நெருங்கிய உறவுத் திருமணத்தால் விளையும் கேடுகள்
ஜோதிர்லதா கிரிஜா
நெருங்கிய இரத்த பந்தம் உள்ள உறவினர்க்கிடையே திருமணம் செய்யும் வழக்கம் அனைத்துலக நாடுகளிலும் நெடுங்காலமாக இருந்து வருகிறதாம். நம் நாட்டை எடுத்துக்கொண்டால், இத்தகைய திருமணங்களில் அருணாசலப் பிரதேசம் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடமும் வகிப்பதாய் அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது.
அனைத்துலக நாடுகளில் சிலவற்றில் இந்த வழக்கம் இருந்து வந்தாலும், அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இது இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியப் பகுதியில் உள்ள நாடுகளிலும், அரேபியத் தீவு நாடுகளிலும் இந்த வழக்கம் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதாய்ச் சொல்லப்படுகிறது.
இப்படி ஒரு வழக்கம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் மிக வெளிப்படையானவை. உறவில் திருமணம் செய்யும் போது மணப்பெண்ணின் குடும்பமும் மணமகனின் குடும்பமும் ஏற்கெனவே ஒன்றுக்கொன்று தெரிந்தவையாக இருக்கும் பின்னணியில், மணமுறிவு போன்ற அபாயங்கள் குறைவு. குடும்பம் சார்ந்த சிக்கல்களும், சண்டை சச்சரவுகளும் பிற வகைத் திருமணங்களில் உள்ளவற்றைவிடவும் குறைவாகவே இருக்கும் வாய்ப்பு உள்ளது. மணமக்களின் குடும்பங்களும் – ஏன்? மணமக்களும் கூடத்தான் – ஏற்கெனவே பழக்கம் உள்ள காரணத்தால், ஒரு வகை நிம்மதி மணமகளின் பெற்றோர்க்குச் சற்று அதிகமாகவே இருக்கும். இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண்ணைக் கொடுத்தவர்கள்தானே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க நேர்கிறது?
தாய்-தந்தையர், உடன்பிறந்தோர்கள், தந்தையின் உடன்பிறப்புகள், தாயின் உடன்பிறப்புகள் ஆகிய உறவுகள் இரத்த பந்த உறவுகளாம். தாய் மாமனின் மகன் அல்லது மகள், அத்தையின் மகன் அல்லது மகள் ஆகியோரை முறையே மணமுடிக்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறைகளுடன் தோன்றும் அபாயம் கணிசமாய் உள்ளதென்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றனவாம். அதிலும், சொந்தத் தாய் மாமனை மணக்கும் பெண்ணுக்கு இத்தகைய குறைபாடுடைய குழந்தைகளப் பெறும் அபாயம் அதிகமாகவே உள்ளதென்றும் கண்டறியப்பட்டுள்ளது. தாய்மாமனை “அம்மான்” என்றே நாம் சொல்லுகிறோம். அம்மான் என்றால் கிட்டத்தட்ட ஓர் அம்மாவை ஒத்தவன் என்பதுதானே பொருள்? எனவே, பிற இரத்த பந்தங்களை விடவும் தாய்மாமன் அதிக நெருக்கமானவன் என்றாகிறது. இதனால், பிற இரத்த பந்தங்களை மணப்பதில் உள்ள அபாயத்தைக் காட்டிலும் தாய்மாமனை மணப்பதில் அதிக அபாயம் இருக்குமென்பது தெளிவாகிறது.
சில நேரங்களில் தாய்மாமனை மணப்பவர்க்குத் தாய்மைப்பேறே கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பெருமளவு குறைபாடுள்ள குழந்தைகள் தான் இவர்களுக்குப் பிறக்கின்றன. இதில் இன்னொரு தீங்கு என்னவென்றால், இந்தத் தலைமுறைக் குழந்தைகள் குறைகள் அற்றுப் பிறந்தாலும், அடுத்து வரும் தலைமுறைச் சந்ததிகள் குறைகளற்றுப் பிறப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற இயலாதாம்.
இரத்த பந்தம் உள்ளவர்களின் மரபணுக்கள் ஒரே மாதிரியானவையாகவே பெரும்பாலும் இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள். மரபணுக்கள் வேறுபட்டவையாக இருந்தால்தான் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்குமாம். ஆணுடையவையும் பெண்ணுடையவையும் ஒரே இனமாக இருப்பின், குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை என்பதோடு, பிறந்தாலும் அவை குறைகளற்றவையாய் இருப்பதில்லை என்பதே மருத்துவ ஆய்வின் வெளிப்பாடு.
குடும்பச்சொத்துகள் சொந்தங்களைவிட்டு அகலமாட்டா என்பதும், வரதட்சிணை, படுத்தல்கள் போன்ற கொடுமைகள் இராவென்பதும் இந்தியாவைப் பொறுத்தவரையில் உறவுத் திருமணங்களுக்குக் காரணங்களாம். ஒரு பெண் குழந்தை பிறந்ததுமே, “அடேய், பயலே! உனக்குப் பெண்டாட்டி பிறந்திருக்கிறாள்” என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. அல்லது, சின்னஞ்சிறு வயதிலிருந்தே வரப்போகும் உறவு பற்றிப் பேசிப் பேசியே குடும்பத்துப் பெரியவர்கள் சின்னஞ்சிறிசுகளின் மனங்களில் ஓர் எதிர்பார்ப்பை விதைத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறாகும். ஆணோ பெண்ணோ பின்னர் வளர்ந்து பெரியவர்களாகும் போது, இருவரில் ஒருவரது மனம் மாற நேரிட்டாலும் சிக்கல் ஏற்படுகிறது. பெரியவர்கள் சொல்லிச் சொல்லி விதைத்ததால் விளைந்தது வெறும் சிறுபிள்ளைத்தனமான – மன முதிர்ச்சியல்லாத _ பிணைப்பே என்பதை இருவரில் ஒருவர் புரிந்துகொண்டாலும் விரிசல்கள் ஏற்படுகின்றன. எனவே நம் பெரியவர்கள், “அடேய்! உனக்குப் பெண்டாட்டி பிறந்திருக்கிறாள்!” போன்ற உளறல்களை நிறுத்த வேண்டும்.
உறவுத் திருமணங்களின் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே தொலைக்காட்சி, வானொலி, பிற ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்ய வேண்டும். விஷயம் தெரியாமல் நாம் இதுகாறும் செய்துவந்துள்ள பிழை போதுமே. இனிமேலும் காது கேளாமை, வாய் பேசாமை, திக்குவாய்க்குறை, கைகால்கள் சூம்பியிருத்தல், மூளைக்கோளாறு, படு குள்ளமான உருவம், இதயக்கோளாறுகள், ஆடிசம் எனும் குறைபாடு, இடுப்பிலிருந்து கால்கள் வரை செயலற்ற தன்மை, கண்பார்வையின்மை, உடம்பின் அளவுக்குப் பொருந்தாத மிகப் பெரிய தலை, தெறிக்கும் விழிகள் இன்னோரன்ன குறைகள் உள்ள குழந்தைகளை நாம் மேலும் உற்பத்தி செய்து அந்தக் குழந்தைகளையும் வதைக்க வேண்டுமா?
நெருங்கிய உறவுத் திருமணம் சார்ந்த தீமைகள் பற்றித் தெரியாமையால், நம் எழுத்தாளர்கள் (இந்த எழுத்தாளர் உள்பட) உறவுக்காதல் கதைகளை எழுதி வந்துள்ளனர். திரைப்படங்களைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. இனியாகிலும், இதற்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாமே.