ஏப்ரல் 6, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள்

 

Jyothirllata Girija2

 

 

பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தமிழுலக வாசகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். வல்லமை வாசகர்கள் அவரை வல்லமை இதழின் எழுத்தாளராகவும் அறிவர். அவரது கதை, கவிதை, கட்டுரை, செய்தி, போன்ற பலவகை இலக்கியப் பதிவுகள் வல்லமையில் வெளிவந்துள்ளன. முதன்முதலில் எழுத்துலகில் நுழைந்த பொழுது ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வயது பதினைந்து. குழந்தை எழுத்தாளராக குழந்தைகளுக்கென இவர் எழுதத் துவங்கியது 1950 ஆம் ஆண்டில். அன்று துவங்கிய எழுத்து பணியை தனது எண்பதாவது வயதிலும் ஊக்கமுடன் தொடர்கிறார். சமூக எழுத்தாளரும், சீரிய சிந்தனையாளருமான ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் தொடர் எழுத்துலகப் பணியைப் பாராட்டும் நோக்குடன் அவரை வல்லமை இதழ் குழுவினர்களிடம் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும், கவிஞரும், வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் சமீபத்திய “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற வெளியீட்டைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

பள்ளி நாட்களில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகப் படுத்தப்பட்டு, தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. ஆனந்தவிகடனில் 1968 இல் வெளியாகிய கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக குழந்தைகளுக்காக எழுதும் நிலையிலிருந்து பெரியோருக்கான எழுத்தாளராக இவர் தனது முப்பது வயதுகளில் உருமாற்றம் பெற்று எழுத்துலக  வானில் பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார்.

பதின்ம வயதில் எழுதி இவர் பரிசு பெற்ற ‘நம் நாடு’ எனும் சிறுவர்புதினத்தைத்திற்குப் பிறகு தனது எழுத்துலகப் பயணத்தில் இவர் தொட்ட எல்லைகள் பலப்பல, பெற்ற விருதுகளின் எண்ணிக்கையோ மலைக்கவைக்கும் ஒரு நீளமான பட்டியல். தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு, அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன அவற்றில் சில. மன்னார்குடியின் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, 2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து கெளரவித்துப் பரிசளித்துப் பாராட்டியது. மறுஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் மூத்தபெண் படைப்பாளர்களில் ஒருவர் எனவும் பாராட்டப் பட்டார்.

jyothi-300x224

இவரது எழுத்தார்வம் நமக்கு வழங்கிய படைப்புகள் … சிறுகதைகள் 500, புதினங்கள் 25, குறும் புதினங்கள் 50, நெடும் நாடகங்கள் 3, 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், கிரண் பேடியின் “அஸ் ஐ சீ இட்” என்ற நூலின் சமீபத்திய மொழி பெயர்ப்பு உட்பட பல மொழிபெயர்ப்புகள் என தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்துள்ளார். இவரது படைப்பும் உக்ரைன் மொழியில் மொழி பெயர்ப்பு செயப்பட்டுள்ளது.

முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

அந்த வரிசையில், ஈரடி கவிதைகளாக இவர் யாத்த வால்மீகி ராமாயணமும் அடங்கும். ராமாயணத்தை சிறுவர்களுக்காக 1970 களில் வெளியிட்டவர், சிறுவர்களுக்காக எழுதிய சற்றொப்ப ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலை 1789 பாடல்களுடன் மேலும் விரிவாக்கினார். இந்த மொழிபெயர்ப்பு “ராமாயணா இன் ரைம்ஸ்” என்று சென்ற ஆண்டு வெளியிடப் பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிலும் இவரது படைப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் பத்திரிக்கை ஒன்றில் இவர் தொடராக எழுதி வந்த “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற திருக்குறளின் ஆங்கில வடிவமும் இந்த மாதம் Cyberwit.net பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

thirukural

மேலும் அண்மையில் இவரது …

1 படி தாண்டிய பத்தினிகள்
2 இதயம் பலவிதம்
3 வசந்தம் வருமா?
4 மரபுகள் முறிகின்ற நேரங்கள்
5 வாழத்தான் பிறந்தோம்
6 சாதி இரத்தத்தில் ஓடுகிறது
7 நாங்களும் வாழ்கிறோம்
8 குருக்ஷேத்திரக் குடும்பங்கள்
9 இல்லாதவர்கள்
10 அவசரக்கோலங்கள்

 பத்து நூல்களை பூம்புகார் பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

எழுத்துப் பணியை தற்பொழுது இணைய உலகிலும் விரிவாக்கி அவரது வலைப்பதிவு, வல்லமை, திண்ணை போன்ற இணைய மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக எழுத்துலகில் பன்முகஎழுத்தாளராக வலம் வரும் ஜோதிர்லதா கிரிஜா அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமையடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

மேலதிகத் தகவல்கள்:
http://jyothirlathagirija.blogspot.com/
https://plus.google.com/112576644547569337452/posts

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.