தினமும் மல்லிகைப் பூ – எவளுக்காக?

ஜோதிர்லதா கிரிஜா

 

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த விசாலம் எதிர்ப் பூக்கடையில் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டிருந்த சரவணனைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.  அவன் தலை திரும்பியதும்  கவனியாதவள் போல் தலையைத் திருப்பிக்கொண்டாள். ‘பெண்டாட்டி படுத்த படுக்கை! இவன் யாருக்காகத் தினமும் பூ வாங்குகிறான்’ என்னும் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் அவளுக்கு மண்டையே வெடித்துவிடும் போல் ஆயிற்று. அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் இடைவெளி விட்டு அவனைப் பின் தொடர்ந்தாள். அவன் முகத்தில் பாதிக்கு மேல் மறையும்வண்ணம் குடையைத் தாழ்த்திக் கொண்டாள்.

தெரு முக்கில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குள் சரவணன் நுழைந்தான்.   அர்ச்சகரிடம் பூவைக் கொடுத்துப் பிள்ளையாருக்குச் சாற்றச் சொன்னதன் பிறகு விநிதாவின் பெயரில் அவன் அர்ச்சனையும் செய்யச் சொன்னதை இதற்குள் விரைந்து வந்து ஒரு தூணுக்குப் பின்னால் நின்று விட்டிருந்த விசாலம் காதில் வாங்கிக்கொண்டாள். இன்ப அதிர்ச்சிக்கு ஆளானாள்.

“தினமும் அர்ச்சனை பண்றீங்களே, சாமி?” என்ற அர்ச்சகரின் வியப்பான வினாவுக்கு, “அவங்க என் சம்சாரம். அவங்களுக்கு உடம்பு சரியில்லை.  சீக்கிரம் குணமாகணும்னுதான்!” என்ற சரவணனின் பதிலையும் விசாலம் காதில் வாங்கிக்கொண்டாள். நிம்மதிப் பெருமூச்சுடன் விரைவாக அங்கிருந்து நீங்கினாள். உடனே வினிதாவைப் பார்த்து அதைச் சொல்லிப் பாராட்டாவிட்டாலும் அவளுக்குத் தலை வெடிக்கும் போலாயிற்று!

நன்றி : குங்குமம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க