எல்லா ஆன்மிகவாதிகளும் நல்லவர் அல்லர்

0

ஜோதிர்லதா கிரிஜா

‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்கிற நிலையில் நம்மில் பெரும்பாலோர் இருந்து வருகிறோம். மனத்தில் அமைதி இல்லை. மகிழ்ச்சியில்லை. திருப்தி என்பதோ இல்லவே இல்லை. நமக்குக் கீழே உள்ள வசதித்குறைவானவர்களையும், அங்கவீனர்களையும் பார்த்து நாம் மன நிறைவு அடையவேண்டும் எனும் ஞானம் நம்மிடம் கொஞ்சமும் இல்லை. மனிதர்களில் பெரும்பாலோர் நிம்மதியற்று அல்லாடுவதற்கு இந்தத் திருப்தியின்மையே அடிப்படையாகும்.

நம்மில் அநேகர் கடவுள் நம்பிக்கையுடையவர்களே.  கடவுள் என்பதாய் ஒரு மாபெரும் சக்தியாளர் உள்ளார் என்பதே அந்த நம்பிக்கையாக இருந்த போதிலும், அவர் நமக்கு நல்லது செய்வார் எனும் நம்பிக்கை மட்டும் நமக்கு இருப்பதில்லை. தோல்விகளைக்கண்டு துவண்டு போவதும், அதையே நினைத்துக்கொண்டு இரவில் உறங்காமல் இருப்பதும் நம் இயல்பாகிவிட்டது.  ‘நான் யாருக்கும் கெடுதலே செய்ததில்லையே? அப்படி இருந்தும் நான் ஏன் இப்படி ஏமாற்றங்களுக்கும் நிம்மதியின்மைக்கும் ஆட்படுகிறேன்?’ என்று புலம்பாதவர்கள் உண்டா?

அன்னீ பெசன்ட் அம்மையாரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அயர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து நம் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அரும் தொண்டும் பங்கும் ஆற்றியவர். ஆனால் அவர் இந்தியாவுக்கு வந்தது எதற்காக என்பது பலர்க்குத் தெரியாமலிருக்கக் கூடும். அவர் நம் நாட்டுக்கு வந்தது எதற்காக என்பது ஒரு சுவையான காரணத்தின்பாற் பட்டது. அவரது சொந்த வாழ்க்கைக்கும் அதற்கும் பெரும் தொடர்பு உண்டு.  அவர் வந்தது ஆன்மிகத் தேடலின் பொருட்டேயாகும்.

அவருடைய குழந்தை ஒன்று சொல்லொணாத வலியை அனுபவித்து இறந்து போனபோது ஏற்கெனவே மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்த அவருக்குக் கடவுள் நம்பிக்கை அறவே போயிற்று என்று சொல்லப்படுகிறது.  ‘ஒரு பாவமும் அறியாத இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு ஏன இவ்வளவு சிரமப்பட்டுச் சாகவேண்டும்?’ எனும் கேள்வி அவருள் எழுந்து அவரை வருத்தியது. இது போன்ற கேள்விகளுக்கு இந்தியாவின் பண்டைய நூல்களில்தான் விடை கிடைக்கும் என்பதாய்க் கேள்விப்பட்டு அவர் இந்தியாவுக்கு வந்தார்.

இந்துமத நூல்களைப் புரிந்துகொள்ளுவதற்காக சம்ஸ்கிருதம் கற்றார். பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவுக்கு அவர் அந்த மொழியறிவைப் பெற்றார்! ‘கர்ம வினை’ என்பதாய் ஒன்று உள்ளது என்னும் அசைக்க முடியாத முடிவுக்கு வந்தார். மனிதன் திரும்பத்  திரும்பப் பிறக்கிறான் என்னும் நம்பிக்கையும் கொண்டார். அவ்வாறு இல்லையெனில், இந்தப் பிறவியில் எந்தப் பாவமும் புரியாத ஒருவர் துன்பப்படுவதற்குக் காரணமே இல்லை என்றும் நம்பினார்.

தியோசாஃபிகல் சொசைட்டி எனப்படும் பிரும்ம ஞான சபையின்  உறுப்பினராகிப் பின்னர் அதன் தலைவியாகவும் பதவி ஏற்றார். இந்திய வேதாந்தம் பற்றி ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தார். இந்தக் கட்டுரையில் அவரை நினைவு கூர்ந்தமைக்குக் காரணம் அவர் தேடி யடைந்த ஞானம் நம்மில் பலர்க்கு இல்லாமற் போனதால்தான், நம் துன்பங்களுக்கெல்லாம் விடிவு ஏற்படும் என்று நம்பி ஆன்மிகவாதிகளின் ஆசிரமங்களுக்குப் போய்வருகிறோம் என்று சொல்லத்தான். இப்படிப் போவதில் எந்தத் தவறும் கிடையாது. அதது அவரார் விருப்பம், நம்பிக்கை ஆகியவற்றைப் பொறுத்த விஷயம்தான். இதில் மற்றவர் தலையீட்டுக்கோ கேலிக்கோ சிறிதும் இடம்  கிடையாதுதான்.

ஆனால் நாம் தேடிப்போகும்   ஆன்மிகவாதிகள் உண்மையிலேயே மக்களுக்கு நல்லதைச் சொல்லவும் செய்யவும் தலைப்படும்  ஆன்மிகவாதிகள்தானா, இல்லாவிட்டால்   பணம் பண்ணும் வெறும் வியாபாரிகளா என்பதை நாம் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்களில் பலர் “பரிகாரம்” என்பதன் பெயரால் தங்களை நாடி வருபவர்களிடமிருந்து பணம், பொருள், நகைகள் போன்றவற்றைத் தந்திரமாய்ப் பறித்துக்கொள்ளுகிறார்கள். சிலர் இவற்றோடு தலைமறைவாகி விடுவதும் உண்டு.

பரிகாரம் என்பது பச்சைப் பொய் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாவங்களுக்குரிய தண்டனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. ஆன்மிகவாதிகளுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து  அவர்கள் மேற்கொள்ளப்போவதாய்ச் சொல்லும் பரிகாரங்களை நாம் செய்வது நாம் நம்பும் கடவுளையே ஏமாற்றப் பார்க்கும் அசட்டுத்தனமாகும். அவர் ஒன்றும் அப்படி யெல்லாம் ஏமாந்துவிடமாட்டார்.  நாம்தான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுகிறோம். உண்மையான பரிகாரம் என்பது வெறும் சடங்குகளிலோ, பூஜைகளிலோ இல்லை. ‘ போன பிறவியில் என்ன பாவங்கள் செய்தேனோ, இந்தப் பிறவியில் துன்பப்படுகிறேன். இனி எந்தத் தப்பையும் செய்யாதிருக்க அருள்வாய், ஆண்டவனே’ என்று வேண்டிக்கொண்டு நல்லவராக மாறுவதே உண்மையான பரிகாரமாகும். இந்த உண்மையான பரிகாரத்தாலும் கூட, தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று நாம் மனப்பால் குடிக்கக்கூடாது! இந்தப் பரிகாரத்தால், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுவதற்கும் அவற்றால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கும் தேவையான மன உறுதி மட்டுமே கிடைக்கும். அவ்வளவுதான்!

அனைத்துலக அளவில் புகழ் பெற்ற ஓர் ஆன்மிகவாதி  அளவிடற்கரிய ஆன்மிக சக்திகளைப் பெற்றவர். ஆனால் இவர் நம்பத் தகுந்தவரல்லர். தமிழகத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் பெற்றோர் திருமண ஏற்பாட்டைச்  செய்து அது சார்ந்த உறுதிவிழாவையும் முடித்துவிட்டிருந்த நிலையில், அந்தப் பெண் இந்தச் சாமியாரின் கூட்டம் ஒன்றுக்குச் சென்றாள். மயக்கும் விழிகளைக் கொண்ட அந்த “மெஸ்மிரிச” சாமியாரின் காந்தப் பார்வை அடிக்கடி அவள் மீது படிந்தது.  ஆன்மிக ரீதியில் மயங்கிப்போன அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்து அவருடைய குழுவில் இணைந்துவிட்டாள். பெற்றோரால் தடுக்க முடியவில்லை. அவர்கள் சாமியாரிடம் சென்றார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டிடுந்ததை அவருக்குச் சொன்னார்கள். ஆனால், அவரோ, “அது அவளே செய்த தீர்மானம். அவள் சம்மதித்தால் அழைத்துக்கொண்டு செல்லுங்கள். நான் குறுக்கே நிற்கவில்லை!” என்று கையை விரித்துவிட்டார். அந்தப் பெற்றோரின் உள்ளங்கள் என்ன பாடு பட்டிருக்கும்! (இது சில ஆண்டுகளுக்கு முன் கேள்விப்பட்ட நிகழ்வு.)

தமது யோகக் குழுவில் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாதுஎன்று விதித்துள்ள இவர் தம் மகளுக்கு மணமுடித்துவைத்துள்ளாராம். இது எப்படி இருக்கிறது!  இவரைப்பற்றிச் சில பெற்றோர்கள் காவல்துறையில் முறையிட்டார்கள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் அந்த இளைஞர்களை விசாரணை செய்த போது இவரும் அவர்களுடனேயே இருந்தாராம்! இது ஒரு விசாரணையா!

இவர் மணமான பெண்களையும் விட்டுவைப்பதில்லை. அவர்களில் சிலரும் குடும்பத்தைக் கவனிக்காமல் ஆசிரம வேலைகளுக்கு வருகிறார்களாம். ஒரு பெண்மணி நாள்தோறும் தன் இரண்டு வயதுக் குழந்தையை உறவுக்காரப் பெண்ணிடம் கொண்டுவந்து விட்டுவிட்டு அவரது ஆசிரமத்துக்குப் போய்ச் சேவை செய்துவருகிறாளாம். அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நேர்ந்த ஒரு பெண் என்னிடம் புலம்பியுள்ளார்! இளைஞர்களை இப்படி மூளைச்சலவை செய்து வசப்படுத்துபவர்கள் மேலும் சிலர் உள்ளார்களாம். இவர்களின் பெற்றோர்கள்  மனம் என்ன பாடு படும்!

அடுத்தாற்போல், புட்டபர்த்தி பாபா என்ன சொல்லியுள்ளார்?  ‘முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள். உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யுங்கள். அப்படிச் செய்யாத எவரும் இங்கே வரவேண்டாம். அவர்களுக்குக் கடவுளின் அருள் ஒருபோதும் கிடைக்காது’ என்று அறிவித்துள்ளார்.

பணம் பறிக்கிற ஆன்மிகவாதிகள் அந்தப் பணத்தையெல்லாம் பொது நன்மைகளுக்காகச் செலவு செய்தாலும் ஒழிந்து போகிறது எனலாம். அப்படிச் செய்பவர்கள் ஒரு சிலரே. அமரர் புட்டபர்த்தி சத்திய சாய் பாபா, அமரர் மகா பெரியவர்,  சில சங்கர மடங்கள், ராமகிருஷ்ண மடங்கள், மாதா  அமிர்தானந்த மயி, சிவசங்கர் பாபா போன்ற சிலர் மட்டுமே விதிவிலக்குகளாவர்.

எது எப்படி இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்தால், தவறு நம்முடையதுதான் என்பதை உணரலாம். ஆண்டவனுக்கும் நமக்குமிடையே இடைத்தரகர்கள் எதற்கு? பணம் பிடுங்காத நல்ல ஆன்மிகவாதிகளைத் தேர்ந்தெடுத்தே நாம் செல்ல வேண்டும். எல்லாரையும் நம்பிவிடக் கூடாது. அதிலும், முக்கியமாய், பரிகாரம், பூஜை என்றெல்லாம் கதைவிட்டுப் பணம் பிடுங்குபவர்களிடம் போகவே கூடாது. பணம் செலவிட்டுப் பாவங்களைப் போக்கிக்கொள்ளவோ, தண்டனையிலிருந்து தப்பவோ முடியாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுளின் கணக்குப் பேரேட்டில் கழித்தலோ கூட்டலோ கிடையாது. ‘நான் மூன்று கொலைகள் செய்தவன். ஆனால், ஒரு சமயம் நீரில்  மூழ்கவிருந்த ஐந்து பேரைக் காப்பாற்றியுள்ளேன். எனவே ஐந்திலிருந்து மூன்றைக் கழித்துவிட்டு, நான் இரண்டு உயிர்களைக் காப்ப்பாற்றியதாய்க் கணக்குப் போடும் கடவுளே!’ என்று ஒருவன் கடவுளிடம் பேரம் பேச முடியாது.

மூன்று கொலைகள் செய்ததற்குத் தண்டனை கிடைக்கும்; ஐந்து உயிர்களைக் காப்பாற்றியதற்கு வெகுமதியும் கிடைக்கும். அதுதான் கடவுளின் கணக்கு! இந்த எளிய கணக்கை நாம் புரிந்துகொண்டால் கோவில்களுக்குப் போவதோடும், வீட்டிலிருந்தவாறு பக்தியும் தியானமும் மட்டுமே செய்வதோடும் நிறுத்திக்கொள்ளுவோம். நம்பகமான ஆன்மிக வாதிகளிடம் மட்டுமே போவோம்.  இல்லையா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *