தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17
புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
இலக்கண உரைகளில் உவமங்கள் – 3
முன்னுரை
கவிச்சக்கரவர்த்திகள் என்னும் பெருமைக்குரியவர் மூவராயினும் கம்பனைத் தனித்துச் சுட்டுவது போலப், ‘பாரதி’ என்பார் பலராயினும் சுப்பிரமணியபாரதியையே சுட்டுமாறு போல இலக்கண இலக்கிய உரையாசிரியர் பலராயினும் அச்சொல் ஒருவரையே சுட்டுமாறு அமைந்திருக்கிறது. அந்தச் சிறப்பினைப் பெற்றவர் ஆசிரியர் இளம்பூரணர். தொல்காப்பிய அடவிக்குள் செல்லத் தடம் காட்டிய தண்டமிழ்ச் சான்றோர். கரையில்லாத் தமது தமிழ்ப்புலமையைக் கறையில்லா உரைசெய்து காலத்தால் அழிக்க முடியாத பெரும்புகழ் கொண்டவர். சேனாவரையம், நச்சினார்க்கினியம் மற்றும் பேராசிரியம் ஆகியவை தனித்தன்மை மிக்க உரைகளாகக் கருதப்படினும் அவற்றின் தனித்தன்மைக்கு மூலமாக இருந்தது இளம்பூரணரின் உரையே என்பதைக் கற்றார் அறிவர். ‘இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லாரால் போற்றப்படும் அன்னார் எழுதிய தொல்காப்பியம் முழுமைக்குமான உரையில் ஆங்காங்கே இலக்கண விளக்கத்திற்காக அவர் பயன்படுத்தியிருக்கும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
குலமகளும் கோபுரமும்
அனைத்துவகைச் சிறப்புக்களை உடையதாயிருப்பினும் ஒரு நூலுக்குப் பாயிரம் என்பது இன்றியமையா ஒன்று. அது அறிமுகம். தோரணவாயில். முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்றெல்லாம் ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு அது அமையும். பொதுப்பாயிரம் எனவும் சிறப்புப் பாயிரம் எனவும் அது பகுக்கப்படுவதும் உண்டு. தொல்காப்பியத்திற்கும் அந்தப் பாயிரம் உண்டு. அதனை எழுதியவர் பனம்பாரனார் என்னும் சான்றோர். அந்தப் பாயிரம் தொல்காப்பியத்திற்கு அமைந்துள்ள பாங்கினை இளம்பூரணர் உவமம் கூறி விளக்குகிறார். ‘புகழ் புரிந்த இல் இல்லோரக்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை’ என்னும் குறட்பாவால் ‘கணவனுக்கு மனைவியே அணிந்துரை’ என்பதைக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். சிலப்பதிகாரக் காப்பியத்தில் தலைமகள் கண்ணகியைக் கோவலனினும் முற்படுத்தி அறிமுகம் செய்ததும் இது பற்றி என்க. இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது மனத்தில் எண்ணிய இளம்பூரணர்,
“பாயிரம் என்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயனெனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போல இன்றியமையாச் சிறப்பிற்று”
என்று எழுதுகிறார். எண்ணிப்பார்க்க இயலாத உவமங்களைக் கவிதைகளில் பிணைத்துக் காட்டியவர் சுரதா. அவருக்கு இளம்பூரணர் வழிகாட்டியாக இருக்கலாம். பாயிரத்தை நோக்கினால் நூலின் தகுதி தெரிந்துவிடும். மனைவியின் பெருமை நோக்கினால் கணவனின் பெருமை புலப்பட்டுவிடும் என்பது கருத்து. இங்கே ஒரு நுட்பத்தை இளம்பூரணர் பதிவு செய்கிறார். மனைவியில்லையேல் கணவன் இல்லையென்பதை ‘இன்றியமையாச் சிறப்பிற்று’ என்னும் தொடரால் புலப்படுத்துகிறார்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
அக்காலத்தில் நகரங்கள் ஆலயங்களுக்குள் வடிவமைக்கப்பட்டன. மதுரை, திருவானைக்காவல், திருவரங்கம் முதலிய நகரங்கள் ஆலயத்திற்குள் அடக்கம். விமானம் என்பது கருவறைக்கு மேல் நிற்பது. கோபுரம் என்பது கோயிலுக்கு நுழைவாயிலாக அமைவது. நகரம் கோயிலுக்குள் அமைந்ததால் கோயிலுக்குக் கோபுரம் என்பதும் நகரத்திற்கு நுழைவாயிலாக அமைந்தது. இதனைச் சிந்திக்கும் இளம்பூரணர், ஒரு நூலுக்கும் அதன் பாயிரத்திற்குமான தொடர்பைத்,
“திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயில் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலான்”
என்று எழுதுகிறார். மனைவி இன்றிக் கணவன் அமையமாட்டான் என்பதை முன்னுவமத்தால் பெறவைத்த இளம்பூரணர், இந்த உவமத்தால் அத்தகைய அறிவுடைய மனைவி அழகுபொலி நங்கையாகவும் இருக்க வேண்டும் என்பதை ‘அலங்காரமாதற் சிறப்பு’ என்னும் தொடரால் பெறவைக்கிறார்.
இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருடன்
‘பார்த்து நடந்தால் பாதை தெரியும்’ என்பார் கண்ணதாசன். பார்த்து நடப்பதற்குக் கைகாட்டி இன்றியமையாதது. அந்த கைகாட்டித்தான் பாயிரம். இப்பாயிரம் அமையாத அல்லது படிக்காத நிலையில் நேரடியாக நூலுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்? என்பது பற்றி அடிகள் சிந்திக்கிறார். அதற்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.
“பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனின் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும்”
என்று எழுதுகிறார். உள்ளடக்கத்தின் அறிமுகம் பாயிரம். தடங்காட்டி வழிநடத்தும் பொறுப்பு அதற்குண்டு. அப்பாயிரம் இன்றேல் உள்ளடக்கத்தை அறியா மாணவன் தடமறியாக் காட்டுக்குள் சென்ற மானாக இடர்ப்படுவான் என்னும் உவமத்தை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார்.
நாலுழக்கு கொண்டதே நாழி
‘நாழி’ என்றால் ‘படி’ என்பது பலருக்கும் தெரியும். ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்பது சங்க இலக்கியம். ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி’ என்பது மூதுரை. ஆனால் ‘நாழி’ என்னும் அளவு எப்படி வந்தது என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. நுட்பமான இந்த அளவைக்கு மூலம் கிடையாது என்பதுதான் கருத்து. இதனை இளம்பூரணர் தக்க இடத்தில் உவமமாக்குகிறார். எழுத்துக்களை உச்சரிப்பதற்குரிய கால அளவுக்கு மாத்திரை என்று பெயர். அம்மாத்திரை அளவை எப்படி நிர்ணயிப்பது என்று,
“கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே”
என்ற நூற்பாவில் தொல்காப்பியம் சிந்தித்திருக்கிறது. இந்த நூற்பாவில் கண்ணிமையின் அசைவும், கைந்நொடியின் ஒலியளவும் ஒரு மாத்திரைக்கான கால அளவு என்பதை உணர்த்தியிருக்கிறார். இளம்பூரணருக்கு என்ன ஐயம் வந்தது? இதனை ஒரு மாத்திரை என்று கொள்வது எப்படி? என்பதுதான். அதற்கு அவர் எழுதுகிறார்,
“நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு என்றதனான், நாலுழக்கு கொண்டது நாழி என்றாற்போல அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக”
அடிகள் உவமத்தால், நாழி என்பது எல்லாருக்கும் தெரியும். அது நாலுழக்கு கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. நுண்ணறிவு கொண்டார்க்கே அது புலனாம். அதுபோலக் கண்ணிமையும் நொடியும் மாத்திரை என்பது நுண்ணுணர்வுடையோர்க்கே புலனாம் என்று உவமம் கொண்டு விளக்குகிறார்.
சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது
முதலெழுத்து, சார்பெழுத்து என்னும் பகுப்பில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றும் இடம்பெறுவது தொல்காப்பிய வழக்கு.
“குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன”
என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக்களை முன்னர்ச் சுட்டி சார்பெழுத்துக்களை இந்த நூற்பாவில் சுட்டுகிறார் தொல்காப்பியர். முதலெழுத்தும் சார்பெழுத்தும் தனித்தனியாக விதந்தோதப்படுதலின் பின்னவை எழுத்தாகுமோ என்னும் ஐயத்தைக் களைய வேண்டிய கடப்பாடு உரையாசிரியருக்கு வருகிறது. இளம்பூரணர் இந்த ஐயத்தை ஓர் உவமத்தால் களைகிறார்.
“சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன”
என்று எழுதிக் காட்டுகிறார். காட்டி, சார்ந்துவரல் மரபின் மூன்றெழுத்துக்களைத் தனியாக ஓதியது என்னையோவெனின் அவை பொருள் வேற்றுமையும் புணர்ச்சி வேற்றுமையும் கருதி வேறொரு தனியெழுத்தாகக் கூறினார் என்றும் காரணம் கூறுகிறார்.
உயிர்மெய்யில் முன்னிற்பது எது? உயிரா? மெய்யா?
அங்காந்த வாயினின்றும் வரும் ஆதியொலி அகரமெனின், உயிர்மெய்யை உச்சரிப்பது எவ்வாறு? அவ்வாறு உச்சரிக்குங்கால் முதலில் வருவது உயிரா மெய்யா? என்னும் அறிவுப்பூர்வமான ஐயம் வருவது இயல்பே. எழுத்துக்களின் தோற்றங்களை நிரலாகக் கூறிவரும் தொல்காப்பியம்,
“மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே”
என்னும் நூற்பாவில் உயிர்மெய்யின் தோற்றத்தைப் பற்றி ஆராய்கிறது. முன்னர்க் கூறியவண்ணம் உயிர்மெய்யில் முதலில் தோன்றும் ஒலி உயிரா மெய்யா என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் இந்த நூற்பாவால் களைகிறது. ‘உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று எனப் பதசாரம் எழுதிய இளம்பூரணர்,
“மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையான் அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன்கலந்ததன்றி விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தனவல்ல என்பது பெறுதும்”
என்னும் இரண்டு உவமங்களால் விளக்குகிறார். இப்படி இருக்கிறது என்பதற்கோர் உவமமும் இவ்வாறு நிற்பதாகக் கருதிவிடக்கூடாது என்பதற்கு மற்றொரு உவமத்தையும் பதிவு செய்து உயிர்மெய்யுள் எது முன்னது என்று தெரியாத வண்ணம் ஒலி வெளிப்படும் என்னும் நுட்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கலத்தலும் மயங்குதலும்
‘மயக்கமா? கலக்கமா?’ எனத் தொடங்கும் கண்ணதாசன் எழுதிய திரையிசைப் பாடல் பெருவழக்கு. ‘கலங்கி நிற்றல்’ என்பது வேறு. ‘கலந்து நிற்றல்’ என்பது வேறு. கண்ணதாசன் இப்படி எழுதுவதற்கு முன்னால் தொல்காப்பியர் கலத்தலா? மயங்குதலா? என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். தமிழில் சில சொற்கள் ஒரே பொருளைத் தருவதாகத் தோன்றினாலும் அவற்றிடையே நுட்பமான வேற்றுமை நிலவுவதை உரையாசியர்களின் துணைகொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. சான்றாகக் கலத்தல், மயங்குதல் என்பன ஒரே பொருள் தருவது போலத் தோன்றும் இரு சொற்கள். இவ்விரண்டு சொற்களையும் பிணைத்து,
“நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
என்பது தொல்காப்பிய மரபியலில் காணப்படும் நூற்பா பகுதியாகும். ‘கலந்த மயக்கம்’ என்னும் தொடரில் ஒரே பொருளைத் தரும் இரண்டு சொற்களை நோக்கிய இளம்பூரணர் அவற்றுக்கிடையே நிலவும் பொருள் வேறுபாட்டை நேரடியாக விளக்குவதைவிட உவமையால் விளக்குவதே ஏற்றது எனக் கருதியவராய்க்,
“கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செப்பும் உருக்கி ஒன்றாதல் போறல். ‘உலகம்’ என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். ‘உலகம்’ என்றது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். ‘உலகினுட் பொருள்’ பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டையும் உலகம் உடைத்தாதலின் ‘கலந்த மயக்கம்’ என்றார்”
என விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வுவமைகளால் தன்னிலை மாறாமல் இணைவது ‘கலத்தல்’ எனவும், தன்னிலை இழந்து இணைவது ‘மயங்குதல்’ எனவும் அவற்றின் பொருள் விளக்கமாவதைத் தெளியலாம்.
நிறைவுரை
‘இலக்கண விளக்கத்திற்கும் உவமப்பயன்பாடு ஏற்றதே’ என்னும் கொள்கையில் உறுதியாயிருக்கும் இளம்பூரணர் உரையில், பாலும் நீரும் என்னும் உலகியல், ‘எல்லா விரலும் ஒன்றல்ல’ என்னும் வழக்கியல், தோற்றம் இயல்பைக் குறைக்காது என்பது பட நின்ற ‘சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது’ என்னும் தத்துவம் முதலியன உவமங்களாக வந்துள்ளன. கோபுரமும் குறிச்சியும் உவமமாக வந்துள்ளன. ‘கலத்தல், மயங்குதல்’ என்னும் சொற்பொருள் விளக்கத்திற்கும் உவமங்கள் பயன்பட்டுள்ளன. எடுத்துக்காட்டப்படும் இவை மட்டுமே இளம்பூரணரின் உவமங்கள் அல்ல இன்னும் இருக்கின்றன என ஆற்றுப்படுத்துகிறது இக்கட்டுரை.
(தொடரும்…)