மிகுந்த சாமர்த்தியசாலிகள். அதனால்தான், சுயமான சிந்தனைப் போக்கு, தன்னம்பிக்கை, ஆணைச் சாராது வாழ்வதற்கான தகுதி ஆகியவற்றைப் பெண்களுக்கு வழங்கிவிடவல்ல கல்வியறிவைக் காலங்காலமாகப் பெண்களுக்கு  மறுத்து வந்துள்ளனர்! இவ்வாறு அநியாயம் செய்ததன் மூலம் பெண்களை எக்காலத்துக்கும் எதிர்க் கேள்வி கேட்க முடியாத வக்கற்ற நிலையிலேயே வைத்து ஆண்கள் அடிமைப் படுத்தினார்கள். இன்றும் கூட நம் நாட்டில் சில மாநிலங்களில் நிகழும் குழந்தைத் திருமணங்களும்,  கணவனோடு இளம் விதவைகளேயானாலும் கூட உடன்கட்டை ஏறுகிற வழக்கமும் நீடித்து வருவதும் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கின்றன. இல்லாவிடில், ராஜஸ்தானத்தில் கொஞ்ச நாள்களுக்கு முன்னால், ‘கணவனுடன் சிதையில் இறங்கி உயிரை விடுவது எங்கள் உரிமை” என்று கூச்சல் போட்டுக்கொண்டு சில பெண்கள் ஊர்வலம் சென்றிருப்பார்களா என்ன! முட்டாள்தனத்தின் உச்சமல்லவா இது!

    போகட்டும். வரதட்சிணை, மாமியார் கொடுமை ஆகிய  இரண்டுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்றே. பெண்ணின் பொறாமை. இந்தப் பொறாமை எதனால் வருகிறது? அறியாமையால் வருகிறது. அறியாமையின் அடிவேரோ அவள் கல்வி மறுக்கப்பட்டதன் விளைவாகும். மருமகள் எரிப்பு, கொடுமை, வரதட்சிணை இவை யாவுமே பெண்ணின் பொறாமையின் விளைவேயாம். ஆனால், இதை வளர்த்தவர் யார்? பெண்களுக்கு என்று ஆண்கள் வகுத்து வந்துள்ள வாழ்க்கை முறையே அன்றோ! கல்வியறிவு பெற்றுவிட்டால் பெண் சிந்திக்கத் தொடங்குவாள் என்பதால் அவளை எக்காலத்தும் அறியாமையிலேயே ஊறவைப்பதுதான் தனக்கு வசதியானது என்று திட்டம் தீட்டி, நிரந்தரமாக அவளை இருட்டில் வைத்து வந்துள்ளவன் ஆணேயன்றோ! இந்தக் கோளாறு தாம் பெற்ற பெண் மக்களைப் பாதிக்கும் போது மட்டும் ஆண்கள் “லெட்டெர்ஸ் டு த எடிட்டர்” எழுதி என்ன லாபம்?

    சிறு வயதில் பெற்றோருக்கும், மணமான பின் கணவனுக்கும் அடிமையாக வாழும் ஒரு பெண் குணக்கோளாறுக்கு உள்ளாகித் தான் ஆட்டிப் படைக்க ஓரு ஆன்மா கிடைத்ததும், அவிழ்த்துவிடப்பட்ட வெறிபிடித்த காளையைப் போல் நடந்து கொள்ளுவதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? இந்த வெறிக்குரிய குறைபாடு யாரால் ஏற்பட்டது, அதைக் களைய என்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்காமல் “பெண்ணுக்குப் பெண்ணே எதிரி” என்று பெருமூச்சு விடுவது என்ன நியாயமாம்? ஆண்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்தச் சொற்சாலத்தைப் பெண்களும் சிந்திக்காமல் பயன்படுத்தாலாகுமா? ‘அவனுக்கென்ன! ஆண்பிள்ளை! முன்னே, பின்னேதான் இருப்பான். நீ பொட்டச்சி. அடங்கித்தான் போகணும்’ என்றுதானே பெண்ணின் பெற்றோர்கள் சொல்லுகிறார்கள்! ஆண் குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே தாயும் தகப்பனும் இவ்வாறு அறிவிக்கும்போது அந்த ஆண்குழந்தையின் மனத்தில் விஷவித்தல்லவோ விதைக்கப்படுகிறது!

    தன் கணவனிடம் கொடுமைப்பட்ட ஒரு பெண்மணி தன் மருமகளிடம், ‘நீதான் அனுசரித்துப் போக வேண்டும்’ என்று கூறித் தன் பொல்லாத பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவதும், தன் மகள் கொடுமைக்கு ஆளாகும்போது தாங்கிக்கொள்ள முடியாமல் – ஆனால் தன் மனைவியைக் கொடுமைப்படுத்திய  – ஓர் ஆண் கண்கலங்குவதும் இந்த அநீதியின் விளைவுகள்தானே! கொஞ்சமேனும் சிந்தித்தால், இந்த மாமியாரும் இந்தத் தகப்பனும் மாறுவார்களன்றோ?

    சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், நம் குழந்தைகளிடம் நற்பண்புகள் ஏற்படும் வண்ணம் நம் கல்வி முறை அமைந்தால் ஓரளவுக்கேனும் நிலைமை சீர்ப்படும். முன்பெல்லாம் “மாரல் க்ளாஸ்” என்பதாய் “நீதி போதனை” வகுப்பு ஒன்று இருந்தது. அது இப்போது பெரும்பாலான பள்ளிகளில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அப்படியே இருந்தாலும் இவ்வகுப்பைப் பெண்களுக்கு மட்டுமே அறிவுரை சொல்லும் ஒரு தலைப்பட்சமான வகுப்பாக மாற்றாது, பெண்களை மதிக்க ஆண்கள் பயில வேண்டியதன் நியாயத்தை வலியுறுத்தும் ஒன்றாகவும் ஆக்க வேண்டியது கல்வித் துறையினரின் கடமையாகும். கெட்டவற்றை விதைக்க முடிவது போல் காலப் போக்கில் நல்லவற்றையும் சிறுகச் சிறுகவேனும் மக்கள் மனங்களில் விதைக்க முடியும் தானே?

    Share
  • எல்லா ஆன்மிகவாதிகளும் நல்லவர் அல்லர்

    எல்லா ஆன்மிகவாதிகளும் நல்லவர் அல்லர்

    ஜோதிர்லதா கிரிஜா

    ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்கிற நிலையில் நம்மில் பெரும்பாலோர் இருந்து வருகிறோம். மனத்தில் அமைதி இல்லை. மகிழ்ச்சியில்லை. திருப்தி என்பதோ இல்லவே இல்லை. நமக்குக் கீழே உள்ள வசதித்குறைவானவர்களையும், அங்கவீனர்களையும் பார்த்து நாம் மன நிறைவு அடையவேண்டும் எனும் ஞானம் நம்மிடம் கொஞ்சமும் இல்லை. மனிதர்களில் பெரும்பாலோர் நிம்மதியற்று அல்லாடுவதற்கு இந்தத் திருப்தியின்மையே அடிப்படையாகும்.

    நம்மில் அநேகர் கடவுள் நம்பிக்கையுடையவர்களே.  கடவுள் என்பதாய் ஒரு மாபெரும் சக்தியாளர் உள்ளார் என்பதே அந்த நம்பிக்கையாக இருந்த போதிலும், அவர் நமக்கு நல்லது செய்வார் எனும் நம்பிக்கை மட்டும் நமக்கு இருப்பதில்லை. தோல்விகளைக்கண்டு துவண்டு போவதும், அதையே நினைத்துக்கொண்டு இரவில் உறங்காமல் இருப்பதும் நம் இயல்பாகிவிட்டது.  ‘நான் யாருக்கும் கெடுதலே செய்ததில்லையே? அப்படி இருந்தும் நான் ஏன் இப்படி ஏமாற்றங்களுக்கும் நிம்மதியின்மைக்கும் ஆட்படுகிறேன்?’ என்று புலம்பாதவர்கள் உண்டா?

    அன்னீ பெசன்ட் அம்மையாரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அயர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து நம் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அரும் தொண்டும் பங்கும் ஆற்றியவர். ஆனால் அவர் இந்தியாவுக்கு வந்தது எதற்காக என்பது பலர்க்குத் தெரியாமலிருக்கக் கூடும். அவர் நம் நாட்டுக்கு வந்தது எதற்காக என்பது ஒரு சுவையான காரணத்தின்பாற் பட்டது. அவரது சொந்த வாழ்க்கைக்கும் அதற்கும் பெரும் தொடர்பு உண்டு.  அவர் வந்தது ஆன்மிகத் தேடலின் பொருட்டேயாகும்.

    அவருடைய குழந்தை ஒன்று சொல்லொணாத வலியை அனுபவித்து இறந்து போனபோது ஏற்கெனவே மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்த அவருக்குக் கடவுள் நம்பிக்கை அறவே போயிற்று என்று சொல்லப்படுகிறது.  ‘ஒரு பாவமும் அறியாத இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு ஏன இவ்வளவு சிரமப்பட்டுச் சாகவேண்டும்?’ எனும் கேள்வி அவருள் எழுந்து அவரை வருத்தியது. இது போன்ற கேள்விகளுக்கு இந்தியாவின் பண்டைய நூல்களில்தான் விடை கிடைக்கும் என்பதாய்க் கேள்விப்பட்டு அவர் இந்தியாவுக்கு வந்தார்.

    இந்துமத நூல்களைப் புரிந்துகொள்ளுவதற்காக சம்ஸ்கிருதம் கற்றார். பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவுக்கு அவர் அந்த மொழியறிவைப் பெற்றார்! ‘கர்ம வினை’ என்பதாய் ஒன்று உள்ளது என்னும் அசைக்க முடியாத முடிவுக்கு வந்தார். மனிதன் திரும்பத்  திரும்பப் பிறக்கிறான் என்னும் நம்பிக்கையும் கொண்டார். அவ்வாறு இல்லையெனில், இந்தப் பிறவியில் எந்தப் பாவமும் புரியாத ஒருவர் துன்பப்படுவதற்குக் காரணமே இல்லை என்றும் நம்பினார்.

    தியோசாஃபிகல் சொசைட்டி எனப்படும் பிரும்ம ஞான சபையின்  உறுப்பினராகிப் பின்னர் அதன் தலைவியாகவும் பதவி ஏற்றார். இந்திய வேதாந்தம் பற்றி ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தார். இந்தக் கட்டுரையில் அவரை நினைவு கூர்ந்தமைக்குக் காரணம் அவர் தேடி யடைந்த ஞானம் நம்மில் பலர்க்கு இல்லாமற் போனதால்தான், நம் துன்பங்களுக்கெல்லாம் விடிவு ஏற்படும் என்று நம்பி ஆன்மிகவாதிகளின் ஆசிரமங்களுக்குப் போய்வருகிறோம் என்று சொல்லத்தான். இப்படிப் போவதில் எந்தத் தவறும் கிடையாது. அதது அவரார் விருப்பம், நம்பிக்கை ஆகியவற்றைப் பொறுத்த விஷயம்தான். இதில் மற்றவர் தலையீட்டுக்கோ கேலிக்கோ சிறிதும் இடம்  கிடையாதுதான்.

    ஆனால் நாம் தேடிப்போகும்   ஆன்மிகவாதிகள் உண்மையிலேயே மக்களுக்கு நல்லதைச் சொல்லவும் செய்யவும் தலைப்படும்  ஆன்மிகவாதிகள்தானா, இல்லாவிட்டால்   பணம் பண்ணும் வெறும் வியாபாரிகளா என்பதை நாம் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்களில் பலர் “பரிகாரம்” என்பதன் பெயரால் தங்களை நாடி வருபவர்களிடமிருந்து பணம், பொருள், நகைகள் போன்றவற்றைத் தந்திரமாய்ப் பறித்துக்கொள்ளுகிறார்கள். சிலர் இவற்றோடு தலைமறைவாகி விடுவதும் உண்டு.

    பரிகாரம் என்பது பச்சைப் பொய் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாவங்களுக்குரிய தண்டனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. ஆன்மிகவாதிகளுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து  அவர்கள் மேற்கொள்ளப்போவதாய்ச் சொல்லும் பரிகாரங்களை நாம் செய்வது நாம் நம்பும் கடவுளையே ஏமாற்றப் பார்க்கும் அசட்டுத்தனமாகும். அவர் ஒன்றும் அப்படி யெல்லாம் ஏமாந்துவிடமாட்டார்.  நாம்தான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுகிறோம். உண்மையான பரிகாரம் என்பது வெறும் சடங்குகளிலோ, பூஜைகளிலோ இல்லை. ‘ போன பிறவியில் என்ன பாவங்கள் செய்தேனோ, இந்தப் பிறவியில் துன்பப்படுகிறேன். இனி எந்தத் தப்பையும் செய்யாதிருக்க அருள்வாய், ஆண்டவனே’ என்று வேண்டிக்கொண்டு நல்லவராக மாறுவதே உண்மையான பரிகாரமாகும். இந்த உண்மையான பரிகாரத்தாலும் கூட, தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று நாம் மனப்பால் குடிக்கக்கூடாது! இந்தப் பரிகாரத்தால், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுவதற்கும் அவற்றால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கும் தேவையான மன உறுதி மட்டுமே கிடைக்கும். அவ்வளவுதான்!

    அனைத்துலக அளவில் புகழ் பெற்ற ஓர் ஆன்மிகவாதி  அளவிடற்கரிய ஆன்மிக சக்திகளைப் பெற்றவர். ஆனால் இவர் நம்பத் தகுந்தவரல்லர். தமிழகத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் பெற்றோர் திருமண ஏற்பாட்டைச்  செய்து அது சார்ந்த உறுதிவிழாவையும் முடித்துவிட்டிருந்த நிலையில், அந்தப் பெண் இந்தச் சாமியாரின் கூட்டம் ஒன்றுக்குச் சென்றாள். மயக்கும் விழிகளைக் கொண்ட அந்த “மெஸ்மிரிச” சாமியாரின் காந்தப் பார்வை அடிக்கடி அவள் மீது படிந்தது.  ஆன்மிக ரீதியில் மயங்கிப்போன அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்து அவருடைய குழுவில் இணைந்துவிட்டாள். பெற்றோரால் தடுக்க முடியவில்லை. அவர்கள் சாமியாரிடம் சென்றார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டிடுந்ததை அவருக்குச் சொன்னார்கள். ஆனால், அவரோ, “அது அவளே செய்த தீர்மானம். அவள் சம்மதித்தால் அழைத்துக்கொண்டு செல்லுங்கள். நான் குறுக்கே நிற்கவில்லை!” என்று கையை விரித்துவிட்டார். அந்தப் பெற்றோரின் உள்ளங்கள் என்ன பாடு பட்டிருக்கும்! (இது சில ஆண்டுகளுக்கு முன் கேள்விப்பட்ட நிகழ்வு.)

    தமது யோகக் குழுவில் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாதுஎன்று விதித்துள்ள இவர் தம் மகளுக்கு மணமுடித்துவைத்துள்ளாராம். இது எப்படி இருக்கிறது!  இவரைப்பற்றிச் சில பெற்றோர்கள் காவல்துறையில் முறையிட்டார்கள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் அந்த இளைஞர்களை விசாரணை செய்த போது இவரும் அவர்களுடனேயே இருந்தாராம்! இது ஒரு விசாரணையா!

    இவர் மணமான பெண்களையும் விட்டுவைப்பதில்லை. அவர்களில் சிலரும் குடும்பத்தைக் கவனிக்காமல் ஆசிரம வேலைகளுக்கு வருகிறார்களாம். ஒரு பெண்மணி நாள்தோறும் தன் இரண்டு வயதுக் குழந்தையை உறவுக்காரப் பெண்ணிடம் கொண்டுவந்து விட்டுவிட்டு அவரது ஆசிரமத்துக்குப் போய்ச் சேவை செய்துவருகிறாளாம். அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நேர்ந்த ஒரு பெண் என்னிடம் புலம்பியுள்ளார்! இளைஞர்களை இப்படி மூளைச்சலவை செய்து வசப்படுத்துபவர்கள் மேலும் சிலர் உள்ளார்களாம். இவர்களின் பெற்றோர்கள்  மனம் என்ன பாடு படும்!

    அடுத்தாற்போல், புட்டபர்த்தி பாபா என்ன சொல்லியுள்ளார்?  ‘முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள். உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யுங்கள். அப்படிச் செய்யாத எவரும் இங்கே வரவேண்டாம். அவர்களுக்குக் கடவுளின் அருள் ஒருபோதும் கிடைக்காது’ என்று அறிவித்துள்ளார்.

    பணம் பறிக்கிற ஆன்மிகவாதிகள் அந்தப் பணத்தையெல்லாம் பொது நன்மைகளுக்காகச் செலவு செய்தாலும் ஒழிந்து போகிறது எனலாம். அப்படிச் செய்பவர்கள் ஒரு சிலரே. அமரர் புட்டபர்த்தி சத்திய சாய் பாபா, அமரர் மகா பெரியவர்,  சில சங்கர மடங்கள், ராமகிருஷ்ண மடங்கள், மாதா  அமிர்தானந்த மயி, சிவசங்கர் பாபா போன்ற சிலர் மட்டுமே விதிவிலக்குகளாவர்.

    எது எப்படி இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்தால், தவறு நம்முடையதுதான் என்பதை உணரலாம். ஆண்டவனுக்கும் நமக்குமிடையே இடைத்தரகர்கள் எதற்கு? பணம் பிடுங்காத நல்ல ஆன்மிகவாதிகளைத் தேர்ந்தெடுத்தே நாம் செல்ல வேண்டும். எல்லாரையும் நம்பிவிடக் கூடாது. அதிலும், முக்கியமாய், பரிகாரம், பூஜை என்றெல்லாம் கதைவிட்டுப் பணம் பிடுங்குபவர்களிடம் போகவே கூடாது. பணம் செலவிட்டுப் பாவங்களைப் போக்கிக்கொள்ளவோ, தண்டனையிலிருந்து தப்பவோ முடியாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

    கடவுளின் கணக்குப் பேரேட்டில் கழித்தலோ கூட்டலோ கிடையாது. ‘நான் மூன்று கொலைகள் செய்தவன். ஆனால், ஒரு சமயம் நீரில்  மூழ்கவிருந்த ஐந்து பேரைக் காப்பாற்றியுள்ளேன். எனவே ஐந்திலிருந்து மூன்றைக் கழித்துவிட்டு, நான் இரண்டு உயிர்களைக் காப்ப்பாற்றியதாய்க் கணக்குப் போடும் கடவுளே!’ என்று ஒருவன் கடவுளிடம் பேரம் பேச முடியாது.

    மூன்று கொலைகள் செய்ததற்குத் தண்டனை கிடைக்கும்; ஐந்து உயிர்களைக் காப்பாற்றியதற்கு வெகுமதியும் கிடைக்கும். அதுதான் கடவுளின் கணக்கு! இந்த எளிய கணக்கை நாம் புரிந்துகொண்டால் கோவில்களுக்குப் போவதோடும், வீட்டிலிருந்தவாறு பக்தியும் தியானமும் மட்டுமே செய்வதோடும் நிறுத்திக்கொள்ளுவோம். நம்பகமான ஆன்மிக வாதிகளிடம் மட்டுமே போவோம்.  இல்லையா?

    Share
  • நெருங்கிய உறவுத் திருமணத்தால் விளையும் கேடுகள்

    நெருங்கிய உறவுத் திருமணத்தால் விளையும் கேடுகள்

    ஜோதிர்லதா கிரிஜா

    நெருங்கிய இரத்த பந்தம் உள்ள உறவினர்க்கிடையே திருமணம் செய்யும் வழக்கம் அனைத்துலக நாடுகளிலும் நெடுங்காலமாக இருந்து வருகிறதாம். நம் நாட்டை எடுத்துக்கொண்டால், இத்தகைய திருமணங்களில் அருணாசலப் பிரதேசம் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடமும் வகிப்பதாய் அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது.

    அனைத்துலக நாடுகளில் சிலவற்றில் இந்த வழக்கம் இருந்து வந்தாலும், அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இது இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியப் பகுதியில் உள்ள நாடுகளிலும், அரேபியத் தீவு நாடுகளிலும் இந்த வழக்கம் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதாய்ச் சொல்லப்படுகிறது.

    இப்படி ஒரு வழக்கம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் மிக வெளிப்படையானவை. உறவில் திருமணம் செய்யும் போது மணப்பெண்ணின் குடும்பமும் மணமகனின் குடும்பமும் ஏற்கெனவே ஒன்றுக்கொன்று தெரிந்தவையாக இருக்கும் பின்னணியில், மணமுறிவு போன்ற அபாயங்கள் குறைவு. குடும்பம் சார்ந்த சிக்கல்களும், சண்டை சச்சரவுகளும் பிற வகைத் திருமணங்களில் உள்ளவற்றைவிடவும் குறைவாகவே இருக்கும் வாய்ப்பு உள்ளது. மணமக்களின் குடும்பங்களும் – ஏன்? மணமக்களும் கூடத்தான் – ஏற்கெனவே பழக்கம் உள்ள காரணத்தால்,  ஒரு வகை நிம்மதி மணமகளின் பெற்றோர்க்குச் சற்று அதிகமாகவே இருக்கும். இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண்ணைக் கொடுத்தவர்கள்தானே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க நேர்கிறது?

    தாய்-தந்தையர், உடன்பிறந்தோர்கள், தந்தையின் உடன்பிறப்புகள், தாயின் உடன்பிறப்புகள் ஆகிய உறவுகள் இரத்த பந்த உறவுகளாம்.  தாய் மாமனின் மகன் அல்லது மகள், அத்தையின் மகன் அல்லது மகள் ஆகியோரை முறையே மணமுடிக்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறைகளுடன் தோன்றும் அபாயம் கணிசமாய் உள்ளதென்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றனவாம். அதிலும், சொந்தத் தாய் மாமனை மணக்கும் பெண்ணுக்கு இத்தகைய குறைபாடுடைய குழந்தைகளப் பெறும் அபாயம் அதிகமாகவே உள்ளதென்றும் கண்டறியப்பட்டுள்ளது. தாய்மாமனை “அம்மான்” என்றே நாம் சொல்லுகிறோம். அம்மான் என்றால் கிட்டத்தட்ட ஓர் அம்மாவை ஒத்தவன் என்பதுதானே பொருள்? எனவே, பிற இரத்த பந்தங்களை விடவும் தாய்மாமன் அதிக நெருக்கமானவன் என்றாகிறது. இதனால், பிற இரத்த பந்தங்களை மணப்பதில் உள்ள அபாயத்தைக் காட்டிலும் தாய்மாமனை மணப்பதில் அதிக அபாயம் இருக்குமென்பது தெளிவாகிறது.

    சில நேரங்களில் தாய்மாமனை மணப்பவர்க்குத் தாய்மைப்பேறே கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பெருமளவு குறைபாடுள்ள குழந்தைகள் தான் இவர்களுக்குப் பிறக்கின்றன. இதில் இன்னொரு தீங்கு என்னவென்றால், இந்தத் தலைமுறைக் குழந்தைகள் குறைகள் அற்றுப் பிறந்தாலும், அடுத்து வரும் தலைமுறைச் சந்ததிகள் குறைகளற்றுப் பிறப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற இயலாதாம்.

    இரத்த பந்தம் உள்ளவர்களின் மரபணுக்கள் ஒரே மாதிரியானவையாகவே பெரும்பாலும் இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள். மரபணுக்கள் வேறுபட்டவையாக இருந்தால்தான் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்குமாம். ஆணுடையவையும் பெண்ணுடையவையும் ஒரே இனமாக இருப்பின், குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை என்பதோடு, பிறந்தாலும் அவை குறைகளற்றவையாய் இருப்பதில்லை என்பதே மருத்துவ ஆய்வின் வெளிப்பாடு.

    குடும்பச்சொத்துகள் சொந்தங்களைவிட்டு அகலமாட்டா என்பதும், வரதட்சிணை, படுத்தல்கள் போன்ற கொடுமைகள் இராவென்பதும் இந்தியாவைப் பொறுத்தவரையில் உறவுத் திருமணங்களுக்குக் காரணங்களாம். ஒரு பெண் குழந்தை பிறந்ததுமே, “அடேய், பயலே! உனக்குப் பெண்டாட்டி பிறந்திருக்கிறாள்” என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. அல்லது, சின்னஞ்சிறு வயதிலிருந்தே வரப்போகும் உறவு பற்றிப் பேசிப் பேசியே குடும்பத்துப் பெரியவர்கள் சின்னஞ்சிறிசுகளின் மனங்களில் ஓர் எதிர்பார்ப்பை விதைத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறாகும். ஆணோ பெண்ணோ பின்னர் வளர்ந்து பெரியவர்களாகும் போது, இருவரில் ஒருவரது மனம் மாற நேரிட்டாலும் சிக்கல் ஏற்படுகிறது. பெரியவர்கள் சொல்லிச் சொல்லி விதைத்ததால் விளைந்தது வெறும் சிறுபிள்ளைத்தனமான – மன முதிர்ச்சியல்லாத _ பிணைப்பே என்பதை இருவரில் ஒருவர் புரிந்துகொண்டாலும் விரிசல்கள் ஏற்படுகின்றன. எனவே நம் பெரியவர்கள், “அடேய்! உனக்குப் பெண்டாட்டி பிறந்திருக்கிறாள்!” போன்ற உளறல்களை நிறுத்த வேண்டும்.

    உறவுத் திருமணங்களின் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே தொலைக்காட்சி, வானொலி, பிற ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்ய வேண்டும். விஷயம் தெரியாமல் நாம் இதுகாறும் செய்துவந்துள்ள பிழை போதுமே. இனிமேலும் காது கேளாமை, வாய் பேசாமை, திக்குவாய்க்குறை, கைகால்கள் சூம்பியிருத்தல், மூளைக்கோளாறு, படு குள்ளமான உருவம், இதயக்கோளாறுகள், ஆடிசம் எனும் குறைபாடு, இடுப்பிலிருந்து கால்கள் வரை செயலற்ற தன்மை, கண்பார்வையின்மை, உடம்பின் அளவுக்குப் பொருந்தாத மிகப் பெரிய தலை, தெறிக்கும் விழிகள் இன்னோரன்ன குறைகள் உள்ள குழந்தைகளை நாம் மேலும் உற்பத்தி செய்து அந்தக் குழந்தைகளையும் வதைக்க வேண்டுமா?

    நெருங்கிய உறவுத் திருமணம் சார்ந்த தீமைகள் பற்றித் தெரியாமையால், நம் எழுத்தாளர்கள் (இந்த எழுத்தாளர் உள்பட) உறவுக்காதல் கதைகளை எழுதி வந்துள்ளனர். திரைப்படங்களைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. இனியாகிலும், இதற்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாமே.

    Share
  • ஆண்-பெண் நட்புறவு பற்றி

    ஆண்-பெண் நட்புறவு பற்றி

    ஜோதிர்லதா கிரிஜா

    2013 இல் இதே தலைப்பில் தினமணியில் வந்த என் கட்டுரை வல்லமையின் 27.09.2013 இதழில் சிலரால் விவாதிக்கப்பட்டது. அக்கட்டுரையில் நான் சொல்லவே சொல்லாதவை யெல்லாம் சாடப்பட்டன. அதாவது எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் ஆண்-பெண் நட்புறவாக இருக்க “பெண்ணுரிமை” பற்றிய விவாதங்கள் அரங்கேறின. எனது பதிலில் அதை நான் சுட்டிக் காட்டியாகிவிட்டது. (விருப்பமுள்ளவர்கள் “வல்லமையில் ஜோதிர்லதா கிரிஜா” என்று சொடுக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.) நிற்க.

    ஒரு மிக முக்கியமான விஷயம் பற்றிப் பெற்றோர்களுக்குச் சொல்லும் பொருட்டே இக் கட்டுரை. என் கட்டுரையில், “பத்து வயதுச் சிறுவர்கள் கூட நமபத் தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை; எல்லாத்துக்கும் சின்னவன், ஆனா, கல்யணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு” என்பதோடு மேலும் சிலவற்றையும் கூறியிருந்தமைக்கு நண்பர் செல்வன் அவர்கள் மறுப்பு எழுப்பியிருந்தார். ‘பத்து வயதுச் சிறுவனை வன்புணர்ச்சியாளனாகப் பார்க்கச் சொல்லும் கட்டுரையை என்னவென்று ஏற்றுக் கொள்ளுவது’ என்கிறார்.

    அடுத்து, புவனா அவர்கள் விஞ்ஞான ரீதியாகச் சில கேள்விகளை எழுப்புகிறார்: ‘எழுத்தாளர், உலகில் உள்ள அத்தனை ஆண்களையும் அறிவாரா? பத்து வயசுப் பையன்கள் உட்படக் காம எண்ணம் உள்ளவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? அவருடைய sample set என்ன? என்ன survey எடுத்தார்?  Etc…..’

    நியாயமான கேள்விதான். தாய்மார்கள் தங்களின் 5 – 8 வயதுப் பெண்கள் அக்கம்பக்கத்து 10, 12 … (மேலும் அதைக் கடந்த) சிறுவர்களால்  வன்னுகர்வு செய்யப்பட்டு உடல் உபாதைகளில் ஈடுபட்டது, அந்தப் பிள்ளைகளின் பெற்றோருடன் அதனால் விரோதம் விளைந்தது போன்றவற்றை எனக்கு எழுதியதுண்டு. ஆனால் நான் கேள்விப்பட்டவற்றைக் கூறி எனது கூற்றை மெய்ப்பிக்க முடியாதல்லவா? அதனால் மவுனமாய் இருக்க நேர்ந்தது. ஆனால், அப்போது தோன்றாத எண்ணம் இத்தனை நாள்கள் கழித்துத் தோன்றியதில் வலைத்தளதில் ஒரு தகவலைக் கண்டேன். நான் ஆய்வு ஏதும் செய்யாவிட்டாலும், ஒரு வெளிநாட்டுத் தாய், மற்றும் சிலர் செய்த ஆய்வறிக்கையின் சில வாக்கியங்களைக் கீழே தருகிறேன்:

    Low-income kids report first sexual intercourse at 12 years old in new ISU study

    Boys having sex earlier, more often than girls

    In the study, boys reported their first sexual intercourse at younger ages (averaging 12.48) than girls (13.16). Boys also had nearly 10 percent higher frequency of Posted Aug 12, 2009

    AMES, Iowa — As a new mother herself, Brenda Lohman admits to being shocked by the results of a new study she co-authored. It found that among nearly 1,000 low-income families in three major cities, one in four children between the ages of 11 and 16 reported having sex, with their first sexual intercourse experience occurring at the average age of 12.77.

    “So if 12 years was the average age here, that meant that some kids were starting at 10 or younger,” said Lohman, an Iowa State University associate professor of human development and family studies (HDFS). “A handful of kids reported having sex as early as 8 or 9. We know from our follow-up interviews that one boy who reported having sexual intercourse for the first time at age nine had fathered four children by the time he was 18.”

    “Those people who say that kids don’t have sex at that young of age should think again,” she said. “Definitely the age is the most shocking thing about this study.”

    Tina Jordahl, a former Iowa State HDFS and public policy graduate student who is now a market research specialist with Hospice of Central Iowa, collaborated with Lohman on the study. It analyzes data from the “Welfare, Children and Families: A Three-City Study” — a six-year longitudinal investigation of low-income families living in Boston, Chicago and San Antonio. Their paper, titled “A biological analysis of risk and protective factors associated with early sexual intercourse of young adolescents,” was posted online in the Children and Youth Services Review and will be published in an upcoming issue of the journal.

    மற்றோர் ஆய்வறிக்கையில் ஆய்வாளர்கள் அந்தப் பத்து வயதுச் சிறுவர்களில் பெரும்பாலோர் அது தவறு என்று தெரிந்தே ரகசியமாய்ச் செய்வதாய்க் குறிப்பிடுகிறார்.

    எனவே, எனது எச்சரிக்கைக் கூற்றில் எந்தத் தவறும் இல்லைதானே?

    ‘வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது’ என்ற என் சொற்களுக்கு, “ஓஹோ! அப்படியா? என்ன அஹங்காரம்!” என்று இவர் தெரிவித்த கருத்தில் தப்பே இல்லை. அப்படித்தான் சொல்லத் தோன்றும். “விமர்சகர்கள்” என்பதற்குப் பதிலாய் “வாசகர்கள்’ என்று நான் கை தவறி அப்படி எழுதிவிட்டேன் என்பதே உண்மை. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பு, வெறுப்பைப் பொறுத்தது. “விமர்சகர்கள்” என்று சொன்னால் மட்டும் “அஹங்காரம்” இல்லை என்றாகிவிடுமா எனும் கேள்வியும் எழத்தான் செய்யும். என் கட்டுரையில் நான் சொல்லாதவற்றை யெல்லாம் விமர்சிப்பவர்களைப் பற்றி ‘அய்யோ! இப்படி விமர்சித்து விட்டார்களே!’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகுமா? அதுதான் நான் நினைத்தது. “அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது” என்று சொன்னதும் அதனால்தான். இந்த என் எதிர்வினை “அஹங்காரம்” எனில், நான் சொல்லாதவற்றை யெல்லாம் (பெண்ணுரிமை என்னும் தலைப்பில்) விவாதித்துத் தேவையற்று என்னை வம்புக்கு இழுத்த விமர்சகர்களின் தன்மைக்கேட்டுக்கு என்ன பெயரோ!

    அடுத்து, நண்பர் பிரசாத் “படிப்பவர்களில் பெரும்பாலோர் ஒரு கருத்தை எழுதியவரின் கோணத்தில் பார்க்காமல் வேறு திசையில் புரிந்து கொள்கிறார்கள் என்றால் அது எழுதுபவரின் எழுத்து நடைக் குற்றமே அன்றிப் படிப்பவரின் குற்றமாகாது.’ என்று கூறியுள்ளது உண்மைதான். ஆனால், நான் ஆணாதிக்கத்தை எதிர்த்து வந்திருப்பவள் / வருகிறவள் என்கிற கோணத்திலேயே நான் எழுதுகிற ஒவ்வொன்றையும் தப்பாக எடை போட்டு, நான் எழுதாதவற்றைக்கூடச் சம்பந்தமே இல்லாமல், ஏற்கெனவே கொண்டுள்ள கணிப்பின் (pre-conveived notion) அடிப்படையில் அன்றோ சிலர் விவாதித்துவிட்டு எழுத்தாளருக்குத்  தன் கருத்தை வாசகர்களுக்குப் புரியவைக்கும் திறன் இல்லை என்று மட்டம் தட்டுகிறார்கள்! இது படிப்பவரின் குற்றமே அன்றோ! கறுப்புக் கண்ணடி யணிந்து பார்த்தால் பார்வை மங்கத்தானே செய்யும்?

    ‘எனக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்’ என்று நான் சொன்னது நான் “ஆண்களை வெறுப்பவள் அல்லேன்” என்பதைத் தெரிவிக்க மட்டும்தான். என்  “அதி புத்திசாலித் தனத்தை” விளம்பரப்படுத்துவதற்காக அன்று! எனினும் உங்கள் வாதம் வக்கீல்தனமாகவும் பாராட்டும்படியும் உள்ளது. என் பாராட்டுகள், நண்பரே!

    கடைசியாக, “தற்பெருமைக்காரி” அல்லது “தலைக்கனம் உள்ளவள்” என்று விமர்சிக்கப்படக் கூடிய ஓர் அறிவிப்பு! தினமணி கட்டுரையைப் படித்துவிட்டு, என் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டறிந்து, மண்ணடி (சென்னை) யிலிருந்து மின்சாதனங்கள் விற்பனையாளர் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் தொலைப்பேசியில் சொன்னது:

    “அம்மா! எனக்குக் கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கிறாள். பெண்களைப் பெற்ற தகப்பன்மார்களுக்கு உங்கள் கட்டுரை மிகவும் பிடிக்கும். உங்கள் ஆண்-பெண் நட்புறவு” கட்டுரையைப் பிரதிகள் எடுத்து அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் விநியோகம் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.”

    Share
  • மகாத்மா காந்தியும் மாவீரன் பகத் சிங்கும்

    மகாத்மா காந்தியும் மாவீரன் பகத் சிங்கும்

    ஜோதிர்லதா கிரிஜா

    மாவீரன் என்று அழைக்கப்படும் பஞ்சாப் மாநில இளைஞர் பகத் சிங்  1931 ஆம் ஆண்டில், மார்ச் 23 ஆம் நாளில் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த இங்கிலாந்து அரசால் தூக்கிலிடப்பட்டார். மகாத்மா காந்தி மனம் வைத்திருந்தால் பகத் சிங்கின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று இன்றளவும் கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பது உண்மையான வரலாற்றை யறிந்தவர்களின் நிலைப்பாடாகும். இதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், பகத் சிங் பற்றிய வரலாற்றை அறிய வேண்டியது முக்கியம்.

    பகத் சிங்  லயால்பூர் எனும் ஊரில் 1907இல் பிறந்தார். இவருடைய தந்தை சர்தார் கிஷன் சிங், தாய்மாமன்கள் இருவர் ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களாவர். எனவே,  சிறு வயதிலிருந்தே பகத் சிங்கின் உள்ளத்தில் ஆங்கிலேயர்கள்பால் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றிவிட்டது.

    தம் பன்னிரண்டாம் வயதில் வெள்ளைக்காரர்கள் புரிந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் நடந்த இடத்தை அவை நடந்த சிறிது நேரத்துக்குப் பின் அங்கு சென்று பார்த்ததில் வெள்ளைக்காரர்கள் மீதான அவரது ஆத்திரம் அதன் உச்சத்தைத் தொட்டது. பின்னாளில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, முக்கியப் புரட்சியாளராகி, நவ்ஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி போன்ற புரட்சி இயக்கங்களோடு பகத் சிங் தொடர்புகொண்டதில் வியப்பு இல்லை.

    அவர் சிறு வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்கள் பற்றிப் படித்து, அதன் பின் பொது உடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். மிக இளம் வயதிலேயே ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பு எனும் புரட்சி இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் ஆனார்.  ஒரு சமயம் இங்கிலாந்து அரசால் சிறையில் அடைக்கப்பட்ட போது, இங்கிலாந்துக் கைதிகளைப் போன்றே இந்தியக் கைதிகளும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகச் சிறையில் 63 நாள்கள் போல்  உண்ணா நோன்பிருந்து அனைத்திந்திய கவனத்தையும் கவர்ந்தார்.

    இவ்வாறு, இந்தியாவில் விடுதலைப் போராட்ட இயக்கம் அதன் உச்சத்தில் இருந்த போது, வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக, இங்கிலாந்து அரசு சைமன் கமிஷன் எனும் குழுவை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. நம் நாட்டின் அப்போதைய அரசியல் நிலைமை பற்றிய அறிக்கையைச்  சமர்ப்பித்தலே அதன் பணியாகும்.  ஆனால் அதில் ஓர் இந்தியர் கூட இடம் பெற்றிருக்கவில்லை. எனவே, இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இக்குழுவை அறவே புறக்கணித்தன.  அந்தக் குழு  1928, அக்டோபரில் லாகூருக்கு வந்த போது,  அதற்கு எதிர்ப்புக் காட்டும் வண்ணமாக, பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லாலா லஜ்பத் ராய்,  மகாத்மா காந்தி வழியில் ஓர் அமைதி ஊர்வலத்தை நடத்தினார். ஆனால், ஜேம்ஸ் ஸ்காட் எனும் வெள்ளை அதிகாரியின் உத்தரவுப்படி, அமைதியான அந்த ஊர்வலக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள்.  அந்த அதிகாரி தாமே லாலா லஜ்பத் ராயைத் தாக்கினார். இதன் விளைவாய்க் கடுமையாய்க் காயப்படுத்தப்பட்ட அவர், ‘ என் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் ஆங்கிலேய ஆட்சியின் சவப் பெட்டியின் மீது அடிக்கப்பட்ட ஆணியாகும்’ என்று அறிவித்தார். ஆனால், காயங்களின் விளைவாக அவர் உடல்நலக் குறைவுற்று 1928 நவம்பரில் காலமானார்.

    இந்தக் கொடுமைக்குப் பழிவாங்க முடிவெடுத்த பகத் சிங்,  புரட்சியாளர்களான ராஜ்குரு, சுக் தேவ், சந்திரசேகர ஆசாத் ஆகிய நண்பர்களைக் கூட்டாளிகளாய்த் தம்முடன் அந்த வேலைக்காக இணைத்துக்கொண்டார்.  1928 டிசம்பர் 17ஆம் நாளில் பகத் சிங், ராஜ்குருவுடன் ஒரு பெரிய மரத்தின் பின் மறைவாக நின்றுகொண்டார். ஜெயகோபால் எனும் மற்றொரு நண்பர், எதிரே இருந்த ஒரு கல்லூரி வளாகத்துள் சைக்கிளுடன் நின்றுகொண்டார்.  எதிரில் இருந்த காவல் நிலையத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு வெள்ளை அதிகாரி தம் பைக்கைக் கிளப்பவிருந்த கணத்தில் ஜெயகோபால் ஜாடை காட்ட, பகத் சிங் அவரைச் சில முறை சுட்டார். அவர் இறந்து வீழ்ந்தார். பின்னர் பகத் சிங்கும் ராஜ்குருவும் கல்லூரிக்குள் ஓடினார்கள். எனினும் ஒரு காவலரால் இருவரும் துரத்தப்பட்டார்கள்.  ஆனால், சந்திர சேகர ஆசாத் அவரைச் சுட்டுக் கொன்றார். இதற்குள் பகத் சிங்கும் ராஜ் குருவும் தத்தம் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றனர்.

    இருப்பினும் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் அல்லர். சாண்டர்ஸ் எனும் வேறோர் அதிகாரி. லாகூர் நகரம் முழுவதும் உடனேயே காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. ஆனால் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் வெவ்வேறு மாறு வேடங்களில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    பின்னர் பகத் சிங், தம் நண்பன் பதுகேஷ்வர் தத்துடன் இணைந்து, தில்லி மத்திய சட்ட மன்றத்தில் இந்திய நலனுக்கு எதிரான இரண்டு மசோதாக்கள் ஏப்ரலில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, அங்கே சென்று சில தடவைகள் சுட்டதுடன், இங்கிலாந்துக்கு எதிரான துண்டு அறிக்கைகளையும் அங்கே பறக்கவிட்டார்.  யாரும் சாகாத போதிலும், சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. வாயால் பேசினால் வெள்ளைக்காரர்களுக்குப் புரியவில்லை என்பதோடு அவர்கள் காதிலும் விழுவதில்லை என்பதால்,  வெடிகுண்டு மொழியில் பேசியதாகப் பகத் சிங் அறிவித்தார். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

    இதற்கிடையே லாகூரில் இயங்கிவந்த வெடிகுண்டுத் தொழிற்சாலை, வெள்ளைக்கார அரசாங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. பகத்சிங்கின் கூட்டாளிகளில் சிலரே பகத்சிங்கின் நடவடிக்கைகள் பற்றி அரசுக்குத் தெரிவித்துவிட்டதன் விளைவு, இது.

    இது மட்டுமல்லாது, காவல்துறை  அதிகாரி சாண்டர்ஸைச் சுட்டுக் கொன்றவர்கள் பகத்சிங்கும் அவருடைய நெருங்கிய தோழர்களுமே என்பதையும் அவர்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்தார்கள்.  இதனால், பகத் சிங்குடையவும் அவர்தம் நண்பர்களுடையவும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் தீர்மானமும் வெள்ளை  அரசால் நிறைவேற்றப்பட்டது.

    அதன் பின் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியினர் மகாத்மா காந்தியை அணுகி, பகத் சிங்கின் சார்பில் வெள்ளை அரசோடு அவரை வாதிடக் கோரினர்.  சாண்டர்ஸை அவர்கள் கொன்றதை அஹிம்சாவாதியான காந்தி ஆதரிக்கவில்லைதான். எனினும், வைசிராய் இர்வினைச் சந்தித்த அவர் வாய்மொழியாக மட்டுமின்றி அவர்கள் பால் கருணை காட்டக் கோரி ஒரு கடிதமும் கொடுத்தார்.   “அந்த இளைஞர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்றும், தூக்குத் தண்டனைக்குப் பதிலாக நாடுகடத்தும் தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்குமாறும் காந்தி தமது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். தமது வேண்டுகோளை ஏற்று வைசிராய் இர்வின் செயல்பட்டார் என்ற செய்தியை, கராச்சியில் அடுத்து நடக்கவிருந்த காங்கிரஸ் மாநாட்டில் தாம்  தெரிவிக்க வாய்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவர் என்பதும் அவரது எண்ணம்.

    ஆனால், அவரது வேண்டுகோளைப் பரிசீலிப்பதாய்ச் சொன்ன வைசிராய் இர்வின், மரண தண்டனைக்கென்று குறிக்கப்பட்டிருந்த நாளுக்கும் முன்னதாகவே அவர்களைப் பஞ்சாப் அரசு இரகசியமாய்த் தூக்கிலிட்டதைக் கண்டும் காணாதவராய் இருந்துவிட்டார். காந்தி அது பற்றி அவரை வினவியபோது அது பஞ்சாப் அரசாகையால் தம்மால் தலையிட இயலவில்லை என்று சாமர்த்தியமாய்க் கைவிரித்துவிட்டார். அனைத்திந்தியாவுக்கும் வைசிராயாக இருந்தவரின் கட்டளைக்கு மாநில அரசு கட்டுப்படாதா என்ன? எப்பேர்ப்பட்ட ஏமாற்றுவேலை இது?

    இப்படித்தான் நடந்ததென்பதற்கான ஆவணங்கள் இருந்த நிலையிலும் கம்யூனிஸ்டுகள், பகத்சிங்கின் தூக்குத் தண்டனையைத் தடுக்க எவ்வித முயற்சியையும் காந்தி எடுக்கவில்லை என்று அவரைப் பழி சொல்லுவது நியாயந்தானா? இன்றளவும் கம்யூனிஸ்டுகள் அப்படியே தான் பரப்புரை செய்துகொண்டும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி, எந்தக் குற்றவாளியையும் தூக்கில் போடக் கூடாது எனும் கொள்கையுடையவராவார். கடவுள் கொடுத்த உயிரைப் பறிக்கும் வேலை கடவுளுடையது மட்டுமே எனும் கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தவர்.  அப்படி இருக்கும் போது, பகத் சிங்கையும் அவருடைய நண்பர்களையும் தூக்கில் போடுவதை அவர் ஆதரித்து மவுனமாக இருந்திருப்பாரா?

    வேறு சிலர், பகத்சிங்கின் சார்பில் அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே என்று வாதிடுகிறார்கள். அவர் அஹிம்சாவாதி. கொலை செய்வதைச் சிறிதும் ஆதரிக்காதவர். அப்படிப்பட்ட கொள்கையுடையவர் கொலைகாரர்களுக்குப் பரிந்து உண்ணாவிரதம் இருப்பாரா என்ன? இதைப் பற்றியும் சிந்தித்துப் பாராமல் அவரைக் குற்றம் சொல்லுகிறார்களே!

    மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயைத் தூக்கில் போட, அன்றைய அரசு முடிவு செய்த போது, காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவரது கொள்கைக்கு அது மாறானதென்பதால், நாதுராம் கோட்சேக்கு ஆயுள் தண்டனை மட்டுமே அளிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதிலிருந்தே காந்தியின் நிலைப்பாட்டைக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டாமா?

    இனியாகிலும், பகத் சிங்கைப் பொறுத்த வரையில், காந்தி அடிகளின் நற்பெயருக்கும் மனிதாபிமானத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வண்ணமாய்ப் பேசுவதையும் எழுதுவதையும் பொதுவுடைமைத் தோழர்கள் நிறுத்திக்கொள்வார்களா?

    Share
  • பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

    பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

    ஜோதிர்லதா கிரிஜா

    ஆண்கள் செய்வதை யெல்லாம் நாங்களும் செய்வோம் என்று பெண்கள் கூறத் தலைப்பட்டால், அது அடி முட்டாள்தனமாகும். தாய்மை எனும் மகத்தான பேற்றை இயற்கை தங்களுக்கு அருளியுள்ளதன் அடிப்படையில் சிந்தித்தால் “பெண்ணுரிமை” என்பதன் பெயரால் பெண்களில் சிலர் இப்படிப் பேச மாட்டார்கள்.

    நாம் உட்கொள்ளும் உணவுகள் நம் உடல் நலத்தை மட்டுமல்லாது, நமது மனநலத்தையும் நல்ல விதமாகவோ கெட்டவிதமாகவோ பாதிக்கின்றன என்பது கண்கூடான விஞ்ஞானமாகும். கள், சாராயம், போதை மருந்துகள், புகைபிடித்தல் போன்றவையும் இந்தப் பொதுவான விதிக்கு விலக்காக இருக்க முடியாதுதானே?

    குடி ஆணையும் பெண்ணையும் பாதிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதாய்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில விஷயங்களில் பெண் அதிகமான பாதிப்புக்கும், வேறு சில விஷயங்களில் ஆண் அதிகமான பாதிப்புக்கும் ஆளாவதாய்ச் சொல்லப்படுகிறது. ஆணுக்கு ஏற்படும் பாதிப்பு அவனைவிடவும் பெண் குறைவாய்க் குடித்தாலும் அவளுக்கு அதே அளவு ஏற்படுவதாய்த் தெரியவந்துள்ளது.  ஆனால் அந்தப் பாதிப்புகளிலும் சில வேறுபாடுகள் உள்ளனவாம். குடிவெறியில் கொலை செய்வது, வன்னுகர்வு செய்வது போன்றவற்றில் பெண் ஈடுபடுவதில்லை என்று சொல்லப்படுகிறது. உடலளவில் பெண் அதிகமாகவும், மனத்தளவில் ஆண் அதிகமாகவும் பாதிக்கப்படுவதாய் இதிலிருந்து நினைக்க வேண்டியுள்ளது.

    பெண் குடிப்பதால் அவளது உடல் நிலையில் ஏற்படக்கூடிய சீர்குலைவு அவள் பெறும் குழந்தைகளைக் கண்டிப்பாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகிக்கலாம். ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற வேண்டுமாயின், ஒரு பெண் குடிகாரியாக இல்லாதிருக்கவேண்டும். அதிலும், குழந்தையைத் தன் வயிற்றில் சுமக்கும் போது ஒரு பெண் இந்த விஷயத்தில் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு பெண் உட்கொள்ளும் உணவுகள் அவள் சுமக்கும் கருவையும் பாதிக்கின்றன எனும் நிலையில் அவள் தன் சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியதாகிறது. சில உணவுகள் கர்ப்பத்தையே கலைத்துவிடக் கூடியவை.  சில உணவுகள்  வேறு வகையான குறைபாடுகளைக் கருவில் உற்பத்திசெய்துவிடக் கூடியவை. எனவே கருவுற்றிருக்கும் நிலையில் ஒரு பெண் தன் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாக வேண்டிய நிலையில் உள்ளாள். அவ்வாறு இல்லையெனில், குழந்தைகள் பிறவி யிலேயே அவற்றைப் பாதிக்கும் நோய்களுடன் மட்டுமல்லாது, பல்வேறு ஊனங்களுடனும் பிறக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு ஊனமுற்ற குழந்தைகளை உருவாக்கும் உரிமை எந்தப் பெற்றோர்க்கும் கிடையாது.

    இதைப் பற்றியெல்லாம் அறியாமல், பெண்ணுரிமை என்பதன் பெயரால் ஆண்கள் செய்யும் தவறுகளையெல்லாம் பெணகள் தாங்களும் செய்ய முற்படுவது அசட்டுத்தனம் அல்லது அறிவீனமாகும்.  ‘பெண்களும் குடிக்கத் தொடங்கிவிட்டார்களே! இது எதில் போய் முடியும்?’ என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.  இது நியாயமான கவலைதான். குடிகாரிகளின் எண்ணிக்கை குடிகாரர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக, மிகக் குறைவுதான். ஆனால், இதை எண்ணி நாம் நிம்மதி யடைந்துவிடலாகாது. இந்த எண்ணிக்கை பெருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    விதைக்கும் விதை நன்றாக முளைக்கவேண்டுமாயின் அது விதைக்கப்படும் நிலம் செழிப்புள்ள நல்ல நிலமாக இருத்தல் வேண்டும். கருவைப் பெற்றுத் தன்னுள் வைத்து வளர்க்கும் பெண்ணை நிலத்துக்கு ஒப்பிடுவார்கள்.  நிலம் மட்டுமே நல்ல நிலமாக இருந்துவிட்டால் ஆயிற்றா? அதில் விதைக்கப்படும் விதையும் சேதமடைந்ததாகவோ, சொத்தையாகவோ இருக்கலாமா? ஒரு நிலம் என்னதான் களர்நிலமாக இல்லாமல் செழிப்பானதாக இருந்தாலும், அதில் ஊன்றப்படும் விதை சொத்தையாக இருந்தால் அது முளைத்து வளருமா என்ன!

    குடியால் ஓர் ஆணுக்கு ஏற்படும் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று அவனுடைய உயிரணுக்கள் பாதிக்கப்படும் என்பதாகும். குடித்துக் குடித்துச் சொத்தையான உடம்பை வைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஆணின் மனைவி குடிப்பவளாக இல்லாவிட்டலும் கூட, அவன் மூலம் அவள் பெறும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்குமா என்ன?

    எனவே,  ‘அய்யோ! பெண்கள் இப்படிக் குடிக்க ஆரம்பித்துவிட்டார்களே!’ என்று அங்கலாய்ப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்களும் குடிக்காமல் இருப்பதற்கான உபதேசங்களை இவர்கள் செய்வது நடுவு நிலையான செயலாக இருக்கும். தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் அரசையுமன்றோ இவரைப் போன்ற சீர்திருத்தவாதிகள் கண்டிக்க வேண்டும்? ஆணோ பெண்ணோ தவறிழைப்பதற்கான அத்தனை தவறுகளுக்கும் அடித்தளம் அமைத்திருக்கும் அரசன்றோ  கண்டனத்துக்கு உரியது? ஆனால், அரசுக்குத் தமுக்கு அடிப்பார்கள், அல்லது கண்டுங் காணாதிருப்பார்களே தவிர, அதற்கெல்லாம் இவர்களுக்குக் கடுகளவு துணிச்சலும் கிடையாது என்பதே கசப்பான உண்மை.

    புகை பிடிப்பதும், போதை மருந்து உட்கொள்ளுவதும் கூட ஆணின் உயிரணுக்களைப் பாதிப்பதாய்ச் சொல்லப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியக் குறைபாடுகளுடனோ, ஊனத்துடனோதான் பிறப்பார்கள். எனவே, தீயவற்றுக்கு அடிகோலும் அரசு, அவற்றுக்குத் துணைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரையும் இவர்களுக்கெல்லாம் துணைநிற்கும் காவல்துறையினரையும் ஒருமித்துச் சாடுவதே முறையாக இருக்கும்.

    மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்பதற்கான சாக்குப் போக்குகள் ஏற்புடையனவல்ல. காவல்துறை அலுவலர்களும், ஆட்சியாளர்களும், இன்ன பிற அரசியல்வாதிகளும் ஒழுங்காகச் செயல்பட்டு நடக்க முற்படின், எதையும் சாதிக்கலாம். ஒரு பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் இருப்பின், அந்தப் பகுதியைச் சார்ந்த காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்கம் செய்யப்படுவர் என்று சட்டமியற்றினால், கள்ளச் சாராயம் எப்படி ஒழியாமலிருக்கும்? வெறும் இடமாற்றம் தண்டனையாகுமா? வேறு இடத்துக்கு மாற்றலாகிச் செல்லும் காவல்துறையினர் அங்கும் அதையேதானே செய்வர்?

    ராஜாஜி சொன்னதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகிறது ‘கள்ளச் சாராயத்தைக் குடித்துவிட்டுச் செத்தாலும் சாவேனே ஒழிய, குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்று சொல்லுபவர்களுக்காக மதுவிலக்கை அமல் படுத்தாமல் இருக்கக் கூடாது’ என்று அன்றே அவர் சொன்னதை  நினைவுகூர்ந்து நடப்பதே அறிவார்ந்த – மனிதாபிமானம் மிக்க – நிலைப்பாடாக இருக்கும்.

    இன்று பணிப்பெண்களின் கணவன்மார்கள் அனைவருமே குடிப்பதாய்த் தெரிகிறது. புருசனுக்காகப் படையல் வைத்துக்கொண்டிருந்த பெண்கள் இன்று, ‘அவன் என்னைக்குச் செத்து ஒழியறானோ அன்னைக்குத்தான் என் கொழந்தைங்களும் நானும் நிம்மதியாயிருப்போம்’ என்று விரல் சொடுக்குகிற அளவுக்கு வெறுத்துப் போய் ஒருமையில் அவனைக் குறிப்பிட்டுப் பல்லைக் கடிக்கிறார்கள்.

    மாணவர்களில் பலரும், மாணவிகளில் சிலரும் குடிக்கத் தொடங்கியிருப்பது எதில் போய் முடியும் என்பதை மனச்சாட்சியுள்ள ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். …ஹ்ம்…மனம் என்னும் ஒன்றே  இல்லாதவர்களிடம் மனச்சாட்சியை எதிர்பார்ப்பதும் மடத்தனம்தானே?

    Share
  • வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு!

    வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு!

    ஜோதிர்லதா கிரிஜா

    ‘ஓ….ஓ ….ஓ  …ஓ … ஓ… ஓ… ஓ … அழகு நாடு, அருமை நாடு, இது எங்க நாடு, இது எங்க நாடு, எங்கும் புகழ் தங்கும் நாடு, வளம் பொங்கும் நாடு, வந்த எல்லார்க்கும் எடங் குடுத்து ஏமாந்த நாடு!’ – இது அறிஞர் அண்ணாவின் – 1951இல் வெளிவந்த – ஓர் இரவு திரைப்படப் பாடலாகும். இதை இயற்றியவர் அவ்வை டி.கே. ஷண்முகம் ஆவார். இதன் மற்ற நிறுத்தங்களும் முறையே இன்றைய நம் மக்களுடையவும் நம் நாட்டுடையவும் மனப்பான்மையையும் நிலைமையையும் எடுத்துக் காட்டுபவையாக உள்ளன.

    சுமார் எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களால் துன்புறுத்தித் துரத்தவும் பட்ட யூதர் இனத்தினர் – இந்தியாவில் பார்சிகள் எனப் பின்னாளில் பெயர் பெற்றோர் – அடைக்கலம் தேடி முதலில் இந்தியாவுக்குத்தான் சுமார் பதினெட்டாயிரம் பேர் கப்பலில் வந்திறங்கினர்.   அப்போது குஜராத் மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த மகாராஜா ஜதி ராணாவை அவர்களின் தலைவர் சந்தித்துப் பேசினார். தமது இராஜ்ஜியத்திலேயே மக்கள்தொகை நிறைய இருப்பதாய்ச் சொல்லி அதை அடையாளப் படுத்தும் முறையில் ஜதி ராணா ஒரு கோப்பையில் அதன் விளிம்பு வரை ததும்புகிறாற்போல் பாலை ஊற்றி அவரிடம் கொடுத்தாராம். அதைப் புரிந்துகொண்ட பார்சிகளின் தலைவர் அந்தக் கோப்பையில் சிறிது தேனை ஊற்றி அந்தப் பாலில் கலந்து உறையச் செய்தாராம். [சர்க்கரை என்றும் சொல்லுவதுண்டு.] அப்படிச் செய்ததன் வாயிலாக ‘நாங்கள் உங்களோடு ஒன்று கலந்து விடுவோம். நண்பர்களாக இருப்போம். எங்களால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது, எங்கள் வருகை உங்களுக்கு நல்லதே செய்யும்’ என்று உணர்த்தினாராம். மன்னர் ஜதி ராணாவும் அவர்களை அன்புடன் ஏற்றுத் தம் இராஜ்ஜியத்தில் தங்க ஒப்புதல் அளித்தாராம். அந்தக் காலத்திலேயே இந்தியா வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் நாடு என்பதை அன்னியர்கள் புரிந்துகொண்டவர்களாக இருந்தார்கள் என்பதைத் தானே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது?

    இந்த ஈவிரக்கத்தை அன்னியர்கள் சிலர், தங்களுக்குச் சாதகப்படுத்திக் கொண்டதன் விளைவாகத்தான் இன்று இந்தியா பல தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளது. இந்திய இராஜ்ஜியங்களின் மன்னர்கள் ஒற்றுமையின்றி இருந்ததும் அன்னியர்க்கு வசதியாக இருந்த உண்மையை நாம் மறுக்க முடியாது. ஆனால், பார்சியரைப் பொறுத்த மட்டில், அவர்களின் தலைவர் கொடுத்த வாக்குறுதியை அவருடன் வந்த அனைவருமே சிரமேற்கொண்டு ஒழுகி வந்துள்ளனர் என்கிற போற்றத்தக்க நிலையையும் நாம் நன்றியுடன் நினைவுகூர்ந்தே ஆக வேண்டும்.

    பார்சி இனத்தினர் தம் தலைவரது வாக்குறுதிப்படி நட்புணர்வுடன் நடந்து வந்துள்ளதோடு, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உழைத்தும் வந்துள்ளார்கள். டாடா, பிர்லா, கோத்ரெஜ், மிஸ்திரி, இரானி, வாடியா, பூனாவாலா போன்ற குடும்பப்  பெயர்களை உள்ள பார்சிகளால் இந்தியா விஞ்ஞானம், தொழில், வணிகம் போன்ற பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் மற்ற பலரும் பார்சிகளைப் போல் இருந்து வந்துள்ளார்களா என்றால் இல்லை என்றே சொல்லும்படி இருக்கிறது. பலரும் இந்துக்களை மதமாற்றம் செய்வதிலும் இந்திய நாட்டின் சட்டங்களை மீறுவதிலுமே குறியாக இருந்து வந்துள்ளார்கள்.

    மிக அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஓர் இஸ்லாமிய அன்பர் அதன்  நிருபருக்கு அனுப்பியிருந்த சேதியைச் செவிமடுக்க வாய்த்தது. ஷாஹின் பாக் பகுதியில் ஆயிரக்கணக்கில் குழுமியிருந்த இஸ்லாமியப் பெண்மணிகள், பொதுமக்கள் பலருக்கும் தாங்கள் விளைவித்துக்கொண்டிருக்கும் தொல்லைகள் பற்றி  நினைத்துப் பார்க்கத் தூண்டும் செய்தியாகும் அது. வணக்கத்துக்குரிய முகம்மது நபி அவர்கள் கூறியுள்ளது. ஒரு நாட்டில் தொற்று நோய் பரவிக்கொண்டிருக்கும் வேளையில் பொதுமக்கள் தத்தம் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென்றும் பொது இடங்களில் கும்பலாய்க் கூடி இருக்கக் கூடாதென்றும் நபிகள் நாயகம் திருக்குரானில் கூறியுள்ளதை அந்த இஸ்லாமியர் ஆதாரத்துடன் அந்தச் சேனலுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

    தம்மோடு பேச்சுவார்த்தைக்குத் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு ஷாஹின் பாகில் குழுமிக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராய்க் குரலெழுப்பிக்கொண்டிருந்த இஸ்லாமியப் பெண்களுக்கு  உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லிய பிறகு – உச்ச நீதி மன்றமும் இரண்டு வக்கீல்களை அனுப்பி அவர்களோடு பேசச் செய்ததன் பிறகும் – அசைந்து கொடுக்க  மறுத்துக்கொண்டிருந்தவர்கள் கடைசியில் ஒரு வழியாய்க் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார்கள். அப்படியும் பிடிவாதம் பிடித்து நீங்க மறுத்த ஒன்பது பெண்களைக் காவல் துறை கைது செய்யும்படி ஆயிற்று.

    பெண்கள் எனும் காரணத்தால் அரசு கண்ணியமாகவும், மென்மையாகவும் நடந்து வந்துள்ளதுதானே இவர்களின் அழிச்சாட்டியத்துக்குக் காரணம்? தொடக்கத்திலேயே அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கூடுமாறு அரசு கட்டாயப்படுத்தத் தவறியதுதான் முதல் கோணலாகும். அந்த மென்போக்கை இந்தப் பெண்கள் ஆதாயப்படுத்திக் கொண்டுள்ளதோடு, சின்னஞ்சிறு குழந்தைகளையெல்லாம் கூட அங்கே அழைத்து வந்துள்ளார்கள். விவரமறியாக் குழந்தைகளையெல்லாம் பிரதமர் மோதியின் பெயரைச் சொல்லி அவருக்கு எதிராய்க் கூச்சலிட வைத்துக்கொண்டிருந்தார்கள். நான்கு மாதக் குழந்தையொன்று இறந்த பிறகும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததுதான் உச்சக்கட்ட சோகம்.

    கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகு தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கப் போவதாய் அந்தப் பெண்கள் கூறிவிட்டுத்தான் கலைந்து சென்றுள்ளார்கள்!

    அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டங்களில் சில பாதகங்கள் இருப்பின் பிறர்க்குத் தொந்தரவற்ற முறைகளில் போராடலாமே. பாதகங்கள் இருப்பின் அவை நீக்கப்பட வேண்டும்தான். ஆனால், அது இஸ்லாமியர்க்கு எதிரானது என்கிற வாதம் துளியும் சரியன்று.

    முத்தலாக் விஷயத்தில் பிரதமர் மோதி அவர்கள் இயற்றிய பெண்ணாதரவுச் சட்டத்தை விரும்பாததால்தான் முஸ்லிம் ஆண்கள் மோதிக்கு எதிராய்ப் போராடத் தங்கள் வீட்டுப் பெண்களைத் தூண்டியுள்ளார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை! இதை அந்தப் பெண்கள் புரிந்துகொள்ளாமல் தங்களுக்கு நல்லது செய்த மோதிக்கு எதிராய்க் கூச்சல் போடுவது வியப்புக்கு உரியதே.

    சில ஆண்டுகளுக்கு முன் ஓர் இஸ்லாமிய நண்பர், எனக்கு எழுதிய கடிதத்தில் முஸ்லிம்களுக்குத் தாய்நாடு என்பதே கிடையாது என்றும் அவர்கள் இஸ்லாமுக்கு மட்டுமே விசுவாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்றும் திருக்குரான் சொல்லுவதாய்க் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்படி நபிகள் நாயகம் கூறவே இல்லை. எந்த நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்கிறாரோ, அந்த நாடே அவரது தாய் நாடு என்று திருக்குரானில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இன்னொன்றையும் தெரிந்துகொள்ள வாய்த்தது. அதாவது அந்த நாட்டு மன்னர் (அதாவது ஆட்சியாளர்) இயற்றும் சட்டம் எதுவானாலும்அது தங்களுக்கு உடன்பாடானதாக இல்லாவிட்டாலும்அதை அங்கு வாழும் இஸ்லாமியர்கள் ஏற்க வேண்டுமென்றும் அவர் அறிவித்துள்ளார்! (சந்தேகப்படுபவர்கள், இணையத்தில் தேடி, கேள்வி எழுப்பித் தெரிந்துகொள்ளலாம்.)

    இந்துக்களிலும், முஸ்லிம்களிலும் உள்ள பெரும்பான்மையினர் கலகக்காரர்கள் அல்லர்.  நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் நட்புடன் பழகி வருபவர்கள். இவர்களின் நெஞ்சங்களில் நஞ்சைக் கலப்பவர்கள் குறுகிய மனப்போக்குள்ள மதத் தீவிரவாதிகளும் அரசியல்வாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் மட்டுமே.

    ‘கோலி மாரோ’ என்று சொல்லுவதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்தான். அப்படி ஓர் இந்து சொன்னதற்கும் முன்னால், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூச்சலிட்டவர்களிடமும்,  ‘ ஒரு மணி நேரத்துக்குள் என்னால் ஒரு லட்சம் இந்துக்களைக் கொன்று விட முடியும்’ என்று ஹைதராபாத்தில் அறைகூவல் விடுத்தவர்களிடமும் அதிகமான குரூரம் உள்ளதல்லவா? காஷ்மீரிலிருந்து இங்கு வந்து படித்துக்கொண்டிருப்பவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று சொல்லுவதைக் கண்டிப்பது தவறாகுமா?

    எது எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் தூண்டிவிடவே பட்டிருப்பினும், அவர்களது அச்சத்தை அரசு போக்கத்தான் வேண்டும். ஆயினும் அமித் ஷாவோ, பிரதமரோ ஷாஹின் பாகுக்கு வந்து தங்களைச் சந்திக்கவேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துக்கொண்டிருந்த தெல்லாம் ரொம்பவும் அதிகப்படி.

    இறுதியாய், ‘கடவுளே! இந்தியாவைக் காப்பாற்று’ என்று வேண்டிக்கொள்ளுவதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 6, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள்

     

    Jyothirllata Girija2

     

     

    பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தமிழுலக வாசகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். வல்லமை வாசகர்கள் அவரை வல்லமை இதழின் எழுத்தாளராகவும் அறிவர். அவரது கதை, கவிதை, கட்டுரை, செய்தி, போன்ற பலவகை இலக்கியப் பதிவுகள் வல்லமையில் வெளிவந்துள்ளன. முதன்முதலில் எழுத்துலகில் நுழைந்த பொழுது ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வயது பதினைந்து. குழந்தை எழுத்தாளராக குழந்தைகளுக்கென இவர் எழுதத் துவங்கியது 1950 ஆம் ஆண்டில். அன்று துவங்கிய எழுத்து பணியை தனது எண்பதாவது வயதிலும் ஊக்கமுடன் தொடர்கிறார். சமூக எழுத்தாளரும், சீரிய சிந்தனையாளருமான ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் தொடர் எழுத்துலகப் பணியைப் பாராட்டும் நோக்குடன் அவரை வல்லமை இதழ் குழுவினர்களிடம் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும், கவிஞரும், வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் சமீபத்திய “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற வெளியீட்டைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    பள்ளி நாட்களில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகப் படுத்தப்பட்டு, தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. ஆனந்தவிகடனில் 1968 இல் வெளியாகிய கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக குழந்தைகளுக்காக எழுதும் நிலையிலிருந்து பெரியோருக்கான எழுத்தாளராக இவர் தனது முப்பது வயதுகளில் உருமாற்றம் பெற்று எழுத்துலக  வானில் பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார்.

    பதின்ம வயதில் எழுதி இவர் பரிசு பெற்ற ‘நம் நாடு’ எனும் சிறுவர்புதினத்தைத்திற்குப் பிறகு தனது எழுத்துலகப் பயணத்தில் இவர் தொட்ட எல்லைகள் பலப்பல, பெற்ற விருதுகளின் எண்ணிக்கையோ மலைக்கவைக்கும் ஒரு நீளமான பட்டியல். தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு, அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன அவற்றில் சில. மன்னார்குடியின் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, 2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து கெளரவித்துப் பரிசளித்துப் பாராட்டியது. மறுஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் மூத்தபெண் படைப்பாளர்களில் ஒருவர் எனவும் பாராட்டப் பட்டார்.

    jyothi-300x224

    இவரது எழுத்தார்வம் நமக்கு வழங்கிய படைப்புகள் … சிறுகதைகள் 500, புதினங்கள் 25, குறும் புதினங்கள் 50, நெடும் நாடகங்கள் 3, 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், கிரண் பேடியின் “அஸ் ஐ சீ இட்” என்ற நூலின் சமீபத்திய மொழி பெயர்ப்பு உட்பட பல மொழிபெயர்ப்புகள் என தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்துள்ளார். இவரது படைப்பும் உக்ரைன் மொழியில் மொழி பெயர்ப்பு செயப்பட்டுள்ளது.

    முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

    அந்த வரிசையில், ஈரடி கவிதைகளாக இவர் யாத்த வால்மீகி ராமாயணமும் அடங்கும். ராமாயணத்தை சிறுவர்களுக்காக 1970 களில் வெளியிட்டவர், சிறுவர்களுக்காக எழுதிய சற்றொப்ப ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலை 1789 பாடல்களுடன் மேலும் விரிவாக்கினார். இந்த மொழிபெயர்ப்பு “ராமாயணா இன் ரைம்ஸ்” என்று சென்ற ஆண்டு வெளியிடப் பட்டது.

    இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிலும் இவரது படைப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் பத்திரிக்கை ஒன்றில் இவர் தொடராக எழுதி வந்த “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற திருக்குறளின் ஆங்கில வடிவமும் இந்த மாதம் Cyberwit.net பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    thirukural

    மேலும் அண்மையில் இவரது …

    1 படி தாண்டிய பத்தினிகள்
    2 இதயம் பலவிதம்
    3 வசந்தம் வருமா?
    4 மரபுகள் முறிகின்ற நேரங்கள்
    5 வாழத்தான் பிறந்தோம்
    6 சாதி இரத்தத்தில் ஓடுகிறது
    7 நாங்களும் வாழ்கிறோம்
    8 குருக்ஷேத்திரக் குடும்பங்கள்
    9 இல்லாதவர்கள்
    10 அவசரக்கோலங்கள்

     பத்து நூல்களை பூம்புகார் பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

    எழுத்துப் பணியை தற்பொழுது இணைய உலகிலும் விரிவாக்கி அவரது வலைப்பதிவு, வல்லமை, திண்ணை போன்ற இணைய மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக எழுத்துலகில் பன்முகஎழுத்தாளராக வலம் வரும் ஜோதிர்லதா கிரிஜா அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமையடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    மேலதிகத் தகவல்கள்:
    http://jyothirlathagirija.blogspot.com/
    https://plus.google.com/112576644547569337452/posts

    Share
  • ஆங்கிலத்தில் வால்மீகி ராமாயணம்

    rama

    1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன். ஆனால் அவற்றைச் சேர்க்க நினைத்துப் பெரியோர்க்கானதாக மாற்றி எழுதியதில் அது 1789 பாடலகளாக உருக்கொண்டது. அப்போது நான் மைய அரசுப் பணியில் இருந்ததால், Fair copy யைத் தட்டெழுத நேரம் கிடைக்கவில்லை. ராமரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை மட்டுமே அதில் அடக்கம். வண்ணான் ஒருவனின் பேச்சைக் கேட்டு மதி இழந்து ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது என் சிறு வயதிலேயே சம்மதமற்ற ஒன்றாக இருந்ததால் கதையைப் பட்டஞ்சூட்டு விழாவுடன் நிறுத்தினேன். ராஜாஜி அவர்களின் ஆங்கிலப் படைப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டது. ஒரு முனிவரின் படைப்பை மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லாததாலும், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட கதை பிடிக்காததால், அதைத்தான் நாம் சொல்லப்போவதில்லையே என்கிற சமாதானத்திலும், ராஜாஜியே வால்மிகியைத் தழுவி எழுதியிருக்கும் போது நான் செய்தால் என்ன என்கிற எண்ணத்தாலும் அதைத் தழுவியே படைக்க முற்பட்டேன்.

    கணிப்பொறி வாங்கிய பிறகு அதனை மீண்டும் தட்டெழுதினேன். அதன் வெளியீட்டுக்கு இப்போதுதான் வேளை வந்துள்ளது. Cyberwit Net எனும் பதிப்பகம் அதை வெளியிட முன்வந்துள்ளது. விரைவில் அது வெளியாகிவிடும்.

    அன்புடன்

    ஜோதிர்லதா கிரிஜா

    Share
  • நட்புக்கு இன்னொரு கோணம்

    ஜோதிர்லதா கிரிஜா

    friendship006தன் கணவனின் நண்பன் சபாபதி பணமுடையினால் தனது நிலத்தை விற்பதற்கு இருந்த சேதியைக் கேள்விப்பட்டதிலிருந்து பத்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதை வாங்கிவிட அவளுக்கு ஒரே துடிப்பாக இருந்தது. ‘உயிர் நண்பனாச்சே! சதுர அடிக்கு 200 ரூபாய் குறைச்சுக்குக்கிட்டாருன்னாலும், ரெண்டு லட்சம் சல்லிசாக் கிடைக்குமே!’ என்று அவள் கணக்குப் போட்டாள்.

    அன்று மாலை ரகுரவரன் அலுவலகத்திலிருந்து வந்ததுமே தன் தோழி ஒருத்தியிடமிருந்து கேள்விப்பட்டிருந்த அந்தச் சேதியைச் சொல்லிவிட்டு, “என்னங்க! அவர் தான் உங்க பிராண சிநேகிதராச்சே! அசலாருக்கு விக்கிற அதே விலைக்கு உங்களுக்கும் விப்பாரா என்ன! கொஞ்சம் குறைச்சுக்கச் சொல்லிக் கேட்டுப் பாருங்க. சதுர அடிக்கு 200 குறைச்சுக்கிட்டாருன்னாக் கூட ரெண்டு லச்சம் போல நமக்கு ஆதாயம் கிடைக்கும்ங்க. ஆயிரம் சதுர அடியாமே?” என்று அவள் சொன்னதும் அவன் அவளை முறைத்தான்.

    “நானும் கேள்விப்பட்டேன். பணமுடையால நிலத்தை விக்கிறவன்கிட்ட நட்புக்காக விலையைக் குறைச்சுக்கன்னு சொல்றது நியாயமாகுமா? ஏன்? அதே நட்புக்க்காக வெளியில விக்கிறதை விட சதுர அடிக்கு 200 அதிகப்படியா நாம குடுக்கலாமே?” என்று அவன் கேட்ட எதிர்க் கேள்வி தந்த அதிர்ச்சியில் பத்மாவுக்கு வாயெழவில்லைந்

    நன்றி – குங்குமம்

    ………

     படத்திற்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.sadmuffin.net/cherrybam/graphics/comments-friendship/friendship006.gif&imgrefurl=http://www.cherrybam.com/friendship-comments.php&h=375&w=375&sz=73&tbnid=7qeAHOB8545oSM:&tbnh=116&tbnw=116&zoom=1&usg=__rDR19mXkC3RDynVFkq2sHCr2zh8=&docid=Jf4DqtvIdJuIBM&sa=X&ei=bblIUpuDCcjVrQfC4YGYAg&ved=0CEIQ9QEwCQ

    Share
  • தினமும் மல்லிகைப் பூ – எவளுக்காக?

    ஜோதிர்லதா கிரிஜா

     

    பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த விசாலம் எதிர்ப் பூக்கடையில் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டிருந்த சரவணனைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.  அவன் தலை திரும்பியதும்  கவனியாதவள் போல் தலையைத் திருப்பிக்கொண்டாள். ‘பெண்டாட்டி படுத்த படுக்கை! இவன் யாருக்காகத் தினமும் பூ வாங்குகிறான்’ என்னும் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் அவளுக்கு மண்டையே வெடித்துவிடும் போல் ஆயிற்று. அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் இடைவெளி விட்டு அவனைப் பின் தொடர்ந்தாள். அவன் முகத்தில் பாதிக்கு மேல் மறையும்வண்ணம் குடையைத் தாழ்த்திக் கொண்டாள்.

    தெரு முக்கில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குள் சரவணன் நுழைந்தான்.   அர்ச்சகரிடம் பூவைக் கொடுத்துப் பிள்ளையாருக்குச் சாற்றச் சொன்னதன் பிறகு விநிதாவின் பெயரில் அவன் அர்ச்சனையும் செய்யச் சொன்னதை இதற்குள் விரைந்து வந்து ஒரு தூணுக்குப் பின்னால் நின்று விட்டிருந்த விசாலம் காதில் வாங்கிக்கொண்டாள். இன்ப அதிர்ச்சிக்கு ஆளானாள்.

    “தினமும் அர்ச்சனை பண்றீங்களே, சாமி?” என்ற அர்ச்சகரின் வியப்பான வினாவுக்கு, “அவங்க என் சம்சாரம். அவங்களுக்கு உடம்பு சரியில்லை.  சீக்கிரம் குணமாகணும்னுதான்!” என்ற சரவணனின் பதிலையும் விசாலம் காதில் வாங்கிக்கொண்டாள். நிம்மதிப் பெருமூச்சுடன் விரைவாக அங்கிருந்து நீங்கினாள். உடனே வினிதாவைப் பார்த்து அதைச் சொல்லிப் பாராட்டாவிட்டாலும் அவளுக்குத் தலை வெடிக்கும் போலாயிற்று!

    நன்றி : குங்குமம்.

    Share
  • இளமைப் பருவத்திலே….

    ஜோதிர்லதா கிரிஜா

    செல்வியும் தியாகுவும் அந்த விடுதியை அடைந்து தங்களுக்குத் தரப்பட்டிருந்த ஒன்பதாம் இலக்கமிட்ட அறையை அடைந்து, கதவு திறந்து தங்கள் கைப்பெட்டிகளை அங்கிருந்த பெரிய  கட்டிலின் ஒரு பக்கமாய் வைத்துவிட்டு அதிலேயே உட்கார்ந்த போது அங்கிருந்த சுவர்க்கெடியாரம் ஒன்பது முறை அடித்தது.
    “மணி ஒம்போது! இன்னும் குளிர் விட்ட பாடில்லே!” என்ற தியாகு சோம்பல் முறித்தான்.
    “அண்ணே! இன்னும் ஒரு காப்பி குடிக்கலாமா?” என்று செல்வி கேட்டதும், தியாகு அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவனைப் போல் சடக்கென்று எழுந்து நின்றான்.
    “நானே சொல்லணும்னு நினைச்சேன்… இத வந்துர்றேன்,” என்று சொல்லிவிட்டு அவன் படியிறங்கினான்.

    செல்விக்குத் தெரியாமல் சங்கரலிங்கம் பிள்ளையின் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பிய அவனுக்கு அவள் காப்பி கேட்டது வசதியாக இருந்தது. அவர்கள் தங்கிய அறையில் தொலைபேசி இல்லாததும் நல்லதாயிற்று. இருந்திருந்தால் அதன் மூலமே காப்பிக்குச் சொல்ல நேர்ந்திருக்கும்.
    கல்லாவில் இருந்தவரிடம் முதலில் தொலைபேசி வழிகாட்டியைக் கேட்டுப் பெற்றுப் புரட்டினான்.  சங்கரலிங்கம் எனும் பெயரில் யாருக்குமே தொலைபேசி இல்லை. கல்லாவில் இருந்தவர் நடுத்தர வயதுக்காரராக இல்லாமல் ஓர் இளைஞனாக இருந்ததும் அவனுக்கு வசதியாக இருந்தது. இல்லாவிட்டால், இருபது ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டுப் போன தன்னை அவர் அடையாளம் கண்டிருப்பார் என்று அவன் தன்னுள் நினைத்துக்கொண்டான்.  வயதானவர்களுள் எவர் பார்வையிலும் படாமல் தான் அங்கிருந்து கிளம்ப வேண்டுமே என்று அவன் கவலைப்பட்டான்.
    அந்த ஊரின் பெரும் பணக்காரரான அவர் பெயரில் தொலைபேசி இல்லாதிருக்க முடியாது என்று எண்ணியதால், ஒருகால் அவர் காலமாகி யிருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. பார்வதியைப் பற்றித் தெரிந்து கொள்ள அவனுக்கு ஒரே துடிப்பாக இருந்தது.  அவன் காதலித்த முதல் பெண்… செல்வி பிற்பகல் தூக்கம் போடும் போது ஊருக்குள் ஒரு நடை போய்ப் பார்த்துவர வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
    காப்பி மேசைக்குச் சென்று ஒன்பதாம் அறைக்கு இரண்டு காப்பிகள் எடுத்துவரப் பணித்த பின் படியேறி முதல் மாடியில் தாங்கள் தங்கியிருந்த அறையை யடைந்தான்.
    சற்று நேரத்துக்கெல்லாம் காப்பிக் கோப்பைகளை எடுந்த வந்து குட்டை மேசை மீது வைத்த பணியாள், “காப்பிக்குச் சொல்லணும்னா நீங்க கீழ எறங்கி வரவேணாங்க. அதோ, சுவத்துல இருக்குற பெல்லை அடிச்சா வந்து விசாரிப்போம். இன்னும் கொஞ்ச நாள்ல ஃபோன் வந்துடும்…” என்று சொல்லிச் சென்றார்.
    காப்பியைக் குடித்து விட்டு அவன் கால் நீட்டிப் படுத்தான்.
    செல்வி, “அண்ணே! நான் ஊருக்குள்ள போய் என் ஃப்ரண்டு விமலா இருந்தாப் பாத்துப் பேசிட்டு வர்றேன்,” என்று, அவனது தலையசைப்பைப் பெற்ற பிறகு, முகம் கழுவிப் பொட்டு வைத்துத் தலை முடியைக் கோதிக்கொண்டபின், சேலையைச் சரிசெய்து கொண்டு புறப்பட்டாள்.
    வழியில் அவள் மனம் பார்வதியைப் பற்றித்தான் அசை போடலாயிற்று.  விமலாவைப் பார்ப்பதைக் காட்டிலும் பார்வதியைப் பார்க்க்கவே அவள் அதிகம் அவாவினாள். தியாகுவும் அவளைப் பற்றித்தான் யோசிப்பான்  என்று எண்ணிக்கொண்டாள்.
    தியாகுவுக்கு மாரியம்மனுக்குக் கண்மலர் சாத்துவதற்கான நேர்த்திக்கடன் ஒன்று பாக்கி இருந்தது.  அவன் மனைவி தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் திருநெல்வேலிக்குப் போயிருந்ததாள்.  எண்பது வயதான அவன் அம்மா அவனுடன் – தன் புருசன் வீட்டிலிருந்து வந்திருந்த, செல்வியையும் உடனனுப்பி வைத்திருந்தாள்.  நேர்த்திக் கடனில் எல்லாம் அவ்வளவாய் நம்பிக்கை இல்லாத அவன் சரியாக அதைச் செய்ய மாட்டான் என்கிற அவநம்பிக்கையால் தான் செல்வியையும் அவன் அம்மா உடனனுப்பி வைத்திருந்தாள்.
    இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தியாகுவுக்கும் பார்வதிக்குமிடையே தான் தபால்காரியாகப் பணி செய்தது செல்விக்கு ஞாபகம் வந்தது. எதிராளியின் வயதையோ, சாதியையோ கேட்டுத் தெரிந்துகொண்டபின் யாரும் காதலிக்க முற்படுவதில்லையே!  அப்படித்தான் அவர்கள் இருவரிடையேயும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டுகள் போல் கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டு தங்ககள் காதலை வளர்த்துகொண்ட இருவருக்குமிடையே இருந்த வயதுப் பிரச்சினையால்தான் அது நடக்காமல் போனது. பார்வதி அவனைவிடவும் ஒரு வயதும் சில மாதங்களும் மூத்தவளாக இருந்ததால், அவர்கள் மணம் செய்து கொள்ளுவதற்கு இரு தரப்புப் பெற்றோரும் சம்மதிக்கவில்லை!  கடைசியில் ஓடிப்போக முடிவு எடுத்தார்கள்.  பக்கத்து வீட்டு அம்மாளின் கழுகுக் கண்கள் இருவரும் இரவில் கிளம்பியதைப் பார்த்துப் பார்வதியின் அப்பாவுக்குத் தகவல் சொல்லிவிட, அவர்களது திட்டம் நடைபெறாது போயிற்று…. சேதியும் கசிந்து பார்வதியின் பெயர் கெட்டுப் போயிற்று.
    ஊரின் பெரும் பணக்காரரான சங்கரலிங்கம் அடியாள்கள் மூலம் விடுத்த மிரட்டலுக்கு அஞ்சி, அவர்களது குடும்பம் சென்னையில் இருந்த அவர்களுடைய பெரியப்பா வீட்டுக்குப் போயிற்று. வெகு நாள் வரையில் தியாகு திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்தான்.  பார்வதியையும் அவள் பெற்றோர் வேற்றூரில் குடியேற்றவே, எந்தத் தகவலும் கிடைக்க வழியற்றுப் போன நிலையில் அவன் கடைசியில் அவன் அம்மா பார்த்த பெண்ணை மணந்துகொள்ள சம்மதிக்க நேர்ந்தது. இப்போது அவனுக்கு இரண்டு குழந்தைகள் –  ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாக.
    பார்வதிக்குக் கலியாணம் ஆகியிருக்குமா என்று செல்வி யோசித்த கணத்தில், “ஏய்! செல்வி!” என்று கூவிய பெண்குரல் அவளது எண்ண ஓட்டத்துக்குத் தடை போட்டது.
    ஒரு திடுக்கீட்டுடன் தன் சிந்தனையிலிருந்து விடுபட்டுத் தலை உயர்த்தி பார்த்த செல்விக்கு வியப்புத் தாளவில்லை.
    “அட! பார்வதி! நீயா? உன்னையப் பத்தித்தான் யோசிச்சுக்கிட்டே வந்தேன்னு சொன்னா நம்புவியா?” என்ற செல்வி ஆசையோடு பார்வதியின் ஒரு கையைப் பற்றிக்கொண்டாள். மறு கையில் அவள் காய்கள் அடங்கிய பையை வைத்துக்கொண்டிருந்தாள்.
    “எங்கே இம்புட்டுத் தொலவு?”
    செல்வி சேதியைச் சொன்னாள்.  “உன்னையப் பாக்குறதுக்குத்தான் வந்துக்கிட்டே இருக்கேன். விமலாவைப் பார்க்கப் போறதா அண்ணன்கிட்ட பொய் சொல்லிட்டு வந்தேன். உன்னையப் பார்த்துப் பேசிட்டு, முடிஞ்சா அப்படியே அவளையும் பார்த்துருவேன்…”
    “விமலா ஊர்ல இல்லே, செல்வி. அது நாத்தனாருக்குப் பேறுகாலம்னு மணப்பாறைக்குப் போயிருக்குது…வாயேன் எங்க வீட்டுக்கு..”
    “உங்கப்பாம்மா எதுனாச்சும் சொல்லுவாங்களா?”
    “எங்கம்மா காலமாயாச்சு.  அப்பா இருக்காரு. ஆனா கண் தெரியாது. காதும் கேக்காது.  அதனால பயப்படாம வா…”
    “உங்க வீட்டுக்காரரு…”
    “முதக்கா எங்க வீட்டுக்கு வா. அப்புறமேட்டு எல்லாத்தையும் வெவரமாச் சொல்றேன்..”
    பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்த வரையில் அதன் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
    செல்வியின் பார்வை மட்டும் அடிக்கடி பார்வதியின் மீது பதிந்து பதிந்து மீண்டது.  நாற்பதுக்கு மேற்பட்ட வயதுக்காரி மாதிரியே அவளைப் பார்த்தால் தெரியவில்லை. முப்பது-முப்பத்திரண்டுக்கு மேல் சொல்ல முடியாது. அவ்வளவு இளமையாக இருந்தாள். அவள் அப்பா தமது அறையில் படுத்துக்கொண்டிருந்தார்.

    “உக்காரு, செல்வி.  முதக்க உன்னையப் பத்திச் சொல்லு.  அப்புறமேட்டு நான் என்னையப் பத்திச் சொல்றேன். காப்பி குடிக்கிறியா?”
    “வர்றப்பதான் குடிச்சேன். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு டீ இருந்தாக் குடு.”
    “இருக்குது. தர்றேன். சொல்லு. உனக்கு எத்தினி பசங்க?”
    “ஒரே ஒரு பையன்.  எட்டு வயசு. எங்க வீட்டுக்காரரு போஸ்டல் டிபார்ட்மென்ட்ல இருக்காரு. அண்ணன் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்ல இன்ஸ்பெக்டரா இருக்குது… ரெண்டு பசங்க. அவனுக்கு ஒரு ஆம்பளப் புள்ள, ஒரு பொம்பளப்புள்ள.  சரி…. உன் விசயத்தைச் சொல்லு…”
    பார்வதி பக்கென்று சிரித்து விட்டு, “ எனக்கு ஏகப்பட்ட பசங்க செல்வி…” என்றாள்.
    “   ?  “
    “டஜன் கணக்குல இருக்குதுங்க. நான் டீச்சர் வேலை பாக்குறேன், செல்வி.”
    “அப்ப, உனக்குன்னு பசங்க இல்லியா?”
    “இல்லே.  வீட்டுக்காரரும் இல்லே.”
    “என்ன சொல்றே? அப்படின்னா?”
    “நான் கலியாணமே கட்டல்லே, செல்வி.”
    “என்ன சொல்றே நீ?  ஏன் கட்டல்லே?”
    “எனக்குப் புடிக்கல்லே. பண்ணிக்கல்லே.  என்னைக் கலியாணங்கட்டச் சம்மதிச்சவங்களுக்கெல்லாம் ‘அந்தப் பொண்ணு வேணாம்.  அது ஓடிப் போய்ச் சீரழிஞ்ச பொண்ணு’ன்னு நானே மொட்டைக் கடுதாசி எழுதிப்போட்டுடுவேன்… அம்புட்டுத்தேன்..”
    “என்ன பார்வதி இது! சே. காலம் முச்சூடும் அப்ப தனியாவேயா இருக்கப் போறே?”
    “இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு நிறையவே விடுதிங்கல்லாம் இருக்குது, செல்வி…ஒண்ணும் பயப்படவே தேவையில்லே…”
    “ஏன் இப்பிடிப் பண்ணினே?”
    “உங்க அண்ணனைத் தவிர வேற யாருக்கும் என் மனசில இடம் குடுக்க முடியல்லே செல்வி! என்ன செய்ய?” என்ற பார்வதி தலையைக் குனிந்துகொண்டாள்.
    “ஒரேநிமிசம்.  டீ எடுத்தாறேன்…” என்று விட்டு அவள் எழுந்து போனது அவளது கண்களின் கலக்கத்தைத் தான் பார்த்துவிடக்கூடாது என்னும் எண்ணத்தில்தான் என்பது புரிய, செல்விக்கும் கண்கள் கலங்கின.
    சற்றுப் பொறுத்து இரண்டு தேநீர்க் கோப்பைகளுடன் வந்த பார்வதி, “இந்தா. .. ஒரு வேண்டுகோள், செல்வி… உங்க அண்ணன் கிட்ட நான் கலியாணம் பண்ணிக்கல்லைன்னு சொல்லாதே.  அவரு மனசு உடைஞ்சுபோவாரு.  எனக்கும் ரெண்டு பசங்க, எங்க வீட்டுக்காரரு டீச்சரா இருக்காருன்னு எனக்காக ஒரு பொய் சொல்லு, செல்வி!…” என்ற பார்வதி புன்னகை செய்தாள்.  செல்வியால் பதிலுக்குப் புன்சிரிப்புக் காட்டமுடியவில்லை.
    ………

    நன்றி: கோகுலம் கதிர்

    Share
  • நான் கல்யாணத்துக்கு நிற்கிறேன்!

     

    ஜோதிர்லதா கிரிஜா

     

    கன்னிப்பெண் ணொருத்திதன் கதைஇது வென்றெவரும்
    தலைப்பினைக் கண்டதுமே தாளிதனைத் தள்ளாதீர்!
    பன்னிரண் டுயிர்தமைப் பராம ரித்துவரும்
    தலைப்பிள்ளை ஒருவன்தன் தலைவலிக் கதைகேளீர்.

    குடும்பத்தில் யாவர்க்கும் மூத்தவனாய்ப் பிறந்திடவே,
    உயர்கல்வி பெருமாசை உடனடியாய்த் துறந்திட்டேன்:
    கடும்பசியில் குடும்பத்தார் கலாங்காதி ருந்திடவே
    அயர்வின்றி அலுவலகம் பலஏறி இறங்கிட்டேன்.

    எனைஈன்ற தந்தைதாய் எந்தையின் தந்தைதாய்
    உடன்பிறந்த தங்கை-தம்பி இவரன்றி எழுவராவர்;
    எனைஎன்றும் சோற்றுக்கிவர் எதிர்நோக்கி நின்றவராய்க்
    கடன்படவே வைத்திட்டார் – எனையன்றிக் காப்பரெவர்!

    பாதியாய் இளைத்திட்டேன் ஏறிப் பல வாசற்படி;
    இறுதியாய்க் கிடைத்ததொரு சிறுவேலை தகுதிப்படி:
    ஊதியம் போதாமல் வீதிபல உலவிட்டேன்,
    குருதிநிறம் குன்றிடவே பகுதிநேரம் உழைத்திட்டேன்.

    என்னிரு கைகளாலே எண்ணிறந்த பணிசெய்தும்,
    சம்பளம் போதவில்லை; சங்கடம் பலவாக,
    பன்னிரு வயிறுகளைப் பராம ரிக்கவேண்டிப்
    பம்பரமாய்ச் சுழன்றிட்டேன், பணமொன்றே குறியாக!

    அழகனாம் எனைக்காணும் அலுவலக அணங்குகளின்
    அகல்விழிகள் ஆர்வத்தால் அகன்றிட்ட போதெல்லாம்,
    விழிகளைத் தாழ்த்திடுவேன், வீணாசை என்பதுடன்,
    பகல்கனவு கண்பதனால் பயனிலை என்பதாலும்!

    தங்கைகள் வரிசையிலே தாலிபெற நிற்கையிலே,
    தமையனவன் குமையலாமோ துணைதேடும் ஏக்கத்தில்?
    என்கைகள் பாடுபட்டு என்னதான் சேமித்தாலும்,
    அமையவில்லை துணையவர்க்கு வரன்விலைதன் ஏற்றத்தால்.

    பெண்களின் திருமனங்கள் ஐந்தாட்டுத் திட்டங்கள்!
    மூவர்தம் திருமணங்கள் முடிப்பதற்குள் மூப்புற்றேன்;
    கண்களின் கீழ்ப்புறத்தே வந்தன கரு வட்டங்கள்;
    ஆவலுடன் ஆசைகளும் அற்றுப்போய் அலுப்புற்றேன்.
    கன்னத்து எலும்புகளும் காதோர நரைமுடியும்
    முன்புறத்து வழுக்கையுமே முடங்கிட்ட முதியோனின்
    சின்னத்தைச் செத்தி யென்னைச் சேதாரப் படுத்தியதால்,
    என்புறத்தே பெண்களிந்நாள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

    கலியாணச் சந்தையிலே கன்னி மட்டும் நிற்பதில்லை:
    கடந்தநாள் காளைஎனைப் போன்றோரும் நிற்பதுண்டு:
    மலிவான மாப்பிள்ளைமார் மலியும் நாள் வருகையிலே,
    முடிந்தகதை தொடர்ந்திடவே முத்தான வாய்ப்புண்டு.

    பெண்களில்தான் பிறர்தமக்காய்ப் பெருந்தியாகம் புரிந்திடுவோர்
    உண்டென்று உரைக்கின்ற திவ்வுலகம் முழுமையுமே;
    எங்களிலும் எனையொத்தோர் எண்ணற்றோர் அறிந்திருவீர்!
    விண்டுரைத்தேன் கண்டுகொள்வீர் அவர்தமது அழுகையுமே.

     

    நன்றி: அமுத சுரபி

     

     

    Share
  • அக்காவுக்குத் தெரிய வேண்டாம்!

          ஜோதிர்லதா கிரிஜா

    “சந்துரு சார்” என்று சுருக்கமாய் அழைக்கப்படும் தன் அலுவலர் சந்திரசேகரன் கொஞ்ச நாள்களாய்த் தன்னைப் பார்க்கிற பார்வையே சரி யில்லை என்று நளினிக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. சில ஆண்களைப் போல் அருவருப்பை உண்டாக்கும் பார்வையை அவள் மீது அவர் என்றுமே படரவிட்டவர் அல்லர்தான். ஒருகால், அம் மனிதன் தனக்கு எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வலிய விளைவித்துக்கொண்ட கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுகிறாரோ என்னவோ என்னும் எண்ணமும் அவளுக்கு அவ்வப்போது வந்துகொண்டிருந்தது. எனினும், கடந்த சில மாதங்களாய் அவரது பார்வையில் ஒரு வேறுபாட்டை அவள் தெளிவாய்த் தெரிந்து கொண்டிருந்தாள். பார்வை தப்பானதாக இல்லாவிட்டாலும் அதில் ஓர் ஆழத்தையும் ஏதோ சொல்ல வந்து அதை ஒத்திப்போட்டுக்கொண்டு இருந்ததையும் உள்ளுணர்வாய் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு நாற்பது வயது என்பதும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் புற்று நோய்க்கு தன் மனைவியைப் பறி கொடுத்தவர் என்பதும் அந்த அலுவலகத்து ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும். முப்பத்தைந்து வயதுக்குள் மனைவியைப் பறிகொடுத்துவிட்டு அதன் பின் மறுமணம் பற்றிச் சிந்திக்காமல் இருந்து வந்தவராய்த் தோன்றிய அவர் மீது எல்லாருக்குமே ஒரு மரியாதை இருந்தது. அவ்வலுவலகத்தைச் சேர்ந்த தலைமை எழுத்தர்கள், சக அலுவலர்கள் ஆகியோர் திருமண வயதில் தங்களுக்கு மகள்கள் இருந்த நிலையில் அவரை வளைத்துப் போட முயன்றது உண்டுதான்.  ஆனால், அந்த எண்ணம் தமக்கு இல்லை என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். இந்தத் தகவலும் எல்லாருக்குமே தெரியும்.

    இந்த நிலையில், தன்னை அவர் அண்மைக் காலமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வித்தியாசமான பார்வை நளினியைப் பாதித்தது. அவளும் அதனால் அவர்பால் கவர்ந்திழுக்கப்பட்டாள் எனும் பொருளில் அன்று. அது அவளுக்குப் பிடிக்கவில்லை எனும் பொருளில்தான் அந்தப் பாதிப்பு இருந்தது.  வாயைத் திறந்து ஒரு மனிதர் தம் எண்ணத்தை வெளிப்படுத்தாத வரையில் வெறும் பார்வைக்கு என்ன விதமாய் எதிரொலிப்பது என்று அவள் மலைத்தாள். தன் மேலதிகாரியை எரிச்சலோடு திருப்பி முறைத்துப் பார்ப்பது என்பது அவளது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அப்படி யெல்லாம் ஓர் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் இளம் பெண் தன் அலுவலரை முறைத்துக்கொள்ள முடியாது. அது அறிவுடமையும் ஆகாது. எனவே அவர் வாய் திறந்து அந்தப் பார்வை மாற்றத்துக்கான காரணத்தைத் தாமாகவே வெளிபடுத்துகிற வரையில் பொறுமையாக இருக்க வேண்டியதுதான் என்று காத்திருப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே அவள் காத்திருந்தாள்.

    இவ்வாறு அவரது பார்வை மாற்றத்தை அவள் கவனிக்கத் தொடங்கியதன் பின் சுமார் ஆறு மாதங்கள் கழித்து அவள் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது.

    வாய்மொழிக் கடிதங்களை வழக்கம்போல் சொன்னதன் பிறகு, “மிஸ் நளினி! உங்க கிட்ட நான் ஒரு பெர்சனல் விஷயம் பேசணும். நீங்க சம்மதிச்சா நாம வெளியே எங்கேயாவது ஓட்டலுக்குப் போய் காப்பி குடிச்சுக்கிட்டே பேசலாம். இல்லே, அதுக்கு நீங்க சம்மதிக்கல்லேன்னா, நீங்க சொல்ற எந்த எடத்துக்கும் நான் வரத்தயார்…. இல்லாட்டி, இங்கேயே கூட நான் அதைச் சொல்ல முடியும்,” என்று சன்னமாய்ச் சற்றே பிசிறடித்த தயக்கமான குரலில் கூறிய நேரத்தில் பாதி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவர் அவளை நேரடியாய்ப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டார்.

    இப்படி ஒரு பேச்சை எதிர்பார்த்திருதவளாதலின், எவ்வாறு அதற்கு எதிரொலிக்க வேண்டும் என்பது பற்றி யோசித்து ஏற்கெனவே முடிவு செய்துவைத்திருந்த அவள், “என்ன சொல்லப் போறீங்க, சார்? ஓரளவுக்கு நான் ஊகிச்சேன்.  ஆனா அதை உங்க வாயிலேர்ந்து கேட்டதுக்கு அப்புறம் என் பதிலை நான் சொல்றேன்!” என்ற நளினியை அவர் சட்டென்று தலை உயர்த்தி வியப்புடன் பார்த்தார். ஏனெனில், அவள் குரலில் தேசலோ, தடுமாற்றமோ துளியும் இல்லை. அவளும் அவரை நேரடியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் வெட்கமோ, அது சார்ந்த செம்மையோ அறவே தென்படவில்லை என்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. கம்பீரம், தேவையற்றுச் சிரிக்காதிருத்தல், அளவான புன்சிரிப்பு, அடக்கமான ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றின் வாயிலாகத் தான் ஒரு மாறுபட்ட பெண் என்பதை அவருக்கு உணர்த்தியிருந்த நளினி அந்தப் பொதுமையான எதிர்ச்செயல் மூலம் அவரை மேலும் வியப்புற வைத்தாள். அவர் அவளை மரியாதையுடன் பார்த்தார்.

    அவரது வலக்கையின் விரல் மேசையின் விளிம்பில் இருந்த சிவப்பு மின்விளக்கின் பொத்தானை அழுத்தியதை அவள் கவனிக்கத் தவறவில்லை. அலுவலகம் தொடர்பான கமுக்கமான கடிதங்களை வாய்மொழிகையில் அவர் அந்தப் பொத்தானை அழுத்தி அறையின் வெளியே சிவப்பு விளக்கு எரியச் செய்வது வழக்கம். அலுவலரின் அறைக்கு வெளியே சிவப்பு விளக்கு எரியும் போது யாரும் கதவைத் தட்டிவிட்டும் கூட உள்ளே வரக்கூடாது– உள்ளே வர அனுமதி கேட்கவும் கூடாது-  என்பது அலுவலக விதி.

    “சொல்லுங்க, சார்!”

    சந்திரசேகரனை அவளது எதிரொலி தயங்க வைத்தது. அவரது தலை தாழ்ந்துகொண்டது. என்ன முயன்றும் அவரால் அவளை நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எனினும், குரலைச் செருமிச் சரிப்படுத்திக்கொண்டு, “ நீங்களே சரியா ஊகிச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்…” என்றார்.

    “நான் ஊகிச்சேனா இல்லையான்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சார்.  நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க!”

    அதன் பின் அவர் சற்றே தலை உயர்த்தி அவளை அரையாகப் பார்த்தார்: “நான் மனைவியை இழந்தவன்கிறது உங்களுக்குத் தெரியும். இல்லியா?”

    “தெரியும்.”

    “என் மனைவி தவறிப்போய் அஞ்சு வருஷம் ஆயிடிச்சு. எனக்குக் குழந்தைகள் இல்லேன்றதும் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.”

    “தெரியும், சார்.”

    “அஞ்சு வருஷமா மறுமணத்துல ஆர்வம் இல்லாமதான் இருந்தேன்.  ஆனா இப்படியே முழு வாழ்க்கையையும் கழிச்சுட முடியாதுன்னு தோணுது.. அதனால, மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிறதுன்ற முடிவுக்கு வந்திருக்கேன்…”

    “அது உங்க சொந்த விருப்பம். அது சரியான முடிவும்தான், சார்.”

    அவள் இவ்வாறு சொன்னதும், அவரது அரைப் பார்வை ஒரு நம்பிக்கையுடன் முழுப் பார்வையானது.

    “என் வயசு தெரியுமா உங்களுக்கு?”

    “தெரியும், சார். வர்ற மே மாசம் உங்களுக்கு நாப்பது முடியுது. உங்க பெர்சனல் ஃபைல் என்கிட்ட தானே இருக்கு? அதனால தெரியும்.”

    அவளது ஜாக்கிரதையான பதிலை அவர் தம்முள் மெச்சிக்கொண்டார்.

    “உங்களுக்கு இருபத்தேழு ஆகுது. இல்லியா?”

    “ஆமா.”

    “பதிமூணு வயசு வித்தியாசம்.  ஆனா இன்னும் எனக்கு ஒரு நரை முடி கூடக் கிடையாது…”

    நளினிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை மறைக்க அவள் முயலவில்லை.

    “சார்! ஒரு நிமிஷம்… உங்க ஆர்வத்துக்கு ரொம்ப நன்றி.  ஆனா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட சில விஷயங்களைச் சொல்லணும். முதல் உண்மை எனக்கு இதிலே ஆர்வம் கிடையாது…”

    “அப்படிச் சொல்லாதீங்க, நளினி! உங்க மேல எனக்கு ஒரு பிடிமானம் ஏற்பட்டிருக்கு. அதை லவ்னே சொல்லலாம். என் மனைவியை நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கல்லே. அது என் அம்மா-அப்பா செஞ்சு வெச்சது…அதுக்காக நான் அவளை நேசிக்கல்லேன்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.”

    “உங்க நேர்மையான பேச்சைப் பாராட்டுறேன், சார்! ஆனா, ஒரு நிமிஷம்… நான் இன்னும் பேசி முடிக்கல்லே. எங்க குடும்பத்தைப் பத்தி உங்க கிட்ட நான் பேச வேண்டியிருக்கு. நாங்க மொத்தம் அஞ்சு பேரு. நாலு பொண்ணுங்க. கடைசியா ஒரு தம்பி.  நான் மூணாவது பொண்ணு. எனக்கு அப்பா கிடையாது. எங்கப்பா செத்துப் போன போது எனக்குப் பதினஞ்சு வயசு. எனக்கு முந்தினவளுக்குப் பதினெட்டு.  எல்லாருக்கும் மூத்த அக்காவுக்கு இருபத்தொரு வயசு. கெட்ட வழக்கம் எதுவும் இல்லாத நல்ல அப்பா அவரு.  ஆனா ரொம்பப் படிக்காதவரு. ஒரு ப்ரைவேட் கம்பெனியில வாச்மேனா இருந்தவரு. அவரோட சொற்ப சம்பாத்தியத்துக்கு எங்களையெல்லாம் அவர் படிக்கவெச்சுக்கிட்டு இருந்ததே அதிகப்படி. அவர் காலமானதும் எங்களுக்கெல்லாம் கண்ணைக்கட்டிக் காட்டில விட்டது மாதிரி இருந்திச்சு. நிராதரவா உணர்ந்தோம். எங்கம்மா அப்படியே இடிஞ்சு போயிட்டாங்க. ஹார்ட் பேஷண்டாவும் ஆயிட்டாங்க. கையில சேமிப்பு எதுவும் இருக்கல்லே. இருந்த சொற்பத்துல அவங்களுக்கு வைத்தியம் பார்த்தோம். எல்லாமே கரைஞ்சிடிச்சு. ஆனா, எல்லாருக்கும் மூத்த எங்கக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. மத்தவங்கல்லாம் படிச்சுக்கிட்டு இருந்தோம். அவளால தான் எங்க குடும்பம் அரையும் குறையுமாச்  சாப்பிட்டு வாழ்ந்திச்சு. சில நாள் ஒரு வேளைதான் சாப்பிட முடிஞ்சிச்சு. அவ வேலைக்கு வந்ததுக்கு அப்பால அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் அடுத்த அக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. அதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு இந்தக் கம்பெனியில ஸ்டெனோ வேலை கிடைச்சிச்சு. எனக்கு அஞ்சு வருஷம் செர்வீஸ் ஆகுது.  அப்ப? எங்கக்காவுக்கு இப்ப முப்பத்து மூணு வயசு ஆகுது. அவளுக்கு இன்னும் கல்யாணம் பண்ணி வைக்க முடியல்லே. வரதட்சிணை வாங்குற பழக்கம் ரொம்பவே குறைஞ்சிடுச்சுன்னு பலரும் உளறிக்கிட்டு இருக்காங்க. அது பணக்காரக்குடும்பங்கள்ல தான் நடக்குது. அதனால, என்ன பிரயோசனம்? ஏழைங்களும், நடுத்தரக்குடும்பங்களும் இன்னும் இந்த வரதட்சிணைப் பேயால கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க….நீங்க என்னை லவ் பண்றதாச் சொன்னீங்க. அதை நான் தப்புன்னு சொல்லமாட்டேன்.  நீங்க லவ் பண்ற பொண்ணோட வேண்டுகோளை நிறைவேத்தி வெச்சிங்கன்னா, உங்க லவ் உண்மையான லவ்னு நான் நம்புவேன், சார். யாரை நாம லவ் பண்றோமோ அவங்களோட சந்தோஷம்தானே நம்ம குறிக்கோளாய் இருக்கணும்? இல்லியா, சார்?”

    அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவருக்குப் புரியவே செய்தது. அவர் மேலும் மரியாதையுடனும் களங்கமற்ற அன்புடனும் அவளைப் பார்த்தவாறு இருந்தார்.

    “சொல்லுங்க, சார்.”

    “விஷயத்துக்கு வாங்க.”

    “புரியாதவங்களுக்குத் தானே சார் விஷயத்தைச் சொல்லிட்டு இருக்கணும்? சரி. என் வாயாலே சொல்லிடறேன். என் மேல நீங்க வெச்சிருக்கிற அன்பு உண்மையானதாய் இருந்தா எங்க மூத்த அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்! அவளைப் பார்த்துட்டே நீங்க சம்மதமோ மறுப்போ சொல்லலாம், சார். அவ என்னை விட அழகாய் இருப்பா. ரொம்ப நல்லவ சார் எங்கக்கா. கல்யாணமே வேண்டாம்னு இருக்கா சார் அவ.  எங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் அவளோட லட்சியமாம். ஏன்னா அவளுக்கு முப்பத்து மூணு வயசு ஆயிடிச்சாம். வரிசையாத்தான் பண்ணணும்னு முனைஞ்சா எல்லாருக்குமே வயசு ஆயிடுமாம். சொல்றா! தவிர, உங்க வயசுக்கு அவ அதிகம் பொருத்தமானவ. இல்லியா, சார்?”

    சந்திரசேகரன் கண்ணிமைக்காமல் நளினியைப் பார்த்தவாறு இருந்தார். முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. கடந்த ஆறு மாதகாலத்துக்கும் மேலாய் அவரது பார்வையில் தோன்றி இருந்த கள்ளம் காணாமல் போய் விட்டிருந்தது.

    “நீங்க சொன்னது ரொம்பவே சரி, மிஸ் நளினி! தன் அன்புக்கு உரியவளைச் சந்தோஷப்படுத்துறதுதான் ஒரு நல்லவனோட கடமை. நான் நல்லவன்னு உங்ககிட்டேருந்து செர்ட்டிஃபிகேட் வாங்கறதுல ஆர்வமுடையவனாய் இருக்கேன், மிஸ் நளினி!”

    “தேங்க்யூ, சார்! என்னிக்குப் பொண்ணு பார்க்க வர்றீங்க?”

    “நீங்க இவ்வளவு சொன்னதுக்குப் பெறகு, உங்க அக்காவைப் பார்க்காமயே என் பதில் ‘யெஸ்’ தான்! ஆனா அவங்க என்னைப் பார்க்கணுமில்லே? அதானால நீங்க என்னைக்கு வரச் சொல்றீங்களோ அன்னைக்ககு வர்றேன்.”

    “தேங்க்ஸ், சார்.  ஆனா மச்சினியை யாராச்சும் நீங்க, வாங்க, போங்கன்னு பன்மையில பேசுவாங்களா?”

    “மாட்டாங்கதான்! ஆனா அது எங்க கல்யாணத்துக்குப் பெறகு!” என்று அவர் சிரித்த சிரிப்பில் அவளும் கலந்துகொண்டாள்.

    இருவரும் சேர்ந்து இரைச்சலாய்ச் சிரித்தது வெளியே கேட்க, கதவுக்கு அருகே முக்காலியில் உட்கார்ந்திருந்த பியூன் கந்தசாமி, “ரெட் லைட்டைப் போட்டுக்கிட்டு கூத்தடிக்கிறாங்கப்பா உள்ளே ரெண்டு பேரும்!” என்றான்.

    இது பற்றி  அறியாத நளினி, “ஆனா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தரணும்…” என்றாள்.

    “என்ன!”

    “இப்ப நாம பேசினது எதுவும் எங்க அக்காவுக்குத் தெரியவே கூடாது!”

    “சொல்லவே மாட்டேன்! நானென்ன மடையனா?” என்றார் சந்திரசேகரன்.

    Share